தேசியவாதத்திற்கும் இராணுவவாதத்திற்கும் எதிராக சர்வதேச சோசலிசத்திற்காக

இடது கட்சியின் சாரா வாகன்கினெக்டின் நச்சு சமாதான மனுவிற்கான சோசலிச பதில்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஐரோப்பா முழுவதும், உக்ரேனில் நேட்டோவின் போர் மற்றும் அதன் சமூக விளைவுகளுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. அதிகமான மக்கள் இப்போரானது அமெரிக்க அரசாங்கத்திற்கும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கும் இது ஜனநாயகம் மற்றும் அமைதி பற்றியது அல்ல, மாறாக ரஷ்யாவை இராணுவ அடிபணியச் செய்வதாகும் என்பதை புரிந்துகொள்கிறார்கள். இதை அடைவதற்கு நூறாயிரக்கணக்கான இறப்புகளையும் அணு ஆயுதப் போரின் அபாயத்தையும் ஏற்க அவர்கள் தயாராக உள்ளனர்.

ஜேர்மன் லியோபார்ட் டாங்கிகள் Grafenwöhr நகரில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன [Photo by 7th Army Training Command / flickr / CC BY 2.0]

அதே நேரத்தில், அதிகாரத்தில் இருப்பவர்களின் போர் வியூகத்தை முறியடிக்கும் வகையில் கடுமையான வர்க்க மோதல்கள் உருவாகி வருகின்றன. பல ஆண்டுகளாக செல்வந்தர்கள் தொழிலாளர்களின் செலவில் தங்களை வளப்படுத்திக் கொண்ட பிறகு, தொழிலாளர்கள் பேரழிவிற்கு மட்டுமே வழிவகுக்கும் ஒரு போரின் செலவை ஏற்கத் தயாராக இல்லை. பிரான்சில், மில்லியன் கணக்கானவர்கள் பல வாரங்களாக ஜனாதிபதி மக்ரோனின் ஓய்வூதியங்களை குறைக்கும் திட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரிட்டன் 40 ஆண்டுகளில் மிகப்பெரிய வேலைநிறுத்த அலைகளை அனுபவித்து வருகிறது. ஜேர்மனியில் மில்லியன் கணக்கானவர்கள் ஊதியங்கள் மற்றும் வேலைநிலைமைகள் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei) ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்பி, போருக்கு எதிரான போராட்டத்தை தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு சோசலிச வேலைத்திட்டத்துடன் இணைத்து, சமீபத்திய பேர்லின் பிரதிநிதிகள் சபைக்கான (மாநில சட்டசபை) தேர்தல் பிரச்சாரத்தின் மையத்தில் வைத்தது. அவ்வாறு செய்வதன் மூலம், அது தொழிலாள வர்க்கத்தின் குடியிருப்புக்களில் பெரும் அங்கீகாரத்தையும் ஆதரவையும் பெற்றுள்ளது.

இந்தச் உள்ளடக்கத்தில்தான் இடது கட்சி அரசியல்வாதியான சாரா வாகன்கினெக்ட் மற்றும் பெண்ணியவாதியான அலீஸ் ஸ்வார்ஸர் ஆகியோரின் முன்முயற்சியால் 'ஆயுத விநியோகம் அதிகரிப்பதை' எதிர்ப்பதற்கும் மற்றும் 'சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான' ஒரு மனுவைத் தொடங்கி, பெப்ரவரி 25 அன்று பேர்லினில் ஒரு பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளதை கவனத்திற்கெடுக்கவேண்டும். 

இந்த மனுவானது change.org தளத்தில் 10 நாட்களுக்குள் கிட்டத்தட்ட 600,000 கையொப்பங்களைப் பெற்றுள்ளது. பலர் அதில் கையொப்பமிட்டுள்ளதற்கான காரணம் என்னவெனில், அவர்கள் போருக்கு உடனடி முடிவு தேவை மற்றும் தடுக்க முடியாத 'உலகம் மற்றும் அணுசக்தி போரை நோக்கி சரிவு' பற்றிய மனுவின் எச்சரிக்கையை தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள். ஊடகங்களும் ஸ்தாபனக் கட்சிகளும் இந்த மனுவுக்கு அதற்கேற்ற விரோதத்துடன் எதிர்வினையாற்றியுள்ளன.

ஆனால் மனுவைத் தொடங்குபவர்கள் இந்த மக்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நோக்கங்களைப் பின்பற்றுகின்றனர். அவர்கள் போருக்கு எதிரான எதிர்ப்பை ஒரு தேசியவாத மற்றும் இராணுவவாத நிகழ்ச்சி நிரலுக்காக தவறாகப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் அரசாங்கத்தைப் போலவே தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன இயக்கத்தைக் கண்டு அஞ்சுகிறார்கள். ஜேர்மனி அமெரிக்காவுடனான தனது கூட்டணியை விரைவில் முடித்துக் கொள்ள வேண்டும் என்றும், ஒரு 'முன்னணி ஐரோப்பிய சக்தியாக' அதன் புவிசார் அரசியல் நலன்களை சுயாதீனமாக தொடர வேண்டும் என்றும் நம்பும் ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதிகளுக்காக அவர்கள் பேசுகிறார்கள்.

இது குறிப்பாக வாகன்கினெக்ட், அவரது கணவர் ஒஸ்கார் லாபொன்டைன் மற்றும் மனுவின் மற்ற முக்கிய ஆரம்ப ஆதரவாளர்களான ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஜெனரல் எரிச் வாட் மற்றும் பவேரியாவின் கிறிஸ்தவ சமூக ஒன்றியத்தின் (CSU) வலதுசாரி பீட்டர் கௌவைலர் ஆகியோரை பொறுத்தவரையில் உண்மையாக உள்ளது.

சமூக ஜனநாயகக் கட்சியின் முன்னாள் தலைவரும் பின்னர் அதிலிருந்து அவர் பிரிந்து சென்ற இடது கட்சியின் நிறுவனருமான லாபொன்டைன், ஜேர்மன் அரசாங்கம் அமெரிக்காவிற்கு அடிமைகளாக செயல்படுவதாக குற்றம் சாட்டுவதில் சோர்வடையவில்லை. 'மிகவும் விசுவாசமான அடிமைகளில் ஐரோப்பியர்கள், எல்லாவற்றிற்கும் மேலாக ஜேர்மனி' என்று அவர் தனது சமீபத்திய புத்தகத்தில் பின்வருமாறு எழுதுகிறார். 'அதனால்தான் நாங்கள் இப்போது இருக்கும் சூழ்நிலையில் இருக்கின்றோம்'. 'சுதந்திரமான ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக் கொள்கையின் மூலம் அமெரிக்க இராணுவப் பராமரிப்பிலிருந்து ஐரோப்பாவை விடுவிக்க' மற்றும் 'ஜேர்மனி மற்றும் பிரான்சுக்கு இடையே ஒரு கூட்டு பாதுகாப்புக் கூட்டணிக்கு' அவர் அழைப்பு விடுக்கிறார்.

இது ஒரு 'சமாதானத்திற்கான கொள்கை' அல்ல, மாறாக பாரிய மறுசீரமைப்பு மற்றும் பெரும் அதிகார இலட்சியங்களைப் பின்தொடர்வதைக் குறிக்கிறது. ஒரு 'சுதந்திரமான ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கு' இன்னும் நூற்றுக்கணக்கான பில்லியன்கள் செலவாகும்.

எரிச் வாட் ஒரு உறுதியான இராணுவவாதியாவார். கிறிஸ்தவ ஜனநாயக யூனியனின் (CDU) உறுப்பினரான ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஜெனரல்,  பொஸ்னியப் போரின் போது அமெரிக்க மத்திய கட்டளையில் சிறப்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்துடன், அதிபர் அங்கேலா மேர்க்கலுக்கு இராணுவ ஆலோசனைகளை வழங்கினார். அவர் நாஜி சட்ட வல்லுநரான கார்ல் ஷ்மித்தின் அபிமானி ஆவார். அவர் இதுபற்றி ஒரு புத்தகத்தையும் எழுதியுள்ளார்.

மனு வெளியிடப்பட்டதில் இருந்து, அதன் தொடக்கக்காரர்களின் வலதுசாரி நோக்குநிலை பெருகிய முறையில் வெளிப்படையாகத் தெரிகிறது. லாபொன்டைனும் வாகன்கினெக்டும், அதிதீவிர வலதுசாரி ஜேர்மனிக்கான மாற்று கட்சியுடன் (AfD) நெருக்கமாக இருக்க முயல்கின்றனர். ஆரம்பத்தில் வலதுசாரி தீவிரவாத ஆதரவாளர்களிடமிருந்து அரை மனதுடன் விலகியிருந்த வாகன்கினெக்ட், 'அமைதிக்காகவும் பேச்சுவார்த்தைகளுக்காகவும் நேர்மையாக ஆர்ப்பாட்டம் செய்ய விரும்பும் அனைவரும்' பேரணியில் வரவேற்கப்படுகிறார்கள். ஆனால் வலதுசாரி தீவிரவாதக் கொடிகள் அல்லது சின்னங்கள் பொறுத்துக்கொள்ளப்படமாட்டாது எனக்கூறி பின்னர் இந்த தெளிவற்ற அந்நியப்படுத்தலையும்  மென்மையாக்கினார்.

AfD அரசியல்வாதிகள் பேரணியில் வரவேற்கப்பட மாட்டார்கள் என்ற கூற்றை லாபொன்டைன் 'முற்றிலும் முட்டாள்தனம்' என்று அழைத்தார். இது ஒருவரை 'நம்பத்தகாதவராக ஆக்கும்' என்று அவர் கொரோனா வைரஸ் மறுப்பாளர்கள் மற்றும் பிற வலதுசாரிகளுக்கான பொதுமேடையான மிலேனா பெராடோவிக்கின் YouTube ஊடகத்தில் கூறினார். 'உதாரணத்திற்கு, குடியரசின் மக்கள் [Reichsbürger]' அல்லது 'அபத்தமான இலக்குகளுக்கான அரசியல் பிரச்சாரம்' மட்டுமே விரும்பத்தகாதவை என்று அவர் கூறினார்.

வாகன்கினெக்ட் இன் ஆதரவாளரான மத்திய நாடாளுமன்ற முன்னாள் இடது கட்சி உறுப்பினர் டீத்தெர் டேல்ம், மூனிச் பாதுகாப்பு மாநாட்டிற்கு எதிரான Querdenker இனரின் (“பக்கவாட்டு சிந்தனையாளர்கள்”) ஆர்ப்பாட்டத்தில் சனிக்கிழமையன்று கலந்துகொண்டார். ஏராளமான AfD உறுப்பினர்களும் கலந்துகொண்ட இந்தப் பேரணியில் முக்கியப் பேச்சாளர் முன்னாள் கிறிஸ்தவ ஜனநாயக யூனியனின் நாடாளுமன்ற உறுப்பினர் யூர்கென் ரோடென்கோவர் ஆவார். இவரும் வாகன்கினெக்ட்-ஸ்வார்ஸரின் மனுவில் முதல் கையெழுத்திட்டவர்களில் ஒருவராவார்.

போர்-எதிர்ப்பு இயக்கத்தின் தளபதிகள், வலதுசாரி முதலாளித்துவ அரசியல்வாதிகள் ஆகியோர், பாசிச AfD இன் உறுப்பினர்களை அதன் அணிகளில் வரவேற்றால் மட்டுமே அது 'நம்பகமானது' என்ற கூற்று அபத்தமானதும் பிற்போக்குத்தனமானதுமாகும். பாசிசவாதிகள் மற்றும் இராணுவவாதிகளுடன் சேர்ந்து ஹிட்லரின் அழித்தொழிப்புப் போரையும், யூதப்படுகொலையையும் அற்பமாகக் கருதும் நபர்களுடன், ஒருவர் போர்-எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்கவில்லை, மாறாக போருக்கு ஆதரவான இயக்கத்தை உருவாக்குகிறார்.

அதனால்தான், ஜேர்மன் இராணுவவாதத்தின் மறுமலர்ச்சி மற்றும் மூன்றாம் குடியரசிற்குப் பிறகு மிகப்பெரிய மறுஆயுதமயமாக்கல் முன்னெடுப்பு பற்றி இந்த மனுவில் ஒரு வார்த்தை கூட கூறவில்லை. உக்ரேன் மீதான ரஷ்யாவின் மிருகத்தனமான படையெடுப்பை இது கண்டிக்கிறது. ஆனால் உக்ரேனிய மக்களின் முதுகில் ரஷ்யாவிற்கு எதிராக ஒரு பினாமி போரை நடத்தும் நேட்டோவின் குற்றவியல் கொள்கையை கண்டிக்கவில்லை.

இந்த மனு போர் மற்றும் தேசியவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான அழைப்பு அல்ல, மாறாக 'ஜேர்மன்' நலன்களை தொடர்ந்து பாதுகாக்குமாறு அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அது பின்வருமாறு கூறுகிறது: 'ஆனால் நாம் நமது அரசாங்கத்தையும் அதிபரையும் பொறுப்புக்கூற வைக்க வேண்டும். மேலும் அவர் ஜேர்மன் மக்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்க வேண்டும்' என்ற உறுதிமொழியை அவருக்கு நினைவூட்ட வேண்டும்'.

ஜேர்மனியில் உள்ள 'மக்களும்', அனைத்து முதலாளித்துவ நாடுகளைப் போலவே, சமரசம் செய்ய முடியாத மற்றும் விரோதமான சமூக வர்க்கங்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். இரண்டு உலகப் போர்கள் மற்றும் நாஜி சர்வாதிகாரம் மூலம் தீர்க்க முயன்ற அதே பூகோள முரண்பாடுகளை மீண்டும் எதிர்கொள்ளும் ஜேர்மன் மூலதனத்தின் சமூக, பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நலன்களை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதிபர் ஷோல்ஸ் பாதுகாக்கிறார்.

எனவே போருக்கு எதிரான ஒரு தீவிரமான போராட்டமானது, அதன் மூலகாரணமான முதலாளித்துவத்திற்கு எதிராகவும் இயக்கப்பட வேண்டும். அது, தேசியவாதம் மற்றும் இராணுவவாதத்தின் ஒவ்வொரு வடிவத்தையும் நிராகரித்து, பேரழிவைத் தடுக்கக்கூடிய ஒரே சமூக சக்தியான சர்வதேச தொழிலாள வர்க்கத்தை நம்பியிருக்க வேண்டும். இதுதான் இப்போது எல்லா இடங்களிலும் ஊதிய வெட்டுக்கும் போருக்கும் எதிரான போராட்டங்கள் கிளர்ந்து எழுகிறது.

'முக்கிய எதிரி வீட்டில் இருக்கிறார்' என்ற கார்ல் லீப்க்னெக்ட்டின் முதுமொழிக்கு இணங்க, அதிபர் மாளிகை, பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சகங்களில் உள்ள போர்வெறியர்களைக் கண்டிக்க வேண்டியது அவசியம். அவர்கள் பல ஆண்டுகளாக நேட்டோவின் விரிவாக்கத்துடன், 2014 இல் கியேவில் ஆட்சிக்கவிழ்ப்பிலிருந்தும் மற்றும் உக்ரேனிய இராணுவத்தினை திட்டமிட்டு ஆயுதமயமாக்கியதன் மூலம் போருக்குத் தயாராகி வருகின்றனர். 

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மன் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei) சர்வதேச சோசலிசத்தின் முன்னோக்கிற்காக போராடுகின்றது. வாகன்கினெக்டின் முன்முயற்சி இதற்கு முற்றிலும் எதிரானதும், இறுதியில் தொழிலாளர்களின் வெகுஜன இயக்கத்தை மனச்சோர்வடையச் செய்வதற்கும் நசுக்குவதற்கும் மட்டுமே உதவுகிறது. அதனால்தான் அது தொழிலாள வர்க்கத்தின் மிக மோசமான எதிர்ப்பாளர்களுடன் ஒத்துழைக்கிறது.

உண்மையில் போருக்கு எதிராக போராட விரும்புவோர், உக்ரேனில் போருக்கு எதிராக ஒரு வெகுஜன இயக்கத்தை கட்டியெழுப்ப சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் அதன் இளைஞர் அமைப்பான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பின் பிரச்சாரத்தில் இணைந்துகொள்ள வேண்டும். இதற்கான அழைப்பில் அது பின்வருமாறு குறிப்பிடுகிறது:

சமத்துவமின்மை மற்றும் சுரண்டலுக்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டம் நடத்தும் தொழிற்சாலைகள் மற்றும் பணியிடங்களை நோக்கி நாம் திரும்ப வேண்டும். முதலாளித்துவத்தை தூக்கி எறிந்து, மனிதகுலத்திற்கு முன்னோக்கி செல்லும் வழியை உருவாக்கும் வல்லமை வாய்ந்த மாபெரும் சக்தி அவர்களேயாவர். IYSSE போருக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளர்களின் ஆதரவை மட்டும் நாடவில்லை. உலக முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான போராட்டத்தில் முன்னணி மற்றும் தீர்க்கமான புரட்சிகர சக்தியாக சோசலிச வேலைத்திட்டத்துடன் ஆயுதம் ஏந்திய தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியிலேயே ஏகாதிபத்தியத்தின் தோல்வி தங்கியிருக்கிறது என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம் 

Loading