வாஷிங்டனுக்கான அரசுமுறை பயணத்தில், நேட்டோ கூட்டணி "உடைவது" குறித்து மக்ரோன் எச்சரிக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நேட்டோ கூட்டணி உக்ரேனில் ரஷ்யா மீது போர் தொடுத்துள்ள நிலையில், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் வாஷிங்டனுக்கான மூன்று நாள் பயணம், நேட்டோ கூட்டணியைப் பிளவுபடுத்தி கொண்டிருக்கும் கடுமையான பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் போட்டிகளை வெளிப்படுத்தியது.

இந்த ஆண்டு அமெரிக்க காங்கிரஸ் நிறைவேற்றிய 430 பில்லியன் டாலர் பணவீக்கக் குறைப்புச் சட்டத்தை (Inflation Reduction Act - IRA) புதன்கிழமை மக்ரோன் பகிரங்கமாகத் தாக்கினார். அந்த IRA சட்டத்தின் சுமார் 370 பில்லியன் டாலர்கள் நவீன புவி மாசுபாடற்ற தொழில்நுட்பங்களுடன் அமெரிக்கா அல்லது வட அமெரிக்காவின் உற்பத்திக்கு — ஐரோப்பாவுக்கு அல்ல — மானியம் வழங்கும், அதேவேளையில் உலகெங்கிலுமான பெருநிறுவனங்கள் மின்சார கார்களுக்கு மாறவும், இன்னும் அதிநவீன மின்னணு கருவிகளை உருவாக்கவும், காலநிலை மாற்ற நெருக்கடிக்கு மத்தியில் புவியின் பசுமையைப் பாதிக்கும் வாயுக்கள் வெளியீட்டைக் குறைக்கும் விதத்தில் மாறுவதற்கு வேண்டிய வேறு கருவிகளை உருவாக்கும். அமெரிக்க சந்தைகளில் இருந்து ஐரோப்பிய தயாரிப்புகளை ஓரங்கட்ட அச்சுறுத்தும் இத்தகைய பாதுகாப்புவாத அமெரிக்க கொள்கைகள், நேட்டோ கூட்டணியை 'உடைந்து' விடும் என்று மக்ரோன் எச்சரித்தார்.

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், டிசம்பர் 1, 2022, வியாழன், வியாழன், வாஷிங்டனுக்கு தனது அரசுப் பயணத்தின் போது, D-Calif., சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி, அமெரிக்க தலைநகருக்கு அவரை வரவேற்கிறார [AP Photo/J. Scott Applewhite]

ஆனால் வியாழக்கிழமை மக்ரோன் பைடெனுடன் நட்புரீதியான ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார், அதில் அவர் அமெரிக்காவும் பிரான்சும் உக்ரேனில் 'ஆயுதங்கள் ஏந்திய சகோதரர்களாக' போராட அழைப்பு விடுத்தார். இந்தக் குளிர்காலத்தில் ஐரோப்பாவில் பேரழிவுகரமான எரிசக்தி நெருக்கடியைத் தூண்ட அச்சுறுத்தும் அந்தப் போரின் பாதிப்புகள் குறித்து ஒன்றும் வாய் திறக்காத மக்ரோன், பின்னர் ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான பைடெனின் ஆக்கிரமிப்புக் கொள்கைகளுடன் பிரான்சை அணிசேர்க்கும் வகையில் ஒரு போர்வெறி கூட்டு அறிக்கையில் கையெழுத்திட்டார்.

உலக முதலாளித்துவத்தின் மரணகதியான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்த ஓர் எச்சரிக்கையாக மக்ரோனின் செயல்பாடுகளை ஒருவர் எடுத்துக்கொள்ள வேண்டும். 20 ஆம் நூற்றாண்டில் இரண்டு முறை அமெரிக்காவுக்கும் ஜேர்மனிக்கும் இடையே உலகப் போர்களாக வெடித்த, ஆழ்ந்து-வேரூன்றிய பொருளாதார மோதல்கள், இன்றோ காலநிலை மாற்றம் மற்றும் கோவிட்-19 பெருந்தொற்றால் படுமோசமான நிலைக்கு வந்துள்ள நிலையில், இவை அரசியல் வாழ்வின் மேற்பரப்பில் வெடித்து வருகின்றன. அனைத்திற்கும் மேலாக, அணுஆயுதமேந்திய முக்கிய சக்திகளுக்கு எதிராக இராணுவ அச்சுறுத்தல்களை தீவிரப்படுத்துவதைத் தவிர, அவற்றுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளை மறைப்பதற்கு கூட அவற்றால் எந்த வழியையும் காண முடியவில்லை.

வாஷிங்டனை வந்தடைந்த மக்ரோன், அவரின் இந்தப் பயணமானது உலகச் சந்தைகளைக் கட்டுப்படுத்துவதில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவவாதிகளுக்கு இடையே நடக்கும் போராட்டத்தின் பாகம் என்பதைத் தெளிவுபடுத்தினார். காலநிலை மற்றும் மாசுபாடற்ற மாற்று வாழ்வு பிரச்சினைகள் தொடர்பான அமெரிக்க காங்கிரஸ் கூட்டத்தில் புதன்கிழமை மதிய உணவு வேளையில் IRA ஐ கண்டித்த அவர், “இது எங்கள் நிறுவனங்களுக்கு எதிராக மிகவும் ஆக்ரோஷமான நடவடிக்கை' என்றார்.

மக்ரோன் தொடர்ந்து கூறினார், “நான் அமெரிக்க தயாரிப்புகளுக்கான சந்தையாக மாற விரும்பவில்லை, ஏனென்றால் உங்களிடம் என்ன இருக்கிறதோ துல்லியமாக அதே போன்ற தயாரிப்புகள் என்னிடமும் உள்ளன. என்னிடம் ஒரு நடுத்தர வர்க்கம் உள்ளது அது வேலை செய்ய வேண்டும், இவர்கள் வேலை தேட வேண்டி உள்ளது. நீங்கள் உங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம், ஆனால் நீங்கள் என்னுடைய பிரச்சினைகளை மோசமாக்கப் போகிறீர்கள். நான் இந்தளவுக்கு அப்பட்டமாக பேசுவதற்காக வருந்துகிறேன்.”

பின்னர் வாஷிங்டனின் பிரெஞ்சு தூதரகத்தில் புதன்கிழமை பேசும் போது, மக்ரோன் மீண்டும் IRA பிரச்சினையை எழுப்பினார், அவர் கூறினார்: “முடிவெடுக்கப்பட்ட விருப்பத் தெரிவுகள் … மேற்கைப் பிளவுபடுத்தும் விருப்பத் தெரிவுகளாகும்,” என்றார்.

குறிப்பாக தைவான் விவகாரத்தில், சீனாவுக்கு எதிராக பெருகி வரும் அமெரிக்க போர் அச்சுறுத்தல்கள் ஐரோப்பிய நலன்களை குறிவைப்பதை நோக்கமாக கொண்டுள்ளன என்று கூறிய மக்ரோன், “நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது, இங்கே ஓர் ஆபத்து உள்ளது: அமெரிக்கா எல்லாவற்றுக்கும் முதலில் அமெரிக்காவைத் தான் கவனத்தில் கொள்கிறது — இது சாதாரண விஷயம் தான், நாங்களும் அதை தான் செய்கிறோம் — பின்னர் அது அதன் போட்டியாளர் சீனாவைக் கவனத்தில் கொள்கிறது. ஆனால் இதில், ஏதோவொரு விதத்தில், அதன் கொள்கைகளை முறைப்படுத்த அது பயன்படுத்தும் ஒரு மாற்றுப்பொருளாக ஐரோப்பாவும் அவ்விதத்தில் பிரான்சும் அச்சுறுத்தபடுகின்றன,” என்றார்.

பேர்லினுக்கும் பாரிஸுக்கும் இடையே மோதல்கள் அதிகரித்து வருவதற்கு மத்தியில், ஐரோப்பிய ஒன்றியத்தின் மேலாதிக்க சக்தியான ஜேர்மனியில் உள்ள ஆளும் வர்க்கத்தின் சக்தி வாய்ந்த பிரிவுகளுக்காகவும் மக்ரோன் பேசிக் கொண்டிருந்தார். ஜேர்மன் செய்தி இதழான Der Spiegel, 'அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திதற்கும் இடையே ஏன் ஒரு வர்த்தகப் போர் அச்சுறுத்தல் நிலவுகிறது' என்று தலைப்பிட்ட ஒரு கட்டுரையில் இந்த பிரச்சினைகளில் சிலவற்றை வெளியிட்டது.

ஜேர்மன் கார்களுக்கு எதிராக அதிகளவில் வரிகள் விதிப்பதற்கான முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அச்சுறுத்தல்களை IRA தொடர்வதாக Der Spiegel குறிப்பிட்டது. அது எழுதியது, “[மானியம் பெற்ற] தயாரிப்புகள் வட அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று [IRA] நிபந்தனை விதிக்கிறது, இது சந்தேகிக்கும் வகையில் 'முதலில் அமெரிக்கா' மூலோபாயத்தை நினைவூட்டுகிறது. ஐரோப்பிய அரசியல்வாதிகள் மிகவும் திகிலுடன் அட்லாண்டிக்கிற்கு அப்பால் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். … சான்சிலரே கூட கோபத்தில் இருக்கிறார். ஆசியாவுக்கான அவரின் கடைசி பயணத்தின் போது, ஓலாஃப் ஷோல்ஸ் தொடர்ந்து 'அதிக சுதந்திர வர்த்தகம்' மற்றும் பூகோளமயப்படுத்தலில் 'அதிக விரிவாக்கத்திற்கு' அழைப்பு விடுத்தார். இந்த அமெரிக்க முன்முயற்சியின் சூழலோ அல்லது நேரமோ எதுவும் அவர் கருத்துக்களுக்கு உகந்ததாக இல்லை,” என்று குறிப்பிட்டது.

வாகனத்துறை, பேட்டரி மற்றும் உயர் தொழில்நுட்ப உற்பத்தி ஆலைகள் ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவுக்கு நகர்த்தப்படக் கூடிய சாத்தியக்கூறைக் குறிப்பிட்டு Der Spiegel எழுதியது: 'ஐரோப்பா சீனாவுடன் மட்டுமல்ல, ஓரளவுக்கு அமெரிக்காவுடனும் முறையான போட்டியில் உள்ளதாக சீமென்ஸின் நீண்டகால முதலாளி ஜோ கெய்சர் கூறுகிறார் … பணவீக்க குறைப்புச் சட்டத்தின் மூலம் அமெரிக்க அரசாங்கம் எவ்வாறு அமெரிக்காவில் முதலீட்டை ஊக்குவிக்கிறது என்பதை வைத்துப் பார்த்தால், [கேசர் இதையும் சேர்த்துக் கொண்டார்] அங்கே 'மூலதனம் மற்றும் உற்பத்தி ஆலைகள் ஐரோப்பாவில் இருந்து வெளியேறி, டாலருக்குள் செல்வதை' குறித்து ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.'”

உக்ரேனில் ரஷ்யா மீது அமெரிக்கா தலைமையிலான போரால் ஏற்பட்ட, அதிகரித்து வரும் எரிசக்தி நெருக்கடி, உற்பத்தி ஆலைகள் ஐரோப்பாவில் இருந்து வெளியேறுவதைத் துரிதப்படுத்தி உள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய இயற்கை எரிவாயு இறக்குமதிகளை நிறுத்த வேண்டும் என்று வாஷிங்டன் கோரியது, ஷோல்சை வாஷிங்டனுக்கு அழைத்த பைடென், பால்டிக் கடலில் உள்ள நோர்ட் ஸ்ட்ரீம் குழாய்கள் வழியாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ரஷ்ய எரிவாயு இறக்குமதியை எப்படி 'முடிவுக்குக் கொண்டு வருவது' என்று அமெரிக்க அரசாங்கத்திற்குத் தெரியும் என்று எச்சரித்தார். செப்டம்பரில், இரண்டு நோர்ட் ஸ்ட்ரீம் குழாய்களும் திடீரென பெரியளவில் வெடித்தன, அதைச் செய்தவர்கள் யாரென்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை, ஆனால் அந்தச் சம்பவம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு மிகவும் இலாபகரமாக நிரூபணமானது.

ரஷ்ய எரிவாயுவிற்குப் பதிலாக ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அமெரிக்க திரவ இயற்கை எரிவாயுவிற்கு (LNG) அமெரிக்க நிறுவனங்கள் பெரும் விலைகள் கோரியதால், ஐரோப்பாவில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளன. இந்தக் கோடையில், அமெரிக்க LNG ஏற்றுமதிகள் ஓராண்டுக்கு முன்னர் இருந்த மட்டங்களை விட 15 மடங்கு அதிகரித்தன, நோர்ட் ஸ்ட்ரீம் குழாய் வெடிப்புக்குப் பின்னர் அவை இன்னும் அதிகரித்தன.

ஆனால் உக்ரேனில் நேட்டோ போர், அதிக எரிசக்தி பயன்படுத்தும் ஐரோப்பிய நிறுவனங்களைத் திவாலாக்க அச்சுறுத்துகிறது என்பது மட்டுமல்ல. உணவுப் பொருள் விலைகள், எரிசக்தி மற்றும் பிற அத்தியாவசிய உற்பத்தி பொருட்களின் உலகளாவிய அதிகரிப்புடன் சேர்ந்து, அதே வரிசையில் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புதிய பேரழிவுகரமான சமூக நெருக்கடியையும் இயக்கத்திற்குக் கொண்டு வந்து கொண்டிருக்கிறது.

மக்ரோன் வாஷிங்டனுக்கு வந்தடைந்த போது, முன்னெப்போதும் இல்லாதளவில் மின்வெட்டுக்களுக்கு தயாராகுமாறு அவரது அரசாங்கம் பிரான்ஸ் எங்கிலும் பொலிஸ் அதிகாரிகளை அனுப்ப உத்தரவிட்டதாக Le Monde குறிப்பிட்டது. முக்கியமாக காலை 8 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை மற்றும் மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை சுழற்சி முறையில் ஒரே நேரத்தில் 6 மில்லியன் மக்களுக்கு (பிரெஞ்சு மக்கள்தொகையில் 9 சதவீதத்தினருக்கு) மின்வெட்டு செய்ய அந்தத் திட்டம் அழைப்பு விடுத்துள்ளது. சுரங்கவழி போக்குவரத்தும், ட்ராம் வண்டிகளும் நிறுத்தப்படலாம், வெப்பமூட்டல் அல்லது வெளிச்சம் இல்லாமல் பள்ளிக்கூடங்கள் மூடப்படலாம். செல்போன் சேவைகளும், தீயணைப்பு உதவி, பொலிஸ் மற்றும் மருத்துவச் சேவைகளுக்கான அவசர அழைப்பு எண்களின் செயல்பாடுகளும் கூட பாதிக்கப்படலாம்.

மக்ரோன் அரசாங்கம் மின்சார வலையமைப்பின் நீண்ட நேரக் கோளாறால் ஏற்படும் 'இருட்டடிப்பு சூழலுக்கும்' தயாரிப்புகள் செய்து வருகிறது, “ஆனால் அதன் மீது நம்பிக்கை இல்லாமல்,” என்பதையும் Le Monde சேர்த்துக் கொண்டது.

இத்தகைய நிலைமைகளின் கீழ், இந்த புவியில் நடக்கும் போர்களில் பிரெஞ்சு மக்கள் பைடெனின் 'ஆயுதங்கள் ஏந்திய சகோதரர்களாக' சேவையாற்றுவார்கள் என்று மக்ரோன் உறுதியளிப்பது அரசியல் ரீதியில் குற்றமாகும். இவ்விதத்தில் ரஷ்யா, சீனா மற்றும் உலகெங்கிலும் இருந்து நேட்டோ கொள்ளையடிப்பதில் ஒரு பங்கை ஐரோப்பிய நிதிய பிரபுக்களும் பெறுவார்கள் என்று மக்ரோன் நம்புகிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தக் கணக்கீட்டின் குற்றகரத்தன்மை, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா எங்கிலுமான தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்களின் உடல்நலன் மீது மக்ரோன் காட்டும் அப்பட்டமான அவமதிப்புடன் சேர்ந்துள்ளது.

ஏகாதிபத்தியப் போர் மற்றும் இந்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதும் வெடித்து வரும் பணவீக்கத்திற்கு எதிரான வேலைநிறுத்தங்களை ஒன்றிணைத்து, இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் ஒரு சர்வதேச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதே, இந்தக் கொள்கைக்கு எதிரான ஒரே முன்னோக்கிய பாதையாகும்.

ஸ்ராலினிச அதிகாரத்துவம் 1991 இல் சோவியத் ஒன்றியத்தைக் கலைத்த போது, அது ஈராக் மற்றும் யூகோஸ்லாவியா முதல் ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் சிரியா வரை வளம் நிறைந்த நாடுகளில் இரத்தக்களரியான போர்களை நடத்துவதற்கு மட்டும் நேட்டோவுக்குப் பாதை அமைக்கவில்லை. அது யுரேஷியாவை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பெருநிறுவனங்களுக்கு திறந்து விட்டது மற்றும் உலக முதலாளித்துவத்தின் புவிசார் அரசியல் போட்டிகளைப் பரந்தளவில் அதிகப்படுத்தியது. வாஷிங்டன் இந்தப் போர்களைப் பலவீனமான வறிய நாடுகளைச் சூறையாடுவதற்கு மட்டும் பயன்படுத்தவில்லை, மாறாக அதன் ஐரோப்பிய ஏகாதிபத்திய போட்டியாளர்களைப் பங்கு போடவும் பயன்படுத்துகிறது.

அமெரிக்காவின் ஏகாதிபத்திய போட்டியாளர்களை ஆதரிப்பதன் மூலம், ஒரு தேசிய அடிப்படையில் ஏகாதிபத்திய போர் முனைவை தொழிலாளர்களால் எதிர்க்க முடியாது. மக்ரோன் அவரது நேரத்தை ஒதுக்கி வாஷிங்டனின் இளைய பங்காளியாக கையெழுத்திட முடிவெடுப்பது, குறைந்தபட்சம் இப்போதைக்கு, ஐரோப்பிய சக்திகளின் போர், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் மீள்ஆயுதமயமாக்கும் கொள்கைகள், தொழிலாள வர்க்கத்தின் நிலைப்பாட்டில் இருந்து, வாஷிங்டனின் அத்தகைய கொள்கைகளை விட அடிப்படையில் வேறுபட்டவை இல்லை என்பதைத் தான் காட்டுகிறது.

போருக்கு எதிராக ஓர் உண்மையான புரட்சிகரப் போராட்டத்தை நடத்த விரும்பும் தொழிலாளர்களும் இளைஞர்களும், உக்ரேனில் நடக்கும் போரை எதிர்ப்பதற்கான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர் அமைப்பின் டிசம்பர் 10 இணையவழி கருத்தரங்கில் கலந்துகொள்ளுமாறு அழைக்கிறோம்.

Loading