World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள்: மத்திய கிழக்கு

Middle East ceasefire aimed at securing Arab support for US war drive

அமெரிக்க யுத்த நகர்வுக்கு அரபு ஆதரவை உறுதிப்படுத்துவதற்கான இலக்கே மத்திய கிழக்கு போர்நிறுத்தம்

By Chris Marsden
21 September 2001

Use this version to print

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனீய நிர்வாகிகளுக்கும் இடையில் இன்னொரு வலுவற்ற போர் நிறுத்த ஒப்பந்தத்தை திணிப்பதில், அமெரிக்காவால் வெளிப்படுத்திக் காட்டப்பட்ட சிடுமூஞ்சித்தனத்திற்கு போட்டியிடக்கூடிய ஒரு சில ராஜதந்திர நடவடிக்கைகள் அங்கு இருக்கக்கூடும். இந்த அண்மைய இடைநிறுத்தத்தின் பிரதான நோக்கம், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அழிவுகரமான இராணுவத் தாக்குதலில் அரபு அரசுகள் தடைச் சொல்லின்றி உடன்படுவதை உறுதிப்படுத்த உதவுவதற்காகும்.

பாலஸ்தீனிய உறுப்பின் தலைவர் யாசிர் அரபாத்தால் செப்டம்பர் 18 அன்று பிரகடனம் செய்யப்பட்ட போர் நிறுத்தம் தனது உயிருக்கு மிக அஞ்சிய மனிதனால் செய்யப்பட்டது. செப்டம்பர் 11 குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் மற்றும் அதனை அமர்த்தும் எந்த ஆட்சியையும் இலக்காகக் கொள்ளும் புஷ் நிர்வாகத்தின் அச்சுறுத்தல் அரபாத்தை முகம் வெளிற வைத்தது. சிறிய அளவினரான இஸ்லாமியவாத போராளிகள் உலக வர்த்தக மையத்தில் குண்டு வெடிப்பு நடத்தியதை கொண்டாடியதன் பின்னர், பாலஸ்தீனியர்களை நசுக்குவதற்கு இஸ்ரேலின் அபரிமிதமான இராணுவ மேலாதிக்கத்தைப் பயன்படுத்துவதை நியாயப் படுத்துவதை இலக்காகக் கொண்ட பிரச்சாரத் தாக்குதலைக் குவிக்க, முன்னாள் இஸ்ரேலிய பிரதமர்கள் எகுட் பராக் மற்றும் பெஞ்சமின் நேதன்யாகு ஆகியோர் கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக்கொண்டனர். "எம்மோடு மோதுகின்ற பயங்கரவாத ஆட்சியை நாம் கட்டாயம் அழிப்போம்" என பாலஸ்தீனிய நிர்வாகத்தைக் குறித்து நெதென்யாகு எழுதினார்.

அரபாத் உடனடியாக முன்னே வந்து பயங்கரவாத தாக்குதல்களைக் கண்டனம் செய்ததுடன், அமெரிக்க அரசாங்கத்துடனும் மக்களுடனும் தனது அனுதாபத்தைத் தெரிவிக்கும் முகமாக குண்டுவெடிப்புத் தாக்குதலை "அனைத்து மனிதகுலத்திற்கும் எதிரான குற்றம்" என அழைத்தார். பின்னர் அதில் பாதிக்கப்பட்டோருக்கு அவர் இரத்ததானம் செய்தது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

சில நாட்களுக்குப் பின்னர் அமெரிக்க அரசு செயலாளர் கொலின் பாவெல், ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் ஜோஸ்ச்கா பிஷர் (Joschka Fischer) மற்றும் ஐ.நா செயலாளர் கோபி அன்னான் ஆகியோருக்கு இடையிலான பல நாட்கள் நடைபெற்ற மும்முரமான தொலைபேசி உரையாடல்களுக்குப் பிறகு, அரபாத் "அனைத்து முனைகளிலும், ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும்" ஒருதலைப்பட்சமான போர்நிறுத்தத்தை பகிரங்கமாக அறிவித்தார். "இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கையைக் கூட தவிர்க்குமாறு" அவர் பாலஸ்தீனியர்களுக்கு அழைப்பு விடுத்தார். இஸ்லாமிய போராளிக் குழுக்கள் இஸ்ரேலுக்குள் தற்கொலைக் குண்டு வெடிப்புக்கள் மற்றும் ஏனைய தாக்குதல்களைத் தொடர்வார்களேயானால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரபாத் அச்சுறுத்தியதாகவும் கூட பாலஸ்தீனிய வட்டாரங்கள் தெரிவித்தன.

மத்திய கிழக்குக்கான ஐ.நா சிறப்புத் தூதுவர் டெர்ஜெ லார்சென் (Terje Larsen) "அரபாத் செப்டம்பர் 11-ம் தேதி மதிப்பை மாற்றி விட்டதாகப் புரிந்து கொள்கிறார்" என்று கூறினார்.

மத்திய கிழக்கின் தொழிலாளர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஐக்கிய அமெரிக்க அரசுகள் பரந்த அளவிலான குரோதத்தினை எதிர் கொள்கையில், தனது யுத்த நாட்டத்துக்குப் பின்னால் அரபு மற்றும் இஸ்லாமிய ஆட்சிகளை கொண்டு வருவதற்கான அதன் முயற்சிகளைத் தொடரக்கூடிய வகையில், அரபாத்தால் வழங்கப்பட்ட அத்தகைய அறிவித்தல் அத்தியாவசியமானது என புஷ் நிர்வாகம் கருதியது.

செப்டம்பர் 11-ஐத் தொடர்ந்து வந்த நாட்களில், ஐக்கிய அமெரிக்க அரசுகள் எகிப்து மற்றும் சவுதி அரேபியா போன்ற தனது பாரம்பரிய அரபு கூட்டாளிகளிடமிருந்து ஆதரவு அறிக்கைகளை நாடிப் பெறுவதில் வெற்றி அடைந்தது மட்டுமல்லாமல், பாரம்பரியமாய் குரோதமான ஆட்சிகளான ஈரான், லிபியா மற்றும் சிரியா போன்ற நாடுகளிடமிருந்தும் அதற்கு தற்காலிக ஆதரவு மற்றும் விமர்சன ரீதியான ஆதரவு கொடுக்கப்பட்டது. கடந்த ஞாயிறு அன்று CBS தொலைக்காட்சியின் "தேசத்தை எதிர்கொள்" என்ற நிகழ்ச்சியில், கொலின் பாவெல் இருநாடுகளும் செய்துள்ள "வெளிவரவிருக்கும்" மற்றும் "சாதக" அறிக்கைகள் ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்கு "புதிய சந்தர்ப்பங்களை" வழங்கியுள்ளன என்றார்.

இந்த நெருக்கடியான நேரத்தில், வெள்ளை மாளிகைக்கு வேண்டாத விஷயமாக இருந்தது எதுவெனில், இஸ்ரேலிய அரசாங்கம் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான அதன் குரோதங்களை ஊக்குவிக்கவும் அதன் மூலம் அமெரிக்காவுடன் ஒத்துழைக்கும் தங்களின் ஆட்சியாளர்களை நோக்கிய அரபு மக்களின் கோபத்தைத் தட்டி எழுப்புவதும் தான்.

ஜனாதிபதி புஷ் பதவி ஏற்றதிலிருந்து, மேற்குக் கரையையும் காசா பகுதியையும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டின் கீழ் திரும்பக் கொண்டு வருவதற்கும் படுகொலைக் கொள்கை மூலம் பாலஸ்தீனிய தலைமையை அகற்றுவதற்கும் பிரதமர் ஏரியல் ஷெரானின் லிக்குட் தலைமையிலான அரசாங்கத்தினால் செய்யப்படும் இராணுவ நடவடிக்கைக்கு மெளன ஆதரவை வழங்கினார். பேச்சுவார்த்தைத் தீர்வை வெளிப்படையாக நிராகரிக்கவும் பாலஸ்தீனியர்களை இராணுவத் தாக்குதலில் நசுக்குதலைக் கையாளுவதற்கான அவரது முயற்சியை ஆதரிக்கவும் ஐக்கிய அமெரிக்க அரசுகளை உடன்படவைப்பதற்கு ஒரு சந்தர்ப்பமாக, ஷெரான் 11-ம் தேதி நிகழ்ச்சிகளைக் கருதினார்.

"சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்" என்ற அமெரிக்காவின் வெளிப்படையான அறிவிப்பிலிருந்து தனக்கான வழிகாட்டல் குறிப்புக்களை எடுத்துக் கொண்டு, ஷெரோன் அரபாத்தை, ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்டு, இஸ்ரேலிய பாராளுமன்றத்தில், "தசாப்தங்களுக்கு முன்னால் விமானக் கடத்தலுக்கு முறைமை அளித்தது அரபாத் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்" என குறிப்பிட்டார். அதன் பின்னர், இஸ்ரேல் 25 பாலஸ்தீனியர்களுக்கு மேல் கொன்றிருக்கிறது, மேற்குக் கரையில் உள்ள பிரதான நகரங்களுள் ஒன்றான ரமல்லாவிற்குள் டாங்கிகள் அனுப்பப்பட்டன, ஜெரிகோவிற்கு இராணுவம் அனுப்பப்பட்டது, ஜெனின் புறஎல்லையைச் சுற்றிலும் தனது துருப்புக்களால் அகழியிட்டு அரண் செய்துகொண்டது, பாலஸ்தீனீய பொலிசாருக்கு எதிராக ஏவுகணைத் தாக்குதலைத் தொடுத்தது மற்றும் காசாவில் உள்ள பாதுகாப்பு சுற்றடைப்பு மேலும் ஏவுகணைத் தாக்குதலைத் தொடுத்தது மற்றும் பெத்லஹேம் புறநகர் பகுதியில் குண்டு வீச டாங்கிகிளைப் பயன்படுத்தியது.

பாலஸ்தீனியர்களை விருப்பம்போல் தாக்குவதற்கு, ஏற்கனவே கையொப்பமிடப்பட்ட வெற்றுத் தாள் தனக்கு வழங்கப்பட்டிருந்ததாக நம்பிக்கை கொண்டு, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் பின்யமின் பென் எலியசர் கடந்த வெள்ளிக் கிழமை, "உலகின் எஞ்சிய பகுதிகள் முற்றிலும் அமைதியாய் இருக்க ஜெனின், கபாட்டியே மற்றும் தம்முன் (Jenin, Kabatyeh and Tammun) ஆகிய இடங்களில் 14 பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளோம் என்பது உண்மை. அது அரபாத்திற்கு பேரிழப்பு" என்று செருக்குடன் கூறினார்.

இறுதியில், கடந்த ஞாயிறு அன்று ஷெரோன் தனது வெளியுறவு அமைச்சரான தொழிற் கட்சியின் ஷிமோன் பெரசுக்கும் அரபாத்திற்கும் இடையில் நடைபெறுவதாகத் திட்டமிடப்பட்டிருந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறாது எனக் கூறினார். இதற்கு அடுத்தநாள், பாலஸ்தீனியர்களை அடைத்துவிடும் தமது திட்டத்தின் ஒரு பகுதியாக, இஸ்ரேலின் 1967க்கு முன்னரான எல்லைகளில்- மேற்குக்கரையில் பச்சைக் கோட்டை அடுத்துள்ள பகுதியில் 30 கிலோ மீட்டர் அளவுக்கு "மூடப்பட்ட இராணுவ மண்டலத்தை" நிறுவிக் கொண்டிருந்ததாக இஸ்ரேல் அறிவித்தது. அண்மையில் ஷெரோனின் அமைச்சரவைதான் அத்திட்டத்தை ரத்து செய்தது, ஆனால் இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ஷால் மொபாஸ்ஜ், தான் இப்போது இந்த நகர்வுக்கு அங்கீகாரம் பெற்றுவிட்டதாக இஸ்ரேலிய தொலைக் காட்சிக்கு குறிப்பிடுகையில், "நாம் ஒரு வாரத்திற்குள் அதனை அமுல்படுத்துவோம்" என்றார்.

இருப்பினும், குறுகிய காலத்தில், ஷெரோன் தனது நடவடிக்கைகளுக்கு ஐக்கிய அமெரிக்க அரசுகளது ஆதரவை எதிர்பார்ப்பதில் பெரும் அரசியல் தவறான கணிப்பைச் செய்தார். பதிலாக, பாலஸ்தீனியர்களுடனான மோதலில் இருந்து பின்வாங்கிக் கொள்ளுமாறு இஸ்ரேலை நிர்ப்பந்தப் படுத்துவதற்கான இராஜதந்திர ரீதியான தாக்குதலுக்கு தானே குவிமையமானதைக் கண்டார்.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசியல் ஸ்தானிகர்கள் செய்தி ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கையில், ஷெரோன் உடனான தங்களின் மனக்குறையை என்றுமில்லாத வகையில் வெளிப்படுத்தினர். ஒரு அமெரிக்க அதிகாரி பின்வருமாறு புகார் கூறினார்: "என்ன நடந்தது என்பதை மட்டும் பட்டியல் போடுங்கள். ஷெரோன் பாலஸ்தீனிய சமுதாயத்தின் மீதான தாக்குதலை ஊக்குவித்தார்; அவரது ஆட்கள் யாசிர் அரபாத்தை மற்றொரு பின்லேடனாக வண்ணம் தீட்டும் பிரச்சாரத்தை தொடங்கினர்; அவர்கள் மேலும் கூடிய தாக்குதலுக்கான தயாரிப்பை சாத்தியமாக்குவதில் அக்கம் பக்கத்தில் உள்ளோரையும் விலக்கி வருகின்றனர்; மற்றும் அவர்கள் அரபு அரசுகளுடன், சிறப்பாக ஈரான் மற்றும் சிரியாவுடன் எமது கூட்டணி கட்டும் ராஜீய உறவை செயலாக்கத்துடன் தளர்ச்சியுறச் செய்து வருகிறார்கள்."

பிரிட்டனின் வெளியுறவுச் செயலாளர் ஜாக் ஸ்ட்ரா, "கடந்த வாரம் இந்தப் பகுதியில் வன்முறை அதிகரித்துவருவதால் நாங்கள் அனைவரும் ஆழ்ந்த வகையில் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறோம்." என்றார். இன்னும் மிக அப்பட்டமாகச் சொன்னால், பிரிட்டிஷ் மூத்த வெளியுறவு வட்டாரம் ஷெரோனை "மத்திய கிழக்கு மையத்தில் உள்ள புற்று நோய்" என்றது.

பொதுவாக இஸ்ரேலிய சார்பு வெறி கொண்ட பல பத்திரிகைகள் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை இடையூறு செய்வதற்காக ஷெரோனை விமர்சித்தன. ெலாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் ஷெரோன் "பயங்கரவாதத்துக்கு எதிரான அதன் பூகோள ரீதியான சண்டைக்கு.. ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்கு மிக உதவி செய்ய வேண்டியது தேவையானது. வெறுப்பின் தூதுவர்களை எதிர்த்துப் போரிடும் கூட்டணியின் பகுதியாக அரபு தேசங்கள் ஆவது ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்கு தேவைப்படுகிறது.. பயங்கரவாத வலைப்பின்னல்களைக் கண்டு பிடித்து அதை நசுக்குவதற்கான அமெரிக்காவின் உறுதியை, பாலஸ்தீனிய நிர்வாகத்தினை துடைத்துக் கட்டுவதற்கான இஸ்ரேலின் சந்தர்ப்பமாக, ஷெரோன் தப்புக் கணக்கு போட்டுவிடக் கூடாது" என்றது.

போஸ்டன் குளோப், எனும் பத்திரிகை "அமெரிக்க உயர் அதிகாரிகள் ஈரானுடனான சாதகங்களால் ஆன மறைமுக செல்வாக்கை நியாயமானதாகக் கொண்டனர் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் ஏரியல் ஷெரோனின் நடத்தையால் முறையாக ஏமாற்றம் அடைந்தனர்" என எழுதியது.

ஷெரோன் ஆரம்பத்தில் ஏற்க மறுத்தார், ஜெருசலேம் போஸ்ட் பத்திரிகையிடம் பரந்த யுத்தக் கூட்டணியை ஒன்றிணைத்து உருவாக்குதற்கான வாஷிங்டனின் விருப்பத்திற்காக இஸ்ரேலின் தேசிய நலன்களைத் தான் தியாகம் செய்ய முடியாது எனக் கூறினார். "மத்திய கிழக்கில் ஸ்திரத்தன்மை அவர்களுக்கு முக்கியமானதாக இருக்கும் அதேவேளை, இஸ்ரேலுக்கு மிக முக்கியமானது, அந்த ஸ்திரத்தன்மைக்காக நாங்கள் விலை கொடுக்க மாட்டோம், நாங்கள் ஒன்றும் செலுத்த மாட்டோம்" என்று அவர் கூறினார். இருப்பினும், இஸ்ரேல் தனது இருப்புக்கு சார்ந்து இருக்கும், ஐக்கிய அமெரிக்க அரசுகளை அவரால் பகிரங்கமாக மறுத்துப் பேச முடியாது. அவர் தனது தொழிற்கட்சி கூட்டணி பங்காளரோடு பிளவுறுவதற்கு வரும் விளைவின் பொறுப்பை அவரால் ஏற்றுக்கொள்ள முனைதலும் முடியாது, வார முடிவுப் பகுதியில் ராஜினாமா செய்வதற்கு பெரஸால் திரும்பத் திரும்ப கொடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் அதற்கான ஆபத்தான சாத்தியத்தை வழங்கி இருந்தன. லிக்குட் கட்சியின் யுத்த முயற்சிகளுக்கு அரசியல் எதிர்ப்புக்கள் இஸ்ரேலுக்குள்ளே எழுவதற்கான சாத்தியத்தைத் தவிர்ப்பதில் தொழிற் கட்சியின் ஆதரவு ஷெரோனுக்கு தீர்க்கமானதாக இருந்து வருகிறது.

ஆதலால், செப்டம்பர் 18 அன்று, ஜெனின், ஜெரிக்கோ, ரமல்லா மற்றும் ஹேப்ரான் ஆகிய இடங்களிலிருந்து அதன் துருப்புக்களையும் டாங்கிகளையும் பின்னுக்கு இழுத்துக் கொள்ளுமாறு ஷெரோன், இஸ்ரேலிய இராணுவத்திற்கு கட்டளையிட்டார். "பாலஸ்தீனியர்களுக்கு எதிரான எந்த விதமான தாக்குதல் நடவடிக்கைகளையும் தவிர்த்துக் கொள்ளுமாறு" காசா மற்றும் மேற்குக்கரையில் உள்ள தங்களின் படைகளுக்கு கூறப்பட்டிருப்பதாக இஸ்ரேலிய இராணுவமும் கூட கூறியது.

இருப்பினும், தற்போதைய போர் நிறுத்தமோ, அதைத் தொடர்ந்து வரும் எந்த பேச்சுவார்த்தைகளோ சரி பாலஸ்தீனியர்களின் துன்பங்களுக்கு உண்மையான தற்காலிக தீர்வைத் தந்துவிட முடியாது. முதலாவது எடுத்துக்காட்டாக, தற்போதைய போர் இடை நிறுத்தம் கடைப்பிடிக்கப்படும் என்பதற்கு உத்தரவாதம் எதுவும் இல்லை; ஷெரோன் அரசாங்கம் குரோதங்களைப் புதுப்பிப்பதற்கு எந்த சந்தர்ப்பங்களையும் பற்றிக் கொள்ளும். இஸ்ரேலிய அரசாங்கப் பேச்சாளர் ராணன் ஜிஸ்ஸின் பத்திரிக்கைகளிடம் குறிப்பிட்டதாவது, "எங்களைப் பொறுத்தவரை போர் நிறுத்தம் இன்னும் ஆரம்பிக்க வில்லை.... சி.என்.என் தொலைக்காட்சியில் (அரபாத்தால் வழங்கப்பட்ட) அறிக்கை, என்ன எங்களைத் திருப்திப்படுத்தும்?", இரண்டு பக்கங்களிலும் சாவுகளுடன் நேற்று தன்னெழுச்சியான சண்டை தொடர்ந்தது. பெத்லஹேம் அருகில் ஒரு யூதப் பெண் கொல்லப்பட்டதற்குப் பின்னர், மற்றொரு அரசாங்கப் பேச்சாளர் டோர் கோல்ட், இந்த "ரத்தம் தோய்ந்த தாக்குதலின்" வெளிச்சத்தில் பேச்சுவார்த்தை இடம் பெறுமா எனக் கேள்வி கேட்டார். இதற்கான இஸ்ரேலின் எதிர்ச் செயலைப் பற்றி விவாதிக்க ஷெரோன் உடனடியாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டினார்.

மிகவும் அடிப்படை ரீதியில், அரபாத்தும் அவர் பிரதிநிதியாக இருக்கும் அரபு முதலாளித்துவ வர்க்கமும் மத்திய கிழக்கில் உள்ள தொழிலாளர்களையும் விவசாயிகளையும் அரசியல் முட்டுச் சந்துக்குள் இட்டுச் சென்றுள்ளனர். 1993ல் அவர் ஒஸ்லோ உடன்பாட்டில் கையெழுத்திட்டதன் பின்னர், அரபாத் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனும் அதன் பிரதான பிராந்திய பதிலாள் இஸ்ரேலுடனும் பேச்சுவார்த்தைத் தீர்வினை அடைவதன் மூலம் வெட்டிக் குறைக்கப்பட்ட ஒரு வகையான பாலஸ்தீன அரசை ஏற்படுத்த முயன்றுள்ளார். இது பாலஸ்தீனியர்களின் சுயநிர்ணயத்திற்கான ஜனநாயக பூர்வமான அபிலாஷைகளை அடையக்கூடிய வழியாகவும் அவர்களின் வறுமைக்கும் ஒடுக்குமுறைக்கும் முடிவு கட்டும் சமூக அபிவிருத்திக்கான அடிப்படையை வழங்கும் வழியாகவும் கூறப்பட்டது.

இந்த முன்னோக்கு தோல்வி அடைந்து விட்டது, மற்றும் அது பாலஸ்தீனியருக்கு மட்டுமல்ல. செப்டம்பர் 11 நிகழ்ச்சிகள் எந்த அரபு ஆட்சிகளாவது ஏகாதிபத்திய மேலாதிக்கத்திலிருந்து உண்மையான சுதந்திரத்தைப் பெற்றிருக்கின்றன என்ற போலிவாதத்தை அம்பலப்படுத்துகின்றன.

1991ல் ஈராக்கிற்கு எதிரான வளைகுடா யுத்தத்தின் பொழுது செய்ததைப்போல, அரபு அரசுகளின் தலைமைகள் மீண்டும் ஒருமுறை ஐக்கிய அமெரிக்க அரசுகளின் ஆணைகளுக்கும் ஆயுதப்படைகளுக்கும் தங்களைக் கீழ்ப்படுத்திக் கொண்டுள்ளன.

புஷ் நிர்வாகமானது நியூயோர்க் மற்றும் வாஷிங்டன் மீதான பயங்கர குண்டுத்தாக்குதலை மத்தியகிழக்கு மற்றும் இப்பிராந்தியத்தின் எண்ணெய் வளங்களின் மீதான அதன் மேலாதிக்கத்தை ஈவிரக்கமற்ற முறையில் மீள உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கான ஒருசாக்ககுப் போக்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. "பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்" என்று அழைக்கப்படுவதில் கையெழுத்திடுவதன் மூலம் ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்கு தங்களின் எஜமான விசுவாசத்தை அடகு வைக்குமாறு அனைத்து அரபு அரசுகளையும் கோருவதன் மூலம் அது ஆரம்பித்திருக்கிறது. அவர்களின் விசுவாசத்திற்கான முதல் சோதனை ஆப்கானிஸ்தான் மீது குண்டு போடும்பொழுது உறுதிமொழிக்குக் கட்டுப்பட்டிருப்பதாகும்.

மற்றைய கோரிக்கைகள் பின்வருமாறு, ஹெஸ் பொல்லா (Hezbollah) முஸ்லிம் படையை நிராயுத பாணியாக்குதல் அல்லது அவர்களைத் தடை செய்தல், மற்றும் பயங்கரவாதத்துடன் சந்தேகிக்கப்படும் பாலஸ்தீனியர்கள் மற்றும் லெபானிய ஷைட் முஸ்லிம்களை ஒப்படைத்தல் உட்பட ஏழு அம்சங்கள் கொண்ட வேண்டுகோள்களை ஏற்கனவே ஐக்கிய அமெரிக்க அரசுகள் சிரியாவுக்கும் லெபனானுக்கும் விடுத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லெபனிய அதிகாரிகள் அத்தகைய நகர்வு நாட்டின் சமூகக் கட்டுமானத்தைப் பகுதிகளாகப் பிளந்து விடும் என்று எச்சரிக்கை கொண்டிருப்பதாகக் கூறினர்.

புஷ்ஷால் கோரப்படும் அடுத்த முன்பணம் ஐக்கிய அமெரிக்க அரசுகள் பாக்தாத் மீது குண்டு வீசுவதைப் புதுப்பிக்கும் போது அரபு அரசுகள் உறுதி மொழியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதாக இருக்கும் என்பது நிகழத்தக்கதாக அனைவராலும் கருதப்படுகின்றது. சி.ஐ.ஏ கசிய விட்டதன்படி, அது உலக வர்த்தக மையத்தின் உள்ளே முதலாவது விமானத்தை மோதச்செய்த கடத்தல்காரர்களுள் ஒருவராக சாட்டி உரைக்கப்படும் மொகம்மது அட்டா, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவில் ஈராக்கிய உளவு அதிகாரியைச் சந்தித்திருந்தார் என்பது பற்றி புலனாய்வு செய்து கொண்டிருக்கிறது. அத்தகைய சாட்டியுரைத்தல்கள் அமெரிக்கா, ஈராக்கிற்கு எதிரான முழு அளவிலான யுத்தத்தைப் புதுப்பிக்க வழி அமைத்துக் கொடுக்கும்.

அரசியல் ரீதியாக முற்றிலும் வேறான எகிப்து மற்றும் ஈரான் போன்ற ஆட்சிகள், முன்பின் ஆராயாத நடவடிக்கை மக்கள் எதிர்ப்புக்களை கொழுந்து விட்டு எரிய வைக்கும் என்று தங்களின் கவலைகளை ஐக்கிய அமெரிக்க அரசுகளிடம் வெளிப்படுத்தி உள்ளன. இருப்பினும், உலக மக்களால் யுத்தத்துக்கு எதிரான இயக்கத்துக்கு அழைப்பு விடுப்பது ஒரு புறம் இருக்கட்டும், அவைகளுள் ஒன்று கூட அமெரிக்காவின் நோக்கங்களைப் பற்றி கேள்வி எழுப்பவில்லை. இஸ்ரேலின் சியோனிச அரசாங்கத்தில் உள்ள அவர்களின் எதிர் இணையாளர்களைப் போலவே, ஏகாதிபத்திய வல்லரசுகளின் சார்பாக போலீஸ் மற்றும் இராணுவ வழிமுறைகளின் ஊடாக சமூக மற்றும் அரசியல் கருத்து வேறுபாடு கொண்டவர்களை ஒடுக்குதல் என்றவாறாக, மத்திய கிழக்கு விவகாரங்களில் அரபு முதலாளித்துவ வர்க்கத்தின் இன்றியமையாப் பாத்திரம் அம்பலப்பட்டு வருகிறது.

See Also:

27 September 2001

இஸ்ரேல்: தலைமைக்கான தேர்தல் தொழிற்கட்சியை உட்கட்சி குழுச்சண்டை நெருக்கடிக்குள் தள்ளி விட்டுள்ளது

26 September 2001

இஸ்ரேலின் படுகொலை கொள்கையின் அரசியல் முக்கியத்துவம்

14 September 2001

இனவாதம் பற்றிய ஐ.நா மாநாட்டிலிருந்து இஸ்ரேலும் அமெரிக்காவும் வெளிநடப்புச் செய்தன