World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Faced with popular resistance
US prepares for slaughter in Iraq

பொதுமக்களின் எதிர்ப்புக்கு முகம் கொடுப்பு
ஈராக் மக்களை கொன்று குவிக்க அமெரிக்கா தயாராகிறது
By Bill Vann
26 March 2003

Use this version to print | Send this link by email | Email the author

புஷ் நிர்வாகத்தின் போர்த் தந்திரம் தோல்வியடைந்துவிட்டது. ஈராக் நிர்வாகம் விரைவில் வீழ்ச்சியடையும் அந்நாட்டு மக்களின் ஆதரவைப் பெற்றுவிட முடியும் என்ற நம்பிக்கை பொய்த்துவிட்டது. தற்போது பென்டகன் புதியதொரு திட்டத்தை உருவாக்கி வருவதன்படி ஈராக்கின் இராணுவத்தையும், பொதுமக்களையும் பெருமளவில் கொன்று குவிப்பதற்கு திடீர் நடவடிக்கைகளை எடுக்கத் தயார் செய்கின்றது.

பிரிட்டன் பிரதமர் டோனி பிளேயர் வியாழக்கிழமை வாஷிங்டன் வருவதாகவும், அவர் புஷ்ஷூடன் ஒரு நாள் பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதாகவும் செவ்வாய்கிழமை அறிவிக்கப்பட்டது. ஈராக் போரில் பிரிட்டன் மற்றும் அமெரிக்கப் படைகளுக்கு கணிசமான பின்னடைவு ஏற்பட்டு வருவதோடு, பாக்தாத்திற்கு இன்னும் படைகள் நகர்வதற்கு முன்பே அங்கு பல்லாயிரக்கணக்கான சிவிலியன்கள் பலியாகியிருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. எனவே கேம்ப் டேவிட் பகுதியில் நடக்கவிருக்கும் மாநாடு அவசர போர்க்கால ஆலோசனை குழுவிற்கு இணையானவை என்று கருதப்படுகிறது. ஈராக்கில் நடைபெற்று வருகின்ற போர் நிகழ்ச்சிகளை தர்க்க ரீதியாக ஆராய்கிற இரண்டு ஏகாதிபத்திய வல்லரசுகளும் தங்களது போர் முயற்சிகளை தீவிரப்படுத்தி இரத்தக் களறியை அதிகமாக்க விரும்புவதால், இது மகத்தான அரசியல் பின் விளைவுகளை உருவாக்கும்.

ஐந்து நாட்கள் கடுமையான குண்டு வீச்சுக்களைத் தொடர்ந்து, பாக்தாத்திலிருந்து ஐம்பது மைலுக்கு உட்பட்ட தொலை தூரத்தில் அமெரிக்கப் படைகள் புகுந்திருக்கின்றன. இந் நிலையில், அமெரிக்க மற்றும் பிரிட்டனின் படைகள் மிகக்கடுமையான சங்கடங்களை எதிர்நோக்கி வருவதாக அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சர் டோனால்டு ரம்ஸ்பீல்ட் கூறியுள்ளார். ''மீண்டும் நாங்கள் அதை சொல்ல வேண்டியதில்லை. ஆரம்பக் கட்டத்தை நாம் நெருங்கி வந்து கொண்டிருப்பதால், இன்னமும் அது முடிவிற்கு வந்துவிடவில்லை'' என்றும், ''இந்தப் போர் மிகவும் ஆபத்தானதாக வரும் நாட்களிலும், வாரங்களிலும் மாறக்கூடும்'' என பென்டகனில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்கும்போது அவர் குறிப்பிட்டார்.

இரத்தம் சிந்தாமல் மிக விரைவாக ஈராக்கை ''விடுதலை செய்துவிட'' முடியும் என்று கூறியதன் மூலம் புஷ் நிர்வாகம் அமெரிக்க மக்களை ஏமாற்றிவிட்டதா? என்ற கேள்வியை ரம்ஸ்பீல்டிடம் நிருபர்கள் திரும்பத் திரும்ப வற்புறுத்திக் கேட்டனர்.

அதற்கு ''நான் அப்படிச் சொல்லவில்லை'' என்று ரம்ஸ்பீல்ட் பதில் அளித்தார். அத்துடன் எதிரிகளை ''அதிர்ச்சியூட்டி அவர்களை நிலைகுலையச்'' செய்து முறியடிக்கும் போர்த் தந்திரத்தை அமெரிக்கா மேற்கொள்ளப் போவதாக அவரது உதவியாளர்கள் ஊடகங்களில் தொடர்ந்தும் பிரச்சாரம் செய்து வந்தார்கள். இத் தந்திரோபாயத்தின் கருத்துருவானது, தீவிரமாக சில நாட்கள் கடும் குண்டு வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டால் சதாம் ஹூசேன் அரசாங்கம் ஆட்டம் காணும். ஆட்சி அமைப்பில் பிளவுகள் தோன்றும். இதன்மூலம் சதாம் ஹூசேனை கொலை செய்வார்கள் அல்லது இராணுவப் புரட்சி மூலம் தூக்கிவீசுவார்கள். அப்போது ஈராக் இராணுவம் பெரும்பாலும் கட்டுக்கோப்போடு அமெரிக்க ஆதரவுபெற்ற புதிய ஈராக் ஆட்சியின் கட்டளைக்குள் வந்துவிடும் என்பதாக இருந்தது.

இந்த தந்திரோபாயத்தின் பாகமாக, ஈராக்கின் இராணுவ ''கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு'' அமைப்புகள் மீது நேரடியாகக் குண்டு வீசித் தாக்குதல் நடத்தி சிதைப்பதன் மூலம் ஈராக்கின் ஆளுங்கட்சியான பாத் கட்சித் தலமைக்கு நெருக்கடியை உண்டாக்குவதாக இருந்தது. இப்படிப்பட்ட இராணுவ நடவடிக்கைக்கு இடையிலேயே உளவியல் அடிப்படையில் மக்களது கருத்தை மற்றும் இராணுவ தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களின் மனோநிலையை மாற்றி, தவிர்க்க முடியாதபடி ஆட்சிக்கு முடிவு காலம் நெருங்கிவிட்டது என்று இயக்கம் நடத்தவும் திட்டம் வகுக்கப்பட்டது.

இத்தகைய மனோதத்துவ அடிப்படையிலான முயற்சிகளின் ஒரு பகுதிதான் தற்போது வாஷிங்டன் பரப்பிவரும் தவறான அறிக்கைகள் ஆகும். குறிப்பாக, சதாம் ஹூசேன் இறந்துவிட்டதாகவும் அல்லது அவரது துணை அதிபர் தாரிக் அஜிஸ் சரணடைந்துவிட்டதாகவும் மற்றும் ஈராக்கிய உயர் அதிகாரிகள் சரணடைவதற்கு உரிய நிபந்தனைகள் குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருப்பதாகவும், போன்ற பல்வேறு உளவியல் அடிப்படையிலான பிரச்சாரத்தை வாஷிங்டன் மேற்கொண்டு வருகிறது. அத்தோடு, அமெரிக்கப் படைகளை எதிர்த்துப் போராட வேண்டாம் என்று மக்களுக்கு கோரிக்கைவிடுத்து ஈராக் முழுவதிலும் விமானங்கள் மூலம் 25 மில்லியன் அறிக்கைகளை விநியோகித்தும் வருகின்றனர்.

இந்த முயற்சியில் அமெரிக்க இராணுவத்துடன் இணைந்து பணியாற்றும் அமெரிக்க செய்தி ஊடகங்களும் இதற்கு பங்களித்து வருகின்றன. ஈராக்கின் நகர்களை நோக்கி தடுத்து நிறுத்த முடியாத அமெரிக்க ஆயுதப் படைகள் என்கிற தேர்ச் சக்கரம் மிக வேகமாக நெருங்கி வந்து கொண்டிருப்பதாக ஒரு சித்திரத்தை இந்த ஊடகங்கள் உருவாக்கி காட்டி வருகின்றன. இவற்றுடன் சேர்ந்து ஈராக்கின் தென்பகுதி மக்கள், முன்னேறி வரும் அமெரிக்க - பிரிட்டன் படைகளை விடுதலை வீரர்களாக வரவேற்பளிக்கின்ற காட்சிகளையும் மற்றும் ஈராக்கின் இராணுவப் பிரிவுகள் பெருமளவில் சரணடைந்து வருவதாகவும் சித்தரித்துக் காட்டி வருகின்றன.

உண்மைக்கு எதிரான பிரச்சாரம்

ஒரு வாரத்திற்குள் இந்தப் போர் உத்திகளில் உள்ள அடிப்படையான முரண்பாடுகள் வெளிவரத் தொடங்கியுள்ளதோடு, கசப்பான பல உண்மைகள் மிகத் தெளிவாக வெளியே வந்துவிட்டன. இத்தகைய முரண்பாடுகளுக்கு முக்கிய காரணம் என்னவென்றால் பென்டகனின் இராணுவத் தலைமை புஷ் நிர்வாகத்தின் சொந்தப் பிரச்சாரத்திற்கு பலியாகிவிட்டது. வாஷிங்டனிலிருந்து ஈராக் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கும், ஈராக் தலைவர்களை பூதாகாரமாக சித்தரிப்பதற்குமான சாக்குப்போக்குகள் தொடர்ந்தும் வெளிவரத் தொடங்கின. இந்தப் பிரச்சாரங்களை நம்பிய பொதுமக்கள் அமெரிக்காவின் படை வலிமையைக் கண்டவுடன் ஈராக்கின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று நம்பினார்கள்.

இதற்கு மாறாக ஈராக் ஆட்சியின் முக்கிய தலைவர்கள் இந்தப் பிரச்சாரத்தின் உண்மையை அறிந்து கொண்டு மிகவும் தெம்போடு அமெரிக்காவின் தாக்குதலை எதிர்கொண்டு வருவதாக காட்டி வருகின்றனர். பென்டகன் கூறியுள்ள விபரங்களின்படி ஈராக்கில் மொத்தம் 3.500 ஈராக் போர்க் கைதிகள் பிடிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால், அங்கு மிகப்பெரும் அளவிற்கு சரணடைவது நடைபெறவில்லை. ஈராக்கை ''விடுதலை செய்ய'' வந்தவர்கள் என்று அமெரிக்கப் படைகள் வாழ்த்தி வரவேற்கப்படுவார்கள் என்ற கூற்று பொய்யாகிப் போனது. இதற்கு மாறாக ஈராக் படைகள் மற்றும் ஆயுதந்தாங்கிய பொதுமக்கள் ஆகியோர்களின் உறுதியான எதிர்ப்புக்களையும், தொடர்ந்தும் இராணுவ வாகனங்கள், கவச வாகனங்கள் மீதான தாக்குதல்களையும் ஆக்கிரமிப்புப் படைகள் எதிர் கொண்டன.

இது போன்ற நடவடிக்கைகளில் மறுக்க முடியாத வீரம் செறிந்த அம்சம் என்னவென்றால், மிகப்பெரிய இராணுவ சக்திகளை பொதுமக்கள் எதிர் கொண்டு வருவதாகும். அவர்கள், நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள விமானந்தாங்கிக் கப்பல்களிலிருந்து பொதுமக்களை பலியெடுத்து வரும் ஏவுகணைத் தாக்குதல்களுக்கும், ஈராக்கின் விமான எதிர்ப்பு பீரங்கிகளுக்கு அப்பால் வானில் பறந்து குண்டு வீசித் தாக்குதல்களை மேற்கொண்டுவரும் போர் விமானங்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர். எனவே இது போன்ற குண்டு வீச்சுக்களுக்கு எதிராக மக்கள் ஆயுதம் தாங்கிப் போராடுவது ''நாகரிக நடைமுறைகளுக்கு'' புறம்பானது என்ற வாதம் ஏற்றுக்கொள்ள முடியாத வெறும் வாதமாக இருக்கின்றது. ஈராக்கியர்கள் எந்த விதமான தூண்டுதலும் இல்லாமல், எதிரிகள் பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து தங்கள் நாட்டை ஆக்கிரமிப்பதற்கு எதிராகப் போரிடுகின்றனர். இந்த சூழ்நிலையில் அவர்கள் கையில் கிடைக்கின்ற பொருட்களை எடுத்து ஈவிரக்கமற்ற தாக்குதலில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

போர் தொடங்கிய சில மணிநேரங்களில் சிறிய துறைமுக நகரான உம் காசரையும், அதன் துறைமுகத்தையும் கைப்பற்றிவிட்டதாக பிரிட்டிஷ் இராணுவத்தினர் கூறிய போதிலும், ஐந்து நாட்களாக அங்கு போர் நடந்து வருவதுடன், அவர்களால் துறைமுகத்தையும் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. முன்னேறிக் கொண்டிருக்கிற இராணுவத்திற்கு வந்திருக்கிற அத்தியாவசிய பொருட்களையும் துறைமுகத்தில் இறக்க முடியவில்லை. அத்துடன் மனிதநேய அடிப்படையில் ஈராக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வந்துகொண்டிருக்கிற உணவுப் பொருட்களையும் இறக்கி விநியோகிக்க முடியவில்லை. இப்படிப்பட்ட சிறிய நகரத்தில் தொடங்கியுள்ள எதிர்ப்பை முறியடிப்பதற்காக விமானக் குண்டுவீச்சுக்கள் மற்றும் பீரங்கித் தாக்குதல்களினால் இந்த சிறிய நகரத்தின் பெரும் பகுதியை அவர்கள் அழித்துவிட்டார்கள்.

நசீரியா நகரத்தில் குறைந்த பட்சம் 10 அமெரிக்க இராணுவத்தினர் கடந்த 48 மணி நேரத்தில் கொல்லப்பட்டிருக்கின்றனர். கடுமையான குண்டு வீச்சுத் தாக்குதல்களுக்கு மத்தியிலும் அவர்கள் அமெரிக்கப் படைகளுக்கு எதிராக மூர்க்கமாக போரிட்டு வருகின்றனர்.

பாஸ்ராவில் ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தியவர்களை தண்டிப்பதற்காக இப்போது மீண்டும் குண்டு வீச்சுத் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். அமெரிக்க மற்றும் பிரிட்டனின் படைகள் பாக்தாத் நகரை நோக்கி மிக வேகமாக முன்னேற வேண்டும் என்பதற்காக இந்த நகரின் உள்ளே செல்வதை தவிர்த்தனர். இது ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமாக இருப்பதுடன் 1.5 மில்லியன் மக்களையும் கொண்டுள்ளது. இந்த நகரத்தில் சதாம் ஹூசேனுக்கு எதிராக அடிக்கடி கிளர்ச்சி செய்துவரும் சீயாட் (Shiite) இன மக்கள் அதிகமாக இருப்பதனால், அவர்கள் ஆக்கிரமித்து வரும் படைகளை வரவேற்பார்கள் என்று பென்டகன் எதிர்பார்த்தது. ஆனால், சீயாட் மக்கள் அமெரிக்கப் படைகளை எதிர்த்துப் பரவலாகப் போராடி வருகின்றனர் என்பதை அமெரிக்க இராணுவ அதிகாரிகளே ஒப்புக் கொண்டிருக்கின்றனர்.

ஈராக் வட்டாரங்களின் தகவல்படி பாஸ்ராவில், அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் விமானப்படைகள் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதல்களால் குறைந்த பட்சம் 77 பொது மக்கள் கொல்லப்பட்டதுடன், காயமடைந்த நூற்றுக்கணக்கானவர்கள் அதிக வசதியில்லாத மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

தற்போது இந்த நகரம் மனிதநேய அடிப்படையில் மிகப்பெரிய பேரழிவின் விளிம்பில் நின்று கொண்டிருப்பதாக ஐ.நா அதிகாரிகள் எச்சரிக்கை செய்திருக்கின்றனர். பாதுகாக்கப்பட்ட குடிதண்ணீர் இந்த நகருக்கு கிடையாது என்ற சூழ்நிலையால் ஒரு லட்சம் குழந்தைகள் அதுவும் ஐந்து வயதுக்கு உட்பட்டவர்களின் வாழ்வு கேள்விக்குறியாகிவிட்டது. இந்த நகரிற்கு தேவையான குடிநீர் மற்றும் மின்சாரம் வழங்கும் நிலையங்களை அமெரிக்க - பிரிட்டன் துருப்புக்கள் தாக்குதலுக்காக வெட்டிவிட்டுள்ளது.

பாஸ்ராவில் பெரும்பாலும் சீயாட்க்கள் நிறைந்துள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிர்ப்பு வலுத்துக்கொண்டு வருவதற்கு காரணம், 1991 வளைகுடாப் போருக்குப் பின்னர் ஏற்பட்ட நிகழ்ச்சிகளானது, இந்த மக்களது நினைவில் பசுமையாக இன்னமும் நீடித்துக் கொண்டிருப்பதுதான் என்பதை வாஷிங்டனும், லண்டனும் மிகத் தெளிவாக உணர்ந்திருக்கின்றன. அந்த நேரத்தில் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த சீனியர் புஷ், பாஸ்ரா நகரத்தின் சீயாட்க்கள் சதாம் ஹூசேனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்குப் பின்னர் கிளர்ச்சி செய்த மக்களை ஈராக் இராணுவம் மிகக் கொடூரமாக ஒடுக்குவதையும் சீனியர் புஷ் அனுமதித்தார்.

பாஸ்ராவில், அரசாங்கத்திற்கு எதிரான கொந்தளிப்பு தொடர்பாக மிகக்குறைந்த சொற்பமான தகவல்தான் வந்திருக்கின்றன. அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் ரம்ஸ்பீல்ட் பாஸ்ரா நகரில் அத்தகைய எதிர்ப்பு பிரச்சனையில் தலையிடுவதற்கு தற்போதைய புஷ் நிர்வாகம் அக்கறை கொண்டிருக்கவில்லை என்று தெளிவுபடுத்தினார். ''நான் உலகம் முழுவதும் ஓடிச் சென்று நீங்கள் உங்கள் அரசிற்கு எதிராக எழுந்து நின்று போராடுங்கள் என்று கூறுவதில் விருப்பமில்லாதவன். அத்தகைய நடவடிக்கைகளுக்கு தயக்கம் காட்டுபவன்'' என்று ரம்ஸ்பீல்ட் குறிப்பிட்டார். சதாம் ஹூசேனுக்கு பிந்திய ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்துக்கொள்ள வேண்டுமென்றால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்ற எந்த இயக்கத்தையும் ஒடுக்கியாக வேண்டும் என்பது வாஷிங்டனுக்கு தெளிவாகத் தெரியும்.

பொதுமக்களின் ஆத்திரம்

பாக்தாத்திலுள்ள ஆட்சிக்கு எதிராக மக்களிடம் வெறுப்பு நிலவுகின்ற போதிலும், ஈராக்கிய மக்கள் அன்னிய ஆக்கிரமிப்பை எதிர்த்து முறியடிப்பதில் உறுதியுடன் இருக்கின்றனர் என்று சுதந்திரமான அவதானிகள் தெரிவிக்கின்றனர். ஈராக்கிய மக்கள் தாக்குதல் தொடங்கியதும் தலைநகரத்தை விட்டு வெளியேறி தொலைதூரத்தில் உள்ள எல்லைப் பகுதிகளுக்கு ஓடிவிடுவார்கள் என்று மதிப்பீடு செய்திருந்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை. மாறாக ஜோர்டான், சிரியா மற்றும் பிற நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஈராக்கிய மக்கள் அமெரிக்கர்களை எதிர்த்து போர் புரிவதற்காக தாயகம் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஈராக்கின் தென்பகுதியில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் துருப்புக்கள் பிடிபட்டிருக்கிறார்கள் மற்றும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பல இடங்களில் கடுமையான சண்டை நடைபெற்றுக்கொண்டு வருகின்றது. அமெரிக்க அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கின்றன. எனவே பென்டகன் தலைமை வகுத்துள்ள போர் உத்திகள் குறித்து அமெரிக்காவின் இராணுவ நிர்வாகத்திற்கு உள்ளேயே கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன.

மூத்த இராணுவத் தளபதிகள் மிகப்பெரும் அளவில் தொடக்கத்திலிருந்து அதிகமான துருப்புக்களை பயன்படுத்தப்பட வேண்டும் என்று வாதாடி வந்தனர். தற்போது போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ள துருப்புக்களின் எண்ணிக்கை 1991 வளைகுடாப்போரில் பயன்படுத்தப்பட்ட துருப்புக்களில் பாதி அளவுதான் இருக்கும். ரம்ஸ்பீல்டும் இதர அதிகாரிகளும் தற்போது பயன்படுத்தப்பட்டு வருவதைவிட மிகக்குறைந்த அளவிற்கு துருப்புகள் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்று வாதாடி வந்தனர். சிறப்பு நடவடிக்கைப் பிரிவுகளையும், மற்றும் உயர்ந்த இராணுவத் தொழில் நுட்பங்களையும் பயன்படுத்தி போர் புரியலாம் என்பதுதான் இந்த தரப்பினரின் கருத்தாக இருந்தது.

இந்தக் கருத்து வேறுபாடுகள் மிகப்பெரும்பாலும் கொள்கை அடிப்படையில் உருவானவை. புஷ் நிர்வாகத்தின் கீழ் பென்டகனின் அதிகாரங்களை தீவிர வலதுசாரி சக்திகள் கைப்பற்றிக்கொண்டன. இந்த சக்திகள் அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கு ஏற்றவகையில், மத்திய கிழக்கின் பூகோள அரசியல் வரை படத்தை மீண்டும் உருவாக்கும் வகையில், இராணுவ வலிமையை எந்தவிதமான கட்டுத்திட்டமும் இல்லாமல் பயன்படுத்த வேண்டும் என்று நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றன. அமெரிக்க இராணுவ வலிமை தொடர்பாக அவர்கள் காணுகின்ற பைத்தியக்காரத்தனமான கண்ணோட்டம் மற்றும் சுதந்திர சந்தைப் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் உலகை மாற்றி அமைப்பது தொடர்பான அவர்களது கண்ணோட்டம் ஆகியவற்றில் பொதுமக்களது எதிர்ப்பு உணர்வுகள் தொடர்பான எந்தவிதமான மதிப்பீடுகளும் கணிப்பிடப்படவில்லை. அத்தகைய எதிர்ப்பு எதுவும் இருக்காது என்றுதான் மதிப்பிட்டனர்.

1991 வளைகுடாப்போரில் பிரதான தளபதியாக பணியாற்றியவர் ஜெனரல் பாரி மெக் கபரி (Gen. Barry McCaffrey) மற்றும் இவரைப் போன்ற ஓய்வுபெற்ற மூத்த இராணுவத் தளபதிகள் பென்டகனை பகிரங்கமாக கண்டித்து, பென்டகன் போதுமான அளவிற்கு படைகளை அனுப்பத் தவறிவிட்டதாக கூறியுள்ளனர். குவைத்திலிருந்து இராணுவத்தின் நீண்ட வழங்கல் பாதையை பாதுகாக்க கூடுதல் படைப்பிரிவுகளை அனுப்பத் தவறியதால்தான், படைகள் திடீர் என சுற்றி வளைக்கப்பட்டு ஐந்து துணைப்படை துருப்புக்கள் பிடிபட்டனர் மற்றும் பலர் கொல்லப்பட்டனர் என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.

தலைதெறிக்க ஈராக் தலைநகரை நோக்கி துருப்புக்கள் முன்னேறிச் சென்றதை சில இராணுவ அதிகாரிகளே மிகுந்த வேடிக்கையாக ''பாக்தாத் 500'' என்று வர்ணித்திருந்தனர். ஆக்கிரமித்து வரும் இராணுவப் பிரிவுகள் மிக ஆபத்தான சூழ்நிலையின் இடையில் சுற்றிக் கொண்டிருப்பதாகவும் அவர்களுக்கு பின்பகுதியில் ஈராக் படைகள் சூழ்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

சர்வதேச அளவில் மிகப்பெரும் அளவிற்கு போருக்கு எதிர்ப்பு கிளம்பியிருப்பதால் கூடுதல் ஆயுத படைப்பிரிவுகளை அனுப்புவதில் தடை ஏற்பட்டிருக்கிறது என்று ஒரு காரணம் கூறப்படுகிறது. துருக்கியில் இத்தகைய மக்களது எதிர்ப்பு உணர்வு காரணமாக வடக்கு பகுதியிலிருந்து அமெரிக்க இராணுவம் தனது 4 வது காலாட் படைகளை துருக்கி வழியாக அனுப்ப முடியவில்லை. துருக்கி மண்ணிலிருந்து அமெரிக்க தரைப்படைகளை ஈராக்மீது படையெடுத்து செல்வதற்கு துருக்கி நாடாளுமன்றம் அனுமதி தருவதற்கு மறுத்து விட்டதால் இராணுவத்திற்கு தேவையான தளவாடங்களை ஏற்றி வந்து கொண்டிருக்கின்ற கப்பல்கள் மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து செங்கடல் பகுதிக்கு வந்து கொண்டு இருக்கின்றன.

அமெரிக்காவில் ஆயுதப் படைப்பிரிவு தலைவர்களுக்கும் மற்றும் சிவிலியன் தலைவர்களுக்கும் இடையே ''படைகளுடைய பாதுகாப்பு'' அவசியம் குறித்து கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அது ஒரு மோதலாக உருவாகியுள்ளது. அமெரிக்கா வியட்நாம் போரின்போது குறைந்த எண்ணிக்கையிலான படைகளை அனுப்பியதால் மிகப்பெரும் அளவிற்கு படையினரின் உற்சாகம் சீர்குலைந்து போனது என்றும், அமெரிக்கத் துருப்புக்கள் பலியாகும் அளவை குறைப்பதற்காக மிகப்பெரும் அளவிற்கு படைகளை அனுப்பி எதிரிகளை நிலைகுலையச் செய்யவேண்டுமென அமெரிக்க இராணுவம் வலியுறுத்தி வருகிறது. இப்படித்தான் 1991 ல் ஆறு வராங்கள் நடந்த யுத்தத்தில், அமெரிக்கா பி-52 ரக போர் விமானங்கள் மூலம் ஈராக் இராணுவத்தைத் தாக்கி தகர்த்துவிட்டு குவைத்திற்குள் தனது இராணுவத்தை அனுப்பியது.

''வியட்நாம் அறிகுறி''

புஷ் மற்றும் பென்டகனில் இடப்பெற்றுள்ள சிவிலியன் தலைவர்கள் அமெரிக்கத் துருப்புக்களின் வாழ்வை பலி கொடுப்பதற்கு தயாராக இருக்கிறார்கள். ''வியட்நாம் அறிகுறி' என்று சொல்லப்படுவதை ஒழித்துக்கட்டும் வகையில் போரில் அமெரிக்கப் படைகள் பலியாவதை எற்றுக்கொள்ள வேண்டுமெனக் கருதுகிறார்கள். அவர்கள், அமெரிக்க உயிர்ப்பலி தொடர்பாக எழுப்பப்படும் கூக்குரலை கட்டுப்படுத்த விரும்புகிறார்கள். அமெரிக்கப் படைகள் ''இரத்தம்'' சிந்தினால்தான் சர்வதேச அளவில் ''தற்காப்புப் போரை'' நடத்தும் இந்த அரசின் கொள்கையை செயல்படுத்துவது அவசியமாகும் என புஷ் நிர்வாகம் கருதுகிறது.

இந்தச் சூறையாடல் போரில் இளைஞர்கள் பலியாவதால் புஷ் இரவில் தூங்குவதில் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. வெள்ளை மாளிகை வட்டார தகவலின்படி அவர் வழக்கமான தினசரி அலுவல்களில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறார். இரவில் நன்றாகத் தூங்குகிறார். உடற்பயிற்சிக்காக செல்கிறார். வாரக் கடைசியில் ஓய்விற்காக கேப்ம் டேவிட் செல்கிறார். ஆனால் போரில் மடிகின்றவர்கள் புஷ் தொடர்பு கொண்டிருக்கிற, அவரது நண்பர்களாக இருக்கின்ற ஊழல் மலிந்த பணக்கார தட்டைச் சார்ந்தவர்களது பிள்ளைகள் அல்ல.

ஈராக்கின் தென்பகுதியில் அமெரிக்கப் படைகளுக்கு ஏற்பட்ட இழப்புக்களை கருத்தில் கொண்டு பென்டகன் தனது போர் உத்திகளை மாற்றுவதற்கு தயாராகி வருகிறது என்பதற்கான சமிக்ஞைகள் வந்து கொண்டுவருகின்றன. ஈராக் தரப்பில் உயிர்ச்சேதம் ஏற்படுவது தொடர்பான விதிமுறைகளை தளர்த்துவதற்கு ஆக்கிரமித்துச்செல்லும் அமெரிக்கப்படைகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இராணுவம் மற்றும் பொதுமக்களின் உயிர்ச்சேதங்கள் தொடர்பாக எந்தவிதமான கருத்தும் செலுத்தாமல் பிரிட்டனிலிருந்து வந்துகொண்டிருக்கிற பி-52 ரக குண்டுவீச்சு போர் விமானங்களை பாரியளவு பயன்படுத்தி வருகிறார்கள். பாக்தாத்திற்கு தெற்கிலுள்ள படைநிலைகளின் மீது பி-52 ரக போர் விமானங்கள் கடுமையான குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. செவ்வாய் கிழமையன்று 1400 முறை விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஏழாவது குதிரைப்படைப் பிரிவினர் ஒரே இடத்தில் நடைபெற்ற போரில் ஈராக்கை சேர்ந்த 300 அல்லது அதற்கு மேற்பட்டவர்களை கொன்றுவிட்டதாக பென்டகன் வட்டாரங்கள் தெரிவித்தன. இப்படி இறந்தவர்கள் வழக்கமான ஈராக் படைபிரிவுகளை சேர்ந்தவர்களா அல்லது ஆயுதம் ஏந்திய மக்களா என்பதை பென்டகன் வட்டாரங்கள் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையில் ரம்ஸ்பீல்ட், அமெரிக்கா ஈராக்கின் தொலைக்காட்சி நிலையங்களை குறிவைத்து தாக்கும் என்று கோடிட்டு காட்டியுள்ளார். ஏனெனில் ஈராக் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்கள் அமெரிக்காவின் இழப்புக்கள் குறித்தும் மற்றும் அமெரிக்கப் போர்கைதிகள் தொடர்பான செய்திகளை வெளியிட்டும் அவர்களது படங்களையும் காட்டி வருகின்றன. ஆதலால் இதற்குப் பதில் நடவடிக்கை எடுக்க அமெரிக்கா திட்டமிட்டு வருகின்றது.

வாஷிங்டன் ஈராக் பொதுமக்களை அதிக அளவில் கொன்று குவிப்பதற்கான அடிப்படையை ஏற்கெனவே உருவாக்கி வருகிறது. அமெரிக்கப் படைகளுக்கு எதிர் நடவடிக்கை எடுப்பவர்கள் ஈராக்கின் துருப்புக்கள் அல்லது சீருடை அணியாத ஈராக் துருப்புக்கள் அல்லது ''பயங்கரவாதிகள்'' என்று ரம்ஸ்பீல்ட் செவ்வாய்க் கிழமையன்று கூறினார். பல அமெரிக்க இராணுவ வீரர்களுக்கு ஈராக் புறப்படும் முன் அமெரிக்காவின் தரப்பிலிருந்து சொல்லப்பட்டது என்னவென்றால் ஈராக் மக்கள் அவர்களை பூச்செண்டு கொடுத்து தங்களை ''விடுதலை'' செய்த தலைவர்களாக வரவேற்கப்படுவார்கள் என்பதுதான். ஆனால் இப்போது தாங்கள் காட்டிக்கொடுக்கப்பட்டு விட்டதாக அமெரிக்கப் படையினர் கருதுகின்றனர். எனவே தற்போது தங்களது கமாண்டர்களும் புஷ்ஷினுடைய வெள்ளை மாளிகையும் கூறிவந்த சமாதானங்கள் குறித்து கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் மீது தங்களது ஆத்திரத்தைக் காட்டுவதற்கு இவர்கள் ஆரம்பிப்பார்கள்.

பாக்தாத்திற்கு தெற்கிலுள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தை ஆக்கிரமிப்பு படைகள் கடந்துவிட்டதும் ஈராக் படைகள் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு திட்டமிட்டு வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தெளிவில்லாத புலனாய்வுத் தகவல்களை மேற்கோள் காட்டியுள்ளனர். இப்படி இரசாயன தாக்குதல் நடத்தப்படும் என்ற மிரட்டல் வந்திருப்பதால் அமெரிக்க துருப்புக்கள் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் சிவிலியன் பகுதிகளில் தாக்குதல் நடத்துவார்கள் என்று இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. ''மக்களை அழிக்கும் பயங்கர ஆயுதங்கள்'' ஈராக் வசம் இருப்பதான காரணம்காட்டி இந்த ஆக்கிரமிப்பிற்கு நியாயம் கற்பிப்பது போல், பொதுமக்கள் அதிகம் நிறைந்திருக்கும் நகரப் பகுதிகளில் கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் தாக்குதல் நடத்துவதை அமெரிக்க இராணுவ வட்டாரங்கள் நியாயம் கற்பித்து வருகின்றன.

அமெரிக்கா கூறிய குறி தவறாத துல்லியமான குண்டுகள் நூற்றுக்கணக்கில் இல்லாவிட்டாலும் 20-30 என்ற அளவிற்கு பொதுமக்களிடையே உயிர் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பாக்தாத்தில் பணியாற்றி வருகின்ற நிருபர்கள் கொடுத்திருக்கும் தகவலின்படி மக்கள் கொல்லப்பட்டு மற்றும் அவர்களது வீடுகள் தரைமட்டமாகி வருவதால், அமெரிக்க - பிரிட்டன் படைகளுக்கு எதிராக ஆத்திரம் வளர்ந்துகொண்டு வருகின்றது என்றும், நகர மக்கள் ஆக்கிரமிப்பாளர்களை தங்களை விடுதலை செய்ய வந்தவர்களாக வரவேற்கும் நிலையில் இல்லை என்பதையும் நிருபர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்ற போரில் பயன்படுத்தப்பட்ட அமெரிக்க இராணுவ உத்திகளை ஆராயும்போது புஷ் நிர்வாகத்தின் அரசியல் கண்ணோட்டம் மிகப்பெரும் தோல்வி கண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. ''அரசியலை இதர வழிகளில் கொண்டு செல்லும் தொடர்ச்சிதான் யுத்தம்'' என்று கிளாசேவிட்ச் (Clausewitz) என்பவர் போர் பற்றி மிகப் பிரபலமாக விளக்கியிருந்தார். இந்த அரசாங்கத்தைப் பொறுத்தவரை இதர வழிகளில் கடைபிடிக்கப்பட்டுவரும் குண்டர் நடவடிக்கைகளின் தொடர்ச்சிதான் இந்தப் போராகும். உள்நாட்டில் பொருளாதார சூறையாடல்கள் மற்றும் காப்ரேட் முறைகேடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றை அப்படியே வெளிநாட்டில் சூறையாடும் போராக நடத்தி வருகிறார்கள். இந்த இரண்டு வகைகளிலும் ஊழல் மலிந்த ஆளும் கும்பலின் குறுகிய சுயநல போக்கே பேரழிவிற்கு கொண்டு செல்கிறது.

பாக்தாத் மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்துவதற்கு வாஷிங்டனும், லண்டனும் திட்டமிடுகின்றன. அது 5 மில்லியன் மக்களைக் கொண்ட, அரபு உலகின் வரலாற்றில் இடம்பெற்ற இந்த நகரத்தின் மீது கொடூரமாக தாக்குதல் நடத்துவது காட்டுமிராண்டித்தனமான செயலாகும். ஹீரோசிமா, நாகசாகி மீது நடத்தப்பட்ட அணுகுண்டுத் தாக்குதல் மற்றும் வியட்நாம் கிராமங்களை அழிப்பதற்கு நடத்தப்பட்ட தரைவிரிப்பு குண்டுவீச்சுத் (carpet-bombing) தாக்குதல்கள் மற்றும் இரண்டாம் உலகப் போரில் நாஸி ஆட்சியாளர்கள் புரிந்த போர்க் குற்றங்கள் ஆகியவற்றோடு ஒப்புநோக்கி பார்க்கின்ற அளவிற்கு இவை பாக்தாத் மீது தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிடுகின்றன.

இப்படி நடைபெற இருக்கின்ற இராணுவத் தாக்குதல்கள் அமெரிக்காவிலும், உலகம் முழுவதிலும் உள்ள பரந்த மக்களிடம் எதிர் விளைவுகளை உருவாக்கும். புஷ் மற்றும் பிளேயர் கும்பலின் சூறையாடும் போருக்கு எதிராகக் கிளம்பியுள்ள வெறுப்பு மேலும் இரட்டிப்பு அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

See Also :

ஈராக்கிற்கு எதிரான அமெரிக்க போர்: வரலாற்று பிரச்சனைகள்

''விடுதலை'' செய்யும் போர் என்ற அமெரிக்க பிரச்சாரத்தை சுக்குநூறாக்கிய ஈராக்கின் எதிர்ப்பு

அமெரிக்க வரலாற்றில் ஒரு வெட்கக்கேடான நாள்
அமெரிக்க குண்டு மழை பாக்தாத் நகரை பயங்கரக் காட்சிக்களமாக மாற்றுகின்றது

Top of page