World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

The Iraqi oppositionists and US plans for "regime change" in Baghdad

ஈராக்கிய ஆட்சியின் எதிர்ப்பாளர்களும் பாக்தாதில் "ஆட்சி மாற்றத்திற்கான" அமெரிக்க திட்டங்களும்

பகுதி I | பகுதி II
By Peter Symonds
1 October 2002

Back to screen version

கீழே ஈராக்கிய ஆட்சியின் எதிர்ப்பாளர் தொடர்பான இரண்டு பிரிவுகளான கட்டுரையின் இரண்டாவது பகுதியை வெளியிடுகின்றோம். முதலாவது பகுதி 06.09.2002 இல் வெளிவந்திருந்தது.

1996 இல் வடக்கு ஈராக்கில் ஈராக்கிய எதிர்ப்பாளர்களும், CIA உம் சந்தித்த பாரிய தோல்வியானது வாஷிங்டனில் பின்விளைவுகளை உருவாக்கியது. கிளின்டனின் நிர்வாகமானது மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நலன்களை போதியளவு மூர்க்கத்தனத்துடன் முன்னெடுக்கவில்லை என ஏற்கனவே குடியரசுக் கட்சியின் வலதுசாரிப் பிரிவினரின் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது. ஈராக்கிய எதிர்ப்பாளர்களினது உடைவானது கிளின்டனின் பிழையான நடத்தைகளின் பட்டியலில் இணைக்கப்பட்டதுடன், காங்கிரசில் ஒரு பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டதுடன், ஈராக்கிய விடுதலை சட்டத்தின் (Iraq Liberation Act) நடைமுறைப்படுத்தலுடன் இது 1998 இல் உச்சக்கட்டத்தை அடைந்தது. இச்சட்டத்தின் கீழ் முன்னொருபோதும் இல்லாதவாறு, ''அரசாங்க மாற்றமானது'' அமெரிக்காவின் சட்டத்துடன் இணைக்கப்பட்டதுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட ஈராக்கிய எதிர்ப்பு குழுக்களுக்கு 97 மில்லியன் டொலர் இராணுவ உதவியும் வழங்கப்பட்டது.

இந்த ஈராக் விடுதலை சட்டத்திற்கு ஆதரவளித்து, அதன் வரையறைகளை முற்றாக நடைமுறைப்படுத்தவில்லை என கிளின்டனை குற்றம் சாட்டியவர்களில் தற்போதைய ஈராக்கிற்கு எதிரான யுத்தத்தை தயாரிக்கும் முக்கியமானவர்களான ரம்ஸ்பெல்ட், வொல்வோவிட்ஸ், பேர்ல் ஆகியோர் அடங்குவர். 1998 இல் வொல்வோவிட்ஸ் காங்கிரசில் பின்வருமாறு குறிப்பட்டார்: ''இப்பிரச்சனையின் முக்கியமானதாகவுள்ளது, அமெரிக்கா ஈராக் தொடர்பாக ஒரு கடுமையான கொள்கையை பின்பற்ற முடியாமலும், விரும்பாமலும் இருப்பதாகும்''.

2000 ஆண்டின் தேர்தல் பிரச்சாரத்தின்போது, புஷ்ஷின் வெளிநாட்டுக் கொள்கை ஆலோசகராக உரையாற்றிய பேர்ல் ''ஆளுனர் புஷ் ஈராக் விடுதலை சட்டத்தை முற்றுமுழுதாக நடைமுறைப்படுத்துவார். அவர் அது தொடர்பாக நன்றாக விளங்கிக்கொண்டுள்ளார். அதன் அர்த்தம், சதாமின் அரசாங்கத்தை முடிவிற்கு கொண்டுவர எதிர்ப்பாளர்களுக்கு முக்கியமானதும், தொடர்ச்சியானதுமான உதவிகளை வழங்குதல் ஆகும்'' என குறிப்பிட்டார். கிளின்டனின் நிர்வாகம் ஈராக்கிய ஆட்சியின் எதிர்ப்பாளர்களுக்கு இராணுவ உதவி வழங்கவில்லை எனவும், இச்சட்டத்தை நிறைவேற்றுவதில் ''உறுதியான கபடத்தனத்தை'' கொண்டிருந்ததாக பேர்ல் குற்றம் சாட்டினார்.

ஆனால் ஈராக், ஒரு பரந்த நோக்கத்தின் ஒரு பகுதியாகும். புஷ்ஷினது தேர்தல் பிரச்சாரமானது, குறிப்பாக எண்ணெய் வளம் மிக்க மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த மத்திய ஆசியாவிலும் மத்திய கிழக்கிலும் அமெரிக்காவினது எதிர்க்கமுடியாத பூகோள ஆளுமையை உறுதிப்படுத்த இராணுவத்தை பயன்படுத்தவேண்டும் என தீர்மானித்த அமெரிக்க ஆளும் தட்டினரது பிரச்சார வாகனமாகியது. 2000 ஆம் ஆண்டு தேர்தலை களவெடுத்து பதவிக்கு வந்ததுமே, புஷ் நிர்வாகம் இந்த வெளிநாட்டு கொள்கையின் நோக்கத்தை தீவிரமாக முன்னெடுக்க ஆரம்பித்தது.

ஈராக் விடுதலை சட்டத்தின்கீழ் ஒதுக்கப்பட்ட நிதியானது ஈராக்கிய ஆட்சியின் எதிர்ப்பாளர்களுக்கு செல்லத்தொடங்கியது. செப்டம்பர் 11இன் உலக வர்த்தக மையத்தின் மீதானதும், பென்டகன் மீதானதுமான தாக்குதலில் சதாம் ஹூசேன் சம்பந்தப்பட்டிருந்தாலும் இல்லாவிடினும் ரம்ஸ்பெல்டாலும், பேர்லாலும், வொல்வோவிட்ஸ்ஸாலும் மற்றவர்களாலும் ஈராக்கில் அரசாங்கத்தை மாற்றும் அவர்களின் நீண்டநாள் திட்டத்தை விரைவுபடுத்த இது ஒரு சாட்டாக பாவிக்கப்பட்டது.

மீள புனரமைக்கப்பட்ட இத்திட்டத்தின் முக்கிய இலாபமடைந்தவர்கள் ஈராக்கிய தேசிய காங்கிரசாகும் (Iraqi National Congress-INC). 1996 இன் பின்னர் அது தனது காரியாலையத்தை இலண்டனில் மீளமைத்துக்கொண்டது. அமெரிக்க வெளிநாட்டு திணைக்களத்தின்படி, 2002 பெப்பிரவரியில் ஈராக் விடுதலை சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியுதவியான 24 மில்லியன் டொலரை ஈராக்கிய தேசிய காங்கிரஸ் பெற்றுக்கொண்டது.

ஹூசேனை, அகமத் ஷலாபி (Ahmad Chalabi) பிரதியீடு செய்வதை பேர்ல், ரம்ஸ்பெல்ட் குழுவினர் விரும்புவர் என்பதில் எவ்விதமான ஐயுறவுமில்லை. ஆனால் புஷ் நிர்வாகத்தினுள் இது தொடர்பாக தீவிரமான முரண்பாடு காணப்படுகின்றது. அகமத் ஷலாபியின் முக்கிய ஆதரவாளர் ஒருவரின் கருத்துப்படி இவர் CIA இனுள்ளும், வெளிநாட்டு அமைச்சகத்திலும் ஒரு ''சந்தர்ப்பவாதி' எனவும், ஈராக்கிய தேசிய காங்கிரசை தனது இலாபத்திற்கு பயன்படுத்துகின்றார்'' எனவும் கருதப்படுகின்றார். இக்குற்றச்சாட்டுக்கு ஜோர்டானின் Petra Bank இன் உடைவிற்கு காரணமான இவரது நிதிமோசடியை காரணமாக காட்டுகின்றனர். 1989 இல் ஜோர்டானிலிருந்து தான் குற்றமற்றவர் என கூறிக்கொண்டு வெளியேறிய இவர், 200 பில்லியன் டொலரை ஏமாற்றினார் என்ற குற்றச்சாட்டில் தனது குற்றமின்மையை நிரூபிக்க 1992 இல் நீதிமன்றத்திற்கு திரும்பவில்லை. ஈராக்கிய தேசிய காங்கிரசின் விமர்சகர்கள் இக்குழுவிற்கு ஈராக்கினுள் முக்கிய ஆதரவில்லை என சுட்டிக்காட்டுகின்றனர்.

எவ்வாறிருந்தபோதிலும், முக்கியமானது என்னவெனில் ஷலாபியினதும், ஈராக்கிய தேசிய காங்கிரசினதும் ஆதரவின்மை புஷ் நிர்வாகத்தினரிடையே கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவதாக தெரியவில்லை. அண்மையில் அவுஸ்திரேலியாவின் Four Corners என்ற நிகழ்ச்சியில் ஷலாபியை புகழ்ந்து பேர்ல் ''மேற்கின் பெறுமதிகளை அவர் பிரதிநிதித்துவப்படுத்துவதாக'' குறிப்பிட்டார். அதே நிகழ்ச்சியில் ஜோர்டானில் அவரின் நடவடிக்கை தொடர்பாக பேர்லின் கூட்டு சிந்தனையாளரான, American Heritage Foundation இனை சேர்ந்த Danielle Plekta இடம் கேட்க்கப்பட்டபோது ''அது முற்றுமுழுதாக சாத்தியமற்றது'' என குறிப்பிட்டார்.

கடும்போக்கானவர்களான பேர்ல் போன்றவர்களின் கண்களில், ஷலாபியின் பலவீனத்தைவிட அவரின் அமெரிக்க நலன்களுக்கான அடிபணிவே முக்கியமானதாக தெரிகின்றது. பேர்ல், ஈராக் மீதான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளை நீண்டகாலமாக ஆதரித்துவருவதுடன், இஸ்ரேலிய அரசுக்கான ஆதரவு உட்பட ஏனைய மத்திய கிழக்கு தொடர்பான புஷ் நிர்வாகத்தின் கொள்கைளை ஆதரித்துவருகின்றார். ஈராக்கின் எண்ணெய் வளங்களை யார் கட்டுப்படுத்துவது என்பது தொடர்பான முக்கிய கேள்விகளில் எந்தப்பக்கம் தான் நிற்கின்றார் என்பதை ஷலாபி ஏற்கனவே காட்டியுள்ளார். அவர் Washington Post பத்திரிகைக்கு அண்மையில் ஈராக்கிய எண்ணெய் வயல்களை அமெரிக்க தலைமையிலான நிறுவனங்கள் அபிவிருத்திசெய்வதை விரும்புவதாக, ''அமெரிக்க நிறுவனங்கள் ஈராக்கிய எண்ணெயில் ஒரு பாரிய பங்கு வகிக்கும்'' என குறிப்பிட்டார்.

இராணுவத்திலிருந்து விட்டோடியவர்கள்

பேர்லுக்கும், ரம்ஸ்பெல்டுக்கும், வொல்வோவிட்ஸிற்கும் எதிரான அமெரிக்க வெளிநாட்டு திணைக்களத்தில் உள்ளவர்கள் ஈராக் மீதான அமெரிக்க இராணுவத்தலையீட்டை அடிப்படையாக எதிர்க்கவில்லை. மாறாக, ஈராக்கிலும் மற்றும் அப்பிரதேசத்திலும் ஒரு பாரிய விளைவுகள் இல்லாது அமெரிக்க இராணுவம் பாக்தாதினுள் சென்று ஷலாபி போன்றவரை பதவியில் இருத்துவது என குறிப்பிடுவது பிரச்சனையை இலகுவாக எடுத்துக்கொள்ளவதாக குற்றம்சாட்டுகின்றனர்.

இக்கருத்துக்களை பிரதிபலிக்கும்வகையில், முன்னர் CIA இல் இயங்கியவரும், மத்திய கிழக்கில் 20வருட அனுபவத்தை கொண்டவருமான Bob Baer, Four Corners நிகழ்ச்சியில் இந்த ''நவீன தாராளவாதிகள்'' பற்றி கடுமையாக விமர்சிக்கையில் ''ஒரு முற்றுமுடிவான திட்டமில்லை என்பது வாஷிங்டனில் எல்லோருக்கும் தெரியும். யார் சதாம் ஹூசேனை பிரதியீடு செய்வது? இது தொடர்பாக அவர்களுக்கு ஒரு சிந்தனையும் இல்லை. நீங்கள் உள்ளே சென்று இராணுவத்தை அழித்தால், அது ஈராக்கில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கும். இது தொடர்பாக ஒருவரும் ஆராயவில்லை '' என அவர் விபரித்தார்.

''அரசாங்கத்தை மாற்றும்'' புஷ்ஷின் திட்டத்தை விமர்சிப்பவர்கள் பயப்படுவது, ஈராக்கிய அரசாங்கம் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டால் நாடு விரைவாக உடைந்துவிடும் என்பதாகும். அவர்கள் புஷ்ஷின் தகப்பனின் அனுபவத்தை சுட்டிக்காட்டி, 1991 இல் ஷியாவினரினதும், குர்திஸ்தானியர்களினதும் கிளர்ச்சியையும் தொடர்ந்து ஹூசேனை வெளியேற்றும் முயற்சியை நிறுத்தியதை சுட்டிக்காட்டினர். புஷ்ஷினது திட்டத்திற்கு மாற்றீடாக, ஈராக்கிய இராணுவம் தோற்கடிக்கப்படுகையில் அமெரிக்காவின் கொள்கையின் முக்கிய ஆயுதமாக இவர்கள் இராணுவத்தில் இருந்து விட்டோடிய பலவிதமானோருக்கு முக்கிய பங்கை வழங்க முன்தள்ளுகின்றனர்.

அப்படியான பதவியை ஏற்றுக்கொள்வதற்கு உள்ளவர்களுக்கு தட்டுப்பாடு இல்லை. ஈராக் தேசிய உடன்பாட்டில் எஞ்சியுள்ளவர்களை தவிர பல ஈராக்கின் இராணுவத்தின் முன்னாள் அதிகாரிகள் பல குழுக்களாக இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் CIA உடன் அல்லது வேறு உளவுப்பிரிவினருடன் தொடர்புகளை வைத்திருக்கின்றனர்.

இப்பட்டியலில், சுயாதீன அதிகாரிகள் இயக்கத்தின் தலைவரும், 7 வருடங்களுக்கு முன்னர் தோற்கடிக்கப்படும்வரை ஈராக்கின் இராணுவத்தின் ஐந்தாவது பிரிவின் முதலாவது டாங்கி பிரிவின் முதலாவது அதிகாரியான பிரிகேடியர் ஜெனரல் நஜீப் அல்-சல்கி அடங்குவார். அவர் தற்போது வாஷிங்டனுக்கு அண்மையில் வசிப்பதுடன், 30,000 பேர்வரை அணிதிரட்டக்கூடியவர் எனவும், எவராவது அவரின் கதையை கேட்டால் பாக்தாதின் மீது மூன்று பக்கத்தில் இருந்து தாக்குதலை நடாத்தலாம் என விபரிப்பார். ஈரான்-ஈராக் யுத்தத்தில் இரசாயன ஆயுதங்களை பிரயோகித்ததற்காக இவர் டென்மார்க்கில் குற்ற விசாரணையை எதிர்நோக்குகின்றார்.

ஈராக் தேசிய கூட்டணி எனக்குறிப்பிடப்படும் முன்னாள் ஈராக்கிய இராணுவத்தின் அதிகாரிகள் குழு ஒன்றும் கடந்த ஜூலை மாதத்தில் இலண்டனில் 80 இராணுவ விட்டோடிகளை அணிதிரட்டி உதவியது. அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களில், ஹூசேனுக்கு பின்னரான அரசாங்கத்திற்கான தயாரிப்பாக ஒரு இராணுவ அமைப்பு உருவாக்குவதும் ஆரவாரத்துடன் முடிவாக்கப்பட்டது. ஈராக் அதிகாரிகள் இயக்கத்தின் தலைவரான ஜெனரல் பெளசி அல்-ஷாமானி நிஸார் இதில் கலந்துகொள்ளவில்லை. ஏனெனில் Four Corners நிகழ்ச்சிக்கு கூறியபடி அவர் தான் தனது சொந்த இராணுவ அமைப்பை 2வருடத்திற்கு முன்னரே உருவாக்கிவிட்டதால் ஆகும். ஈரான்-ஈராக் யுத்தத்தில் ஈரானிய இராணுவத்திற்கு எதிராக இரசாயன ஆயுதங்களை பிரயோகித்ததாக ஒத்துக்கொண்டுள்ளார்.

அமெரிக்க வெளிநாட்டு திணைக்களம் இன்னுமொரு இராணுவ விட்டோடியான முன்னாள் ஈராக்கிய இராணுவ பொறுப்பதிகாரியான ஜெனரல் நிஸார் கஸ்ராஜி இனை உதவிக்கு தேடுகின்றது. இவர் அமெரிக்க மூளைக்கூடமான (thinktank) மத்திய கிழக்கு அமைப்பின் (Middle East Institute) ஈராக்கிய எதிர்ப்பாளர்களின் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். இவரும் 1988 இல் Halabja நகரத்தில் 3000 மக்களை பலிகொண்ட குர்திஸ் மக்கள் மீதான கடுகு மற்றும் நரம்பினை தாக்கும் வாயுவை பிரயோகித்தமைக்காக டென்மார்க்கில் விசாரணைக்கு உள்பட்டுள்ளார். கஸ்ராஜி 1998 இல் குர்திஸ்தான் மக்கள் மீதான நீண்ட ஒடுக்குமுறைக்கு இராணுவத் தலைமை தாங்கியதுடன், அதில் 100,000 பேர் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

கஸ்ராஜி மற்றும் அல்-ஷல்கி போன்றோரின் சேவையை எதற்காக வேண்டப்படுகின்றது என்பது தெளிவானது. அவர்களின் இராணுவத்திறமை எதிர்ப்பை ஒடுக்குவதற்கு பயன்படுத்தப்படும். ஏனெனில் அவர்களது இராணுவத்தொடர்பு அமெரிக்க ஆதரவிலான ஒரு ஈராக்கிய அரசாங்கத்திற்கான ஆதரவான இரு இராணுவத்தை கட்ட பயன்படுத்தப்படும். Baer, அல்-ஷல்கி இனைப்பற்றி வெளிப்படையாக ''அவர் திரும்பி சென்று சதாம் ஹூசேனுக்கு பதிலாக ஒரு இராணுவ அரசாங்கத்தை அமைப்பார். நீங்கள் ஈராக்கை ஒன்றாக வைத்திருக்க உண்மையில் விரும்பினால் இதுதான் ஒரு சாத்தியமான வழியாகும். நீங்கள் செய்யமுடியாததும், செய்யகூடாததும் என்னவென்றால் அங்கு ஜனநாயகத்தை அறிமுகப்படுத்துவதுதான். அது ஒரு முற்றுமுழுதான சீரழிவைத்தான் உருவாக்கும்'' எனக் குறிப்பட்டார்.

ஈராக்கிய எதிர்ப்புக் குழுக்களில் அது தியாகம் செய்து உதவி செய்யுமானால் இதனைத்தான் புஷ் நிர்வாகம் பிரயோசனமான குழுவாக கருதுகின்றது.

ஹூசேனுக்கு பின்னான அரசாங்கத்தில் ஒரு ஒழுங்கமைப்பினை விட்டுவிடாதிருக்க விரும்புவதில், இரண்டு குர்திஸ்தான் அமைப்புகளும் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கான ஆதரவை வழங்க காத்திருக்கின்றன. 1993-1996 காலப்பகுதியிலான தமது கடுமையான மோதல்களை குர்திஸ்தான் ஜனநாயக கட்சியும் (Kurdistan Democratic Party -KDP) மற்றும் குர்திஸ்தான் தேசபக்தி யூனியனும் (Patriotic Union of Kurdistan -PUK) வாஷிங்டனின் உதவியுடன் முடிவிற்கு கொண்டுவந்து, வடக்கு ஈராக் இரண்டு குர்திஸ்தான் பண்ணைகளாக பிரித்துக்கொண்டுள்ளன. தான் இணைந்த சக்தியாக இருந்தால் பேச்சுவார்த்தை மேசையில் பலமாக இருக்கலாம் என முன்னாள் கசப்பான எதிரிகள் முடிவெடுத்தனர். இறுதியில், பார்ஸானியும் தல்பானியும் செப்டம்பர் மாத ஆரம்பத்தில் சந்தித்து குர்திஸ்தான சுயாட்சிப் பிரதேசத்திற்கான திட்டத்தை ஏற்றுக்கொண்டதுடன், குர்திஸ்தான் பிராந்திய பாராளுமன்றத்தினை அமைப்பதற்கும் ஒத்துக்கொண்டனர்.

குர்திஸ்தான் ஜனநாயக கட்சியும், குர்திஸ்தான் தேசபக்தி யூனியனும் தம்மால் இணைந்து 40,000 பேரினை அணிதிரட்டலாம் எனக் கூறினர். ஆனால் குர்திஸ்தான் இராணுவத்தினர் குறித்த அமெரிக்காவின் நோக்கு ஒரு கலந்த உணர்வுள்ளதாகவே உள்ளது. அவர்கள் ஹூசேனை வெளியேற்றவதற்கு அமெரிக்க இராணுவத்திற்கு உதவலாம் என்றாலும், பாக்தாதில் அமெரிக்கா அமைக்கும் எந்தவொரு அரசாங்கத்திற்கும் குர்திஸ்தான போராளிகள் ஆபத்தாக இருப்பதுடன், துருக்கியாலும், ஈரானாலும், சிரியாவாலும் ஆழ்ந்த ஐயுறவுடனேயே நோக்கப்படுகின்றனர். மேலும், அவர்களது ஆதிக்கத்தல் உள்ள கிர்குக் பிரதேசத்தின் மீதான தமது ஆதிக்கத்தை இன்னும் விரிவுபடுத்த விரும்புகின்றனர். ஏனெனில் இப்பிரதேசம் பாரிய எண்ணைய் மற்றும் நிலவாயு வளங்களை கொண்டிருப்பதுடன், இது ஈராக்கின் வளங்களை கட்டுப்படுத்தவிரும்பும் அமெரிக்காவின் திட்டங்களுடன் முரண்படுகின்றது.

அமெரிக்கா உடனடியான தந்திரோபாய நோக்கங்களுக்காக தவிர, 5,000-10,000 வரையிலான படையினரை வைத்திருக்கும் ஷியைட் (Shiite) டுக்களை அடித்தளமாக கொண்ட ஈராக்கின் இஸ்லாமிய புரட்சிக்கான அதியுயர்குழுவுடன் (Supreme Council for the Islamic Revolution in Iraq -SCIRI) இணைந்து இயங்குவதற்கு வேறு காரணங்களில்லை. American Heritage Foundation இனை சேர்ந்த Danielle Pletka இடம், தெகிரானுக்கு சார்பான ஷியா (Shia) வினை சேர்ந்த ஒரு தலைவரை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளுமா? என பல்வேறுபட்ட ஷியைட் இனகுழுக்கள் தொடர்பான அமெரிக்காவின் பொதுவான அணுகுமுறை தொடர்பாவும் Four Corners நிகழ்ச்சியில் கேட்கப்பட்டதற்கு, அவர் ''ஈரானியர்கள் ஒரு கட்டுப்படுத்தும் நலன்களை கொண்டிருப்பதை நாங்கள் விரும்புகின்றோமா? இல்லை, இது தொடர்பான கேள்விக்கிடமில்லை. மாறாக ஈராக் ஈரானுக்கு ஒரு உதாரணமாக இருக்க விரும்புகின்றோம், பின்னர் அந்த நபர்களையும் அகற்றிவிடுவோம்'' என கூறினார்.

ஈராக்கிய ஆட்சியின் எதிர்ப்பு குழுக்களுள் குறைந்த முக்கியத்துவத்தை பெறுபவர்கள் அரசாட்சிக்கான சட்ட அமைப்பு இயக்கமாகும் (Constitutional Monarchy Movement). இது ஈராக்கிய தேசிய உடன்பாட்டுடன் கூடுதலாக அடையாளம் காணப்படுவதொன்றாகும். ஈராக்கின் எதிர்கால மன்னராவதற்கு கடந்த ஜூனில் லோகா ஜிர்காவில் இருத்தப்பட முன்னர் இத்தாலியில் உள்ள மாளிகையில் அடைபட்டுக்கிடந்த ஆப்கானிஸ்தானின் 80 வயதுடைய மன்னரான ஷகார் ஷாவினை விட, ஷரீப் அல் பின் ஹுசெயின் அக்கறை உள்ளவராக காணப்படுகின்றார். ஆனால் ஷரீப் அல் பின் ஹுசெயின் அவரது ஆப்கானிஸ்தானிய நண்பரைவிட குறைந்த சட்டபூர்வத்தன்மையையே கொண்டுள்ளார்.

ஈராக்கிய மன்னராட்சியானது பிரித்தானிய ஏகாதிபத்தியத்தினது கண்டுபிடிப்பாகும். இது புதிதாக உருவாக்கப்பட்ட சர்வதேச சங்கத்தில் (League of Nations) அப்பிரதேசத்தின் மீதான ஆளுமையை பாதுகாக்க 1920 இல் உருவாக்கப்பட்டதாகும். கஸ்கெமிட் அமிர் பைஸாலுக்கு முதலாவது பைஸால் பதவி வழங்கப்பட்டது. அவர் 1933 இல் மரணமடைந்தபோது அவரது விளையாட்டுப்பிள்ளையான மகன் மன்னர் காஸி பதவி ஏற்றார். ஆனால் அவர் ஒரு விபத்தில் 1939 இல் மரணமடைந்தார். மூன்றாவது மன்னரான பைஸல்II, 1953 இல் பதவி ஏற்றபோதும் 1958 இன் இராணுவ புரட்சியில் கொல்லப்பட்டார். இந்த சிறிய மற்றும் பரிதாபகரமான வரலாற்றின் அடித்தளம் 3 வயதான ஷரீப் அல் பின் ஹூசேனிற்கு அவரது மாமனார் கொல்லப்பட்ட பின்னர் ஈராக்கை ''ஒன்றிணைக்கும் சக்தியை'' வழங்கியது.

உலக சோசலிச வலைத் தளமானது சதாம் ஹூசேனுக்கு எவ்விதமான ஆதரவையும் வழங்கவில்லை. ஆனால், அமெரிக்காவின் ஆரதவுடன் ஈராக்கிய ஆட்சியின் எதிர்ப்பு குழுக்கள் அமைக்க விரும்பும் அரசாங்கமும் ஈராக்கிய மக்களின் நலன்களை பிரதிபலிக்கவில்லை. அவர்களது மிகவும் மோசமான ஊழல்மிக்க தன்மையானது புஷ் நிர்வாகம் விரும்பும் ''அரசாங்க மாற்றம்'' எப்படியான தன்மையை கொண்டிருக்கும் என்பதற்கு தெளிவான எடுத்துக்காட்டாகும். காபூலில் காஷாயியை போல் பாக்தாதில் அமைக்கப்படும் புதிய ஆட்சியும் அதனது உயிர்வாழ்க்கைக்கு அமெரிக்க இராணுவ, பொருளாதார மற்றும் அரசியல் உதவியில் முழுதாக தங்கியிருக்கும் ஒரு புதிய காலனித்துவ பொம்மை அரசாகவே இருக்கும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved