ஜனநாயக சிந்தனைக் குழு ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் எதிரான போரைத் திட்டமிடுகிறது: ஒரு புதிய அமெரிக்க மூலோபாயத்திற்கான மையம் என்பது என்ன?

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த மாதம், ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் “Four Corners” தொலைக்காட்சி நிகழ்ச்சி, அமெரிக்க விமானப்படை ஆஸ்திரேலியாவில் அணுசக்தி திறன் கொண்ட B-52 குண்டுவீச்சு விமானங்களை நிலைநிறுத்தத் திட்டமிட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தியது. நிகழ்ச்சியில் பேட்டியளித்த போர்-சார்பு சிந்தனைக் குழு பிரதிநிதிகளில் பெக்கா வாஸர், ஒரு புதிய அமெரிக்க பாதுகாப்பு மையத்தில் (CNAS) முன்னணி போர்த் தயாரிப்பாளர் ஆவார்.

இடது: விக்டோரியா நுலாண்ட் (AP Photo/Susan Walsh); மையம்: ஜோசப் பைடென் (AP Photo/Patrick Semansky); வலது: அந்தோனி பிளிங்கென்(AP Photo/Brendan Smialowski)

வாஸர் 'சீனாவின் பிரதான நிலப்பகுதியைத் தாக்கக்கூடிய குண்டுவீச்சு விமானங்களை வைத்திருப்பது, தைவான் மீதான அதன் எந்தவொரு நடவடிக்கையும் மேலும் விரிவடையும் என்று சீனாவிற்கு ஒரு சமிக்ஞையை அனுப்புவதில் மிகவும் முக்கியமானது' கூறினார்.

சீனாவிற்கு எதிரான வாஸரின் அதிர்ச்சியூட்டும் பொறுப்பற்ற போர்முழக்கம், பாதுகாப்புத் துறையுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட ஜனநாயகக் கட்சியின் செயல்பாட்டாளர்களால் 2007 இல் நிறுவப்பட்டதிலிருந்து CNAS இன் ஆக்கிரமிப்பு நோக்குநிலையை பிரதிபலிக்கிறது. ஒப்பீட்டளவில் சிறிய வாஷிங்டன் D.C. சிந்தனைக் குழுவானது ஒபாமா மற்றும் பைடென் நிர்வாகங்களிலும் மற்றும் அணு ஆயுதப் போரின் அபாயத்தை அதிகரிக்கும் ரஷ்யாவுடனும், சீனாவுடனுமான மோதலை நோக்கி அமெரிக்க வெளியுறவு, இராணுவக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.

CNAS இல் தற்போது 30 பணியாளர்கள் மட்டுமே உள்ளதுடன் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கம் வெறும் 6 மில்லியன் டாலர் மட்டுமே. ஆனால் அதன் சிறிய அளவு அதன் மிகவும் செல்வாக்குமிக்க பாத்திரத்திற்கு எதிர்மாறாக உள்ளது. பல விதங்களில், அமெரிக்க ஏகாதிபத்திய இராணுவவாதத்தின் முதன்மையான அரசியல் கருவியாக ஜனநாயகக் கட்சி தோன்றியதை CNAS உள்ளடக்கியுள்ளது.

சர்வதேச அளவிலும் உள்நாட்டிலும் அமெரிக்க முதலாளித்துவத்திற்கு பெருகிவரும் நெருக்கடியின் ஒரு கட்டத்தில், 2007 ஆம் ஆண்டு மிஷேல் புளோர்னோய் (Michele Flournoy) மற்றும் குர்ட் காம்ப்பெல் (Kurt Campbell) ஆகியோரால் இந்த சிந்தனைக் குழு நிறுவப்பட்டது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு காரணத்தை வழங்கிய 'பயங்கரவாதத்தின் மீதான உலகளாவிய போர்' என்றழைக்கப்பட்டது, எண்ணெய் வளம் மிக்க மத்திய ஆசிய மற்றும் பாரசீக வளைகுடா பகுதிகளில் அமெரிக்க கட்டுப்பாட்டை பெறத் தவறிவிட்டது, மேலும் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் நிர்வாகம் அமெரிக்காவிற்குள் மக்கள் ஆதரவை வேகமாக இழந்து வந்தது.

அதன் தோற்றத்தில் இருந்து, ரஷ்யா மற்றும் சீனாவை கட்டுப்படுத்தவும் பலவீனப்படுத்தவும் மற்றும் யூரேசிய கண்டத்தில் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு தடையாக இருக்கும் வாஷிங்டனின் முயற்சிகளை வியத்தகு முறையில் முடுக்கிவிடுவதை CNAS நோக்கமாகக் கொண்டிருந்தது. சீனாவின் பொருளாதாரம் தொடர்ந்து விரிவடைந்து மேலும் தொழில்நுட்ப ரீதியாக அதிநவீனமானதாக மாறியது. மேலும் அதன் சர்வதேச பொருளாதார செல்வாக்கு இலத்தீன் அமெரிக்காவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் 'பின்புறம்' வரை நீட்டிக்கப்பட்டது. ரஷ்யா, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக அதன் அணு ஆயுதக் களஞ்சியத்தின் காரணமாக, மத்திய கிழக்கில் கைப்பாவை ஆட்சிகளை நிறுவுவதற்கான வாஷிங்டனின் முயற்சிகளுக்கு பெருகிய முறையில் தடையாக மாறி வந்தது.

CNAS தனது ஸ்தாபக அறிக்கையில் அமெரிக்காவிற்குள் ஆதரவையும், போரை நடத்துவதற்கான திறனையும் மீண்டும் கட்டியெழுப்ப அழைப்பு விடுத்தது. 'அடுத்த ஜனாதிபதி அமெரிக்க மக்களுடனும் அமெரிக்காவின் நட்பு நாடுகளுடனும் ஒரு பரந்த உரையாடலை வளர்க்க வேண்டும். அது பொருத்தமானதாக இல்லாவிடின் புதிய பாதுகாப்பு சூழலில் பலத்தை பயன்படுத்தவேண்டும்' என்றது.

CNAS திட்டத்தின் மையமாக இருப்பது, அமெரிக்கா ஒப்பீட்டளவில் சக்தியில் வீழ்ச்சியடைந்து வருகிறது, மேலும் சீனா மற்றும் ரஷ்யா போன்ற எதிரிகளை தோற்கடிக்க இராணுவ ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தயாராக வேண்டும் என்பதாகும். 2011 இல், ஒபாமா நிர்வாகமும் அதன் வெளியுறவுத்துறை செயலாளரான ஹிலாரி கிளிண்டனும், சீனாவை எதிர்கொள்ளும் CNAS கொள்கையை ஏற்றுக்கொண்டனர். இது குர்ட் கேம்ப்பெலால் உருவாக்கப்பட்டு மற்றும் 'ஆசியாவில் முன்னிலை' என்று பெயரிடப்பட்டு, அமெரிக்கா தனது இராணுவக் கவனத்தை ஆசியா-பசிபிக் பிராந்தியத்திற்கு மாற்றியது.

பஷார் அல்-அசாத்தின் ரஷ்ய சார்பு ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில் அமெரிக்கா தூண்டிய உள்நாட்டுப் போரின் போது, சிரியாவிற்கு ரஷ்யா இராணுவப் படைகளை அனுப்பியதன் மூலம் அமெரிக்கா முறியடிக்கப்பட்டது. 2013 செப்டம்பரில், ஒபாமா சிரியாவில் அமெரிக்க தலையீட்டை இராணுவரீதியாக அதிகரிப்பதற்கான தனது அச்சுறுத்தலில் இருந்து பெரும்பாலும் ரஷ்ய இராணுவ பிரசன்னம் காரணமாக பின்வாங்கினார்.

ஆனால் சில மாதங்களுக்குப் பின்னர், பிப்ரவரி 2014 இல், விக்டர் யானுகோவிச்சின் ரஷ்ய-சார்பு அரசாங்கத்தை தூக்கி எறிந்து, வெறித்தனமான தேசியவாத, ரஷ்ய-எதிர்ப்பு ஆட்சியை நிறுவிய உக்ரேனில் பாசிசவாதிகளின் தலைமையிலான ஆட்சி மாற்ற நடவடிக்கையை வாஷிங்டன் ஆதரித்தது. புதிய அரசாங்கம் உக்ரேனிய தேசியவாத தலைவர் ஸ்டீபன் பண்டேராவையும் மற்றும் யூதர்களையும் போலந்து மக்களையும் படுகொலை செய்வதில் இரண்டாம் உலகப் போரின் போது நாஜிக்களுடன் ஒத்துழைத்த அவரது பாசிச இயக்கத்தை கொண்டாடிய நவ-நாஜி சக்திகளுடன் கூட்டு சேர்ந்தது.

அதுதான் உக்ரேனை பாரியளவில் ஆயுதம் ஏந்துவதற்கும், கடந்த பெப்ரவரியில் பைடென் நிர்வாகம் மாஸ்கோ உக்ரேனை ஆக்கிரமிக்க வைக்கச்செய்வதில் வெற்றி பெற்றபோது ரஷ்யாவுடனான அமெரிக்க மற்றும் நேட்டோ இராணுவ மோதலுக்குப் பினாமியாக மாற்றுவதற்கும் தொடக்கப் புள்ளியாக இருந்தது. CNAS பணியாளர்கள், முன்னாள் CNAS நிர்வாக தலைவரான விக்டோரியா நூலாண்ட் உட்பட, உக்ரேனில் அமெரிக்க-ரஷ்ய மோதலை ஒழுங்கமைப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.

CNAS ஐ இயக்குபவர் யார்?

அது நிறுவப்பட்டதில் இருந்து, CNAS முன்னணி வெளியுறவுத்துறை மற்றும் பென்டகன் அதிகாரிகளை முதலில் ஒபாமாவிற்கும் பின்னர் பைடென் நிர்வாகத்திற்கும் வழங்கியுள்ளது.

முன்னாள் அமெரிக்க பாதுகாப்பு துணைச் செயலர் மைக்கேல் ஃப்ளோர்னாய், சீனாவின் பெய்ஜிங்கில் இருதரப்பு சந்திப்புக்கு தயாராகி வருவதைக் காட்டுகிறது [AP Photo/Andy Wong, File]
மிஷேல் புளோர்னோய்

புளோர்னோய் CNAS ஐ நிறுவுவதற்கு முன்பு கிளின்டன் நிர்வாகத்தில் மூலோபாயத்திற்கான துணை பாதுகாப்பு செயலாளராக பணியாற்றினார். அவர் ஒபாமா நிர்வாகத்தில் பாதுகாப்பு கொள்கைக்கான துணை செயலாளராக இருந்தார்.

கிளின்டன் நிர்வாகத்தில் இருந்தபோது, அவர் '1997 நாற்கர பாதுகாப்பு மதிப்பாய்வை' உருவாக்கினார். இது 'ஏறக்குறைய ஒரே நேரத்தில் இரண்டு பெரிய போர்களை எதிர்த்துப் போராடி வெற்றிபெறும் திறன்' அமெரிக்காவிற்கு இருக்க வேண்டும் என்று வாதிட்டது. ஒபாமா நிர்வாகத்தில் அவர் பதவி வகித்த காலத்தில், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க எதிர்ப்பு கிளர்ச்சிக் கொள்கையை அவர் வடிவமைத்ததுடன், லிபியாவில் இராணுவ ரீதியாக தலையிட ஒபாமாவை நம்பவைக்க உதவினார். அப்போதைய முதல் பெண்மணியான மிஷேல் ஒபாமாவுடனான குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக “மற்றைய மிஷேல்” என்றழைக்கப்பட்ட அவர் மிகவும் செல்வாக்கு மிக்கவராக இருந்தார்.

அவர் WestExec Advisors இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநராகவும் உள்ளார். இது ஒரு ஆலோசனை நிறுவனமான 'சிக்கலான மற்றும் ஸ்திரமற்ற சர்வதேச சூழ்நிலைகளில் வணிகத் தலைவர்கள் சிறந்த முடிவுகளை எடுக்க உதவும் தனித்துவமான புவிசார்-அரசியல் மற்றும் கொள்கை நிபுணத்துவத்தை வழங்குகிறது.'

புளோர்னோய் பல பில்லியன் டாலர் பாதுகாப்பு ஒப்பந்தக்காரரான Booz Allen Hamilton இன் குழு உறுப்பினர் ஆவார். இதை புளூம்பேர்க் 'உலகின் மிகவும் இலாபகரமான உளவு அமைப்பு' என்று அழைத்தது. 2002 Information Week இன்கட்டுரையின்படி, அந்த நேரத்தில் அந்த நிறுவனத்தில் “1,000க்கும் மேற்பட்ட முன்னாள் உளவுத்துறை அதிகாரிகள் அதன் ஊழியர்களில் இருந்தனர்.”

குர்ட் காம்ப்பெல்

காம்ப்பெல் ஒபாமா நிர்வாகத்தில் கிழக்கு ஆசிய மற்றும் பசிபிக் விவகாரங்களுக்கான உதவி செயலாளராக இருந்தார். அதற்கு முன்னர் அவர் கூட்டுப் படைத் தலைவராகவும், கடற்படை நடவடிக்கைகளின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் தலைவராக கடற்படை அதிகாரியாக பணியாற்றினார்.

ஒபாமா நிர்வாகத்தில் அவர் இருந்த காலத்தில், சீனாவை எதிர்கொள்ள 'ஆசியாவிற்கு முன்னிலை'யை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகித்தார். 2011 இல் தைவான் நோக்கிய அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் மாற்றத்தை ஹவுஸ் வெளியுறவுக் குழுக் கூட்டத்தில் அவர் கோடிட்டுக் காட்டினார், தைவானுடன் 'விரிவான, நீடித்த மற்றும் உத்தியோகபூர்வமற்ற' உறவை உருவாக்குவது 'முக்கியமானது' என்று கூறினார். 2021 இல், பைடென் அவரை இந்தோ-பசிபிக் விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பாளராக நியமித்தார்.

காம்ப்பெல் நேரடியாக பாதுகாப்பு ஒப்பந்ததாரர்களான Lockheed Martin, Northrup Gruman, Raytheon ஆகியோரிடம் இருந்து கட்டணத்தைப் பெறுகின்றார். அவர் பாதுகாப்பு ஒப்பந்ததாரர்களுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்ட The Asia Group என்ற ஆலோசனை நிறுவனத்திலும் ஈடுபட்டுள்ளார். Project on Government Oversight விசாரணையின்படி, அமெரிக்க ஆயுதங்களை வாங்குவது பற்றி அரசாங்க அதிகாரிகளிடம் பேசுவதற்காக வருடத்திற்கு ஒருமுறை ஆஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு ஈடாக பல பாதுகாப்பு நிறுவனங்களிடமிருந்து காம்ப்பெல் மாதம் 25,000 டாலர்கள் பெற்றுக் கொண்டார்.

ஜன. 27, 2022 அன்று வாஷிங்டனில் உள்ள வெளியுறவுத்துறையில் நடந்த மாநாட்டின் போது அரசியல் விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் விக்டோரியா ஜே. நூலாண்ட் பேசுகிறார்(AP Photo/Susan Walsh, Pool)
விக்டோரியா நூலாண்ட்

2014 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட உக்ரேனிய அரசாங்கத்தை தூக்கியெறிந்து அதன் மேற்கத்திய சார்பு மாற்றீட்டைத் தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்கு வகித்த ஒபாமா காலத்தின் மற்றொரு முக்கிய வெளியுறவுக் கொள்கை அதிகாரி நூலாண்ட் ஆவார். உக்ரேனிய ஜனாதிபதி யானுகோவிச்சை கட்டாயமாக அகற்றுவதில் உச்சக்கட்டத்தை அடைந்த மைதானில் நடந்த போராட்டத்தின் போது கசிந்த தொலைபேசி அழைப்பில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சார்பாக நடவடிக்கை எடுப்பதில் தனது பங்கை அம்பலப்படுத்தினார். அவ்வுரையாடலில் 'கிளிட்ச் [விட்டலி கிளிட்ச்கோ, கியேவின் மேயரும், முன்னாள் குத்துச்சண்டை வீரர்] அரசாங்கத்திற்குள் செல்ல வேண்டும் என்று நான் நினைக்கவில்லை,' என்று அவர் சொல்வது கேட்கப்படுகிறது. 'அது அவசியம் என்று நான் நினைக்கவில்லை, இது ஒரு நல்ல யோசனை என்று நான் நினைக்கவில்லை... பொருளாதார அனுபவமும், ஆளும் அனுபவமும் பெற்றவர் யாட்ஸ் [ஆர்சேனி யாட்சேனியுக்] என்று நான் நினைக்கிறேன். அவர் தான்... அவருக்கு கிளிட்ச் மற்றும் தைஹ்னிபோக்கை வெளியில் வைத்திருப்பதே தேவையாகும்' என்றார்.

ஒலேக் தைஹ்னிபோக் ஒரு நவ நாஜியாவார். தீவிர வலதுசாரியான ஸ்வோபோடா கட்சியின் தலைவராக, யானுகோவிச்சைத் தூக்கியெறிவதில் உச்சக்கட்டத்தை அடைந்த கியேவில் அமெரிக்க ஆதரவுடன் நடைபெற்ற மைதான் எதிர்ப்புக்களில் அவர் முன்னணிப் பாத்திரத்தை வகித்தார். உக்ரேனிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட 2004 உரையில், அவர் 'மாஸ்கோ-யூத மாஃபியா உக்ரேனை ஆளுகின்றது' என்று கண்டனம் செய்ததுடன், இரண்டாம் உலகப் போரில் ஸ்டீபன் பண்டேராவின் உக்ரேனிய தேசிய இராணுவத்தைப் பாராட்டினார். 'அவர்கள் பயப்படவில்லை, நாங்கள் பயப்படக்கூடாது. அவர்கள் தங்கள் கழுத்தில் தானியங்கி துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டு காடுகளுக்குச் சென்று, எங்கள் உக்ரேனிய அரசைக் கைப்பற்ற விரும்பிய மாஸ்கோவியர்கள், ஜேர்மானியர்கள், யூதர்கள் மற்றும் பிற அசுத்தங்களுக்கு எதிராகப் போரிட்டனர்” என்று கூறினார்.

2013 இல், அவர்களின் வெளிப்படையான யூத எதிர்ப்புக்காக தைஹ்னிபோக் மற்றும் மற்றொரு ஸ்வோபோடா (Svoboda) கட்சித் தலைவருக்கு அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.

ஆர்சேனி யாட்சேனியுக் ஒரு வலதுசாரி, மேற்கத்திய சார்பு அரசியல்வாதி ஆவார். அவர் பெப்ரவரி 2014 மைதான் ஆட்சி சதியைத் தொடர்ந்து உக்ரேனின் முதல் பிரதமராக பதவியேற்றார்.

ஒபாமா நிர்வாகத்தில் அவரது பணியைத் தொடர்ந்து, நூலாண்ட் 2018 முதல் 2019 வரை CNAS இன் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றினார். இப்போது அவர் பைடென் நிர்வாகத்தில் அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலாளராக உள்ளார். பாதுகாப்புச் செயலர் லாய்ட் ஆஸ்டின் உட்பட பிற பைடென் நிர்வாக அதிகாரிகளுடன் உறவுகளைக் கொண்ட Pine Island Capital Partners உடன் அவருக்கு தொடர்பு உள்ளது.

பயங்கரவாதம் மற்றும் நிதிப் புலனாய்வுக்கான முன்னாள் கருவூலச் செயலர் டேவிட் கோஹன், வாஷிங்டனில் உள்ள கேபிடல் ஹில்லில், செவ்வாய், ஜன. 27, 2015 அன்று, செனட் வங்கிக் குழு விசாரணையில் ஈரான் பொருளாதாரத் தடைகள் குறித்த விசாரணைக்கு முன் சாட்சியமளித்தார். விசாரணையில் கோஹன், 'பயங்கரவாதிகளை' அமெரிக்கா பின்தொடர்ந்து செல்லும் போதும், பெய்ஜிங்கை எதிர்கொள்வதே அவர்களின் முதன்மையான முன்னுரிமை என்று கூறினார். [AP Photo/Susan Walsh, File]
டேவிட் கோஹன்

கோஹன் CNAS இல் முன்னாள் துணை மூத்த சக. 2009 இல் அவர் அமெரிக்க கருவூலத் துறையில் பயங்கரவாத நிதி உதவி செயலாளராக ஒபாமாவால் தேர்ந்தெடுக்கப்பட்டார், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பயங்கரவாதம் மற்றும் நிதி உளவுத்துறையின் கருவூலத்தின் துணைச் செயலாளராக ஆனார். இந்த பதவியில் அவர் ரஷ்யா மற்றும் ஈரானுக்கு எதிரான ஜனநாயகக் கட்சியின் பொருளாதாரத் தடைத் திட்டத்தை உருவாக்க வழிவகுத்தார். 2015 முதல் 2017 வரை, அவர் மத்திய புலனாய்வு அமைப்பின் துணை இயக்குநராக பணியாற்றினார். அங்கு அவர் 2016 அமெரிக்கத் தேர்தல்களில் ரஷ்யா தலையிட்டது என்ற குற்றச்சாட்டுகளை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகித்தார். பெப்ரவரி, 2021 இல் பைடெனால் இந்த பதவிக்கு மீண்டும் நியமிக்கப்பட்டார்.

எலி ராட்னர்

ராட்னர் ஒரு முன்னாள் CNAS சக ஊழியர் ஆவார். அவர் தற்போது பாதுகாப்பு செயலாளரின் சிறப்பு உதவியாளராக பணியாற்றுகிறார். அவர் தனிப்பட்ட முறையில் பைடெனுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளார். 2002-2003 இல் வெளிநாட்டு உறவுகளுக்கான செனட் குழுவின் பணியாளராக (பின்னர் பைடென் தலைமையில்) பணியாற்றினார். மேலும் 2015 முதல் 2017 வரை ஒபாமா நிர்வாகத்தின் போது பைடெனின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தார். 2011 முதல் 2012 வரை அவர் வெளியுறவுத்துறையில் சீன மற்றும் மங்கோலிய விவகாரங்களுக்கான அலுவலகத்திலும் பணியாற்றினார். ட்ரம்ப் பதவியேற்ற பின்னர், ராட்னர் வெளிநாட்டு உறவுகள் குழுவில் சீன ஆய்வுக்கான உறுப்பினராகவும், CNAS இல் நிர்வாக துணைத் தலைவர் மற்றும் ஆய்வுகளுக்கான இயக்குநராகவும் ஆனார்.

எலிசபெத் ரோசன்பேர்க்

ரோசன்பேர்க் CNAS இல் ஒரு முன்னாள் மூத்த உறுப்பினரும் மற்றும் அதன் எரிசக்தி, பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் இயக்குனர் ஆவார். அவர் தற்போது பைடென் நிர்வாகத்தில் கருவூலத்தின் துணை செயலாளரின் ஆலோசகராக பணியாற்றுகிறார். அவரது தற்போதைய பதவிக்கு முன்பு, அவர் ஒபாமாவின் வெள்ளை மாளிகையில் 2009 முதல் 2013 வரை டேவிட் கோஹனின் கருவூலத் துறையில் மூத்த ஆலோசகராக பணியாற்றினார். அவர் ஈரான், லிபியா மற்றும் சிரியாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை 'வற்புறுத்தும் பொருளாதார அரசின்' நிபுணராகக் கருதப்படுகிறார். ஏறக்குறைய ஒரு தசாப்த காலமாக ரஷ்யாவை குறிவைக்க இத்தகைய தடைகளின் தொகுப்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

நிதியளிப்பும் ஆதரவும்

பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்கள்

Raytheon ஆகியவை பாதுகாப்புத் தொழிற்துறையில் இருந்து வரும் CNAS இற்கான முன்னணி பங்களிப்பாளர்களாகும். அக்டோபர் 1, 2020 முதல் செப்டம்பர் 30, 2021 வரை, Northrup Gruman மட்டும் CNASக்கு $500,000க்கு மேல் நன்கொடை அளித்துள்ளது. Raytheon $100,000 முதல் $250,000 வரை நன்கொடை அளித்துள்ளது. மேலும் Lockheed Martin மற்றும் Boeing ஆகியவை ஒவ்வொன்றும் $50,000 முதல் $100,000 வரை நன்கொடை அளித்துள்ளன.

உயர் தொழில்நுட்பம்

தொழில்நுட்ப ஜாம்பவான்களான மைக்ரோசாப்ட், அமசன், பேஸ்புக் மற்றும் கூகுள் அனைத்தும் கடந்த ஆண்டு CNASக்கு குறைந்தபட்சம் 100,000 டாலர்கள் நன்கொடையாக வழங்கியுள்ளன. கணினி சில்லு உற்பத்தியாளர் Qualcomm உம் குறிப்பிடத்தக்க பங்களிப்பாளராகும். மேம்பட்ட கணினி சில்லு உற்பத்தி தொடர்பாக அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே உள்ள மோதல், உலகளாவிய கணினி சில்லு உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் தைவான் மீதான மோதலுக்கு மையமாக உள்ளது.

வாஷிங்டன் D.C.-ஐ தளமாகக் கொண்ட Quincy Institute for Responsible Statecraft ஆல் வெளியிடப்பட்ட தாராளவாத இணையவழிப் பத்திரிகை Responsible Statecraft இன் வார்த்தைகளில், “அவர்களின் [CNAS'] தலையீட்டுக் கருத்துக்கள் பெரும்பாலும் பெரிய தொழில்துறையின் இலாபம் சார்ந்த நோக்கங்களுடன் மிகவும் வசதியாகப் பொருந்துகின்றன.… அமசன், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகியவற்றின் CNAS க்கான பங்களிப்புகள் சிலிக்கான் பள்ளத்தாக்கு 'அமெரிக்க சக்தியை விரிவுபடுத்துவதால்' கிடைக்கும் நன்மையை அறிந்துள்ளது என்று கூறுகின்றன.

தேசிய அரசாங்கங்கள்

தேசிய அரசாங்கங்களும் CNASக்கு கணிசமான அளவு பங்களித்துள்ளன. அமெரிக்க பாதுகாப்புத் துறை குறைந்தது $500,000 நன்கொடை அளித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்காவின் ஜேர்மன் மார்ஷல் நிதியம் மூலம் $100,000 முதல் $250,000 வரை நன்கொடை அளித்துள்ளது. ரஷ்யாவின் எல்லையில் உள்ள இரண்டு இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நேட்டோ நாடுகளான லாத்வியா மற்றும் லித்துவேனியா அரசாங்கங்கள் மேலும் CNAS க்கு நன்கொடை அளித்துள்ளன.

மிக முக்கியமாக, சீன மக்கள் குடியரசுடன் பொதுவான உறவுகளை ஏற்படுத்திய நாடுகளுக்கான தைவான் அரசாங்கத்தின் நடைமுறை தூதரகமாக செயல்படும் தைபே பொருளாதார மற்றும் கலாச்சார பிரதிநிதி அலுவலகத்திலிருந்து நூறாயிரக்கணக்கான டாலர்களை CNAS பெற்றுள்ளது.

அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை வழிநடத்துவதில் CNASஇன் பங்கு

CNAS தனது ஆவணங்களில் போருக்கான நேரடி அழைப்பு விடாமல் கவனமாக இருந்தபோதிலும், காலதாமதம் ஆவதற்கு முன்னர் அமெரிக்கா ரஷ்யாவையும் சீனாவையும் இராணுவ ரீதியாக தோற்கடிக்கத் தயாராக வேண்டும் என்று அது தொடர்ந்து வாதிடுகிறது.

2021 ஆம் ஆண்டு 'ஆழமடையும் ரஷ்யா-சீனா கூட்டாண்மைக்கு வழிகாட்டுதல்' என்ற தலைப்பில் அது பின்வருமாறு வாதிட்டது. 'சீன-ரஷ்ய ஒத்துழைப்பு, பிராந்தியத்தில் சீன ஆக்கிரமிப்பைத் தடுக்கும் மற்றும் சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக்கை பராமரிப்பதற்கான அதன் உறுதிப்பாட்டை நிலைநிறுத்தும் அமெரிக்காவின் திறனை ஆபத்தில் ஆழ்த்தும்.” 'அவர்களின் ஒத்துழைப்பு ஒவ்வொரு நாடும் அமெரிக்காவிற்கு முன்வைக்கும் சவாலை பலப்படுத்தும்... எளிமையாகச் சொன்னால், அமெரிக்காவின் சீனா சவாலை ரஷ்யா பெரிதாக்குகிறது' என்று அது வலியுறுத்தியது.

இந்த முன்னோக்கு CNAS இன் 2019 அறிக்கையில், 'அமெரிக்காவுக்கு ஏன் ஒரு புதிய வழி போர் தேவை' என்ற தலைப்பில் மிகத் தெளிவாக கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. இந்த 'புதிய வழிப்போர்' அமெரிக்கா எப்போதுமே முதன்மையான இராணுவ சக்தியாக இருக்கும் என்ற அனுமானத்தில் இருந்து ஒரு மாற்றத்தை உள்ளடக்கியிருந்தது. இது 'திறமையான இராணுவங்கள் மற்றும் கணிசமான இராணுவம் அல்லாத சக்திகளுடன் கூடிய பெரும் சக்திகளுடன் நீண்டகால போட்டியை' உள்ளடக்கியிருந்தது.

சீனாவுடனான இராணுவ மோதலில் அமெரிக்கா தோற்கடிக்கப்படலாம் என்ற கவலை அறிக்கையில் மீண்டும் மீண்டும் குரல் கொடுக்கப்பட்டது. இதைத் தடுக்க, அமெரிக்கா தனது இராணுவத் திறன்களை மேலும் மேம்படுத்தி, “சீனா அல்லது ரஷ்யாவிற்கு எதிராக வரையறுக்கப்பட்ட பிராந்திய மோதல்களை எதிர்த்துப் போராடி வெற்றி பெறத் தயாராக வேண்டும் என்றது. அறிக்கை தொடர்ந்தது: 'பாதிக்கப்படக்கூடிய கூட்டாளிகள் மற்றும் முக்கிய பங்காளிகளை பாதுகாக்கும் திறனை இது அவசியமாக்குகிறது. அத்துடன் மேலும் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள சீன அல்லது ரஷ்யப் படைகளை நேரடியாகத் தோற்கடிப்பது உடனடியாக மோதலை அல்லது பலவீனம் மற்றும் சோர்வு உத்திகள் ஆகியவற்றை உடனடியாக நாடாமல் இருக்கவேண்டும்' எனக் குறிப்பிட்டது.

CNAS இன் அடிப்படை நோக்குநிலைக்கு இணங்க, ஒபாமா நிர்வாகத்தில் இருந்து அமெரிக்க வெளியுறவுக் கொள்கை ரஷ்யா மற்றும் சீனாவுடன் 'பெரும் சக்தி மோதலுக்கு' தயாராகி வருகிறது. CNAS முதன்மையாக சீனாவை மையமாகக் கொண்டிருந்தாலும், ரஷ்யாவை சீனாவை பலவீனப்படுத்தும் இலக்காகக் குறிப்பிடுவது உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான தற்போதைய அமெரிக்க தலைமையிலான பினாமி போரில் வெளிப்படுகின்றது.

ஏற்கனவே இரு தரப்பிலும் நூறாயிரக்கணக்கானவர்களைக் கொன்று அல்லது காயப்படுத்திய இந்தப் போர், எந்த நேரத்திலும் அணுசக்தி மோதலாக வெடிக்கும் என்று அச்சுறுத்துகிறது. இது உலகத்தின் இருப்புக்கான பேரழிவு தாக்கங்கள் அனைத்தையும் கொண்டுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரோஷமான மூலோபாய நோக்குநிலையை எடுத்துக்காட்டுவதில், ஜனநாயகக் கட்சியுடன் நெருக்கமாக இணைந்திருக்கும் CNAS இல் உள்ள கல்வியாளர்கள், அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் நீண்டகால பொருளாதார வீழ்ச்சிக்கு காட்டுமிராண்டித்தனமான பிரதிபலிப்பை உருவாக்கி செயல்படுத்த முற்படுகின்றனர்.

பைடெனின் வெள்ளை மாளிகையால் கடந்த மாதம் வெளியிடப்பட்ட 2022 அமெரிக்க தேசிய பாதுகாப்பு மூலோபாயம், “மக்கள் சீனக் குடியரசு பெருகிய முறையில், உலகளாவிய விளையாட்டுக் களத்தை அதன் நலனுக்காக சாய்க்கும் வகையில் சர்வதேச ஒழுங்கை மறுவடிவமைக்கும் திறனையும், நோக்கத்தையும் கொண்டுள்ளது என்று எச்சரித்தது.” இதைத் தடுக்க, 'சர்வதேச ஒழுங்கை வடிவமைக்க பெரும் எதேச்சதிகார சக்திகளுடன் போட்டியிட' அமெரிக்கா தயாராக வேண்டும் என்று ஆவணம் வலியுறுத்தியது.

லியோன் ட்ரொட்ஸ்கி 1934 இல் எழுதியது போல்:

1914ல் ஜேர்மனியை போர்ப் பாதையில் தள்ளிய அதே பிரச்சனைகளை அமெரிக்க முதலாளித்துவம் எதிர்கொள்கின்றது. உலகம் பங்கிடப்பட்டுள்ளதா? அதை மீண்டும் பங்கிடவேண்டும். ஜேர்மனியைப் பொறுத்தவரை இது ஐரோப்பாவை ஒழுங்கமைப்பது பற்றிய ஒரு கேள்வியாக இருந்தது. அமெரிக்காவிற்கு உலகை ‘ஒழுங்கமைக்க’ வேண்டும் என்ற கேள்வியாகும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எரிமலை வெடிப்பின் முன்னே வரலாறு மனிதகுலத்தை நேருக்கு நேர் கொண்டு வருகிறது.

உலகப் போரின் நிகழ்ச்சி நிரல் ஜனநாயகத்துடனும் அல்லது சமூக சீர்திருத்தத்துடன் ஒத்துப்போகவில்லை. ஜனநாயகக் கட்சியை இடது பக்கம் செல்ல கீழே இருந்து அழுத்தம் கொடுக்கலாம் என்ற பொய்யை ஊக்குவிக்க அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) போன்ற சலுகை பெற்ற நடுத்தர வர்க்கத்தின் போலி-இடது அமைப்புகளின் முயற்சிகள் இக்கல்வியாளர்களின் வார்த்தைகளின் கோட்பாட்டின் கீழமைந்துள்ளன. இதுவே CNAS மற்றும் நடைமுறையில் பைடென் நிர்வாகம் மற்றும் அதன் ஜனநாயக (மற்றும் குடியரசுக் கட்சி) முன்னோடிகளின் போர் வெறி கொண்ட கொள்கைகள் மற்றும் அதன் பின்விளைவுகளான தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளினதும் வாழ்க்கைத் தரங்களின் மீதானதுமான மோசமான தாக்குதல்களின் அடித்தளத்திலும் உள்ளன.

உண்மையில், DSA போன்ற அமைப்புக்கள், மத்திய கிழக்கிலும் மத்திய ஆசியாவிலுமிருந்து ரஷ்யா மற்றும் சீனா வரை அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் ஆக்கிரமிப்புப் போர்களின் முற்றுமுழுதான, வெறித்தனமான பாதுகாவலர்களாக வந்துள்ளமை, அவர்களின் மார்க்சிச எதிர்ப்பு, தேசியவாத மற்றும் இனம் மற்றும் பாலின அரசியலின் வர்க்க தர்க்கத்தை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளன.

இது தொழிலாள வர்க்கத்தை பெருநிறுவன தொழிற்சங்கங்கள் மற்றும் அவர்களின் அதிகாரத்துவ எந்திரங்களுக்கு அடிபணியச் செய்ய வேண்டும் என்ற அவர்களின் வலியுறுத்தலுடன் பிணைக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரத்துவ எந்திரங்கள் போருக்கு ஆதரவானதும் மற்றும் சந்தா தொகைகள் மூலம் அவர்களுக்கு கப்பம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ள அவர்களுக்கு எதிராக அதிகரித்தளவில் கிளர்ச்சி செய்யும் தொழிலாளர்களின் நலன்கள் மற்றும் அபிலாஷைகளுக்கு மூர்க்கத்தனமாக விரோதமானதாக இருக்கின்றன.

இந்த மாத தொடக்கத்தில், சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்களினதும் மாணவர்களினதும் அமைப்பு (IYSSE) உக்ரேனில் போரை நிறுத்துவதற்கு, தொழிலாள வர்க்கம் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்தின் அடிப்படையில் இளைஞர்களின் சர்வதேச இயக்கத்தை உருவாக்குவதற்கான அழைப்பை வெளியிட்டது. டிசம்பர் 10 அன்று அது தொடர்பான சர்வதேச இணையவழி கருத்தரங்கை ஒழுங்கமைத்துள்ளது.

அந்த அறிக்கை பின்வருமாறு விளக்கியது:

முதலாளித்துவத்தின் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக அடித்தளங்கள் சிதைந்து வருகின்றன. வரலாற்று முன்னேற்றத்தின் பெரும் உந்துசக்தியான வர்க்கப் போராட்டம் சமூகக் கட்டுப்பாட்டிற்கான அனைத்து நிறுவன வழிமுறைகளையும் உடைத்து வருகிறது.

போரின் வளர்ச்சி இளைஞர்களுக்கும் மனிதகுலம் அனைத்திற்கும் பெரும் ஆபத்துக்களை எழுப்பும் அதே வேளையில், IYSSE அதன் வேலைத்திட்டத்தை விரக்தியில் அல்லாது, எதிர்காலத்தை எதிர்த்துப் போராடி வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது.

அவநம்பிக்கையாளர்களின் தலைவிதிவாதம், முதலாளித்துவ உலக ஒழுங்கிற்குள் சாத்தியமான எல்லைகளுக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் ஒரு கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகிறது. போர், சர்வாதிகாரம், காலநிலை மாற்றம் மற்றும் சமூக பிற்போக்குத்தனத்தை உருவாக்கும் அதே முதலாளித்துவ நெருக்கடியே சர்வதேச தொழிலாள வர்க்க போராட்டத்தின் வளர்ச்சியையும் உருவாக்குகிறது என்ற புரிதலில் இருந்து எமது நம்பிக்கை எழுகிறது.

இந்த போராட்டத்திற்கு நனவான மற்றும் உறுதியான சோசலிச தலைமை தேவைப்படுகிறது. இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு இந்த தலைமையை உருவாக்க முடிவு செய்ய வேண்டும்.

சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பு சனிக்கிழமை, டிசம்பர் 10 அன்று, போருக்கான உந்துதலுக்கு எதிராக ஒரு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்காக ஒரு சர்வதேச இணையவழிக் கூட்டத்தை நடத்துகிறது. இன்றே அதில் கலந்துகொள்ள பதிவு செய்யுங்கள்.

Loading