மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
இஸ்ரேலில் கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்ற பாரிய எதிர்ப்பு போராட்டங்கள், அதிதீவிர வலதுசாரி நெதன்யாகு அரசாங்கத்திற்கு பரந்த மக்கள் எதிர்ப்பையும், ஒரு சியோனிச முன்னோக்கிற்குள் சிக்கியுள்ள எந்தவொரு எதிர்ப்பு இயக்கமும் முகங்கொடுக்கும் அரசியல் முட்டுக்கட்டையையும் அம்பலப்படுத்தி உள்ளது.
கடந்த ஞாயிறன்று தொழிலாளர்களின் கணிசமான பிரிவுகள் உட்பட நூறாயிரக்கணக்கானவர்கள் தெருக்களுக்கு வந்தனர். இது கடந்த அக்டோபரில் காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைப் போர் தொடங்கியதற்குப் பிந்தைய மிகப் பெரிய எதிர்ப்பு நாளாகும். பணயக்கைதிகள் பரிமாற்ற உடன்பாட்டை அடைவதில் அரசாங்கம் தோல்வியுற்றதை கண்டித்த இந்த ஆர்ப்பாட்டங்கள் முந்தைய நாள் காஸாவில் இருந்து இறந்த ஆறு இஸ்ரேலியர்கள் மீட்கப்பட்டதை அடுத்து உந்துதல் பெற்றன. ஹிஸ்டாட்ரட் (Histadrut) தொழிற்சங்கக் கூட்டமைப்பு இதற்கு விடையிறுக்கும் வகையில் திங்களன்று ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது.
பிரதம மந்திரி பெஞ்சமின் நேதன்யாகுவும் அவரது அமைச்சரவையும் காசாவிற்கும் எகிப்திற்கும் இடையே உள்ள பிலடெல்பி நடைபாதையை தொடர்ந்து ஆக்கிரமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சில நாட்களுக்கு முன்பு, வியாழனன்று, பணயக்கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை திறம்பட முறியடித்தனர் என்ற செய்தியால் கோபம் மூண்டது. இஸ்ரேலிய சுகாதார அமைச்சகத்தின் பிரேத பரிசோதனையின்படி, இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளுக்கும் பாலஸ்தீனிய போராளிகளுக்கும் இடையே நடந்த மோதல்களுக்கு மத்தியில், வியாழன் அல்லது வெள்ளியன்று ஆறு பணயக்கைதிகளும் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவங்கள், காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களின் உயிர்கள் மீது மட்டுமல்ல, மாறாக பணயக்கைதிகளின் உயிர்கள் மீதும் இஸ்ரேலிய அரசாங்கம் கொண்டுள்ள அலட்சியத்தை அப்பட்டமாக அம்பலப்படுத்தியுள்ளன. காஸாவில் இருந்தும், அதிகரித்தளவில் மேற்குக் கரையில் இருந்தும், சாத்தியமான அளவுக்கு அதிகமான பாலஸ்தீனர்களைக் கொன்று குவித்து வெளியேற்றும் நோக்கத்துடன் ஒரு அழித்தொழிப்பு போரைத் தொடுக்க பிணைக் கைதிகளை இஸ்ரேல் சிடுமூஞ்சித்தனமாக பயன்படுத்துகிறது. லெபனானில் ஹிஸ்புல்லாவிற்கு எதிராகவும், சிரியா, ஈரானுக்கு எதிராகவும் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்கள் அதிகரித்து வருவது, பிராந்தியம் முழுவதும் பேரழிவு தரும் மோதல் விரிவாக்கத்தை அச்சுறுத்துகிறது.
2023 நவம்பர்-டிசம்பரில் இஸ்ரேலின் சிறைகளில் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த பாலஸ்தீனியர்களுக்கான இஸ்ரேலிய பணயக் கைதிகளின் முதல் மற்றும் ஒரே பரிமாற்றத்திற்குப் பின்னர், ஒவ்வொரு முறையும் இதேபோன்ற ஒப்பந்தம் சாத்தியமாகத் தோன்றியபோது, நெதன்யாகு அரசாங்கம் அதை நாசப்படுத்த ஏதாவது செய்துள்ளது. இஸ்ரேலிய ஆட்சி உயிர்களைக் காப்பாற்ற முயற்சிக்கவில்லை. அது பாலஸ்தீனியர்களைக் கொன்று குவிப்பதோடு, அரேபியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையிலான பிராந்திய இரத்தக்களரியை அச்சுறுத்தி அதன் இன மேலாதிக்க இலக்குகளைத் தொடர்கிறது.
ஆறு பணயக்கைதிகளின் மரணங்கள், இஸ்ரேலிய சமூகத்தின் ஒரு பரந்த பிரிவை, இந்த யதார்த்தத்துடன் நேருக்கு நேர் கொண்டு வந்துள்ளது. ஆனால், எதிர்ப்பு போராட்டங்களின் தற்போதைய கண்ணோட்டம் குறிப்பிடுவது போல், நெதன்யாகு மீது அழுத்தம் கொடுப்பதன் மூலமோ அல்லது அவருக்குப் பதிலாக இதர போர்க் குற்றவாளிகளை நியமிப்பதன் மூலமோ இதனை மாற்றிவிட முடியாது.
குறைந்தபட்சம் 40,000 பாலஸ்தீனிய உயிர்களை —அநேகமாக 200,000 க்கும் நெருக்கமான— பலிகொண்ட இனப்படுகொலையை எதிர்க்காமல் இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு எதிரான எந்த முற்போக்கான போராட்டத்தையும் முன்னெடுக்க முடியாது.
ஹிஸ்டாட்ரூட் (Histadrut) தொழிற்சங்கத்தின் தலைவர் அர்னான் பார்-டேவிட் (Arnon Bar-David) “வாழ்க்கையை கைவிட அனுமதிக்க மாட்டோம்” என்ற உறுதிமொழியை அவமதிப்புடன் நடத்த வேண்டும். இதைத்தான் தேசியவாத ஹிஸ்டாட்ரட் அதிகாரத்துவம் கடந்த 11 மாதங்களாக செய்து வருகிறது. காஸாவில் இனப்படுகொலையை நிறுத்த சர்வதேச ஒற்றுமை நடவடிக்கைக்கான பாலஸ்தீனிய தொழிற்சங்கங்களின் காஸாவின் பொதுக் கூட்டமைப்பு விடுத்த அழைப்பைப் புறக்கணித்து, அரபுத் தொழிலாளர்களிடமிருந்து யூதர்களைப் பிரித்து, அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான படுகொலைகளை தொடர அனுமதிப்பதற்கு அது வேலை செய்தது. 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இஸ்ரேலை புரட்டிப்போட்ட வெகுஜன எதிர்ப்பு இயக்கத்தால் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் மீண்டும் எழுப்பப்படுகின்றன, அவை போரால் தீவிர அவசர நிலைக்கு கொண்டு வரப்படுகின்றன.
ஒரு அதிவலது நீதித்துறை ஆட்சிக்கவிழ்ப்பு சதியை நடத்துவதற்கான நெதன்யாகுவின் முயற்சிகளை இஸ்ரேலிய சமூகத்தின் ஒரு கணிசமான சதவீதத்தினர் எதிர்த்த அந்த இயக்கத்தில், பாதுகாப்பு மந்திரி யோவ் கேலண்ட், முன்னாள் பாதுகாப்பு மந்திரி பென்னி காண்ட்ஸ் மற்றும் முன்னாள் பிரதம மந்திரி யாயிர் லாபிட் ஆகியோர் எதிர்க்கட்சி தலைவர்களாக முன்னிறுத்தப்பட்டனர். இந்த எதிர்ப்பு போராட்ட ஏற்பாட்டாளர்கள் சியோனிச திட்டத்திற்கான முழுமையான ஆதரவை அடிப்படையாகக் கொண்டு, ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனிய மக்களின் ஜனநாயக உரிமைகள் குறித்த கேள்வியை எடுக்க மறுத்துவிட்டனர்.
அந்த முன்னோக்கு பின்னர் கட்டவிழ்த்துவிடப்பட்ட பேரழிவிற்கு பெரும் பங்கைக் கொண்டுள்ளது. அந்நேரத்தில் உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு எழுதியது:
ஆனால், இந்த வெகுஜன இயக்கம் மிகப் பெரியளவில் இருந்தாலும் கூட, இது ஒரு பலவீனத்தைக் கொண்டுள்ளது. அதாவது இது பாலஸ்தீனிய மக்களின் போராட்டங்களை இதுவரை எந்த வகையிலும் அரவணைத்துக் கொள்ளவில்லை என்ற இந்தப் பலவீனத்தை எதிர்த்துப் போராடவில்லை என்றால் அது அதன் கேடான தன்மையை நிரூபிக்கும்...
வெற்றிக்கான ஏதேனும் வாய்ப்பைப் பெற வேண்டுமானால், யூத தொழிலாளர்களும் இளைஞர்களும் சியோனிச சித்தாந்த கண்மூடித்தனத்தை தூக்கி எறிந்து விட்டு, முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் யூத மற்றும் அரபு தொழிலாளர்களின் புரட்சிகர ஐக்கியத்தின் அடிப்படையில் ஒரு சோசலிச மூலோபாயத்தை ஏற்க வேண்டும்.
இஸ்ரேலிலுள்ள பாலஸ்தீனிய மக்கள் மீதும், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலும், ஆணவமான அடாவடிக் குழுக்களது மற்றும் ஆக்கிரமிப்பாளர்களது அதிகரித்து வரும் வன்முறை மற்றும் காட்டுமிராண்டித்தனமான இராணுவ அடக்குமுறை நிலைமைகளின் கீழ், யூத தொழிலாளர்களும் இளைஞர்களும் தங்கள் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது சாத்தியமற்றது. மேற்குக் கரையிலும் காஸாவிலும் இராணுவ சர்வாதிகாரமும் இஸ்ரேலுக்குள் ஜனநாயகமும் இருக்க முடியாது.
அதி தீவிர வலதுசாரி அரசாங்கத்தின் கீழ் பாலஸ்தீனியர்கள் மீதான துஷ்பிரயோகங்கள் தொடர்ந்த போதிலும், போராட்டங்கள் முடிவுக்கு வந்தன.
அக்டோபர் 7 ஊடுருவலுக்குப் பிறகு, கேலன்ட் மற்றும் காண்ட்ஸ் இருவரும் நெதன்யாகுவின் போர் அமைச்சரவை மற்றும் அதன் குற்றங்களில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைந்தனர். அதே நேரத்தில் லாபிட் ஒரு அசைக்க முடியாத விசுவாசமான “எதிர்ப்பின்” பாத்திரத்தை ஏற்றுக்கொண்டார். இப்பொழுது அவை மீண்டும் நெதன்யாகு, ஸ்மோட்ரிச் மற்றும் பென் குவிர் ஆகியோரின் வாசலில் மட்டுமே வைக்கப்பட்டுள்ள நெருக்கடிக்கான விடையாக முன்வைக்கப்படுகின்றன. இன்னும் இஸ்ரேலியர்களுக்கு ஏற்பட்ட தீங்குகளின் அடிப்படையில் மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளன.
வியாழன் அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பிலடெல்பி தாழ்வாரத்தை ஒரு நிபந்தனையாக சேர்க்க வேண்டும் என்ற நெதன்யாகுவின் வற்புறுத்தலுக்கு கேலண்ட் தனது ஒரேயொரு எதிர்ப்பிற்காக பேசப்படுகிறார். காண்ட்ஸ் ஜூன் மாதம் அரசாங்கத்தை விட்டு வெளியேறினார்.
ஆனால் இது போர்க்குற்றவாளிகளுக்கிடையேயான மோதல்கள் ஆகும். கேலன்ட் மற்றும் காண்ட்ஸ் இருவருமே இஸ்ரேலின் இனப்படுகொலையில் மிக உயர்ந்த மட்டத்தில் விருப்பத்துடன் பங்கேற்றுள்ளனர் — நெதன்யாகுவுடன் சேர்ந்து கேலன்ட்டும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கைது ஆணைக்கு உள்ளாகியுள்ளார். அதே சியோனிச முன்னோக்கின் அடிப்படையில், அவர்களுடையது முற்றிலும் தந்திரோபாய உடன்பாடின்மையாகும். மேலும், லெபனான் மற்றும் ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் போர்த் திட்டங்களை மேம்படுத்தும் நோக்குடன், குறிப்பாக காசாவில் இஸ்ரேலிய படையினர்களை தேவையில்லாமல் வீழ்த்துவதன் மூலம் குழிபறிப்பதாக கேலண்ட் கருதுகிறார்.
இந்த புள்ளிவிபரங்களை அடிப்படையாகக் கொண்ட அரசாங்க-விரோத எதிர்க்கட்சியின் அரசியல் திவால்தன்மை திங்களன்று சுட்டிக்காட்டப்பட்டது. அப்போது போராட்டங்ககளின் அளவு குறைக்கப்பட்டு, வேலைநிறுத்தம் கடுமையாக மட்டுப்படுத்தப்பட்டது. பல ஆர்ப்பாட்டங்களும் வேலைநிறுத்தங்களும் நெத்தென்யாகுவிற்கு எதிரான போராட்டம் என்பதைவிட கொல்லப்பட்ட பிணைக் கைதிகளுக்கு ஒரு நாள் துக்கம் அனுசரிக்கும் தன்மையைக் கொண்டிருந்தன. ஹிஸ்டாட்ரூட் தொழிற்சங்கமானது, போராட்ட இயக்கத்தை கவனமாக நிர்வகித்தது, திட்டமிட்டபடி மாலை 6 மணிக்கு வேலைநிறுத்தத்தை விட, மதியம் 2:30 மணிக்கு வேலைநிறுத்தத்தை முடிக்கும் நீதிமன்ற உத்தரவுக்கு இணங்குவதன் மூலம் இது சுருக்கப்பட்டது.
இஸ்ரேலிய தொழிலாள வர்க்கம் பாலஸ்தீனிய மக்களுடன் ஐக்கியப்பட்டு, சியோனிச ஒடுக்குமுறையில் இருந்து அவர்களை விடுவிப்பதற்காக போராடும் அரசியல் போராட்டத்தின் ஒரு புதிய அச்சை ஏற்காவிட்டால், இஸ்ரேலிய ஆட்சி அதன் இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பு மற்றும் நிறவெறி கொள்கையை, நெதன்யாகுவின் கீழோ, கேலன்ட் அல்லது வேறு யாரின் கீழோ தொடரும்.
எப்பொழுதும் போலவே, அவரது தனிப்பட்ட அரசியல் நிலைப்பாட்டிற்கான அச்சுறுத்தலுக்கு நெதன்யாகுவின் உடனடி விடையிறுப்பானது, சாத்தியமான அளவுக்கு மிகவும் வலதுசாரி சூழலை உருவாக்கும் முயற்சியில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை அதிகப்படுத்துவதாகும். மேலும், அவரது பாசிச ஆதரவாளர்களுக்கு தைரியம் அளித்து, பிரத்யேகமாக அழைக்கப்பட்ட செய்தி மாநாட்டில், “நாங்கள் அழுத்தத்திற்கு அடிபணிய மாட்டோம்” என்று அவர் கூறினார்.
உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் உட்பட, தீவிரமடைந்து வரும் உலகளாவிய போரின் பாகமாக, காசா இனப்படுகொலையை ஆதரிக்கும் நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளின் முழு இராணுவ மற்றும் இராஜாங்க ஆதரவை அவர் பெற்றிருக்கிறார் என்பதால், நெதன்யாகு இதுபோன்றவொரு தண்டனையிலிருந்து விலக்கீட்டுரிமையுடன் அவரால் செயல்பட முடியும் என்பது அவருக்குத் தெரியும்.
இஸ்ரேலிய தொழிலாளர்கள் பெரும் அரசியல் கேள்விகளை எதிர்கொள்கின்றனர். இதற்கு சியோனிசத்துடன் முறித்துக் கொள்வதன் மூலம் மட்டுமே பதிலளிக்க முடியும். அவர்களின் ஆளும் வர்க்கத்தை எதிர்ப்பதன் மூலம், அவர்கள் காஸாவில் இனப்படுகொலை மற்றும் இஸ்ரேலிய அரசின் அடிப்படையை உருவாக்கும் இன-மத ஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டத்தினை மையத்தில் வைக்க வேண்டும்.
இஸ்ரேலிய அரசியலின் பெருகிய முறையில் கொலைவெறி மற்றும் சர்வாதிகார வளர்ச்சியுடன் பிரிக்க முடியாத வகையில் பின்னிப் பிணைந்துள்ள பாலஸ்தீனியர்களின் வரலாற்று துன்புறுத்தல் மற்றும் வெளியேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும், தற்போதைய பேரழிவிலிருந்து வெளியேறுவதற்குமான ஒரே வழி, மத்திய கிழக்கில் ஐக்கிய சோசலிச அரசுகளுக்காக, யூத மற்றும் அரபுத் தொழிலாளர்கள் உட்பட, சர்வதேச தொழிலாளி வர்க்கத்தின் கூட்டுப் போராட்டமாகும்.