World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்

Discovery of nine new planets extends possibility of finding extra terrestrial life

9 புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டமை பூமிக்கு வெளியில் வாழும் உயிரினங்களை கண்டுபிடிப்பதைச் சாத்தியமாக்கியுள்ளது

By Frank Gaglioti
18 August 2000

Back to screen version

ஆகஸ்ட் 7ம் திகதி மூன்று விஞ்ஞானிகள் குழுவினர் எமது சூரிய குடும்ப அமைப்பிற்கு வெளியே ஒன்பது புதிய கோள்களைக் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளனர். இதன் மூலம் சூரிய குடும்பத்திற்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட கோள்களின் எண்ணிக்கை ஐம்பதாக அதிகரித்துள்ளது. பேர்க்ளியில் உள்ள கலிபோர்ணியா பல்கலைக்கழகத்தின் வானவியலாளர் (Astronomer) ஜெப்றி மார்ச்சி குறிப்பிட்டதாவது: "நாம் இப்போது கோள்களை பற்றி ஆய்வு செய்யக் கூடியதையும், அதன் பெறுபேறுகளை எழுதும் வேகத்தைவிட கோள்களை வேகமாக கண்டுபிடிக்கும் நிலையிலும் உள்ளோம்" எனவும் தெரிவித்துள்ளார். ஆங்கில நகரமான (English city) மான்ஞ்செஸ்டரில் இடம் பெற்ற அனைத்துலக வானவியல் சங்கக் கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

விஞ்ஞானிகள் கோள்களை நேரடியாகத் அவதானிக்கமுடியாது. கோள்களின் சுற்றுப்பாதையில் இருந்து வரும் நட்சத்திரங்களின் பிரமாண்டமான வெளிச்சமே இதற்கு காரணம். நட்சத்திரங்களின் சுற்றுப்பாதையில் உள்ள கோள்களின் அங்குமிங்குமாக அசையும் [Wobble] ஈர்ப்பு விசையின் நுட்பமான தாக்கங்களைக் கண்டுபிடிப்பதன் மூலம் அவை இருப்பதற்கான சாட்சியங்களை அவர்கள் காண்கின்றார்கள். வானவியலாளர்கள் இதைக்கொண்டு கோள்களின் சுற்றுப்பாதையையும் பரிமாணத்தையும் நிர்ணயம் செய்கின்றார்கள். இந்ததொழில் நுட்பம் இதுவரை காலமும் வியாழன் [ஜூப்பிட்டர்- Jupiter] போன்ற அளவிலான பருமனைக் கொண்ட மிகப்பெரிய வாயுமண்டலங்களுக்கு பிரயோகிக்கப்பட்டு கண்டு பிடிக்கப்பட்டன. மார்சி கூறியதாவது: "கோள்கள் நட்சத்திரங்களின் ஒளிப் பிரகாசத்தில் நழுவி விடுகின்றன. ஆதலால் நாம் ஒரு வேறுபட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றோம். நட்சத்திரம் மீது கோள்களில் இருந்து வரும் ஈர்ப்பு விசை காரணமாக விண்வெளியில் ஒரு நட்சத்திரம் அங்குமிங்கும் அசைவதை நாம் அவதானிக்கின்றோம். அதில் இருந்து நாம் கோள்களின் சுற்றுப்பாதையையும் அவற்றின் பரிமாண அளவையும் ஊகித்துக்கொள்ள முடியும்.

சில்லியில் உள்ள லா சில்லா [La Silla] தென்ஐரோப்பிய வானவியல் ஆரய்ச்சி நிலையத்தை பயன்படுத்தி ஜெனீவாவிலும் சுவீட்சலாந்திலும் உள்ள வானவியலாளர்கள் ஆறு கோள்களை இனங்கண்டனர். சுவீட்சலாந்து குழு, HD 168747 எனப்படும் நட்சத்திரத்தை வலம்வரும் சனி கிரகத்தை (Saturn) விட, சிறியதொரு கோளை பூமியில் இருந்து 140 'light years' (Light year- ஒரு வருடத்தில் ஒளி பயணம் செய்யும் தூரம்) தூரத்தில் கண்டுபிடித்தது. இதுவரை காலத்துள் கண்டுபிடிக்கப்பட்ட சிறிய கோள் இதுவேயாகும். சனியைக்காட்டிலும் சற்று பெரிதான இரண்டு கோள்கள், செயில் (Sail) நட்சத்திரக் கூட்டத்திலும் குறோஸ் (Cross) நட்சத்திரக் கூட்டத்திலும் நட்சத்திரங்களை சுற்றி வலம் வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வியாழனை விட பெரிய மூன்று கோள்கள் ஏனைய நட்சத்திரங்களை சுற்றிவருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மூன்று நட்சத்திரங்களும் பார்க்கிளியில் உள்ள கலிபோர்ணியா பல்கலைக்கழகத்தையும் ஒஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக் கழகத்தையும் சேர்ந்த வானவியலாளர்களால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. பேர்க்கிளி குழுவினர் இரண்டாவது கோள் மண்டல முறையை கண்டு பிடித்துள்ளனர். இதற்கு முன்னர் அப்சிலோன் அண்ட்ரோமிடே (UpsilonAndromidae) நட்சத்திரம் மட்டுமே ஒரு கோள் மண்டலமாக அறியப்பட்டது. ஆரம்ப அறிகுறிகளின்படி அந்த அமைப்புக்கள் சார்பு ரீதியில் பொதுவானவை. கோள்களைக் கொண்டுள்ளதாக தெரிய வந்த பன்னிரண்டு நட்சத்திரங்களைப் பற்றிய ஆய்வினை ஒரு குழுவினர் நடாத்தினர். அவர்கள் அவற்றில் ஐந்தை மற்றொரு கோள் சுற்றி வலம்வருவதைக் கண்டுள்ளனர். பேர்க்கிளி வானவியலாளரான டிப்ரா பிஷ்சர் தெரிவித்தாவது: "ஒரு தெரிந்தகோளுடன் இவ்வளவு ஒரு அதிக வீதத்திலான நட்சத்திரங்களை எவரும் அவதானித்தது இதுவே முதற்தடவையாகும். இது ஒரு இரண்டாவது கூட்டினை கொண்டிருப்பதற்கான சாட்சியங்களை காட்டுகின்றது" என்றுள்ளார்.

டெக்சாஸ் பல்கலைக்கழக குழுவானது பூமியில் இருந்து சுமார் 10.5 'light years' -ஒளி வருடங்கள் தூரத்தில் வியாழனுக்கு சமமான பருமனிலான ஒரு கோளைக் கண்டுபிடித்துள்ளனர். சூரியனை பெரிதும் ஒத்த இந்த நட்சத்திரம் எப்சிலோன்எரிடானி (Epsilon Eridani) என்ற நட்சத்திரத்தை சுற்றி வலம் வருகின்றது. இந்தக் கோள் மிகவும் சமீபத்தில் இருந்து கொண்டுள்ளதால் இதை ஹுபல் [Hubble] போன்ற விண்வெளி தூரதரிசியால் [Telescope] நேரடியாகப் பார்க்க முடியும். டெக்சாஸ் பல்கலைக்கழக வானவியலாளர் வில்லியம் கொக்ரேன், "...இது சமீபத்தில் உள்ள நட்சத்திரம் மட்டுமன்றி அதனது மைய நட்சத்திரத்தில் இருந்து 297 மில்லியன் மைல்களுக்கு -கிட்டத்தட்ட சூரியனில் இருந்து எமது சொந்த சூரிய குடும்ப அமைப்பின் (Solar System) சிறு கோள் வெளிமண்டல வரையான தூரத்தில் உள்ளது" என்றுள்ளார். இடைக்கிடையே இது பூமியின் அளவிலான சிறிய கோள்களுக்கு விண்வெளியில் இருப்பதற்கான இடைவெளியை வழங்குவதால், அது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட வாயு மண்டலங்களில் (Gas Giants) மட்டுமல்லாது உயிர் பரிணாமத்துக்குப் பெரிதும் பொருத்தமானதாக பகுதியாக விளங்கும் என்பது முக்கியமானது. சூரியகுடும்ப அமைப்பு (Solar System) உருவான ஆரம்பக் காலப்பகுதிகளில் கற்பாறை கோள்களில் நிலைமைகளை ஸ்திரப்படுத்துவதில் வியாழன் ஒரு முக்கியமான பாத்திரத்தை வகித்ததாக வானவியலாளர்கள் எண்ணுகிறார்கள்.

'நாசா' வில் உள்ள விஞ்ஞானிகள் புதிய தொழில்நுட்பம் புதிய நட்சத்திரங்களை கண்டுபிடிப்பதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளனர். சில நட்சத்திரங்களை சுற்றியுள்ள தூசிகளின் ஆரம்ப ஆய்வுகள் கோள்களின் இயக்கத்தினால் இவை குழப்பபடுவதாக காண்பித்துள்ளன. ஆரம்ப ஆய்வுகள் மூன்று நிலைகளில் இருந்து பார்ப்பதால் புதிய கோள்களை கண்டுபிடிக்கலாம் என காட்டியுள்ளன. 'நாசா' (NASA- தேசிய விமானவியல், விண்வெளி நிர்வாகம்) வெகுவிரைவில் வெளியேயுள்ள [Exoplanets] கிரகங்களை கண்டுபிடிப்பதை இலக்காகக் கொண்டு இரண்டு விண்வெளித்தள தூரதர்சினிகளை ஆரம்பிக்கும் திட்டத்தை கொண்டுள்ளது. நட்சத்திர தள்ளாட்டத்தை (Wobbles) கண்டுபிடிக்கவெனத் தீட்டப்பட்ட விண்வெளி 'இன்டர்பரோமீட்டர்' திட்டம் [Interferometer Mission] 2006ல் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் கோள்களைக் கண்டுபிடிக்கவும், புகைப்படம் எடுக்கவும் தீட்டப்பட்ட பூமித்தளத்தில் இருந்து கோள் கண்டுபிடிக்கும் திட்டம் (Terrestrial Planet Finder) 2013ல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கோள்களை கண்டுபிடிப்பதில் ஏற்பட்டுள்ள பிரமாண்டமான விரிவுபடுத்தலானது எதிர்காலத்தில் பூமிக்கு வெளியில் இருந்து உயிர்களைக் கண்டுபிடிக்கும் சாத்தியங்களை அதிகரித்துள்ளது. பூமியைப் போன்ற கற்பாறை கோள்களுக்கு பெரிதும் நிகரான கோள்களைக் கண்டுபிடிக்கும் விஞ்ஞானிகளின் தற்போதைய ஆய்வானது வியாழன் போன்ற வாயு மண்டலங்களுக்கு வெளியே உயிரினங்கள் இருப்பதற்கான சாத்தியங்களைப் பெரிதும் கொண்ட இடங்களை கண்டுபிடிப்பதாகும்.


Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved