World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

The killing of Hussein's sons: the Nuremberg precedent and the criminalization of the US ruling elite

ஹுசேனுடைய மகன்கள் கொலை: நூரம்பேர்க் முன்னோடியும், அமெரிக்க ஆளும் பிரிவினரின் குற்றஞ்சார்ந்த செயற்பாடுகளும்

By David Walsh
24 July 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஜூலை 22ம் தேதி மோசுல் நகரத்திற்குப் புறத்தே ஒரு வீட்டில் அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்ட முன்னாள் ஈராக்கிய ஜனாதிபதி சதாம் ஹுசேனின் இரு மகன்களான உதய் ஹுசேனும், கியூசே ஹுசேன், அறநெறியிலும், அரசியல்ரீதியாகவும் குற்றம்மிக்கவர்கள் என்பதில் சிறிதளவு ஐயம் கூடக்கிடையாது. மூத்த மகனான உதய் ஹுசேன் பாலியல் வேட்டைக்காரரும், கொலைகாரராகவும் இருந்தவர். கியூசே, ஈராக்கிய பாதுகாப்பு அமைப்பின் தலைவர் என்ற முறையில் இரத்தம் தோய்ந்த கரங்களைக் கொண்டிருந்தவர். ஆட்சியின் பிற்போக்குத் தன்மையைக் கருத்தில் கொள்ளும்போது, அவர்களுடைய குற்றங்களின் ஆழ்ந்து பரவிய தன்மையைப் பற்றி நன்றாகவே தெரிந்து கொள்ளலாம்.

அப்படிக் கூறினாலும் கூட, அவர்களை அழிக்கக் கையாண்ட வழிவகைகளும், அமெரிக்கச் செய்தி ஊடகமும், அமெரிக்க அரசாங்கமும் இக்கொலைகளைச் செய்த முறையை வரவேற்ற விதமும், அமெரிக்க அரசியல் பிரிவினரைப்பற்றியும், ஈராக்கில் அமெரிக்கத் தலையீட்டைப் பற்றியும் நிறையவே தெரிவிக்கின்றன.

ஒழுக்க நெறியில் கூட ஹுசேன் நிர்வாக உறுப்பினர்களுக்கும், புஷ் நிர்வாக உறுப்பினர்களுக்கும் இடையே அடிப்படை வேறுபாடுகள் அதிகம் கிடையாது. புஷ் நிர்வாகத்தினர் ஒவ்வொரு துறையிலும் வெட்கங்கெட்ட சட்டத்திற்கு ஒவ்வாத முறையிலும், வன்முறையுடனும் செயல்பட்டு வருகின்றனர். தன்னுடைய மக்களை நடத்தும் முறையில் கொடுமை காட்டுவதில் சற்று வித்தியாசம் இருக்கிறது என்றாலும் புஷ்ஷின் சக்திகள் காட்டும் ''நிதானம்'' சூழ்நிலையை அனுசரித்ததேயொழிய வெளியேற்றப்பட்ட ஈராக்கிய ஆட்சியின் கொலையாளிகள், சித்திரவதையாளிகளை விட உயர்ந்த அறநெறியால் அல்ல.

ஹுசேன் சகோதரர்களுக்கு எதிரான நடவடிக்கையின்போது அமெரிக்க இராணுவம் நூற்றுக்கணக்கான படை வீரர்களையும், பல டசின் வாகனங்களையும், விமானம் ஒன்றையும் பயன்படுத்தினர். தானியங்கி ஆயுதங்கள், ஏவுகணைகள், அவற்றின் மூலம் செலுத்தப்படும் எறிகுண்டுகள் ஆகியவை, AK-47 தானியங்கி துப்பாக்கிகள் வைத்திருந்த நான்கு நபர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டிருந்தன.

இந்தத் தாக்குதல் ஓர் ஆயுதந் தாங்கிய கொலையாளிகள் கூட்டம், மற்றொரு அதேபோன்ற, ஆனால் நிறைய ஆயுதங்களைக் கொண்ட கூட்டத்தால், மடக்கப்பட்ட தலைமையை பழிவாங்கும் முறையில் அழிக்கும் தன்மையைத்தான் கொண்டிருந்தது. ஓர் பெயர் கூறவிரும்பாத அமெரிக்கப் படைப் பிரிவின் அதிகாரி ஈராக்கில் ஒரு மாபியாக் கூட்டத் தலைவர் போல் UPI இடம் ''இது ஒரு நன்மை விளைவிக்கக்கூடிய தாக்குதல். அழிவைத் தவிர வேறு எதையும் அவர்கள் உணர்ந்திட முடியாது. இந்தக் கூட்டத்தை நம்மால் மடக்க முடியும் என்றால், எந்தக் கூட்டத்தையும் தகர்த்துவிட முடியும்.'' எனக் கூறினார்.

கியூசே ஹுசேனின் 14 வயது மகன் முஸ்தபா உட்பட மோசூலில் நிகழ்ந்த கொலைகள் பற்றி அமெரிக்க-பிரிட்டிஷ் அதிகாரிகளின் பெருங்களிப்பும், செய்தி ஊடகங்களின் ஆரவார மகிழ்ச்சியும் உள்ளத்தில் வெறுப்பைத்தான் ஊட்டும். இரத்தம் சிந்துதல், வன்முறை இவற்றில் மகிழ்ச்சி காணும் இந்த வட்டங்களின் போக்கு ஒரு நோயுற்றதன்மையை (Pathological) புலப்படுத்துகிறது.

ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ் தற்பெருமையுடன் ''முன் எப்பொழுதையும்விட, ஈராக்கியர்கள் பழைய ஆட்சி இனி வராது என்பதைத் தற்சமயம் அறிந்துகொள்வர்.'' என்றார். ''தாராளவாத'' ஜனநாயகக் கட்சியின் தலைவரான செனட்டர் டெட் கென்னடி, கொலைகள் பற்றித் தன்னுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டார். ''இது ஒரு முன்னேற்றம்'' என்று அவர் கூறினார்.

பிரிட்டிஷ் பிரதம மந்திரி எவ்வித தயக்கமுமில்லாது ''புதிய ஈராக்கிற்கு இது பெரும் நாளாகும்'' என்றார்.

அமெரிக்கச் செய்தி ஊடகம் உற்சாகத்துடனும் இரத்தவெறியுடனும் செய்தி வெளியிட்டது. New York Daily News சதாம் ஹுசேன், அவருடைய இரண்டு மகன்கள் ஆகியோருடைய புகைப்படங்களை வெளியிட்டு, உதை, கியூசே ஆகியோரின் படங்களின் மீது சிகப்புச் சிலுவைக் குறியிட்டு, ''இன்னும் ஒன்று பாக்கியுள்ளது'' என்று முழங்கியது. ரூபர்ட் மேர்டோக்கின் New York Post அதன் தலையங்கத்திற்கு "E-RAT-ICATED!" (அழிக்கப்பட்டுவிட்டது) என்ற தலைப்பைக் கொடுத்தது.

''பல வாரங்களில், மிகுந்த ஊக்கமளிக்கக்கூடிய செய்தியாக ஈராக்கிலிருந்து வந்துள்ளது'' என்று ஹுசேன் சகோதரர்கள் கொலை செய்யப்பட்ட மோசூல் தாக்குதலை New York Times கொண்டாடியுள்ளது. ''மிக நல்ல செய்தி' என்று இந்த இறப்புக்களைப் பற்றிக் குறிப்பிட்ட Washington Post ஆசிரியர்கள் ''போருக்குப் பின்னான நிர்வாகத்தை வதைத்துவந்த உறுதியான எதிர்ப்பிற்கு இது ஒரு நல்ல தாக்குதல்'' ஆகும் என்றும் கூறியுள்ளனர்.

ஈராக்கின் மீதான அமெரிக்காவின் காலனித்துவ ஆக்கிரமிப்பிற்கான எதிர்ப்பை மோசூல் கொலைகள் தடுத்துவிடும் என்ற எண்ணம், அரசியல் ரீதியில் குருட்டுத்தன்மையான நோக்கை கொண்டவர்களின் விருப்பமான யோசனைகளாகும். முன்னைய ஆட்சியின் பதுங்கியுள்ள ஆதரவாளர்களான ''பயங்கரவாதிகளும்'', ''குற்றவாளிகளும்தான்'' அமெரிக்கப்படைகள் அங்கு இருப்பதற்கு எதிர்ப்புக் காட்டுகின்றனர் என்ற தங்கள் பிரச்சாரத்தையே அமெரிக்க நிர்வாகமும் செய்தி ஊடகங்களும் பெரிதும் நம்பியிருக்கின்றன.

பாதிஸ்டுகளுடைய அரசாங்கத்தையும், வெளிநாட்டு ஏகாதிபத்திய கொடுங்கோலாட்சி இரண்டையும் மக்கள் நிராகரிப்பதை உணராத அளவிற்கு ஈராக் மக்களிடமிருந்து அந்நியப்பட்டுள்ள புஷ் நிர்வாகமும் செய்தி ஊடகங்களும், சமுதாய, அரசியல் யதார்த்தங்களை அறியாது குருட்டுத்தன்மையில் ஆழ்ந்துள்ளனர். ஜூலை 23 அன்றும் அமெரிக்கப் படைகள் மீதான தாக்குதல் குறையாது தொடர்ந்து, தாக்குதல்களினால் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டதுடன், ஒன்பது பேர் காயமுற்றனர்.

ஏன் அவர்கள் உயிருடன் பிடிக்கப்படவில்லை?

உதய், கியூசே ஹுசேன் சகோதாரர்களை உயிரோடு பிடிக்கும் முயற்சி ஏன் மேற்கொள்ளப்படவில்லை? இதைப் பற்றிக் இந்நடவடிக்கைக்குத் தலைமை தாங்கிய லெப்டினன்ட் ஜெனரல் ரிகார்டோ சான்சேஸ் இடம் கேட்டபொழுது அவர் அமைதியாக ''எங்கள் பணி கண்டுபிடிப்பது, கொல்வது அல்லது சிறைப்படுத்துவது.'' என்றார்.

இதற்கு பல காரணங்கள் உள்ளன. பல வார காலம் அமெரிக்க படையினரின் இறப்பு, தொய்ந்துகொண்டிருக்கும் மனத்திடம் ஆகியவற்றால், ஒரு கொலைகாரத் தாக்குதல் அமெரிக்கப் போர் வெறி கொண்டோருக்கு நிறைவளித்து, இராணுவத்தின் வக்கிர உணர்விற்கும் வடிகாலாக அமையும் என்ற முடிவிற்குச் சந்தேகத்திற்கிடமில்லாமல் வந்திருக்கவேண்டும். எவ்வாறாயினும் இப்போக்கில் அவர்களும் பங்குகொண்டு, இரத்தம் சிந்துதல் தேவை என்ற நிலைப்பாட்டை பகிர்ந்து கொண்டிருந்தனர். ஈராக்கியரின் எதிர்ப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உள்ளடக்கி வைத்திருந்த பெருஞ்சீற்றமும், பழிவாங்கும் உணர்வும், ஹுசேனுடைய மகன்களைக் கொல்வதின் மூலம் வெளிப்படுத்தப்பட்டன.

இன்னமும் அடிப்படையாக உதய்யும், கியூசே ஹுசேனும் உயிரோடு கைப்பற்றப்பட்டிருந்தால், அரசியல் அளவில் தொந்தரவளிக்கக்கூடிய பிரச்சினைகள் தோன்றியிருந்திருக்கும். இரண்டு முன்னைய அதிகாரிகளை நீதி விசாரணைக்கு உட்படுத்தியிருந்தால், போரினதும், ஆக்கிரமிப்பின் முழுமையான சட்டத்திற்குப் புறம்பான தன்மையும் தவிர்க்க முடியாத அளவில் வெளிப்பட்டிருக்கும். தங்கள் மீது குற்றஞ்சாட்டுபவர்கள் மீதே திருப்பி தாக்குதல் நடத்த விசாரணையைப் பயன்படுத்துவது ஹுசேன் சகோதாரர்களுக்குப் பெரிய சவாலாக இருந்திருக்காது. ஈராக்கின் மீதான பிரித்தானிய - அமெரிக்க நடவடிக்கையின் பாசாங்குத் தன்மையையும், குற்றஞ்சார்ந்த தன்மையையும் அது அம்பலமாக்கியிருக்கும்.

தற்பொழுது ஹேக்கில் (The Hague) நடைபெற்றுவரும் சுலோபோடான் மிலோசவிக் மீதான போர்க் குற்றங்கள் வழக்கின் தன்மை எப்படி அமெரிக்க, நேட்டோவின் நிலைக்குப் பெரும் முகத்தில் கரி பூசிய தன்மையைக் கொடுத்துவிட்ட உதாரணம்தான் நமக்கு இப்பொழுது உள்ளது. முன்னைய யூகோஸ்லாவிய ஜனாதிபதி குற்றஞ்சாட்டப்பட்ட முதல் கட்டத்திலேயே இந்த வழக்கில் வல்லரசுகளின் ஏமாற்றுத்தனங்களை அம்பலப்படுத்த நீதிமன்றத்தைப் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளார். தன்னுடைய பாதுகாப்பு வாதம் தயாரிக்க கொடுக்கப்பட்டுள்ள இரண்டு ஆண்டு காலவரம்பை மிலோசவிக் நன்கு பயன்படுத்தி தன்னை பாதுகாக்க வழக்கை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈராக்கின் தற்போதைய நிலைமைக்கும் அப்பால், அமெரிக்காவின் தற்பொழுதைய சில முக்கியத் தலைவர்களுக்கும், பழைய சதாம் ஹுசேனுடைய ஆட்சிக்கும் இடையே நீண்ட காலமாக இருந்த தொடர்புகள் அளிக்கக்கூடிய இதே அளவு சங்கடத்தன்மையும் கருத்தில் கொள்ளப்படவேண்டும்.

2003 பெப்ரவரியில் தேசியப் பாதுகாப்பு ஆவணக் காப்பகம் (National Security Archive) 1980களில் ஈராக்கிய அரசாங்கத்திற்கும், றீகன் நிர்வாகத்திற்கும் இடையே இருந்த தொடர்புகளைப் பற்றிய 60 ஆவணங்களை வெளியிட்டது. அப்பொழுது ஈரான் - ஈராக்கியப் போரில், தான் நடுநிலைமை வகித்தாகக் கூறிக்கொண்ட அமெரிக்கா, தெஹ்ரானின் இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராக ஹுசேனை ஆதரித்திருந்தது. நிதியுதவி, உளவுத்தகவல், இராணுவ ஆதரவு ஆகியவற்றை ''ஜனாதிபதி ரோனால்ட் றீகனின் கொள்கை உத்தரவுகளின்படி'' வாஷிங்டன் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈராக்கிற்கு அளித்ததை இந்த ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. இது 1984 நவம்பர் மாதம் அமெரிக்கா, ஈராக்குடன் முறையான உறவுகளை புதுப்பித்துக்கொள்வதற்கு சில ஆண்டுகள் முன்பே நடந்ததாகும்.

அமெரிக்க - ஈராக்கிய உறவுகளைச் சீராக்கும் அளவில் உயர்ந்தகட்டமாக இருந்த செயல், ஜனாதிபதியின் சிறப்பு தூதர் (இப்பொழுது பாதுகாப்பு மந்திரி) டொனால்ட் ரம்ஸ்பெல்ட் பாக்தாதிற்கு 1983 டிசம்பரில் வருகைபுரிந்து, சதாம் ஹுசைனுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியது ஆகும். ஈரானியர்களுக்கு எதிராகவும் குர்திஷ் எழுச்சியாளருக்கு எதிராகவும் ஈராக்கியர்கள் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தினர் என்பது அமெரிக்காவிற்கு நன்றாகவே தெரியும். அந்த விவாதத்தில் இதைப் பற்றி ரம்ஸ்பெல்ட் குறிப்பிடவில்லை. வெளிநாட்டு அமைச்சிற்கு அனுப்பப்பட்ட இரகசியக் குறிப்பு ஒன்று ''சதாம் ஹுசேன், ஜனாதிபதியின் கடிதத்தையும், ரம்ஸ்பெல்டின் வருகையையும் அவருடைய குறிப்புக்கள் பற்றியும் வெளிப்படையான மகிழ்ச்சி கொண்டார்'' என்று அறிவிக்கிறது.

2003 மார்ச் மாதம் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை அறிவித்துள்ளபடி அமெரிக்காவும், பிரான்சும் தான் ஈராக்கின் உயிரியல் ஆயுதங்கள் திட்டத்திற்கு மூலஆதாரமாக இருந்தவை.

ஓர் அயல்நாட்டுத் தலைவர் வாஷிங்டனால் விருந்தளிக்கப்படுவாரா அல்லது கொலை செய்யப்படுவாரா என்பது நிலைமையை பொறுத்துத்தான் இருக்கும் என்பதை ஈராக்கிய அதிகாரிகள் தங்கள் இழப்பின் மூலம் அறிந்துகொண்டனர்.

ஈராக்கிய ஆட்சி பேரழிவு ஆயுதங்களைக் தயார் செய்தலையோ, பயன்படுத்துவதையோ தடுத்து நிறுத்தவேண்டும் என்ற கூற்றின் அடிப்படையில்தான் அமெரிக்கா போருக்குச் செல்கிறது என்பதையும் ஹுசேன் சகோதரர்கள் கொலை செய்யப்பட்டது இல்லாதாக்கிவிட்டது. ஜூலை 23 நியூயோர்க் டைம்ஸ் பதிப்பின்படி, ஜூடித் மில்லர் (Judith Miller) ''கியூசே ஹுசேன் ஈராக்கின் முறைசாரா ஆயுதங்கள் மேற்பார்வைக்குப் பொறுப்பாக இருந்தவர்'' என கூறுகிறார். முந்தைய இரசாயன ஆயுதங்கள் வல்லுநராகவும், ஆய்வாளராகவும் இருந்த ஸ்டீபன் பிளாய்க் ''கியூசேயிற்கு பாதுகாப்புப் பணிகளின் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தவர் என்ற முறையில் இரசாயன ஆயுதங்கள் இருந்தனவா, எவ்வளவு இருந்தன, எங்கு அவை பயன்படுத்தப்பட்டன போன்றதை அறிந்திருப்பர்''... மேலும் சரியான பதுக்கிவைக்கப்பட்ட இடம் தெரியாவிட்டாலும், 'பதுக்கிவைத்தல் கொள்கை, நடைமுறை இவை பற்றித் தெரிந்து இருக்கும் - சதாம் அழித்தாரா அல்லது மறைத்து வைத்தாரா அல்லது எப்பொழுது தேவையோ அப்பொழுது தயாரிக்கும் திறனைக் கொண்டிருந்தாரா அல்லது மறைப்பின் இலக்குகள் யாவை போன்றவற்றை அறிந்து இருப்பார்.'' என குறிப்பிட்டார்.

கியூசேயைக் கொல்லவேண்டும் என்ற முடிவு, பேரழிவு ஆயுதங்களைப்பற்றி அமெரிக்க இராணுவம் சிறிதும் அக்கறை கொள்ளாதிருந்த தன்மையையும், சொல்லப்போனால் அத்தகைய மரணமளிக்கும், பயங்கரமான ஆயுதங்கள் இருந்ததே இல்லை என்பதைத்தான் வெளிப்படுத்துகின்றன.

நூரெம்பேர்க் விசாரணையில் அமெரிக்காவின் பங்கு

இப்பொழுதைய அரசியல் நிர்வாகத்தின் இரத்தவெறியும், சட்ட விரோதத்தன்மையும் ஈராக்கிய அரசியல் கொலைப் பிரச்சார நடவடிக்கையை, அமெரிக்கா எவ்வாறு இரண்டாம் உலகப்போருக்குப்பின் கைப்பற்றப்பட்ட பாசிசப் படுகொலைக்காரர்களை நடத்திய போக்கோடு ஒப்பிடுவதை மிகவும் இலகுவாக்கியுள்ளது.

அறுபது ஆண்டுகளுக்கும் சற்று குறைவான காலகட்டத்தில், சதாம் ஹுசேன் ஆட்சியில் நடந்ததைவிட மிகப்பெரிய அளவில் மனித குலத்திற்கு குற்றங்கள் இழைத்த நாஜி ஜேர்மனி, ஏகாதிபத்திய ஜப்பான் இவற்றின் தலைவர்களை விசாரணையின்றிக் கூட்டாக கொலை செய்துவிட வேண்டும் என்ற கருத்தை எதிர்த்ததுடன், அவர்கள் மீது பொது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சட்டப்படி வழக்கறிஞர் அமர்த்துதல் போன்ற சலுகைகளும் கொடுக்கப்படவேண்டும் என்றும் வாஷிங்டன் வலியுறுத்தியிருந்தது. இது தற்போது அமெரிக்க ஆளும்தட்டினர் ஜனநாயகக் கோட்பாடுகளின் தன்மையிலிருந்து எந்தளவிற்குத் தொலைவில் சென்றுவிட்டனர் என்பதன் வேறுபாட்டை எடுத்துக்காட்டுகின்றது.

தப்பியிருந்த நாஜித் தலைவர்கள், இனக் கொலைகள், போர் ஆகியவற்றின் மூலம் மில்லியன் கணக்கான மக்களின் கொலைக்கு காரணமாக இருந்தனர். ஆயினும்கூட அவர்களை உயிருடன் பிடித்து விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் என்பதில் அமெரிக்கர் நியாய உணர்வுடன் வலியுறுத்தியதோடு, அதேபோல் நடந்துகொண்டு 1945-46ல் நூரெம்பேர்க் போர்க்குற்ற விசாரணைகளையும், அதேபோன்ற விசாரணைகளை ஜப்பானிலும் நடத்தினர். குற்றச்சாட்டுக்குட்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுவிடாமல் இருப்பதற்குத் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் வழக்கறிஞர்கள் உதவி வழங்கவேண்டும் என்றும் சாட்சிகளின் நகல்கள் வழக்கறிஞர்களுக்கு கொடுக்கப்படுவதன் மூலமாக சாட்சியங்களை அவர்கள் குறுக்கு விசாரணை செய்யும் வசதிகளும் கொடுக்கப்பட்டது.

Chicago Tribune இன், 2001 நவம்பர் 18 பதிப்பில் வந்த கட்டுரையொன்றில் சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சார்ந்த Dennis Hutchinson என்பவர், போருக்குப்பின் அமெரிக்க சார்பில் வழக்கைத் தொடுக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்கத் தலைமை நீதிமன்ற ரொபேர்ட் எச்.ஜாக்சன், ஜனாதிபதி ஹரி எஸ்.ட்ருமனிடம் மாற்று வழிகளைப் பற்றிக் கூறியதை மேற்கோள் காட்டுகிறார். ''நாம் விசாரணையின்றி அந்த நாஜி அதிகாரிகளைத் தூக்கிலிடலாம், அல்லது வேறு தண்டனைகள் அளிக்கலாம். ஆனால் ஆராயப்படாத மரண தண்டனைகளோ, மற்ற தண்டனைகளோ, குற்றங்கள் தெளிவாக உறுதி செய்யப்படாமல் கொடுக்கப்பட்டாலோ, நியாயமான முறையில் வழங்கப்படாவிட்டாலோ... அமெரிக்காவின் மனச்சாட்சியால் ஏற்றுக்கொள்ளமுடியாததோடு, நம்முடைய குழந்தைகளும் அவற்றைப் பெருமிதத்துடன் ஞாபகத்தில் வைத்திருக்கமாட்டார்கள். மேலும், நாமுள்ள காலகட்டத்தில் அதனுடைய கொடுமைகளும் சூழ்நிலைகளும் இருந்தபோதிலும் குற்றஞ்சாட்டப்பட்டவர் தவறிழைத்தாரா, நிரபராதியா என்பது பாரபட்சமற்ற விசாரணைக்குப் பின்னரே அதற்கான தீர்ப்பு வழங்கப்படவேண்டும். அத்துடன் இதுதொடர்பாக எங்களது காரணங்களையும் நோக்கங்களையும் கொண்ட ஒரு ஆவணம் விட்டுச்செல்லப்படும்'' என்று ஜாக்சன் கூறியிருந்தார்.

ஒரு கூட்டு மரண தண்டனைகளை வழங்குவது, வெற்றிபெற்ற நாடுகள் கொண்டுள்ள உயர்ந்த ஒழுக்க நெறித் தன்மையிலிருந்து பிறழ்ந்ததாகப் போய்விடும் என்று கூறிய ஹச்சின்சன், வருங்காலத் தேவைக்காக இந்த வழக்கு பற்றிய நாஜிக் குற்றங்கள் பற்றிய தெளிவான மற்றும் துல்லியமான ஆவணத் தொகுப்பு வேண்டும் என்றார். அவர் ''இந்த இயக்கத்தை பற்றிய குறிப்புக்களைத் தெளிவாகவும் சிறப்பாகவும் எழுதிவைத்தாலன்றி, நாங்கள் போர்க்காலத்தில் பொதுப்படையான குற்றச்சாட்டுக்களின் அடித்தளத்தில் குற்றம்சாட்டப்பட்டதாக வருங்காலம் அதன் அமைதியான காலத்தில் நம்ப முடியாதாக தோன்றுபவற்றிற்கு எங்களை குற்றம்சாட்ட முடியாது. நம்ப முடியாத நிகழ்ச்சிகளை, நம்பத்தகுந்த ஆதாரங்களை கொண்டு நாம் உறுதிப்படுத்தவேண்டும்'' எனத்தெரிவித்ததார்.

தற்பொழுதைய ஈராக், ஆப்கானிஸ்தானில் உள்ள மற்றும் சர்வதேச நிலைமையையும் சற்றே ஒத்திருப்பது போலுள்ள பொருத்தத்தை வர்ணிப்பதுபோல், ஜாக்சன், ஜேர்மனிய அதிகாரிகளைச் சட்டப்பூர்வமாக தண்டித்தலை கூட்டுப்படைகள் வெற்றியடைந்து மட்டுமல்லாது கூட்டுப்படையின் அறிக்கைகளும், பிரகடனங்களும் கூட அவ்வதிகாரத்தைப் பெற்றிருக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். நாஜித் தலைவர்களுடைய குற்றம் ஒரு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜாக்சன் மேலும் ''அமெரிக்க ஜனாதிபதிக்கு எவரையும் தண்டிக்கும் அதிகாரம் கிடையாது. பெரும்பாலான வழக்குகளில் முறையான நீதிமன்ற அதிகாரம் இல்லாமல் எவரையும் கைது செய்ய முடியாது. அமெரிக்க விசாரணையில் அத்தகைய குற்றச்சாட்டிற்கு மதிப்பு கிடையாது. இந்த அறிவிப்புக்கள் குற்றச்சாட்டுக்களேயொழிய, குற்றத்திற்கான தண்டனை ஆகா. அது நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டுத்தான் வழங்க இயலும். நாங்கள் அரசியல் முடிவெடுப்பதற்கும் மற்றும் தீர்ப்பு வழங்குவதற்குமான ஒரு பொதுவான நீதி அமைப்பு முறையை உருவாக்கும் ஒரு பிரிவாக இயங்க முடியாது. நீதிபதிகள்தான் சாட்சிகளை விசாரணை செய்து, சுயாதீனமான முறையில் முடிவெடுக்கவேண்டும்'' என அறிவித்தார்.

நூரம்பேர்க் விசாரணையில் தன்னுடைய ஆரம்ப அறிக்கையில் ஜாக்சன் ''மாபெரும் வெற்றிக்களிப்பிலும், காயப்பட்ட நிலையிலும் உள்ள நான்கு பெரிய நாடுகள் பழிவாங்கும் உணர்வை நிறுத்திவைத்து, தாங்களாகவே சிறைபிடிக்கப்பட்ட விரோதிகளை சட்டத்தின் தீர்ப்பிற்கு விட முன்வந்துள்ளது, இது அதிகாரம் பகுத்தறிவிற்கு கட்டுப்படுதப்படவில்லை என்பதற்கான பெரும் புகழாரங்களில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது ஆகும்.'' என கூறினார்.

அப்போதைய அமெரிக்க ஆளும்தட்டினரிடையே நிலவியிருந்த ஜனநாயக மரபுகள் மீதான குறிப்பிட்ட நம்பிக்கையுடன் ஜாக்சனுடைய கருத்துக்களும், செயல்களும் பிணைந்திருந்தன. மேலும் அமெரிக்க முதலாளித்துவ முறையினதும், யுத்ததிற்கு பின்னான உலகம் பற்றிய நம்பிக்கையையும் அவை புலப்படுத்தின. அவை ஒப்பீட்டளவில் கூடுதலான அரசியல், பொருளாதார வலிமையின் தளத்திலிருந்து அவை வெளிப்பட்டவையாகும்.

அடக்குமுறையையும், கொலையையும் மிகுந்த பக்தியுடன் மதிக்கும் இன்றைய வாஷிங்டனிலுள்ள சூழ்நிலை, உள்நாட்டிலும், வெளியிலும் ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு இயைந்து நிற்கும் தன்மையின் வீழ்ச்சியைக் காட்டுகிறது. மோசடியாலும், சண்டித்தனத்தாலும் ஆட்சியைக் கைப்பற்றிய புஷ் நிர்வாகம், தடையற்ற வன்முறைப் பயன்பாடு உலகம் முழுவதும் கையாளுவதால் நெருக்கடிக்குள்ளான அமெரிக்க ஆளும் தட்டினரின் நலன்களுக்கு சேவை செய்யலாம் என நம்புகின்றது.

ஈராக்கின் அரசியல் படுகொலைகளைப் பற்றிய பிரச்சாரம், அமெரிக்க ஆளும் தட்டினரின் குற்றஞ்சார்ந்த தன்மையை மேலும் எடுத்துக்காட்டுகின்றது.

Top of page