World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Iraq war dominates NATO summit in Prague

பிராக்கில் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டில் ஈராக் மீதான போர் மேலாதிக்கம் செய்கிறது

By Peter Schwarz
21 November 2002

Use this version to print | Send this link by email | Email the author

கடைசி நேட்டோ உச்சி மாநாடு வாஷிங்டனில் 1999ம் ஆண்டு ஏப்ரலில் யூகோஸ்லாவியாவிற்கு எதிரான போரின்போது நடந்தது. அரசுகளின் தலைவர்கள் அமெரிக்கத் தலைநகரில் ட்ரான்ஸ் அட்லான்டிக் ஒப்பந்தத்தின் ஐம்பதாம் ஆண்டு விழாவைக் கொண்டாடுகையில், நேட்டோ போர்விமானங்கள் பெல்கிரேடில் குண்டு வீசிற்று. நவம்பர் 21, 22 இலான மாநாடு - செக் நாட்டின் தலைநகரான பிராக்கில் ஈராக்குக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான போருக்கான இராணுவ ஏற்பாடுகளே ஆதிக்கம் செய்தன.

ஐ.நா.வின் ஈராக் மீதான முற்றிலுமான ஆயுத களைப்பு ஆணையை --போருக்கான காரணமாகச் செயல்படுவதற்காக-- ஆதரித்துத் தீர்மானத்தை நேட்டோவிடம் எதிர்பார்ப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்தது. பாக்தாதின் மீதான இராணுவ நடவடிக்கைக்கு நேட்டோ மாநாட்டைப் பயன்படுத்தப் போவதாக அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ் அறிவித்தார்.

ஆயினும், தற்போதைய மாநாட்டின் இன்றியமையாமை, அச் சிக்கலையும் தாண்டியது. நேட்டோவின் எதிர்கால மூலோபாயம் -உண்மையில் அதன் இருப்பே பணயத்தில் வைக்கப்பட்டு உள்ளது. புஷ் கொள்கை எனப்படும் -புஷ் அரசாங்கத்தால் அண்மையில் அறிவிக்கப்பட்ட புதிய தேசியப் பாதுகாப்பு மூலோபாயம்- நேட்டோ போன்ற பன்னாட்டுக் கூட்டணி நிர்வாகத்தை தெளிவாகக் கட்டுப்படுத்துகிறது. புஷ் மூலோபாயத்தின் உட்கிடக்கையாக, அமெரிக்காவின் ஏகாதிபத்திய விருப்பங்களை அச்சுறுத்தும் அல்லது எதிர்காலத்தில் அச்சுறுத்தலாய் வரக்கூடிய எந்நாட்டிற்கெதிராயும் நடவடிக்கை எடுக்கக் கூடியதாயும் எடுக்கப்படவேண்டியதாயும் உள்ள வரம்பு மீறிய நடத்தையுள்ளது. இம்மூலோபாயத்தின் விதிமுறைகள், அமெரிக்கா தற்காப்புப் போருக்கான வசதி, குறைந்த அளவு நியாயப்படுத்தலுடனான அணு ஆயுதப் பயன்பாட்டுக்குமான வாய்ப்பை உள்ளடக்கியுள்ளது.

அத்தகைய கட்டமைப்புக்குள்ளே, அமெரிக்கா, தேவையெனக் கருதும்போதெல்லாம் அதை ஆதரிக்கும் துணைப்படை அல்லது இருப்பில் வைத்திருக்கும் படை என்னுமளவுக்கு, நேட்டோவின் பாத்திரம் குறைக்கப்பட்டது. புஷ் அரசாங்கம் அனுமதிக்கப்பட்டால், இராணுவக் கூட்டுக்கான மாதிரியாகவோ முன்னோடியாகவோ ஈராக்குக்கெதிரான போர், வடிவெடுக்கும். புஷ்ஷின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், கொண்டோலெஸ்ஸா ரைஸ் (Condoleezza Rice) -படி, ``நேட்டோ எதிர்காலத்தில் எதிர்கொள்ள வேண்டிய பெரிதும் முக்கியமான, அல்லது குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக வளைகுடா நாடுகள் விளங்கும்,`` என்பதே.

குறிப்பிடும்படியாக, பென்டகன், விரைவில் 7 நாடுகளைச் சேர்த்து தற்போதுள்ள 19ல் இருந்து 26 ஆக்கும். ஒரு கூட்டமைப்பின் முடிவெடுப்புகளால் தான் கட்டுண்டிருப்பதற்கு தன்னை அனுமதிக்கப்போவதில்லை என தெளிவாகக் கூறியுள்ளது. பெரிதும் மேற்கோளாகக் காட்டப்படும், அமெரிக்க பாதுகாப்பு செயலர், டொனால்ட் ரம்ஸ் ஃபெல்ட் "பணிக்காகக் கூட்டணியேயன்றி கூட்டணிக்காய் பணியல்ல`` எனும் கூற்று நேட்டோவுக்கு எதிரான வெளிப்படையான அச்சுறுத்தலாக, ஐரோப்பிய நாடுகளில் புரிந்து கொள்ளப்பட்டு இருக்கின்றது. ஜேர்மனிய இராணுவ நிபுணரின் சொற்களில் கூறுவதாயின், ``தனது தேவைகள் மற்றும் அவசியங்களின் பேரில் அமெரிக்கா தனது கூட்டாளி யாரென முடிவு செய்வதோடு, நேட்டோவை, அமெரிக்கா இயக்கும் இராணுவ நடவடிக்கைகட்கான ஆதார தளமாய்ப் பயன்படுத்தும்,`` எனலாம்.

வாஷிங்டனின் எதிர்பார்த்தல்களுக்குச் சரியாக நடக்க கூட்டணி தவறின் அதன் துணிவு மட்டம் தட்டப்படும்; ஒதுக்கிடப்படும். எடுத்துக்காட்டாக, ஜேர்மானிய அரசாங்க விஷயமாகும். அண்மைய ஜேர்மனியத் தேர்தலின்போது சமூக ஐனநாயகக் கட்சித் தலைவர், ஹெகார்ட் ஷ்ரோடருக்கு (Gerhard Schröder) ஈராக் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா ஏகமனதாகத் திட்டமிடுதல் பற்றிப் பேசினார். ச.ஜ.க - பசுமைக் கட்சி கூட்டரசாங்கம் வாஷிங்டனின் போர்க்கொள்கையைத் தழுவிடினும், மீண்டும் பேர்லினில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு எதிர்ப்பை, புஷ், தொடர்ந்து காட்டி வருகிறார். அமெரிக்க அதிபர், ஷ்ரோடரிடமிருந்து வந்த நேர்முகப் பேட்டிக்கான வேண்டுகளைப் புறக்கணித்து, ஜேர்மனிய முதல்வருடன் பிராக்கில் நேர்முகப் பேட்டிக்கான எண்ணமெதுவுமில்லையெனத் தெளிவுப்படுத்தினார். பிரிட்டிஷ் பிரதமர், பிரான்சு, துருக்கி, ரஷ்ய ஜனாதிபதிகளுடன் தனியே புஷ் சந்திப்பாராயினும் ஜேர்மனிய அதிபரை அலுவலின் போதிலும் அனைத்து அரசுகளின் தலைவர்களும் சம்பந்தப்பட்ட ஒளிப்பட அமர்வின் போதும் மட்டுமே சந்திப்பார்.

ஐரோப்பிய பதிலடி

அமெரிக்காவிலிருந்து சுதந்திரமாக தனது இராணுவத் திறனைப் பெருக்கி, அமெரிக்கா தன் ஆதிக்கத்தை வலியுறுத்துவதை எதிர்ப்பது ஐரோப்பியக் கூட்டமைப்புக்கு இப்போது அவசியமாகிறது. ஆயினும் இந்த வழிகளிலான முன்னேற்றம் மெதுவாயுள்ளது.

ஐரோப்பிய ஒற்றுமைக்கு அடிப்படையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட, மாஸ்டிரிச்ட் நிலைத்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளவாறு, கட்டாய நிதிக்கட்டுப்பாடுகளை நிறைவேற்றும் போராட்டத்தில், ஐரோப்பிய நாடுகளுள் வரவு-செலவுத் திட்ட சரிகட்டல்கள், ஐரோப்பிய நலத்திட்டங்கள் மீது தவிர்க்கவியலாத பெருந்தாக்குதலைத் தந்து, எதிர்ப்பைச் சந்திக்கும் இத்தகைய நிலையில், பேரளவில் நிதி திரட்டுதல் இல்லாது போக, ஐரோப்பா, அமெரிக்காவின் இராணுவ முன்னணியின் பின் வீழலாயிற்று. அதேசமயம், ஐரோப்பிய அரசாங்கங்கள், அமெரிக்க அறைகூவலை எவ்வாறு எதிர்கொள்வது என்பதில் பிளவுபட்டு நின்றன.

அடுத்த ஆண்டு செயலில் ஈடுபடுத்த ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே 60,000 பேர்கொண்ட தலையீட்டிற்கான பலத்த ஐரோப்பிய படையை உருவாக்க முடிவு செய்துள்ளன. ஆயினும் அது நேட்டோவின் உள்ளமைப்பு மற்றும் சடரீதியான ஆதரவைப் பொறுத்தது; மேலும் அந்தக் கூட்டு முயற்சி துருக்கிய வீட்டோவினால் இப்போது தடுக்கப்படுகிறது. நேட்டோ உறுப்பு நாடாகிய துருக்கி, ஐரோப்பியப் படைகளின் தலையீடு பற்றிய எந்த முடிவிலும் பங்கு கொள்ள உரிமைகோரியதை ஐக்கிய ஐரோப்பாவின் உறுப்பு நாடான கிரீஸ், ஐயத்திற்கிடமின்றி மறுத்துள்ளது.

ஐக்கிய ஐரோப்பியப் படை, அமெரிக்காவின் முன்மொழிவான நேட்டோ பதிலடிப் படை (NATO Response Force -NRF) எனும் போட்டியையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நேட்டோ பதிலடிப் படையின் உருவாக்கப் பேச்சுப் நிகழ்ச்சி நிரலில் உள்ளதோடு, அது பற்றிய முடிவு பிராக் மாநாட்டில் எடுக்கப்படவுமுள்ளது. இந்தப் பன்னாட்டுப் படை 21,000 வீரரைக் கொண்டிருக்கும். முதன் முறையாக, குறுகிய கால அறிவிப்பில் உலகின் எவ்விடத்திற்கும் தனது படைகளை அனுப்பி, கூட்டணியை ஆற்றல் பெறச்செய்வதாம். இப்படை தனது சொந்த படையை அணிவகுத்து நடத்தும் கலை அடிப்படையில் இயங்கவும், ஒரு போர் மண்டலத்தில் குறைந்தது ஒரு மாதம் போரிடும்படியாகவும் பலப்படுத்தப்படும்.

இப்படையின் அடிப்படைத் தேவையான தொழில்நுட்ப, போக்குவரத்து மற்றும் படையை அணிவகுத்து நடத்தும் கலை, பெரிய அளவில் நிதியைக் கோரும் -எனினும் ஐக்கிய ஐரோப்பிய மாற்று தலையீட்டிற்கான படைக்கு அது மேலும் கிட்டாது. செப்டம்பர் நேட்டோ கூட்டம், வார்சோவில் கூடிய போது, பாதுகாப்புச் செயலர் ரம்ஸ்ஃபெல்ட் முதன்முதலாக புதிய படை ஒன்றை அமைப்பதற்காக வியப்பூட்டும் முன்மொழிவைச் செய்த பொழுது, அது ஐரோப்பாவின் சுதந்திரமான படையை முறியடிப்பதற்கான ஒன்றாகவே பார்க்கப்பட்டது.

ஐரோப்பிய - அமெரிக்காவிற்கு இடையிலான இறுக்கப் பின்னணியில், ஐரோப்பிய அரசாங்கத் தலைவர்கள், வெளிப்படையாக அமெரிக்க முன்மொழிவை எதிர்க்கும் துணிவற்றவர்கள், பதிலாக, அமெரிக்க அயல்நாட்டுக் கொள்கையைப் பொறுத்தமட்டில், புதிய படை அதற்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு சாதனம் என்பது போல் பேசினர்.

ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் ஜோஸ்க்கா ஃபிஸ்ஸர், அமெரிக்க முயற்சியை வாழ்த்தும் அரசாங்கச் செய்தியில் நேட்டோ மாற்றுப் படையை "ஆக்கபூர்வமான திட்டமாக", அறிவித்தார். இவை, நேட்டோவின் எல்லா தலையீடுகளும் நேட்டோ குழுவால் முடிவு செய்யும் வகையில், சுதந்திர ஐரோப்பியப் படைக்கு இணையான படையெதையும் உண்டாக்காதவாறு, முடிவாக, ஜேர்மன் பாராளுமன்றத்தின் ஒப்புதலுடனேயே அத்தகைய படைகளின் தலையீடுகளில் ஜேர்மனியரின் பங்கேற்பு இருக்கும் என்ற விதிமுறைகளை இவை உள்ளடக்குகின்றன. நடைமுறையில், ஃபிஸ்ஸரின் கட்டுப்பாடுகள், ஐரோப்பிய திட்டங்கள் மற்றும் அமெரிக்காவின் தலையீட்டுப் படைகள் இவற்றுக்கு இடையிலான முக்கிய விஷயங்களில் ஒன்றன்மேலொன்றாய் கவிந்திருந்தன. ஐரோப்பிய ஒப்புதலுடன்தான், இரண்டுமே இயக்கப்படும்; மேலும், நேட்டோவின் உள் அமைப்புக்கள் ஐக்கிய ஐரோப்பிய ஒன்றிய படைக்கு கிட்டக் கூடியதாக இருக்கும்.

அமெரிக்காவின் இராணுவ ஆதிக்கம் வெளிப்படையாய் மென்மேலும் தெரிந்தபின், ஐரோப்பிய அரசாங்கங்கள், அமெரிக்காவின் வலியத்தாக்கும் வெளிநாட்டுக் கொள்கைகளுக்கு தம்மை அனுசரித்துக் கொண்டன. ஈராக்குக்கெதிரான போர் பற்றிய திட்டங்களின் மீது பிராக் மாநாட்டில் எதிர்ப்பேதும் இராது என எதிர்பார்க்கப்பட்டது. பதிலாக, ஐ.நா. ஆதரவுடைய இராணுவ நடவடிக்கைகள் தொடங்குமுன், ஐ.நா.வின் பாதுகாப்புக் குழுவின் 2ஆம் தீர்மானம் தேவை என்ற பிரெஞ்சு கோரிக்கை, முறையாய் கைவிடப்படுமென எதிர்பார்க்கப்பட்டது. இராணுவத் தாக்குதலில் பிரான்சின் பங்களிப்பு முற்றிலும் நடக்கக்கூடியதெனக் கருதப்பட்டது.

தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஈராக்குக்கெதிரான போர் "சாகசமென்றும்", ஜேர்மன் அரசு பங்கேற்காததை தெளிவாய் கூறிய அதன் தலைவர்கள், ஜேர்மன் அரசாங்கம், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைகளுக்குப் பின்னர் இருந்து அதன் கடப்பாட்டை நீட்டித்தது மற்றும் விரிவுபடுத்தியது. இவ்வாறு செய்ததன் மூலம், அது ஈராக்கில் அமெரிக்க ஊடுருவலுக்காக அதனை சுதந்திரமாக விட்டது. மேலும், முன்னால் கூறப்பட்டதற்கு முரணாக, குவைத்தில் நிறுத்தப்பட்டுள்ள பீரங்கிகள் நாட்டில் அவ்வாறே இருக்குமென்றும், போர் நடந்தால், நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுமென்றும் கூறப்பட்டது. நேட்டோ மாநாடு பற்றிய தனது அரசாங்க அறிக்கையில், வெளியுறவு அமைச்சர் ஃபிஸ்ஸர் பற்றி ஒரு குறிப்பு கூடத் தரவில்லை. மாறாக, தனிப்பட்ட முறையில் நேட்டோவின் புதுக்கடமை பற்றிப் பூசி மெழுகியுள்ளார். அது இனியும் பாதுகாப்புக் கூட்டணியாக மட்டுமே இராது, "உலகில் பாதுகாப்பிற்காகவும் நிலைத்த தன்மைக்காகவும் தீர்க்கமான பங்களிப்பு செய்யும்."

ஒவ்வொரு நேட்டோ உறுப்பு நாட்டையும் அரசு இராணுவ வரவு-செலவுத் திட்டங்களில் பேரளவில் ஆயுதக் குவிப்பு முயற்சிகளைக் கட்டாயப்படுத்துகின்ற, "பிராக் தகுதியுடமைக்கான கடப்பாடுகளை" வெளிப்படையாகவே ஆதரித்தார். ஐரோப்பிய அரசாங்கங்களின், அமெரிக்க நிலைகளுக்கேற்ப மாறும் செயல்பாடுகள், பிராக் மாநாட்டில் வெளிப்படல், போருக்குப்பின் தனிமைப்படுத்தப்பட்டு விடுவோமோ, வெறுங்கையாக விடப்படுவோமோ எனும் அச்சத்தின் பாற்பட்டதாகும். போரைத் தடுக்க வியலாத நிலையில், கொள்ளையில் பங்கு கேட்க விரும்புகிறார்கள்.

இதற்கு மேலாக, நேட்டோ சிதறுவதற்கான ஊகம் பற்றியும் அஞ்சுகின்றார்கள். இரண்டாம் உலகப் போருக்குப்பின், அப்போர்களை உருவாக்கிய உள்-ஐரோப்பிய மோதல்களை, அமெரிக்கப் பிரவேசம் தணித்தது. சோவியத் ஒன்றியத்துக்கு எதிரான இராணுவ கூட்டணியாக மட்டுமில்லாமல், நேட்டோ, மேற்கு ஐரோப்பாவினுள்ளேயே இருந்த, புதிய மேலாளுமை அரசுகள் தோன்றும் நிலைமைகளையும் தடுத்தது. நேட்டோவின் பிளவு, குறிப்பாக ஐரோப்பியர்களுக்கு இடையேயான ஜேர்மன், பிரான்சுக்கிடையேயான உறவுகள் பற்றிய கேள்விகளைத் தவறாது மீண்டும் எழுப்பும்.

ஈராக்கை முன்னிட்டு அண்மையில் உண்டான ஒற்றுமை, எவ்வாறாயினும் ஐரோப்பா, ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்கு இடையே வளரும் பதட்டத்தைக் குறைக்காது. இறுதி ஆய்வில், இப்பதட்டங்கள், கச்சாப் பொருட்கள், சந்தைகள் மற்றும் புவிசார் செல்வாக்கிற்கான ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கிடையே வளர்ந்துவரும் போட்டியில் எழுவது தெரிகின்றது.

கிழக்கத்தைய விரிவாக்கம்

பேச்சுப் பட்டியலிலிருந்த மற்றொன்று - கிழக்கு ஐரோப்பாவிலிருந்து ஏழு புது உறுப்பினர்களைச் சேர்ப்பது.

பிராக் மாநாட்டின் 1999ம் ஆண்டு, நேட்டோ முதன்முதலாக - கிழக்குப் பகுதியிலிருந்த மூன்று முன்னாள் உறுப்பினர்களான -போலந்து, ஹங்கேரி மற்றும் செக் குடியரசு- ஐ தனது பட்டியலில் சேர்த்துக்கொண்டது. இப்போது மேலும் நான்கு கிழக்கு ஐரோப்பிய நாடுகளான ருமேனியா, பல்கேரியா, ஸ்லோவேனியா, ஸ்லோவேகியா -மற்றும் மூன்று சோவியத் குடியரசுகளான- லித்துவேனியா, எஸ்தோனியா, லாட்வியாவும் பின் தொடர்கின்றன. மனுச் செய்துள்ள எழுவரும் பிராக்கில், உத்தியோக ரீதியான அழைப்பைப் பெறவும், மே 2004 அளவில், முழுமையாக இணையவும் உள்ளன.

பரஸ்பர அக்கறை கொண்ட விஷயங்களைப் பற்றிப் பேசவும் முடிவு செய்வதற்குமான - நேட்டோ உறுப்பினர்கள் மற்றும் ரஷ்ய நாட்டைப் பிரதிநிதித்துவம் செய்யும் அங்கமான நேட்டோ-ரஷ்ய அவை - ரஷ்யக் குழுவிலிருப்பதால், முன்பு சோவியத் குடியரசிலிருந்து பின்னர் பிரிந்த நாடுகளை நேட்டோவில் ஏற்றல் அக்குழுவில் ரஷ்யாவின் நிலையை பலப்படுத்தும் எனக் கருதி முதலில் தடை செய்ததை, பின்னர் கைவிட்டுவிட்டது.

நேட்டோவின் கிழக்குப் பக்க விரிவு, ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான மற்றொரு சர்ச்சைக்குரிய விஷயமாக இருக்கிறது. சில மனுதாரர் நாடுகள் வாஷிங்டனுக்கு ஆதரவாக - ட்ரோஜன் ஹோர்ஸ் -போரிடும் குதிரையாய்- செயல்படுகிறவர்களென ஐரோப்பியர் ஐயுறுகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளில் ருமேனியா மட்டுமே, அமெரிக்கர்களுக்கு, சர்வதேச நீதிமன்றத்தில் சலுகை வழங்கும், அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது -ஐரோப்பிய ஒன்றியம் தடுக்க முனைந்தவற்றுள் இது முன்னோடியாகும். மற்ற நேட்டோ உறுப்பினர்களுக்கு முரணாக, ருமேனியா ஐக்கிய ஐரோப்பாவிலுமில்லை, அடுத்த மாதம் கோபன்ஹாகனில் நடைபெறவுள்ள ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டில் சேர்க்கப்படவிருக்கும் பத்து நாடுகளிலுமில்லை. அது 2007ல்தான் சேரவுள்ளது.

அதே சமயம், நேட்டோ உறுப்பினரான துருக்கியை, ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்க்க, ஜேர்மனியையும் மற்ற ஐரோப்பிய நாடுகளையும் வாஷிங்டன் பெரிதும் வலியுறுத்துகின்றது. நேட்டோ மாநாட்டை முன்னிட்டு, புஷ், துருக்கியை ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ப்பது பற்றிய தனது குரலை மீண்டும் எழுப்பியுள்ளார். டெனிஷ் அதிபரும் ஐரோப்பிய ஒன்றிய தலைவருமான ஆன்ட்ரெஸ் போர்க் ராஸ்முஸென் (Andres Forgh Rasmussen) இடம் தொலைபேசியில் பேசுகையில், துருக்கியின் அண்மைய அரசியற் சீர்திருத்தங்கள் பற்றிப் புகழ்ந்து, துருக்கியும் மேலையுலகும் ஒன்றுபடுவது, "மூலோபாய முக்கியத்துவம்" உடையது என்றார்.

ஐரோப்பிய ஒன்றியத்துக்குள்ளேயே துருக்கியைச் சேர்ப்பதில் குறிப்பிடத்தக்க அளவு எதிர்ப்புள்ளது. துருக்கி, எந்தவகையான கூட்டு ஐரோப்பிய வெளியுறவுக் கொள்கையையும் எதிர்க்கக் கூடிய வாஷிங்டனின் நண்பன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Top of page