அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தை இலங்கை பொலிஸ் கொடூரமாகத் தாக்கியது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

கடந்த வெள்ளியன்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இலங்கை அரசாங்கம், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் (அ.ப.மா.ஒ.) ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே, மற்றுமொரு மாணவர் செயற்பாட்டாளரான கல்வெவ சிறிதம்மா மற்றும் ஏனைய அரசியல் கைதிகளையும் விடுவிக்கக் கோரி கொழும்பில் அ.ப.மா.ஒ. ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் மீது கொடூரமான பொலிஸ் தாக்குதலை கட்டவிழ்த்து விட்டது. முதலிகே மற்றும் சிறிதாம்மா கைது செய்யப்பட்டு 90 நாட்களை கடந்துள்ள நிலையில் இந்த போராட்டம் நடைபெற்றது.

18 நவம்பர் 2022 அன்று கொழும்பில் மாணவர்கள் நடத்திய பேரணி

ஆர்ப்பாட்டத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், கொழும்பு பிரதான நீதவான் டி.என்.எல். மஹாவத்த, பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் (TID) வேண்டுகோளுக்கு இணங்க முதலிகே, சிறிதம்மா ஆகியோரின் தடுப்புக் காவல் உத்தரவு காலாவதியாகும் நாளில் அவர்களை விடுவிக்காமல், அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். கொடூரமான பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவர்களை தடுத்து வைப்பதற்கான உத்தரவில் விக்கிரமசிங்க தனிப்பட்ட முறையில் கையெழுத்திட்டிருந்தார்.

முதலிகே, சிறிதம்மா ஆகியோரின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு வெளியே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். “பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விலகிக்கொள்!”, “அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்! மற்றும் 'நவம்பர் 18 அன்று தொண்ணூறு நாட்கள்,' என்ற பதாகைகளை அவர்கள் காட்சிப்படுத்தினர்.

போராட்டம் தொடங்குவதற்கு முன்பே, ஐ.நா. அலுவலகத்திற்கு செல்லும் பாதையை கலகத் தடப்பு பிரிவு உட்பட பொலிஸ் மறித்திருந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் காலி வீதி மற்றும் பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள ஃபுளோவர் வீதியை நோக்கி பேரணியாகச் சென்ற அரை மணி நேரத்தில், பொலிஸ் குழுக்கள் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பயன்படுத்தி அவர்களை கலைக்க முன்வந்தன.

18 நவம்பர் 2022 அன்று கொழும்பில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது பொலிஸ் தாக்குதல் நடத்திய போது

பொலிஸாரின் தாக்குதலை தவிர்ப்பதற்காக நாரஹேன்பிட்டி பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு அருகில் மற்றுமொரு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் தாமரைத் தடாக திரையரங்கிற்கு அருகில் கூடி கோஷங்களை எழுப்பினர்.

பிந்தைய இடத்தில் போராட்டக்காரர்களை தாக்கிய பொலிஸ், அவர்கள் தப்பி ஓடும்போது தண்ணீர் பீரங்கிகளைப் பயன்படுத்தி அவர்களைத் துரத்தியது. பலர் கீழே விழுந்து காயமடைந்தனர். அதன் பின்னர் முதலிகே, சிறிதம்மா ஆகியோர் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக அ.ப.மா.ஒ. ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடினர். இந்த பேரணியை மீண்டும் கலைத்த பொலிஸ், சில போராட்டக்காரர்களை பல கிலோமீட்டர் தூரம் விரட்டியடித்தது.

அ.ப.மா.ஒ., அதன் முகநூல் பக்கத்தில், ஷெஹான் பசிந்து என்ற ஒரு எதிர்ப்பாளர் கைது செய்யப்பட்டு, போலீஸ் காவலில் இருந்தபோது கொடூரமாக தாக்கப்பட்டதாகவும் அவருக்கு மருத்துவ சிகிச்சை மறுக்கப்பட்டதாகவும் செய்தி வெளியிட்டிருந்தது. வெகுஜன எதிர்ப்பு பெருகிய நிலையில், அவர் மறுநாள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

18 நவம்பர் 2022 அன்று கொழும்பில் மாணவர் போராட்ட பேரணிக்கு எதிராக அணிதிரண்டிருந்த கலகத் தடுப்புப் பொலிசார்

சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.) அமைப்பும் இந்த பொலிஸ் அடக்குமுறையைக் கண்டிப்பதுடன் கைது செய்யப்பட்ட இரண்டு அ.ப.மா.ஒ. செயல்பாட்டாளர்களை உடனடியாக விடுவிக்கவும் அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் இரத்துச்செய்யவும் கோருகின்றன.

சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. இந்த அறைகூவலை விடுக்கும் அதே வேளை, அ.ப.மா.ஒ. மற்றும் அதற்குத் தலைமை தாங்கும் போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சியினதும் (மு.சோ.க.) அரசியலை உறுதியாக எதிர்க்கின்றன. அரசாங்கத்திற்கு எதிரான மாணவர்களின் எதிர்ப்பை முதலாளித்துவ கட்டமைப்பிற்குள் அடக்கி வைத்திருக்க இரு அமைப்புகளும் முயல்கின்றன.

மாணவர் எதிர்ப்பாளர்கள் மீதான இந்த கொடூரமான தாக்குதல்கள், அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட கடுமையான சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்துவதால், ஒன்றுகூடல் மற்றும் பேச்சு சுதந்திரம் உட்பட எந்த ஜனநாயக உரிமைகளையும் விட்டுவைக்காது என்பதைக் காட்டுகிறது. இந்த ஒடுக்குமுறை ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தையும் கிராமப்புற மக்களையும் அச்சுறுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும்.

மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களும் பங்கெடுத்த, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் இராஜினாமாவிற்கும் அவரது அரசாங்கம் சரிவதற்கும் வழிவகுத்த, ஏப்ரல்-ஜூலை வெகுஜன எழுச்சியால் அரசாங்கமும் ஆளும் தட்டினரும் அச்சமடைந்துள்ளனர். தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படாத விக்கிரமசிங்க அரசாங்கம், வாழ்க்கைத் தரங்கள் மீதான அதன் தாக்குதல்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளை அது நசுக்குவதற்கும் எதிரான வெகுஜனப் போராட்டங்களின் புது மீள் எழுச்சியை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது.

'அடக்குமுறைக்கு எதிராகப் போராடுதல்' என்ற பெயரில், அ.ப.மா.ஓ. மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சியும் முதலாளித்துவக் கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.], மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தொழிற்சங்கங்களுடன் கூட்டுச் சேர்ந்துள்ளன. இந்த சக்திகள் அனைத்தும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் மேற்கத்திய சக்திகளின் தூதரகங்களுக்கு பயனற்ற வேண்டுகோள்களை விடுப்பதன் மூலம், மாணவர்களை நிராயுதபாணியாக்க முயல்கின்றன. முன்னதாக, இடைக்கால முதலாளித்துவ அரசாங்கத்திற்காக ஐ.ம.ச. மற்றும் ஜே.வி.பி. முன்வைத்த கோரிக்கைகளுக்குப் பின்னால் இராஜபக்ஷ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை திசைதிருப்ப அவை ஒன்றாகச் செயல்பட்டன.

சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காக போராடுவதற்காக, முதலாளித்துவ கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக, தங்கள் சொந்த நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்ப தொழிலாள வர்க்கத்திற்கு அழைப்பு விடுத்து, சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. இந்தப் போராட்டத்தில் தலையிட்டன. இத்தகைய நடவடிக்கை குழுக்கள், அதே உலகளாவிய பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி மற்றும் சர்வாதிகார ஆட்சி வடிவங்களின் வளர்ச்சியை எதிர்கொள்ளும், சர்வதேச அளவில் வாழும் தொழிலாளர்களுடன் ஐக்கியப்படுவதற்கான வழிவகைகளையும் வழங்கும்.

தொழிற்சங்கங்கள் மற்றும் மு.சோ.க.-அ.ப.மா.ஒ. மற்றும் முதலாளித்துவக் கட்சிகளிடம் இருந்து அதன் அரசியல் சுதந்திரத்தை நிலைநிறுத்துவதற்கு போராடுவதற்கும், மாணவர்களை தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்புவதற்காகவும் போராடுவதற்கும் ஐ.வை.எஸ்.இ. வலியுறுத்தியது. நெருக்கடி நிறைந்த முதலாளித்துவ அமைப்பை தூக்கி எறியும் புரட்சிகர பணியை நிறைவேற்ற தொழிலாள வர்க்கம் மட்டுமே தலைமையை வழங்க முடியும் மற்றும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அரசாங்கத்தின் முடிவில்லாத தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

இந்தப் போராட்டத்தில் இருந்து தொழிலாளர்களைத் தடுப்பதில் மு.சோ.க. மற்றும் தொழிற்சங்கங்கள் ஆற்றிய பங்கின் காரணமாகவே, இராஜபக்ஷ அரசாங்கம் தூக்கியெறியப்பட்டாலும், முதலாளித்துவ வர்க்கம் அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கின்றது.

இப்போது இந்த அமைப்புகள் அரச அடக்குமுறையை குறைத்து மதிப்பிடவும், போராட்டங்கள் ஊடாக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் அடக்குமுறையை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்ற மாயையை ஊக்குவிக்கவும் முயல்கின்றன. ஆர்ப்பாட்டம் நடந்த அதே நாளில், மு.சோ.க. பிரச்சார செயலாளர் துமிந்த நாகமுவ, சிங்கள நாளிதழான திவயின பத்திரிகையிடம், 'புலனாய்வு அமைப்புகளை குழப்பி மிகவும் வெற்றிகரமாக போராட்டம் நடத்தப்பட்டது' என்று பெருமையாக கூறினார்:

உண்மையில், விக்கிரமசிங்க அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலை தீவிரப்படுத்துகிறது. கடந்த வாரம் வெளியிடப்பட்ட அதன் வரவுசெலவுத் திட்டத்தில் பொதுச் செலவினங்களில் கடுமையான வெட்டுக்கள், உழைக்கும் மக்கள் மீதான வரிகள் மற்றும் தனியார்மயமாக்கல் நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும், அதே நேரம், கல்வி மற்றும் சுகாதாரம் நிதி பற்றாக்குறையில் உள்ளன. மக்களின் எதிர்ப்பை அடக்குவதற்கான தயாரிப்புகளின் ஒரு பகுதியாக, இராணுவச் செலவு 50 பில்லியன் ரூபாவால் 539 பில்லியன் ரூபாவரை அதிகரிக்கப்படும்.

ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீதான தாக்குதல்களை, விக்கிரமசிங்க அரசாங்கம் மற்றும் அனைத்து ஸ்தாபன முதலாளித்துவ கட்சிகள் மற்றும் அவற்றின் போலி-இடது மற்றும் தொழிற்சங்க கூட்டாளிகளுக்கு எதிரான ஒரு அரசியல் போராட்டத்தின் மூலம் மட்டுமே தோற்கடிக்க முடியும். அனைத்து முதலாளித்துவ கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்தும் பிரிந்து, ஐ.வை.எஸ்.எஸ்.இ.யில் சேருமாறும், ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்கு அர்ப்பணித்துக்கொண்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை அமைப்பதன் பேரில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதற்கு போராடுமாறு மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.

இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கின்றன:

  • அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்!
  • பயங்கரவாத தடைச் சட்டம், அத்தியாவசியப் பொதுச் சேவைச் சட்டம், பொதுப் பாதுகாப்பு ஆணைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் உட்பட அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் ரத்து செய்!
  • நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்திடு!

'உக்ரேனில் போரை நிறுத்த இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் வெகுஜன இயக்கத்தை கட்டியெஉப்பு!' என்ற தலைப்பில், ஐ.வை.எஸ்.எஸ்.இ. ஏற்பாட்டி டிசம்பர் 10 நடக்கவுள்ள சர்வதேச வலையரங்கில் பங்கேற்குமாறு இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

Loading