World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

A reply to an LTTE supporter

Marxism and the national question in Sri Lanka

ஒரு தமிழீழ விடுதலைப் புலி அமைப்பு ஆதரவாளருக்கு பதில்

மார்க்சிசமும் இலங்கையில் தேசிய இனப் பிரச்சினையும்

பகுதி-2

By Peter Symonds
12 March 2001

Use this version to print

பின்வருவது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவாளரான SK க்கு வழங்கிய இரண்டு பாகங்கள் கொண்ட பதிலின் இரண்டாம் பாகமாகும். இப் பதிலின் முதற் பாகம் மார்ச் 26ல் பிரசுரிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலி அமைப்பு கடந்த 18 ஆண்டுகளாக இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் ஒரு தனியான தமிழ் நாடு கோரிப் போராடி வருகின்றது. SK யின் கடிதம் இலங்கையின் சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் விஜே டயசுக்கும் SR க்கும் இடையேயான முன்னைய கடிதப் போக்குவரத்தின் பேரில் கிடைத்ததோடு அவர் சோசலிச சமத்துவக் கட்சி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அதனது அரசியல் முன்நோக்குக்கும் விமர்சனமற்ற ஆதரவு வழங்கத் தவறியமைக்காக சோசலிச சமத்துவக் கட்சியைக் கண்டனம் செய்திருந்தார்.

பகுதி-2

சிங்கள தமிழ் மறுமலர்ச்சி இயக்கங்களின் சாராம்சத்தைப் புரிந்து கொள்ள ட்ரொட்ஸ்கிச இயக்கம் தவறியமை ''இந்த சமூக சக்திகள் இருதரப்பிலும் உள்ள சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கு அடிபணியச் செய்தது. இதன் மூலம் வளர்ச்சி கண்டு வந்த சிங்கள பெளத்த மறுமலர்ச்சிப் பிரச்சாரம் காலனித்துவத்திற்கு பிந்திய முதலாவது முதலாளித்துவ அரசாங்கமான யூ.என்.பி. யுடன் மோதிக் கொள்ளச் செய்தது. நன்கு ஸ்தாபிதம் செய்யப்பட்ட லங்கா சமசமாஜக் கட்சி கையேலாகாத நிலையில் நிற்கையில் புதிய முதலாளித்துவ அரசியல் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதனைப் பதிலீடு செய்யத் தோன்றியது'' என நீங்கள் எழுதுகின்றீர்கள்.

நீங்கள் இரண்டு விடயங்களை தவறாக நோக்குகின்றீர்கள்.

முதலாவதாக, எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தோன்றியமை தொழிலாளர் வர்க்கத்தினுள் லங்கா சமசமாஜக் கட்சியின் (LSSP) செல்வாக்கின் வளர்ச்சியின் பேரிலான முதலாளி வர்க்கத்தின் பிரதிபலிப்பாக விளங்கியது. இது 1953ம் ஆண்டில் தீவு பூராவும் இடம்பெற்ற ஹர்த்தாலில் பெரிதும் வெளிப்பாடானது. விலைவாசி உயர்வுக்கு எதிரான கதவடைப்புக்கள், ஆர்ப்பாட்டங்கள், அரசியல் பிரச்சாரங்களுடன் கூடிய பொது வேலைநிறுத்தம் யூ.என்.பி. அரசாங்கத்தினை முழந்தாளிடச் செய்ததோடு அதனை பின்வாங்கவும் செய்தது.

இரண்டாவதாக, லங்கா சமசமாஜக் கட்சி செய்யத் தவறியமை கையேலாத நிலையில் நிற்கவில்லை. மாறாக ஆனால் நீங்கள் செய்ய வேண்டும் என ஆலோசனை கூறுவதையே அதாவது ஒரு பிற்போக்கு இயக்கத்திற்கு ஜனநாயக முற்போக்கு வர்ணங்களால் கலர் தீட்டுவதன் மூலம் தன்னை பெளத்த மறுமலர்ச்சி வாதத்திற்கு இயைந்து போவதையே அவர்கள் செய்தனர். அங்ஙனம் செய்வதன் மூலம் லங்கா சமசமாஜக் கட்சி பண்டாரநாயக்கவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பான தனது முன்னைய விமர்சனங்களைக் கைநழுவிவிடத் தொடங்கியது. இது சாதாரணத் தொழிலாளர்களினதும், ஒடுக்கப்பட்ட மக்களின் கண்களிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பற்றிய அரசியல் நற்சாட்சிப் பத்திரத்தை தூக்கிப் பிடித்தது. இது லங்கா சமசமாஜக் கட்சியின் சீரழிவுக்கும் காட்டிக் கொடுப்புக்கும் வெகுவேகமாக இட்டுச் சென்ற செங்குத்துச் சரிவாகும்.

1953ம் ஆண்டின் ஹர்த்தால் இலங்கை ஆளும் வர்க்கத்திற்கு ஒரு பிரமாண்டமான அரசியல் அதிர்ச்சியாக விளங்கியது. இது நகரங்கள், பட்டினங்கள், கிராமங்களில் வசித்த சாதாரண உழைக்கும் மக்களுக்கும் - யூ.என்.பி.க்கும் இடையே இருந்து வந்த பிரமாண்டமான பிரிவை எடுத்துக் காட்டியதோடு, மொத்தத்தில் முதலாளி வர்க்க ஆட்சிக்கு ல.ச.ச.கட்சியினால் தலை தூக்கியுள்ள ஆபத்தையும் சுட்டிக் காட்டியது. காலனித்துவ எதிர்ப்புப் போராட்டத்தின் பெறுபேறாக காந்தி, நேரு போன்ற உறுதியான தலைவர்கள் எவரும் இலங்கை முதலாளித்துவ அரசியல்வாதிகளிடையே தோன்றியது கிடையாது. சிங்கள, நகர்ப்புற, கிராமப்புற குட்டி முதலாளி வர்க்கத்திடையே ஒரு சமூக அடிப்படையை ஸ்தாபிதம் செய்யும் அவசியத்திற்கு முகம் கொடுத்த நிலையில் அவர்கள் (முதலாளி வர்க்கம்) பெளத்த மறுமலர்ச்சி இயக்கத்தின் பாரம்பரியங்களின் பக்கம் திரும்பினர்.

பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் ஒரு பெரும் ஆதரவாளரான ஒக்ஸ்போட்டில் கல்வி கற்ற எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க 1930பகளில் சிங்கள மகா சபையை அமைத்தார். இவர் 1951ல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஸ்தாபிதம் செய்தார். ஆனால் ஹர்த்தாலின் பின்னர் இடம் பெற்ற 1956 பொதுத் தேர்தலின் பின்னர் பண்டாரநாயக்க பெளத்த மறுமலர்ச்சிவாதத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு அரசியல் மேடையாகப் பரிணாமம் செய்தார். புத்த ஜயந்தியின் 2500 ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தை அவர் இதற்கான சந்தர்ப்பமாகப் பயன்படுத்தினார்.

அவர் ஏகாதிபத்திய எதிர்ப்பு, சோசலிச வார்த்தையாலங்களை தாராளமாகக் கையாள்வதன் மூலம் வேலையின்மை, சேவைகள் பற்றாக்குறை வறுமை காரணமாக சிங்கள விவசாயிகளிடம் உருவான விரக்தியை சுரண்டிக் கொள்வதனூடாக, இதனை பிரித்தானியர் ஆட்சியின் கீழ் வாய்ப்புகள் பெற்ற ஆங்கிலம் பேசும் பிரமுகர்களுக்கும் ஆங்கிலேயரின் ஆட்சியில் சலுகைகளை அனுபவித்த தமிழர்களுக்கும் எதிராகத் திருப்பினார். பெளத்தத்தை அரச மதமாக்கியதன் மூலமும் சிங்களத்தை ஒரே அரச மொழியாக்கியதன் மூலமும் பண்டாரநாயக்க ஒரு புதிய 'மத-ஜனநாயக சோசலிசத்தை' உருவாக்கும் எனவும் அதில் சிங்களவர்கள் ஒரு மேலாதிக்க அந்தஸ்த்தைப் பெறுவர் எனவும் விளக்கினார். இக்கொள்கைகளுக்காக வக்காலத்து வாங்குவதன் மூலம் பண்டாரநாயக்க பெளத்த மறுமலர்ச்சி இயக்கத்தின் தர்க்கவியலில் இயற்கையாக அமைந்தது என்ன என்பதை தெளிவுபடுத்தினார். அது சிங்களவர்கள் ஒரு இணையற்ற இனத்தவர்கள், ஆதலால் இலங்கையின் விவகாரங்களில் அவர்களுக்கு ஒரு சிறப்புரிமையான அந்தஸ்த்து வழங்கப்பட வேண்டும் என்பதாகும்.

இந்த வாய்வீச்சின் வாசனையை பண்டாரநாயக்க ஏற்றுக்கொண்ட "பெளத்தத்தை காட்டிக் கொடுத்தல்" என்ற தலைப்பில் வழங்கப்பட்ட ஒரு அறிக்கை சுமந்து வந்தது. அது கூறியதாவது: "இந்த நாட்டில் இப்போது ஒரு காலனித்துவ அரசாங்கத்தின் வடிவில் ஒரு வெளிநாட்டு அடிமைத் தளையை வெளிப்படையாக காணக் கூடியதாக இல்லாது போனாலும், நாம் ஒரு சில வருடங்களுக்கு முன்னர் பிரித்தானிய அடிமைத் தளையில் இருந்து விடுபடுவதற்கு முன்னர் இருந்தது போன்ற மறைமுகமான ஞானம்பெறாத போதனைகள், நடைமுறைகள், பழக்க வழக்கங்கள், வழக்காறுகள் போன்ற பிரித்தானியரால் போஷித்து வழங்கப்பட்ட கருத்துக்களுக்கு அடிமைப்பட்ட பிரஜைகளாகவே இருக்கின்றோம். இதன் மூலம் நாம் இன்னமும் மேற்குலகுடன் தார்மீக பிணைப்புக்களைக் கொண்டுள்ளோம்."

இந்த அறிக்கை ஆலயங்களுக்கு கட்டாய உழைப்பை வழங்குவதைக் கொண்ட நிலமானித்துவ முறையை உடைத்ததற்காகவும் ஆலய நிலங்களை திருடியதற்காகவும் பிரித்தானியரைக் கண்டனம் செய்தது. கிறிஸ்தவ, பெளத்த பாடசாலைகளுக்கு நிதி உதவி செய்யும் போது காணப்பட்ட சமத்துவமின்மையை சுட்டிக் காட்டியதோடு, கிறிஸ்தவர்களுக்கு அளவுக்கு அதிகமான செல்வாக்கு வழங்கியமைக்காக அரசாங்கத்தை கண்டனமும் செய்தது. அது மேலும் ''கிறிஸ்தவம் முடிசூடிக் கொண்டுள்ளது'', இலங்கையின் கையும் காலும் கட்டப்பட்டு சிலுவையின் காலடியில் வைக்கப்பட்டுள்ளது எனக் கூறியது. சிங்கள மன்னர்களுக்கு உள்ளது போன்ற அதிகாரங்களைக் கொண்ட புத்த சாசன சபைகளை (Buddha Sasana Council) அமைக்கும்படி கோரியதோடு கடந்த காலத்தவறுகளைத் திருத்த அரசு நிதியுதவி செய்யவேண்டும் எனவும் கோரியது.

பண்டாரநாயக்கவுக்கு உயர் பெளத்த மதபீடம் ஆதரவு வழங்கியது. அது தனது பிக்குகளை நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் பிரச்சாரத்திற்காக அனுப்பியும் வைத்தது. யூ.என்.பி. பிரதமர் சேர்.ஜோன். கொத்தலாவலை தீய ஜீவனாக- விஸ்கி குடிக்கும், ஆங்கிலம் பேசும் ஒழுக்கங்கெட்ட புள்ளியாகப் பெயர் சூட்டப்பட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு அபார வெற்றி கண்டது. அது பண்டாரநாயக்கவையும் கூட அதிர்ச்சியடையச் செய்தது. ஒரு பேட்டி காண்பவரிடம் பேசுகையில் அவர் "என் அன்பின் நண்பா, இந்த (சிங்கள) மொழி விவகாரம் மக்களை எழுச்சியடையச் செய்ததை போன்ற எதனையும் நான் ஒரு போதும் காணவில்லை" எனத் தெரிவித்தார்.

ஆட்சிக்கு வந்ததுதான் தாமதம் பண்டாரநாயக்க தனிச் சிங்களக் கொள்கையை அமுல் செய்தார். இதனால் ஆங்கிலத்திற்கு பதிலாக சிங்களம் அரசகரும மொழியாக்கப்பட்டது. இது தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான ஒரு நேரடிப் பாரபட்சமாக விளங்கியது. அவர்கள் அரசாங்க தொடர்புகளுக்காகப் பேசவோ அல்லது எழுதவோ பாவித்திராத ஒரு மொழியை பயன்படுத்தும் படி கட்டாயப்படுத்தப்பட்டனர். முன்னர் சிங்கள, தமிழ், ஆங்கில, மொழிகளை போதனா மொழியாகக் கொண்டிருந்த பல கல்லூரிகள் சிங்களத்தில் போதிக்கும்படி நெருக்கப்பட்டன. 1960பகளின் முற்பகுதியில் அரசாங்கத்தினால் கையேற்கப்பட்ட மதப் பிரிவுப் பாடசாலைகளுக்கும் இக் கொள்கை விஸ்தரிக்கப்பட்டது.

1958ல் அரசாங்கம் சகல அரச ஊழியர்களையும் சிங்களத் தகுதிகாண் பரீட்சைக்குத் தோற்றும்படி கட்டாயப்படுத்தியது. பரீட்சைக்குத் தோற்ற மறுத்தவர்களும் பரீட்சையில் சித்தியடையாதவர்களும் கட்டாய ஓய்வில் செல்ல நெருக்கப்பட்டனர். அரச அதிகாரத்துவத்தினதும் இராணுவத்தினதும் உயர் மட்டங்களை சிங்கள பெளத்த மேலாதிக்கத்தின் பிடிக்குள் கொண்டிருப்பதை ஊர்ஜிதம் செய்வதே இதன் நோக்கமாக விளங்கியது. இதற்கு பிரபல பெளத்த கல்லூரிகள், பாடசாலைகளில் இருந்து அதிகரித்த அளவில் ஆட்திரட்டல் இடம்பெற்றது.

தமிழர்களின் எதிர்ப்புக்கள், இனக் கலவரங்கள் அரச அடக்குமுறைகள் மூலமாக பதிலளிக்கப்பட்டது. சோவினிச இன உணர்வைத் தூண்டி விடுவதில் முக்கிய பாத்திரம் வகித்த பண்டாரநாயக்க, சிங்கள தீவிரவாதிகளுக்கு வேண்டிய விதத்தில் செல்லத் தவறியதால் 1958ல் ஒரு பெளத்த பிக்குவினால் கொலை செய்யப்பட்டார்.

லங்கா சமசமாஜக் கட்சியின் பொறுப்பு

1950ல் இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சியுடன் (BLPI) ஒன்றிணைக்கப்பட்ட லங்கா சமசமாஜக் கட்சி சரியான விதத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எதிர்த்ததோடு அதன் தனிச் சிங்கள கொள்கைக்கு எதிராக ஒரு கொள்கை ரீதியான நிலைப்பாட்டை வகித்தது. ல.ச.ச.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு மொழியை உயர்ந்த அந்தஸ்த்துக்கு உயர்த்துவதன் மூலமும் மற்றொரு மொழிக்கு பாகுபாடு இழைப்பதன் மூலமும் முதலாளி வர்க்கம் ஒரு இன மோதலுக்கும் யுத்தத்திற்குமான அடிப்படையை உருவாக்குவதாக எச்சரிக்கை செய்தது. "(சிங்கள, தமிழ் மொழிகளுக்கான) சம அந்தஸ்து எமது நாட்டின் சுதந்திரத்திற்கும் ஐக்கியத்திற்குமான பாதை என நாம் நம்புகின்றோம். இல்லையேல் ஒரு சிறிய அரசில் இருந்து இரண்டாக பிளவுண்டு போன சிறிய இரத்தம் சிந்தும் இரண்டு அரசுகள் தோன்றலாம்" என கொல்வின் ஆர் டி சில்வா எச்சரிக்கை செய்தார். லங்கா சமசமாஜக் கட்சி தமிழர்களையும் அவர்களது வீடுகளையும் சிங்கள இனவாதக் காடையர்களிடமிருந்து உடல் ரீதியில் காப்பாற்ற கொழும்பின் பகுதிகளில் உள்ள தனது இளஞர் கழக (Youth leagues) உறுப்பினர்களை அணிதிரட்டியது.

ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரச்சாரத்தின் நெருக்குவாரம் காரணமாக ல.ச.ச.கட்சி பாராளுமன்ற அரசியலின் கட்டுமானத்திற்கும் சிங்கள இனவாதத்திற்கும் இயைந்து போகத் தொடங்கியது. பெளத்த மதத்தின் பேரிலான அதனது மனோபாவம் இரண்டுபட்டது. ல.ச.ச.கட்சி பெளத்த மதம் ஒரு "தனிமனிதனின் விடயம்" எனக் கூறிக் கொண்டது. இது தனி மனிதனின் மதச் சுதந்திரத்தை அரசின் தலையீட்டில் இருந்து பாதுகாப்பது என்ற நிலைப்பாட்டில் சரியாக விளங்கியது. ஆனால் இந்த வடிவம், அரச விவகாரங்களில் பெளத்த மதத்தின் ஒருங்கிணைப்பின் வளர்ச்சியை விமர்சனம் செய்ய கட்சி தவறியதை மூடிமறைக்கும் ஒரு திரையாகியது. மார்க்சிஸ்டுகள் அரசும் மதங்களும் (State & Church) தனித்தனியே இயங்குவதை எப்போதும் வலியுறுத்தி வந்தனர். 18ம் 19ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவின் ஜனநாயகப் புரட்சிகளின் போது சமய நம்பிக்கையை கருத்தில் கொள்ளாமல் சகலரினதும் சம உரிமையை ஊர்ஜிதம் செய்யும் இந்த அடிப்படைக் கொள்கை உருவாகியது.

ல.ச.ச.கட்சியின் முன்னணித் தலைவர்களில் என்.எம்.பெரேரா போன்ற சில பாராளுமன்றவாதிகள், பெளத்த மதத்தை கடைப்பிடிப்பதை ஒரு போதும் கைநழுவ விட்டது கிடையாது. ஒரு மார்க்சிச கட்சியினுள்ளும் தொழிலாளர் வர்க்கத்தினுள்ளும் ஒரு விஞ்ஞான ரீதியான சோசலிச கலாச்சாரத்திற்கான போராட்டத்தில் மதம் ஒரு போதும் ஒரு "தனிப்பட்ட விவகாரம்" ஆக இருந்ததில்லை. மதரீதியான துன்புறுத்தல்களை சகல கட்டத்திலும் எதிர்த்து வந்த அதேவேளையில் மார்க்சிஸ்டுகள் சமயத்தின் சகல வடிவங்களையும் கடவுள் நம்பிக்கையையும் அடிப்படையில் எதிர்த்து வந்தனர். மதத்தையும் கடவுள் நம்பிக்கையும் ஏற்றுக் கொள்வதாவது சமூக மாற்றமானது தொழிலாளர் வர்க்கத்தினாலும் ஒடுக்கப்படும் வெகுஜனங்களாலும் அல்லாது இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளாலேயே பெற்றுக்கொள்ளமுடியும் என்ற கருத்தை ஊக்குவிப்பதாகவும் உள்ளது.

லங்கா சமசமாஜக் கட்சியின் அரசியல் சீர்கேட்டிற்கு அக்கட்சி மட்டும் பொறுப்பாக இருக்கவில்ல. இது நான்காம் அகிலத்தினுள் (Fourth International) மைக்கல் பப்லோவினதும் ஏர்ணஸ்ட் மண்டேலினதும் தலைமையில் தலையெடுத்த ஒரு சந்தர்ப்பவாதப் போக்கினால் ஊக்குவித்து வளர்க்கப்பட்டது. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் பப்லோவாதிகள் முதலாளித்துவத்தின் மறு ஸ்திரப்பாட்டுக்கும் தொழிலாளர் அதிகாரத்துவங்களின் வெளிப்படையான பலத்திற்கும் அடிபணிந்து போய் தொழிலாளர் வர்க்கத்தின் அல்லது ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் சுயாதீனமான எந்த ஒரு அரசியல் பங்கினையும் கைவிட்டனர். "ஒவ்வொரு நாட்டினுள்ளும் வெளிப்பாடாகும் வெகுஜன இயக்கங்களுள் நிஜமாக ஒன்றிணைந்து கொள்ள வேண்டும்" என இவர்கள் அழைப்பு விடுத்தனர். ஒவ்வொரு நாட்டிலும் நான்காம் அகிலத்தின் பகுதிகள் ஆளுமையான ஸ்ராலினிச, சமூக ஜனநாயக அல்லது முதலாளித்துவ தேசியவாத தலைமைகளுடன் இயைந்து போகவேண்டும் என பப்பலோ வலியுறுத்தினார். இலங்கையில் இந்தப் போக்கானது லங்கா சமசமாஜக் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் சிங்கள-பெளத்த இனவாதத்திற்கும் அதிகரித்த அளவில் இயைந்து போனதன் மூலம் வெளிப்பாடாகியது.

ஆரம்பத்தில் சமசமாஜக கட்சித் தலைவர்கள் குறைந்த பட்சம் இலங்கைக்கு வெளியிலான பிரச்சனைகள் சம்பந்தமாக சில பாரம்பரியமான நிலைப்பாடுகளை எடுத்து வந்துள்ள போதிலும் அவர்கள் பப்பலோ, மண்டேலில் இருந்து பிரிந்து கொள்ளாததுடன், மார்க்சிசத்தின் அடிப்படைக் கொள்கைகளைப் பாதுகாக்க 1953ல் அமைக்கப்பட்ட நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் அவர்கள் ஒருபோதும் இணைந்து கொள்ளவில்லை. பப்பலோவாத ஐக்கிய செயலகத்திற்கும் (United Secretariat) ல.ச.ச.கட்சிக்கும் இடையேயான உறவுகள் சந்தர்ப்பவாத அடிப்படையில் அமைந்து இருந்தன. லங்கா சமசமாஜக் கட்சியை "உலகின் மாபெரும் ட்ரொட்ஸ்கிசக் கட்சி" எனத் தூக்கிப் பிடிப்பதன் மூலம் அது பண்டாரநாயக்கவுடனும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனும் அதிகரித்த அளவில் இயைந்து போவதற்கான அரசியல் ஆசீர்வாதங்களை ஐக்கிய செயலகம் வழங்கியது.

லங்கா சமசமாஜக் கட்சியின் அரசியல் நெறிகேடுகள், அது பண்டாரநாயக்கவின் விதவை மனைவியால் தலைமை தாங்கப்பட்ட ஸ்ரீ.ல.சு.க. தலைமையிலான அரசாங்கத்தினுள் 1964ல் நுழைந்து கொண்டதோடு உச்சக்கட்டத்தை அடைந்தது. புதிய சமசமாஜக் கட்சி அமைச்சர்களின் முதல் நடவடிக்கைகளில் ஒன்றாக மகாநாயக்க தேரர்களின் ஆசீர்வாதங்களைப் பெறுவதும், புத்தரின் பல் எனக் கூறிக்கொள்ளப்படும் புனித சின்னம் கொண்ட தலதா மாளிகைக்குச் சென்று, பகிரங்க வழிபாட்டில் ஈடுபடுவதுமாக விளங்கியது. ல.ச.ச.க. தமிழ் பேசும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக நீண்டகாலமாக நடாத்தி வந்த போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு, தோட்டத் தொழிலாளர்களின் பெரும்பான்மையினரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் பண்டாரநாயக்கவுக்கும் இந்திய பிரதமர் சாஸ்திரிக்கும் இடையியான உடன்படிக்கையை ஆதரித்தது.
1970ல் சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கம் மீண்டும் பதவிக்கு வந்தபோது ல.ச.ச.கட்சி அமைச்சர் கொல்வின்.ஆர்.டி சில்வா 1940 பதுகளிலும் 1950 பதுகளிலும் தாம் கூறியவற்றுக்கும் எழுதியவற்றுக்கும் நேர் எதிரான முறையில் ஒரு புதிய அரசியலமைப்புச் சட்டத்தை வரைவதற்குப் பொறுப்பாக இருந்தார். இது புத்த மதத்தை அரச மதமாகவும், சிங்களத்தை அரசாங்க மொழியாகவும் உள்ளடக்கி இருந்தது.

1
970பகளில் அமைக்கப்பட்ட பண்டாரநாயக்க அரசாங்கம் இன்னும் பல பாகுபாடுகள் கொண்ட நடவடிக்கைகளையும் அறிமுகம் செய்தது. பல்கலைக்கழகங்களில் சிங்கள மாணவர்களின் எண்ணிக்கை மேலாதிக்கம் பெறும் விதத்தில் இனக்குழு கோாட்டா முறை அமுலுக்கு வந்தது. இது தமிழர்களுக்கு எதிராக அப்பட்டமாகத் தயார் செய்யப்பட்ட கேவலமான தரப்படுத்தல் (Standardisation) முறை மூலம் மேலும் பலப்படுத்தப்பட்டது. அரசாங்கத் துறையிலும் இத்தகைய விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டன. புதிதாக தேசியமயமாக்கப்பட்ட வர்த்தகக் கூட்டுத்தாபனங்களின் உயர் பதவிகள் அனைத்தும் சிங்களம் பேசும் பெளத்தர்களுக்கே வழங்கப்பட்டன. தமிழ் பேசும் தொழிலாளர்களை பாரியளவில் கொண்டிருந்த பெருந்தோட்டத் துறையிலும் கூட இப்படியே நடந்தது. அரசாங்கக் கடன்களும், போக்குவரத்து, தொடர்பு சாதன அமைப்புக்களும் தமிழர்களுக்கு எதிராக சிங்கள வர்த்தகர்களுக்கு நலன் பயக்கும் முறையில் ஏற்படுத்தப்பட்டன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிஜ மூல வேர்கள் இங்குதான் இருக்கின்றனவே அல்லாது கடந்த காலத்தில் இருந்த தமிழ் இந்து மறுமலர்ச்சி இயக்கத்தில் அல்ல.

பண்டாரநாயக்கவின் கொள்கைகள் இனப் பதட்ட நிலைமைக்கு எண்ணெய் வார்த்ததுடன், விரக்திகளை இன, மத அடிப்படையில் வழி திருப்பி விட்டது. இத்தகைய ஒரு சூழ்நிலையில் புதிய அரசியல் போக்குகள் தலையெடுத்தன. வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்கள் அரசாங்கத்தின் திட்டமிட்ட பாகுபாடுகளாலும் தமிழ் அரசியல் கட்சிகளின் சமரச போக்கினாலும் விரக்தியடைந்தனர். இதனால் இவர்கள் அதிகரித்த அளவில் போர்க்குணம் கொண்ட பிரிவினைவாதப் பக்கம் திரும்பினர். முதலாளித்துவ தமிழரசுக் கட்சியின் (Federal Party) இளைஞர் அணியின் அங்கத்தவர்கள் மத்தியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஸ்தாபிக்கப்பட்டதுடன், இவர்கள் தமது தனித் தமிழ் ஈழக் கோரிக்கைக்கு ஆதரவாகப் பயங்கரவாத தாக்குதல்களை நடாத்துவதிலும் ஈடுபட்டனர்.

இதற்கு சமாந்தரமாக நாட்டின் தென் பகுதியில் ஒரு போக்கு தலையெடுத்தது. கடந்த காலங்களில் கிராமப்புற மக்களில் கணிசமான பகுதியினர் தாம் முகம் கொடுத்த கடினமான நிலைமையில் இருந்து விடுபட லங்கா சமசமாஜக் கட்சியும், தொழிலாளர் வர்க்கமும் வழிகாட்டும் என எதிர்பார்த்தனர். ஆனால் இப்போது ல.ச.ச.கட்சி வேலையின்மைக்கும் பரந்தளவிலான வறுமைக்கும் காரணமான ஒரு அரசாங்கத்தின் பாகமாகியது. அதிருப்தி கண்ட சிங்கள கிராமப்புற இளைஞர்கள் தமது தலைவிதிக்கு தொடர்ந்தும் ஒரு வர்க்கத் தீர்வைக் காணும் சாத்தியம் இருப்பதாகக் காணாததோடு இவர்கள் ஜே.வி.பி.யினாலும் ஈர்க்கப்பட்டனர். இந்த ஜே.வி.பீ. மாஓவாதம் (Maoism), காஸ்ரோவாதம் (Castroism), சிங்கள இனவாதம் போன்றவற்றின் கலவையை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

இனவாத அடிப்படையிலான இந்தக் குட்டி முதலாளித்துவ இயக்கம் பெரிதும் பிரபல்யம் அடைந்ததற்கான முக்கிய பொறுப்பு லங்கா சமசமாஜக் கட்சியை சார்ந்ததாகும். தனது சோசலிச அடிப்படைக் கொள்கைகளை கைகழுவிவிட்டு விட்டு ஒரு சுயாதீனமானதும் புரட்சிகரமானதுமான தொழிலாள வர்க்க இயக்கம் வளர்ச்சி பெறுவதை தடை செய்தது. முதலாளித்துவத்தினால் உருவாக்கப்பட்ட சமூக நெருக்கடிக்கு தனது சொந்த வர்க்கத் தீர்வை தொழிலாள வர்க்கம் வழங்குவதை இது தடுத்தது. 1953ம் ஆண்டின் ஹர்த்தால், சமசமாஜக் கட்சியின் சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் தொழிலாள வர்க்கம் கணிசமான அளவு சிங்கள, தமிழ் கிராமப்புற ஒடுக்கப்படும் மக்களை தன்பக்கம் வெற்றி கொள்வதற்கான அதன் சக்தியை வெளிக்காட்டியது. சிங்கள பெளத்த இனவாதத்தை தழுவிக் கொண்டதன் மூலம் லங்கா சமசமாஜக் கட்சி இந்த சமூகத் தட்டுக்கள் ஒன்றில் இரு பெரும் முதலாளித்துவக் கட்சிகளில் ஒன்றின் செல்வாக்குக்கு ஆட்படுவதை அல்லது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை நோக்கியும் ஜே.வி.பியின் பக்கமும் திரும்புவதை ஊர்ஜிதம் செய்ததது.

சர்வதேசவாதம்

இப் பதிலை முடிவுக்குக் கொணர்வதற்கு முன்னர் நான் இரண்டு அம்சங்களை மேலும் சுட்டிக் காட்ட வேண்டும்.

சகல குட்டி முதலாளித்துவ தேசியவாதிகளைப் போலவே நீங்களும், மார்க்சிசத்தின் சர்வதேசவாத சுலோகங்களை அலட்சியம் செய்கின்றீர்கள். அவற்றை சாத்தியமற்றதாகவும், கற்பனையானவை ஆகவும் கருதுகின்றீர்கள். ''ஈழம்- சிறிலங்கா ஐக்கிய அரசுகளுக்கான" சோசலிச சமத்துவக் கட்சியின் சுலோகத்தில் உள்ளடங்கியுள்ள உயர்ந்த பார்வை "உண்மையில் மிகவும் கவர்ச்சிகரமானவை" என நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள். அனைத்து நிஜமான சோசலிஸ்டுக்களும் ஒரு "தென் ஆசிய ஐக்கிய அரசுகள்" பற்றியும், பி.நி.வேல்ஸ் செய்தது போல் சில சமயம் ஒரு "உலக ஐக்கிய அரசுகள்" பற்றியும் கூடக் கனவு காணலாம்." ஒரு ஈழம் சிறிலங்கா ஐக்கிய அரசுகள் அமைக்கப்படுமேயானால் அது இறைமை கொண்ட அரசுகளுக்கு இடையேயான இராஜதந்திர பேச்சுவார்த்தைகளின் பெறுபேறாக விளங்கும் எனவும் நீங்கள் எமக்கு மேலும் கூறுகின்றீர்கள்.

மீண்டும் இந்தப் பிரச்சனையை நீங்கள் எழுப்பும் விதம் அதனை அம்பலப்படுத்துவதாக உள்ளது. இது உங்களுக்கு ஒரு சிறிய சொல் (வார்த்தை) பற்றிய பிரச்சனையாக தோன்றலாம், ஆனால் சோசலிச சமத்துவக் கட்சியினால் இலங்கையில் தற்போது முன்வைக்கப்படும் ஈழம்-இலங்கை ஐக்கிய சோசலிச அரசுகள் என்பது ஆசிய ஐக்கிய சோசலிச அரசுகளின் ஒரு பாகமாகும். "சோசலிசம்" என்ற பதத்தைக் கொண்டும் கொண்டிராதமான இரண்டும், நேர் எதிரான இரண்டு முன்நோக்குகள், வேலைத்திட்டங்கள், போராட்ட விதிமுறைகளைக் கொண்டவையாகும். உங்களது வசனத்தில் இப்பதம் (சோசலிசம்) தவிர்க்கப்பட்டுப் போனமை சிலவேளை தற்செயலானதாக இருக்கலாம். ஆனால் தமிழ் ஈழம் ஒரு முதலாளித்துவ அரசா அல்லது ஒரு சோசலிச அரசா என்பதையிட்டு உங்களுக்கு முற்றிலும் அக்கறை கிடையாது என்பதை இது குறைந்தபட்சம் காட்டுகின்றது.

இது ஒரு பெரிதும் அடிப்படையான விடயத்துடன் தொடர்புபட்டது. சோசலிசம் ஆழமான புரட்சிகரக் கிளர்ச்சி எழுச்சிகளின் மூலம் மட்டுமே ஸ்தாபிதம் செய்யப்படும். இலங்கைத் தீவிலும் சரி அல்லது இந்தியத் துணைக் கண்டத்திலும் சரி ஐக்கிய சோசலிச அரசுகள் நீங்கள் குறிப்பிடுவது போல் சுதந்திர அரசுகளும் சமமான அரசுகளும் ஒரு தொடர் சுயாதீனமான நடவடிக்கைகள் மூலம் தோன்றிவிடாது. ஆனால் அது பொது வர்க்கக் கோரிக்கைகளை சூழ பல்வேறுபட்ட இனக்குழு, மொழி, மத பின்னணி கொண்ட தொழிலாளர் வர்க்க, ஒடுக்கப்படும் வெகுஜனங்களை ஒன்று திரட்டும் புரட்சிகரப் போராட்டங்கள் மூலமே தோன்றும். இச்சுலோகம் சிங்கள, தமிழ் தொழிலாளர்களின் புரட்சிகர நடவடிக்கைக்கான ஒரு வழிகாட்டியே அல்லாது முதலாளித்துவ தேசிய அரசுகளுக்கு இடையேயான இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளுக்கான உதவியளிக்கும் வழிகாட்டி அல்ல.

சோவியத் யூனியன் (USSR-சோவியத் சோசலிச குடியரசுகள் ஒன்றியம்) 1917ம் ஆண்டின் புரட்சிகர கிளர்ச்சிகளால் தோன்றியது. அது புரட்சியின் தேட்டங்களைப் பராமரிக்கவும் ஆழமாக்கவுமான ஒரு பொதுப்போராட்டத்தின் மூலம் வேறுபட்ட தேசியப் பின்னணிகளைக் கொண்ட தொழிலாளர்களையும், விவசாயிகள் தட்டினரனரையும் ஒன்றாக ஈர்த்தது. தவிர்க்கமுடியாத விதத்தில் பிற்போக்கானதுடன், மேற்குலகின் சக்திகளுடன் தவிர்க்க முடியாத விதத்தில் பிணக்கப்பட்டுள்ள தேசியப் பிரிவினவாதப் போக்குகள் தலையெடுக்கும் வரை வெகுஜனங்களால் புரட்சிகர தேட்டங்கள் பரந்தளவில் அங்ஙனமே நோக்கப்பட்டன. மேலும் ரஷ்யப் புரட்சியின் பிரமாண்டமான ஈர்க்கும் தன்மை தொழிலாளர் வர்க்கத்துக்கு சோவியத் யூனியனின் எல்லகளை தாண்டிச் சென்றதோடு, ஒரு அனைத்துலக அளவிலான சோசலிச அரசுகளின் பரந்த கூட்டுக்கான ஒரு சாத்தியத்தையும் எடுத்துக் காட்டியது.

கற்பனைக்கு பெரிதும் அப்பாற்பட்ட விதத்தில், பாட்டாளி வர்க்க அனைத்துலகவாத மார்க்சிச முன்நோக்கு, முதலாளித்துவம் உலகப் பொருளாதாரத்தை ஒரு பலம் வாய்ந்த பரஸ்பரம் உறவு கொண்டதுமான முழுமையாக ஒன்றிணைத்துள்ளது என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. கடந்த இரண்டு அல்லது மூன்று தசாப்தங்களாக பூகோளமயமான உற்பத்திப் போக்குகள், கணனிகளையும் தொடர்புசாதன தொழில்நுட்பங்களின் முன்னேற்றத்தையும் அடிப்படையாகக் கொண்டு பல்வேறுபட்ட நாடுகளின் தொழிலாளர்களையும் பரஸ்பரம் சார்ந்திருக்கச் செய்துள்ளது. இலங்கைத் தொழிலாளர்கள் அவர்களின் இன, மத, பின்னணிகள் எதுவாக இருப்பினும் அவர்களது தொழில்களும், சம்பளங்களும் வேலைநிலைமைகளும் தேசிய நிலைமைகளால் அல்லாது சர்வதேச சந்தைகளினாலேயே நிர்ணயம் செய்யப்படுகின்றது என்பதை நன்கு அறிவர். ஒரு முதலாளித்துவ தமிழ் ஈழம் இன்றைய இலங்கை அரசைக் காட்டிலும் பெரிதும் "சுதந்திரம்" ஆனதாக இருக்கும் என்பதும், தொழிலாளர் வர்க்கத்தினதும் ஒடுக்கப்படும் மக்களதும் வாழ்க்கைத் தரங்களை முன்னேற்ற இலாயக்கானதாக இருக்கும் என்பதுமே முற்றிலும் கற்பனாவாதமாக விளங்கும்.

இறுதியாக ஒரு விடயம்

SR ஐ போலவே நீங்களும் சோசலிச சமத்துவக் கட்சி தமிழீழ விடுதலைப் புலிகளின் வேலைத்திட்டத்தினையும் முன்நோக்கினையும் விமர்சனம் செய்வதானது இலங்கை ஆளும் வர்க்கத்தினதும் இராணுவத்தினதும் கரங்களுக்குள் இயங்குவதாக விளங்கும் எனக் கூறுகின்றீர்கள். ஒரு சிறு சாட்சியோ அல்லது சோசலிச சமத்துவக் கட்சியின் கடந்த கால வரலாற்றைப் பற்றி எவ்வித ஆய்வோ செய்யாமல் நீங்கள் எமது கட்சி வடக்கு, கிழக்கில் இருந்து இராணுவத்தை உடனடியாக வாபஸ் பெறும்படி கோரியுள்ளதையும் பொருட்படுத்தாமல் சோசலிச சமத்துவக் கட்சி, தமிழீழ விடுதலைப் புலிகளை எதிர்ப்பதன் காரணமாகவே அதற்கு தேர்தலில் போட்டியிடும் உத்தியோகபூர்வமான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாகவும் யுத்தப் பிராந்தியங்களில் இராணுவக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதிகளில் செயற்பட இடமளிக்கப்பட்டுள்ளதாகவும் வாதிக்கின்றீர்கள்.

ஆரம்ப காலத்தில் இருந்தே சந்தர்ப்பவாதிகள், விமர்சனம் செய்வது, பிற்போக்கு காட்டிகொடுப்பிற்கு சமமானது என்ற மார்க்சிசத்திற்கு எதிரான இதே உழுத்துப்போன வாதத்தையே பயன்படுத்தி வந்துள்ளனர். ட்ரொட்ஸ்கிச இயக்கம் இந்த வகையான சேறடிப்புகளுக்கு நன்கு பழக்கப்பட்டது. சோவியத் அதிகாரத்துவத்தின் கொள்கைகள், ஹிட்லரின் கரங்களுக்குள் விளயாடுவதாகும் என்ற அடிப்படையில் அவரின் விமர்சனங்களுக்காக ஸ்ராலின் ட்ரொட்ஸ்கியை ஒரு ''பாசிஸ்ட்'' என பெயர் சூட்டினார். பின்னர் ஸ்ராலின் பல்லாயிரக் கணக்கான ட்ரொட்ஸ்கிஸ்டுகளை உடல் ரீதியில் ஒழித்துக் கட்ட முன்னேறியதோடு மட்டும் அல்லாது அக்டோபர் புரட்சியுடன் எந்தவொரு தொடர்புகளை கொண்டிருந்தவர்களை மட்டுமல்லாது உண்மையான அல்லது விமர்சன ரீதியிலான கருத்துக்களை வெளியிட்டவர்களையும் ஒழித்துக் கட்டினார். SR இன் கூற்றின்படி, வியட்னாமில் ஸ்ராலினின் கையாளாக விளங்கிய ஹோசிமினுக்கு விமர்சனமற்ற ஆதரவு வழங்கப்பட்டிருக்க வேண்டும். வியட்னாமில் 1940பதுகளில் ஏகாதிபத்தியத்துடன் ஹோசிமின் கொண்டிருந்த உறவுகள் அரசியல் ரீதியில் அம்பலப்படுத்தப்படுவதைத் தடுக்கவே அவர் முன்னணி ட்ரொட்ஸ்கிஸ்டுகளை படுகொலை செய்தார்.

சோசலிச சமத்துவக் கட்சி இராணுவத்தை வாபஸ் பெறக் கோருவதும், விடுதலைப் புலிகளை விமர்சனம் செய்வதும் ஒன்றும் புதியவை அல்ல. சோசலிச சமத்துவக் கட்சியை தேர்தலில் போட்டியிட அங்கீகரிப்பதற்கு பல தசாப்தங்களாக நிராகரித்ததன் பின்னர் இலங்கை அரசு தனது மனதை திடீரென மாற்றி அதனை அங்கீகரிக்கத் தீர்மானித்ததற்கு காரணம், கொழும்பில் உக்கிரம் கண்டு வரும் அரசியல் நெருக்கடியினால் அரசாங்கத்திற்கும் யுத்தத்திற்கும் எதிரான கவனத்தை ஈர்க்கும் மையமாக சோசலிச சமத்துவக் கட்சி மாறுவதைத் தடை செய்யவுமாகும். சோசலிச சமத்துவக் கட்சிக்கு உத்தியோகபூர்வ அங்கீகாரம் அளிப்பதன் மூலம் அதன் கொள்கைகளை மாற்றியமைக்கவும் பலவீனப்படுத்தவும் தூண்டலாம் என எண்ணியிருக்கலாம்? இந்தச் சவாலுக்கான பதில், சோ.ச.கட்சித் தலைமையினால் அதன் தேர்தல் அறிக்கையிலும் இன்னும் பல கட்டுரைகளிலும் வழங்கப்பட்டது. அது தேர்தலை அரசாங்கத்தை கண்டனம் செய்யவும், யுத்தத்தை எதிர்க்கவும், சோசலிச கொள்கைகளுக்கான போராட்டத்தைத் தொடரவும் பயன்படுத்தியது.

நாட்டின் யுத்தப் பிராந்தியங்களிலோ அல்லது இலங்கையில் எந்தவொரு பகுதியிலோ செயற்படுவதற்கு சோ.ச.கட்சி கொண்டிருந்த வல்லமை, கட்சி என்றும் அதன் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்திற்கு தொழிலாளர் வர்க்கத்திடமும் ஒடுக்கப்படும் மக்களிடையேயும் ஆதரவு திரட்டப் போராடும் கட்சியின் வல்லமையில் தங்கியிருந்தது. சோ.ச.கட்சி பொலிஸ் கைகளில் இருந்த தனது அங்கத்தவர்கள விடுதலை செய்வதற்காக மட்டும் பிரச்சார இயக்கங்களை நடாத்தவில்ல. மாறாக வன்னி மாவட்டத்தில் அரை-அரச அதிகாரிகளாக தொழிற்பட்டுவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் 1998ல் தனது நான்கு அங்கத்தவர்கள் அநியாயமாக முறையில் தடுத்து வைக்கப்பட்டதற்கு எதிராகவும் போராட்டத்தை நடாத்தியது.

ட்சியை வாயடைக்கச் செய்ய தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையும், இலங்கை அரசு கையாளும் அதே விதிமுறைகளைக் கையாள்வது இவற்றுக்கு இடையேயான வர்க்க ஐக்கியத்தை எடுத்துக் காட்டுகின்றது. வேறுபட்ட நிலைப்பாடுகளில் இருந்து இவ்விருதரப்பினரும் தொழிலாளர் வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட சோசலிச சமத்துவக் கட்சியின் புரட்சிகர வேலைத்திட்டத்தின் மீது ஆழமான எதிர்ப்பைக் கொண்டுள்ளனர்.

சோசலிச சமத்துவக் கட்சி ஏதோ ஒரு வழியில் இராணுவத்திற்கு உதவி செய்வதாக காட்ட நீங்கள் செய்யும் முயற்சிகள் சோசலிச சமத்துவக் கட்சி தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறுவதை தடை செய்வதற்கு என சிருஷ்டிக்கப்பட்ட முற்று முழுதான ஒரு கட்டுக் கதையாகும். மேலும் இது, இம்முயற்சிகள் தோல்வியடையும்போது சோசலிச சமத்துவக் கட்சியின் விமர்சனங்களை வாயடைக்க செய்யும் ஏனைய விதிமுறைகளை கையாள்வதை நியாயப்படுத்தச் செய்யும் ஒன்றாகும். ஆனால் சிலவேளை நீங்கள் எழுதியவை உள்நோக்கமின்றி செய்யப்பட்டதாக இருப்பின், அந்நிலையில் நாம் உங்கள் மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை வாபஸ் பெற்றுக்கொள்ளும் விதத்திலும் சோசலிச சமத்துவக் கட்சி அதன் வேலைத்திட்டத்திற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் உட்பட நாடு பூராவும் பிரச்சாரம் செய்யும் உரிமையை நிபந்தனையற்றுக் கட்டிக் காக்கும் விதத்திலும் ஒரு அறிக்கையை வெளியிடுவதை நாம் வரவேற்கின்றோம்.