World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : பாகிஸ்தான்

Pakistan's military regime rallies to US war coalition

பாக்கிஸ்தான் இராணுவ ஆட்சி அமெரிக்க யுத்த கூட்டணியின் பின்னே அணிதிரள்கிறது

By Keith Jones
25 September 2001

Back to screen version

வாஷிங்டனிடமிருந்து இறுதிக் கெடுவை எதிர் நோக்கிய நிலையில், பாக்கிஸ்தானின் இராணுவ ஆட்சி தலிபானுடனான கூட்டை விரைந்து முறித்துக் கொண்டதுடன், பாக்கிஸ்தானின் எல்லைப் பகுதியிலிருந்து ஆப்கானிஸ்தானைத் தாக்குவதற்கு ஐக்கிய அமெரிக்க அரசுகளின் இராணுவத்திற்கு அனுமதி அளித்துள்ளது.

கடந்த ஞாயிறு அன்று, ஐக்கிய அமெரிக்க அரசுகளின் இராணுவ மற்றும் உளவுத் தேவைகளை கலந்துரையாட உயர்மட்ட அமெரிக்கக் குழு ஒன்று இஸ்லாமாபாத் வந்தடைந்தது. ஆனால் பாக்கிஸ்தானிய அரசாங்க அதிகாரிகள், நாட்டின் வான், தரை மற்றும் கடற்படைத் தளங்களைப் பயன்படுத்துதற்கு அமெரிக்கா கோரும் என எதிர்பார்க்கப்படுவனவுடன் உடன்படுவதற்கான தங்களின் ஆயத்தத்தை ஏற்கனவே சமிக்கை காட்டி உள்ளனர். பாக்கிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் 2,500 கிலோமீட்டர்களை (1,550 மைல்கள்) பகிர்ந்து கொண்டுள்ளன. வெளிப்படையாக, பாக்கிஸ்தானின் இராணுவ ஆட்சியாளர்கள் அடியோடு நிராகரித்த ஒரே ஒத்துழைப்பு வடிவம் எதுவெனில், ஐக்கிய அமெரிக்க அரசுகளின் தலைமையில் ஆப்கானிஸ்தான் மீதான ஆக்கிரமிப்பில் பாக்கிஸ்தானின் ஆயுதம் தாங்கிய படையினர் பங்கேற்க மறுப்பதாகும். பாக்கிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அப்துல் சத்தார், "ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்கு உதவிகளை அளிப்பது சம்பந்தமாக நாம் மட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளோம்" என்றார். ஆனால் "ஐக்கிய அமெரிக்க அரசுகளின் நடவடிக்கைத் திட்டங்களை நாம் அறியும்பொழுது மட்டுமே அவை தீர்மானிக்கப்படும்" என மேலும் கூறினார்.

செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து வந்த உடனடியான நாட்களில், பாக்கிஸ்தான் "நண்பனா அல்லது பகைவனா" என்று அறிவதற்கு வாஷிங்டன் கோரியது மற்றும் ஆப்கானிஸ்தானுடனான மோதலில் ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்கு உதவி செய்யவில்லை எனில் "சிறு அளவிலான யுத்தம்" அனைத்து வகையான நடவடிக்கைகளுடன் தெற்காசிய அரசை அது அச்சுறுத்தும் என அறிவிக்கப்பட்டது.

இப்பொழுது, ஐக்கிய அமெரிக்க அரசுகளின் பாரம்பரிய குளிர் யுத்த கூட்டாளிகளான பாக்கிஸ்தானும் அதன் இராணுவமும் வாஷிங்டனுக்கு சார்பாக பழைய இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டிருக்கின்றன. ஜெனரல் பர்வெஸ் முஷாரப்பின் நாடு முழுதும் ஒளிபரப்பப்பட்ட தொலைக்காட்சி உரையில் பாக்கிஸ்தான் அமெரிக்காவுடன் அணி சேர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டதைத் தொடரந்து, அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு. புஷ், ஜெனரலை அவரது "துணிவான நிலைப்பாட்டிற்காக" புகழ்ந்தார்: "ஆம் (பாக்கிஸ்தான்) ஜனாதிபதிக்கு செயற்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவோம் மற்றும் அவர் அவ்வாறு செய்வார் என நான் நம்புகிறேன்."

செப்டம்பர் 22 அன்று, 1998 மே மாதத்தில் இந்தியா பாக்கிஸ்தானின் பதிலுக்குப் பதில் அணு குண்டு வெடிப்பு சோதனைகளுக்குப் பின்னர் பாக்கிஸ்தான் மற்றும் இந்தியா மீது அமெரிக்கா திணித்திருந்த பொருளாதாரத் தடைகத் தளர்த்துவதாக புஷ் அறிவித்தார். நேற்று, 375 மில்லியன் டொலர்கள் பாக்கிஸ்தானிய கடனுதவிகளை மறு பட்டியலில் சேர்த்தது மற்றும் பன்னாட்டு நிதியம் பாக்கிஸ்தானுக்கு நிதிகளை பெருமளவில் தள்ளுவதற்கு அது ஆதரவளிக்கும் என்பதை சுட்டிக் காட்டி இருக்கிறது.

மத்திய ஆசிய அரசை ஐக்கிய அமெரிக்க அரசுகள் ஆக்கிரமிப்பது ஒருபுறம் இருக்கட்டும், ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதல் பெருமளவிலான பாக்கிஸ்தானியரால் எதிர்க்கப்படும் என்ற உண்மை குறித்து, அமெரிக்க அரசாங்கப் பேச்சாளர்கள் முஷாரப் எடுத்திருக்கும் அபாயகரமான தேர்வுகளை தாங்கள் பாராட்டுவதாக திரும்பத் திரும்பக் கூறினர்.

மேற்கத்திய செய்தி ஊடகங்கள் கிட்டத்தட்ட பல்வேறு வலதுசாரி இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களால் அதிகரித்துவரும் அமெரிக்க எதிர்ப்பு கிளர்ச்சியின் மீது பிரத்தியேகமாக குவிமையப் படுத்தியுள்ளன. நிச்சயமாக, தற்போதைய பாக்கிஸ்தானில் அடிப்படைவாதிகள் குறிப்பிடத்தக்க அரசியல் சக்தியாக அமைந்துள்ளனர் ஏனென்றால், பெரும்பாலும் ஆளும் தட்டு மற்றும் சிறப்பாக இராணுவ மேல்தட்டு அவர்களை ஊக்குவித்து வந்துள்ளது. மதவாத அறிவு எதிர்ப்பு ஒருபுறம் இருக்க, உலகின் மிகப் பெரிய இராணுவ சக்தி ஆப்கானிஸ்தானைக் குறிவைப்பதை பாக்கிஸ்தானியர் எதிர்ப்பதில் பல காரணங்கள் உள்ளன.

யுத்தம், வறுமை, பஞ்சம் மற்றும் அரசியல் ஒடுக்குமுறை ஆகியன ஏற்கனவே முப்பது லட்சம் ஆப்கானியர்களை பாக்கிஸ்தானில் அகதிகளாக தஞ்சம் புக வைத்திருக்கிறது. வடமேற்கு எல்லைப் புற மாகாணத்தில் பெரும்பான்மையினர் உட்பட, பாக்கிஸ்தானிய மக்கட்தொகையில் கணிசமான பகுதியினர் பக்தூண்கள் (Pakthuns) ஆவர். ஆப்கானிஸ்தானில் மிகப்பெரிய இன- மொழிவழிக் குழு இவர்களே ஆவர். வரிசைப்படி கடைசியிலாயினும் சிறப்புப்படியில் வேறாக, மூலோபாய அவசியங்களின் பெயரில் பாக்கிஸ்தானில் இராணுவ சர்வாதிகாரத்தை ஆதரித்துவரும் நீண்ட வரலாற்றை அமெரிக்கா கொண்டுள்ளது. உண்மையில், ஆப்கானிஸ்தானில் பாக்கிஸ்தானை சிக்கவைக்கத் தள்ளியது அமெரிக்காதான். 22 வருடகால காயை வெட்டி காயை நகர்த்தும் இந்த சூதாட்டம் பாக்கிஸ்தானிய மக்களுக்கு அழிவுகரமானது என்பதை நிரூபித்துள்ளது.

முஷாரப்பின் மூலோபாய நகர்வு

1979க்கு முன்னர் பாக்கிஸ்தான் ஆப்கானிஸ்தானில் சிறிதளவே தலையீடு கொண்டிருந்தது, எல்லைக் கோடை அடுத்த பகுதியில் சோவியத் செல்வாக்கு மண்டலத்தில் ஆப்கான் இருந்தது என்று அமெரிக்கா ஏற்றுக்கொள்வதைப் போல பாக்கிஸ்தானும் ஏற்றுக்கொண்டது. ஆனால் ஆப்கானிஸ்தான் மீதான சோவியத் ஆக்கிரமிப்பினைத் தொடர்ந்து அப்போதிருந்த பாக்கிஸ்தானின் இராணுவ ஆட்சியானது, முன்னணி அரசாக சேவை செய்ய வேண்டும் என்ற வாஷிங்டனின் கோரிக்கையை ஆர்வத்துடன் ஏற்றுக் கொண்டது. அது மாபெரும் குளிர் யுத்த மோதலின் கடைசி முன்னணி அரசாக நிரூபிக்கப்பட்டது.

அமெரிக்க ஆதரவு ஜியா-உல்-ஹக்- ஐ, பாக்கிஸ்தானின் வறிய மக்களிடம் தொடக்கத்தில் அதன் ஆதரவைப் பெற்றிருந்த குடியாட்சியை 1977ல் தூக்கி வீசவும், அவரது வலதுசாரி சர்வாதிகாரத்தை நிலைப்படுத்தவும் பாக்கிஸ்தானின் இராணுவத்தை மறு சாதனமயப்படுத்தவும் சக்தியளித்தது. பாரசீக வளைகுடாவின் எண்ணெய் வள சுல்த்தான்களை பாக்கிஸ்தானுக்கும் பாக்கிஸ்தானிய மத அமைப்புக்களுக்கும் மற்றும் ஆப்கானிய எதிர்ப்பினருக்கும் பெரிய அளவில் தொகைகளை வழங்குமாறு அமெரிக்காவும் கூட தூண்டியது. பாக்கிஸ்தானிய உளவு நிறுவனமான இண்டர் சர்வீசஸ் இண்டெலிஜன்ஸ் ஏஜன்சி (ISI) அமெரிக்க ஆதரவு இஸ்லாமிய அடிப்படைவாத ஆப்கானிய எதிர்ப்புக்கு நிதி அளிப்பதற்கான இணைப்பாக சேவை செய்ததால் வரவர அது முக்கியத்துவம் உடையதாக ஆனது. அவர்களின் ஆப்கானிய தொடர்புகள் மூலம், ISI தலைவர்கள் விரைவில் நாட்டின் போதைப் பொருள் மற்றும் சிறிய ஆயுத வியாபாரத்தில் பிரதான நிதியாளர்களாக வளர்ச்சி அடைந்தனர்.

முஸ்லிம் பாக்கிஸ்தானாகவும் இந்து இந்தியாவாகவும் பிரிட்டிஷ் இந்தியாவைப் பிரிவினை செய்வதற்கான நகர்வு மத வகுப்புவாத அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டிருந்த போதிலும், ஜியா-உல்-ஹக் சர்வாதிகார ஆட்சியின் போதுதான் இஸ்லாமிய அடிப்படை வாதிகள் பிரதான அரசியல் சக்தியாக உருவெடுத்தனர். இஸ்லாமியமயமாக இருக்கவேண்டும் என்று கோரியதன் மூலம் ஜியா-உல்-ஹக் அவரது ஆட்சிக்கு முறைமை கொடுக்க விழைந்தார். அவர் மதகுருமார்களின் அரசியல் ஆதரவை வளர்த்தெடுத்ததுடன், றேகன் நிர்வாகத்துடன் சேர்ந்து ஆப்கானிய மத அடிப்படைவாதிகளை சுதந்திரப் போராளிகள் என புகழாரம் செய்தார். இதற்கிடையில் ISI ஆனது, ஆரம்பத்தில் ஆப்கானிஸ்தான் எல்லைப் புறத்தில் உள்ள இரு பாக்கிஸ்தானிய மாகாணங்களில் குர்-ஆன் பள்ளிகள் அல்லது மதரஸ்ஸாக்களை நிறுவ பிரதான ஊக்கம் அளித்ததுடன், அவற்றை சோசலிசத்திற்கு எதிரான தனது நடவடிக்கைக்கு ஆள்சேர்ப்புக் களமாகவும் சித்தாந்த தளமாகவும் கண்டது.

ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் படை வாபஸ் வாங்கப்பட்டதைத் தொடர்ந்து, அதுபோல அமெரிக்காவும் தன்னைப் பின் இழுத்துக்கொண்டது, மேலும் அது சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தினை அந்த அளவு அழித்து பலவீனப்படுத்தியிருந்த நாட்டுக்கு எந்த அர்த்தமுள்ள உதவிகளையும் செய்ய மறுத்தது. அதன் பின்னர், பாக்கிஸ்தானிய மேல்தட்டு அது ஆப்கானிஸ்தானில் வளர்த்தெடுத்திருந்த நிதி மற்றும் மூலோபாய நலன்களைப் பேணவும் விஸ்தரிக்கவும் விழைந்தது. இன்று இஸ்லாமாபாத் எவ்வளவுதான் மறுத்தாலும், தலிபான் ஆட்சி அதிகாரத்திற்கு வர பாக்கிஸ்தானிய அரசாங்கம் ஆதரவளித்தது மற்றும் இந்தியாவுடனான அதன் பகைக்கு, சிறப்பாக இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் கிளர்ச்சிக்கு ஆட்களையும் ஆயுதங்களையும் வழங்குவதில் அது காபூலை பயன்படுத்த விழைந்தது.

இதற்கிடையில், பாக்கிஸ்தானிய மக்கள் இராணுவ மற்றும் அரசியல் தட்டுக்களின் ஆப்கான் சூழ்ச்சி நடவடிக்கைகளின் எண்ணற்ற கேடுதரும் பக்க விளைவுகள் நீடிக்கவிருப்பதைக் கொண்டிருக்கிறார்கள்: ஆப்கானிஸ்தானில் பாக்கிஸ்தானிய தலையீட்டுடன் கட்டுண்டிருக்கும் பொருளாதார மற்றும் அடிப்படைவாதிகளின் நலன்களுடன் நெருக்கமாகத் தொடர்பு கொண்டிருக்கும் அதிகமான சக்திமிக்க பாதுகாப்பு சாதனம்; நன்றாக ஒழுங்கு செய்யப்பட்ட மற்றும் நிதியூட்டப்பட்ட இஸ்லாமிய அரசியல் எதிர்ப்பு; ஷியா மற்றும் சுன்னி பிரிவு முஸ்லிம்களுக்கு இடையிலான வளர்ந்து வரும் குறுங்குழு மோதல்; மற்றும் சட்டவிரோத ஆயுதப் போக்குவரத்து ஆகியனவாகும். இலட்சியங்கள் நிச்சயமாய் அதுவாக இல்லாத அதேவேளை, ஆயுதங்கள் எளிதில் கிடைக்கக்கூடியதாயிருப்பது பாக்கிஸ்தானில் பல இன மோதல்களைத் தூண்டிவிட்டுள்ளது.

ஜியா-உல்-ஹக்கிற்கு அமெரிக்க ஆதரவு மற்றும் ஆப்கான் உள்நாட்டு யுத்தத்தில் அமெரிக்க வழிகாட்டுதலின் பேரிலான பாக்கிஸ்தானின் தலையீடு பாக்கிஸ்தானிய பத்திரிகையாளர் ஒருவரின் பின்வரும் கூற்றால் பண்பிட்டுக் காட்டப்ப்படுகின்றது: "வியட்னாமில் அமெரிக்காவின் படுவீழ்ச்சிக்கு அழகான பழிக்குப்பழியாய் ஆப்கானிஸ்தானில் சோவியத் கரடியைக் கீழே தள்ளி மிதித்துத் துவைத்தது இருந்தது. கையளவேயான பாக்கிஸ்தானிய ஜெனரல்கள் பெரும் விளைவுகளை உருவாக்கவல்ல அந்தப் போராட்டத்தின் பொழுது தங்களை வளப்படுத்திக் கொண்டார்கள். ஆனால் நாட்டிற்கு என்ன கிடைத்தது? துப்பாக்கிகள், வன்முறைகள், போதைப் பொருட்கள் மற்றும் கடல் போன்ற அகதிகள். எல்லாப் புகழும் அமெரிக்காவுக்கு, தொடர்ந்து வரும் எல்லா பாதிப்புகளும் பாக்கிஸ்தானுக்கு. வரலாறு மீண்டும் நடக்கிறது என சிந்திப்பதற்கு எவரையும் மன்னித்துவிட முடியும்."

பாக்கிஸ்தானின் ஏனைய ஜெனரல்களைப் போலவே, முஷாரப்பும் பாக்கிஸ்தானின் ஆப்கானிஸ்தான் சாகசத்தில் மற்றும் தலிபானுக்கான அதன் ஆதரவில் ஆழமாகச் சிக்கியுள்ளார். அவரது 1999 அக்டோபர் ஆட்சிக் கவிழ்ப்பு சதியானது பகுதி அளவில், தெற்காசியாவின் இரு அணு ஆயுத நாடுகளை யுத்தத்தின் விளிம்பிற்குத் தள்ளிய, இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் பாக்கிஸ்தானின் இராணுவ உள்ளேறித் தாக்குதல் தொடர்பாக, தேர்ந்து எடுக்கப்பட்ட பிரதமருடனான அவரது மோதலின் விளைவாக இருந்தது.

இராணுவ சர்வாதிகாரத்திற்கான அமெரிக்க ஆதரவு

ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்கு பாக்கிஸ்தான் ஆதரவை அறிவிக்கும் முஷாரப்பின் செப்டம்பர் 19 பேச்சு இந்திய விரோத வாய்ச்சவடாலுடன் இழைக்கப்பட்டிருந்தது. இந்திய அரசாங்கத்தில் மேலாதிக்கம் செய்யும் இந்து இனவாதிகளின் பாக்கிஸ்தான் விரோத அறிக்கைகளைப் பற்றிக் கொண்டு, முஷாரப் இந்தியாவிற்கெதிரான மாபெரும் போராட்டத்தில் தவிர்க்க முடியாத தந்திரோபாய நகர்வாக தனது நிலையை முன்வைத்தார்.

வாஷிங்டனுக்கும் தலிபானுக்கும் இடையிலான மோதல் பாக்கிஸ்தானிய மேல்தட்டினரைப் பொறுத்தவரை நெருக்கடியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. யுத்தத்தில் இந்தியா பாக்கிஸ்தானைத் தோற்கடித்து நிலைகுலையச் செய்த மற்றும் கிழக்கு பாக்கிஸ்தான் உடைந்து பங்களாதேஷ் ஆக உருவான1971க்குப் பின்னர், எதிர் கொள்ளும் மாபெரும் நெருக்கடி என்று முஷாரப் தாமே அதனை அழைத்தார். இருப்பினும், ஜெனரல்களும் பாக்கிஸ்தானிய ஆளும் வர்க்கமும் வாஷிங்டனுக்கு தமது விசுவாசத்தை நிரூபிப்பதன் மூலம் பேரழிவினை மூலோபாய முன்னேற்றமாக இப்பொழுதும் செய்ய முடியும் என நம்புகின்றனர்.

ஐக்கிய அமெரிக்க அரசுகளும் செய்தி ஊடகங்களும் அவற்றை விளையாட்டு என ஏற்கனவே காட்டி உள்ளன. முஷாரப் அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து, ஜனநாயக வழிமுறைகளை ஒன்றன் பின் ஒன்றாக கைகழுவி வருகிறார். நாட்டின் அரசியல் சட்டத்தை திருத்தி எழுதுவதற்கான உரிமை தமக்கு இருப்பதாகக்கூட உரிமை கற்பித்தார். இருந்தும், 13 மாதங்களில் தேசிய தேர்தல்களை நடத்துவதான தனது உறுதிமொழி சம்பந்தமாக முஷாரப் மெளனத்தில் ஆழ்ந்ததை எதிர்ப்பது என்பது ஒருபுறம் இருக்கட்டும், அதுபற்றி அமெரிக்க நிர்வாகங்களால் ஒன்றும் குறிப்பிடப்படவில்லை. உண்மை என்னவென்றால், ஆப்கானிஸ்தான் மீதான மக்கள் ஆதரவற்ற தாக்குதலை நடத்துவதற்கான தளமாக பாக்கிஸ்தான் பயன்படுத்தப்படுவதற்கு முன்னர், அடிப்படை ஜனநாயக உரிமைகள் அங்கு ஏற்கனவே நசுக்கப்பட்டிருக்கின்றன என்பது ஒரு சாதக அம்சமாக அமெரிக்க அரசாங்க வட்டாரங்களால் கருதப்படுகின்றது. கடந்த வார இறுதிப்பகுதியில் நடைபெற்ற அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடனான கூட்டங்களைத் தொடர்ந்து, எதிர்கால அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அவர்கள் கடுமையாகக் கையாளுவார்கள் என்பதை அவர்கள் அறியச் செய்துள்ளார்கள். ஞாயிறு அன்று அரசாங்க அதிகாரி ஒருவர், "எமது நிலைப்பாடு முற்றிலும் தெளிவானது மற்றும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயலும் எவரும் விட்டுவைக்கப்பட மாட்டார்கள்" என்றார்.

பாக்கிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் பாக்கிஸ்தான் முஸ்லிம் லீக் ஆகிய இரண்டு பிரதான முதலாளித்துவக் கட்சிகளும் முஷாரப்பின் கொள்கை நகர்வுக்கு ஆதரவளித்துள்ளனர். இருந்தும் பாக்கிஸ்தான் மக்கள் கட்சியின் முன்னணி அலுவலர்கள், பாக்கிஸ்தான் இராணுவ ஆட்சியாளர்களுக்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான புதிய கூட்டின் விளைவு மேலும் சர்வாதிகாரத்தை வலியதாக்கிக் கொள்ளச் செய்வதாக இருக்கும் என்பதை மறைத்துள்ளார்கள். "ஜியா கூட ஆப்கான் சீட்டை தனது ஆட்சியை நீட்டிப்பதற்கு பயன்படுத்தினார்" என்று பாக்கிஸ்தான் மக்கள் கட்சி பேச்சாளர் பர்கத்துல்லா பார்பர் கூறினார். "முஷாரப்பினால் தங்களின் சர்வதேச நிகழ்ச்சி நிரல் நிறைவேற்றப்படும் வரை அமெரிக்கர்கள் ஜனநாயகத்திற்காக நெருக்குதல் கொடுக்க மாட்டார்கள்."


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved