சிரியா மற்றும் ஈராக்கில் குர்திஷ் படைகள் மீது துருக்கி குண்டுகளை வீசியது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

துருக்கிய பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, வடக்கு ஈராக் மற்றும் வடக்கு சிரியாவில் உள்ள குர்திஷ் தேசியவாத போராளிகளை குறிவைத்து ‘Air Operation Claw-Sword’ என்ற நடவடிக்கையைத் தொடங்குவதாக அறிவித்தது. அறிக்கையின்படி, வடக்கு ஈராக்கில் காண்டில், அசோஸ் மற்றும் ஹகுர்க் ஆகிய பகுதிகளும், மற்றும் வடக்கு சிரியாவில் கோபேன், டெல் ரிஃபாத், சிசிரே மற்றும் டெரிக் ஆகிய பகுதிகளும் தாக்கப்பட்டன. வான்வழித் தாக்குதல்களுக்கு எதிராக வடக்கு சிரியாவில் பல இடங்களில் பாரிய போராட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நவம்பர் 20, 2022, ஞாயிற்றுக்கிழமை சிரியாவின் ஹசாகே மாகாணத்தில் உள்ள தக்ல் பாக்ல் கிராமத்தில் ஒரு மின் நிலையம் தாக்கப்பட்டது உட்பட துருக்கிய வான்வழித் தாக்குதல்களில் சேதமடைந்த பகுதிகளை மக்கள் ஆய்வு செய்கிறார்கள் [AP Photo/Baderkhan Ahmad]

அமைச்சகம், வான்வழித் தாக்குதல்கள் ‘ஐக்கிய நாடுகளின் சாசனத்தின் 51வது பிரிவின் கீழ் தற்காப்பு உரிமை குறித்து மேற்கொள்ளப்பட்டன’ என்று கூறியுள்ளது. துருக்கிய போர் விமானங்கள் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள சிரிய வான்வெளியைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது, அதாவது ரஷ்ய அரசாங்கம் குண்டு வெடிப்புகளை நடத்த மறைமுகமாக அனுமதிக்கிறது.

அமெரிக்க ஆதரவு பெற்ற மக்கள் பாதுகாப்பு பிரிவுகள் (YPG), ஜனநாயக ஒன்றியக் கட்சியின் (PYD) ஆயுதப் பிரிவு மற்றும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (PKK) ஆகியவற்றுக்கு எதிரான இந்த நடவடிக்கை உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ போருக்கு மத்தியில் நடக்கிறது.

துருக்கிய பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கை, குண்டுவெடிப்பு PKK மற்றும் YPG க்கு சொந்தமான ‘தங்குமிடங்கள், பதுங்கு குழிகள், குகைகள், சுரங்கங்கள், வெடிமருந்துக் கிடங்குகள், மற்றும் தலைமையகங்கள் மற்றும் பயிற்சி முகாம்கள் என்று அழைக்கப்படுபவை’ ஆகியவற்றை குறிவைத்து நடத்தப்பட்டது என்றும், பொதுமக்கள் பாதிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளது. இருப்பினும், ANHA (ஹவார் செய்தி நிறுவனம்) செய்தியின்படி, குண்டுவெடிப்புகளில் ANHA நிருபர் இஸாம் எப்துல்லா உட்பட 11 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், மற்றும் மற்றொரு பத்திரிகையாளர் உட்பட 6 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். மேலும், 14 சிரிய இராணுவ சிப்பாய்களும் கொல்லப்பட்டதாக அறிக்கை கூறுகிறது.

சிரிய அரசுக்குச் சொந்தமான சனா செய்தி நிறுவனம் சிரிய சிப்பாய்களின் மரணத்தை உறுதிப்படுத்தியது, ஆனால் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பதைக் குறிப்பிடவில்லை.

துருக்கிய உள்துறை அமைச்சகம் நேற்று கிலிஸில் உள்ள Öncüpınar Border Gate மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியதற்கு PKK மற்றும் YPG ஐ குற்றம் சாட்டியது, இதில் 8 பாதுகாப்பு படையினர் காயமடைந்தனர். நேற்று மாலை வடக்கு சிரியாவில் இருந்து கஸியான்டெப் (Gaziantep) மாகாணத்தின் கர்காமிஸ் (Karkamis) மாவட்டத்தில் நான்கு ராக்கெட்டுகள் ஏவப்பட்டதாகவும், அவை திறந்த வெளிகளில் தரையிறங்கியதாகவும் அனடொலு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அறிக்கையில், இந்த ராக்கெட் ஏவுதல்களுக்கு YPG பொறுப்பாக்கப்பட்டது.

YPG ஐ முதுகெலும்பாகக் கொண்ட சிரிய ஜனநாயகப் படைகளின் (SDF) ஊடக மையத்தின் தலைவர் ஃபர்ஹாத் ஷமி, வான்வழித் தாக்குதல்கள் கோபேனில் உள்ள கோவிட்-19 மருத்துவமனை, டெரிக்கில் உள்ள மின் உற்பத்தி நிலையம் மற்றும் தாஹிர் அல் அரபில் உள்ள தானியக் கடைகளை அழித்துவிட்டதாக அறிவித்தார்.

SDF ஜெனரல் கமாண்டர் மஸ்லும் எப்டி ஒரு அறிக்கையில் மோதல் அதிகரிக்கக்கூடும் என்று எச்சரித்தார். அவர் மேலும், “ஒரு பெரிய போர் வெடிப்பதை நாங்கள் விரும்பவில்லை. ஆனால், துருக்கிய அரசு எங்களுக்கு எதிராக போரை வலியுறுத்தினால், நாங்கள் பெரியளவில் எதிர்ப்பதற்குத் தயாராக இருக்கிறோம். போர் என்பது இங்கு மட்டுமல்ல, அது எங்கும் பரவி அதனால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறினார். PYD மேலும், “எங்கள் மக்களுக்கு எதிராக துருக்கிய அரசு செய்த அட்டூழியங்களுக்கு ரஷ்யாவும் அமெரிக்கா தலைமையிலான சர்வதேச கூட்டணியும் தான் பொறுப்பு” என்று கூறியது.

இஸ்தான்புல்லின் மக்கள் நெரிசல் மிகுந்த மையங்களில் ஒன்றான இஸ்திக்லால் தெருவில் பொதுமக்களை குறிவைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனின் அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்தது. பாதுகாப்பு அமைச்சகம், வான்வழித் தாக்குதல்களானது “இது பதிலடி கொடுக்கப்படும் நேரம்! எனவே அந்த அயோக்கியர்களின் துரோகத் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்படுகிறது,” என்று விவரித்தது, அதேவேளை ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் கலின், ‘இஸ்திக்லாலுக்கு நாட்கள் எண்ணப்படுகின்றன,’ என்று ட்வீட் செய்தார்.

இரண்டு குழந்தைகள் உட்பட 6 பேர் கொல்லப்பட்ட மற்றும் 81 பேர் காயமடைந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு PKK மற்றும் YPG மீது துருக்கிய அரசாங்கம் குற்றம் சாட்டியது, ஆனால் அவர்கள் குற்றச்சாட்டை மறுத்தனர். தாக்குதலின் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் அஹ்லம் அல்பாஷிர், ‘YPG இன் உறுப்பினராக’ சாட்சியமளித்தார், ஆனால் அவர்கள் அவர் தாக்குதலை நடத்த அவரை கட்டாயப்படுத்த ‘அவருடைய உடன்பிறப்புகளுக்கு தீங்கு விளைவிப்பதாக அச்சுறுத்தினர்’ என்று கூறப்பட்டது. சம்பவத்திற்குப் பின்னர், 19 பேர் கைது செய்யப்பட்டனர் மற்றும் 29 பேர் நாடு கடத்தப்பட்டனர்.

‘YPG இன் புலனாய்வு அதிகாரி’ என்று கூறப்படும் அல்பாஷிர் பற்றிய சந்தேகங்களுக்கு அப்பால், எர்டோகன் அரசாங்கத்தின் கூட்டாளியான பாசிச தேசியவாத இயக்கம் (MHP) அல்பாஷிரை தொலைபேசியில் தொடர்பு கொண்டது, உத்தியோகபூர்வ அறிக்கைகள் பற்றிய சந்தேகங்களை எழுப்பியுள்ளது. சிர்நாக்கில் உள்ள MHP இன் குக்லுகோனாக் மாவட்டத்தின் தலைவர் மெஹமெட் எமின் இல்ஹான், அல்பாஷிரின் தொலைபேசி இணைப்பு சட்டவிரோதமாக பெறப்பட்டது என்றும், அவர் அல்பாஷிரிடம் பேசவில்லை என்றும் கூறினார்.

இஸ்தான்புல்லில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு PKK மற்றும் YPG மீது எர்டோகன் குற்றம் சாட்டுவது உண்மையில் குர்திஷ் போராளிகளை குறிவைத்து சிரியாவில் ஒரு நடவடிக்கைக்கு அங்காரா திட்டமிட்டதன் ஒரு பகுதியாக இருந்ததா என்ற பிரச்சினையை இது எழுப்புகிறது.

குறிப்பிடத்தக்க வகையில், சமீபத்திய நாட்களில், எர்பிலில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் தனது இணையதளத்தில் அமெரிக்க குடிமக்களுக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது, அது “வரும் நாட்களில் வடக்கு சிரியா மற்றும் வடக்கு ஈராக்கில் சாத்தியமுள்ள துருக்கிய இராணுவ நடவடிக்கை பற்றிய நம்பகமான வெளிப்படையான ஆதாரமுள்ள அறிக்கைகளை கண்காணித்து வருகிறது. இந்தப் பகுதிகளைத் தவிர்க்குமாறு அமெரிக்க குடிமக்களுக்கு அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது” என்று தெரிவிக்கிறது.

இறுதியில், எர்டோகன் அரசாங்கம் இந்த பயங்கரவாத தாக்குதலை, சிரியா மற்றும் ஈராக்கில் குர்திஷ் தேசியவாத படைகளுக்கு எதிராக புதிய நடவடிக்கை எடுப்பதற்கான சாக்குப்போக்காக பற்றிக் கொண்டுள்ளது. உண்மையில், சிரியா மீது படையெடுப்பதற்கான அங்காராவின் தயாரிப்புகள் மே மாதத்திற்கு முன்பே திட்டமிடப்பட்டவை. “எங்கள் தெற்கு எல்லைகளில் 30 கிலோமீட்டர் உட்புறமாக பாதுகாப்பான மண்டலங்களை உருவாக்க நாங்கள் ஏற்கனவே தொடங்கிய பணி பூர்த்தியடையாமல் இருக்கும் பகுதிகள் குறித்து நாங்கள் விரைவில் புதிய நடவடிக்கைகள் எடுக்கத் தொடங்குவோம்” என்று எர்டோகன் மே 23 அன்று அறிவித்தார்.

இருப்பினும், அந்த நேரத்தில், சிரியாவில் ஜனாதிபதி அசாத்தின் ஆட்சிக்கு எதிராக YPG ஐப் பயன்படுத்திய வாஷிங்டனிடமிருந்தும், அசாத் ஆட்சியை ஆதரிக்கும் ரஷ்யா மற்றும் ஈரானிலிருந்தும் ஒரு புதிய நடவடிக்கைக்கு அங்காராவால் பச்சை விளக்கு பெற முடியவில்லை.

உலகசோசலிசவலைத்தளமும் சோசலிச சமத்துவக் குழுவும் ஒரு பயங்கரவாதத் தாக்குதலை இராணுவவாதம் மற்றும் போருக்கான சாக்குப்போக்காக பயன்படுத்துவதை எதிர்க்குமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றன. சிரிய அரசாங்கப் படையினர் ஏற்கனவே கொல்லப்பட்டுள்ளமை துருக்கிய மற்றும் சிரியப் படைகளுக்கு இடையில் மோதல் மேலும் விரிவடைவதற்கான சாத்தியத்தை சுட்டிக்காட்டுகிறது. டமாஸ்கஸ், மற்றும் சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான நேட்டோவின் போரை தீவிரமாக ஆதரிக்கும் அங்காரா இடையே வளர்ந்து வரும் பதட்டங்கள் 2020 இல் நேரடி மோதலாக அதிகரித்தது.

2016 முதல், அங்காரா அதன் தெற்கு எல்லையில் குர்திஷ் அரசு தோன்றுவதைத் தடுக்க சிரியாவில் பல நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது, அதன் நேட்டோ நட்பு நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, YPG ஐ சிரியாவில் பினாமிப் படையாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என அது கோருகிறது. 4.4 மில்லியன் மக்கள் வசிக்கும் சிரியாவின் சுமார் 10 சதவீத பகுதியை துருக்கிய ஆயுதப்படைகளும் அவர்களது இஸ்லாமிய பிரதிநிதிகளும் தற்போது கட்டுப்படுத்துகின்றனர்.

கூடுதலாக, எர்டோகன் அரசாங்கம் உள்நாட்டில் வெடிப்புறும் தன்மையுள்ள பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியை எதிர்கொள்கிறது. உத்தியோகபூர்வ வருடாந்திர பணவீக்கம் அங்கு 85 சதவீதத்தை எட்டியுள்ளது, அதே நேரத்தில் மில்லியன் கணக்கான உழைக்கும் மக்கள் முன்நிகழ்ந்திராத வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிலாள வர்க்கத்திற்குள் அதிருப்தி அதிகரித்து வரும் நிலையில், துருக்கி 2023 இல் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களுக்கு முன்னேறுகிறது.

இந்த சூழ்நிலைகளில், எர்டோகன், துருக்கிய தேசியவாதம் மற்றும் இராணுவவாதத்தை ஊக்குவிப்பதன் மூலம் வர்க்கப் பதட்டங்களை ஒடுக்கி தனது ஆதரவுத் தளத்தை மீண்டும் ஒருங்கிணைக்க முயல்கிறார். மேலும், வடக்கு சிரியாவில் இருந்து YPG போராளிகளை வெளியேற்றுவதன் மூலம் சிரிய அரபு அகதிகளை துருக்கியில் இருந்து வெளியேற்றுவதையும் அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மத்திய கிழக்கில் அமெரிக்க தலைமையிலான சக்திகளின் முப்பது ஆண்டுகால ஏகாதிபத்திய போரின் துணை விளைபொருளாக அபிவிருத்தி கண்ட இந்த மோதலுக்கு ஒரு முற்போக்கான பதில் என்னவென்றால், ஏகாதிபத்தியத்திற்கும் அதன் அனைத்து முதலாளித்துவ பினாமிகளுக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர சோசலிச ஐக்கியம் உருவாக்கப்பட வேண்டும்.

Loading