மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
அமெரிக்க ஃப்ளோரிடாவின் பிக் பெண்ட் பிராந்தியத்தில் சூறாவளி ஹெலேன் கரையைக் கடந்து இரண்டு வாரங்கள் கூட ஆகவில்லை, இப்போது சூறாவளி மில்டன் (Hurricane Milton) டாம்பா விரிகுடாவை நோக்கி மிகவும் வேகமாக வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஏற்பட்டுள்ள பெரும் சமூகப் பேரழிவுடன் இன்னொரு, சாத்தியமான மிகப்பெரிய பேரழிவையும் சேர்த்துக் கொண்டிருக்கிறது.
ஹெலேன் சூறாவளியால் ஏற்பட்ட உத்தியோகபூர்வ உயிரிழப்பு மதிப்பீடுகள் 243 வரை உயர்ந்துள்ளன. வட கரோலினா மற்றும் டென்னசியில் குறைந்தது 285 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர். 2005 ஆம் ஆண்டில் கத்ரீனா சூறாவளி தாக்கிய பின் அமெரிக்க நிலப்பரப்பில் ஏற்பட்ட மிகக் கொடிய சூறாவளியாக இது அமைந்துள்ளது. மூடீஸ் அனலிட்டிக்ஸ் (Moody’s Analytics) நிறுவனத்தின் தற்போதைய மதிப்பீடுகளின்படி, சேதம் 34 பில்லியன் டாலர்கள் வரை எட்டலாம். அக்குவெதர் (AccuWeather) நிறுவனமானது ஹெலேன் சூறாவளியால் ஏற்பட்ட மொத்தப் பொருளாதார இழப்பு 250 பில்லியன் டாலர்கள் வரை எட்டலாம் என கணித்துள்ளது. வட கரோலினாவிலுள்ள 90,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் இன்னும் மின்சாரமின்றி உள்ளனர்.
தற்போது வினாடிக்கு 155 மைல் (250 கிமீ) வேகத்தில் நீடித்த காற்று வீசும் 4வது வகை அளவுப் புயலாக உள்ள மில்டனானது, 3.3 மில்லியன் மக்கள்தொகை கொண்ட டாம்பா பெருநகரப் பகுதியை நோக்கி நேரடியாகச் செல்கிறது. இது கூட இந்த அளவைக் தாண்டக்கூடும். இது ஏற்கனவே மெக்சிகோவின் யுகதான் தீபகற்பத்தின் வடக்குக் கடற்கரையை அழித்துள்ளது. அங்கு “சூறாவளி வேகக் காற்றுகளும், உயிருக்கு ஆபத்தான புயல் அலைகளும் அழிவுகரமான அலைகளும்” ஏற்பட்டதாக தேசிய சூறாவளி மையம் (NHC) தெரிவித்துள்ளது. இது அப்பகுதி முழுவதும் பெரும் வெள்ளப்பெருக்கையும் ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்படுவதையும் ஏற்படுத்தியுள்ளது.
2017ல் இர்மா சூறாவளி தாக்கிய பின்னர் மிகப்பெரிய அளவில், டாம்பா விரிகுடா மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மதிப்பிடப்பட்ட ஒரு மில்லியன் மக்களை வெளியேற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. மில்டன் தாக்குவதற்கு முன்பே, இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மக்களை வெளியேற்றுவதற்கான உள்கட்டமைப்போ ஒருங்கிணைந்த திட்டங்களோ இல்லாததால் ஒரு சமூகப் பேரழிவு ஏற்பட்டுள்ளது. பல பத்தாயிரக்கணக்கானோர் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். கூடுதல் தண்ணீர், உணவு மற்றும் எரிபொருள் கிடைப்பது அரிதாகவோ இல்லாமலோ உள்ளது.
இந்த நிலைமையின் ஆபத்தை டாம்பா மேயர் ஜேன் காஸ்டர், CNN னுக்கு அளித்த பேட்டியில் சுருக்கமாகக் கூறினார்: அதாவது “வெளியேற்றப் பகுதிகளில் ஒன்றில் தங்க நீங்கள் தேர்வு செய்தால், நீங்கள் இறக்க நேரிடும்.” புதன்கிழமை புயல் கரையைக் கடக்கும்போது “அழிவுகரமான சூறாவளி வேகக் காற்றுகள்” வீசும் என்றும் இது “மிகவும் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை” என்றும் தேசிய சூறாவளி மையம் (NHC) எச்சரித்துள்ளது.
ஜனாதிபதி ஜோ பைடெனும் இதே போன்ற எச்சரிக்கையை விடுத்தார். உக்ரேனில் அமெரிக்க-நேட்டோ போரை ஊக்குவிக்க ஜேர்மனி மற்றும் அங்கோலாவுக்குச் செல்லவிருந்த பயணத்தை இரத்து செய்த அவர், குடியிருப்பாளர்களை “இப்போதே வெளியேறுங்கள்” என்றும் சூறாவளியின் பாதையிலிருந்து வெளியேறுவது “வாழ்வா சாவா என்ற பிரச்சினை” என்றும் கூறினார்.
ஆயினும், பேருந்து, புகையிரதம் மற்றும் விமானம் மூலம் ஒருங்கிணைந்த பெரும் வெளியேற்றத்திற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. சேவைகளையும் விமானங்களையும் இரத்து செய்வதற்குப் பதிலாக, ஒவ்வொரு அம்ட்ராக் பயணிகள் இரயிலையும் பல பத்தாயிரக்கணக்கானோரை வெளியேற்றப் பயன்படுத்தியிருக்கலாம். அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு விமான நிறுவனத்தின் விமானங்களையும் ஒருவழிப் பயணங்களுக்காக எடுத்துக் கொண்டிருக்கலாம். ஒவ்வொரு நகரத்தின் பேருந்துகள், பள்ளிப் பேருந்துகள், கிரேஹவுண்ட் மற்றும் பிற வணிக பேருந்துகளையும் பயன்படுத்தி மேலும் பத்தாயிரக்கணக்கானோரை அல்லது அதற்கும் மேற்பட்டோரை வெளியேற்றியிருக்கலாம்.
அதற்குப் பதிலாக, 100 ஆண்டுகளுக்கும் மேலாக டாம்பாவைத் தாக்கிய மிக மோசமான புயல் என அழைக்கப்படும் இந்த நிலையில், தனிநபர்களும் குடும்பங்களும் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
சூறாவளி மில்டன் மெக்சிகோ வளைகுடாவில் உருவாகி, அக்டோபர் 5 அன்று கம்பேச் விரிகுடாவில் வெப்பமண்டலப் புயலாக உருவானது. அக்டோபர் 6 அன்று இது சூறாவளியாக மாறி, மெக்சிகோ வளைகுடாவில் நிலவிய மிக வெப்பமான நீரின் காரணமாக மிக வேகமாக தீவிரமடைந்து, ஒரு நாள் கழித்து உச்ச தீவிரத்தை எட்டிய 5 வது வகை அளவுப் புயலாக மாறியது. இதுவரை பதிவு செய்யப்பட்ட மூன்றாவது வேகமான தீவிரமடைதலாக இருக்கிறது. தற்போது இது பதிவு செய்யப்பட்டதில் ஐந்தாவது மிகத் தீவிரமான அட்லாண்டிக் சூறாவளியாக உள்ளது.
இதன் விளைவாக, டாம்பா விரிகுடாவைச் சுற்றி 15 அடி வரை புயல் அலைகள் எழக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். மணிக்கு 139 மைல்களுக்கும் அதிகமான வேகத்தில் தொடர்ந்து காற்று வீசக்கூடும் என்பதால் தேசிய சூறாவளி மையம் (NHC) சூறாவளி எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.
மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில், இரண்டு மாடி உயரமுள்ள வீடுகள் மூழ்கிவிடும், அதே வேளையில் கடும் காற்று மற்ற அனைத்தையும் சுற்றி வீசும். ஹெலேன் சூறாவளி விட்டுச் சென்ற, முழுமையாக அகற்றப்படாத இடிபாடுகள் இந்த ஆபத்தை மேலும் அதிகரிக்கின்றன.
சூறாவளி மில்டனின் வேகமான தீவிரமடைதலும் தொடர்ச்சியான வலிமையும் முதலாளித்துவம் தூண்டிய காலநிலை மாற்றத்தின் நேரடி விளைவாகும். பல தசாப்தங்களாக முன்னறிவிக்கப்பட்டபடி, எவ்வளவு அதிக புதை படிவ எரிபொருள்கள் எரிக்கப்படுகின்றனவோ, அதன் விளைவாக பூமியின் காற்று மற்றும் கடல் வெப்பநிலைகள் அதிகரிக்கின்றன. இதன் பல விளைவுகளில் ஒன்று, மிகவும் சக்திவாய்ந்த மற்றும் அழிவுகரமான வெப்பமண்டலப் புயல்களும் சூறாவளிகளும் தோன்றுவதாகும்.
காலநிலை ஆராய்ச்சி விஞ்ஞானிகளின் பல தசாப்தகால முன்னறிவிப்புகளும், மேலும் மோசமடையும் என்ற எச்சரிக்கைகளும் இருந்தபோதிலும், ஜனநாயகக் கட்சியினரோ, குடியரசுக் கட்சியினரோ சூறாவளிகளால் ஏற்படும் ஆபத்தை குறைக்கவோ, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் எந்த வகையான தீவிர வானிலையையும் சமாளிக்கவோ எந்த தீவிரமான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.
மாறாக, துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், செப்டம்பரில் டிரம்ப்புடனான விவாதத்தின்போது தாம் எவ்வாறு பாறை உடைப்பு முறையை (ஃப்ராக்கிங்) ஊக்குவித்தார் என்பதைப் பெருமையுடன் பேசினார். மேலும், “வெளிநாட்டு எண்ணெயை மிகையாக நம்பி இருக்க முடியாது என்பதை உணரும் அணுகுமுறையின் காரணமாக, வரலாற்றிலேயே உள்நாட்டு எண்ணெய் உற்பத்தியில் மிகப்பெரிய அதிகரிப்புக்கு” பைடென்-ஹாரிஸ் நிர்வாகம் பொறுப்பு என்றும் கூறினார்.
ஒருபுறம் ஹாரிஸ் மற்றும் பைடெனுக்கும், மறுபுறம் டிரம்ப் மற்றும் ஃப்ளோரிடா ஆளுநர் ரான் டிசாண்டிஸுக்கும் (இருவரும் தீவிர காலநிலை மாற்ற மறுப்பாளர்கள்) இடையே எந்த தந்திரோபாய மோதல்கள் இருந்தாலும், அமெரிக்க முதலாளித்துவ வர்க்கத்தின் உண்மையான நோக்கம் போர்தான். மத்திய கிழக்கில் நடந்த ஒவ்வொரு போரும் சீனாவுக்கு எதிரான போருக்குத் தயாராவதற்காக அப்பிராந்தியத்தின் பெரும் எண்ணெய் இருப்புகளைக் கட்டுப்படுத்துவதைப் பற்றியதாகும். உக்ரேன் போர் ஓரளவு ரஷ்யாவால் உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக அமெரிக்காவால் உற்பத்தி செய்யப்படும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை நம்பும்படி ஐரோப்பாவை நிர்ப்பந்திக்க தொடங்கப்பட்டது. இதன் விளைவாக பூமி எரிக்கப்பட்டு நஞ்சாக்கப்பட்டாலும் அப்படியே இருக்கட்டும் என்பதாகும்.
பயோசயின்ஸ் (BioScience) இதழில் வெளியான சமீபத்திய அறிக்கை, வளிமண்டலத்தில் புதை படிவ எரிபொருள் செறிவுகள், குறிப்பாக கார்பன் டை ஆக்சைடு மற்றும் மீத்தேன், சாதனை அளவில் உள்ளதாகக் குறிப்பிடுகிறது. CO₂ ஐ விட 80 மடங்கு ஆற்றல் வாய்ந்த மீத்தேனின் வளர்ச்சி விகிதம், விரிவடையும் சுரங்கம், துளையிடல், குப்பைக் கிடங்குகள் மற்றும் கட்டுப்பாடற்ற விவசாயம் காரணமாக குறிப்பாக வேகமாக உயர்ந்துள்ளது.
“பூமியில் ஆபத்தான நேரங்கள்” என்ற தலைப்பிலான இந்த அறிக்கையானது, “நாம் மாற்ற முடியாத காலநிலை பேரழிவின் விளிம்பில் இருக்கிறோம்” என எச்சரிக்கிறது. “ஜூலை 2024 இல் இதுவரை பதிவான மூன்று மிக வெப்பமான நாட்கள் ஏற்பட்டன” என்ற சமீபத்திய புள்ளிவிவரங்களையும், சராசரி உலக வெப்பநிலை 1.5°C (2.7°F) அதிகரிப்பைத் தவிர்க்க முடியும் என்று 6 சதவீத காலநிலை விஞ்ஞானிகள் மட்டுமே நம்புகின்றனர் என்பதையும் இது குறிப்பிடுகிறது. பெரும்பாலானோர் குறைந்தது 2.5°C (4.5°F) உயர்வைக் கணிக்கின்றனர், கிட்டத்தட்ட பாதிப் பேர் 3°C (5.4°F) க்கும் அதிகமான உயர்வை மதிப்பிட்டுள்ளனர்.
ஒவ்வொரு சூழ்நிலையும் அடுத்ததை விட மாபெரும் பேரழிவை ஏற்படுத்தக்கூடியது, தற்போது நிகழும் சூறாவளி மில்டனும் ஒரு முன்னோடி மட்டுமே ஆகும். தொடர்ந்து நிகழும், மேலும் தீவிரமான வானிலையுடன், “பரவலான பஞ்சங்கள், மோதல்கள், பெருமளவிலான இடம்பெயர்வு... மனித குலத்திற்கும் உயிர்க்கோளத்திற்கும் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும்” என்ற கணிப்புகளும் உள்ளன.
முக்கியமாக, காலநிலை மாற்றமானது ஒரு அடிப்படையான சமூக நெருக்கடியின் ஒரு பகுதி என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. “உலக வெப்பமயமாதல், அது பேரழிவை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தாலும், சுற்றுச்சூழல் சீரழிவு, அதிகரிக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வு மற்றும் உயிரினப் பன்முகத்தன்மை இழப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஆழமான பன்முக நெருக்கடியின் வெறும் ஒரு அம்சம் மட்டுமே ஆகும்.” தீர்வானது “சமூகத்தின் அனைத்து அம்சங்களிலும் அறிவியல் அடிப்படையிலான மாற்றியமைக்கும் தீர்வுகள் மூலம்” என்று அவர்கள் மேலும் கூறுகின்றனர்.
எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ கிஷோர் பின்வருமாறு எழுதினார்:
“காலநிலை மாற்றமானது அடிப்படையில் ஒரு வர்க்கப் பிரச்சினை ஆகும். பூமியின் அழிவுக்கு ‘மனிதகுலம்’ பொறுப்பல்ல, முதலாளித்துவ அமைப்புமுறையே பொறுப்பாக இருக்கிறது. சமத்துவமின்மை, சுரண்டல் மற்றும் போரை உருவாக்கும் இதே அமைப்புமுறைதான் உலகைச் சுற்றுச்சூழல் பேரழிவை நோக்கி வேகமாக இழுத்துச் செல்கிறது.
காலநிலை மாற்றத்திற்கான தீர்வானது முதலாளித்துவ அமைப்புமுறையை ஒழிப்பதும், மனித தேவைக்கான அறிவியல் மற்றும் தர்க்கரீதியான திட்டமிடல் முன்னுரிமை பெறும் ஒரு சமூகத்தை - சோசலிசத்தை - நிறுவுவதுமாகும். பூமியின் காலநிலை மற்றும் மனித சமூகம், குறிப்பாக முதலாளித்துவ வளர்ச்சியின் விதிகள் பற்றிய அறிவியல் புரிதல் உருவாக்கப்பட வேண்டும்.
ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்களிடம் வேண்டுகோள் விடுப்பதன் மூலம் ஒருபோதும் தீர்வு கிடைக்காது. அமெரிக்க ஆளும் உயரடுக்கு முதலாளித்துவத்திற்கு சேவை செய்கிறது, இதுவே போர், பாசிசம், சமூக சமத்துவமின்மை மற்றும் துரிதப்படுத்தப்படும் சுற்றுச்சூழல் நெருக்கடி ஆகியவற்றின் மூல காரணமாகும். முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு புறநிலையில் எதிராக உள்ள சர்வதேச தொழிலாள வர்க்கமே அதன் முடிவை ஏற்படுத்தக்கூடிய ஒரே சமூக சக்தியாகும்.