ரஷ்ய எரிவாயு இறக்குமதி இல்லாமல், குளிர்கால மின்வெட்டுகளுக்கு பிரான்ஸ் தயாராகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வரவிருக்கும் வாரங்கள் மற்றும் மாதங்களில் முறைப்படியான மின்வெட்டுகளுக்கு நாட்டைத் தயார்படுத்துமாறு பிராந்திய அரசியல் தலைவர்களுக்கு பிரெஞ்சு பிரதம மந்திரி எலிசபெத் போர்ன் வியாழக்கிழமை அறிவுறுத்தல்களை அனுப்பினார். பிரெஞ்சு மின்சார வலையமைப்புகளில் ஏற்படும் முழுமையான மின்வெட்டுக்கான அவ்வப்போதைய அவசரத் திட்டங்களும் அதில் உள்ளடங்கும்.

அரசாங்கத்தால் அந்த ஆவணங்கள் அனுப்பப்பட்டு இருப்பது, ஜூலை 14 இல் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அழைப்பு விடுத்த எரிபொருள் 'சிக்கன' நடவடிக்கை தோல்வி அடைந்து விட்டதை மறைமுகமாக ஒப்புக் கொள்வதாக உள்ளது, பிரான்சின் பெரும்பாலான பகுதிகள் இந்தக் குளிர்காலத்தில் குறிப்பிடத்தக்களவில் மின்சாரமும் வெப்பமூட்டலும் வெட்டப்படுவதை முகங்கொடுக்கின்றன.

செப்டம்பர் 8, 2022 அன்று கிழக்கு பிரான்சின் Saint-Avold இல், முன்னர் மூடப்பட்டிருந்த Saint Avold இன் நிலக்கரி மின் நிலையம் இந்த குளிர்காலத்தில் மீண்டும் திறக்கப்படும். உக்ரேன் போர் தொடர்பாக விநியோகஸ்தர் ரஷ்யாவுடனான பதட்டங்களுக்கு மத்தியில், பிரான்சின் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ஏற்கெனவே நாட்டின் எரிசக்தி பயன்பாட்டில் கூர்மையான 10% குறைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார் [AP Photo/Jean-Francois Badias]

ஐரோப்பாவில் எரிபொருள் விலை உயர்வுகள், பிரதானமாக உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோ போரின் விளைவாகும். இந்தக் குளிர்காலத்தில் ஐரோப்பாவின் எரிபொருள் பற்றாக்குறைக்கு ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்கள் புட்டின் மீது பழி சுமத்த முயல்கின்றன என்றாலும், அமெரிக்க மற்றும் நேட்டோ முறையீடுகளுக்கு அடிபணிந்து அவை ரஷ்ய எரிவாயு மற்றும் எண்ணெய் இறக்குமதிகளை நிறுத்துவதென இந்த வசந்தக் காலத்தில் எடுத்த தீர்மானம் அவற்றின் சொந்த முடிவாகும்.

மக்ரோன் அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவில் இருக்கையில் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. பிரெஞ்சு எரிபொருள் விலைகள் மீது அமெரிக்காவின் தேசியவாத பொருளாதாரக் கொள்கையின் அழிவுகரமான தாக்கத்தைப் பற்றி மக்ரோன் குறைகூறிய போதினும், உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் போரில் சண்டையிட அவர் அரசாங்கம் தொடர்ந்து பொறுப்பேற்றிருப்பதாக மீளவலியுறுத்தினார். இந்த குளிர்காலத்தில் பிரெஞ்சு மக்கள் குளிரில் விடப்படுகிறார்கள் என்பதே இதன் அர்த்தம் என்றாலும் கூட, ரஷ்யாவுக்கு எதிராக தொடர்ந்து கொண்டிருக்கும் தடையாணைகளைத் தொடர்வதும் அதில் உள்ளடங்குகிறது.

பிரெஞ்சு அரசாங்கத்தின் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட இத்தகைய எரிபொருள் சிக்கன நடவடிக்கைகளை, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பிரான்ஸ் கண்டதில்லை.

மக்கள்தொகையில் அறுபது சதவீதம் பேர், மாறி மாறி மின்வெட்டுக்களுக்கு உள்ளாக உள்ள பகுதிகளில் வாழ்கிறார்கள், அங்கே முக்கிய நேரங்களில் மின்சாரம் வெட்டப்பட உள்ளது. இதனால் பாதிக்கப்படும் பகுதிகள் ஒவ்வொரு நாளும் மாறும் என்றாலும், ஒவ்வொரு முறையும் நான்கு மில்லியன் பேராவது பாதிக்கப்படுவார்கள் என்று மதிப்படப்படுகிறது. இந்த மின்வெட்டுக்களைப் பற்றிய அறிவிப்பு ஒரு நாளுக்கு முன்னர் மாலை 5 மணிக்கு அப்பகுதி மக்களுக்கு அறிவிக்கப்படும்.

பிரெஞ்சு அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஒலிவியே வெரோன் (Olivier Véran), 'நாம் ஒரு பேரிடர் திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கவில்லை,” என்று கூறும் அதேவேளையில் இந்த குளிர்காலத்தில் மக்கள் 'பணம் எடுக்க முடியாத' நேரமும் மற்றும் போக்குவரத்து விளக்குகளின் செயல்பாடுகள் நின்று போகும் நேரங்களும் இருக்கலாம் என்று விவரிக்கும் அளவுக்குச் சென்றார்.

புதன்கிழமை, பிரான்சின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான ஆரஞ்ச் நிறுவனத்தின் பொது மேலாளர் கிறிஸ்டல் ஹேய்டெமான் (Christel Heydemann) கூறுகையில், மின்சாரம் துண்டிக்கப்படும் நேரங்களில் அனைத்து தொலைபேசி மற்றும் இணைய சிக்னல்கள் இல்லாமல் போகலாம், அப்போது அவசர அழைப்புகளைக் கூட செய்ய முடியாது என்று எச்சரித்தார்.

மின்வெட்டு நேரங்களிலும் தொடர்ந்து செயல்படும் வகையில் மருத்துவமனைகள், தீயணைப்பு நிலையங்கள் மற்றும் சிறைச்சாலைகள் போன்ற முக்கிய உள்கட்டமைப்புகளுக்கு அவசரகால ஜெனரேட்டர்களை அனுப்ப உள்ளூர் அதிகாரிகளுக்கு அரசாங்கம் அறிவுறுத்தல்களை அனுப்பி வருகிறது.

மின்வெட்டால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளும் மூடப்படும். இது உக்ரேனில் ரஷ்யா மீதான ஏகாதிபத்திய போருக்கு ஆதரவு வழங்கும் மக்ரோன் அரசாங்கத்தின் மோசடித்தன்மையை காட்டுகிறது. கோவிட்-19 சுதந்திரமாக பரவிக் கொண்டிருந்த போது, குழந்தைகள் படிப்பைத் தொடர்வதற்கும் அவர்களின் மனநலனைப் பாதுகாப்பதற்கும் என்ற பெயரில், குழந்தைகளையும் ஆசிரியர்களையும் வகுப்பறைகளுக்கு திரும்ப நிர்பந்தித்த இதே அரசாங்கம், இப்போது உக்ரேனில் போர் முயற்சியை ஆதரிக்க அவர்களை வீட்டில் தங்கி இருக்கவும் படிப்பை முடக்கவும் குழந்தைகளை கட்டாயப்படுத்துகிறது.

மத்திய-அமைச்சகங்களுக்கு இடையிலான நெருக்கடிப் பிரிவும், முழுமையான மின்வெட்டுக்கான அவ்வபோதைய திட்டங்களைத் தயாரித்து வருகிறது, சராசரி எரிபொருள் நுகர்வைக் குறைக்க முடியாவிட்டாலோ அல்லது நீண்ட குளிர்கால வானிலையால் மின் தேவை அதிகரித்தாலோ இந்த முழுமையான மின்வெட்டுக்கள் செய்யப்படலாம்.

பாரிஸில் மின்வடங்களின் அடர்த்தி மற்றும் உள்இணைப்புகளை வைத்து, அரசு அதிகாரிகள் கூறுகையில், தலைநகரம் சுழற்சி முறையிலான மின்வெட்டுக்களுக்கு உள்ளாக வாய்ப்பில்லை என்றார்கள். ஓர் அதிகாரி கூறினார், “நெக்கார் மருத்துவமனையின் மின்சாரத்தைத் துண்டிக்காமல் பல்பொருள் அங்காடியான Le Bon Marché இன் மின்சாரத்தைத் துண்டிக்க முடியாது,” என்றார். இதன் அர்த்தம், சிறு நகரங்கள், சிற்றூர்கள் மற்றும் புறநகர் பகுதிகளே இந்த மின்வெட்டுக்களின் சுமையைச் சுமப்பதாக இருக்கும்.

ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களின் அதிகபட்ச மின் நுகர்வு நேரங்களுக்கு ஏற்பவே அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தயாரிப்பு செய்யப்படுகின்றன என்றாலும், இந்த மின்சார நெருக்கடி ஏற்கனவே பிரெஞ்சு பொருளாதாரத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கி விட்டது. கடந்தாண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த நவம்பரில் பிரான்சில் மின் நுகர்வு 7 சதவீதம் குறைந்துள்ளது. மின்சார செலவுகள் அதிகரித்ததால் தொழில்துறை உற்பத்தியில் மின் பயன்பாடு குறைக்கப்பட்டதே பெரும்பாலும் இதற்கான காரணம் என்று மின் பகிர்வு வலைய அமைப்பின் தகவல் தெரிவிக்கிறது.

இந்தப் புத்தாண்டில், பிரெஞ்சு நுகர்வோர்கள் மின்சார செலவுகளில் 15 சதவீத அதிகரிப்பைக் காண்பார்கள். இது பெரும்பாலும் ஏனென்றால், ரஷ்ய எரிவாயுவைப் பிரதியீடு செய்யும் விதத்தில், விலை ஏய்ப்பு செய்யும் அமெரிக்க எரிபொருள் நிறுவனங்கள் ஐரோப்பா மற்றும் பிரான்சுக்குத் திரவ இயற்கை எரிவாயுவை அதிக விலைக்கு ஏற்றுமதி செய்கின்றன.

ரஷ்ய எரிவாயு மற்றும் எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியதே பிரான்சில் எரிபொருள் பற்றாக்குறைக்கான முக்கிய காரணம் என்றாலும், பிரான்சின் அணுமின் ஆலைகள் படுமோசமாக போதுமானளவுக்கு பராமரிப்பு செய்யப்படாததும் இந்த நெருக்கடியை தீவிரப்படுத்தி உள்ளது. நவம்பர் தொடக்கத்தில், பிரான்சின் 56 அணு உலைகளில் 30 அணு உலைகள் மட்டுமே மின் வினியோகத்தில் இணைக்கப்பட்டிருந்தன. மீதமுள்ள அணுஉலைகளின் பழுது பார்ப்பு மற்றும் பாதுகாப்பு சோதனைகள் 2025 வரை முழுமையாக முடிவடையாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பேரிடர் உதவிக்கான ஜேர்மன் பெடரல் அலுவலகம் குறிப்பிடுகையில் 'பகுதிவாரியாக இலக்கு வைக்கப்பட்ட மின்வெட்டுகள் இருக்குமென கருத வாய்ப்பில்லை' என்று குறிப்பிட்டது என்றாலும், இந்தக் குளிர்காலத்தில் தேவைகள் பெருமளவில் அதிகரிக்கும் என்பதால், முன்னர் ரஷ்யாவின் எரிபொருள் இறக்குமதிகளைச் சார்ந்திருந்த ஜேர்மனியிலும் மற்றும் ஐரோப்பாவின் மற்ற பகுதிகளிலும் இதேபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள அது வழிவகுக்கலாம்.

இறுதியில், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவில் நிலவும் எரிபொருள் நெருக்கடி வர்க்க ஆட்சியின் விளைபொருளாகும். உக்ரேனில் ரஷ்யா மீதான வெற்றியிலிருந்து கொள்ளையடிக்கும் பொருட்களில் அதன் பங்கை பின்தொடர்ந்தவாறு, அதன் சொந்த மீள்இராணுவமயமாதலை தொடங்க போரை ஒரு சாக்காக பயன்படுத்தி வரும் ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கம் உழைக்கும் மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை அதன் புவிசார் மூலோபாய நோக்கங்களுக்கு அடிபணிய செய்ய முடிவெடுத்து விட்டது.

செப்டம்பரில், ஐரோப்பிய ஒன்றியத்தின் தன்னார்வக் கொள்கையானது நோர்ட் ஸ்ட்ரீம் குழாய் மீதான குண்டுவீச்சைத் தொடர்ந்து பின்வாங்க முடியாததாகி விட்டது, இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எரிவாயு வினியோகத்திற்காக ஐரோப்பா தொடர்ந்து அதைச் சார்ந்திருப்பதை உறுதிப்படுத்தியதால், அந்த குண்டுவெடிப்பில் இருந்து மூலோபாயரீதியில் அமெரிக்க ஏகாதிபத்தியமே பயனடைந்தது. அந்த குண்டுவெடிப்புக்காக ரஷ்ய அரசாங்கம் ஐரோப்பாவின் முக்கிய அமெரிக்க கூட்டாளியான பிரிட்டனைக் குற்றஞ்சாட்டியது.

எவ்வாறிருப்பினும், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா எங்கிலுமான எரிபொருள் நிறுவனங்கள் விலைவாசி உயர்வுகளால் 2022 இல் தொடர்ந்து அதிகபட்ச இலாபத்தைப் பெறுகின்ற நிலையில், இந்த வரவிருக்கும் குளிர்காலத்தில் பெருந்திரளான மக்களுக்கு எரிபொருள் வினியோகங்களை பாதுகாக்க எந்தக் குறிப்பிடத்தக்க நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ட்ரில்லியன்களைக் கையளித்ததைப் போலவே, சந்தைகளை சாந்தப்படுத்த கோவிட்-19 க்கு அண்மித்து 2 மில்லியன் உயிர்களைத் தியாகம் செய்ததைப் போலவே, அது இந்த குளிர்காலத்தில் அதன் மக்களைக் குளிரில் உறைய நிர்பந்திக்கின்ற அதேவேளையில் உக்ரேனிய அரசாங்கத்திற்கு பில்லியன் கணக்கில் வழங்கி வருகிறது.

பணவீக்கம் மற்றும் எரிபொருளால் வறுமைபடுத்துவதற்கு எதிரான போராட்டமானது, எரிபொருள் பற்றாக்குறை மற்றும் உணவு விலை பணவீக்கத்தின் பிரதான உந்துசக்தியாக, உக்ரேனில் ஏகாதிபத்திய போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான போராட்டத்துடன் நெருக்கமாக பிணைந்துள்ளது. முதலாளித்துவ வர்க்கத்தின் போருக்கான முனைவையும் மற்றும் வாழ்க்கைத் தரங்களுக்கு எதிரான அதன் தாக்குதலையும் எதிர்க்க விரும்பும் தொழிலாளர்களும் இளைஞர்களும், “உக்ரேனில் போரை நிறுத்த மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் ஒரு பாரிய இயக்கத்திற்காக' என்ற தலைப்பில் டிசம்பர் 10 இல் IYSSE இன் இணையவழி கலந்துரையாடலில் கலந்து கொள்ள வேண்டும்.

Loading