World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

Hong Kong protests leave Tung administration isolated

ஹாங்காங் எதிர்ப்புக்கள் டுங் நிர்வாகத்தைத் தனிமைப்படுத்தியுள்ளன

By John Chan
30 July 2003

Use this version to print | Send this link by email | Email the author

நாசவேலைக்கு எதிரான கடுமையான மசோதா தொடர்பான திட்டங்கள் கைவிடப்பட்டு, உடனடியான அரசியல் நெருக்கடி தற்காலிகமாகக் குறைந்து போனாலும், ஹாங்காங்கில் அடிப்படைப் பிரச்சனைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை. ஜூலை 1-ம் தேதி, 500,000 மக்கள் மாபெரும் எதிர்ப்பினைக் காட்டியதை அடுத்து, தலைமை நிர்வாகி டுங் சீ-ஹ்வாவின் ஆட்சி புதிய சட்டங்களை இயற்றுவதிலிருந்து பின்வாங்கியுள்ளது. ஆனால் பெய்ஜிங், அவற்றை விரைவில் இயற்றுமாறு துங்கிற்குக் கொடுக்கும் அழுத்தம் மாறாத நிலையில், ஜனநாயக உரிமைகளைக் காத்திடுவதில் தீவிரம் கொண்ட எதிர்ப்பாளர்களோடு மறுபடியும் மோதல்களைச் சந்திக்க உள்ள காட்சி உருவாகியுள்ளது.

இந்த நெருக்கடிக்கிடையில், துங்கினுடைய நிலைமையே சந்தேகத்திற்கிடமாகியுள்ளது. எதிர்ப்பு வெடிப்பிற்குக் காரணமாக இருந்த கொள்கைகள் முழுவதிற்கும், அவரையே பலிக்கடா ஆக ஆக்குவதற்கான முயற்சிகளை, அவருடைய நெருங்கிய நண்பர்கள் உட்பட, ஹாங்காங்கின் அரசியல், வணிக, அமைப்பினர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மசோதாவை இயற்றாததற்காக அவர் மீது பெய்ஜிங் அதிருப்தியைக் கொண்டுள்ள போதிலும், டுங்கைப் பதவியிலிருந்து வெளியேற்றத் தயக்கம் காட்டியுள்ளது.

ஜூலை 19-20 வார இறுதியில் டுங் பெய்ஜிங்கிற்குச் சென்றிருந்தபோது, ஜனாதிபதி ஹிஜின்டோவும், பிரதம மந்திரி வென் ஜியாபாவோவும் அவருக்கான ஆதரவிற்கு அடையாளம் காட்டியதுடன், அழிவுவேலைக்கெதிராக சட்டத்தை புதிதாகக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபடுமாறும் கேட்டுக் கொண்டனர். அதிகாரபூர்வமான க்சின்ஹூவா செய்தி முகவாண்மை, ஹூ ஜின்டாவோ தெரிவித்ததாகக் கூறுவதாவது: "ஹாங்காங்கின் சமுதாய உறுதிப்பாட்டை நிலைநிறுத்தி வந்தால்தான், நல்ல வணிகச் சூழ்நிலையைப் பாதுகாப்பதோடு, பன்னாட்டு நிதியம், வர்த்தகம், போக்குவரத்து இவற்றின் மையம் என்ற அதன் நன்மைகளையும் தக்க வைத்துக் கொள்ள முடியும்." தொலைக்காட்சியில் வென் கூறினார்: "தற்போதைய கஷ்டங்களிலிருந்து ஹாங்காங் மக்களை வெளிக்கொண்டுவர தலைமை நிர்வாகி டுங் சீ ஹ்வா முன்னிற்பார் என்று நான் நம்புகிறேன்."

ஆனால் டுங்கினுடைய நிர்வாகமோ பெரிதும் வலிமை குன்றியதாக இருந்து வருகிறது. ஜேம்ஸ் டியன் என்னும் வணிகச் சார்புடைய தாராண்மை கட்சித் தலைவர், ஜூலை 7-ம் தேதி மக்களுடைய ஆதரவற்ற அரசாங்கத்திடமிருந்து தன்னைத் தொலைவாகக் காட்டிக் கொள்வதற்காக நிர்வாகக் குழுவிடமிருந்து வெளியேறிவிட்டார். பாதுகாப்புச் சட்டமியற்றுதல் அல்லது வரி உயர்த்துதல் போன்ற நடவடிக்கைகளுக்கான பெரும்பான்மைக்கு உத்திரவாதம் இல்லாத அளவு ஹாங்காங் சட்டமன்றத்தில் பெரும்பான்மையின்மை இந்தப் பதவி விலகலால் டுங்கிற்கு ஏற்பட்டுவிட்டது.

அரசியல் நெருக்கடிகளைச் சற்று குறைக்கும் வகையில், நிதிச் செயலர் அன்டனி லியுங்கும், பாதுகாப்புச் செயலர் ரெஜினா இப் என்ற துங் அமைச்சரவையின் இரு செல்வாக்கிழந்த மந்திரிகளும் ஜுலை 16 அன்று ராஜினாமா செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். மார்ச் மாதம் கார்களின் மீதான வரிகளை உயர்த்துவதற்குச் சில வாரங்கள் முன்பு ஒரு பெரிய ஆடம்பரமான காரை வாங்கியதாக லேவுங் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அழிவு வேலை எதிர்ப்புச் சட்டங்களை நிறைவேற்ற சாதாரண தொழிலாளர்களைக் கலந்து ஆலோசிக்க வேண்டிய தேவையில்லை என்று ஆணவத்துடன் இப் பேசியதை தொடர்ந்து ஏற்பட்ட எதிர்ப்பால், அவரும் ராஜிநாமா செய்ய நேரிட்டது.

பதவி விலகல்களைத் தொடர்ந்து இரண்டு பெரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் நிகழ்த்தப் பெற்றன. தேசியப்பாதுகாப்பு மசோதா ஜூலை 9-ம் தேதி நிறைவேற்றப்படுவதாக இருந்த அளவில், சட்டமன்றத்திற்கு முன்பு, அதை முழுமையாக கைவிடவும், வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை, ஆகியவற்றைக் கோரியும் 50,000 எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். "அதிகாரத்தை மீண்டும் மக்களுக்கே வழங்கிடுக" என்று அச்சிட்டிருந்த வெள்ளைநிற டி சட்டைகளை அணிந்து டுங் பதவியிலிருந்து இறங்க வேண்டும் என்று முழக்கமும் இட்டனர். ஒரு செய்தியாளர் கூட்டத்தில், தன்னுடைய ஆட்சி "மாபெரும் சவால்களை" சந்தித்துக் கொண்டிருப்பதாக துங் ஒப்புக்கொள்ள நேர்ந்தது.

இதில் பங்கேற்றோர் தொழிலாளர்களும், இளைஞர்களுமாக இருந்தனர். லியு யுக்-லின் என்ற ஒரு இல்லக் காப்பாளர் வாஷிங்டன் போஸ்ட் க்கு, "அவர் (டுங்) பதவியிலிருந்து இறங்க வேண்டும்! எங்களுக்கு அவரைப் பிடிக்கவில்லை!" என்று கூறினார். ஹோ சின் என்ற ஓய்வு பெற்ற மின் தொழிலாளர் "வாக்குப் போடும் உரிமை" வேண்டும் என்பதற்காக ஜூலை 1-ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் தான் பங்கு கொண்டதாக கூறினார். Associated Press- ற்கு கிட்டி லாம் என்னும் எழுதுவினைஞர், "ஜூலை 1-ம் தேதி ஆர்ப்பாட்டம் எங்களுக்கு மக்கள் சக்தியைப் பற்றிய படிப்பினையைத் தந்துள்ளது. இதுதான் ஜனநாயகத்தின் தொடக்கம்." என்று கூறினார்.

ஜூலை 13-ல் நடைபெற்ற மற்றொரு ஆர்ப்பாட்டம் 20,000 பேரை ஈர்த்தது. ஜூலை 1 போலவே பின்னர் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் கூடுதலான மக்கட்தொகை, ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் சமுதாயத்தின் பரந்த அளவு அடுக்குகளில் எவ்வாறு ஆழ்ந்து வேரூன்றியுள்ள விரோதப் போக்கு உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டியது. ஹாங்காங்கின் அடிப்படைச் சட்டம் 23-வது விதியின்படி இயற்றப்பட்டிருக்க வேண்டிய மசோதா சீனாவின் போலீஸ் முறைகளை பழைய பிரிட்டிஷ் குடியேற்றப் பகுதிக்கும் விரிவாக்கியிருக்கும். சீன அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டு, தற்போது ஹாங்காங்கில் புகலிடம் கொண்டுள்ள Falun Gong, China Democracys Movement என்னும் இரு அமைப்புக்கள் மீதும் குற்ற வழக்குகள் தொடர அந்த மசோதா வழி வகுத்திருக்கும்.

ஹாங்காங்கில் ஏற்பட்டுள்ள எதிர்ப்புக்கள் சீனாவில் மற்ற இடங்களிலும் அரசியல் அமைதியின்மையை ஏற்படுத்தும் திறனுடையவை என்பதை நன்கு அறிந்துள்ள பெய்ஜிங் அரசாங்கம் அதன் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில், அதில் ஒரு "சிறுபான்மையினர்" மட்டுமே தொடர்பு கொண்டுள்ளனர் எனக் கூறிவருகின்றது. உதாரணமாக ஜூலை 10, பீப்பிள்ஸ் டெய்லி பத்திரிக்கையில் ஜனநாயகக் கட்சியும், கத்தோலிக்க திருச்சபையும் ஆர்ப்பாட்டங்களைத் தூண்டி விட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. "அவர்களில் (ஹாங்காங் வாழ் மக்களில்) பெரும்பாலோர் தங்களுடைய கருத்துக்களுக்கு அரசியல் கொந்தளிப்பு கொடுத்து அரசாங்கத்தை முடக்கி அரசியல் நெருக்கடி ஏற்படுத்துவதை விரும்பவில்லை" என்று அது அறிவித்துள்ளது.

உள்ளூர் வணிக தலைவர்களிடமும் முக்கிய அரசியல் கட்சிகளிடமும் கொந்தளிப்பான நிலைமை பற்றி 10 நாட்கள் பேச்சு வார்த்தைகள் நடத்துவதற்கு, நடுமட்ட அரசாங்க அதிகாரிகளைக் கொண்ட 15-20 பேரடங்கிய குழு ஒன்றை, பெய்ஜிங் அனுப்பி வைத்தது. அக்குழுவில் ஹாங்காங், மக்காவ் விவகாரத்துறை அலுவலகம், உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பல்வேறு உளவுத்துறை அமைப்புக்களில் உள்ள மத்திய அரசாங்க அதிகாரிகள் உறுப்பினர்களாக இருந்தனர்.

தனிப்பட்ட முறையில் சீன அதிகாரிகள் எதிர்ப்பின் பரப்பைப்பற்றி ஒப்புக் கொண்டுள்ளனர். இரண்டு அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியபிறகு South China Morning Post -க்கு, ஜனநாயகக் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியதாவது: "வெளியார் சக்திகள் ஆர்ப்பாட்டங்களைத் தூண்டினர் என்ற கருத்து அவர்களிடம் இருப்பதாக, நான் நினைக்கவில்லை. இந்த அரசியல் நெருக்கடி கட்டுப்பாட்டை மீறிப் போய், ஹாங்காங்கின் ஸ்திரத் தன்மையைத் தாக்குமோ என்ற கவலை கூட அவர்கள் கொண்டுள்ளனர்."

இந்தக் கட்டத்தில் தூங்கை ஆதரிப்பது தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என்பதை பெய்ஜிங் உணர்ந்துள்ளது. பெய்ஜிங்கின் மக்கள் பல்கலைக் கழக பேராசிரியர்களில் ஒருவரான ஷி இன்ஹாங், வாஷிங்டன் போஸ்ட்டுக்குக் கூறினார்: "இரட்டை விளைவுகள் வந்து விடுமோ என்ற அச்சத்தில் அவர்கள் (பெய்ஜிங் தலைமை) பயப்படுகின்றனர். அரசாங்கம் அவரைக் கைவிட்டுவிட்டால் நாசவேலைகளுக்குத் தளமாக ஹாங்காங் அமைந்துவிடும். அதே நேரம் சீன மக்களிடையே கம்யூனிஸ்ட் கட்சி தவறே செய்யாத அமைப்பு அல்ல என்ற முடிவுக்கு வரக்கூடும், மக்கள் சக்தி என்று அழைக்கப்படும் கருத்து ஒரு தாக்கத்தைக் கொண்டுவர முடியும்".

பெய்ஜிங் சார்புடைய வணிகர்களும், தகமை தொழில் பார்ப்போரும் அடங்கிய 800 உறுப்பினர் கொண்ட தேர்வுக்குழுவால் 1997, 2002 என இருமுறை டுங் "தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்". ஹாங்காங்கை மீண்டும் சீனாவிற்கு ஒப்படைத்த நேரத்தில் இதன் ஜனநாயக விரோத முறையை 2007-ல் மறுபரிசீலனை செய்ய சீனா ஒத்துக்கொண்டுள்ளது; மேலும் ஓரளவு பெரும்பாலோர் பங்குபெறும் வாக்குரிமை முறையை கொண்டுவருவதாகவும் ஏற்கப்பட்டிருந்தது. ஹாங்காங் சட்டமன்றம் தன்னுடைய முழுக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் போதே இந்த நாசவேலை எதிர்ப்புச் சட்டத்தை கொண்டுவந்து விட வேண்டுமென்று பெய்ஜிங் விரும்புகிறது.

பொருளாதார மற்றும் சமுதாய நிலைமைகளில் மோசமடைந்துவரும் நிலைமைகள் மீதாக ஹாங்காங்கில் அமைதியின்மை தோன்றியுள்ளது. ஆசிய நிதி நெருக்கடியின் விளைவாகத் தீவின் பொருளாதாரம் 1997 - 98-ல் தாக்குதலுக்குட்பட்டு ஷாங்காய் போன்ற மற்ற பெரிய சீன நகரங்கள் போட்டியாக வளரும் அளவிற்கு இடம் கொடுக்க வேண்டியதாகப் போயிற்று. WTO உலக வணிக அமைப்பில் 2001ம் ஆண்டு சீனா நுழைந்து பெருநிலப்பரப்பிற்கு நுழைவாயில் என்ற முறையில் ஹாங்காங் கொண்டிருந்த பொருளாதார முக்கியத்துவத்தைப் பொருளற்றதாக்கிவிட்டது.

டுங் பதவியில் இருத்தப்பட்டு ஆறாண்டுகள் கடந்த பின்னர், அரசாங்கம் மிகப் பெரிய 8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது கிட்டத்தட்ட நகரத்தின் GDP யில் ஆறு சதவிகிதம் பற்றாக்குறையாகப் போய் விட்ட நிலையில் உள்ளது; பங்கு விலைகளில் குறைவு, பணச்சுருக்கம், நில மணைகள் வணிகத்துறைக் குமிழியின் சமீபத்திய வெடிப்பு முதலியவை இந்நிலையைத் தோற்றுவித்துள்ளன. சார்ஸ் தொற்று நோயின் தாக்கத்திற்குப் பின், ஜூன் மாதத்தில் ஆசிய பசிபிக் பகுதியிலேயே இரண்டாவது அதிகமான நிலையான 8.6 சதவிகித வேலையின்மையைப் புள்ளி விவரம் காட்டுகிறது. ஆனால் அரசாங்கத்தின் "உதவி" கொள்கை மாதத்திற்கு 350- 400 அமெரிக்க டாலர்கள் என குறைந்த சம்பளத்தில் 8000 வேலைகளை மட்டுமே ஏற்படுத்தியுள்ளது.

ஹாங்காங்கில் நடைபெற்ற சமீபத்திய நிகழ்ச்சிகள், ஹு ஜின்டாவோ, வென் ஜியாபாவோ உடைய புதிய சீனத்தலைமை தான் சீனாவில் கூடுதலான, திறந்த மற்றும் ஜனநாயக அரசியல் முறையை நோக்கிய முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது என்ற கூற்றை நிராகரிக்கிறது. அதன் முந்தைய அரசுகள் போலவேதான் இதுவும் ஹாங்காங்கின் மீது எதேச்சாதிகாரத்தை செலுத்தும் போக்கைக் கொண்டுள்ளது. மிகுந்த வெறுப்பிற்குட்பட்டுள்ள டுங்கின் ஆட்சிக்கு முட்டுக் கொடுத்து, நாசவேலை எதிர்ப்புச் சட்டத்தை எப்படியும் கொண்டுவர வேண்டும் என்று வற்புறுத்துவதின் காரணம் வருங்கால எதிர்ப்புக்கு எதிராக சட்ட அடிப்படையில் அடக்கு முறைகளைக் கையாள்வதற்கே ஆகும்.

See Also :

23 July 2003

நாசவேலைகளுக்கு எதிரான சட்டத்திற்கு எதிராக ஹாங்க்காங்கில் பிரம்மாண்டமான பேரணி

Top of page