ஜேர்மனிக்கு மக்ரோனின் அரசு விஜயம்: ஐரோப்பா மற்றும் ஜனநாயகத்தின் பெயரிலான போருக்கான கொள்கை

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

ஜேர்மனிக்கு பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் மூன்று நாள் அரசு விஜயமானது, குறைந்த தீமை என்ற கொள்கையை —அதாவது “அதிக மிதவாத” ஜனநாயகக் கட்சிகள் என்று கூறப்படும் கட்சிகளை ஆதரிப்பதன் மூலமாக, அதிவலதின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திவிட முடியும் என்ற கொள்கையை தெளிவாக நிராகரித்துள்ளது.

ஜனாதிபதி மக்ரோன் மற்றும் ஜேர்மன் கூட்டாட்சி சான்சுலர் ஷோல்ஸ் ஆகியோர் மேஸபேர்க்கில் உள்ளனர் [Photo by Bundesregierung / Gaertner]

24 ஆண்டுகளில் முதன்முறையாக, அத்தனை ஆடம்பரத்துடனும் சூழ்நிலையுடனும் நடந்த இந்த அரச விஜயம், ஒரு தேர்தல் பிரச்சாரமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. ஜூன் 9 ஐரோப்பியத் தேர்தல்களுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாக, மக்ரோனின் கட்சிக் கூட்டணியான Ensemble கட்சியானது கருத்துக்கணிப்புகளில் அதிவலது தேசிய பேரணிக் கட்சியை விட மிகவும் பின்தங்கியுள்ளது. தேசிய பேரணிக் (RN) கட்சியானது மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவான வாக்குகளை பெறுவதை எதிர்பார்க்க முடியும், Ensemble கட்சியானது பாதி எண்ணிக்கையிலான வாக்குகளை மட்டுமே எதிர்பார்க்க முடியும். RN கட்சியின் தலைவர் மரின் லு பென்னும் ஐரோப்பிய தேர்தல்களை, 2027 பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலுக்கான ஒரு சோதனை ஓட்டமாக பார்க்கிறார், அதில் அவர் மூன்று முறை தோல்வியுற்ற முயற்சிகளுக்குப் பின்னர் மக்ரோனுக்கு அடுத்து மிக உயர்ந்த பிரெஞ்சு அலுவலகத்தில் பதவியேற்க விரும்புகிறார்.

ஜேர்மனியில், பசுமை கட்சியினர் 15 சதவீதமும், சான்சுலர் ஓலாவ் ஷொல்ஸின் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) 14 சதவீதமும், தாராளவாத ஜனநாயகக் கட்சியினர் (FDP) 4 சதவீதமும் பெற்றுள்ளனர். மொத்தத்தில், 2021 பொதுத் தேர்தலில் 52 சதவீத வாக்குகளைப் பெற்ற மூன்று ஆளும் கட்சிகளும் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவான வாக்குகளைப் பெற்றன. அதிதீவிர வலதுசாரிகளின் ஜேர்மனிக்கான மாற்று கட்சி (AfD) 30 சதவீதத்துடனும், சமீபத்திய வாரங்களில் பல ஊழல்களால் உலுக்கப்பட்டுள்ள பழமைவாத கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம்/கிறிஸ்தவ சமூக ஒன்றியம் (CDU/CSU) 17 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளன.

கவனமாக அரங்கேற்றப்பட்ட தன்னை முன்னிலைப்படுத்தல்களில், மக்ரோன் தன்னை தீவிர வலதுக்கு எதிரான ஒரு பாதுகாவலராகவும் ஒரு முற்போக்கான, வளமான மற்றும் சமாதானத்தை விரும்பும் ஐக்கியப்பட்ட ஐரோப்பாவின் ஒரு பிரதிநிதியாகவும் காட்டிக் கொண்டார். எவ்வாறிருப்பினும், ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோ போரைத் தீவிரப்படுத்துவது, இராணுவ மீள்ஆயுதமயமாக்கல் மற்றும் பாதுகாப்புத் தொழில்துறைக்கு பாரிய மானியங்கள் வழங்குவது என அவர் அறிவுறுத்திய கொள்கைகள் அதிவலதின் தீனிக்கு மட்டுமல்ல, அதிகரித்து வரும் சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பை ஒடுக்குவதை ஆளும் வர்க்கத்திற்கு இன்றியமையாததாகவும் ஆக்குகின்றன.

இந்த விஜயத்தின் விடயங்களைத் தொடங்கும் வகையில், மக்ரோன் போருக்குப் பிந்தைய ஜேர்மன் அரசியலமைப்பின் 75 ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஞாயிறன்று கூட்டாட்சி ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையருடன் சேர்ந்து ஒரு “ஜனநாயக விழாவிற்கு” விஜயம் செய்தார். திங்களன்று அவர் இரண்டாம் உலகப் போரின்போது முற்றிலும் அழிக்கப்பட்ட ட்ரெஸ்டன் தேவாலயம் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டதன் பின்னணியில் ஐரோப்பிய கொள்கை பற்றி உரை நிகழ்த்தினார்.

“வலதுசாரி தீவிரவாதம் ஒரு யதார்த்தம், நாம் விழித்தெழ வேண்டும்,” என்று இந்த நோக்கத்திற்காக குறிப்பாக கூடியிருந்த இளம் பார்வையாளர்களை நோக்கி அவர் கூச்சலிட்டார். ஐரோப்பிய ஒன்றியம் “உலகின் ஒரு தனித்துவமான திட்டமாக” இருந்தது மற்றும் போரால் அழிக்கப்பட்டு மீண்டும் கட்டியெழுப்பப்பட்ட ட்ரெஸ்டன் தேவாலயம் “நம்பிக்கையின் அடையாளமாக” இருந்தது” என்றார்.

இப்போது, வலதுசாரி தீவிரவாத சிந்தனைகளும் போரும் ஐரோப்பாவை ஆபத்திற்கு உட்படுத்திக் கொண்டிருக்கின்றன, “நமது அமைதி, செழிப்பு மற்றும் ஜனநாயகம் இப்போது பணயத்தில் உள்ளன,” என்று மக்ரோன் குறிப்பிட்டார். அமைதியை நிலைநாட்ட ஐரோப்பாவிற்கு ஒரு பொதுவான பாதுகாப்பு மற்றும் தற்காப்பு மூலோபாயம் தேவைப்பட்டது. “நாம் ஐரோப்பியர்களாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்,” என்றார்.

முன்ஸ்டர் நகரில் தங்கியிருந்த பின்னர், அங்கு அவருக்கு வெஸ்ட்பாலியா சமாதான பரிசு வழங்கப்பட்டது, மக்ரோன் மேஸபேர்க்கிற்கு பயணித்தார், அங்கு கூட்டாட்சி அரசாங்கத்தின் விருந்தினர் மாளிகையில் பிராங்கோ-ஜேர்மன் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் ஒரு கூட்டம் நடந்தது, அதில் அதிபர் ஓலாவ் ஷொல்ஸ், வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் இரு நாடுகளின் இராணுவ தளபதிகளும் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டமானது போர் ஆலோசனைக் கூட்டமாக நடைபெற்றது. உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான போரைப் பாரியளவில் தீவிரப்படுத்துவதற்கும், ஐரோப்பிய மீள்ஆயுதமயமாக்கலை தீவிரப்படுத்துவதற்கும், மற்றும் ஐரோப்பிய பாதுகாப்புத் தொழில்துறையை இன்னும் சுதந்திரமாக்க பாரிய மானியங்களை வழங்குவதற்கும் அது முடிவெடுத்தது.

இதற்கு பின்பு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், உக்ரேனுக்கான ஆதரவு ஒரு முதன்மையான முன்னுரிமையாகவும் பகிர்ந்து கொள்ளப்பட்ட ஒரு முக்கிய கவலையாகவும் உள்ளது என்பதில் தானும் மக்ரோனும் உடன்பட்டதாக அறிவித்த ஷொல்ஸ், “இந்த ஆதரவை ஒரு புதிய அடித்தளத்தில் வைக்க நாம் இப்போது அடுத்த அடியை எடுத்தாக வேண்டும்,” என்றார்.

அடுத்த கட்டத்தின் அர்த்தம் என்ன என்பதை மக்ரோன் தெளிவுபடுத்தினார்: அதாவது, ரஷ்யாவிற்குள் உள்ள இலக்குகள் மீதான உக்ரேனிய தாக்குதல்களுக்கு பச்சைக்கொடி காட்டுவது ஆகும். ரஷ்ய பிராந்தியத்தில் ஏவுகணை ஏவுதளங்களைக் காட்டும் ஒரு வரைபடத்தை அவர் தனது பாக்கெட்டில் இருந்து வெளியே எடுத்து, “இந்த ஏவுகணை செலுத்திகளைத் தாக்க நமக்கு வாய்ப்பு தேவை,” என்று அறிவித்தார்.

உள்நாட்டு ரஷ்ய இலக்குகள் மீதான தாக்குதல்கள் குறித்து முன்னதாக தயக்கங்களை வெளிப்படுத்தியிருந்த ஷொல்ஸ், மக்ரோனுடன் உடன்பட்டார். “உக்ரேன் என்ன செய்து கொண்டிருக்கிறதோ அதைச் செய்வதற்கு சர்வதேச சட்டத்தின் கீழ் அதற்கு ஒவ்வொரு வாய்ப்பும் உள்ளது,” என்று கூறிய அவர், அது வழங்கிய ஆயுத அமைப்புகளுக்காக ஜேர்மனி இதைத் தடை செய்து வருகிறது என்ற ஊடக அறிக்கைகளை நிராகரித்தார். இதுபோன்ற எந்த அறிவிப்பும் ஒருபோதும் இருந்ததில்லை, இனியும் இருக்கப் போவதுமில்லை என்று அவர் கூறினார்.

அத்தகைய இராணுவ விரிவாக்கத்துக்கு ரஷ்யா எதிர்வினையாற்றும் என்பது நிச்சயம். மக்ரோன், ஷொல்ஸ் மற்றும் நேட்டோ ஆகியவை ஒரு தீவிரமடைந்து வரும் சுழல் இயக்கத்தை அமைக்கின்றன, அது உரிய நேரத்தில் நிறுத்தப்படாவிட்டால், அது அணு ஆயுத போருக்கும் மற்றும் ஒட்டுமொத்த ஐரோப்பாவின் அழிவுக்கும் இட்டுச் செல்ல அச்சுறுத்துகிறது.

பாதுகாப்பு, தற்காப்பு மற்றும் ஆயுதங்கள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு இன்னும் விரிவுபடுத்தப்படும் என்று இருவரும் அறிவித்தனர். ஆயுதங்கள் மற்றும் ஏனைய திட்டங்களுக்கு நிதியாதாரம் திரட்டுவதற்காக ஐரோப்பிய ஒன்றிய வரவு-செலவு திட்டத்தை இரட்டிப்பாக்க மக்ரோன் முன்மொழிந்தார், இதை ஜேர்மனி இதுவரையில் நிதிக் கொள்கை காரணங்களுக்காக நிராகரித்து வந்துள்ளது.

எவ்வாறிருப்பினும், கூட்டத்தின் இறுதிப் பிரகடனத்தில் குறிப்பிட்டதைப் போல, ஐரோப்பிய ஒன்றியத்தை “ஒரு நிஜமான புவிசார் அரசியல் பங்கேற்பாளராக” ஆக்குவதற்காக, “அவசியமான காலத்திற்கு மற்றும் தீவிரமாக உக்ரேனுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கவும்” மற்றும் “பலமான மற்றும் நம்பகமான ஐரோப்பிய பாதுகாப்பு தகைமைகளை” அபிவிருத்தி செய்யவும் அவ்விரு அரசாங்கங்களும் உடன்பட்டன.

“ஐரோப்பா மற்றும் நேட்டோவின் பாதுகாப்புக்கான அணு ஆயுத தடுப்புமுறையின் உயர் முக்கியத்துவத்தையும், சுதந்திரமான பிரெஞ்சு மூலோபாய அணு ஆயுதப் படைகளின் தடுப்புப் பாத்திரத்தையும்” அந்தப் பிரகடனம் வலியுறுத்துகிறது. “எங்களது தடுப்பு மற்றும் பாதுகாப்பு தகைமைகள், விண்வெளி மற்றும் இணையவழி தகைமைகளுடன் இணைந்து, அணு ஆயுத, மரபார்ந்த மற்றும் ஏவுகணை பாதுகாப்பு தகைமைகளின் ஒரு பொருத்தமான கலவையை அடிப்படையாகக் கொண்டவை என்பதை நாங்கள் அறிவோம்,” என்று அது தொடர்கிறது.

பிரம்மாண்டமான செலவுகளை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்துகின்ற இந்தப் போர் மற்றும் ஆயுதமயமாக்கல் கொள்கை, பாரிய எதிர்ப்பை சந்திக்கும் என்பதும், உண்மையில் அது ஏற்கனவே அதை சந்தித்து வருகிறது என்பதும் வெளிப்படையாக இருக்கிறது. குறிப்பாக, பேர்லின் மற்றும் பாரிஸ் இரண்டும் ஆதரிக்கும் காஸாவில் பாலஸ்தீனியர்கள் மீதான இனப்படுகொலை, இரு நாடுகளிலும் கடுமையான போராட்டங்களைத் தூண்டியுள்ளது.

இடதுசாரிகள் என்று கூறிக் கொள்பவை உட்பட அனைத்து ஸ்தாபகக் கட்சிகளும் போர், மீள்ஆயுதமயமாக்கல் மற்றும் சமூக வெட்டுக்களின் கொள்கையை ஆதரிப்பதால், இதன் மூலம் ஏற்படும் விரக்தியையும் கோபத்தையும் தீவிர வலதுசாரிகளால் ஓரளவு சுரண்டிக் கொள்ள முடிகிறது. ஆனால் அனைத்திற்கும் மேலாக, இந்த பிற்போக்குத்தனமான சக்திகள், மீள்ஆயுதமயமாக்கல் மற்றும் சமூக வெட்டுக்களுக்கு எதிரான எந்தவொரு நிஜமான —அதாவது இடதுசாரி— எதிர்ப்பையும் ஒடுக்குவதற்காக திட்டமிட்டு கட்டியெழுப்பப்பட்டு அரசாங்கங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.

ஒன்றரை ஆண்டுகளாக ஐரோப்பிய ஒன்றியத்தின் மூன்றாவது மிகப் பெரிய அரசின் அரசாங்கத்திற்கு தலைமை கொடுத்து வருகின்ற நவ-பாசிசவாத ஜியோர்ஜியா மெலோனிக்குப் பின்னர், நெதர்லாந்தும் இப்போது கீர்ட் வில்டர்ஸின் அதிதீவிர வலது, இஸ்லாமிய வெறுப்பு சுதந்திரக் கட்சி தொனியை அமைக்கும் ஒரு அரசாங்கத்தை உருவாக்கும் நிகழ்முறையில் உள்ளது.

ஐரோப்பிய தேர்தல்களுக்குப் பின்னர் வலதுசாரி தீவிரவாதிகளை மிக உயர்ந்த பதவிகளில் ஏற்கவும் ஐரோப்பிய ஒன்றியம் தயாரிப்பு செய்து வருகிறது. ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ஆணையத்தின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பெரும்பாலும் இமானுவல் மக்ரோனுக்கு கடன்பட்டிருந்த ஊர்சுலா வொன் டெர் லெயன், இப்போது மெலோனியை நேசித்து வருகிறார், இதனால் நவ-பாசிசவாதி மெலோனி இரண்டாவது பதவிக்காலத்தை வெல்வதற்கு அவருக்கு உதவ முடியும்.

தேர்தலில் போட்டியிடும் அதிவலது ஐரோப்பிய கன்னையைச் சேர்ந்த மரின் லு பென்னும் மெலோனியுடன் இணைந்து செயல்பட விரும்புகிறார். லு பென் சமீபத்தில் ஜேர்மன் AfD இன் அடையாளம் மற்றும் ஜனநாயகம் (ID) என்னும் குழுவை நாடாளுமன்ற குழுவில் இருந்து வெளியேற்றச் செய்தார். இதற்கான காரணம் உத்தியோகபூர்வமாக கூறப்பட்டதைப் போல, AfD இன் உயர்மட்ட வேட்பாளர் மாக்சிமிலியன் கிரா, ஹிட்லரின் SS ஐ குறைத்துக் காட்டியது அல்ல, மாறாக உக்ரேன் போர் மீதான AfD இன் நிலைப்பாடு ஆகும்.

கிராவும் மற்றும் AfD இன் ஐரோப்பிய தேர்தல் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவரான பீட்டர் பைஸ்ட்ரோனும் ரஷ்ய நிதிகளை ஏற்றுக்கொண்டதாக சந்தேகிக்கப்படுகிறார்கள். கிரா தனது ஐரோப்பிய அலுவலகத்தில் ஒரு சீன முகவரை நியமித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது, அவர் இப்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோ போருக்கான ஆதரவு என்பது, ஒரு அரசியல்வாதி அதிகாரத்தின் நெம்புகோல்களை கையிலெடுக்க அனுமதிப்பதற்கு முன்னர் ஐரோப்பிய முதலாளித்துவம் வலியுறுத்தும் மாற்றவியலாத நிபந்தனையாகும். மெலோனி, வில்டர்ஸ் மற்றும் லு பென் அனைவரும் இதை ஏற்றுக்கொண்டுள்ளனர். அவர்களின் இஸ்லாமிய விரோதத்தின் காரணமாக, அவர்கள் காஸா இனப்படுகொலையில் இஸ்ரேலின் பக்கம் உள்ளனர்.

2017 மற்றும் 2022 இல் அவரது தேர்தல் வெற்றிகளுக்கு பிரதானமாக லு பென்னைத் தடுப்பதற்காக பலர் அவருக்கு வாக்களித்தனர் என்ற உண்மையின் காரணமாகவே மக்ரோன், செல்வந்தர்களின் நலன்களுக்கான அவரது கொள்கைகள், “மஞ்சள் சீருடை” போராட்டக்காரர்களுக்கு எதிரான அவரது பொலிஸ் பயங்கரம், ஓய்வூதிய போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் மற்றும் அவரது போர்-ஆதரவு கொள்கை ஆகியவற்றைக் கொண்டு லு பென்னுக்கு பாதை அமைத்துக் கொடுத்தார்.

ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதே அதிவலதின் வளர்ச்சியை நிறுத்துவதற்கும் ஒரு மூன்றாம் உலகப் போரைத் தடுப்பதற்குமான ஒரே வழியாகும். இதற்காகத்தான் ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (SGP) ஐரோப்பிய தேர்தல்களில் போராடி வருகிறது. ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியானது (SGP) பெருநிறுவனங்கள், வங்கிகள் மற்றும் போர் வெறியர்களின் ஐரோப்பிய ஒன்றியத்தை ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளினால் எதிர்க்கிறது.

Loading