மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
காஸா இனப்படுகொலை தொடங்கி ஓராண்டிற்குப் பின்னர், இஸ்ரேல், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன், காஸாவின் குடிமக்களை அழிப்பதையும் இனச்சுத்திகரிப்பு செய்வதையும் மட்டுமே மேலும் தீவிரப்படுத்தி வருகிறது.
அக்டோபர் 5 மற்றும் 7 க்கு இடையில், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) ஜபாலியா அகதிகள் முகாமுக்கு அருகே இஸ்ரேல் அதன் தாக்குதலைத் தொடர்ந்த நிலையில், வடக்கு காஸாவில் உள்ள பகுதிகளில் இருந்து நூறாயிரக்கணக்கான மக்களை கட்டாயமாக இடம்பெயரச் செய்ததாக அறிவித்தது.
“ஜபாலியா அழிக்கப்பட்டு வருகிறது” என்று சமூக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ள போதிலும், காஸாவின் மருத்துவ உள்கட்டமைப்பு கிட்டத்தட்ட முழுமையாக உருக்குலைந்து போயுள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.
“சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு முரணான வெகுஜன வெளியேற்ற உத்தரவுகளுடன் இணைந்த வடக்கு காஸாவில் நடத்தப்படும் தாக்குதல்கள், காஸாவின் பாலஸ்தீனிய குடியிருப்பாளர்களை கட்டாய இடப்பெயர்வுக்கும் கட்டாய இடமாற்றத்திற்கும் உள்ளாக்குவது குறித்து கடுமையான கவலைகளை எழுப்புகின்றன” என்று ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் திங்கள்கிழமை எச்சரித்தது.
வடக்கு காஸாவில் உள்ள கமால் அத்வான், இந்தோனேசிய மற்றும் அல்-அவ்தா மருத்துவமனைகளை 24 மணி நேரத்திற்குள் காலி செய்ய வேண்டும் என்று இஸ்ரேலிய படைகள் செவ்வாய்க்கிழமை கோரிக்கை விடுத்தன.
“இந்த பிராந்தியத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் சுகாதார அமைப்பை சிதைப்பதன் மூலம் வடக்கு காஸாவில் உள்ள எங்கள் மக்களை இடம்பெயர ஒரு புதிய திட்டம் உள்ளது என்பது தெளிவாகிறது” என்று கமால் அத்வான் மருத்துவமனையின் இயக்குனர் ஹுசாம் அபு சஃபியா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். “வடக்குப் பிராந்தியம் கணிசமான எண்ணிக்கையிலான குடியிருப்பாளர்களைக் கொண்ட அடர்த்தியான மக்கள்தொகை கொண்டது என்பதை நாங்கள் அனைவருக்கும் அறிவித்துள்ளோம். இந்த மக்களுக்கு தொடர்ந்து சேவைகளை வழங்க எங்களுக்கு உரிமை உண்டு. நாங்கள் உறுதியாக இருப்போம், நாங்கள் தங்குவோம், செலவைப் பொருட்படுத்தாமல் மருத்துவ சேவைகளை நாங்கள் தொடர்ந்து வழங்குவோம்.”
சிஎன்என் (CNN) உடனான ஒரு நேர்காணலில் அவர் மேலும் சேர்த்துக் கொண்டார், “நடந்து கொண்டிருப்பது என்னவென்றால், வடக்கு காஸாவில் வசிப்பவர்களை தன்னிச்சையாகவும் வெளிப்படையாகவும் இடம்பெயர்ச் செய்கின்றனர்.” அவர் தொடர்ந்தார், “கமால் அத்வான் மருத்துவமனை இன்னும் வடக்கில் செயல்படும் ஒரே மருத்துவமனையாகும், எனவே மருத்துவமனையை சேவையிலிருந்து நீக்குவது அதைத் தேவைப்படும் மக்களுக்கு ஒரு பெரும் பேரழிவாக இருக்கும். மருத்துவமனையில் இன்னும் பல நோயாளிகள் உள்ளனர், மேலும் பிறந்த குழந்தைகள் பிரிவில் பல சிசுக்களும் குழந்தைகளும் உள்ளனர், எனவே வெளியேறுவது கடினம்.”
ஐக்கிய நாடுகள் சபை அதன் தினசரி புதுப்பிப்பில், வடக்கு காஸாவில், “400,000 க்கும் அதிகமான மக்கள் தெற்கு நோக்கி அல் மவாசிக்கு செல்ல அழுத்தத்தின் கீழ் உள்ளனர், அங்கு ஏற்கனவே நெரிசல் நிறைந்துள்ளது மற்றும் அடிப்படை சேவைகள் இல்லை. மனிதாபிமான அணுகல், குறிப்பாக தெற்கு மற்றும் வடக்கு காஸாவுக்கு இடையில், மேலும் கட்டுப்படுத்தப்படும் அபாயம் உள்ளது, அதேபோல் வெளியேற்ற திட்டமிடப்பட்ட பகுதிகளுக்குள் முக்கிய மனிதாபிமான வசதிகளின் அணுகல் மற்றும் செயல்பாடு ஆகியவையும் உள்ளன” என்று தெரிவித்துள்ளது.
இந்த இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள் இடைவிடாத குண்டுவீச்சுக்கள், பீரங்கித் தாக்குதல்கள் மற்றும் இஸ்ரேலிய துருப்புக்களின் துப்பாக்கிச் சூடு ஆகியவற்றுடன் இணைந்து நடைபெறுகின்றன.
காஸா மக்களை வேண்டுமென்றே பட்டினி போடுவது மேலும் தீவிரமடைந்து வருகிறது. ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதியத்தின் (UNICEF) அறிக்கை, செப்டம்பரில் காஸாவிற்குள் நுழையும் உணவுப் பொருட்களின் அளவு 2023 மார்ச் மாதத்திற்குப் பிறகு மிகக் குறைவாக உள்ளதாகவும், காஸா முழுவதும் 6-23 மாத வயதுடைய குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு உணவு கிடைப்பதில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் கண்டறிந்துள்ளது.
அந்த அறிக்கையின்படி, “கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களில் வெறும் ஐந்து சதவீதத்தினர் மட்டுமே பால் பொருட்களை உட்கொண்டனர், ஆறு சதவீத குழந்தைகள் சிறிதளவு இறைச்சி சாப்பிட்டிருந்தனர், இந்த சதவீதங்கள் வடக்கு காஸாவில் முறையே ஒன்று மற்றும் மூன்று சதவீதமாகக் குறைந்தன.”
அல் ஜசீராவுக்கு அளித்த பேட்டியில், பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா.வின் முகமையின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் கிறிஸ் கன்னெஸ், காஸா மக்களை இஸ்ரேல் “படுகொலை” செய்வதாக குற்றம் சாட்டினார்.
“கடந்த ஆண்டில், காஸா உலகின் மிகப்பெரிய திறந்தவெளி சிறைச்சாலையிலிருந்து உலகின் மிகப்பெரிய வதை முகாமாக மாறியதை நாங்கள் கண்டோம்” என்று குன்னஸ் அல் ஜசீராவிடம் கூறினார்.
“இன்று, காஸா ஒரு தொழில்துறை அளவிலான இறைச்சிக் கூடமாக மாற்றப்பட்டுள்ளது. நான் ‘படுகொலை’ என்ற வார்த்தையை கவனமாகப் பயன்படுத்துகிறேன், ஏனென்றால் வெளிப்படையாக உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான இறைச்சிக் கூடங்களில் உள்ள விலங்குகள் காஸாவின் பெண்கள் மற்றும் குழந்தைகளை விட மனிதாபிமானத்துடன் கொல்லப்படுகின்றன.”
காஸா இனப்படுகொலை தொடங்கிய முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் பேசிய ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், “காஸாவில் உள்ள கொடுங்கனவு இப்போது ஒரு கொடூரமான, அருவருக்கத்தக்க இரண்டாவது ஆண்டில் நுழைகிறது” என்று கூறினார்.
அவர் மேலும் கூறினார், “41,000 க்கும் அதிகமானவர்கள் [பாலஸ்தீனியர்கள்] கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன, பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள். மேலும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர் மற்றும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக நம்பப்படுகிறது. ஏறத்தாழ ஒட்டுமொத்த மக்களும் இடம்பெயர்ந்துள்ளனர்—காஸாவின் எந்தப் பகுதியும் தப்பவில்லை.”
அவர் தொடர்ந்து கூறினார், “இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் தெளிவாக தீவிரப்படுத்தப்படுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். குடியிருப்பு பகுதிகள் தாக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகளை காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது - எரிபொருளோ வணிகப் பொருட்களோ உள்ளே அனுமதிக்கப்படவில்லை. சுமார் 4 லட்சம் மக்கள் மீண்டும் தெற்கு நோக்கி நகர நிர்ப்பந்திக்கப்படுகின்றனர், அங்கு ஏற்கனவே நெரிசலும், மாசுபாடும் நிறைந்துள்ளதுடன், உயிர்வாழ்வதற்கான அடிப்படை வசதிகளும் இல்லை.”
“காஸாவில் எந்த இடமும் பாதுகாப்பாக இல்லை, யாரும் பாதுகாப்பாக இல்லை” என்று அவர் முடித்தார்.
காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலானது மத்திய கிழக்கு முழுவதும் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலுடன் இணைந்து நடைபெறுகிறது. லெபனான், சிரியா மற்றும் யேமனில் தீவிர நடவடிக்கைகளுக்கு மத்தியில் அமெரிக்காவில் பைடென் நிர்வாகத்துடன் ஈரான் மீதான ஒரு நேரடி தாக்குதல் விவாதிக்கப்பட்டு வருகிறது.
லெபனான் மக்களுக்கு செவ்வாயன்று ஆற்றிய ஓர் உரையில், இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு அந்நாட்டை “காஸாவைப் போல” அழிக்கப் போவதாக மிரட்டினார்.
“லெபனான் ஒரு நீண்ட போரின் பாதாளத்தில் விழுவதற்கு முன் அதைக் காப்பாற்ற உங்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. அப்படி விழுந்தால், காஸாவில் நாம் காண்பது போல அழிவும் துன்பமும் ஏற்படும்” என்று நெதன்யாகு மிரட்டினார், மேலும் இஸ்ரேலுக்கு எதிரான அனைத்து எதிர்ப்பாளர்களும் சரணடைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
செவ்வாயன்று லெபனான் முழுவதும் இஸ்ரேலிய தாக்குதல்களில் 36 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 150 பேர் காயமடைந்தனர். செப்டம்பர் நடுப்பகுதியில் இருந்து லெபனானில் 1,473 பேர் இஸ்ரேலிய தாக்குதல்களால் கொல்லப்பட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை, சிரியாவின் டமாஸ்கஸிலும் இஸ்ரேல் ஒரு தாக்குதலை நடத்தியது, இதில் ஏழு பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 11 பேர் காயமடைந்தனர் என்று சிரிய அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.