World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : இந்தியா-பாகிஸ்தான் முரண்பாடு

Danger of India-Pakistan war remains high despite peace gestures

சமாதான சைகைகள் காட்டப்பட்ட பொழுதும், இந்திய - பாகிஸ்தானிய யுத்த அபாயம் தொடர்ந்தும்் அதிகம்

By Vilani Peiris and Sarath Kumara
13 June 2002

Use this version to print | Send this link by email | Email the author

அளவுக்கு அதிகமாக இன்று நிலவும் இராணுவ பதட்டத்தை ஒரு அல்லது இரு படி குறைக்க கடந்த சில நாட்களுள் இந்தியாவும், பாகிஸ்தானும் பல சிறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இருந்தபொழுதும் நிறை படைக்கலங்கள் தாங்கிய பத்து லட்சம் துருப்புக்கள் எல்லையில் ஒன்றை ஒன்று எதிர் கொண்டு நிற்கும் பொழுது, யுத்தத்திற்கான அபாயம் தொடர்ந்தும் அதிகமாகத்தான் உள்ளது. கடந்த வாரத்தின் பொழுது இந்திய உப கண்டத்திற்கு இரு அமெரிக்க உயர் அதிகாரிகளின் விஜயம் உட்பட, வாஷிங்டனில் இருந்து வந்த நேரடி அழுத்தங்களின் விளைபயன்களே இந்தச் சமாதானத்தை விரும்புவதாகக் காட்டும் சைகைகளாகும்.

"எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு" ஒரு "நிரந்தரமானதும் மற்றும் உடனடியானதுமான" முற்றுப் புள்ளியை வைப்பேன் என்ற உறுதி மொழியை பாகிஸ்தானின் இராணுவ அதிகாரி ஜெனரல் பர்வேஸ் முஷ்ராவிடமிருந்து தான் கறந்தெடுத்துள்ளதாக ஐக்கிய அமெரிக்க அரசின் உதவிச் செயலாளர் றிச்சாட் ஆமிட்டேஜ் கடந்த வெள்ளிக் கிழமை இந்திய அரசாங்கத்திற்கு அறிவித்தார். இதற்கு கைமாறாக முஷ்ராப், ஆமிட்டேஜ் மூலம் இராணுவ மோதுதல் நிலைமையைப் பழைய நிலைமைக்கு குறைத்துக் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கும்படி இந்தியாவைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஐக்கிய அமெரிக்க அரசு செயலாளர் கொலின் பவலுடனான தொலைபேசி உரையாடல் ஒன்றில், இந்திய வெளியுறவு அமைச்சர் யஷ்வன் சிங், முஷ்ராப் இன் அறிக்கை "சரியான திக்கில் எடுத்து வைக்கப்பட்ட காலடி" என்றார். அதோடு அவர் இந்தியா "அதற்கு ஏற்ற முறையிலும் சாதகமான முறையிலும்" செயற்படும் என்றார். இதோடு கட்டுப்பாட்டுக் கோட்டை, பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் இருந்து, இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீருக்குத் தாண்டும் போராளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக உளவுத்துறை அறிக்கைகள் சுட்டிக்காட்டுவதாக இந்திய அதிகாரிகள் முதல்முறையாக கூறியுள்ளனர்.

சச்சைக்குரிய மாநிலமான ஜம்மு காஷ்மீரை இந்தியா தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதை எதிர்க்கும் ஆயுதம் தாங்கிய இஸ்லாமிய குழுக்களை தூண்டிவிடுவதாகப் புது டில்லி திரும்பத் திரும்ப இஸ்லாம்பாத்தைக், குற்றம் சாட்டி வந்துள்ளது. இன்றைய இராணுவக் குவிப்பு, டிசம்பர் 13 இல் இந்திய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மேல் தொடுக்கப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ளது. மே 14ம் தேதி ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவத் தளத்தின் மேல், மேலும் ஒரு தடவை தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர், பிரதம மந்திரி அட்டேல் பிகாரி வாஜ்பாயின் இந்திய அரசாங்கம் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காஷ்மீரில் உள்ள இலக்குகளைத் தான் தாக்கப் போவதாக மிரட்டியது. இச் செயல் தடை எதுவும் அற்ற முழு யுத்தம் ஒன்றின் அபாயத்தை அதனுள் கொண்டுள்ளது.

டிசம்பர் 13ம் தேதி தாக்குதலின் பின், தனது எல்லையினுள் உள்ள வானத்தின் மேல் பாகிஸ்தானிய விமானங்கள் பறப்பதற்கு அது விதித்திருந்த தடையை நீக்கிக் கொள்வதாக இந்தியா ஞாயிற்றுக் கிழமை அறிவித்தது. இருந்தபொழுதும் இரு நாடுகளுக்குமிடையில் விமான, பேரூந்து அல்லது ரயில் இணைப்புகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவில்லை. இந்திய கடற்படையும் அதன் யுத்தக் கப்பல்களை பாகிஸ்தானிய கடல் பகுதிகளுக்கு அண்மித்த பகுதிகளில் இருந்து, பம்பாய் மற்றும் இந்தியாவின் மேற்குக் கரையோரக் கடற்படைத் தளங்களுக்குப் பின்வாங்கச் செய்துள்ளது. ஆனால் இந்தியாவின் கிழக்குக் கரையோரக் கப்பற் தளங்களில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட ஐந்திலும் அதிகமான யுத்தக் கப்பல்களைத் திருப்பி அனுப்புவது பற்றி அது இன்னமும் முடிவெடுக்கவில்லை.

இந்திய அரசாங்கம் திங்கட்கிழமை பாகிஸ்தானுக்கு புதிய தூதுவரைத் தான் நியமிப்பதை அறிவித்தது. கடந்த டிசம்பரில், இதற்கு முந்திய தூதுவர் இந்தியாவிற்குத் திருப்பி அழைக்கப் பட்டிருந்தார். மே மாதத்தில், ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஏற்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா, புது டில்லியில் இருந்த பாகிஸ்தானிய தூதுவரை வெளியேற்றியது.

இருந்தபொழுதும், இந்த நடவடிக்கைகள் அத்தனையும் பெரும்பாலும் ஒப்பனைக்கேயாகும். இந்தியப் போர் கப்பல்களை திருப்பி அழைத்ததை அறிவித்த இந்திய கப்பற்படை அதிகாரி, நாட்டின் இராணுவம் மற்றும் விமானப் படைகள் "போருக்கான உயர் மட்ட தயார் நிலையில்" உள்ளன, என அறிவித்தார். இந்த வாரம் பாகிஸ்தானின் பிரிகேடியர் இஸ்திக்ஹா அலிக்கான் நியூ யோக் டைம்ஸ் பத்திரிகைக்கு "இன்றுவரை கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அப்பால் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. இரு வாரம் தொட்டு மூன்று வாரத்திற்கு முன்னர் இருந்தது போலவே, நிலமை திடீரென மாறக் கூடியதன்மையைக் கொணடுள்ளது. அது தொடர்ந்தும் மிகவும் பயங்கரமாக வெடிக்கக் கூடியதாகவும் மற்றும் அபாயகரமானதாகவும் உள்ளது," என கூறியுள்ளார்.

புது டில்லியும் அதேபோல இஸ்லாமாபாத்தும் இராணுவ வலுச்சண்டை நிலைப்பாட்டை பேணும்படியான நிலைக்கு, அவை அவற்றின் கடுநிலை மத வகுப்புவாதிகளின் அழுத்தங்களின் கீழ் உள்ளன. ரைம்ஸ் ஒஃவ் இந்தியா பத்திரிகையின்படி, வாஜ்பாயின் சொந்த இந்து வெறிப் பாரதீய ஜனதாக் கட்சியினுள்ளேயே, உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வாணி, உயர் மட்ட உச்சி மாநாடு போன்ற "துணிகரமான" ராஜதந்திர தீர்வுக்கான "முயற்சிகளை" ஒதுக்கித் தள்ளியுள்ளார். உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், "இந்தியா ஏற்றவாறு கைமாறு நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்னர், பாகிஸ்த்தான் ஊடுருவலை நிறுத்த வேண்டும், முகாம்களைத் தகர்த்தெறிய வேண்டும், மற்றும் காஷ்மீரினுள் வன்முறையை நிறுத்த வேண்டும்," என அத்வானி நம்புவதாகக் கூறியுள்ளார்.

இந்தியாவிற்கு எந்த ஒரு விட்டுக் கொடுத்தலையும் செய்தால், அது ஒரு தேசத் துரோகம் என கருதும் இஸ்லாமிய அதி தீவிரவாதிகளின் மற்றும் இராணுவப் பகுதியினரின் கணிசமான அளவு அழுத்தத்தின் கீழ் முஷ்ராப் உள்ளார். கடந்த பத்தாண்டுகளில் பாகிஸ்தான் முஸ்லிம் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்தியக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காஷ்மீரை விடுதலை செய்ய, இந்திய விரோத ஆயுதம் ஏந்திய குழுக்களின் நடவடிக்கைகளை "விடுதலைப் போராளிகளின் நடவடிக்களகள்" என்று அரசியல் ரீதியாக ஆதரித்து வந்துள்ளது. திங்கட் கிழமை மூன்று இளைப்பாறிய ஜெனரல்களும், டசின்கணக்கான இஸ்லாமியத் தலைவர்களும் மற்றும் மத குருக்களும் இஸ்லாம்பாத்தில் நடந்த கூட்டம் ஒன்றில், காஷ்மீர் சம்பந்தமாக முஷ்ராபின் நிலைப்பாட்டைக் கண்டித்தனர்.

பாகிஸ்தானிய தலைவரை, தடை செய்யப்பட்ட லஷ்கர் - இ- ரய்பா குழுவின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான ஹபிஸ் அப்துல் ரகுமான் மக்கிய், தாக்கினார். அவர்: "இது ஒரு தீர்க்கமான நேரமாகும். காஷ்மீரிய மக்களுக்கு உதவுவது நமது மத ரீதியன கடமையாகும். அரசாங்கம் மறுபக்கம் திரும்பியுள்ளதோடு காஷ்மீர் கொள்கை சம்பந்தமாக ஒரு அடி பின் வாங்கியுள்ளது. நாம் இவற்றை எதிர்க்க வேண்டும்." என்றார். பாகிஸ்தானின் சக்திவாய்ந்த இராணுவ வேவு அமைப்பின்- அனைத்துப் படைகளின் வேவுத் துறையின் (ஐ. எஸ். ஐ. யின்) முந்தைய தலைவர், ஜெனரல் ஹமித் கல்லும் கூட்டத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர், "மேலை நாடுகள் விடுதலைப் போரை உண்மையில் நசுக்க விரும்புவார்களாயின், அவர்கள் காஷ்மீரிய மக்களுக்குச் சுயநிர்ணய உரிமையைக் கொடுத்து அதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்" என்றார்.

காஷ்மீரில் அமெரிக்க - பிரிட்டிஷ் படைகளுக்கான திட்டம்

தான் இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையிலான இராணுவ மோதுதல் ஏற்படக் கூடிய நிலமையை ஒரு முடிவுக்குக் கொண்டுவர விரும்புவதாக வலியுறுத்தும் புஷ் நிர்வாகம்தான் இந்தப் பதட்ட நிலைமைகளை உருவாக்குவதற்குவதற்கான சாதனமாக இருந்துள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஐக்கிய அமெரிக்க அரசுகளின் ஆக்கிரமிப்பைப் பற்றிப் பிடித்துக் கொண்ட வாஜ்பாய் அரசாங்கம் அதைப் பயன்படுத்திவருகின்றது. அது பாக்கிஸ்தானை "பயங்கரவாதத்தை ஆதரிக்கும் ஒரு நாடு" என்று அதற்கு மேல் பழிப்பெயர் சூட்டப்பட வேண்டும் என்றும், புஷ்ஷினுடைய "பயங்கரவாதத்திற்கு எதிரான பூகோள யுத்தத்தில்" காஷ்மீரும் சேர்க்கப்பட வேண்டும் என்றும், அழைப்புவிட்டது. இப்பிராந்தியத்தில் யுத்தம் ஒன்று வெடிக்குமாயின் அது தனது சொந்தத் திட்டங்களினூடு கீழறித்துச் செல்லும் என்பது பற்றி வாஷிங்டன் தெளிவாக அக்கறை கொண்டுள்ளது. ஆனால் அதேநேரத்தில் அது இந்த நிலமையைத் தனது சொந்த நலன்களை முன் எடுத்துச் செல்லப் பயன்படுத்தி வருகின்றது.

மிகவும் குறிப்பிடத் தக்க ஒரு முயற்சியாகக் காஷ்மீருக்கு, அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் துருப்புக்களைச் "சமாதான பாதுகாப்பாளர்" என்ற போர்வையின் கீழ் அனுப்பி, அவை இந்திய மற்றும் பாகிஸ்தானிய துருப்புக்களுடன் கூட்டு ரோந்து பணிகள், கட்டுப்பாட்டுக் கோட்டில் நடவடிக்கைகளை கண்டறிதல், என்பனவற்றில் ஈடுபடுத்துவதற்கான யோசனை முன் வைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் பிரிட்டனில் இருந்து இயங்கும் இன்டிபென்டன்ற் பத்திரிகை, ரும்ஸ்பெல்ட் 500 துருப்புக்களைக் கொண்ட "அமெரிக்க - பிரிட்டிஷ் கூட்டு இராணுவ கண்டுணரும் படை" பற்றிய யோசனையை அவர் இந்திய மற்றும் பாகிஸ்தானிய தலைவர்களைச் சந்திக்கும் பொழுது முன்வைப்பார் என்ற செய்தியை வெளியிட்டுள்ளது.

வாஜ்பாயினுடனும் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்ணான்டஸ், வெளியுறவு அமைச்சர் சிங், உள்துறை அமைச்சர் அத்வானி மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் பிரயேஷ் மிஸ்ரா உட்பட்ட, மூத்த இந்திய அமைச்சர்களுடன் தான் நடத்திய பேச்சுவார்த்தைகளைப் பற்றி, ரும்ஸ்பெல்ட் திட்டமிட்டே எதையம் துல்லியமாக கூறவில்லை. ஆனால் அவர் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் பொழுது: "ஆம் அந்த விஷயம் (கூட்டு ரோந்து) பேச்சுவார்த்தையின் பொழுது வந்தது. ஆனால் நாம் எந்த ஒரு முடிவுக்கும் வரவில்லை. இந்த விஷயம் கலந்துரையாடப்பட மற்றும் சிந்திக்கப்பட வேண்டியதொரு விஷயம்" என்று ஒத்துக் கொண்டார்.

சிப்பாய்களை மட்டுமல்லாது உயர் தொழில் நுட்ப மின்னியக்கக் கருவிகள் மற்றும் கண்காணிப்புக் கருவிகளையும் கட்டுப்பாட்டுக் கோட்டில் நடக்கும் நடவடிக்கைகளை கண்காணிக்க, நிறுவும் சாத்தியக் கூறைப் பற்றிய யோசனைகளை, அமெரிக்க அதிகாரிகள் முன்வைக்கின்றனர். ரும்ஸ்பெல்ட் நில உணர்ந்தறிக் கருவிகளை, எல்லைப் பகுதிகளில் நாட்டுவதற்கான ஒப்பந்த வரைவு வேலைகளைச் செய்ய அமெரிக்க, பிரிட்டிஷ், இந்திய மற்றும் பாகிஸ்தானிய நிபுணர்களின் கூட்டங்கள் கூட்டப்பட உள்ளன என்பதைத் தெரிவித்தார்.

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் ஜூன் 11ம் தேதி வெளிவந்த குறிப்புரை அமெரிக்க அரசியல் மற்றும் இராணுவ அமைப்புக்களில் எந்த அளவில் எவை விவாதிக்கப்படுகின்றன என்பதை எடுத்துக் காட்டுகின்றது. அது, "கட்டுப்பாட்டுக் கோட்டை நிலைப்படுத்தத் தான் எவ்வளவு தூரம் உள்ளார்ந்த அக்கறையுடன் உள்ளது என்பதை எடுத்துக் காட்ட, ஐக்கிய அமெரிக்க அரசுகள் இந்தியாவிற்கு, அடித்தளமாகத் தரையை கொண்ட மற்றும் வானில் தாங்கிச் செல்லப்படும் கண்காணிப்புக் கருவிகளை இந்தியாவிற்கு அளிக்க வேண்டும். இவை மூலம் புதுடில்லி ஊடுருவலைக் கண்டுபிடித்து அதை நிறுத்த முடியும். தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்த அமெரிக்க கண்காணிப்பு உதவி நுட்பம் மிக்க விமானம் தாங்கிய நுணுகி ஆராய்ந்து நோக்கும் ராடர்கள் மற்றும் இரவுப் பார்வை கொண்ட வீடியோ கமராக்களையும் உள்ளடக்க வேண்டும்", எனக் கூறுகின்றது.

அந்தக் கட்டுரை மேலும் ஒரு நடவடிக்கையை முன்வைத்தது. இந்தியாவிற்கு அமெரிக்க கண்காணிப்பு உதவி பாகிஸ்தான் ஆதரவுடனான ஊடுருவலை நிறுத்தவில்லையாயின், அதன் பின் ஐக்கிய அமெரிக்க அரசுகள் அதன் உதவியை மேலும் அதிகரிக்க முடியும். அது அதன் பிறிடேற்றர் விமானங்களைப் புது டில்லிக்குக் குத்தகைக்கு விட முடியும். அதோடு அது அதன் உளவு செயற்கைக் கோள்கள் கட்டுப்பாட்டுக் கோட்டின் வழியில் கண்காணித்துப் பெற்றுக் கொண்ட தகவல்களைப் பகிர்ந்து கொள்ள முடியும்" ஆப்கானிஸ்தானில் பயன்படுத்தப்பட்ட ஆளற்ற பிறிடேற்றர் டிரோன் விமானங்கள் வெறுமனே செயலூக்கமற்ற முறையில் கண்காணிப்புப் பணிகளில் பயன்படுத்தப் படவில்லை என்பதை இங்கு கவனத்திற் கொள்ள வேண்டும். டாங்கிகளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ள அவற்றைப், படுகொலைகள் செய்யவும் மற்றும் தாக்குதல்களைத் தொடுக்கவும் பயன்படுத்த முடியும்.

இதற்கு முன்னர் இந்தியா, காஷ்மீர் ஒரு உள்நாட்டுப் பிரச்சனை என்று வலியுறுத்திக், காஷ்மீரில் சர்வதேச தலையீட்டை எதிர்த்து வந்தது. ஆனால் இன்று அமெரிக்கா முன்வைக்கும் யோசனைகள் சந்தடியின்றி புதுடில்லியால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. வாஜ்பாய் என்றாலும் சரி, அல்லது அவரது உயர் அமைச்சர்கள் என்றாலும் சரி, இந்தத் திட்டத்தை வேண்டாம் என்று கூறிவிடவில்லை. டைம்ஸ் ஒஃப் இன்டியா பத்திரிகை அதன் ஜூன் 12ம் தேதிய ஆசிரியர் தலையங்கத்தில், இந்திய பாதுகாப்பு ஆய்வாளர்கள் மேலும் கூடுதலாகக் "காஷ்மீரில் அமெரிக்கத் தலையீட்டை" பற்றி ஆதரவாகப் பேசிக் கொள்ளுகின்றார்கள். அவர்கள் "இதிலிருந்து இந்தியா ஆதாயத்தைத்தான் பெறமுடியும்", என்று கூறுகின்றார்கள்.

நேற்று ரும்ஸ்பெல்ட் பாகிஸ்தானுக்குச் செல்லக் கிளம்பிய பொழுது, காஷ்மீரில் தூர விளைவுகளைக் கொண்டுவரக் கூடிய தலையீட்டிற்கு ஐக்கிய அமெரிக்க அரசுகள் திட்டங்களை வகுத்துள்ளது என்பதற்கான சில அறிகுறிகள் இருந்தன. ஐக்கிய அமெரிக்க அரசுகளின் பாதுகாப்புச் செயலாளர் மற்றைய அமெரிக்க அதிகாரிகள் அப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்ட அல் குயெய்டா கெரில்லாக்கள் காஷ்மீருக்கு இடம் பெயர்ந்துள்ளனர் என்று கூறியதை அவரும் மீண்டும் கூறினார். "நான் கட்டுப்பாட்டுக் கோட்டிற்குக் கிட்ட அல் குயெய்டாவினர் செயற்படுகின்றனர் என்பதற்கான அறிகுறிகளைப் பார்த்தேன்" என்று ரும்ஸ்பெல்ட் கூறினார். அதன்பின், "யார், எத்தனை பேர், எங்கு, என்ற அசைக்க முடியாத ஆதாரங்கள் என்னிடம் இல்லை", என அவர் ஒத்துக் கொண்டார்.

ரும்ஸ்பெல்ட்டின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் ஏற்கனவே மேற்கு பாக்கிஸ்தானில் செயற்பட்டுவரும் அமெரிக்க துருப்புகள், பாகிஸ்தானின் கிழக்குப் பகுதிகளிலும் மற்றும் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காஷ்மீருக்குள்ளும் செல்ல விடவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்க ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுக்க முடியும். இந்தியா ஏற்கனவே பாகிஸ்தானிற்குள் உள்ள "பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்கள்" மூடப்படுவதை அமெரிக்கத் துருப்புகள் உறுதிப்படுத்த வேண்டும், என அறைகூவியுள்ளது. ஃபார் ஈஸ்டேன் எக்கனோமிக் றிவியூ அண்மையில் அமெரிக்க இராணுவத் தளபதிகளின் உச்சக் குழுவின் துணைத் தலைவர் ஜெனரல் ஜோன் கீன், அல் குயெய்டாவினைப் பின் தொடர்ந்து அமெரிக்கா பாக்கிஸ்தானுக்கு செல்லும் என கூறியதாக அண்மையில் மேற்கோள் காட்டியுள்ளது.

"சமாதானத்தைப் பாதுகாத்தல்" என்ற பெயரில் அமெரிக்கா, காஷ்மீரில் துருப்புக்களை நிறுத்த, மற்றும் மிக நவீன கண்காணிப்புக் கருவிகளை நிலைநாட்ட வேண்டும் என்ற யோசனையை முன் வைக்கின்றது. ஆனால் இந்திய உப கண்டத்தின் ஒரு உயிர்நாடியான பகுதியில் இராணுவ கால்பிடி ஒன்றை இப்படி நிலை நாட்டுவது, அண்டை நாடான சீனாவின் மேல் வாஷிங்டனுக்கு மின்னியக்க உளவை நடத்துவதற்கு மட்டுமன்றி, அது அண்மையில் அண்டை மத்திய ஆசியாவில் நிறுவியுள்ள அதன் இராணுவ தளங்களுடன் இணைப்புகளை நிலைநாட்டிக் கொள்ளவும் அதற்குப் பரந்த சந்தர்ப்பத்தை அளிக்கின்றது.

நியு யோக் டைம்ஸ் பத்திரிகையில் ஜூன் 10ம் தேதி வெளிவந்த கட்டுரை ஒன்று, இந்திய உபகண்டத்தில் அமெரிக்காவின் தலையீடு, குறிப்பாக இந்தியாவுடனான அதன் வளர்த்துவரும் இராணுவக் கூட்டு என்பன எவ்வளவோ பரந்த மூலோபாயத்தின் ஒரு பகுதி என்று குறிப்பிட்டது. குறிப்பாக, வாஷிங்டனில், சீனாவிற்கு எதிராக இந்தியாவை ஒரு எதிர் எடையாகப் பயன்படுத்தும் சாத்தியக் கூறைப் பற்றிய விவாதங்கள் நடக்கின்றன என்பதை அது குறித்துக் கொண்டது.

சில மூத்த அதிகாரிகள் பத்து லட்சம் இராணுவத்தையும், நூறு கோடி மக்களையும் கொண்ட ஜனநாயக நாடான இந்தியாவுடனான நெருக்கமான அமெரிக்க இராணுவ உறவு, இன்று இல்லாவிட்டாலும் பின்னர், காலத்தின் ஒட்டத்தில், ஒரு அல்லது இரு தசாப்தங்களின் பின்னர், இந்தியா மேலும் பணக்கார நாடாக, மேலும் சக்தி மிக்க நாடாக, ஆன பின்னர், மேல் எழுந்துவரும் தன் முனைப்பாட்சியான சீனாவைத் தயங்க வைக்கும் ஒரு காரணியாக இருக்கும், என அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்" என நியூ யோக் டைமஸ் பத்திரிகை விளக்கியுள்ளது.

மிகவும் எளிதில் ஊறுபாடுகள் ஏற்படக் கூடிய காஷ்மீரில், அமெரிக்க துருப்புக்களையும், கண்காணிப்புக் கருவிகளையும் வைப்பது, இப் பிராந்தியத்திற்கு ஒரு நீண்ட காலத்திற்குச் சமாதானத்தைக் கொண்டுவருவதற்குப் பதிலாக, அது இந்தியா மற்றும் பாக்கிஸ்தானை மட்டுமன்றிச் சீனாவையும் மற்றும் பிராந்தியத்தின் பிரதான வல்லரசுகளையும் மேலும் பரந்த, மேலும் நாசகரமான மோதுதலினுள் இழுத்துச் செல்லுவதற்கான சாத்தியக் கூறிற்கான விதைகளையே அது நாட்ட முடியம்.

See Also :

இந்தியா பாக்கிஸ்தானுக்கு இடையில் பதட்டம் மிக்க இராணுவ மோதல்நிலை தொடர்கிறது

இந்திய துணைக்கண்டத்தில் போரை எதிர்ப்பதற்கு ஒரு சோசலிச மூலோபாயம்

இந்தியாவும் பாகிஸ்தானும் யுத்தத்திலிருந்து பின்வாங்குகின்றன- தற்காலிகமாக