World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : இந்திய உபகண்டம்

Tense military standoff between India and Pakistan continues

இந்தியா பாக்கிஸ்தானுக்கு இடையில் பதட்டம் மிக்க இராணுவ மோதல்நிலை தொடர்கிறது

By Vilani Peiris and Sarath Kumara
5 June 2002

Use this version to print | Send this link by email | Email the author

கடந்த இருநாட்களாக நடைபெற்ற ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டின் ஏற்பாடு செய்த பிராந்திய பாதுகாப்பு மாநாட்டினைத் தொடர்ந்து இந்திய மற்றும் பாக்கிஸ்தானிய இராணுவங்கள் எல்லை நெடுகிலும் தொடர்ந்து தாக்கத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கஜகஸ்தான் தலைநகரான அல்மாட்டியில் பன்னிரண்டு நாடுகள் கலந்துகொண்ட மாநாட்டில் இந்தியப் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாயி மற்றும் பாக்கிஸ்தானிய ஜனாதிபதி பெர்வெஸ் முஷாரப் கலந்து கொண்ட போதிலும்கூட இருபக்கமும் பீரங்கித்தாக்குதல்கள் நடந்தன.

இந்தியா பாக்கிஸ்தான் தலைவர்களுக்கு இடையில் உச்சிமாநாட்டில் பேச்சுவார்த்தைகள் இடம் பெறவில்லை. இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு மற்றும் காஷ்மீரில் "எல்லை தாண்டிய பயங்கரவாதம்" நிறுத்தப்பட்ட பின்னர்தான் பேச்சுவார்த்தைகள் இடம் பெறும் என வலியுறுத்தி, முன்கூட்டி எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் நடைபெறுவதை வாஜ்பாயி நிராகரித்தார். பெரும்பான்மை முஸ்லிம்களைக் கொண்ட மாநிலமான - ஜம்மு மற்றும் காஷ்மீர் மீதான இந்திய கட்டுப்பாட்டை எதிர்த்து பல்வேறு இஸ்லாமியக் குழுக்களால் நடத்தப்படும் தசாப்தகால கெரில்லா யுத்தத்திற்கு இந்தியா பாக்கிஸ்தானைக் குற்றம் சாட்டுகிறது. மாநாட்டில் வாஜ்பாயி "எல்லை தாண்டிய ஊடுருவலை" பாக்கிஸ்தான் தடுத்து நிறுத்தத் தவறிவிட்டது என்றும் "காஷ்மீரில் வன்முறை தொடர்ந்து தணியாதிருக்கிறது" என்றும் கூறினார்.

பாக்கிஸ்தானிய எல்லைப் பகுதிகளை "எந்த பயங்கரவாத நடவடிக்கைக்கும் பயன்படுத்தப்பட" அனுமதிக்க முடியாது என்ற வாக்குறுதியைத் திரும்பக் கூறுவதன் மூலம் முஷாரப் பதிலிறுத்தார். "அதேபோல எல்லைகளை பலவந்தமாக ஆக்கிரமித்துக் கொள்ளும் சில அரசுகளின் கொள்ளை அடிக்கும் கொள்கையை அல்லது தொடர்ந்து தசாப்தங்களாக மக்களுக்கு சுதந்திரத்தை மறுப்பதை எந்த காரணத்தாலும் நாங்கள் மன்னித்துவிட முடியாது" என அவர் கூறிக்கொண்டு, காஷ்மீரில் இந்திய ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். பாக்கிஸ்தான் யுத்தத்தைத் தொடங்காது எனக் கூறும் அதேவேளை, "நாம் மிகவும் கூடிய செயல் துணிவுடனும் தீர்க்கத்துடனும் எம்மைப் பாதுகாப்போம்" என்று முஷாரப் அறிவித்தார்.

மே14 அன்று ஜம்மு மற்றும் காஷ்மீரில் இந்திய இராணுவ முகாம் மீது காஷ்மீரி பிரிவினைவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து அண்மைய பதட்டங்களின் வெடிப்பு நிகழ்ந்தது, அதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 34 பேர்கள் கொல்லப்பட்டனர். பாக்கிஸ்தான் கட்டுப்பாட்டு காஷ்மீரில் உள்ள "பயங்கரவாத தளங்களை" இராணுவம் திருப்பித்தாக்கும் என புதுதில்லி எச்சரித்திருக்கிறது - இந்த நகர்தல் இரு அணு ஆயுத அரசுகளுக்கு இடையில் ஒரேயடியான யுத்தமாக வரைவில் வெடிக்க முடியும். இஸ்லாமிய போராளிகளின் குழு புதுதில்லியில் இந்தியப் பாராளுமன்ற கட்டிடத்தைத் தாக்கியபொழுது, டிசம்பர் 13லிருந்து, எல்லை நெடுகிலும் கனரக கவச வாகனங்கள், போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளின் பின்பலத்துடன் பத்து இலட்சத்திற்கும் அதிகமான துருப்புக்கள் ஒருவரை ஒருவர் எதிர் கொண்டிருக்கின்றனர்.

கடந்த வாரம் தொலைக்காட்சியில் டிசம்பர் 13 தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பதில்கொடுக்கும் என வாஜ்பாய் அறிவித்தார். இந்தியா தற்போது பின்வாங்கி இருப்பதற்கு ஒரே காரணம் "உலகத் தலைவர்களின்" அழுத்தமாகும் என்றார் அவர். ஆனால் "இப்பொழுது இந்தியா அதே அறிவுரையை பின்பற்றாது" என வாஜ்பாயி மேலும் கூறினார்.

கடந்த வார இறுதியில் வாஷிங்டன் போஸ்ட்டில் வந்த கட்டுரையின்படி: "பாக்கிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீருக்குள் இந்திய இராணுவத் தாக்குதலானது 'சூட்டோடு முன்னதாகக் கைப்பற்றித் தனதாக்கும்' புதிய பண்பமைதியின் உணர்வில் திட்டமிடப்பட்டிருக்கிறது." செய்தித்தாள் வெளிப்படையாக கூறாத அதேவேளை, புதுதில்லியில் "புதிய பண்பமைதி" யானது புஷ் நிர்வாகம் மற்றும் "பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடல்" எனும் பாசாங்கின் பேரில் ஆப்கானிஸ்தானில் அதன் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்தும் பெறப்படுகிறது. புதுதில்லி குறைந்த பட்சம் பகிரங்கமாக, தவிர்க்கும் அதேவேளை, வாஷிங்டனின் "பயங்கரவாதத்தின் மீதான பூகோள யுத்தம்" போட்டியாளான பாக்கிஸ்தானுக்கு எதிராக மிகவும் கடுமையான நிலைப்பாட்டை எடுக்க மட்டுமே இந்தியாவிற்கு ஊக்கமளித்தது.

இருதரப்பினரும் அணு ஆயுத மோதல் குறித்து வெளிப்படையாகவே விவாதித்து வருகின்றனர். இந்தியப் பத்திரிக்கையான அவுட் லுக் இற்கு அளித்த நேர்காணலில் பாதுகாப்புச் செயலாளர் யோகேந்திர நரைன் பாக்கிஸ்தானிய அணு ஆயுதத் தாக்குதல் நிகழுமானால், இந்தியா அதன் அணு ஆயுதத்தைக் கொண்டு திருப்பித் தாக்கும், இரண்டுபக்கமும் பரந்த அளவிலான அழிவை உறுதிப்படுத்தும் என எச்சரித்தார். பலவீனமான மரபுவழி படைகளை வைத்திருக்கும் பாக்கிஸ்தான் முதலாவது தாக்குதலின் சாத்தியத்தைப் பற்றி பொருத்தமற்றது என விலக்கி இருக்கவில்லை. அமெரிக்காவுக்கான பாக்கிஸ்தானிய தூதுவர் மலீகா லோதி முதலாவதாக அணுஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம் என்ற இந்தியாவின் உறுதிமொழிகள் "நடவடிக்கைக்கான பொருளில் எந்த விதமான அர்த்தமுமில்லாத" வெறுமனே பகட்டாரவாரப் பேச்சு மற்றும் பிரச்சாரமாகும் என அறிவித்ததன் மூலம் பதிலிறுத்தார்.

இரு நாடுகளும் பெரும் அழிவுகளையும் உயிரிழப்புக்களையும் ஏற்படுத்தவல்ல மரபுவழி ஆயுதங்களை போதுமான அளவில் கொண்டிருக்கின்றன. இந்திய ஆயுதப் படையானது பாக்கிஸ்தானின் 620,000 பேர்களுடன் ஒப்பிடுகையில், 1,263,000 பேர்களைக் கொண்டிருக்கிறது. இந்தியா 730 போர்விமானங்களையும் 27 கப்பல்களையும் 16 நீர்மூழ்கிக் கப்பல்களையும் கொண்டிருக்கின்றது அதேவேளை, பாக்கிஸ்தான் 353 போர் விமானங்களையும், எட்டு கப்பல்களையும் 10 நீர்மூழ்கிக் கப்பல்களையும் முறையே கொண்டிருக்கின்றது. அணுஆயுதங்களின் வகைகளும் எண்ணிக்கையும் ஒவ்வொருவராலும் மிகப் பாதுகாப்புடன் இரகசியமாக வைக்கப்பட்டிருக்கின்றன. எவ்வாறாயினும், ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு நிலையத்தின்படி, இந்தியா 25லிருந்து 40 க்கு இடையிலான அணு ஆயுதங்களையும் பாக்கிஸ்தான் 15லிருந்து 20க்கு இடையிலான அணு ஆயுதங்களையும் கொண்டிருக்கின்றன.

அடிப்படையான அரசியல் பலவீனங்கள்

போருக்கான உந்துதல் இருநாடுகளிலும் ஆழமடைந்துவரும் சமூக மற்றும் அரசியல் நெருக்கடிகளால் தூண்டிவிடப்பட்டு வருகின்றன. இருதரப்பினரும் உள்நாட்டில் தங்களது பலவீன நிலையைத் தாங்கி நிறுத்துவதற்காக காஷ்மீர் மீதான மோதலைச் சுரண்டிக் கொள்கின்றனர். வாஜ்பாயின் பேரினவாத பாரதீய ஜனதாக் கட்சி (பி.ஜே.பி) தொடரான மாநிலத் தேர்தல்களில் தோல்வி அடைந்தது மற்றும் அண்மையில் குஜராத் மாநிலத்தில் முஸ்லிம் விரோத வன்முறையில் அதன் பாத்திரத்திற்காக கண்டனத் தீர்மானத்தை எதிர்கொண்டது.

ஆசியன் டைம்ஸ் எனும் வலைத்தளம் மே31 அன்று குறிப்பிட்டது: "அடுத்த பொதுத்தேர்தலில் பி.ஜே.பி மேலதிக பலத்துடன் அதிகாரத்திற்கு வருமானால், அவ்வாறு செய்வதற்கான அதன் சிறந்த சந்தர்ப்பங்களுள் ஒன்றாக பாக்கிஸ்தான் எதிர்ப்பு தேசிய வெறிக் கொள்கையில் ஆதாயமாக்கிக் கொள்ள மற்றும் முயற்சிப்பதாக அமையும். அதன் ஈர்ப்பானது குஜராத்தில் அது காண்பித்திருக்கும் அப்பட்டமான முஸ்லிம் எதிர்ப்பு மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பின் இரு முனையும் பாதிப்பைக் கொண்ட ஈர்ப்பாக உள்ளுறை ரீதியாக அதிகம் பரந்த அளவினதாக இருக்கிறது."

வலிய இழுக்கும் இந்தியாவின் நிலைப்பாடு "எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை" தடுப்பதற்கு பாக்கிஸ்தான் மீதான புஷ் நிர்வாகத்தின் அழுத்தத்தினால் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. கடந்தவாரம் புஷ் முஷாரப்பிடம் அவர் "சொன்ன சொல்படி நடக்க வேண்டும்" மற்றும் "களத்தில் விளைவைக் காட்ட வேண்டும்" என்று வெளிப்படையாகக் கூறினார். அமெரிக்க அரசு செயலாளர் கொலின் பாவெல் செய்தி ஊடகத்திடம் பின்வருமாறு கூறினார்: "நாங்கள் ஜனாதிபதி முஷாரப்பை அனைத்து விதமான ஊடுருவல் நடவடிக்கைகளையும் கடுமையாக முடிவுக்கு கொண்டுவருமாறு வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம்." வாஷிங்டனின் நிலைப்பாடு இந்திய எதிர்ப்பு போராளிகள் ஜம்மு மற்றும் காஷ்மீருக்குள் கடந்து செல்வதை தடுப்பதற்கு "அவசர நடவடிக்கை" எடுக்குமாறு பாக்கிஸ்தானை வலியுறுத்தும் ஜி-8 தலைவர்களிடமிருந்து வந்த அறிக்கையால் மேலும் வலுப்படுத்தப்பட்டது.

இரு நாடுகளிலுமிருந்து அதன் குடிமக்கள் 63,000 பேரையும் 1,100 அமெரிக்கத் துருப்புக்களையும் சாத்தியமான அளவு வெளியேற்றுவதற்கான அமெரிக்க அரசாங்கத்தின் திட்டம் மீதான அறிக்கைகள் போர் வெடிப்பதற்கான சாத்தியத்தை வாஷிங்டன் கணக்கிட்டிருக்கிறது என்று உறுதிப்படுத்துகிறது. அமெரிக்கா அத்தியாவசியமில்லா தூதரக ஊழியர்களை இருநாடுகளை விட்டும் வெளியேறுமாறு கேட்டுக் கொண்டிருப்பதுடன் குடிமக்களை அங்கு பயணம் செய்யக் கூடாது எனவும் எச்சரித்திருக்கிறது. கனடாவும் பிரிட்டனும் தங்களது குடிமக்களை இந்தியாவையும் பாக்கிஸ்தானையும் விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தி இருக்கிறது மற்றும் அதேவேளை ஐக்கிய நாடுகள் அவையும் பாக்கிஸ்தான் மற்றும் இந்தியாவில் உள்ள தங்களது ஊழியர்களின் குடும்பத்திற்கு அதே அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கின்றது. ஜப்பானும் ஏனைய மேற்கு நாடுகளும் தங்களது குடிமக்களை இந்தியா மற்றும் பாக்கிஸ்தானுக்கு விஜயம் செய்ய வேண்டாம் என்று எச்சரித்துள்ளன.

அமெரிக்க அரசு துணைச் செயலாளர் ரிச்சர்ட் அர்மிட்டேஜ் புதுதில்லி மற்றும் இஸ்லாமாபாத் இரண்டிலும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தற்போது உபகண்டத்தில் இருக்கின்றார். ஜூன் 9 அளவில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் அவரைத் தொடர இருக்கிறார், அவர் முஷாரப் மற்றும் வாஜ்பாயி இருவரையும் சந்திப்பார். இருப்பினும், இந்த ராஜதந்திர சூழ்ச்சி நடவடிக்கைகள் இடம்பெறுகின்ற அதேவேளை, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஏனைய நாடுகள் யுத்தம் பற்றிய அபாயத்தையும் அந்தப் பிராந்தியத்திலிருந்து அவர்களின் குடிமக்களை வெளியேற்றுவதற்காக தயாரிப்பு செய்து கொண்டிருக்கின்றனர்.

கடந்த டிசம்பரில் இராணுவக் கட்டி எழுப்புதலுக்குப் பின்னர், புஷ் நிர்வாகமானது யுத்தம் ஆப்கானிஸ்தானிலும் மற்றும் எங்கிலும் அதன் சொந்த நடவடிக்கைகளை நிலைகுலைவித்துவிட முடியும் என்ற கவலைகொண்டு, இந்தியா மற்றும் பாக்கிஸ்தானில் கட்டுப்படுத்துவதற்கான முயற்சியை செய்திருக்கிறது. அமெரிக்க நலன்களை மேற்கொள்ளும் பொருட்டு சூழ்நிலையை புஷ் நிர்வாகம் சுரண்டிக் கொள்ளுமாறு அழைப்புவிடுக்கும் சக்திகள் வாஷிங்டனில் ஆளும் வட்டாரங்களில் ஏற்கனவே இருக்கின்றனர்.

மூத்த புஷ்ஷின் கீழ் முன்னாள் பாதுகாப்பு துணை செயலாளராக இருந்த ஜெட் பாபின், மே30 அன்று வலதுசாரி வாஷிங்டன் டைம்ஸ் பத்திரிகையில், காஷ்மீர் பிரிவினைவாதக் குழுக்களில் ஒன்றான லஷ்கர்-இ- ஒமார் ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபானுடன் தொடர்பு வைத்துள்ளது. "அவர்களின் (அல்கொய்தா மற்றும் தலிபான்) இருப்பினை உறுதிப்படுத்தப்பட முடியுமானால், நாமும் எமது கூட்டாளிகளும் தாக்குதலுக்காக திரு முஷாரப்பின் அனுமதியைக் கேட்க வேண்டும், மற்றும் நாம் "இல்லை" என்ற பதிலை ஏற்கமாட்டோம் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்" என அவர் கூறினார்.

ஒருதலைப்பட்சமான அமெரிக்க நடவடிக்கையானது பாக்கிஸ்தானில் உள்ள முஷாரப்பின் இராணுவ சர்வாதிகாரத்தை மேலும் நிலைகுலையச் செய்துவிடும், அது செப்டம்பர் 11க்குப் பின்னர் தலிபான் ஆட்சியுடனான அதன் தொடர்பை முறித்துக் கொள்ளும்படியும் இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் நிர்ப்பந்திக்கப்பட்டு வந்திருக்கிறது. இந்நடவடிக்கைகள் இராணுவத்திலும் முன்னர் முஷாரப்பின் பிரதான ஆதரவு தளமாக இருந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மத்தியிலும் ஆழமான பிறழ்வை உருவாக்கி இருக்கிறது. கார்டியன் அண்மையில், "களையெடுப்புகள் இருப்பினும், 2,500 ஐ.எஸ்.ஐ (பாக்கிஸ்தானின் இராணுவ உளவு சேவை) அதிகாரிகளின் கருவில் பல நூறுபேர் அமெரிக்கா உடனான ஜெனரல் முஷாரப்பின் கூட்டை தொடர்ந்து எதிர்த்தனர்" என்று செய்தி வெளியிட்டது.

தற்போதைய இராணுவ மோதல் நிலையிலிருந்து அவர்கள் பின்வாங்கினால் இருதரப்பினரும் அரசியல் ரீதியாக இழப்பதற்கு பெரும் அளவைக் கொண்டிருக்கின்றனர், அதனால்தான் இந்தியா-பாக்கிஸ்தான் எல்லை நெடுகிலும் பத்து இலட்சத்திற்கும் அதிகமான படைவீரர்கள் ஒருவரை ஒருவர் எதிர்கொண்டு இருக்கின்றனர்.

See Also :

இந்திய துணைக்கண்டத்தில் போரை எதிர்ப்பதற்கு ஒரு சோசலிச மூலோபாயம்