காஜிமாவத்தையில் தீ விபத்தில் வீடுகளை இழந்த அனைத்து குடும்பங்களுக்கும் வீடுகள் வழங்கு! சோசலிச வேலைத்திட்டத்தின் கீழ் வீட்டு உரிமைகளுக்காகப் போராடும் நடவடிக்கை குழுக்களை உருவாக்கு!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

செப்டம்பர் 27 அன்று கொழும்பு கஜீமாவத்தை குடிசை வளாகம் தீ விபத்தில் எரிந்து போனதால் இடம்பெயர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) அரசாங்கம் காட்டியுள்ள இழிந்த பிரதிபலிப்பின் மூலம், 'கண்ணியமாக வாழக்கூடிய வீட்டுக்கான' அடிப்படை சமூக உரிமையை, முதலாளித்துவ அரசாங்கங்கள் மற்றும் முதலாளித்துவ முறைமையின் கீழ் பெற முடியாது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

காஜிமாவத்தையில் எரிந்துபோன் வீடுகள்

காஜிமாவத்தையில் வசிக்கும் 214 குடும்பங்கள் 'குறைந்தபட்ச தகுதிகளை' பூர்த்தி செய்யாததால் அவர்களுக்கு வீடுகள் வழங்க முடியாது என்று நகர அபிவிருத்தி அதிகார சபையானது (ந.அ.அ.ச.) வீடமைப்பு அமைச்சின் செயலாளரிடம் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வெறுமனே ந.அ.அ.ச. முடிவு மட்டுமன்றி, விக்கிரசிங்க- ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. அரசாங்கத்தின் மற்றும் அதற்கு முன் இருந்த அனைத்து முதலாளித்துவ அரசாங்கங்களினதும் கொள்கையாகும்.

இந்த அறிக்கை பொருந்துவது காஜிமாவத்தைக்கு மட்டும் அல்ல. கொழும்பு நகரில் பெறுமதிமிக்க காணிகளை முல்லீட்டாளர்களுக்கு வழங்கும் திட்டத்தின் கீழ், “குறைந்தபட்ச தகுதிகளை பூர்த்தி செய்யவில்லை” என்ற பிரிவின் கீழ், இலட்சக்கணக்கான வறிய மக்கள் வீதியில் தள்ளப்படும் அச்சுறுத்தல் தலைதூக்கியுள்ளது. குறிப்பாக, நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு சரிந்துபோயுள்ள சூழ்நிலையில், இந்த நிலங்களை விரைவில் சர்வதேச முதலீட்டாளர்களிடம் ஒப்படைத்து அந்நிய செலாவணியை ஈட்டுவது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும்.

பாராளுமன்றம், அரசியல் சாசனம், நீதித்துறை போன்ற முதலாளித்துவ அரசின் ஏனைய எந்திரங்களைப் போலவே, பல்வேறு விதிமுறைகளை முன்வைத்து, வீடற்ற ஏழைகளுக்கு வீடுகளை வழங்க மறுக்கும் ந.அ.அ.ச., தன்னை ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளின் முழுமையான பாதுகாப்பு நிறுவனமாக பொதுமக்களிடம் மோசடியாகக் காட்டிக் கொள்கிறது.

'இலங்கை மக்களின் வீட்டுத் தேவைகளை, குறிப்பாக சொந்த வீடு இல்லாத குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள தேசிய அளவில் ஊக்குவித்தல், இடவசதி செய்தல் மற்றும் ஒருங்கிணைத்தல், அதன் மூலம் அவர்களின் சமூக உயிர்வாழ்வை மேம்படுத்துதல் மற்றும் பொருளாதார செழிப்பை அடைய செயற்படுதலுமே' தனது கடமை என ந.அ.அ.ச. அறிவித்துள்ளது.

ந.அ.அ.ச. அறிவித்துள்ள நோக்கம் ஒருபக்கம் இருக்க, அது இப்போது வீடுகளைக் கட்டி விற்று பணம் சம்பாதிக்கும் நிறுவனமாக மாறியுள்ளது. அந்தவகையில், அதனால் தற்போது கட்டப்பட்டுள்ள வீடுகள், அமெரிக்க டொலரில் வாங்குபவர்களுக்கு முன்னுரிமை அளித்து, சிறப்பு தள்ளுபடியில் விற்கப்படுகின்றன.

ஒரு வீட்டிற்கான 'குறைந்தபட்ச தகுதியை பூர்த்தி செய்யாதவர்கள்' என வகப்படுத்தப்பட்டுள்ள காஜிமாவத்தையில் உள்ள குடும்பங்களின் உறுப்பினர்கள், அந்த இடத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களாக இருப்பதோடு பல ஆண்டுகளாக மின்சாரம், நீர் கட்டணங்கள் மற்றும் காணி வரியை செலுத்தியுள்ளனர். முதலாளித்துவ விதிமுறைகளின் படி, வீட்டுவசதிக்கான 'குறைந்தபட்ச தகுதி' எதுவாக இருந்தாலும், ஒழுக்கமான வீடுகளில் வாழ்வது ஒவ்வொரு மனிதனின் அடிப்படை சமூக உரிமையாகும்.

முதலாளித்துவ அரசுகளின் அரசியலமைப்புகளிலும், ஐக்கிய நாடுகள் சபை போன்ற ஏகாதிபத்திய நிறுவனங்களின் பல்வேறு அறிவிப்புகளிலும், இந்த வீட்டு உரிமையைப் பற்றி எவ்வளவு குறிப்பிடப்பட்டாலும், அது ஆவணங்களுக்குள் மட்டுமே அடங்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் வீட்டு உரிமைப் பிரகடனம் இது சம்பந்தமாக மிகவும் மோசடியானதாகும். 'கண்ணியமான வீட்டு உரிமை என்பது ஒரு கண்ணியமான வாழ்க்கைத் தரத்திற்கான உரிமையின் ஒரு பகுதியாக சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமையாகும்,' என அது கூறுகிறது.

ஆனால், அந்த உரிமையை உறுதிப்படுத்தும் பொறுப்பிலிருந்து முதலாளித்துவ அரசுகள் மற்றும் முதலாளித்துவ அரசாங்கங்களை விடுவித்து, அந்த பிரகடனத்தின் பிந்தைய பத்தியில் கூறுவதாவது, 'அரசாங்கத்தால் முழு மக்களுக்கும் வீட்டுவசதி வழங்கப்பட வேண்டும் என்றும், வீடற்றவர்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து வீட்டுவசதி கோருவதற்கான உரிமை தானாகவே உள்ளது என்றும் ஒரு தவறான புரிதலும் வீட்டு உரிமையுடன் சிக்கியுள்ளது.'

இலங்கையின் முதலாளித்துவ ஆட்சியாளர்கள் 1948ஆம் ஆண்டு தொடக்கம் தமது ஆட்சியை ஆரம்பித்ததன் பின்னர் நடைபெற்ற ஒவ்வொரு தேர்தலிலும் வீட்டுப் பிரச்சினையைத் தீர்ப்போம் என பொதுமக்களுக்கு வாக்குறுதி அளித்து, ஆட்சிக்கு வந்தவுடன் அந்த வாக்குறுதிகளை கைவிட்டனர். நாட்டில் நிலவும் பாரிய வீட்டுத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு அவ்வப்போது நிறைவேற்றப்படும் வீட்டுத் திட்டங்கள் போதுமானதாக இல்லை.

தசாப்தங்களுக்கும் மேலாக, தீவின் தொலைதூர கிராமங்களில் இருந்து வேலை தேடி கொழும்பு மாநகருக்கு இடம்பெயர்ந்த ஏழை மக்களே மிகவும் கடுமையான வீட்டுப் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர். 2021ஆம் ஆண்டு கொழும்பு மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொழும்பு நகரில் வாழும் மொத்த சனத்தொகையில் பாதியளவு மக்கள் அதிக மக்கள் தொகை அடர்த்தி உள்ள பிரதேசங்களில் சுத்தமான நீர் மற்றும் சுகாதார வசதிகள் இல்லாத குடிசைகளில் வாழ்கிறார்கள்.

இந்த விடயத்தில் காஜிமாவத்தை ஒரு உதாரணம் ஆகும். அதன் ஆபத்தான சூழ்நிலையால், அங்குள்ள வீடுகள் மூன்று ஆண்டுகளில் இரண்டு முறை தீயில் எரிந்து நாசமாகின. இம்முறை தீவிபத்து ஏற்பட்டதையடுத்து, கழிவறை உள்ளிட்ட குறைந்தபட்ச சுகாதார வசதிகள் கூட இன்றி முவதர உயன சனசமூக மண்டபத்திலும், காலியாக உள்ள களஞ்சியசாலை ஒன்றிலும் குடியிருப்புவாசிகள் தங்கள் கைகுழந்தைகளுடன் ஒரு மாதத்துக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் கொழும்பு வறிய மக்களின் வீட்டுப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் போர்வையில் ஆரம்பிக்கப்பட்ட அடுக்குமாடித் திட்டங்களின் அடிப்படை நோக்கம் ஏழைகள் வாழ்ந்த கொழும்பு நகரின் பெறுமதியான காணிகளை மீட்டு முதலீட்டாளர்களிடம் கையளிப்பதாகும்.

2010 மே மாதம், ந.அ.அ.ச. ஆனது கோட்டாய இராஜபக்ஷ செயலாளராக இருந்த பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது,. பின்னர், சட்டப்பூர்வ உரிமைகளைப் புறக்கணித்து, சட்டத்தை மீறி மக்களை அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றுவதற்கு அரசாங்கம் ஆயுதப்படைகளை அனுப்பியது. 2015 ஆம் ஆண்டில் 280,000 முதல் 500,000 குடியிருப்பாளர்கள் இத்திட்டத்தால் இடம்பெயர்வார்கள் என மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் மதிப்பிட்டுள்ளது.

இத்தகைய பலாத்காரங்களுக்கு எதிரான பொதுமக்களின் எதிர்ப்பைப் சுரண்டிக்கொண்டு 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம், 'மெகாபொலிஸ்' திட்டத்தின் கீழ் முழு மேல் மாகாணத்தையும் உள்ளடக்கும் வகையில் இந்த திட்டத்தை விரிவுபடுத்தியது. 2016 பெப்ரவரியில், போலீஸார் குவிக்கப்பட்டு காஜிமாவத்தையில் ஏராளமான வீடுகள் இடித்து தள்ளப்பட்டு, தண்ணீர் மற்றும் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டது.

குறைந்த விலையில் அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதியின் பேரில், அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் குடியிருப்பாளர்களை வெளியேற்றினாலும், வெளியேற்றப்பட்ட பெரும்பாலான குடும்பங்களுக்கு வீடுகள் எதுவும் கிடைக்கவில்லை. வழங்கப்பட்ட சிறிய அடுக்குமாடி குடியிருப்புகளும் அடிப்படை வசதிகள் மற்றும் சரியான தரத்துடன் இல்லை.

வீட்டு வசதியின்மையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மற்றொரு பிரிவினரான பெருந்தோட்டத் தொழிலாளர் சமூகம் நாட்டின் மொத்த சனத்தொகையில் 3.6 வீதத்தைக் கொண்டுள்ளது. 'சிட்டிஸ் பீப்பிள்ஸ் ப்ளேசஸ்' என்ற சர்வதேச இதழின் ஆகஸ்ட் 2021 இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கை, 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது கட்டப்பட்ட வரிசை அறைகளிலேயே 56 சதவீத குடும்பங்கள் அல்லது 135,000 குடும்பங்கள் வசிப்பதாக வெளிப்படுத்துகிறது. மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர்களான எஸ்.எஸ். ஹப்புஆராச்சி மற்றும் எஸ்.எஸ். காரியவசம் ஆகியோர் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

இந்த லயின் (வரிசை) அறையின் சராசரி பரப்பளவு 175 சதுர அடி மட்டுமே, இது ஒரு குடும்பம் வாழ போதுமானதாக இல்லை. பொதுவில் பற்றாக்குறையான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் சேதமடைந்துள்ளன. தோட்ட நிர்வாகம் புதிய வீடுகளை கட்டுவதையும் ஏற்கனவே உள்ள வீடுகளை புதுப்பிப்பதையும் கிட்டத்தட்ட முற்றிலுமாக நிறுத்திவிட்டது. வீடற்ற ஒரு புதிய தலைமுறையினர் தங்கள் பெற்றோரின் அதே பாழடைந்த லயின் அறைகளில் தங்கள் குடும்பங்களுடன் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அவர்களில் சிலர் குடிசைகளில் வாழ்கின்றனர்.

மூன்று தசாப்த கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு-கிழக்கில் உள்ள தமிழ் பேசும் ஒடுக்கப்பட்ட மக்களும் வீட்டுப் பற்றாக்குறையால் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு அடிப்படை மக்கள் குழுவாகும். போரினால் வீடுகள் அழிக்கப்பட்டு இடம்பெயர்ந்த இலட்சக்கணக்கான மக்கள் இன்னமும் குடில்களில் வாழ்கின்றனர். ஐ.நா. அறிக்கைகளின்படி, வடமாகாணத்தில் மட்டும் 160,000 வீடுகள் முழுமையாகவும் பகுதியளவிலும் போரில் அழிக்கப்பட்டுள்ளன.

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து எதிர்பார்க்கப்படும் அவசர கடனுக்காக பாரிய அளவில் பொதுச் செலவினங்களைக் குறைத்து வருகின்றது. 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், மீள்வருகை செலவினமாக வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு 438 மில்லியன் ரூபா மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட தரவுகளும் புள்ளிவிபரங்களும் சிங்கள, தமிழ், முஸ்லிம் முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அரசியல் கட்சிகளாகச் செயற்படும் தோட்டத் தொழிற்சங்கங்களும் வீட்டுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளின் பொய்மையையும், ஏனைய உரிமைகளைப் போலவே வீட்டு உரிமைகளைப் பெறுவதிலும் முதலாளித்துவ முறைமையின் முழு இலாயக்கற்ற தன்மையையும் காட்டுகின்றன.

இலங்கையின் 74 ஆண்டுகால முதலாளித்துவ ஆட்சி மற்றும் சர்வதேச முதலாளித்துவ ஆட்சிகளின் வரலாற்று அனுபவமானது, உற்பத்திச் சாதனங்களின் தனியார் உடைமை மற்றும் இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ முறைமையின் கீழ், வீட்டு உரிமை உட்பட வேறு எந்த உரிமையையும் வெற்றிகொள்ள முடியாது என்பதை தொழிலாள வர்க்கத்திற்கு நிரூபித்துள்ளது,

விஞ்ஞான சோசலிசத்தின் சிறந்த முன்னோடியான ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ் கூறியதாவது: “வீட்டுப் பிரச்சினை தீர்க்கப்படுவதன் மூலம் சமூகப் பிரச்சினை தீர்க்கப்படாது. ஆனால் சமூகப் பிரச்சனையைத் தீர்ப்பதன் மூலம், அதாவது முதலாளித்துவ உற்பத்தி முறையை ஒழிப்பதன் மூலம் மட்டுமே வீட்டுப் பிரச்சனையைத் தீர்க்க முடியும்.”

பொது வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருட்கள் மற்றும் ஏனைய வளங்களின் உற்பத்தி மற்றும் விநியோகம் தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டியிருப்பதோடு அதற்காக வங்கிகள், பெருநிறுவனங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் ஏனைய முக்கிய பொருளாதார மையங்கள், தொழிலாள வர்க்கக் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்கப்பட வேண்டும். அப்போது, தொழிலாள வர்க்கத்தின் உழைப்பில் இருந்து கறந்தெடுக்கப்பட்டு, முதலாளிகளின் தனியார் சொத்துக்களாக, வங்கிகளில் குவிந்து கிடக்கும் பெரும் செல்வத்தை, வீட்டுத் திட்டங்கள் உட்பட பொதுத் தேவைகளுக்குப் பயன்படுத்த வாய்ப்பு திறக்கும்.

இதற்காகப் போராட, தொழிலாளர்களும் ஏனைய ஒடுக்கப்பட்டவர்களும் முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அமைப்புகள், முதலாளித்துவ அமைப்புடன் இணைந்த தொழிற்சங்கங்கள் மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற போலி-இடது கட்சிகளில் இருந்து பிரிந்து, தாங்களாகவே ஜனநாயக ரீதியில் முடிவுகளை எடுக்கும் நடவடிக்கை குழுக்களை அமைக்க முன்வர வேண்டும். அந்த கமிட்டிகள் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் ஒழுங்கமைந்து பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து போராட வேண்டும்.

  • வெளிநாட்டு கடனை திருப்பி செலுத்த மறுத்திடு!
  • சர்வதேச வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் சிக்கன உத்தரவுகளை நிராகரி!
  • பில்லியனர்கள் மற்றும் பெருநிறுவனங்களின் மாபெரும் செல்வத்தை கையகப்படுத்து!
  • அனைவருக்கும் போதுமான வசதிகளுடன் கூடிய நல்ல வீடுகளை வழங்க பல்லியன் கணக்கில் பணத்தை ஒதுக்கு!

சர்வதேச சோசலிசத்திற்காக போராடும் ஒரு அரசியல் இயக்கத்திற்கான அடிப்படையை உருவாக்கும், மேற்கூறிய நடவடிக்கைக் குழுக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட, ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களதும் மாநாட்டை கட்டியெழுப்ப சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) போராடுகிறது. காஜிமாவத்தையில் வசிப்பவர்கள், தொழிலாளர்கள் மற்றும் வீட்டுப் பிரச்சனை உட்பட பிற சமூகப்-பொருளாதார பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ள ஏனைய ஒடுக்கப்பட்டவர்களையும் அதில் இணைந்துகொள்ளுமாறு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது.

Loading