World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Shanmugam Sundaralingam 1956-2003

Untimely death of a Sri Lankan Trotskyist

சண்முகம் சுந்தரலிங்கம் 1956-2003
இலங்கை ட்ரொட்ஸ்கிசவாதியின் அகால மரணம்

By the Socialist Equality Party (Sri Lanka)
6 August 2003

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க) உறுப்பினரான சண்முகம் சுந்தரலிங்கம் ஆகஸ்ட் 1ம் திகதி அகால மரணமானார். அவர் முன்னாள் இலங்கை தொழிலாள வர்க்கத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட பகுதியினரான தமிழ் தோட்டத் தொழிலாளர்களில் ஒருவராக இருந்ததோடு 10 வருடங்களாக சோ.ச.க. வின் அங்கத்தவராகவும் விளங்கினார்.

சுந்தரலிங்கத்தின் வீடு கொழும்பில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பண்டாரவளை பிரதேசத்தின் அயிஸ்லெபி தோட்டத்தில் உள்ள "வரிசை" வீடுகளில் ஒரு சிறிய அறையேயாகும். கடந்த வெள்ளிக்கிழமை அவர் தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள கடையினுள் விழுந்ததையடுத்து தேயிலைத் தோட்டத்தில் உள்ள சிறிய மருந்தகத்துக்கு உடனடியாக கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் அவர் அங்கு போய் சேர்வதற்கு முன்னரே உயிரிழந்தார்.

1956 ஆகஸ்ட் 9 அன்று பிறந்த சுந்தரலிங்கத்துக்கு வயது 47 மட்டுமேயாகும். அவர் விட்டுச் சென்ற அவரது துணைவியார் கமலா சுந்தரலிங்கமும் ஒரு தோட்டத் தொழிலாளியும் சோ.ச.க. ஆதரவாளருமாவார். அவரது மரணம் சோ.ச.க. வுக்கு ஒரு பேரிழப்பாவதோடு அவரது தோழர்களால் தொடர்ந்தும் நினைவுகூரப்படுவார்.

சுந்தரலிங்கத்தின் மரணச் சடங்குகள் கடந்த ஞாயிறு அன்று அவர் தொழில்புரிந்த தோட்டத்திலேயே இடம்பெற்றது. சுமார் 300 தோட்டத் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமத்தவர்களும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சமூகமளித்திருந்தனர். சோ.ச.க. வின் பதாகையின் கீழ் இடம்பெற்ற மரணச் சடங்கில் சோ.ச.க. மத்திய குழு உறுப்பினர் ஆர். எம். குணதிலக, நந்த விக்கிரமசிங்க, பாணி விஜேசிரிவர்தன மற்றும் ஐராங்கனி வீரசிங்கவும் உரையாற்றினர்.

1993ல் சோ.ச.க. வில் சேர்ந்தது முதல், சுந்தரலிங்கம் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் அனைத்துலக சோசலிச அடிப்படைகளுக்காகவும் துணிவுடன் போராடி வந்துள்ளார். 1997ல் அவர் நிர்வாகத்தால் தொந்தரவுக்குள்ளானதோடு அவரது அரசியல் நடவடிக்கைகளை தடுக்கும் முயற்சியாக மொத்தத்தில் வேலை நீக்கம் செய்யப்பட்டார். அதே வருடம் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஒரு பக்க பாரிசவாதத்தால் பீடிக்கப்பட்டார். மாதக் கணக்கான மருத்துவ சிகிச்சையின் மூலம் அவரால் பேச முடிந்தாலும், நடப்பதற்கு தொடர்ந்தும் ஊன்றுகோல் தேவைப்பட்டது.

சுந்தரலிங்கம் தனது இறுதிக் காலம் வரை உயர் இரத்த அழுத்தத்துக்காகவும் குருதித் தாக்கத்தின் பின்விளைவுகளுக்காகவும் சிகிச்சை பெற்றுவந்தார். தோட்டப்புறத்தில் நிலவும் ஏழ்மையான வாழ்க்கை நிலைமை மற்றும் அவர் மீதான பழிவாங்கல் ஆகியவை சந்தேகத்திற்கிடமின்றி அவரது அகால மரணத்துக்கு ஏதுவான காரணிகளாகும். அவர் முகம் கொடுத்த நெருக்கடிகள், இலங்கையின் தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்கள் பூராவும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் இரக்கமற்ற சுரண்டலின் விளைவுகளேயாகும்.

சுந்தரலிங்கம் இந்தியாவை மூலமாகக் கொண்ட, ஆறுபேர் அடங்கிய குடும்பத்திலிருந்து வந்தவர். பத்தொன்பதாம் நூற்றான்டின் கடைப் பகுதியில், முன்நாள் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்கள், முதலில் கோப்பியும் பின்னர் தேயிலையும் உற்பத்தி செய்வதற்காக இலங்கையின் பெருந்தோட்டங்களுக்கு இந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கான ஏழை தமிழர்களை கொண்டுவந்தனர்.

ஆரம்பத்திலிருந்தே தோட்டத் தொழிலாளர்கள் மோசமான நிலைமைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். அவர்கள் ஏனைய தொழிலாளர்களில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு தோட்டங்களுக்கு உள்ளேயே சிறைப்படுத்தப்பட்டிருந்ததோடு மிகக் குறைந்த சம்பளத்தையே பெற்றனர். ஆரம்பத்தில் இழிநிலையிலான முகாம்களில் இருத்தப்பட்டு, பின்னர் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு நீண்ட கூடாரத்தில் பிரிக்கப்பட்ட ஒரு சிறிய "லயின் அறை" (line room) கொடுக்கப்பட்டது. இன்றும் கூட, பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்கள் காலனித்துவக் காலத்தில் கட்டப்பட்ட இவ்வாறான வீடுகளில் வாழ்கின்றனர்.

1948ல் சுதந்திரத்தின் சில மாதங்களின் பின்னரும், சுந்தரலிங்கம் பிறப்பதற்கு எட்டு வருடங்களுக்கு முன்னரும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் பிரஜாவுரிமைச் சட்டத்தை இயற்றியது. இதன் மூலம் தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் வாக்களிக்கும் உரிமை உட்பட பிரஜா உரிமையும் பறிக்கப்பட்டது. பரம்பரை பரம்பரைகயாக பல குடும்பங்கள் நாட்டில் வாழ்ந்து வருகின்ற போதிலும் அவர்கள் நாடற்ற இரண்டாவது குடிகளாக தாழ்த்தப்பட்டுள்ளனர்.

இந்த ஜனநாயக விரோத தாக்குதலானது சிங்களம் மற்றும் தமிழ் பேசும் தொழிலாளர் வர்க்கத்துக்கிடையில் ஒரு இனவாத ஆப்பை திணிப்பதன் மூலம் இலங்கைத் தொழிலாளர் வர்க்கத்தை பலவீனப்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தது. பிரித்தானியக் காலனி ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பாத்திரம் வகித்த ட்ரொட்ஸ்கிச லங்கா சமசமாஜக் கட்சி (ல.ச.ச.க) பிரஜாவுரிமைச் சட்டத்துக்கு எதிராக பலம்வாய்ந்த முறையில் பிரச்சாரம் செய்ததோடு, இனம், மொழி அல்லது மதத்துக்கு அப்பால் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் அதன் முன்நோக்குக்காக தோட்டத் தொழிலாளர்கள் உட்பட்ட தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் சக்திவாய்ந்த பிரதிபலிப்பை வெற்றிகொண்டது. தமிழ் ஆளும் கும்பல்கள் பிரஜா உரிமைச் சட்டத்தை ஆதரித்தமை குறிப்பிடத்தக்கது.

ஆனால், யுத்தத்துக்குப் பிந்திய உடன்படிக்கைகளின் வளர்ச்சி கண்டுவந்த தாக்கத்தினால், ல.ச.ச.க தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை அடிப்படையாகக் கொண்ட புரட்சிகர மார்க்சிச முன்நோக்கை கைவிடத் தொடங்கிய அதேவேளை, இலங்கை முதலாளித்துவம் மற்றும் அதனது குட்டி முதலாளித்துவ முகவர்களும் தழுவிக்கொண்ட சிங்களப் பேரினவாத அரசியலுக்கு தன்னை அடிபணியச் செய்தது. 1964ல் ல.ச.ச.க ட்ரொட்ஸ்கிசத்தை பகிரங்கமாக கைவிட்டு சிறிமாவோ பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ அரசாங்கத்தினுள் நுழைந்தபோது, கட்சியின் அரசியல் சீர்குலைவு உச்சக் கட்டத்தை எட்டியது.

இந்தப் பெரும் காட்டிக் கொடுப்பானது, தெளிவாக ஒப்புவிக்கப்பட்டுள்ள அளவில், இலங்கையிலும் அனைத்துலகிலும் தொழிலாளர் வர்க்கத்துக்கு ஆழமான விளைவுகளை ஏற்படுத்தவிருந்தது. அது வடக்கின் தமிழ் மக்கள் மத்தியில் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் தெற்கில் உள்ள சிங்கள இளைஞர்கள் மத்தியில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) போன்ற இனவாத அரசியலை அடிப்படையாகக் கொண்ட மத்தியதரவர்க்க தீவிரவாத இயக்கங்கள் தோன்றுவதற்கு நேரடியாக வழிவகுத்தது. கொழும்பில் சிங்கள பேரினவாத அரசியலின் ஆதிக்கமும் தமிழர்களுக்கு எதிராக ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அரசாங்கத்தின் வழிவகைகளும் 1983ல் உள்நாட்டு யுத்தத்தை வெடிக்கச் செய்தன.

சுந்தரலிங்கத்தின் வாழ்க்கையானது இந்தக் கொந்தளிப்பான அனுபவங்களுடன் உள்ளார்ந்து இணைந்துகொண்டுள்ளது. ல.ச.ச.க வின் காட்டிக்கொடுப்பின் போது அவருக்கு எட்டு வயது. பண்டாரநாயக்கவும் இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியும் கைச்சாத்திட்ட சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் உடனடி விளைவாக இருந்தது. அதன் பிரிவுகளின் கீழ் ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் பலாத்காரமாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட அதேவேளை எஞ்சிய சிலருக்கு பிரஜாவுரிமை வழங்கப்பட்டது. ல.ச.ச.க உடன்படிக்கையை ஆதரித்தது மட்டுமல்லாமல், அதனது நடவடிக்கைகள், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா), ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் (ஜ.தொ.கா) போன்ற பழமைவாதத் தொழிற்சங்கங்களைக் கொண்ட அரசியல் கட்சிகள் தொழிலாளர்கள் மீது கொண்டுள்ள பிடியை இறுகச் செய்தது.

1964ல் சுந்தரலிங்கத்தின் தந்தை வேறொரு தோட்டத்தில் இருந்து அயிஸ்லெபி தோட்டத்துக்கு மாற்றப்பட்டார். அவர் ஜ.தொ.கா. வின் உள்ளூர் தலைவராக இருந்ததால் தனது மகனை ஆறாம் வகுப்பு வரை பாடசாலைக்கு அனுப்ப முடிந்தது. தோட்டப் பகுதியில் இருந்த பெரும்பாலான பிள்ளைகள் இந்த மட்டத்துக்கு முன்னரே பாடசாலையை கைவிட்டுவிட்டார்கள் அல்லது கல்வியின்றியே இருந்தார்கள்.

தனது தந்தை இறக்கும் போது மிகவும் இளமையாக இருந்த சுந்தரலிங்கம், தனது கல்வியை இடைநிறுத்திவிட்டு குடும்பத்திற்கு உதவுவதற்காக தொழில் ஒன்றைத் தேடத் தள்ளப்பட்டார். அவரால் கொழும்பிலும் வட இலங்கையின் யாழ்ப்பாணத்திலும் நிச்சயமற்ற தொழில்களையே தேடிக்கொள்ள முடிந்தது. அயிஸ்லெபி தோட்டத்துக்கு திரும்பிய அவர், 1974ல் ஒரு தற்காலிகத் தொழிலாளியானார். அச்சமயம், சிங்களவர்களுக்கு பரிபாலன தொழில்களை வழங்கிய அதேவேளை, தமிழ் தொழிலாளர்களின் தொழில் மற்றும் வாழ்க்கை நிலைமைகளை கீழ்நிலைக்குத் தள்ளுவதன் மூலம், இனவாத பதட்ட நிலைமையை பலப்படுத்தும் ஒரு முயற்சியாக புதிய பண்டாரநாயக்கவின் கூட்டரசாங்கம் ல.ச.ச.க வின் ஆதரவுடன் தோட்டங்களை தேசியமயப்படுத்தியது.

சுந்தரலிங்கம் தோட்டத் தொழிலாளர்கள் மீதான பாரபட்சங்களுக்கு எதிராக பேசியதோடு பல சந்தர்ப்பங்களில் பழிவாங்கப்பட்டார். தண்டனையாக இறுதிவரை அவருக்கு வேலை கொடுக்கப்படாத பட்சத்தில், அவரும் அவரது குடும்பமும் சம்பளமின்றி முடிந்தளவு உயிர்வாழ்ந்தார்கள். அவர் ஜ.தொ.கா வின் உறுப்பினராக இருந்த போதிலும், அரசாங்கத்துடனான அதனது அரசியல் உடன்பாடு மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறியமையாலும் அவர் அதிருப்தி கொண்டிருந்தார்.

சுந்தரலிங்கம் தோட்டப்புறத்தில் காணப்பட்ட பரந்த அமைதியின்மைக்கு மத்தியில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தில் (பு.க.க) (சோ.ச.க. வின் முன்னோடி அமைப்பு) சேர்ந்தார். 1992ல் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தோட்டங்களைத் தனியார்மயப்படுத்தத் தொடங்கியமையானது தொழில் சுமையில் கடுமையான அதிகரிப்பை ஏற்படுத்தியதோடு தொழிலாளர்கள் மத்தியில் ஆத்திரமும் வளர்ச்சி கண்டது.

அப்போது, இ.தொ.கா தலைவர் ஹரி சந்திரசேகர, பு.க.க. வின் பத்திரிகையான தொழிலாளர் பாதைக்கு கருத்துத் தெரிவிக்கும் போது: "தோட்டங்களில் தொழிலாளர்களின் கிளர்ச்சி எழக்கூடும். எங்களால் கட்டுப்படுத்த முடியாத ஒரு நிலைமை உருவாகி வருகின்றது," என பதட்டத்துடன் குறிப்பிட்டார். வளர்ச்சி கண்டுவரும் எதிர்ப்பை மட்டுப்படுத்தத் தயங்கிய தொழிற்சங்கத் தலைவர்கள், ஒரு சிறிய சம்பள உயர்வை கொடுக்குமாறு தோட்ட முகாமையாளர்களை வலியுறுத்தியதோடு மேலதிக பிரச்சாரங்களுக்கு முடிவுகட்டினர்.

இ.தொ.கா மற்றும் ஏனைய தொழிற்சங்கங்களின் நடவடிக்கைளால் வெறுப்படைந்த தொழிலாளர்களின் ஒரு பகுதியினர் வேறு ஒன்றைத் தேட ஆரம்பித்தனர். சுந்தரலிங்கம் பு.க.க வின் பக்கம் திரும்பினார். "தொழிற்சங்கங்களையிட்டு நான் வெறுப்படைந்துள்ளேன். இ.தொ.கா. வை விட ஜ.தொ.கா. போர்க் குணம் கொண்டதாக கருதியதால் நான் அதில் இணைந்தேன். பின்னர் அதுவும் மாறிவிட்டது. ஆகவேதான் நான் இந்தப் பத்திரிகையை வாசிக்க ஆரம்பித்தேன்," என அவர் பு.க.க உறுப்பினர்களிடம் தெரிவித்தார். பு.க.க. வின் தமிழ் பத்திரிகையான தொழிலாளர் பாதை சுந்தரலிங்கத்துக்கு புதிய உலகைத் திறந்துவிட்டது.

ல.ச.ச.க வின் காட்டிக்கொடுப்பானது தோட்டத் தொழிலாளர்களுககு மட்டுமன்றி முழுத் தொழிலாளர் வர்க்கத்துக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை கட்சி அங்கத்தவர்களுடனான கலந்துரையாடல்களின் மூலம் சுந்தரலிங்கம் புரிந்துகொள்ளத் தொடங்கினார். அனைத்துத் தொழிலாளர்களின் -தமிழ் மற்றும் சிங்களம்- ஐக்கியத்தை அடிப்படையாகக் கொண்ட பு.க.க வின் வேலைத் திட்டத்தாலும், எல்லாவகையான தேசியவாதம் மற்றும் பேரினவாதத்துக்கும் எதிரான அதன் எதிர்ப்பாலும் அவர் ஈர்க்கப்பட்டிருந்தார். அவர் விசேடமாக உலக விடயங்கள் சம்பந்தமான அனைத்துலகக் குழுவின் ஆய்வுகளில் ஈர்ப்புக்கொண்டிருந்தார்.

பு.க.க வில் இணைந்ததை அடுத்து, அவர் தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் அதே போல் அயல் கிராமங்களில் உள்ள ஒடுக்கப்பட்ட சிங்கள விவசாயிகள் மத்தியிலும் அதன் முன்நோக்குக்காக உற்சாகமாகவும் சோர்வின்றியும் பிரச்சாரம் செய்தார். சிங்கள கிராமத்தவர்கள் முகம்கொடுக்கும் காணிப் பற்றாக்குறை மற்றும் வேலையில்லாப் பிரச்சினைக்கும் தமிழ் தொழிலாளர்களைக் குற்றஞ் சாட்டும் சிங்கள தீவிரவாத அமைப்புக்களால் தூண்டிவிடப்பட்ட தமிழர் விரோத பேரினவாதத்தை எதிர்க்க வேண்டியதன் அவசியத்தை விளக்குவதற்காக இடைவிடாமல் பிரச்சாரம் செய்தார்.

சுந்தரலிங்கத்தின் மரணச் சடங்குக்கு பல சிங்கள கிராமத்தவர்கள் வருகைதந்திருந்ததோடு அவர் அடக்கம் செய்யப்படவிருந்த இடத்தை தயார் செய்வதற்காக தமிழ் தோட்டத் தொழிலாளர்களுடன் அவர்கள் இணைந்துகொண்டமையும் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சிங்கள கிராமத்தவர்கள் ஒடுக்கப்பட்ட தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் மரணச் சடங்கில் பங்குகொள்வது அருமையானதாவதோடு, சுந்தரலிங்கத்தின் அடிப்படை நிலைப்பாட்டுக்கு ஒரு சக்திவாய்ந்த புகழையும் வழங்குகிறது. ஒரு கிராமத்தவர் நினைவூட்டியது போல்: "புரட்சியைப் பற்றி பேசுபவராகவே அவரை எமக்குத் தெரியும். அவர் வழமையாக கட்சியின் வெளியீடுகளை எங்களுக்குத் தந்து உலக நிலைமைகள் பற்றி எம்முடன் பேசுவார்."

சுந்தரலிங்கம் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்களிலும் இ.தொ.கா மற்றும் ஏனைய தொழிற்சங்கங்களின் கொடுமை விளைவிக்கக் கூடிய தலையீடுகளை எதிர்ப்பதிலும் முன்னணி பாத்திரம் வகித்துள்ளார். நாட்டின் கொடூரமான பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் "தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்களாக" விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த இளம் தோட்டத் தொழிலாளர்களை விடுதலை செய்வதற்கான கட்சியின் பிரச்சாரங்களிலும் முன்னணி வகித்தார்.

தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் சோ.ச.க வின் புகழ் அதிகரித்ததன் பிரதிபலிப்பாக, சில நிமிடங்கள் வேலையை நிறுத்தி விட்டு நீர் அருந்த சென்றமைக்காக, சுந்தரலிங்கம் 1997ல் வேலை நீக்கம் செய்யப்பட்டார். அவர் தொழில் நீதிமன்றத்தில் தனது வேலை நீக்கத்தை சவால் செய்தார். ஆனால் வழக்கு போலியான முறையில் தொடர்ந்தும் ஒத்திவைக்கப்பட்டது. ஆறு வருடங்களின் பின்னர் அவர் இறந்த போதும் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கவில்லை.

தனது நெருக்கடியான பொருளாதார சூழ்நிலை மற்றும் பலவீனமான உடல் நிலைமைக்கு மத்தியிலும் சுந்தரலிங்கம் கட்சி மீது வலுவான பற்றுறுதி கொண்டிருந்தார். "அவர் மிக நல்ல மனிதனாக இருந்தார். அவருக்கு அரசியலில் ஈடுபாடுகொள்வதும் அரசியலைப் பற்றி பேசுவதும் அவசியமாக இருந்தது. இந்த சிறிய அலுமாரியில் உள்ள பொருட்களை விட வேறு எந்த சொத்துக்களும் அவருக்கு கிடையாது," என அவரது மனைவி கமலா விளக்கினார். அந்த அலுமாரி அவருக்குச் சொந்தமான புத்தகங்களை தாங்கியிருந்தோடு லெனின், ட்ரொட்ஸ்கி மற்றும் 1987ல் காலமான பு.க.க வின் ஸ்தாபகச் செயலாளர் கீர்த்தி பாலசூரியவின் படங்களும் ஒட்டப்பட்டிருந்தன.

சுந்தரலிங்கத்தின் நினைவுகளுக்கு அவரது மரணச் சடங்கில் மரியாதை செலுத்தப்பட்டது. ஒரு தொழிலாளர் குழுவினர் பேசும் போது, "அவர் எப்போதும் கட்சியைப் பற்றியே பேசுவார். அவர் கட்சியின் அரசியலை எமக்கு விளங்கப்படுத்துவதற்காக மிகவும் கடினமாக உழைத்தார். அவரது கட்சி ஏனைய கட்சிகளைவிட வித்தியாசமானது. அவர் கட்சியின் தொழிலாளர் வர்க்க வேலைத் திட்டம், தொழிலாளர் உரிமைகள் மற்றும் உலக அரிசியல் நிலைமைகளைப் பற்றி எம்மிடம் கூறியுள்ளார். நாங்கள் எங்களை மட்டுப்படுத்திக் கொள்ளாமல் உலக அபிவிருத்திகளைப் பற்றி கற்க வேண்டும் என எப்போதும் அவர் வலியுறுத்துவார்," எனக் குறிப்பிட்டனர்.

ஏனையவர்கள் குறிப்பிட்டதாவது: "நாங்கள் அவருடைய மரணத்தையிட்டு மிகவும் கவலைக்குள்ளாகி உள்ளோம். இப்பொழுது உலக அபிவிருத்திகளைப் பற்றி எமக்கு விளக்க இங்கு யாரும் கிடையாது. உலக நிலைமைகளைப் பற்றி எம் கண்களால் காண முடியவிட்டாலும் நாம் அதைப்பற்றி அவரிடம் கற்றோம். அவரது மரணம் எமக்கு பேரிழப்பாகும்.

"அவரை நாம் ஒரு பயிற்றப்பட்ட மனிதனாக ஏற்றுக்கொண்டிருந்தோம். 'நீங்கள் எமது அரசியலை இப்போது ஏற்றுக்கொள்ளாவிட்டால் பரவாயில்லை. அடுத்து வரும் காலங்களில் நீங்கள் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிவரும்,' என அவர் தனது அரசியலுடன் உடன்படாதவர்களுக்கு வழமையாக குறிப்பிடுவார். அவர் தனது அரசியலில் நம்பிக்கை கொண்டிருந்தார். 'சோசலிச அனைத்துலகவாத முன்நோக்குக்கான தற்போதைய எமது போராட்டம் எமது பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு வழிவகுக்கும்,' என அவர் வழமையாகவே குறிப்பிட்டு வந்தார்.

சோ.ச.க சுந்தரலிங்கத்தின் அகால மரணத்தையிட்டு வருந்துவதோடு இந்த சளையாத சோசலிசப் போராளியை கெளரவிக்கின்றது.

Top of page