வாஷிங்டன் உச்சிமாநாடு உக்ரேனுக்குள் நேட்டோ அலுவலகத்தை அமைக்கும் திட்டத்தை அறிவிக்க இருக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் வாஷிங்டனில் உள்ள ஆண்ட்ரூ டபிள்யூ மெல்லன் ஆடிட்டோரியத்தில் செவ்வாய்க்கிழமை, ஜூலை 9, 2024 அன்று நேட்டோவின் 75 வது ஆண்டு நிறைவில் கருத்துக்களை வழங்குகிறார். [AP Photo/Evan Vucci]

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் (Jake Sullivan) செவ்வாயன்று கூறுகையில், வாஷிங்டனில் இந்த வாரம் நடக்கவிருக்கும் நேட்டோ உச்சிமாநாடு, உக்ரேனுக்குள் ஒரு உயர்மட்ட அதிகாரியின் தலைமையில் ஒரு நேட்டோ அலுவலகம் அமைக்கப்படுவதை அறிவிக்கும் என்றார்.

இந்த நேட்டோ அலுவலகம், உக்ரேனிய போரை மேற்பார்வையிட ஒரு நேட்டோ கட்டளை மையத்தை உருவாக்குவதுடன், ஆயுதங்கள் மற்றும் தளவாட மேற்பார்வை வினியோகத்தை அமெரிக்கா தலைமையிலான தற்காலிக குழுவிடம் இருந்து இராணுவ கூட்டணிக்கு மாற்றுகிறது.

சுல்லிவனின் கருத்துக்கள் வாஷிங்டனில் நடக்கவிருக்கும் மூன்று நாள் உச்சிமாநாட்டின் பிரதான திட்டநிரலை கோடிட்டுக் காட்டுகின்றன. இது உக்ரேனில் ரஷ்யாவுடனான மோதலின் ஒரு பெரும் விரிவாக்கதை சமிக்ஞை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன், ஐரோப்பா எங்கிலும் ஒரு முழு அளவிலான போரில் சண்டையிடுவதற்கான நேட்டோவின் திறன்களை கணிசமானளவுக்கு அதிகரிக்க திட்டமிடுகிறது.

டோமாஹாக் (Tomahawk) ஏவுகணை தயாரிப்பாளரான RTX, Predator ட்ரோன் தயாரிப்பாளரான ஜெனரல் ஆட்டோமிக்ஸ் (General Atomics) மற்றும் பிராட்லி (Bradley) மற்றும் யுத்த வாகனத்தை தயாரிக்கும் BAE ஆகிய நிறுவனங்களின் இணை நிதியுதவியுடன் அமெரிக்க வர்த்தக சம்மேளனம் நடத்திய ஒரு மன்றத்தில் சுல்லிவன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

பாதுகாப்பு ஒப்பந்ததாரர்களுக்கு நன்றி தெரிவித்து வர்த்தக சம்மேளனத்தின் ஒரு அதிகாரியின் அறிமுக உரையைத் தொடர்ந்து, “பொதுச் செயலாளர் ஸ்டோல்டன்பெர்க்கால் நியமிக்கப்பட்ட புதிய நேட்டோ மூத்த பிரதிநிதியை கியேவ் அறிவிக்கும் என்று சல்லிவன் குறிப்பிட்டார். ... இவர், கூட்டணியுடனான உக்ரேனின் நிறுவன உறவை ஆழப்படுத்துவதோடு, மூத்த உக்ரேனிய அதிகாரிகளுடன் நேட்டோவின் ஈடுபாட்டிற்கான மையப் புள்ளியாக பணியாற்றுவார்.

“ஜேர்மனியில் ஒரு புதிய நேட்டோ இராணுவக் கட்டளை மூன்று நட்சத்திர ஜெனரல் தலைமையில் உக்ரேனிய துருப்புக்களுக்கான பயிற்சி, ஆயுதம் மற்றும் படை மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்குவது” தொடர்பாக உச்சிமாநாட்டில் அறிவிக்கப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

அமெரிக்கா “இந்த ஆண்டு குறைந்தபட்சம் 40 பில்லியன் யூரோ மதிப்புள்ள பாதுகாப்பு உதவியை கூட்டாக உக்ரேனுக்கு வழங்க அனைத்து கூட்டாளிகளிடம் இருந்தும் ஒரு உறுதிமொழியை” பெற்றுள்ளது என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

இந்த உச்சிமாநாட்டில் “எஃப்-16 விமானங்களை வழங்குவது” தொடர்பான அறிவிப்பும் இடம்பெறும்.

கியேவில் ஒரு நேட்டோ அலுவலகத்தை உருவாக்கி, ஆயுத விநியோகம், பயிற்சி மற்றும் இராணுவ தளவாடங்களை ஒரு நேரடி நேட்டோ இராணுவ கட்டளையகத்தின் கீழ் மறுஒழுங்கு செய்வது என்பது, உக்ரேனிய மோதல் நேட்டோ மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான ஒரு போர் அல்ல என்ற எந்தவொரு பாசாங்குத்தனத்தின் முடிவைக் குறிப்பதாகும்.

இது போரில் ஒரு ஆபத்தான புதிய கட்டத்தைக் குறிப்பதோடு, ஒரு பெரிய போர் விரிவாக்கத்திற்கான சாத்தியக்கூறை எழுப்புகிறது. எந்தவொரு புள்ளியிலும், போரில் ஈடுபட்டுள்ள ஒரு நாடான உக்ரேனிலுள்ள உள்ள நேட்டோ அலுவலகம், ஒரு ஏவுகணையால் தாக்கப்படும் அபாயத்தைக் கொண்டுள்ளது, இது ஒட்டுமொத்த நேட்டோ கூட்டணியையும் ரஷ்யாவுடனான ஒரு முழு அளவிலான போருக்குள் இழுக்கப்படக் கூடும்.

இந்த அறிவிப்பு அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ நட்பு நாடுகளின் முக்கிய தொடர் போர் விரிவாக்க நடவடிக்கைகளின் பின்னணியில் வந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில், பைடென் நிர்வாகம் உக்ரேனுக்கு நீண்ட தூர ATACMS ஏவுகணைகளை வழங்கத் தொடங்கியது. ரஷ்ய எல்லைக்குள் “எங்கும்” தாக்குவதற்கு அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்த உக்ரேனை அமெரிக்கா அனுமதிக்கிறது என்று சுல்லிவன் பின்னர் வலியுறுத்தினார்.

நேட்டோ உச்சிமாநாட்டின் தொடக்கமும் இன்னும் தீவிர போர் விரிவாக்கத்துக்கான அழைப்புகளுடன் கைகோர்த்திருந்தது. குடியரசுக் கட்சி செனட்டர் ஜோனி ஏர்ன்ஸ்ட் (Joni Ernst) ரஷ்யாவிற்குள் தாக்கும் தகைமை கொண்ட, இன்னும் நீண்ட தூர செல்லக்கூடிய ஆயுதங்களை அமெரிக்கா வழங்க வேண்டுமென கோரினார்: “அவர்களுக்கு என்ன தேவைப்படுகிறதோ அதை நாம் அவர்களுக்கு வழங்க வேண்டும்... ரஷ்யாவிற்குள் அவர்கள் தாக்குவதற்கு என்ன தேவையோ அதை நாம் அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் குறிப்பிட்டார்.

“உக்ரேனியர்களின் கைகளை நாம் கட்டிப்போட முடியும் என்று நான் நினைக்கவில்லை,” என்று ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டோம் சுவோஸ்ஸி (Tom Suozzi) கூறினார். “சில சமயங்களில் நீங்கள் ஒரு மிரட்டலாளரை மூக்கில் குத்த வேண்டியிருக்கும்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

வலதுசாரி வரலாற்றாசிரியர் திமோதி ஸ்னைடர் (Timothy Snyder) நேட்டோ ஆயுதங்களைப் பயன்படுத்தி ரஷ்யாவிற்குள் தாக்குதல்களை விரிவாக்க அழைப்பு விடுத்துள்ளார். “சர்வதேச சட்டத்தின்படி உக்ரேன் தன்னை தற்காத்துக் கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும். இந்த பயங்கரவாத தாக்குதல்களை நடத்தும் ரஷ்யாவினுடைய விமானத் தளங்கள் பாதுகாப்பான புகலிடங்களாக இருக்க முடியாது” என்று அவர் குறிப்பிட்டார்.

ரஷ்யாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் மைக்கேல் மெக்ஃபௌல் (Michael McFaul) உக்ரேனை ஒரு அங்கத்துவ நாடாக சேர்த்துக் கொள்ளுமாறு நேட்டோவுக்கு அழைப்பு விடுத்தார். “புட்டின் 2014 மற்றும் 2022 க்கு இடையில் செய்ததைப் போலவே, தனது படையெடுப்பின் அடுத்த கட்டத்தைத் தயாரிக்க, போர்நிறுத்தம் அல்லது பிற பேச்சுவார்த்தை முறிவுகளைப் பயன்படுத்த மாட்டார் என்பதற்கு, நேட்டோவில் உக்ரேனின் உறுப்புரிமைதான் அதற்கு உத்தரவாதம் அளிக்கும் ஒரே வழி” என்று அவர் அறிவித்தார். “நேட்டோ அங்கத்துவம் மட்டுமே இறுதியாக மற்றொரு ரஷ்ய படையெடுப்பைத் தடுக்கும்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

செவ்வாயன்று அவரது கருத்துக்களில், சுல்லிவன் 2022 இல் உக்ரேனில் ரஷ்யாவுடன் மோதல் வெடித்ததில் இருந்து நேட்டோ கூட்டணியின் பாரிய இராணுவ மீள்ஆயுதமயமாக்கலை விவரித்தார். “இந்த ஆண்டில் மட்டும், நமது சக நேட்டோ கூட்டாளிகள் பாதுகாப்புக்காக 500 பில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்யும். 2020 இல், நமது நேட்டோ கூட்டாளிகள் 325 பில்லியன் டாலருக்கு சற்று அதிகமாக முதலீடு செய்தனர், அதனால் $175 பில்லியன் அதிகரிப்பு மற்றும் கடந்த மூன்றரை ஆண்டுகளில் கணிசமான சதவீத அதிகரிப்பு” என்று அவர் குறிப்பிட்டார்.

ஸ்டொல்டென்பேர்க் முழு அளவிலான போருக்கான நேட்டோவின் தயாரிப்பின் முன்னேறிய நிலையை தெளிவுபடுத்தினார். “ஒரு நெருக்கடி சம்பவத்தில், நேட்டோ துரிதமாக ஒரு போர் நிலைப்பாட்டிற்கு மாற முடியும்,” “கூட்டணிப் படைகள் அவை யாரிடம் இருந்து உத்தரவுகளை பெறுகின்றன என்பதை முதல் கணத்தில் இருந்தே அறிந்து கொள்ளும்,” என்றார்.

உச்சிமாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்படவிருக்கும் நேட்டோவின் புதிய “படைகளின் மாதிரியின்” கீழ், “ஒரு நெருக்கடியின் போது எத்தனை துருப்புகளை அவர்கள் அணிதிரட்ட எதிர்பார்க்கிறார்கள், எந்த காலவரையறைக்குள் அவர்கள் அணிதிரட்டப்படுவார்கள் என்பதை கூட்டாளிகள் அறிந்துகொள்ள முடியும். உதாரணமாக: பத்து நாட்கள் இடைவெளியில், அதன் கூட்டணி படைகள் இருக்க வேண்டிய இடத்தில் 100,000 ஆண்களைக் கொண்டிருக்கலாம். ஒரு மாத இடைவெளியில், இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகி, அடுத்து வரும் வாரங்களில் இது 500,000 ஐ எட்டும்.”

நேட்டோ “ஒரு நவீன ஆயுதக்கிடங்கில் முதலீடு செய்து வருகிறது” என்று சுல்லிவன் தெரிவித்தார். அதாவது அடுத்த தலைமுறை விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், போர்க்கப்பல்கள் மற்றும் பீரங்கி அமைப்புகளுடன், நிலம், கடல், வான், சைபர் மற்றும் விண்வெளி என ஒவ்வொரு களத்திலும் போராட நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று அவர் குறிப்பிட்டார்.

அவரது கருத்துக்களைத் தொடர்ந்து, அன்று மாலை, நேட்டோ கூட்டணியின் 75 ஆம் ஆண்டு நிறைவை நினைவுகூரும் ஒரு விழாவில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் போர்வெறிபிடித்த உரையை நிகழ்த்தினார். “பல ஆண்டுகளாக, பின்லாந்தும் ஸ்வீடனும் எங்கள் நெருங்கிய கூட்டாளிகளாக உள்ளன. ஷரத்து 5 உத்தரவாதத்தின் சக்தி மற்றும் முக்கியத்துவத்தின் காரணமாக, இன்று அவர்கள் உத்தியோகபூர்வமாக நேட்டோவில் இணைய முடிவு செய்துள்ளனர்.”

“இன்று, நேட்டோ முன்னெப்போதையும் விட அதிக ஆதார வளங்களைக் கொண்டுள்ளது. 2020 இல், நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டில், ஒன்பது நேட்டோ நட்பு நாடுகள் மட்டுமே தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதத்தை பாதுகாப்புக்காக செலவிட்டன. இந்த ஆண்டு, அவர்களில் 23 பேர் குறைந்தது 2 சதவீதத்தை செலவிடுவார்கள்.

“நாங்கள் தயாராக இருக்கிறோம், ஆக்கிரமிப்பைத் தடுக்கவும், நிலம், வான்வழி, கடல், சைபர் மற்றும் விண்வெளி என ஒவ்வொரு களத்திலும் நேட்டோ மண்ணின் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

“நாம் முன்னெப்போதையும் விட வலுவாக இருப்பது நல்லது, ஏனென்றால் வரலாற்றின் இந்த தருணம் நமது கூட்டு வலிமையைக் கோருகிறது” என்று பைடன் கூறி முடித்தார்.

வாஷிங்டன் உச்சிமாநாட்டில் உள்ள அனைத்து நேட்டோ தலைவர்களும் பிரதான உள்நாட்டு அரசியல் நெருக்கடிகளை முகங்கொடுத்து வருகின்றனர். நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பதவியில் இருந்து விலகுமாறு அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்திலிருந்து பைடென் அழைப்புகளை எதிர்கொள்கிறார். ஆனால் இந்த தீவிரமடைந்து வரும் நெருக்கடிகளுக்கு மத்தியில், நேட்டோ சக்திகள் உக்ரேனில் ரஷ்யாவுடனான போரையும் மற்றும் உலகெங்கிலுமான ஏனைய மோதல்களையும் தீவிரப்படுத்த தீர்மானகரமாக உள்ளன.

காஸாவில் ஏகாதிபத்திய ஆதரவிலான இனப்படுகொலையானது, —இதில் குறைந்தபட்சம் 40,000 பேர் மற்றும் 200,000 அல்லது அதற்கு அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது— ஏகாதிபத்திய சக்திகள் உலக மேலாதிக்கத்திற்கான அவற்றின் இலக்குகளை எட்டுவதற்கு எவ்வளவு தூரத்துக்கும் செல்வதற்கு தயாராக இருக்கின்றன என்பதைக் காட்டுகிறது.

Loading