World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Washington's colonial regime in waiting for Baghdad

பாக்தாத்தில் ஆட்சி செலுத்த காத்துக் கொண்டிருக்கும் வாஷிங்டனின் காலனி ஆதிக்கம்

By Peter Symonds
7 April 2003

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்கா தலைமையில் ஈராக் மீது நடத்தப்படும் கொடூரமான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தற்போது மூன்றாவது வாரத்தில் உள்ளன. இதற்கிடையில், குவைத் நகருக்குத் தெற்கு கடற்கரையில் உள்ள உல்லாச பங்களாக்களில் அமெரிக்கர்களை அதிகமாகக் கொண்ட நூற்றுக்கணக்கான அதிகாரிகள் பாக்தாத்தின் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொள்ள தயார்செய்து கொண்டிருக்கிறார்கள். ''ஈராக்கின் இடைக்கால நிர்வாகம்'' மற்றும் அது தொடங்கும் நேரம் தொடர்பாக புஷ் நிர்வாகத்திற்குள்ளேயே கடுமையான மோதல்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இத்தகைய ஆட்சியின் அரசியல் பண்பு பற்றி எந்தவிதமான சந்தேகமும் கிடையாது. அது, வாஷிங்டனின் கட்டளைகளை செயல்படுத்தும் புதிய காலனி ஆட்சியாக இருக்கும்.

தனது மிக நெருக்கமான இராணுவ கூட்டாளிகளான பிரிட்டன் மற்றும் அவுஸ்திரேலியாவின் கருத்தக்களைப் பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படாமல், புஷ் நிர்வாகம் ஈராக்கில் புதிய ஆட்சியை நிறுவுவதற்கான திட்டங்களை மிகத் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அத்துடன், மற்ற அரசாங்கங்களின் கருத்துக்களை புஷ் நிர்வாகம் நிச்சயம் பொருட்படுத்தப் போவதில்லை. ஆப்கானிஸ்தான் மீதான ஆக்கிரமிப்பின்போது ஒரு பொம்மையான ஹமீத் கர்சாய் மற்றும் அவரது நிர்வாகத்தை காபூலில் ஏற்படுத்துவதற்காக ஐ.நா.வின் ஆசியைப் பெறுவதில் அமெரிக்கா கவனமாக செயல்பட்டது. ஆனால் ஈராக்கை பொறுத்தவரை ஐ.நா.வின் பங்கு பணி எதுவாகயிருந்தாலும், அது அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும் என்று வாஷிங்டன் தெளிவுபடுத்தியுள்ளது.

ஏப்ரல் 2 ந்தேதி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், குவைத்தில் தயாராக காத்திருக்கும் ஆட்சி ''ஏறத்தாழ அமெரிக்கர்கள் மட்டுமே அடங்கியதாக இருக்கும்'' என்று குறிப்பிட்டிருக்கிறது. பென்டகனின் முன்னாள் அல்லது தற்போதைய அதிகாரிகள், வெளியுறவுத்துறை மற்றும் இராணுவ பொறியாளர் பிரிவுகள், USAID மற்றும் நிதித்துறை உட்பட இதர ஏஜென்சிகளை சேர்ந்தவர்கள் இந்த நிர்வாகத்தில் இடம்பெறுவார்கள். ஒரு சில ''பிரிட்டன் மற்றும் அவுஸ்திரேலிய தூதரக அதிகாரிகளும், ஈராக்கிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள ஈராக்கியர்களில் ஒரு சிறிய குழுவினரும்'' இதில் இடம்பெறுவார்கள். இந்தப் பதவிகள் பகிர்வில் ''ஐ.நா. ஓரளவிற்கு பணியாற்ற முடியும்'' என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் குழுவிற்கு ஓய்வுபெற்ற மூன்று நட்சத்திர தளபதியான ஜே கார்னர் (Jay Garner) என்பவர் தலைமை வகிப்பார். இவர், ஜனவரியில் பென்டகன் உருவாக்கிய புனர் நிர்மானம் மற்றும் மனித நேய விவகாரங்கள் (ORHA) அலுவலகத்தை தற்போது நடத்தி வருகிறார். இந்தக் குழு ஈராக்கை ஆக்கிரமித்துள்ள படைப்பிரிவின் ஒரு பகுதியாக செயல்படும். அமெரிக்க மத்திய கட்டளைத் தளபதியும், இராணுவ நடவடிக்கைகளுக்கு பொறுப்பு வகிப்பவருமான ஜெனரல் ரொமி பிராங்கிற்கு (Tommy Franks) நேரடியாக கார்னர் பதில் சொல்லவேண்டும். பென்டகனை வழிநடத்தி வரும் தீவிர வலதுசாரி மற்றும் புதிய பழைமைவாதிகளான (neo-conservatives) பாதுகாப்பு அமைச்சர் டோனால்ட் ரம்ஸ்பீல்ட், பாதுகாப்பு துணை அமைச்சர் போல் வொல்போவிச் மற்றும் மிக அண்மைக்காலம் வரை பாதுகாப்புக் கொள்கைக் குழுவின் தலைவராகயிருந்த ரிச்சார்ட் பேர்ள் போன்றவர்கள் ஈராக்கினுடைய நிர்வாகத்தை ஏற்பவர்களை தேர்ந்தெடுப்பதில் பெரும்பங்கு வகித்திருக்கின்றனர்.

கார்னர் ''புதிய பழமைவாதிகள்'' என்று அழைக்கப்படுபவர்களுடன் மிகவும் நெருக்கமான உறவு வைத்திருப்பவராக இருப்பதுடன், அவர்களது கருத்தை ஏற்றுக் கொள்பவராகவும் இருக்கின்றார். குறிப்பாக இஸ்ரேலின் வலதுசாரி லீக்குட் ஆட்சியின் ஆதரவாளரான இவர், 1998 ம் ஆண்டு இஸ்ரேலுக்கு ஆதரவான லாபி குழுவின் சார்பில் அங்கு பயணம் செய்தார். தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான யூதர்கள் இன்ஸ்ட்டியூட் (JINSA) என்ற அமைப்பு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை, இஸ்ரேல் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்வதில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.

கார்னர், JINSA ஆதரவில் 2000 ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தனது பெயரை சேர்த்துக்கொள்ள சம்மதித்தார். ''பாலஸ்தீன அதிகாரம் ஏற்பாடு செய்துள்ள வன்முறைகளை சமாளிப்பதில் சிறப்பான கட்டுத்திட்டத்துடன்'' இஸ்ரேல் நடந்துகொண்டதாகவும், அமெரிக்க தலைவர்கள் மற்றும் இராணுவத்திற்கு திட்டமிடுபவர்கள் நம்பி செயல்படக்கூடிய ஒரு சொத்தாக, வலுவான இஸ்ரேல் அமையும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. JINSA வின் நடப்பு மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் பட்டியலில் துணை ஜனாதிபதி ரிச்சர்ட் செனி, பேர்ள் மற்றும் பாதுகாப்பு துணை செயலாளர் டக்ளஸ் பெய்த் (Douglas Feith) ஆகியோர் JINSA ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் வரிசையில் உள்ளனர். இதில் டக்ளஸ் பெய்த் ஈராக்கில் இடைக்கால அதிகாரத்தை ஏற்படுத்துவதில் முன்னணி பங்கு வகிக்கிறார்.

CIA முன்னாள் இயக்குனர் ஜேம்ஸ் வூல்சே (James Woolsey) தற்போது JINSA ஆலோசகராக பணியாற்றி வருகிறார். குடியரசுக் கட்சியின் ஈராக் விடுதலைக் கமிட்டி போன்ற அதிதீவிர வலதுசாரி லாபி குழுக்களில் இவர் முக்கிய இடம்பெற்றிருக்கிறார். இந்தக் கமிட்டி சென்ற நவம்பரில் ஈராக்கில் இராணுவ நடவடிக்கையை வலியுறுத்துவதற்காக அமைக்கப்பட்டது. தற்போது பாக்தாத்தில் தகவல் அமைச்சக தலைவராக இருப்தற்கு இவரது பெயர் கூறப்பட்டு வருகிறது. சில சமயம் இந்த ஆலோசனையை ரத்து செய்வதற்கும் வாய்ப்பு உண்டு. ஏனென்றால், இவர் மிகவும் பகிரங்கமாக அமெரிக்க அதிகாரத்தை வலியுறுத்தி வருவதால், இதர பதவிகளுக்கு இவரது பெயரை பரிசீலித்து வருகிறார்கள்.

இதர பிரமுகர்களில் பேர்ள் உடன் நெருக்கமாக உறவு கொண்டிருந்த மைக்கேல் மாப்ஸ் (Michael Mobbs) என்பவரின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது. இவர் பாதுகாப்பு துணை செயலாளர் பெய்த் பணியாற்றிய அதே சட்ட நிறுவனத்தில் பணியாற்றியவர். பென்டகன் வக்கீல் என்ற முறையில் இழிபுகழ்பெற்ற மாப்ஸ், ஆப்கானிஸ்தானில் கைது செய்யப்பட்ட போர்க் கைதிகள் அனைவரது ஜனநாயக உரிமைகளை பறிக்கவும், அவர்களை கியூபா குவான்டனமோ பகுதியில் காலவரையின்றி காவலில் வைத்திருக்கவும் பென்டகன் சார்பில் வாதாடியவர். தற்போது ஈராக்கினுடைய சிவில் நிர்வாகத்தின் ஒட்டுமொத்த பொறுப்பை இவர் ஏற்றுக்கொள்வார் என்று ஆலோசனை கூறப்படுகிறது.

இராஜதந்திரியான பார்பரா போடன் (Barbara Bodine) மற்றும் இரண்டு ஓய்வுபெற்ற தளபதிகளான பக் வால்டர்ஸ் மற்றும் புரூஸ்மோர் ஆகியோர் பாக்தாத், பாஸ்ரா மற்றும் வடக்கு ஈராக் நகரான மோசூல் ஆகிய மூன்று நிர்வாகப் பிராந்தியங்களை நடத்தும் பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கின்றனர். வொய்ஸ் ஆஃப் அமெரிக்காவின் முன்னாள் தவைலர் ராபர்ட் ரீலி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள ஈராக்கியர்களது ஒத்துழைப்போடு பிரச்சார ஒளிபரப்புக்களை உருவாக்கி வருகிறார். அமெரிக்க நிதித்துறையைச் சேர்ந்த பல நிபுணர்கள் தற்காலிகமாக ஈராக் நாணயத்திற்குப் பதிலாக அமெரிக்க டொலர்களை எவ்வாறு சிறப்பாக செயல்படுத்த முடியும் என்று விவாதித்து வருகின்றனர்.

பாக்தாத்தில் அமெரிக்காவின் அபிலாஷைகள் மிகவும் அப்பட்டமானவை. ஈராக்கின் எண்ணெய் தொழில்துறையை மேற்பார்வையிடுவதற்காக அமெரிக்காவின் ஒரு மூத்த எண்ணெய் நிர்வாகியை நியமிக்க திட்டமிட்டிருப்பதாக ஏப்ரல் 3 ந்தேதி வாஷிங்டன் போஸ்ட் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது. ''ஈராக்கிற்கு வெளியில் தற்போது உள்ள ஈராக் நிபுணர்கள், எதிர்கால எண்ணெய் விற்பனைகளை நடத்துவதற்காக நியமிக்கப்படுவார்கள். ஷெல் ஆயில் (Shell Oil) கம்பெனியின் முன்னாள் தலைமை நிர்வாகியான பிலிப் யி.கரோல் என்பவர் எண்ணெய் உற்பத்திக்கு தலைமை வகிக்கும் அதிகாரியாக நியமிக்கப்படலாம்'' என்பதாக இப்பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் கார்பரேஷன்கள் மிக லாபம் தரும் வாய்ப்புக்களை மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றன. எண்ணெய் தொழில்துறையில் மட்டுமின்றி மீள்கட்டுமான ஒப்பந்தங்களிலும் மற்றும் ஈராக் பொருளாதாரத்தின் இதர அம்சங்களிலும் அத்தகைய வாய்ப்புகள் வரும் என்று அமெரிக்க கார்பரேஷன்கள் எதிர்பார்த்துக் கொண்டுள்ளன. போட்யூன் (Fortune) என்ற சஞ்சிகை அண்மையில் வெளியிட்டிருந்த ஒரு கட்டுரையில், கார்னரின் வர்த்தக சிறப்புக்களை முழுமையாக புகழ்ந்து எழுதியுள்ளது. முன்னாள் இராணுவ ஜெனரலான கார்னர் அமெரிக்க பாதுகாப்புத் தொழில்துறையோடு நெருக்கமான உறவுகளை வைத்திருப்பதுடன் SY-கோல்மேன் நிறுவனத்தின் தலைவராகவும் இருந்தார். பட்ரியோட் ஏவுகணைகளை அனுப்பும் பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் இஸ்ரேல் தனது சொந்த அரோ ஏவுகனைத் திட்ட அபிவிருத்தி போன்றவற்றிற்கு இந்த நிறுவனம் உதவியிருக்கிறது.

பழைமைவாத சிந்தனையாளர்கள் இடம்பெற்றுள்ள அமெரிக்கன் ஹெரிடேஜ் பவுண்டேசனில் (American Heritage Foundation) இருக்கும் ஆரியல் கோகன் என்பவரின் கருத்தை போட்யூன் பத்திரிகை அப்படியே ஏற்றக்கொண்டு பிரசுரித்திருக்கிறது. ''1960 களில் மத்தியில் சோசலிசம் உள்ள நாடுகளில் ஒரு முதலாளித்துவ முறையை புகுத்துவது அவசியமானது'' என்று கோகன் வலியுறுத்திக் கூறியுள்ளார். அரசாங்கம் நடத்துகிற எந்தத் தொழிலையும், அல்லது தனியார் லாபத்திற்கு விதிக்கப்படும் எந்தக் கட்டுப்பாட்டையும் ''சோசலிசம்'' என்று கருதுகிறார் இந்த வலதுசாரி சிந்தனையாளர். ஈராக்கில் ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் தனியார் மயமாக்கி குறிப்பாக, எண்ணெய்த் தொழிலிலும் மற்றும் அதன் பொருளாதாரத்தில் மிகுந்த லாபம் தரும் தொழில்களிலும், அமெரிக்க காப்ரேட் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கு வசதியாக, அவர்களது கட்டுப்பாட்டில் எல்லாவற்றையும் கொண்டு வருவதற்கு வழிவகை செய்யப்பட வேண்டும் என்று இவர் மேலும் வலியுறுத்துகிறார்.

கடுமையான விமர்சனங்கள்

பாக்தாத்தில் அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற வாஷிங்டன் மிகவும் அப்பட்டமான முன்னேற்பாடுகளை செய்து வருவதையும், மற்றும் ஈராக்கின் எண்ணெய் வளத்தை கையகப்படுத்தும் ஏற்பாடுகளை செய்து வருவதும், அமெரிக்காவின் ஐரோப்பிய எதிரி நாடுகளிடமும், அமெரிக்காவின் நெருக்கமான பாரசீக வளைகுடாவின் நட்பு நாடுகளிடமும் ஆத்திரமூட்டும் விமர்சனங்களை கிளறிவிட்டிருக்கின்றன. சவூதி அரேபியா மற்றும் இதர வளைகுடா நாடுகளில் உள்ள ஆளும் தட்டினர், பாக்தாத்தில் அமெரிக்க நிர்வாகம் உருவாவது வளைகுடா பிராந்தியத்தில் அரசியல் குழப்பங்களை ஏற்படுத்தும் என்றும், எண்ணெய் வளத்தை அமெரிக்கா பயன்படுத்துவதால் "OPEC" நடைமுறை சீர்குலைந்து உற்பத்தி கோட்டாக்கள் குழப்பப்பட்டு எண்ணெய் விலை கணிசமாக குறையும் என்று அஞ்சுகின்றனர்.

ஈராக் எண்ணெய் தொழில்துறை சம்மந்தமாக அமெரிக்கா உருவாக்கியுள்ள திட்டம், ஐ.நா.வின் முந்தைய ''உணவிற்கு எண்ணெய்'' திட்டத்திற்கும் மற்றும் சர்வதேச சட்டத்திற்கும் நேர் எதிரானது. சுருக்கமாக சொல்வது என்றால் இது பகல் கொள்ளையாகும். கிளிண்டனின் முன்னாள் சக்தித்துறை அதிகாரியான டேவிட் கோல்ட்வின் என்பவர் மிகவும் கவனமாக இதுபற்றி விளக்கியிருப்பது வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வெளியிடப்பட்டிருக்கிறது. ''புதிய பாதுகாப்பு சபை தீர்மானம், இல்லாமல் அமெரிக்கா ஈராக்கின் எண்ணெய் வளத்தை கைப்பற்றி மற்றும் விற்பனை செய்வதற்கு சர்வதேச சட்டப்படி சட்டப்பூர்வமான அதிகாரம் இருப்பதாக நான் நம்பவில்லை. தெளிவான உரிமைப் பத்திரம் இல்லாமல் எந்த ஒரு செல்வாக்கு மிக்க எண்ணெய்க் கம்பெனியும், எண்ணெயை வாங்குவது மிகவும் சந்தேகத்திற்குரிய ஒன்று'' என்று கோல்ட்வின் கூறியுள்ளார்.

பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் ஈராக்கை சீரமைப்பதிலும், குறிப்பாக எண்ணெய் தொழிலை நடத்துவதிலும் ஐ.நா. முக்கியமான பங்கு வகிக்கவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. அத்தகைய முயற்சியானது பாக்தாத்தில், அமெரிக்கா தனது ஏகபோக பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கு தடைக் கல்லாக அமையும். ஆதலால் இந்தக் கோரிக்கைகளை வாஷிங்டன் எடுத்த எடுப்பிலேயே ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. சென்ற வாரம் நேட்டோ கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக புரூஸெல்ஸ் சென்றிருந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கொலின் பவெலினால் தனது ஐரோப்பிய சகாக்களுடன் எந்தவிதமான உடன்பாட்டிற்கும் வரமுடியவில்லை. ''ஐ.நா. ஒரு பங்கு வகிக்கவேண்டும் என்பதில் எங்களுக்கிடையில் ஒரு கருத்து உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த பங்கு எப்படிப்பட்டது எவ்வாறு அமையவேண்டும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்'' என்று அவர் கருத்து தெரிவித்தார்.

ஐரோப்பிய ஆளும் வட்டாரங்களில் பவெல், பென்டகனின் கடும் போக்காளர்களான ரம்ஸ்பீல்ட் மற்றும் இதர அதிகாரிகளை மட்டுப்படுத்தும் வகையில் செயல்படுபவர் என்று கருதப்படுகிறார். உண்மையிலேயே அமெரிக்கப் பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவு துறைகளுக்கிடையே நடைபெறகின்ற கடுமையான கருத்து மோதல்கள் அமெரிக்க ஊடகங்களில் வெளியிடப்படுகின்றன. இவை முழுக்க முழுக்க அரசியல் தந்திரங்கள்தான். பவெலும் இதர தூதர்களும் ஐரோப்பாவிலும், மத்திய கிழக்கிலும் அமெரிக்கத் திட்டங்களுக்கு கண்டனம் தெரிவிப்பவர்களை அவர்களது உணர்வுகளை சமாதானப்படுத்த முயன்று வருகிறார்கள். ஈராக்கில் ஐ.நா.வின் பங்கு பணி ஒட்டுமொத்தமாக மேற்பூச்சு போன்றது என்ற புஷ் நிர்வாகத்தின் அத்தகைய கருத்தைத்தான் பவெலின் கருத்துக்கள் எதிரொலிக்கின்றன.

ஈராக்கினுடைய பல்வேறு எதிர்கட்சி அணிகளையும் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள ஈராக் குழுக்களையும் இரண்டாம் தர நிலைக்கு வாஷிங்டன் ஒதுக்கிவிட்டது. குவைத்தில் உள்ள கார்னர் குழுவில் மாத்திரம் ஒரு சில ஈராக்கியர்கள் பணியாற்றி வருகிறார்கள். பாக்தாத்தில் பல்வேறு அமைச்சகங்களை கண்காணிக்கும் அமெரிக்க அதிகாரிகளுக்கு ஆலோசகர்களாக பணியாற்றுவதற்காக சுமார் 100 ''சுதந்திர ஈராக்கியர்கள்'' அடங்கிய குழுவை நியமிக்க கார்னர் குழு திட்டமிட்டிருக்கிறது என்றும் அதிகாரம் இல்லாத ஈராக் ஆலோசனைக் குழுவும் இதன் மூலம் நியமிக்கப்படும் என்றும் லண்டனிலிருந்து வெளிவரும் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

ஈராக்கில் பகிரங்கமாக வாஷிங்டன் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுத்து வருவது, வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள ஈராக் குழுக்களிடையே எதிர்ப்பை கிளறிவிட்டிருக்கிறது. சில குழுக்கள் பல ஆண்டுகளாக அமெரிக்கா கொடுத்துவரும் ஊதியத்தில் இயங்கி வருகின்றன. பென்டகனில் உள்ள பழைமைவாதிகளின் அன்பிற்கு பாத்திரமான அஹமது சலாபிகூட பாக்தாத்தில் அமெரிக்கா நிர்வாகத்தை உருவாக்கும் திட்டத்தில் தனக்கு எந்தவிதமான சம்மந்தமும் இல்லை என்று பகிரங்கமாக அறிவிக்கின்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார். ஈராக்கியர்கள் தலைமையில் இடைக்கால நிர்வாகம் அமைக்கப்படவேண்டும் என்றும், தனது சொந்த ஈராக் தேசிய காங்கிரஸ் மற்றும் பல்வேறு எதிர்கட்சி குழுக்கள் அடங்கிய இடைக்கால நிர்வாகம் அமைக்கப்பட வேண்டும் என்றும் அஹமது சலாவி வலியுறுத்தி வருகிறார்.

அதே நேரத்தில் சலாபியை ஓரங்கட்டிவிடமாட்டார்கள். கார்டீயன் பத்திரிகையில் வெளியிடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையில் அமெரிக்க பாதுகாப்பு துணை அமைச்சரான போல் ஒல்போவிச், ஈராக் நிதி அமைச்சகத்தில் சலாபிக்கு ஆலோசகர் பதவி வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்தி வருவதாக எழுதப்பட்டிருக்கிறது. ஒரு முதலீட்டு வங்கியாளரான சலாபி ஜோர்தானில் ஒரு மோசடி வழக்கில் தண்டிக்கப்பட்டவர். பென்டகன் வலதுசாரிகளின் இஸ்ரேல் ஆதரவு கருத்துக்களை ஏற்றுக்கொள்பவர். சலாபியின் மருமகன் சலீமுக்கும் மற்றும் இதர INC சகாக்களுக்கும் புதிய நிர்வாகத்தில் முக்கிய பதவிகள் தரப்படவேண்டும் என்று போல் வோல்போவிச் வலியுறுத்தி வருகிறார்.

79 வயதான ஈராக்கின் முன்னாள் வெளியுறவு அமைச்சரும், வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ள மற்றொருவருமான ஆட்னான் பச்சாசி (Adnan Pachachi) என்பவர் அண்மையில் சலாபிக்கு சவாலாக தோன்றியிருக்கிறார். சதாம் ஹூசேனுக்கு பிந்திய ஈராக்கில் சலாபிக்கு எந்தப் பதவியும் தரக்கூடாது என்று கூறிவருகிறார். இவர், ஐக்கிய அரபு நாடுகளில் வாழ்ந்து வந்ததோடு, அந்த அரசாங்கங்களுக்கு ஆலோசகராகவும் இருந்தார். சதாம் ஹூசேனின் பாத் கட்சி 1960 களின் கடைசியில் ஆட்சிக்கு வந்ததும் ஈராக்கிலிருந்து வெளியேறினார். அத்தோடு, ஈராக் எதிர்கட்சிகளின் சார்பில் அமெரிக்காவின் சிறப்புத் தூதராக பணியாற்றுகின்ற, கடந்த ஜனவரியில் சுவிட்சர்லாந்து நடைபெற்ற டாவோஸ் உலகப் பொருளாதார அரங்கு மாநாட்டில் கலந்துகொண்ட சல்மே கலீல் சாத் என்பவர் போருக்கு பிந்தைய ஈராக்கில் பச்சாசி பங்குபெற வேண்டும் என்று உற்சாகப்படுத்தி வருகிறார். .

பச்சாசி, சலாபியுடனும் அவரது ஈராக் தேசிய காங்கிரஸ் உடனும் இணைந்துகொள்ள மறுத்துவிட்டு மார்ச் கடைசியில் லண்டனில் தனது சொந்த மாநாட்டை வெளிநாட்டில் வாழும் 300 ஈராக்கியர்களைக் கொண்டு கூட்டினார். ஆனால், இந்த மாநாடு பாக்தாத்தில் அமெரிக்க நிர்வாகத்தை கொண்டுவர மேற்கொள்ளப்படும் முயற்சியை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, ஐ.நா. ஒத்துழைப்போடு தற்காலிக அரசாங்கத்தை உருவாக்கக் கோரும் தீர்மானத்தை மாநாடு நிறைவேற்றியது. சலாபியைப்போல், பச்சாசிக்கும் அமெரிக்க ஆக்கிரமிப்பிலோ அல்லது புதிய காலனி ஆதிக்கம் உருவாவதிலோ எந்தவிதமான அடிப்படை கருத்து வேறுபாடும் இல்லை. போருக்கு பிந்தைய ஈராக்கில் தங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்றும், ஈராக் வளங்களை பகிர்ந்துகொள்வதில் பங்குவேண்டும் என்றும் ஐரோப்பிய மற்றும் வளைகுடா நாடுகள் ஐ.நா.வை அச்சாணியாக பயன்படுத்த விரும்புகின்ற கருத்தையே இவர்கள் ஆதரிக்கின்றனர்.

சர்வதேச அளவில் எழுப்பப்படும் ஆட்சேபனைகளை பொருட்படுத்தாமல் விரைவில் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் ஈராக்கின் இடைக்கால நிர்வாகத்தை பிரகடனப்படுத்தும் ஏற்பாட்டை தீவிரமாக செயல்படுத்த, புஷ் நிர்வாகம் மும்மரமாக ஈடுபட்டுள்ளது என்பதற்கு எல்லா சமிக்கைகளும் தென்படுகின்றன. அத்தகைய இடைக்கால நிர்வாகத்தை விரைவாக, குறிப்பாக பாத்தாத் மற்றும் இதர நகரங்கள் வீழ்ச்சியடையும் முன்னரே தெற்கு ஈராக்கில் பிரகடனப் படுத்தவேண்டும் என்று ஜனாதிபதி புஷ்ஷிற்கு பரிந்துரை செய்யும் செயற்குறிப்பை ரம்ஸ்பீல்ட் அனுப்பியிருப்பதாக சென்ற வெள்ளிக்கிழமை வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டிருந்தது. அத்தகைய நடவடிக்கை ஏன் என்பதற்கான காரணங்கள் மிகத் தெளிவாக, பகிரங்கமாக அனைவரும் அறிந்ததுதான். ஈராக்கின் ஆட்சி அதிகாரங்களை யார் இயக்கப் போகிறார்கள் என்பது தொடர்பாக ஐ.நா.விலோ, மற்றும் இதர சர்வதேச அரங்குகளிலோ எந்தவிதமான விவாதமும் நடைபெற்றுவிடாது தடுப்பதற்காக ரம்ஸ்பீல்ட் இவ்வாறு அவசரமான செயற்குறிப்பை அனுப்பியுள்ளார்.

கார்னர் தனது பங்கு பணி ஈராக்கில் மிக குறுகிய காலத்திற்கு (90 நாட்களுக்கு) மட்டுமே நீடிக்கும் என்று பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டாலும், அமெரிக்கா தனது கட்டுப்பாட்டை விட்டுவிடும் என்று எவரும் நம்பவில்லை. கார்னரின் குழுவைச் சேர்ந்த ஒருவர், ஊடகங்களுக்கு பேட்டியளிக்கும்போது கீழ்கண்டவாறு குறிப்பிட்டார். ''எங்களில் சிலர் இங்கே வரும்போது, எங்களது பணி மூன்று அல்லது நான்கு மாதங்கள்தான் என்று கருதினோம். ஆனால், இப்போது ஒன்று தெளிவாகத் தெரிகிறது. நாங்கள் இங்கே இருக்கப்போகிறோம். இறுதியாக பாக்தாத் போகிறோம். நாங்கள் எதிர்பார்த்ததைவிட நீண்ட காலத்திற்கு நாங்கள் இருப்போம்'' என்றார்.

இதற்கிடையில், நூற்றுக்கணக்கான அமெரிக்க அதிகாரிகள் குவைத் நகரத்திற்கு அருகில் உள்ள சொகுசு மாளிகையில் எப்போது அழைப்பு வரும் என்று காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் விரிவான திட்டங்களை உருவாக்கி வருகிறார்கள். ஈராக்கின் வரலாறு மற்றும் அதன் மக்களைப் பற்றிய தங்களது கூட்டு அறியாமையை சரிகட்ட முயன்று வருகிறார்கள். ''தற்போது, போர் எதிர்பார்த்ததைவிட நீண்டுகொண்டே போகிறது. எனவே ஓய்வு எடுத்துக்கொள்ளவும், படிக்கவும் தற்போது அவர்களுக்கு நேரம் இருக்கிறது. சிலர் ஈராக் தொடர்பான நிபுணர்களாக இருக்கின்றனர். சிலர் ஈராக் தொடர்பான புத்தகங்களோடும் மற்றும் ஈராக்கினுடைய வரலாறு தொடர்பான கட்டுரைகளோடும் வந்திருக்கின்றனர். இந்தப் புத்தகங்களில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் செய்த தவறுகள் பற்றிய அத்தியாயங்களை அடிகோடிட்டு குறித்து வைத்திருக்கிறார்கள்'' என்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை இவர்களது நிலையை வர்ணித்திருக்கிறது.

Top of page