சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து கோவிட் கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கு அழுத்தம் கொடுக்க பயன்படுத்தப்பட்டது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நவம்பர் 24, வியாழக்கிழமை அன்று, வடமேற்கு சீனாவில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தின் தலைநகரமான உரும்கியில் உள்ள ஒரு மிக உயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர், 9 பேர் காயமடைந்தனர். அக்கம்பக்கத்தைச் சேர்ந்த உள்கட்டமைப்பில் ஏற்பட்ட மோசமான தீ விபத்துகளால் உருவான இந்த பெரும் சோகத்தை சீனாவில் பூஜ்ஜிய கோவிட் நடவடிக்கைகளை நீக்கக் கோருவதற்கு மேற்கத்திய ஊடகங்கள் பயன்படுத்திக் கொண்டன.

அடுக்குமாடி தீ விபத்து குறித்த கைத்தொலைபேசி பதிவு [Photo: Chinese social media user]

ஜிக்ஸியாங்யுவான் என்ற பெயரிலான குடியிருப்பு வளாகத்தில் உள்ள 21 மாடி கட்டிடத்தின் 15வது மாடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் படுக்கையறையில் ஏற்பட்ட மின் கசிவால் தீ பற்றிக் கொண்டது. தீ ஜூவாலை அறையில் இருந்த படுக்கை மற்றும் மரச்சாமான்களை முழுமையாக பற்றிக் கொண்டதுடன், 17வது மாடி வரை பரவியது, அதே நேரத்தில் புகை 21வது மாடி வரை பரவியது.

இந்த சம்பவம் குறித்து உரும்கியில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்கு இரவு 7:49 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, தீயணைப்பு ஊழியர்கள் ஐந்து நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர். மாநகர அரசாங்கம் நடத்திய செய்தியாளர் சந்திப்பின்படி, இரண்டரை மணி நேரத்திற்குப் பின்னர் இரவு 10:20 மணியளவில் தான் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மூன்று வயது குழந்தை உட்பட 10 பேர் புகையை சுவாசித்ததால் இறந்தனர், மேலும் 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தீயணைப்பு வாகனம் வருவதற்கும் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நேரத்திற்கும் இடையே கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் தாமதம் ஆனது குறித்து உடனடியாக கேள்விகள் எழுப்பப்பட்டன. இது எப்படி நடந்தது மற்றும் இறப்புக்கு எவ்வளவு பங்களித்தது?

தீயணைப்பு வாகனம் குடியிருப்பு வளாகத்தின் நுழைவாயிலில் நிறுத்தப்பட்டதை அருகிலுள்ள கட்டிடங்களில் வசிப்பவர்கள் எடுத்த வீடியோ காட்சிகள் காட்டுகின்றன. தீயணைப்பு வீரர்கள் தொலைவில் இருந்து கட்டிடத்தின் மீது தண்ணீரை பாய்ச்ச முயன்றதால் தண்ணீரால் தீ ஜூவாலையை அணைக்க முடியவில்லை.

வளாகத்திற்குள் நுழையும் பாதை மிகவும் குறுகலானது என்று அதே செய்தியாளர் சந்திப்பு விளக்கியது. சாலையை ஒட்டி ஏராளமான கார்கள் நிறுத்தப்பட்டிருந்ததால், தீயணைப்பு வாகனத்தைப் போன்ற பெரிய வாகனங்கள் செல்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு வழியில் உலோக தடைத்தூண்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால், அவற்றை அகற்றுவதற்கும் நேரம் பிடித்தது. வெள்ளை நிற ஹஸ்மத் உடையணிந்த ஊழியர்கள் வளாகத்தின் நுழைவாயிலுக்கு அருகில் உள்ள தடைகளை உடைக்க முயற்சிப்பதை ஒரு வீடியோ காட்டுகிறது.

சீனாவின் சமூக ஊடகங்களில், அரசாங்கத்தின் பூஜ்ஜிய-கோவிட்-19 கொள்கைக்கு விரோதமானவர்களால் பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகின்றன. சமூக ஊடகங்களில் மிகவும் பரவலாக பரப்பப்பட்ட வதந்தி என்னவென்றால், தனிமைப்படுத்தல் மற்றும் பகுதியளவு பூட்டுதல் நடவடிக்கைகள் குடியிருப்பாளர்கள் தீயிலிருந்து தப்பிப்பதைத் தடுத்தன என்பதுதான். தனிமைப்படுத்தல் நோக்கங்களுக்காக கட்டிடத்தின் கதவு சுகாதார அதிகாரிகளால் பூட்டப்பட்டிருந்ததாகவும், தீயணைப்பு வீரர்கள் வளாகத்தின் நுழைவாயிலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வேலிகளை அகற்றுவதற்கு அதிக நேரம் வீணானதாகவும் கூறப்பட்டது.

இந்த வதந்திகளை வீடியோ காட்சிகள் மற்றும் அண்டை வீட்டாரின் சமூக ஊடக கணக்குகள் கொண்டு மறுக்க முடியும். சாலைத் தடைகள் அங்கு பல ஆண்டுகளாக உள்ளன, அவை பாதசாரிகளை அல்லாமல், வாகனங்களின் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த வைக்கப்பட்டிருந்தன. குடியிருப்பாளர்களைக் காப்பாற்ற உதவிய ஒரு தன்னார்வலர் உட்பட, பக்கத்து கட்டிடத்தில் வசிக்கும் குறைந்தது மூன்று சாட்சியாளர்களின் சமூக ஊடக கணக்குகள் அனைத்தும், மக்கள் கீழே நடக்க முடியும் என்பதையும் சரிபார்க்கிறது. உண்மையில், தீப்பிடித்த பின்னர் கட்டிடத்தின் நுழைவாயில் வழியாக தப்பிய குடியிருப்பாளர்கள் உள்ளனர்.

இந்த பேரழிவு, உரும்கியில் மட்டுமின்றி, சீனா முழுவதிலும் உள்ள பல குடியிருப்புப் பகுதிகளில், தீ பாதுகாப்பு குறித்த நிலவும் அலட்சியத்துடன் தெளிவாக இணைக்கப்பட்டுள்ளது. மரணங்களுக்கு கோவிட் கட்டுப்பாடுகளை குற்றம் சாட்டுவது பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த நீதியையும் வழங்காது, மாறாக உண்மையான பொறுப்புள்ளவர்களை விடுவிக்கிறது.

அமெரிக்கா மற்றும் சர்வதேச ஊடகங்கள், கோவிட் கட்டுப்பாடுகளை குற்றம் சாட்டுவதன் மூலம் சீனாவின் பூஜ்ஜிய கோவிட் கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான தமது பிரச்சாரத்தை மேலும் தொடர இந்த சோக சம்பவத்தை பயன்படுத்திக் கொள்ள முயன்றன. உதாரணமாக, நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகை, ‘பத்து பேரின் உயிரிழப்புக்குப் பின்னர் பூட்டுதலுக்கு எதிராக ஜின்ஜியாங்கில் வெடிக்கும் போராட்டம்’ என்ற தலைப்பிலான தனது கட்டுரையில், பூட்டுதல், தீயை அணைக்கும் தீயணைப்பு வீரர்களின் முயற்சிகளை மெதுவாக்கியது என்ற சீன சமூக ஊடக வர்ணனையாளர்களின் கூற்றுக்கள் விமர்சன ரீதியாக மறுபரிசீலனை செய்யப்படவில்லை.

“நாட்டின் பல பகுதிகளில் இந்த பூட்டுதல்கள் எவ்வாறு அமல்படுத்தப்பட்டுள்ளன என்பதற்கு ஒரு பெரிய மாதிரியாக, தங்கள் வீடுகள் அல்லது வளாகங்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் குடியிருப்பாளர்களின் விளக்கங்கள் பொருந்துகின்றன. தற்காலிக தடுப்புகள் மற்றும் பூட்டிய கதவுகள் வைரஸுக்கு ஆளானவர்களை தங்கள் வீடுகள் மற்றும் கட்டிடங்களை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் முயற்சிகளின் முக்கிய பகுதியாக மாறியுள்ளன,” என்று நியூ யோர்க் டைம்ஸ் எந்த ஆதாரமும் இல்லாமல் கூறியது.

சின்ஜியாங்கில் முஸ்லீம் உய்குர்களுக்கு எதிராக சீனா இனப்படுகொலை செய்கின்றது என்ற பொய்யின் மீது சீனா மீதான அமெரிக்க கண்டனங்களை வலுப்படுத்த நியூ யோர்க் டைம்ஸ் இந்த சோகத்தை பயன்படுத்தியது. ‘[சீன அரசாங்கம்] வீகர் மக்களின் வாழ்க்கையைப் பற்றி கவலைப்படுவதில்லை என்பதைக் காட்டியுள்ளது’ என அறிவித்து, வீகர் நாடுகடத்தப்பட்டவரும், வீகர் டைம்ஸின் நிறுவனருமான தாஹிர் இமினை கட்டுரை மேற்கோள் காட்டியது.

பூஜ்ஜிய-கோவிட் கொள்கைக்கு எதிரான வெகுஜன உணர்வின் வெளிப்பாடாக தீ விபத்திற்குப் பின்னர் சிறிய அளவிலான மோதல்களும் ஆர்ப்பாட்டங்களும் வெடித்ததாக நியூ யோர்க் டைம்ஸ் சித்தரிக்க முயன்றது.

உண்மையில், வியாழன் மாலை நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒருசிலர் மட்டுமே ஈடுபட்டதை வீடியோக்கள் காட்டுகின்றன, மேலும் ‘பூட்டுதல்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்’ என்ற அவர்களின் கோரிக்கையும் பரந்தளவில் மக்களால் பகிரப்படவில்லை. எதிர்ப்பாளர்களில் பெரும்பாலும், பூஜ்ஜிய-கோவிட் கொள்கை தங்கள் வாழ்க்கையை சிரமத்திற்கு உள்ளாக்குவதாகவும், அவர்களின் ‘தனிப்பட்ட சுதந்திரத்தை’ ‘மீறும்’ நடைமுறை என்றும் கருதும் நடுத்தர வர்க்கம் மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தின் ஒப்பீட்டளவில் சிறிய பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.

ஆகஸ்ட் மாதத்திலிருந்து உரும்கியில் பகுதியளவு பூட்டுதல்கள் விதிக்கப்பட்டதன் பின்னர், கோவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக புகார்கள் அதிகரித்து வருவது புரிந்துகொள்ளத்தக்கது. அசௌகரியங்களும், சில நேரங்களில் சிரமங்களும் இருந்தபோதிலும், நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களின் உயிர்களைப் பாதுகாக்கவே பொது சுகாதார நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகின்றன என்பது பற்றி இன்னும் பரவலான புரிதல் உள்ளது.

எவ்வாறாயினும், அரசாங்கத்தின் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையின் தேசியவாத அடிப்படையானது, வைரஸ் உலகம் முழுவதும் சுதந்திரமாக பரவும் வரை தொற்றுநோய் ஒருபோதும் முடிவுக்கு வராது என்பதாகும். சர்வதேச அளவில் வைரஸ் முற்றிலும் ஒழிக்கப்படாத நிலையில், முடிவில்லாத பூட்டுதல்களுக்கும் பாரிய பரிசோதனைகளுக்கும் அது வழிவகுக்கும்.

பெய்ஜிங் ஆட்சியானது, உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும், கோவிட் கட்டுப்பாடுகளை கைவிடவும், அதன் சந்தையை முழுமையாக மீண்டும் திறக்கவும் பெரும் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளது. பல முக்கிய பொது சுகாதார நடவடிக்கைகளை தளர்த்தும் சமீபத்திய ‘இருபது நடவடிக்கைகள்’ இந்த அழுத்தத்திற்கு பெய்ஜிங் இணங்குவதை வெளிப்படுத்துகிறது. வைரஸை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கைகளிலிருந்து விலகிய இந்த மாற்றத்தின் கீழும் மற்றும் தீ விபத்து பற்றிய விமர்சனங்களின் அழுத்தத்தின் கீழும், உரும்கி நகர அரசாங்கம் சனிக்கிழமையன்று, வைரஸ் ‘சமூக ரீதியாக அகற்றப்பட்டது’ என்றும், நகரம் முழுவதிலும் கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படும் என்றும் அறிவித்தது.

Loading