மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
காஸா மனிதாபிமான அறக்கட்டளையின் (GHF) அனுசரணையில் இஸ்ரேல் உணவு விநியோகத்தை தொடங்கிய ஒரு வாரத்தில், இஸ்ரேலிய படைகள் உதவி விநியோகங்களை கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கொலைக்களங்களாக மாற்றி வருகின்றன.
யூரோ-மெட் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு கடந்த செவ்வாயன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், கடந்த வாரத்தில், உணவு விநியோக மையங்களில் இருந்த மக்கள் கூட்டம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 600 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்க-இஸ்ரேலிய “உதவி” நடவடிக்கை தொடங்கப்படுவதற்கு முன்னர், ஐ.நா உட்பட மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் குழுக்கள், இந்தத் திட்டம் வெறுமனே காஸாவில் எஞ்சியிருக்கும் மக்களை தெற்குப் பகுதிக்கு இழுப்பதற்கான ஒரு வழிமுறையாக இருக்கின்றது என்றும், அங்கு அவர்கள் காஸா மக்களை வெளியேற்றுவதன் மூலமாக இனரீதியில் சுத்திகரிப்பு செய்வதற்கான அமெரிக்க-இஸ்ரேலிய திட்டத்திற்கான தயாரிப்பில் சித்திரவதை முகாம்களில் சிக்கிக் கொள்ளக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்தன.
இந்த “உதவி” மையங்களின் நோக்கமானது இன்னும் கொடூரமானது என்பது பின்னர் வெளிப்பட்டுள்ளது: இவை உதவி தேடுபவர்களை கண்மூடித்தனமாக படுகொலை செய்வதற்கு மட்டுமல்லாமல், மக்கள் கூட்டத்தின் உறுப்பினர்களை குறிவைத்து படுகொலை செய்வது போன்றவற்றுக்கும் இவை ஒரு தொடக்கப் புள்ளியாக செயல்படுகின்றன. இந்த “உதவி” மையங்கள், மனிதாபிமான உயிர்நாடியாக இருப்பதற்குப் பதிலாக, இவை உண்மையான கொலைக் களங்களாகவே இருந்து வருகின்றன.
செவ்வாயன்று இஸ்ரேலியப் படைகள் ரபாவில் உதவி வழங்கும் இடத்திற்கு அருகே மற்றொரு படுகொலையை நடத்தின. இதில் 27 பேர் கொல்லப்பட்டனர், 90 பேர் படுகாயமுற்றனர். திங்களன்று, கிட்டத்தட்ட அதே சூழ்நிலையில் 3 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டசின் கணக்கானவர்கள் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து கடந்த ஞாயிறன்று 30 பேர் கொல்லப்பட்டு, 170 பேர் காயமடைந்த இன்னொரு படுகொலை சம்பவம் இடம்பெற்றது.
யூரோ-மெட் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் அறிக்கையில், “யூரோ-மெட் கண்காணிப்பு நிறுவனத்தின் கள ஆராய்ச்சியாளர்களால் சேகரிக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் தகவல்களின்படி, இஸ்ரேலிய இராணுவ துப்பாக்கி சுடும் சிப்பாய்கள் வேண்டுமென்றே பசியால் வாடும் பொதுமக்களை குறிவைத்து நேரடி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இஸ்ரேலிய படைகளுக்கு வெளிப்படையான அச்சுறுத்தல் இல்லை என்றாலும், பெரும்பாலும் பொதுமக்களின் தலைகளை அவர்கள் குறிவைக்கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த தாக்குதலில் இருந்து உயிர்தப்பிய ஒருவர் கண்காணிப்பாளரிடம் “இன்று அதிகாலை 3:50 மணியளவில், ஒரு இஸ்ரேலிய குவாட்காப்டர் ட்ரோன் பறந்து வந்து பொதுமக்கள் கூட்டத்தை புகைப்படம் எடுத்தது. பின்னர் இராணுவம் அந்தப் பகுதியில் ஒரு கிரேன் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. தலையில் சூடுபட்ட மூன்று பேரை நானே தூக்கிச் சென்றேன். பெரும்பாலானவர்களுக்கு காயங்கள் தலையில் இருந்தன. மக்கள் தங்கள் பசியைத் தணிக்க உணவைத் தேடி இங்கு வந்தனர், ஆனால் அவர்கள் இறந்தோ அல்லது காயமடைந்தோ திரும்பிச் சென்றனர்” என்று கூறினார்,
மற்றொரு சாட்சியத்தில், 38 வயதான ஏ.பி. என்பவர் யூரோ-மெட் மானிட்டர் குழுவிடம் “காலை 5:45 மணியளவில், நாங்கள் உணவு மையத்திற்குள் நுழைந்தோம், எனக்கு ஒரு உதவிப் பொதி கிடைத்தது. நான் வெளியே செல்லும் வழியில், 40 வயதுடைய ஒரு பெண்ணைச் சந்தித்தேன், அவர் தன்னால் தொடர்ந்து முன்னேற முடியவில்லை என்றும், அவளும் அவளுடைய குழந்தைகளும் பசி மற்றும் வறுமையால் அவதிப்படுவதாகவும் கூறினார். நான் அவளுக்கு எனது பொதியைக் கொடுத்துவிட்டு, இன்னொன்றைப் பெறும் முயற்சியில் திரும்பி வந்தேன். ஆனால் எதுவும் மிச்சமில்லை. தலைக்கு மேலே ஒரு குவாட்காப்டர் பறந்து, ‘விலங்குகளே, விலகிச் செல்லுங்கள், விநியோகம் தீர்ந்துவிட்டது’ என்று அவமதிக்கும் வகையில் அறிவிப்புக்களை ஒலிபரப்பியது” என்று கூறினார்.
மேலும் அவர், “நான் அங்கிருந்து வெளியேறும் வழியை நெருங்கியபோது, ஒரு குழந்தை சத்தமாக ‘அம்மா, எழுந்திரு, அம்மா, எழுந்திரு’ என்று அழுவதைக் கண்டேன். அருகில் சென்று பார்த்தபோது நான் கொடுத்த பொட்டலம் ரத்த வெள்ளத்தில் கிடந்தது. அந்தப் பெண் இறந்துவிட்டாள். நானும் ஒரு இளைஞர் குழுவும் அவளை வெளியே தூக்கிச் சென்று ஆம்புலன்ஸில் ஏற்றினோம். அவரது மகனுடன் மருத்துவமனைக்கு சென்றேன். வழியில், கடற்கரை சாலையில், ஏழு உடல்கள் சாலையின் ஓரத்தில் கிடப்பதைக் கண்டேன்”. என்று அவர் கூறினார்.
உணவைப் பெறுவதுக்கு முயற்சிக்கும் உதவி கோருபவர்கள் முக அங்கீகார ஸ்கேன்களுக்கு உட்படுத்தப்படுவதற்கு முன்பு நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். யூரோ-மெட் அமைப்பினர் வழங்கிய சாட்சியம், நடந்து கொண்டிருக்கும் படுகொலைகள் தற்செயலான கொலை வெறியாட்டங்கள் அல்ல, மாறாக உதவி விநியோக மையங்களில் இலக்கு வைத்து, படுகொலைகளை மேற்கொள்வதிற்கு முக அடையாளம் காணும் ஸ்கேன்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதைக் குறிக்கலாம்.
கடந்த புதன்கிழமை, காஸாவில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் முன்வைத்த தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி நிராகரித்தது. அமெரிக்கா இவ்வாறு ஐந்தாவது முறையாக செய்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த பாதுகாப்பு கவுன்சிலின் இதர பதினான்கு உறுப்பினர்களும், காஸாவில் மனிதாபிமான நிலைமை பேரழிவு தரக்கூடியது என்றும், உணவு உதவி மீதான கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தனர்.
“இஸ்ரேல் தன்னைத் தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு, அதில் ஹமாஸைத் தோற்கடிப்பதும், அவர்கள் மீண்டும் ஒருபோதும் இஸ்ரேலை அச்சுறுத்தும் நிலையில் இல்லை என்பதை உறுதி செய்வதும் அடங்கும்” என்று அமெரிக்க தூதர் டோரதி ஷீட்டோ கூறினார். “இந்த விஷயத்தில், எங்கள் நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேலின் பாதுகாப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எந்தவொரு தயாரிப்பும் ஒரு தொடக்கமாக இருக்காது” என்று அவர் குறிப்பிட்டார்.
“ஹமாஸால் திசைதிருப்பப்படாமல் பாதுகாப்பாக உதவிகளை வழங்க காஸா மனிதாபிமான அறக்கட்டளைக்கு உதவ ஐ.நா மற்றும் அரசு சாரா நிறுவனங்களை நாங்கள் வலியுறுத்துகிறோம்” என்று கூறி, ஷீட்டோ காஸா மனிதாபிமான அறக்கட்டளையை வெளிப்படையாக ஆதரித்தார். GHF உதவி மையங்களால் செய்யப்படும் படுகொலைகளுக்கு வெளிப்படையாக ஆதரவளிக்கும் நிலைப்பாட்டில், “மனிதநேயம், நடுநிலைமை, பாரபட்சமின்மை மற்றும் சுதந்திரம் ஆகிய மனிதாபிமானக் கொள்கைகளுக்கு இணங்க” அறக்கட்டளை உதவி வழங்குவதாக அவர் கூறினார்.
பைடென் நிர்வாகத்தின் கீழ், அமெரிக்கா இதேபோன்ற வார்த்தைகளைக் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை, அடிப்படையில் அதே நியாயப்படுத்தலைப் பயன்படுத்தி வீட்டோ செய்தது.
ஐ.நா.வுக்கான பாலஸ்தீன பிரதிநிதி ரியாத் மொன்சூர் பாதுகாப்பு கவுன்சிலில் கூறுகையில், “ஒரு மில்லியன் குழந்தைகள் உட்பட 2 மில்லியன் ஒட்டுமொத்த அப்பாவி மக்களையும் பஞ்சத்தின் விளிம்பிற்கு கொண்டு வந்து, பின்னர் அவர்களை வெளியேற்றுவதற்கும், காஸாவை இணைப்பதற்கும் தெளிவாக வசதியளிக்கும் வகையில், அவர்களை கவர்ந்திழுக்கவும் மற்றும் காஸா பகுதியின் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்குள் அடைத்து வைக்கவும் இந்த உதவிகளைப் பயன்படுத்துகிறது” என்று குறிப்பிட்டார்.
கடந்த வாரம், ஐ.நா.வின் மனிதாபிமான அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜென்ஸ் லார்கே செய்தியாளர்களிடம் கூறுகையில், “மக்கள்தொகையில் நூறு சதவீதம் பேர் பஞ்சத்தின் அபாயத்தில் உள்ளனர்” என்றும், காஸா “பூமியில் மிகவும் பசியின் கொடுமையான இடம்” என்றும் கூறினார்.
காஸாவிற்கான மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் தொடர்ந்து தடைசெய்வது, “இன்றைய உலகில் மட்டுமல்ல, சமீபத்திய வரலாற்றிலும், மக்களுக்கு உணவளிக்கும் ஐ.நா.வின் முயற்சிகளை மிகவும் தடைபட்ட உதவி நடவடிக்கைகளில் ஒன்றாக ஆக்கியுள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.
கடந்த புதன்கிழமை, யுனிசெஃப் செய்தித் தொடர்பாளர் ஜேம்ஸ் எல்டர் ஒரு அறிக்கையில், காஸாவில் ஊட்டச்சத்து குறைபாட்டின் அளவைக் கண்டு “அதிர்ச்சியடைந்தேன்” என்று கூறினார். “பதின்ம வயதுடைய சிறுவர்கள் கண்ணீருடன் தங்கள் விலா எலும்புகளைக் காட்டுவதை நான் காண்கிறேன்” என்று கூறினார்.
இஸ்ரேல் தினசரி உதவி கோருபவர்களை படுகொலை செய்வதை அவர் கண்டனம் செய்தார். மேலும், “அங்கு ஒரு படுகொலை நடக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள், ஆனால் உங்கள் குடும்பத்திற்கு உணவளிக்க மிகவும் அவநம்பிக்கையுடன் நீங்கள் இன்னும் அங்கு செல்கிறீர்கள்” என்று குறிப்பிட்டார்.
கடந்த 24 மணி நேரத்தில் 95 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 440 பேர் காயமடைந்துள்ளதாகவும் காஸாவின் சுகாதார அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. அக்டோபர் 7, 2023 முதல் அதன் அதிகாரப்பூர்வ காஸா இறப்பு எண்ணிக்கை 54,607 ஆக உயர்ந்துள்ளது, 125,341 பேர் காயமடைந்துள்ளனர்.
