UAW இன் நடந்துமுடிந்த தேர்தலில் 13 சதவிகிதத்திற்கும் குறைவான சாமானியத் தொழிலாளர்களின் வாக்குப் பதிவுகளுடன் வாக்கெடுப்பு முடிந்துள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஐக்கிய வாகனத் தொழிற்சங்க(UAW) தலைவர் பதவிக்கான தேர்தலின் இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை பிற்பகல் நிறைவடைந்தது. ஒஹியோவின் டேய்டனில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ளது. இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வார தொடக்கத்தில் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. UAW தொழிற்சங்க எந்திரத்தில் உயர் பதவியை தற்போதைய UAW தலைவர் ரே கரி பெறுவாரா அல்லது நீண்டகால UAW சர்வதேச பிரதிநிதியான ஷான் ஃபைன் பெறுவாரா என்பதை தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கும்.  

தொழிற்சங்க வரலாற்றில் முதல்முறையாக நடந்துள்ளதான உறுப்பினர்களின் இந்த நேரடி வாக்கெடுப்பானது UAW வுக்கு மிகப்பெரிய ஜனநாயக மாற்றமாக இருக்கும் என்று இந்த தேர்தலைப் பற்றி பெருநிறுவன ஊடகங்கள் செய்திகளை பரப்பி வருகின்றன. இருப்பினும், பெருநிறுவன ஊழல்களிலும் தொழிலாளர்களின் சந்தாத் தொகை மோசடியிலும் ஈடுபட்டதற்காக தண்டனை பெற்ற இரண்டு முன்னாள் தலைவர்கள் உட்பட கிட்டத்தட்ட ஒரு டசின் உயர் அதிகாரிகளால் UAW மத்திய கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் தான் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. என்றாலும், இந்த தேர்தல் நடந்த விதமானது, UAW இன் அதிகாரம் சாமானியத் தொழிலாளர்களுக்கு முற்றிலும் விரோதமான ஒரு வேரூன்றிப் போன தலைமையின் கைகளில் தான் இன்னும் உள்ளது என்பதை நிரூபித்துள்ளது. 

இரண்டாவது சுற்றின் மிக முக்கியமான உண்மை என்னவென்றால், கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு முன்பே சான்றளிக்கப்படாத எண்ணிக்கை வெளியிடப்பட்டிருந்தாலும், முதல் சுற்று முடிவுகள் சான்றிதழ் பெறுவதற்கு முன்பே இது நடத்தப்பட்டதாகும். நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட UAW கண்காணிப்பாளர், தேர்தலின் முதல் சுற்று வாக்கெடுப்பில் ஒரு சோசலிச வேட்பாளராக போட்டியிட்டு கிட்டத்தட்ட 5,000 வாக்குகளைப் பெற்ற மாக் டிரக்ஸ் தொழிலாளியான வில்லியம் லெஹ்மன் டிசம்பரில் தாக்கல் செய்த கண்டனத்தின் காரணமாக முதல் சுற்று வாக்கெடுப்பு முடிவுகளை உறுதிப்படுத்தவில்லை. 

UAW தலைவர் வேட்பாளரான வில் லெஹ்மன் The New School இல் வேலைநிறுத்தம் செய்யும் பேராசிரியர்களுடன் பேசுகிறார்.

எதிர்ப்பு தெரிவித்த இந்த ஆவணங்களானது, தேர்தலில் முதல் இரண்டு அதிகபட்ச வாக்குகளைப் பெற்ற கரியும் ஃபைனும் முறையாக வாக்காளர்களை ஒடுக்கியவர்களாகவும் சாமானியத் தொழிலாளர்களின் வாக்குரிமையை மறுத்தவர்களாகவும் குணாதிசயப்படுத்தப்பட்ட உண்மையைத் தெரிவிக்கின்றன. 

இதில், தொழிலாளர்களின் சரியான முகவரிகளுக்கு வாக்குச் சீட்டுக்களை அனுப்ப உறுப்பினர்களின் பட்டியல்களைப் புதுப்பிக்கவும், வாக்காளர்களின் பங்கேற்பை அதிகப்படுத்த தேர்தல் பற்றி பரவலாக விளம்பரப்படுத்தவும் கண்காணிப்பாளர் விடுத்திருந்த ஆணையை UAW அதிகாரத்துவம் மீறியதும் அடங்கும். இதன் விளைவாக, வாக்களிக்க தகுதியுள்ள 1.1 மில்லியன் செயலில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற உறுப்பினர்களில் வெறும் 10 சதவீதத்திற்கும் குறைவானவர்களே முதல் சுற்று வாக்கெடுப்பில் வாக்களித்திருந்தனர். உண்மையில், எண்ணப்பட்ட வாக்குகளை விட அதிகமாக தவறான முகவரிகளால் உறுப்பினர்களைச் சென்றடையாத வாக்குச் சீட்டுக்கள் திருப்பி அனுப்பப்பட்டன.  

UAW எந்திரத்தின் இரண்டு நம்பகமான உறுப்பினர்களான கரி மற்றும் ஃபைனுடன் தேர்தல் களம் சுருங்கியது. அப்போது, தொழிற்சங்க அதிகாரிகள் தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்சங்க அரங்குகளில் எதிர்வரும் காலக்கெடு பற்றிய சமிக்ஞைகளுடன் சுவரொட்டிகளை ஒட்டுவதன் மூலம் வாக்களிப்பை அதிகரிக்க முயன்றனர். மேலும், தொழிலாளர்களுக்கு வாக்களிப்பது பற்றி அல்லது அவர்கள் வாக்குச் சீட்டுகளைப் பெறவில்லையானால் அதை எப்படிப் பெறுவது என்பது பற்றி நினைவூட்டும் மின்னஞ்சல்களையும் பிற தகவல்களையும் தொழிற்சங்க அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.   

இது இரண்டாவது சுற்று வாக்கெடுப்பில் ஓரளவு வாக்குகள் அதிகரிப்பதற்கு வழிவகுத்தது. செவ்வாய்க்கிழமை காலக்கெடுவின் போது ஏற்கனவே பதிவாகியிருந்த 103,020 செல்லுபடியாகும் வாக்குகள் 141,548 வாக்குகளாக அதிகரித்தன. இருப்பினும் அதற்கு பின்னர் கிடைத்த வாக்குகள் சரிபார்க்கப்படவில்லை. இரண்டு சுற்று வாக்குப் பதிவுகளுக்கு இடையே அண்ணளவாக 27 சதவீதம் வாக்குப்பதிவு அதிகரித்துள்ள போதிலும், வரலாற்றில் எந்தவொரு நேரடி தொழிற்சங்கத் தேர்தலிலும் கிடைத்த வாக்குகளை விட மிகக் குறைவாக இல்லாவிட்டாலும், தற்போதைய UAW தேர்தலின் வாக்குப்பதிவு விகிதம் தொடர்ந்து குறைவாகவே இருந்தது. ஒட்டுமொத்தமாக, இரண்டாவது சுற்றில் 13 சதவீதத்திற்கும் குறைவான தகுதியுள்ள வாக்காளர்களே வாக்களித்துள்ளனர்.  

தவறான முகவரிகள், சரியான நேரத்தில் மாற்று வாக்குச் சீட்டுகளை அனுப்பத் தவறியது போன்ற முதல் சுற்றில் இருந்த அதே பல பிரச்சினைகள் இரண்டாவது சுற்றிலும் இருந்தன. இருப்பினும், UAW அதிகாரத்துவம் வாக்குகளைப் பெறுவதற்கு அதிகப்படியான முயற்சிகளை எடுத்தது ஒருபுறமிருக்க, அதன் இரண்டு வேட்பாளர்கள் மட்டுமே இப்போதைய ஒரே தெரிவாக உள்ள நிலையில், இந்த மிகக் குறைந்த வாக்குப்பதிவு விகிதமானது UAW எந்திரத்தில் இருந்து தொழிலாளர்கள் பெருமளவில் அந்நியப்படுவதைப் பிரதிபலிக்கிறது. இந்த தொழிற்சங்க எந்திரம் பல தசாப்தங்களாக தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தையும் வேலை நிலைமைகளையும் அழிக்க முதலாளிகளுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது. 

பல தாசப்த கால காட்டிக்கொடுப்புகளுக்குப் பின்னர், இளம் தொழிலாளர்கள் தற்காலிக அல்லது இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை பதவிகளில் சிக்கித் தவிக்கின்றனர். மேலும், பல தசாப்தங்களாக உண்மையான ஊதியங்கள் குறைந்து வருவதால் பாதிக்கப்பட்ட அனுபவம்மிக்க தொழிலாளர்களும், மற்றும் ஓய்வூதியதாரர்களும் தங்கள் வாழ்க்கைச் செலவினங்களுக்கு பணம் செலுத்த முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், UAW எந்திரத்தின் உயர்மட்ட பதவிகளில் உள்ள அதிகாரிகளை மாற்றுவதானது தொழிலாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்த எதுவும் செய்யாது என்பது அனைவரும் அறிந்ததே. 

மிச்சிகனின் சேலைனில் உள்ள Forvia (முன்னாள் Faurecia) வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி ஆலையைச் சேர்ந்த ஒரு தொழிலாளி உலக சோசலிச வலைத் தளத்திடம் பேசுகையில், “நான் பேசிய தொழிலாளர்கள், இத் தேர்தலில் நடந்தது பற்றி வருத்தப்பட்டனர்,” என்று கூறினார். மேலும், “முதல் சுற்று வாக்குப்பதிவு பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை என்பதுடன், இதை நியாயமற்ற தேர்தலாக அவர்கள் கருதுகின்றனர். மற்றவர்கள் என்ன உணர்கிறார்கள் என்பது பற்றி பேசுவது கடினம் என்றாலும், ஏராளமான உறுப்பினர்கள் இப்படித்தான் உணர்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். ஒருமுறை மோசடி நிகழ்ந்தால், எப்போதும் மோசடி தான் செய்யப்படும். முதல் சுற்றில் அவர்கள் முறைகேடு செய்திருந்தால், இரண்டாவது சுற்றிலும் அதைத்தான் அவர்கள் செய்வார்கள்” என்று கூறினார்.  

2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை முறியடிக்க ட்ரம் மேற்கொண்ட முயற்சியை, தொழிலாளர்களின் வாக்குரிமையைப் பறிக்கும் UAW அதிகாரத்துவத்தின் முயற்சியுடன் அவர் ஒப்பிட்டுப் பேசினார். “ஜனநாயக செயல்முறை அரசியல் ரீதியாகவும், ஆலைகளிலும் ஜன்னலுக்கு வெளியே தூக்கி எறியப்படுகிறது,” என்று அவர் கூறினார். மேலும், “இரயில் ஊழியர்களையும், ஆசிரியர்களையும் பாருங்கள். அவர்களின் ஜனநாயக உரிமைகள் நசுக்கப்பட்டுள்ளன. இதை நீங்கள் தினமும் பார்க்கலாம். அனைவரும் இது பற்றி புகார் செய்கிறார்கள். அவர்களில் ஏராளமானோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கோவிட் தொற்றுநோய் தொடங்கியதன் பின்னர் எங்கள் ஆலையில் இருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 2,000 இல் இருந்து 1,200 ஆக குறைந்துள்ளது. நம்மில் யாருக்கும் இது பிடிக்காது. அனைவரும் புகார் செய்கிறார்கள்” என்றும் கூறினார். 

மிச்சிகனின் டியர்போர்னில் உள்ள Ford Rouge வளாகத்தில் உள்ள UAW பிரிவு 600 இனைப் போன்ற சில முக்கிய உள்ளூர்வாசிகளின் வாக்குப்பதிவை கரியின் இயந்திரம் அதிகரிக்க முடிந்த அதேவேளை, வாக்குகளை அதிகரிப்பதற்கான இரு பிரிவுகளின் ஏனைய முயற்சிகளும் செவிடன் காதில் ஊதிய சங்காகின. 

உதாரணமாக, புறநகர் டெட்ராய்ட்டில் உள்ள ஸ்டெல்லாண்டிஸ் வாரன் டிரக் ஆலையில் உள்ள UAW பிரிவு 140 இல், ஷான் ஃபைன் முதல் சுற்றில் வெற்றி பெற்றார். முதல் சுற்றில் அவருக்கு கிடைத்த 1,014 வாக்குகள் இரண்டாவது சுற்றில் வெறும் 1,205 ஆக அதிகரித்தது. இத்தொழிற்சாலையில் நூற்றுக்கணக்கில் அல்லாது ஆயிரக்கணக்கில் உள்ள 5,200 தற்காலிகத் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்திற்கு சந்தா செலுத்துகிறார்கள், அதேவேளை அவர்கள் இலாப-பங்கீட்டை சரிபார்க்க முடியாது, அல்லது பல் மற்றும் கண் சிகிச்சை சலுகைகளைப் பெற முடியாது என்பதுடன், விருப்பப்படி எப்போது வேண்டுமானாலும் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம்.  

இல்லினாய்ஸின் பெல்விடேரில் உள்ள ஸ்டெல்லாண்டிஸ் வாகன ஒருங்கிணைப்பு ஆலையில் உள்ள UAW பிரிவு 1268 இல், முதல் சுற்றில் பதிவான 1,114 வாக்குகளிலிருந்து எட்டு வாக்குகள் மட்டும் அதிகரித்து 1,122 ஆக வாக்குப்பதிவு அதிகரித்தது. UAW அதிகாரத்துவத்தின் எந்த எதிர்ப்பும் இல்லாமல் காலவரையின்றி ‘இயங்காமல் இருக்கும்,’ ஆலையில் செவ்வாய்க்கிழமை கடைசி வேலை நாளாக இருந்தது.

UAW அதிகாரத்துவத்தின் ஊதுகுழலாக இருக்கும் Detroit Free Press செய்தியிதழ், இரண்டாவது சுற்றில் பதிவான ஓரளவு அதிகமான வாக்குகள் கூட UAW உறுப்பினர்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான வில் லெஹ்மனின் பிரச்சாரத்தை எப்படியோ செல்லாததாக்கிவிட்டது என்று கூறியது. மொத்த வாக்குகளை சுட்டிக்காட்டி, Free Press இவ்வாறு அறிவித்தது, “கடந்த ஆண்டு நடந்த தேர்தலை விட 32,825 வாக்குச் சீட்டுக்கள் ஏற்கனவே திரும்பியுள்ளன. அப்போதைய குறைந்த அளவிலான வாக்காளர் பங்கேற்பு பற்றி எழுந்த விமர்சனம் ஒரு வேட்பாளரான வில் லெஹ்மனை ஒரு மத்திய அரச   வழக்கைத் தாக்கல் செய்யத் தூண்டியது. இது காலக்கெடுவை நீட்டிக்க கோரிய நிலையில் பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டது. 

இந்த செய்தியிதழ் Wayne அரசு பல்கலைக்கழக வணிகம் மற்றும் தொழிலாளர் ‘நிபுணருடன்’ இணைந்து, ஃபைனையும் அவரது UAW Members United Slate அமைப்பையும் வாகன நிறுவனங்களின் போர்வெறிமிக்க எதிரப்பாளர்களாக பொய்யாக சித்தரிக்க முனைந்து இவ்வாறு அறிவித்தது, “முடிவைப் பொருட்படுத்தாமல், அதிருப்தியாளர்கள் 2023 பேரம் பேசலைப் பெரிதும் பாதிக்கும் மற்றும் UAW வுக்குள் ஒரு கலாச்சார மாற்றத்தைக் கொண்டுவரும் அளவுக்கும் சர்வதேச நிர்வாகக் குழுவை போதுமான அளவுக்கு கையகப்படுத்தி வைத்துள்ளனர்.”

உண்மையில், ஃபைன் கரியுடன் அடிப்படை வேறுபாடுகள் எதையும் கொண்டிருக்கவில்லை. மேலும் பல தசாப்தங்களாக UAW ஆளும் நிர்வாகக்குழுவின் உறுப்பினராக சலுகை ஒப்பந்தத்தை ஒன்றன் பின் ஒன்றாக அவர் ஆதரித்துள்ளார்.

நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட UAW கண்காணிப்பாளர் லெஹ்மனின் எதிர்ப்புக்கு பதிலளிக்காமலேயே தேர்தலைத் தொடர அனுமதித்துள்ளார். மேலும், ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் வகையில், தேர்தல்களின் முதல் சுற்று முடிவுகளுக்கு சான்றளிப்பதற்கு முன்பாகவே புதிய UAW தலைவரை இருக்கையில் அமரவைக்க தான் தயாராக இருப்பதாக கண்காணிப்பாளர் கூறியுள்ளார். 

UAW மீதான அரசாங்கத்தின் மேற்பார்வையானது, சாமானியத் தொழிலாளர்களின் கைகளில் உண்மையான அதிகாரத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, மாறாக மதிப்பிழந்த UAW அதிகாரத்துவத்தின் மீது ஒரு ‘ஜனநாயக’ முகமாற்றத்தை கொண்டுவருவதே அதன் நோக்கம் என்ற உண்மையை மட்டுமே இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.  

ஒபாமா நிர்வாகம் 2009 இல், புதிய வாகனத் தொழிலாளர்களின் ஊதியங்களை பாதியாகக் குறைக்கவும், அனைத்து உற்பத்தித் தொழிலாளர்களுக்கும் புதிய குறைந்த ஊதிய விகிதத்தை நிர்ணயிக்கவும் UAW இனை நம்பியது. Chrysler தொழிலாளர்கள் 2015 இல் கிளர்ச்சி செய்து 33 ஆண்டுகள் நடைமுறையில் இருந்த முதல் UAW ஆதரவு தேசிய ஒப்பந்தத்தை தோற்கடித்ததன் பின்னரே UAW எந்திரத்தின் நன்கு அறியப்பட்ட ஊழல் விவகாரம் பற்றிய விசாரணையை நீதித்துறை தொடங்கியது.

பைடென் நிர்வாகமானது, அமெரிக்க முதலாளித்துவத்தின் பொருளாதார நெருக்கடி மற்றும் ரஷ்யாவிற்கும் மற்றும் சீனாவிற்கும் எதிரான போர் தயாரிப்புகளின் அதிகரித்து வரும் செலவினங்கள் ஆகியவற்றை சமாளிக்க பணம் செலுத்த தொழிலாளர்களை கட்டாயப்படுத்தும் முயற்சிகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் எதிர்ப்பை முறியடிக்க, கரி அல்லது ஃபைன் யார் தலைமையிலானது என்றாலும், UAW எந்திரத்திற்கு முட்டுக் கொடுக்க தீவிரமாக முயன்று வருகிறது. வோல்வோ டிரக்ஸ், ஜோன் டீரே, CNH மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் UAW உறுப்பினர்களின் தொழில்துறை போராட்டங்கள் தொடர்ந்து நிலையாக எழுச்சி பெற்றுள்ளதை அடுத்து, Caterpillar இல் எதிர்வரவிருக்கும் ஒப்பந்தப் போராட்டம் மற்றும் GE Aerospace, GM, Ford மற்றும் ஸ்டெல்லாண்டிஸ், மற்றும் மாக் டிரக்ஸில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடக்கவிருக்கும் போராட்டங்கள் ஆகியவற்றை வைத்துப் பார்த்தால் 2023 இன்னும் போராட்டங்கள் வெடிக்கும் ஆண்டாக இருக்கும் என்பதற்கு உறுதியளிக்கிறது.    

உலக சோசலிச வலைத் தளத்திற்கு அளித்த ஒரு அறிக்கையில் வில் லெஹ்மன் இவ்வாறு கூறியுள்ளார், “இந்த முழுத் தேர்தலும் கேலிக்கூத்தாகி விட்டது. முதலில் நேரடி வாக்கெடுப்பை ஒருபோதும் விரும்பாத UAW அதிகாரத்துவமானது, உறுப்பினர்களின் முழுப் பங்கேற்பைத் தடுக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது. ஏனென்றால், அவர்கள் தங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று அவர்களுக்குத் தெரியும். UAW அதிகாரத்துவம் வாக்குகளை அதிகரிக்க முயற்சி செய்த போதிலும், இரண்டாவது சுற்றில் நிகழ்ந்த படுமோசமான வாக்குப்பதிவு, UAW எந்திரத்தில் இருந்து தொழிலாளர்கள் பெரிதும் அந்நியப்பட்டுள்ளதையே காட்டுகிறது.

“ஆனால், ஒவ்வொரு தொழிற்சாலையிலும், ஒவ்வொரு பணியிடத்திலும், நமது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும், அனைத்து அடுக்கு முறைகளை ஒழிப்பதற்கும் மற்றும் நமது வேலைகளைப் பாதுகாப்பதற்கும் தொழிலாள வர்க்கத்தின் முழு அதிகாரத்தையும் ஒன்றுதிரட்ட, சாமானிய தொழிலாளர் பாதுகாப்புக் குழுக்களின் சக்திவாய்ந்த வலையமைப்பை கட்டமைப்பதற்கான அடிப்படை தேவை உள்ளது என்பதை எனது பிரச்சாரம் வெளிப்படுத்தியது. மேலும், முடிவெடுக்கும் அதிகாரத்தை UAW எந்திரத்திடமிருந்து விற்பனைத் தளத்தில் உள்ள தொழிலாளர்களின் கைகளுக்கு மாற்ற முயற்சிப்பதற்கான எனது பிரச்சாரம் இப்போது இன்னும் விரிவுபடுத்தப்பட வேண்டும்” என்று அவர் கூறினார். 

மேலும், “கரி அல்லது ஃபைன் யார் தலைமையிலானது என்றாலும், நமது போராட்டங்களை UAW அதிகாரத்துவத்தின் கைகளில் விட்டுவிட முடியாது. CAT, Big Three, Mack Trucks ஆகியவற்றில் எதிர்வரவிருக்கும் ஆர்ப்பாட்டங்களில், தொழிலாளர்களின் முழு அதிகாரத்தையும் சாமானியத் தொழிலாளர் பாதுகாப்புக் குழுக்களில் நாம் ஒழுங்கமைக்க வேண்டும். இதன் மூலம், நாம் அர்த்தமுள்ள, ஜனநாயகக் கட்டுப்பாட்டை கொண்டிருக்கவும், அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாளர்களின் மற்ற பிரிவுகளுடன் நமது போராட்டங்களை இணைக்கவும் வழிகளை உருவாக்க முடியும்.

Loading