ஈரானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே சீனாவால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட ஒப்பந்தம் வாஷிங்டனில் எச்சரிக்கை மணியை எழுப்புகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சீனாவின் இராஜதந்திர முயற்சியானது, பதட்டத்தைத் தணிக்கவும், இராஜதந்திர உறவுகளை மீண்டும் நிலைநாட்டவும் சவுதி அரேபியாவிற்கும் ஈரானுக்கும் இடையேயான ஒரு உடன்பாட்டை உருவாக்குவதே என இந்த ஒப்பந்தம் பற்றி கடந்த வெள்ளிக்கிழமை அன்று பெய்ஜிங்கில் அறிவிக்கப்பட்டது. இவ்விரண்டு சக்திகளும் மத்திய கிழக்கு முழுவதும் தமது செல்வாக்கிற்காக கடுமையான போட்டியில் ஈடுபட்டுள்ளன. இது பிராந்தியத்தின் மோதல்கள் மற்றும் மோசமான ஸ்திரமற்ற தன்மைக்கு முக்கியமான காரணியாக உள்ளது.  

பெய்ஜிங்கில் ஈரானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையேயான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் விழாவின் போது சவுதி அரேபியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் முசாத் பின் முகமது அல்-ஐபானின் முன்னால் ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு குழுவின் செயலாளர் அலி ஷம்கானி (வலது), சீனாவின் மூத்த இராஜதந்திரி வாங் யி உடன் கைகுலுக்குகிறார். [AP Photo/Nournews]

சுனி அடிப்படைவாதத்தின் தீவிர வடிவத்தை அடிப்படையாகக் கொண்ட சவுதி ஆட்சியானது, 2016 இல் முக்கிய ஷியா மத குருவும் மற்றும் அரசாங்க விமர்சகருமான நிம்ர் பாகிர் அல்-நிம்ரரின் மரணதண்டனைக்கு பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான முறையான இராஜதந்திர உறவுகள் முடிவுக்கு வந்தன. அவரது தலை துண்டிக்கப்பட்டது குறித்து ஈரானில் எதிர்ப்பு கிளம்பியது. இது சவுதி தூதரகத்தை நோக்கிய தாக்குதலுக்கு இட்டுச்சென்றது. அப்போதிருந்து, யேமன் மற்றும் சிரியாவில் நடக்கும் போர்களில் இந்த நாடுகள் எதிர்தரப்பினர்களை ஆதரிப்பதால் உறவுகள் மேலும் மோசமடைந்தன.

கடந்த வெள்ளிக்கிழமை ஒப்பந்தத்தின்படி, சவுதி அரேபியாவும் ஈரானும் தங்கள் இராஜதந்திர உறவுகளை மீள ஸ்தாபிக்கவும், தூதரகங்களை மீண்டும் திறக்கவும், அத்துடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஏற்பாடுகளை செயல்படுத்தவும் கலந்து பேசி முடிவு செய்ய இரண்டு மாதகால அவகாசம் உள்ளது. இது குறித்து சில விபரங்கள் மட்டும் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஒப்பந்தம் பரஸ்பர பிரச்சாரப் போரையும் மற்றும் பிராந்தியத்தில் ஒருவருக்கொருவரின் நலன்கள் மீதான நேரடி மற்றும் மறைமுகத் தாக்குதல்களை  குறைப்பதையும் உள்ளடக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் கூற்றுப்படி, சவுதி அரேபியாவின் நிதியுதவி பெற்ற, பார்சி மொழி செயற்கைக்கோள் செய்தி ஊடகமான Iran International ஐ கட்டுப்படுத்த சவுதி அரேபியா ஒப்புக்கொண்டுள்ளது. இது ஈரானில் பல மாதங்களாக அரசுக்கு எதிரான போராட்டங்களைத் தூண்டியதாக தெஹ்ரான் குற்றம் சாட்டியுள்ளது. ஈரானின் புலனாய்வு அமைப்பின் தலைவர் இந்த ஊடகத்தை பயங்கரவாத அமைப்பு என முத்திரை குத்தியுள்ளார். 

யேமன் நாட்டின் பெரும்பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மற்றும் 2015 ஆம் ஆண்டு முதல் சவுதி தலைமையிலான இராணுவக் கூட்டணிக்கு எதிராக போரிட்டு வரும் யேமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது எல்லை தாண்டி நடத்தும் தாக்குதல்களை கட்டுப்படுத்த ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது. மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் ஹவுதிகளும் சவுதிகளும் பேச்சுவார்த்தை நடத்தியதால் கடந்த ஆண்டு பேச்சுவார்த்தை மூலம் உடன்பாட்டிற்கு வந்த தற்காலிகப் போர் நிறுத்தம் தற்போது அங்கு நடைமுறையில் உள்ளது.

பல ஆண்டுகளாக ஈராக்கும்  ஓமானும் மத்தியஸ்தர்களாக செயல்பட்டு பதட்டத்தைத் தணிக்கும் முயற்சிகள் நடந்து வரும் நிலையில், ஒப்பந்தத்தைப் பாதுகாப்பதில் சீனா முக்கிய பங்கு வகித்தது. கடந்த வெள்ளியன்று, பெய்ஜிங்கின் உயர்மட்ட இராஜதந்திரி வாங் யி இந்த ஒப்பந்தத்தை ஒரு ‘வெற்றியாக’ பறைசாற்றியதுடன், சீனா தொடர்ந்து உலகப் பிரச்சினைகளுக்கு கவனம் செலுத்தும் என்று கூறினார். “நாடுகளுக்கு இடையே நிலவும் மோதல்களையும் வேறுபாடுகளையும் பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை மூலம் தீர்ப்பதற்கு இது ஒரு முன்மாதிரியாகும்” என்று அவர் அறிவித்தார்.   

அமெரிக்காவை மிதமாக விமர்சிக்கும் வகையில், வாங், இரு நாடுகளும் “வெளிப்புறத் தலையீட்டிலிருந்து விடுபட்டு, மத்திய கிழக்கின் எதிர்காலத்தையும் தலைவிதியையும் உண்மையிலேயே தங்கள் கைகளில் எடுத்துக்கொள்கின்றன” என்பதை ஒப்பந்தம் நிரூபித்ததாக அறிவித்தார். அமெரிக்காவானது, உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான போரை தீவிரப்படுத்தி வரும் நிலையிலும், ஆசியாவில் பெய்ஜிங்குடனான மோதலுக்கான தயாரிப்புகளை விரைவுபடுத்தி வரும் நிலையிலும், மத்திய கிழக்கில் இந்த சீன இராஜதந்திரத் தலையீடு  நடக்கிறது.   

சவுதி-ஈரானிய ஒப்பந்தம் பற்றி பைடென் நிர்வாகம் மௌனமாக இருக்கின்றது. தேசிய பாதுகாப்புக் குழுவின் செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி தகுதியான ஆதரவை வழங்கி, “இது பதட்டங்களைத் தணிக்குமானதாக இருக்குமானால் விடயங்களின் நல்ல பக்கத்தையே அது காட்டுகின்றது” என்று கூறினார். அதே நேரத்தில், மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது தரப்பில் இருந்து பின்வாங்கவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.  

எவ்வாறாயினும், அமெரிக்காவை நோக்கி நாடுகள் அணிதிரளுவதை பெய்ஜிங் தடுத்துவிட்டதாகவும், மூலோபாய எண்ணெய் வளம் மிக்க பிராந்தியத்தில் இன்னும் முக்கிய பங்கு வகிப்பதாகவும் வாஷிங்டனில் நிலவும் ஆழ்ந்த கவலைகளை அமெரிக்க ஊடகங்களின் கருத்துக்கள் சுட்டிக்காட்டுகின்றன.   

‘சீனா தரகு பேசி முடித்த ஈரான்-சவுதி ஒப்பந்தம் அமெரிக்காவிற்கு சிவப்புக் கொடிகளை உயர்த்துகிறது,’ என்ற தலைப்பில் Hill பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரை, அட்லாண்டிக் குழுவின் ஆய்வாளரான ஜொனாதன் பானிகோப் இன் கருத்துக்களை மேற்கோள் காட்டியுள்ளது. அவர் இவ்வாறு அறிவித்துள்ளார்: “அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: மத்திய கிழக்கை விட்டு வெளியேறி, சில சமயங்களில் வெறுப்பூட்டும், காட்டுமிராண்டித்தனமான, ஆனால் நீண்டகால நட்பு நாடுகளுடனான உறவுகளை கைவிடுவதால் சீனாவினால் இட்டு நிரப்ப்படும் ஒரு வெற்றிடத்தை நீங்கள் விட்டுவைப்பீர்கள்” என்றார்.    

அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதைத் தடுக்கும் சாக்குப்போக்கில் அதன் மீது முடக்கும் பொருளாதாரத் தடைகளை தொடர்ந்து சுமத்தும் அதேவேளை, வாஷிங்டன் மத்திய கிழக்கில் அதன் தலையீட்டிற்கு சவுதி முடியாட்சியுடனான அதன் நீண்டகால உறவுகளை நம்பியிருந்தது.  

எவ்வாறாயினும், கடந்த ஜூலை மாதம் பைடென் மேற்கொண்ட ரியாத் பயணத்திலிருந்து அமெரிக்க-சவுதி உறவுகள் மோசமாகியுள்ளன. எண்ணெய் விலையை உயர்த்துவதற்காக சவுதி அரேபியாவும் ரஷ்யாவும் இணைந்து செய்த ஏற்பாடுகளின்படி, மூன்று மாதங்களுக்குப் பிறகு, OPEC எண்ணெய் உற்பத்தியை ஒரு நாளைக்கு 2 மில்லியன் பீப்பாய்களாகக் குறைத்தது. உக்ரேன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பைக் கண்டிக்காததன் மூலம் சவுதி அரேபியா வாஷிங்டனை மேலும்  சீண்டியுள்ளது.

பைடென் நிர்வாகம் அதன் பங்கிற்கு, யேமன் போருக்கான அமெரிக்க இராணுவ ஆதரவை முடிவுக்குக் கொண்டுவந்தும், ஆயுத விற்பனையை மட்டுப்படுத்தியும், மற்றும் பொது அணுசக்தி திட்டத்தை தொடங்குவதற்கு உதவி கோரும் சவுதியின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்காமலும் சவுதி அரேபியாவை அது ஆத்திரமூட்டியுள்ளது.  

சவுதி அரேபியா மற்றும் வளைகுடா நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் வாய்ப்பை சீனா பயன்படுத்திக் கொண்டுள்ளது. கடந்த டிசம்பரில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அரபு நாட்டு தலைவர்களை ரியாத்தில் சந்தித்ததாகவும், அப்போது அவர், இந்த ஆண்டு ஈரானுடன் வளைகுடா ஒத்துழைப்புக் குழுவின் (Gulf Cooperation Council-GCC) ஒரு உயர்மட்ட கூட்டத்தை பெய்ஜிங்கில் நடத்த பரிந்துரைத்ததாகவும், அத்திட்டம் அனைத்து தரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது எனவும் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்த ஆண்டின் பிற்பகுதியில் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள பரந்த சந்திப்பின் முன்னோடியாக சவுதி அரேபியாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான ஒப்பந்தத்திற்கு ஏற்பாடு செய்வதில், இப்பிராந்தியம் முழுவதிலும் ஒரு பெரும் எரிசக்தி கொள்முதலாளராகவும் வர்த்தகப் பங்காளராகவும் இருந்து வரும் சீனாவின் நிலைப்பாடு குறிப்பிடத்தக்கப் பங்கைக் கொண்டுள்ளது. 

அமெரிக்கத் தலைமையிலான பொருளாதாரத் தடைகளின் விளைவாக, ஈரானின் நாணய மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக வேகமாக வீழ்ச்சியடைந்து வரும் நிலையிலும், மற்றும் நகர்ப்புறங்களில் ஜனவரியில் பணவீக்கம் 50 சதவீதத்திற்கு அதிமாக இருந்து வரும் நிலையிலும், குறிப்பாக ஈரான் மிகப்பெரிய பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில், சீனா மிகப்பெரிய ஈரானிய எண்ணெய் கொள்முதலாளராகவும் அதன் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாகவும் உள்ளது. இருதரப்பு வர்த்தகம் கடந்த ஆண்டு 15.8 பில்லியன் டாலராக இருந்தது. இது முந்தைய ஆண்டை விட 7 சதவீதம் அதிகரித்துள்ளது.  

பெப்ரவரி நடுப்பகுதியில் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பெய்ஜிங்கிற்கு மேற்கொண்ட அரச பயணத்தின் ஒரு பகுதியாக, ஈரான் தனது உயர்மட்ட அணுசக்தி பேரம் பேசுபவரான அலி பகேரி ஹானியை சவுதி அரேபியாவுடனான ஒப்பந்தத்திற்கு அடித்தளம் உருவாக்க அனுப்பியது. ரைசி, சீன அதிபர் ஜி ஐ சந்தித்த அதேவேளை, பகேரி ஹானி திரைமறைவில் சீன அதிகாரிகளிடம் ஈரானின் கோரிக்கைகளை எழுப்பினார். அப்போது அவர், பொருளாதாரத் தடைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு படியாக ட்ரம்பால் திடீரென நிறுத்தப்பட்ட 2015 அணுசக்தி ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்கான சர்வதேச பேச்சுவார்த்தைகளில் சீனா தலையிடுமாறு அழைப்பு விடுத்தார். மேலும், சீன முதலீட்டிற்கும் ஈரானிய நாணயத்திற்கு ஆதரவளிக்கவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். பதிலுக்கு, சவுதி அரேபியாவுடனான பேச்சுவார்த்தைக்கு முன்நிபந்தனைகளை வைப்பதில்லை என்பதற்கு ஈரான் ஒப்புக்கொண்டது.   

கடந்த வாரம் ஒரு ஒப்பந்தத்தை முடிவு செய்வதற்கான பேச்சுவார்த்தைக்காக பெய்ஜிங்கில் இருந்த ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்புக் குழுவின் செயலாளரான அலி ஷம்ஹானி, ஈரானிய செய்தி ஊடகத்திடம், இந்த அரச பயணம், “ஈரான் மற்றும் சவுதி பிரதிநிதிகளுக்கு இடையேயான மிகத் தீவிரமான பேச்சுவார்த்தைகளுக்கு வழி வகுத்துள்ளது… என்றும், தவறான புரிதல்களை நிவர்த்தி செய்து, எதிர்காலத்தைப் பற்றி யோசிப்பது ஸ்திரத்தன்மையையும் பிராந்திய பாதுகாப்பையும் வளர்க்க உதவும்” என்றும் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை ஒப்பந்தம் பற்றி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரானிய நாணயத்தின் மதிப்பு 10 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது.

தீவிரமடைந்து வரும் பொருளாதார நெருக்கடி, உக்ரேனில் நடக்கும் அமெரிக்க-நேட்டோ போர் மற்றும் சீனாவுடனான மோதலுக்கான அமெரிக்காவின் தயாரிப்புகள் ஆகியவற்றால் தூண்டப்பட்ட கொந்தளிப்பான உலகளாவிய நிலைமைகளுக்கு மத்தியில், ஈரானுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான ஒப்பந்தம் என்பது நீடித்த உடன்படிக்கையாக இல்லாமல் தற்காலிக போர் நிறுத்தத்திற்கான தன்மையையே கொண்டுள்ளது. உலகின் மற்ற பகுதிகளைப் போலவே, அமெரிக்க ஏகாதிபத்தியப் போர்களின் இலக்காகவுள்ள மத்திய கிழக்குப் பகுதியும், ரஷ்யா மற்றும் சீனாவுடன் தீவிரமடைந்து வரும் அமெரிக்க மோதலில் சிக்கியுள்ளது. போட்டியிடும் இஸ்லாமிய அடிப்படைவாதங்களின் பிரச்சார கண்ணோட்டத்தின் மூலம் மத்திய கிழக்கு முழுவதும் நடந்து வரும் சவுதி-ஈரானிய போட்டியானது, விரைவாக மீண்டும் மோதலில் மூழ்கலாம்.      

கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு வாஷிங்டனின் உடனடி எதிர்வினை என்னவாக இருந்தாலும், மத்திய கிழக்கில் அல்லது உலகின் வேறெந்த பகுதியிலும் பெய்ஜிங் அதன் செல்வாக்கை விரிவுபடுத்துவதை அனுமதிக்கும் எண்ணம் வாஷிங்டனுக்கு இல்லை என்பதுடன், அதைத் தடுக்க வரலாற்றுப் புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு இழிவான தந்திரத்தையும் அது பிரயோகிக்கத் தயங்காது.    

Loading