World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

Dulal Bose, 1918-2001
Veteran Indian Trotskyist dies in Calcutta, aged 82

துலால் போஸ் 1918-2001

முதுபெரும் இந்திய ட்ரொட்ஸ்கிஸ்ட் 82 வது வயதில் கல்கத்தாவில் காலமானார்

By Nanda Wickramasinghe
31 March 2001

Use this version to print

மார்ச் 21 அன்று முதுபெரும் இந்திய ட்ரொடஸ்கிஸ்ட்டான துலால் போஸ் கல்கத்தாவில் காலமானார். அவர் இளைஞனாக இருந்த பொழுது 1939ல் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் சேர்ந்து அதன் வேலைத்திட்டத்திற்காக இந்தியத் தொழிலாளர்கள் மத்தியில் விடாப்பிடியாகப் போராடினார். அவர் தன் வாழ்வின் இறுதி வரையிலும் அதன் கொள்கைகளுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அவர் 1991ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் ஐக்கியம் கொண்ட சோசலிசத் தொழிலாளர் கழகத்தில் இணைந்து, தனது வாழ்வின் கடைசி பத்தாண்டுகளை லியோன் ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களை வங்க மொழியில் மொழி ஆக்கம் செய்வதற்கு அர்ப்பணித்தார்.

துலால் போஸ் 1918 செப்டம்பர் 10 ஆம் நாள் கல்கத்தாவில் பிறந்தார். இளவயதிலேயே தந்தையை இழந்ததால் அவரது பெரியப்பாவால் எடுத்து வளர்க்கப்பட்டார். புத்திசாலியாகவும் திறமை மிக்க இளைஞரான துலால் ஆங்கிலத்தில் உயர் பட்டத்திற்கான பட்டப்படிப்பை படித்தார் ஆனால் அவரால் அப்படிப்பை முடிக்க முடியவில்லை. தனது தலைமுறையினர் பலரைப்போல அவர் பெரும் விளைவுகளை உண்டாக்கவிருந்த நிகழ்வுகளால் அரசியலுக்குள் இழுக்கப்பட்டார். அந்நிகழ்வுகள் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக வளர்ந்து வந்த வெகுஜன இயக்கம் மற்றும் அடுத்து வரவிருந்த இரண்டாம் உலக யுத்தம் ஆகியன.

இருப்பினும் துலாலை மேம்படுத்திக் காட்டியது எதுவெனில், இந்திய மக்கள் எதிர்கொள்ளும் ஆழமான பிரச்சினைகளை தீர்ப்பதற்கான திறனுடைய தனித்த ஒரே சக்தி தொழிலாள வர்க்கம் என்பதை புரிந்து கொண்டது தான். பிரிட்டிஷாரின் கீழ் அமைச்சரவையை ஏற்றுக் கொண்டிருந்த, காந்தி, நேரு ஆகியோரால் தலைமை தாங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசை அவர் எதிர்த்தார். காங்கிரஸ் நிர்வாகம் கான்பூர், பம்பாய் மற்றும் சென்னையில் வேலநிறுத்தத்தில் இருந்த தொழிலாளர்களை சுட்டு வீழ்த்தியபோதும் 1938ல் விவசாய போராட்டங்களை நசுக்கியபோதும் குறிப்பாக துலால் பாதிக்கப்பட்டார். அவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மீதும் அவநம்பிக்கை கொண்டார். அது மாஸ்கோ ஸ்ராலினிச அதிகாரத்துவத்திடமிருந்து அதன் நிலைப்பாட்டை எடுத்தமை மற்றும் அது ஒடுக்குமுறை இருப்பினும் காந்தியுடனும் காங்கிரஸூடனும் ஐக்கியத்திற்கு அழைப்பு விடுத்தமை.

இந்த அரசியல் கொந்தளிப்பின் நடுவே, துலாலுக்கு போராட வேண்டிய அரசியல் திசைவழியை தெளிவுபடுத்தியது லியோன் ட்ரொட்ஸ்கியின் இந்தியத் தொழிலாளர்களுக்கு பகிரங்க கடிதம் தான். இரண்டாம் உலக யுத்தத்தின்பொழுது 1939 ஜூலையில் எழுதப்பட்ட இக் கடிதம் கம்யூனிஸ்ட் அகிலம் அல்லது கொமின்ரேன் கொள்கைகளைப் பற்றி எடுத்துக் கொண்டிருந்தது. அக்கொள்கை இந்தியத் தொழிலாள வர்க்கம் தன்னை பாசிசத்துக்கு எதிராகப் போராடும் அடிப்படையில் பிரிட்டிஷ்க்கு கீழ்ப்படுத்த வேண்டும் என்று விவாதித்தது. இது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

புரட்சிகர போராட்டத்தை நடத்த காங்கிரசின் அப்பட்டமான திராணியின்மையை அம்பலப்படுத்தி, ட்ரொட்ஸ்கி ஸ்ராலினிசத்தின் விவாதங்களை கிழித்தெறிந்தார். காலனித்துவ நாடுகளின் மீதான யுத்த நிகழ்வின்போது, ட்ரொட்ஸ்கி எழுதினார்: கொமின்ரேனின் படி, "இந்திய மக்கள் தற்போதைய அடிமை எஜமானனுக்கு, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு கட்டாயம் ஆதரவளிக்க வேண்டும். அது சொல்ல இருக்கிறது, அவர்கள் தங்களின் சொந்த விடுதலைக்காக இரத்தம் சிந்த வேண்டாம் மாறாக இந்தியா முழுவதும் "மாநகரின்" (லண்டனின் நிதி மையத்தின்) ஆட்சியை காப்பதற்காக சிந்த வேண்டுமாம். எளிதாய் விலைபோகக் கூடிய இந்த கயவர்கள் மார்க்சையும் லெனினையும் மேற்கோள் காட்ட எவ்வளவு தைரியம்! "யுத்தத்தில் இந்திய தொழிலாள வர்க்கம் பிரிட்டிஷ், காங்கிரஸ் மற்றும் ஸ்ராலினிஸ்டுகளிடமிருந்து சுயாதீனமாக தனது சொந்த வர்க்க நலனுக்காகப் போராட வேண்டும் அதற்கு புரட்சிகர கட்சி தேவைப்படுகிறது என்று ட்ரொட்ஸ்கி விளக்கினார்.

துலால் இந்த வேண்டுகோளுக்கு செவிமடுத்து, ட்ரொட்ஸ்கியின் முன்னோக்கிற்கு போராட வங்காளத்தில் நிறுவப்பட்ட புரட்சிகர சோசலிச கட்சியில் (RSL) துலால் சேர்ந்தார். இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியை (BLPI) அமைப்பதற்காக, புரட்சிகர சோசலிச கட்சி இந்திய துணைக்கண்டத்தில் இருந்த மற்றைய ட்ரொட்ஸ்கிச கட்சிகளுடனும் (இலங்கையிலுள்ள) லங்கா சமசமாஜ கட்சி (LSSP) யுடனும் ஒன்றிணைக்கப்பட்டது. இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி 1942ல் நான்காம் அகிலத்தின் பகுதியாக ஆனது.

துலால் BLPI ன் ஸ்தாபக மாநாட்டில் பங்கேற்றதுடன் அதன் வங்காள பிராந்திய கமிட்டியின் உறுப்பினராகவும் ஆனார். அவர் புதிய கட்சிக்காக தன்னை முழு நேரம் வேலை செய்ய அர்ப்பணித்துக் கொண்டார் மற்றும் இரண்டாம் உலக யுத்தத்தின் போதும் அதனை அடுத்து உடன் வந்த காலப்பகுதியிலும் முன்னனிப் பாத்திரத்தை ஆற்றினார்.

சட்டவிரோத சூழ்நிலைநின் கீழும் வேலை செய்த துலாலும் அவர் தோழர்களும் கல்கத்தாவின் கணிசமான தொழிலாள வர்க்கப் பகுதியின் மத்தியில் BLPI ன் செல்வாக்கை நிலைநாட்டுவதில் வெற்றி கண்டனர். கட்சி, நிரந்தரப்புரட்சி (Permanent Revolution) என்ற ஆங்கில பத்திரிகையையும் ஸ்பார்க் (Spark) என்ற ஆங்கில செய்தித்தாளையும் இன்குலாப் (REVOLUTION) என்ற வங்க மொழி செய்தித்தாளையும் வெளியிட்டது. இன்குலாப் 2000 சந்தாதாரர்களை பெற்றிருந்ததுடன் பரந்த அளவில் விநியோகிக்கப்பட்டது.

BLPI போலீசாரால் கைது செய்யப்படும் அபாயத்தை மட்டுமல்லாமல் ஸ்ராலினிஸ்டுகளின் அச்சுறுத்தலையும் எதிர் நோக்க வேண்டி இருந்தது. ஸ்ராலினிஸ்டுகள் கூச்சநாச்சமின்றி பிரிட்டிஷ் காலனித்துவ அதிகாரிகளுக்கு ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் நடவடிக்கைகளை பற்றி தகவல் அளித்தனர். இந்த காலகட்டம் முழுவதும், யுத்தத்தை எதிர்த்ததற்காக சிறையிடப்பட்டு இலங்கையிலிருந்து தப்பிவந்த முன்னணி ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு BLPI அடைக்கலம் கொடுத்தது.

யுத்தத்தை அடுத்து உடனடியாக இந்திய தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களில் ஒரு எழுச்சி ஏற்பட்டது. BLPI பல தொழிற்சங்கங்களின் தலைமையை வென்றது. அது வங்காளத்தில் காகித தொழிலாளர்கள், தீப்பெட்டி தொழிலாளர்கள் மற்றும் தீ அணைப்பு தொழிலாளர்கள் ஆகியாருக்கு தலைமை வகித்தது. துலால் டிட்டகார் காகித தொழிலாளர்கள் சங்கம் மற்றும் கல்கத்தா தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கம் ஆகியவற்றின் செயலாளராக ஆனார். அவர் மாணவர்கள் மத்தியிலும் தொழிலாளர்கள் மத்தியிலும் பிரிடடிஷ் எதிர்ப்பினை உருவாக்கவும் கூட முக்கிய பாத்திரத்தை ஆற்றினார். அதன் மூலம் அவர் திறமான பேச்சாளராகவும் முக்கிய தலைவராகவும் ஆனார்.

1946ல் இந்தோனேஷியாவில் காலனித்துவ எதிர்ப்பு இயக்கத்தை நசுக்க டச்சு படைகளுக்கு ஆதரவாக கடற் படையினரை அனுப்பும் முடிவிற்கு எதிராக பம்பாயில் பிரிட்டிஷ் கடற்படையில் கிளர்ச்சி வெடித்தது. BLPI தலைமை துலாலை பம்பாய்க்கு அனுப்பியது. அங்கு அவர் கிளர்ச்சியை ஆதரித்து துண்டறிக்கைகளை நகர்ப்புறத்தில் உள்ள தொழிற்சாலைகளில் விநியோகம் செய்வதற்கு மருத்துவ மாணவர்களை ஏற்பாடு செய்தார்.

பப்லோவாதத்தின் தோற்றம்

காலனித்துவ ஆட்சிக்கு எதிர்ப்பு குவிவது கண்டு, பிரிட்டிசார் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவுடன், துணைக்கண்டத்தை இந்தியா பாக்கிஸ்தான் என மதவழியில் பிரிவினை செய்வதன் அடிப்படையில் அதிகாரத்தை இந்திய முதலாளித்துவத்திற்கு மாற்றிக் கொடுக்க ஏற்பாடு செய்யப் பட்டது. 1947 ஆகஸ்டில் சுதந்திரம் வழங்கியது லட்சக் கணக்கான உயிர்களை காவு கொண்ட இரத்தப் படுகொலையை அமைத்துக் கொடுத்தது. வங்காளம் இரண்டாகப் பிரிவினை செய்யப்பட்டது. துலால் BLPI உறுபினர்களுக்கு அரசியல் வேலைகளுக்கு வழிகாட்டுவதற்காக கிழக்கு பாக்கிஸ்தான் என்றும் பின்னர் பங்களாதேஷ் என்றும் மாறிய பகுதிக்கு அனுப்பப்பட்டார்.

1948ல் காந்தியின் படுகொலையை தொடர்ந்து, கல்கத்தா அருகிலுள்ள உலுபெரியா எனும் இடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆற்றிய புகழ்பெற்ற உரையில், BLPI தலைவர் கொல்வின் ஆர். டி. சில்வா பிரிட்டிசாரால் கொடுக்கப்பட்ட போலி சுதந்திரத்தைப் பற்றி விளக்கினார். "நடைபெற்றிருப்பது சுதந்திரத்திற்கான மாற்றம் அல்ல மாறாக இந்திய முதலாளித்துவ வர்க்கத்துடன் அதன் கூட்டை மறு ஒழுங்கு செய்வதன் வழியாக ஏகாதிபத்தியத்தால் நேரடி ஆட்சியிலிருந்து மறைமுக ஆட்சிக்கு நெறி மாற்றுசெய்யப்பட்டிருக்கிறது..... பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் துறந்து விடவில்லை மாறாக அதன் இந்திய பங்காளிகளை வர்த்தகத்தை கவனித்துக் கொள்ளும் தனி முதலான பொறுப்பாளராக விட்டுவிட்டு பின்புலத்தில் மட்டும் ஓய்வெடுத்திருக்கிறது......"

அந்தக் கூட்டத்தில் இருந்த துலால், டி. சில்வா குறிப்பிட்ட " பரிதாபகரமான ட்ரொட்ஸ்கிஸ்டுகள்" என்ற குறிப்புக்களின் வருமுன் அறிதிறனை பின்னர் நினைவு கூர்ந்தார். பரிதாபகரமான ட்ரொட்ஸ்கிஸ்டுகள் "சுதந்திரம்" அடிப்படை மாற்றத்தினை கொண்டு வரும் என நினைத்தனர். நான்காம் அகிலத்தின் அணிகளுக்குள்ளே, இந்தியத்துணைக் கண்டத்தினுள்ளும் சர்வதேசிய ரீதியாகவும், மிசேல் பப்லோவாலும் ஏர்னஸ்ட் மண்டேலாலும் தலைமை தாங்கப்பட்ட சந்தர்ப்பவாத போக்கு ஒன்று தோன்றியது. அவர்கள் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான போராட்டத்தை கைவிட்டுவிட்டு ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ட்ரொட்ஸ்கிச இயக்கம் இருக்கின்ற சமூக ஜனநாயகவாதிகள், ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் முதலாளித்துவ தேசிய தலைமைகளுக்கு தங்களை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் என்று விவாதித்தனர்.

இந்த சந்தர்ப்பவாத போக்கு இந்திய துணைக் கண்டத்தில் அழிவுகரமான விளவுகளை கொண்டிருந்தது. பப்லோ தேசிய வழிகளில் BLPI உடையவும் இந்தியாவில் அதன் உறுப்பினர்கள் குட்டி முதலாளித்துவ தீவிரவாத அமைப்பான காங்கிரஸ் சோசலிச கட்சிக்குள் நுழைவதற்கு தள்ளினார். சிறிலங்காவில், தனது முந்தைய வார்த்தைகளை தாங்கி நிற்காமல், கொல்வின் ஆர்.டி.சில்வாவும் BLPI ம் சுதந்திரத்தை உண்மையான முன்னேற்றம் என்று ஏற்றுக் கொண்ட "பரிதாபகரமான ட்ரொட்ஸ்கிஸ்டுகள்" உடன் ஒன்றிணைந்து தனியான கிளையை அமைத்தனர்.

இந்த முடிவு BLPI க்குள் பேரளவு அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியது. வங்கத்தில் துலாலும் பெரும்பாலான BLPI உறுப்பினர்களும் கட்சியை உடைப்பதையும் அதன் இந்திய கிளையை காங்கிரஸ் சோசலிச கட்சிக்குள் கரைப்பதையும் எதிர்த்தனர். ஆனால் சந்தர்ப்பவாத திசை வழியின் அரசியல் வேர்களை அடையாளம் காணமுடியாமல் முடிவினை முன்னெடுத்தனர். காங்கிரஸ் சோசலிச கட்சிக்குள் வேலை செய்வதை ஏற்க முடியாத துலால், 1949ல் கல்கத்தாவை விட்டும் அரசியலைவிட்டும் வெளியேறினார். 1951ல் நகரத்திற்கு திரும்பிய துலால் தனது முன்னாளைய தோழர்களுடன் சேர்ந்து இன்குலாப் இதழை வெளியிட்டார். ஆனால் 1954ல் அந்த குழு பப்லோவாதிகளுடன் இணைந்திருந்த கம்யூனிஸ்ட்டு லீக்கில் இணையவே, மீண்டும் அவர் அரசியல் வாழ்க்கையிலிருந்து பின்வாங்கினார்.

சந்தர்ப்பவாதப் போக்கினை எதிர்த்துப் போராட 1953ல் அமைக்கப்பட்ட நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் (ICFI) இருந்து தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், துலால் பப்லோவாதத்தின் தோற்றத்தால் எறியப்பட்ட அரசியல் பிரச்சினைகளை தீர்க்க முடியவில்லை. இருப்பினும், முக்கியமானது என்னவென்றால், தசாப்தங்களுக்கு பின்னர் அவர் இறுதியில் ICFI பிரதிநிதிகளை 1991ல் சந்தித்த பின்னர், அதன் ஆய்வுகளுடன் விரைவில் உடன்பட்டார். அவரது வாழ்க்கை போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் ட்ரொட்ஸ்கிச இயக்கம் எதிர் கொண்ட கணிசமான அரசியல் கஷ்டங்களை மட்டும் பிரதிபலிக்கவில்லை மாறாக இந்திய தொழிலாள வர்க்கத்தில் அது கொண்டிருந்த விளக்கங்களின் ஆழமான வேர்களையும் பிரதிபலிக்கிறது.

அவர் சென்னையிலிருந்து சோசலிச தொழிலாளர் கழகத்தின் உறுப்பினரை முதலில் சந்தித்தபோது, 72வது வயதில் கவலையுடன் குறிப்பிட்டார், "நாங்கள் முதியவர்கள். நீங்கள் இளையவர்கள் தொடர்ந்து செல்லுங்கள்" என்றார். கலந்துரையாடல் செல்லவும்தான் தெரிந்தது அந்த "முதிர்ந்த எலும்புகளில்" கணிசமான அளவு உயிர் இருக்கிறதென்று. சோவியத் ஒன்றியத்திலும் கிழக்கு ஐரோப்பாவிலும் உள்ள ஸ்ராலினிசத்தின் நெருக்கடி தொடர்பான ICFI ன் நிலைப்பாட்டை அறியவிரும்பினார். அவர் குறிப்பாக பப்லோவாதம் பற்றிய அதன் ஆய்வை கிரகித்து அது தனது அரசியல் வாழ்க்கையில் அழிவுகரமான பாதிப்பை ஏற்படுத்தியது என கண்டார். அவர் டேவிட் நோர்த்தின் நாம் காக்கும் மரபியம் என்ற புத்தகத்தை ஆர்வத்துடன் படித்தார். அது சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் நீண்ட போராட்டத்தை பற்றி தொகுத்துக் கூறுகிறது. அவர் 1993ல் அதன் ஆசிரியரை சந்திக்க கல்கத்தாவிலிருந்து ஆயிரத்துக்கும் அதிகமான கிலோமீற்றர் தொலைவு கடினமான இரயில் பயணம் செய்து சென்னை வந்தார்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் இணைந்ததும் துலால் புது வாழ்வு பெற்றார். மீண்டும் புது வாழ்வு பெற்றார். அவரது வயது முதிர்ந்த நிலையிலும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் எழுத்துக்களை வங்க மொழி ஆக்கம் செய்வதன் மூலம் அவரது அறிவையும் ஆற்றலையும் கட்சிக்கு பயனுள்ளதாக்கினார். அவர் டேவிட் நோர்த்தின் நாம் காக்கும் மரபியம், சோவியத் ஒன்றியத்தின் முடிவு மற்றும் ICFI ன் அறிக்கையான ஏகாதிபத்தியத்தையும் காலனித்துவத்தையும் எதிர்பபோம் மற்றும் அதேபோல லியோன் ட்ரொட்ஸ்கியின் (I stake my Life) எனது வாழ்வைப் பணயம் வைக்கிறேன் மற்றும் In defence of october revolution ஆகியவற்றை மொழி ஆக்கம் செய்தார். அவர் உலக சோசலிச வலைத் தளத்தின் பல கட்டுரைகளையும் மொழி ஆக்கம் செய்ததுடன் கட்சியின் வங்க மொழி பத்திரிகைக்கும் கட்டுரைகள் பல எழுதி இருக்கிறார். அவரது மரணத்தின் போது அவர் ட்ரொட்ஸ்கியின் உன்னத படைப்பான காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சி மொழி ஆக்கம் செய்து கொண்டிருந்தார்.

இந்த கட்டுரையாளர் துலால் ஒரு சிறந்த மனிதர் என்பதனை நிரூபிக்க முடியும். பண்பாடு நிறைந்த, ட்ரொட்ஸ்கியின் படைப்புக்களை கற்றுத் துறைபோக்கியவர், கணப் பொழுதில் மிகத் துல்லியமாக ட்ரொட்ஸ்கி எழுதிய பந்திகளை மேற்கோள் காட்டக்கூடியவர். அவர் கூட்டங்களில் பேசும்போது ஒருவருக்கு அவர் ஒரு மேடைப் பேச்சாளர் என்பது புலனாகும். ட்ரொடஸ்கிச இயக்கத்தின் ஆரம்ப காலங்களில் இருந்தே பேச்சாளருக்குரிய பாணியையும் பரந்த பார்வையாளர்களுக்கு சிக்கலான அரசியல் பிரச்சினைகளை எடுத்து விளக்க்கூடிய ஆற்றலைதக்க வைத்திருந்தார். அவர் சந்திக்க வருகின்ற தோழர்களை பெரும் முகமலர்ச்சியுடனும் மகிழ்வுடனும் எப்போதும் வரவேற்பார். அவர் துணைவியாரும் குழந்தைகளும் கூட அப்படித்தான். கல்கத்தாவில் உள்ள அவரது வீடு அரசியல் கூட்டங்களுக்கும் கலந்துரையாடல்களுக்குமான களமாக இருந்தது.

துலாலின் இறப்பு வரை உயிரோட்டமாக இருந்தது எதுவெனில், தொழிலாள வர்க்கத்திற்கும் மனிதகுலம் முழுவதற்குமான எதிர்காலம் முதலாளித்துவத்தை துடைத்தழித்து சோசலிசத்தை நிர்மாணிப்பதில்தான் இருக்கின்றது என்ற புரிதல்தான். அவரை செயலூக்கமான அரசியல் பங்களிப்பில் சுமார் 40 ஆண்டுகள் இடைவெளி இருப்பினும், இந்திய துணைக் கண்டத்திலும் சர்வதேசிய ரீதியாகவும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்ததை கட்டுதற்கு மறுக்க முடியாத பங்களிப்பை செய்துள்ளார். அவரது வேலைகள் அவரது மொழி ஆக்கங்களில் தனது இறப்புக்கு முன்னர் முடித்துவிட கடுமையாக உழைத்த அவரது வேலைகளில் உயிர் வாழ்கின்றன. இலங்கையில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சியும் இந்தியாவில் உள்ள சோசலிசத் தொழிலாளர் கழகமும் தங்களது ஆழ்ந்த இரங்கலை அவரது துணைவியாருக்கும் குழந்தைகளுக்கும் தெரிவித்துக் கொள்கின்றன.