காஸா தீ விபத்தில் 22 பேர் பலி: பாலஸ்தீனர் மீதான இஸ்ரேலின் போரில் பலியானோர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த வியாழன் இரவு காஸாவின் வடக்கு சுற்றுப்புறமான ஜபாலியாவில் குடும்ப கொண்டாட்டத்தின் போது வீடு தீப்பிடித்ததில் 7 குழந்தைகள் உட்பட 22 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேலின் குற்றம்மிக்க 15 ஆண்டு கால முற்றுகையால் உருவாக்கப்பட்ட கொடூரமான வாழ்க்கை நிலைமைகளின் நேரடி விளைவுதான் காசாவை அதன் 2.3 மில்லியன் மக்களுக்கு ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றியுள்ளது.

காசாவில் தொழிலாளர் அமைச்சகத்தின் முன்னாள் துணை அமைச்சர் மகேர் அபு ரய்யா, எகிப்தில் இருந்து முதுமானி பட்டம் பெற்றுத் திரும்பியதையும், மற்றொரு குடும்ப உறுப்பினரின் பிறந்த நாளையும் அபு ரய்யா குடும்பத்தினர் கொண்டாடிக்கொண்டிருந்தபோது, மூன்றாவது மாடியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு அவர்களின் மூன்று மாடி குடியிருப்பு கட்டிடத்திலிருந்த அனைத்து கொண்டாட்டக்காரர்களையும் கொன்றது.

நவம்பர் 18, 2022 அன்று வடக்கு காசா பகுதியில் உள்ள ஜெபலியா அகதிகள் முகாமில் உள்ள மசூதிக்கு முன்பாக இறுதிச் சடங்கின் போது, தீ விபத்தில் கொல்லப்பட்ட அபு ராயா குடும்ப உறுப்பினர்களை சுமந்துகொண்டு துக்கம் அனுஷ்டிப்பவர்கள் கோஷங்களை எழுப்பினர். வடக்கு காசா பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் வியாழன் மாலை கட்டிடம் ஒன்றில் 21 பேர் கொல்லப்பட்டதாக பிரதேசத்தின் ஹமாஸ் ஆட்சியாளர்கள் தெரிவித்தனர் [AP Photo/Adel Hana]

தீயணைப்பு படையினர்கள் வருவதற்குள் அக்கம்பக்கத்தினர் சுமார் ஒரு மணி நேரம் கட்டிடத்தின் முன் கதவு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பின் கதவை உடைக்க முயன்றனர். குடும்பத்தின் உறவினரான பஹா அபு ரய்யா, Middle East Eye செய்தியிடம் தெற்கு காஸா பகுதியில் உள்ள ரஃபாவில் நடந்த மற்றொரு சம்பவத்தில் அவர்கள் ஈடுபட்டிருந்ததால், பொது காப்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு வர 40 நிமிடங்கள் ஆனது எனக் கூறினார். அவர்கள் வந்தபோது மூன்றாவது மாடிக்கு செல்ல ஏணிகள், போதுமான நீளமான குழாய் அல்லது போதுமான தண்ணீர் வசதி இல்லாமல் இருந்தது. வேகமாக பரவும் தீயை அவர்களால் உடனடியாகக் கட்டுப்படுத்த முடியவில்லை அல்லது அவர்கள் உயிருடன் எரிந்துபோவதற்கு முன்பு அல்லது புகையால் மூச்சு திணறுவதற்கு முன் குடும்பத்தினர் யாரையும் வெளியேற்ற முடியவில்லை.

இந்த தீ விபத்தால் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த ஆயிரக்கணக்கானோர், வெள்ளிக்கிழமை இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள காஸா முழுவதிலும் இருந்து வந்திருந்தனர்.

1967 அரபு-இஸ்ரேலியப் போரைத் தொடர்ந்து, எகிப்தின் கட்டுப்பாட்டில் இருந்த காஸா பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியபோது, சர்வதேச சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானதாகக் கருதப்படும் ஆக்கிரமிப்பின் கீழ் பாலஸ்தீனியர்கள் எப்போதும் அதிகரித்து வரும் அடக்குமுறைக்கு உட்பட்டனர். 2005ல் காஸாவில் இருந்து இஸ்ரேல் ஒருதலைப்பட்சமாக வெளியேறிய பின்னரும், அதன் நடைமுறை ஆக்கிரமிப்பான, நிலம், கடல் மற்றும் ஒழுங்கு எல்லைகள் மீதான அதன் கட்டுப்பாடு தொடர்கிறது.

கடந்த 15 ஆண்டுகளாக, இஸ்ரேல் காஸாவை கடுமையான கடல், வான் மற்றும் தரை முற்றுகைக்கு உட்படுத்தியுள்ளது. இஸ்லாமிய சகோதரத்துவத்துடன் இணைந்த முதலாளித்துவ மதவாதக் குழுவான ஹமாஸ் ஜனவரி 2006 இல் பாலஸ்தீனிய தேர்தல்களில் பெரும்பான்மையை வென்று, ஃபத்தா ஆதிக்கம் செலுத்தும் பாலஸ்தீனிய ஆணையத்தின் (PA) ஆதரவாளர்களால் ஆயுதமேந்திய சதித்திட்டத்தை முன்னெடுத்ததிலிருந்து ஜூன் 2007 இல் காஸா பகுதியைக் அது கைப்பற்றியது.

அப்போதிருந்து, இஸ்ரேல் பெரும்பாலான பொருட்கள் மற்றும் பண்டங்களை முற்றுகையிடப்பட்ட பகுதிக்குள் நுழைவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. காஸாவின் மருத்துவமனைகள், போலீஸ் மற்றும் அடிப்படையில் பாதுகாப்பற்ற முற்றுகைக்குள்ளான பகுதி மீதான கொலைகார தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவற்றை திருத்துவதற்கு மக்கள் பாதுகாப்புக் குழுக்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்குவதைத் தடுக்கின்றது. இது காஸாவிலிருந்து வெளியேறல், உள்ளே வருதலுக்கன பாலஸ்தீனியர்களின் பயணத்தையும் கட்டுப்படுத்தி, காஸாவிற்கு வெளியே அவசர, உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சையைப் பெறுவதற்கும் அடிக்கடி அனுமதி மறுக்கிறது.

காஸாவிற்கு பணத்தை மாற்ற மறுக்கும் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் ஃபத்தா கட்டுப்பாட்டில் உள்ள பாலஸ்தீனிய ஆணையத்தாலும் மற்றும் காசாவின் தெற்கு எல்லையை அதன் படைகள் கட்டுப்படுத்தும் எகிப்தின் இராணுவ சர்வாதிகாரி அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசி ஆகியோராலும் இஸ்ரேலுக்கு உதவி வழங்கப்படுகின்றது. முக்கியமாக, அதன் சட்டவிரோத நடவடிக்கைகள் இஸ்ரேலின் முக்கிய ஆதரவாளரான அமெரிக்காவாலும் முக்கிய ஐரோப்பிய சக்திகளாலும் ஆதரிக்கப்படுகின்றன. அவர்களின் மனிதாபிமான பாசாங்குகள் இருந்தபோதிலும், அனைவரும் டெல் அவிவுக்கு ஐக்கிய நாடுகள் சபையில் அரசியல் மற்றும் இராஜதந்திர ஆதரவை வழங்கியுள்ளனர். இது பொருளாதாரத் தடைகளைத் தவிர்க்க உதவியது. உக்ரேனை ஆக்கிரமித்ததற்காக ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளுக்கு இது முற்றிலும் மாறுபட்டது. இது பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் குற்றங்களில் அவர்களையும் உடந்தையாக்குகிறது.

இஸ்ரேல், மத்திய கிழக்கில் மிகவும் மேம்பட்ட இராணுவ அமைப்புடன் ஆக்கிரமிக்கும் சக்தியாக, அதன் சொந்த தயாரிப்பான ஒரு பெரிய குடியிருப்பில் சிக்கியுள்ள அகதிகள் மீது தடையற்ற மரணம், வன்முறை மற்றும் துன்பங்களை ஏற்படுத்துவதற்கு முழுதான அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் காஸா மக்கள் தங்கள் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டதை அனுபவித்ததோடு, மீண்டும் மீண்டும் குண்டுவீச்சுக்கள் மற்றும் இராணுவ தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீடித்த 2008-2009 தாக்குதல் 1,400 பாலஸ்தீனியர்களைக் கொன்று, பெரும்பாலான பிரதேசங்களை அழிவுக்குள்ளாக்கியது. 2012 நடவடிக்கையானது 177 பாலஸ்தீனியர்களைக் கொன்று, பல பொது மற்றும் தனியார் கட்டிடங்களை அழித்தது அல்லது சேதப்படுத்தியது. அதே நேரத்தில் 2014 இல் 50 நாள் தாக்குதல் 2,200 பாலஸ்தீனியர்களின் உயிர்களைக் கொன்றது. அதில் பெருமளவிலான பொதுமக்களே உள்ளடங்கியிருந்ததுடன், முற்றுகைக்குள்ளான பகுதியின் உள்கட்டமைப்பின் பெரும்பகுதியை அழித்தது. மே 2021 இல் இஸ்ரேலின் குண்டுவீச்சு 1,500 பொருளாதார ஸ்தாபனங்களை அழித்தது. உலக வங்கியின் மதிப்பீட்டின்படி காஸாவை போருக்கு முன்பு இருந்த மோசமான நிலைக்கு மீட்டெடுக்க $485 மில்லியன் தேவைப்பட்டது.

கடந்த ஆகஸ்டில், இஸ்ரேல் பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் மற்றும் அதன் ஆயுதப் பிரிவான அல்-குத்ஸ் படைகளை குறிவைத்து காஸா மீது இராணுவத் தாக்குதலை நடத்தியது. அதில் 17 குழந்தைகள் உட்பட 49 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதுடன், 360 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

காஸாவின் ஏற்கனவே மோசமான பொருளாதார நெருக்கடி 2018 ஆம் ஆண்டில் ஆழமடைந்தது. அப்போது அமெரிக்க ட்ரம்ப் நிர்வாகம், பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனமான அமைப்பான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் வேலை முகமையின் (UNRWA) செயல்பாட்டு வரவு-செலவுத் திட்டத்திற்கு $300 மில்லியன் பங்களிப்பை திரும்பப் பெறுவதற்கான முடிவை எடுத்தது. இது UNRWA இன் வருடாந்த வரவு-செலவுத் திட்டமான $1.2 பில்லியனில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது.

ஒரு நாளைக்கு சில மணி நேரம் மட்டுமே அங்கு மின்சாரம் கிடைக்கிறது. தொழிலாளர்களில் குறைந்தது 56 சதவீதம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். சுகாதாரம் மற்றும் கல்வி அமைப்புகள் செயலிழந்துள்ளன. பல அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான கிடைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான நீர் அமைப்பு சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் அல்லது உப்பு மூலம் மாசுபட்டுள்ளது. அதே நேரத்தில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நேரடியாக கடலில் செலுத்தப்பட்டு, குளிக்கும் கடற்கரைகளை மாசுபடுத்துகிறது.

காஸாவின் குடிமக்கள் பாதுகாப்புக் குழுக்கள் பாதுகாப்பு உபகரணங்களின் கடுமையான பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர். இதனால் அவசர அழைப்புகளுக்கு விரைவாகவோ அல்லது திறம்படவோ பதிலளிப்பது கடினமாக உள்ளது.

காஸாவில் உள்ள அதிகாரிகளின் முதற்கட்ட அறிக்கையின்படி, கடந்த வியாழன் இரவு தீ பரவுவதற்கு ஒரு முக்கிய காரணி கட்டிடத்தில் பெட்ரோல் சேமிப்பு இருந்ததாகும். காஸாவின் ஒரே மின்உற்பத்தி இயந்திரத்திற்கான எரிபொருளின் கடுமையான பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு இது ஒரு பரவலான நடைமுறையாகும். ஒரு நாளைக்கு ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே மின்சாரம் கிடைப்பதால், பாலஸ்தீனியர்கள் தங்கள் சொந்த மின்உற்பத்தி இயந்திரங்களை இயக்குவதற்கு டீசல் மற்றும் எரிவாயுவை நோக்கி திரும்பியுள்ளனர். பெட்ரோலில் இயங்கும் மின்உற்பத்தி இயந்திரத்தை அபு ரய்யா குடும்பத்தினர் பயன்படுத்தியதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். காசாவின் மின் நெருக்கடி தொடங்கியதில் இருந்து, விளக்குகள் மற்றும் வெப்பமாக்கலுக்குப் பயன்படுத்தப்படும் மெழுகுவர்த்திகள், பெட்ரோல் அல்லது எரிவாயு ஆகியவற்றால் இதேபோன்ற பல வீடுகளில் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன.

இஸ்ரேலிய பாதுகாப்பு மந்திரி பென்னி காண்ட்ஸ் இதற்கு ஒரு இழிந்த மற்றும் பாசாங்குத்தனமான அறிக்கையை வெளியிட்டார், 'அப்பிரதேசங்களுக்கான அரசாங்க நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பாளர் காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு வெளியேற்றுவதில் மனிதாபிமான உதவியை வழங்குவதற்கான வாய்ப்பை அனுப்பியுள்ளார். காயம் அடைந்த காஸாவின் மக்களுக்கு மருத்துவ உதவி செய்து உயிர்களை காப்பாற்ற இஸ்ரேல் தயாராக உள்ளது” என்று தெரிவித்தார். காயமடைந்தவர்கள் யாரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை. அங்கிருந்த அனைவரும் தீயில் கருகி இறந்தனர். காஸாவிற்கு ஏணிகள், தீயணைப்பு உடைகள், பிராணவாயு மற்றும் பிற தேவையான உபகரணங்களை வழங்குவது பற்றி அவர் எதுவும் கூறவில்லை.

உறுதிப்படுத்தப்படாத அல்லது இல்லாத ஆதாரங்களின் அடிப்படையில் 'மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் முஸ்லீம் வீகர்களுக்கு எதிரான இனப்படுகொலை' செய்ததற்காக சீனாவையும், உக்ரேனில் ரஷ்யாவை 'போர் குற்றங்களுக்காக' கண்டனம் செய்வதில் அமெரிக்காவும் நேட்டோவும் ஒருபோதும் சோர்வடையவில்லை. எவ்வாறாயினும், காஸாவில் ஏற்பட்ட தீ பற்றி அவர்கள் மௌனம் காத்துள்ளனர். அதே நேரத்தில் உலகின் பெருநிறுவன பத்திரிகைகள் எந்த கருத்தும் தெரிவிக்காமல் அது பற்றி செய்தி வெளியிட்டுள்ளன.

வாஷிங்டனுக்கு மறுப்புத் தெரிவிக்கும் அதே வேளையில் பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தாக்குதல் நாயாக டெல் அவிவின் பங்கும், வெற்றி, ஆக்கிரமிப்பு மற்றும் அடக்குமுறை போர்களை இயல்பாக்கும் அவர்களின் சொந்த பாத்திரத்துடன் அவர்களின் மௌனம் பிணைக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனியர்களை அடக்குவதில் இஸ்ரேல் பயன்படுத்தும் குற்றவியல் வழிமுறைகள், சர்வதேச அளவில் ஆளும் உயரடுக்கின் கட்டளைகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்யும் தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் என்பதை இது காட்டுகின்றது.

Loading