World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Iraqi civilians gunned down in US military raids

அமெரிக்க இராணுவச் சோதனைகளில் ஈராக்கிய குடிமக்கள் சுட்டு வீழ்த்தப்படுகின்றனர்

By Kate Randall
2 August 2003

Back to screen version

ஈராக்கில் தடுக்க முடியாத தாக்குதல்களை அமெரிக்க இராணுவத்தினர் தொடர்ந்து நடத்தி வருவதோடு ஈராக்கியக் குடிமக்களையும், சந்தேகத்திற்குட்பட்ட ''பாத் கட்சி போராளிகளையும்'' வளைத்துப் பிடித்தும் வருகின்றனர். சோடா மவுன்டெய்ன் (Soda Mountain) என்று கூறப்பட்ட சமீபத்திய நடவடிக்கையில், அமெரிக்கப் படைகள் 600 பேரைச் சிறைப்பிடித்து, பலரை பாக்தாத் விமான நிலையம், மற்றும் சில இடங்களில் மோசமான சூழ்நிலையில் அடைத்து வைத்துள்ளனர்.

சதாம் ஹுசேனுடைய மகன்கள் ஜூலை 22 ல் கொல்லப்பட்ட பின்னர், அமெரிக்க இராணுவச் செயல்கள் தூண்டிவிடும் தன்மையிலும், மிருகத்தனமான முறையிலும் கணிசமாகப் பெருகிவிட்டன. ஜூலை 28 ம் தேதி மட்டும் அமெரிக்கப் படைகள் 29 சோதனைகள் நடத்தி 241 பேரைக் கைது செய்துள்ளது.

உதை, கியூசே ஹுசேன் இருவரையும் அமெரிக்கப் படைகள் கொலை செய்த அன்றே, 40, 50 பேர் அடங்கிய ஆர்ப்பாட்டக்குழு ஒன்று கார்பலாவில் இமாம் ஹுசேனின் மசூதியில் நுழைய அனுமதி கோரியது. அமெரிக்க கடற்படை இவர்களை அனுமதிக்க மறுத்ததால் இக்குழுவினர் கூச்சலிட ஆரம்பித்து, சிலர் கற்களையும் வீசினர். இதனை கண்கூடாகப் பார்த்தவர்களின் சாட்சியத்தின்படி கடற்படையினர் கூட்டத்தை நோக்கி சுட்டதில் ஒருவர் இறந்துபோனார்.

அதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமையன்று 2000 ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் தற்கொலைப் படையினர் உடுப்பில் போலி வெடிகுண்டுகளையும் கொண்டிருந்தனர். புனித மசூதியின் தூய்மையைக் கெடுத்ததற்காகவும், ஓர் ஈராக்கியரைக் கொன்றதற்காகவும் அமெரிக்கர்கள் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கோரிக்கையையும் விடுத்தனர்.

பாக்தாத்தின் செல்வச்செழிப்பு நிறைந்த பகுதியான மன்சூரில், அமெரிக்கப் படைகள் இரத்தம் நிறைந்த தாக்குதல் ஒன்றை ஜூலை 27 ம் தேதி நடத்தியது. அங்கு இளவரசர் ரபியா முகம்மது அல்ஹபீபின் இல்லத்தில் சதாம் ஹூசேனைத் தேடும் சாட்டில் ஒரு சோதனை நடத்தப்பட்டது. அப்போது நடத்தப்பட்ட தாக்குதலில் வீதியில் சென்று கொண்டிருந்தவர்களில் கிட்டத்தட்ட 11 பேர் கொல்லப்பட்டனர் என்று அப்பகுதி வாழ் மக்கள் தெரிவித்துள்ளனர். நான்கு நாட்களுக்குப்பிறகு லெட்டினன்ட் ஜெனரல் ரிகார்டோ சாஞ்சேஸ் பாக்தாத் செய்தியாளர் கூட்டத்தில் ''5 வரையிலான'' மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறியபோதிலும், இந்த இறப்புகளுக்கு பொறுப்பு ஏற்க அவர் மறுத்துவிட்டார்.

பிரிட்டிஷ் நாளேடான இன்பென்டன்ட்டின் நிருபர் ராபர்ட் பிஸ்க் இந்த நிகழ்ச்சி பற்றி விரிவான செய்தியைக் கொடுத்துள்ளார். ஜூலை 28 ம் தேதி அமெரிக்கப் படைகள், நூற்றுக்கணக்கான மக்கள் இருந்த நெரிசலான தெருவில் துப்பாக்கிச் சூடு நடத்திய அளவில், ''இரு குழந்தைகள், அவற்றின் தாயார், முடமான தந்தை உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர்'' என்று தெரிவித்துள்ளார். ''ஒரு காரில் நெருப்புப் பிடித்த அளவில் அதிலிருந்த அனைவரும் உயிரோடு எரிக்கப்பட்டனர்'' என்று அவர் தொடர்ந்து எழுதியுள்ளார்.

படை 20 என்ற பிரிவு, ஹுசேனையும் மற்றும் வீழ்த்தப்பட்ட ஆட்சியின் முக்கிய உறுப்பினர்களையும் வேட்டையாடும் முயற்சியிலும், சோதனையிலும் ஈடுபட்டது. ஜூலை 27 ம் தேதி பிற்பகல் 1.30 மணியளவில் இந்தப் படைப் பிரிவினர் சாதாரண உடையணிந்து இளவரசர் அல்-ஹபீபின் வீட்டிற்கு 200 அடி தள்ளித் தங்கள் வண்டிகளை நிறுத்தினர். இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களின் விவரப்படி, இப் படையினர் முள் வேலியைப் பயன்படுத்தி அல்-ஹபீபின் வீட்புப்புறம் செல்லும் சாலையை அடைத்தபோதிலும், அருகிலுள்ள தெருக்களை அவர்களால் அடைக்க முடியவில்லை.

மேலும் இதைப் பற்றித் ஒன்றும் தெரிந்ததிராத காரில் பயனம் செய்தவர்கள் சம்பவ இடத்தைக் கடந்தபொழுது, எச்சரிக்கை ஏதும் கொடுக்காமல் அமெரிக்கப் படைகள் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர் என்று பிரிட்டிஷ் பத்திரிகையான கார்டியன் தெரிவித்துள்ளது. அத்துடன் இராணுவத்தினர் தாறுமாறாகச் சுட்டுக்கொண்டிருந்ததாக, அப்பகுதியில் கடை வைத்திருந்த அஹமத் இப்ராஹிம் என்பவர் கார்டியனிடம் தெரிவித்தார். குண்டுகளால் துளைக்கப்பட்ட வாகனங்களை சம்பவ இடத்திலிருந்து அப்புறப்படுத்தி இராணுவ லாரிகளில் ஏற்றியபொழுது அப்பகுதியில் பெருங்குழப்பம் நிலவியது. இராணுவத்திரைப் பார்த்துக் கூட்டம் பெருங்கூச்சலிட்ட சம்பவத்தை படம் எடுக்க முயற்சி செய்த புகைப்படக்காரர்களை இராணுவத்தினர் தடுக்க முற்பட்டனர்.

சோதனைச் சாவடிகளில் அமெரிக்கப் படையினர் குடிமக்களை நையப்புடைப்பதாகவும் பரந்த அளவில் செய்திகள் வந்துள்ளன. ஏஜன்ஸ் பிரான்ஸ் பிரஸ் (AFP) ஜூலை 3 ம் தேதி இரவு மின்துறை ஊழியர் ஒருவரான ரஹிம் நாசர் அஹ்மத் எவ்வாறு இரண்டு இராணுவ வாகனங்களில் நிறுத்தப்பட்டார் என்பதைத் தெரிவிக்கிறது.

காரில் ஒரு சிறிய கைத்துப்பாக்கியைக் கண்டுபிடித்தவுடன் ஒரு சிப்பாய் ரஹீமை அடிக்கத் தொடங்கினார். ''என்னுடைய கைகளைப் பின்புறமாக விலங்கிட்டு, என்னுடைய வாயை ஒரு நாடாவினால் மூடிய பின்னர் என்னுடைய முகம், கைகள், வயிறு இவற்றில் துப்பாக்கிக் கட்டையால் அடிக்கத் துவங்கினர்'' என்று AFP யிடம் ரஹீம் கூறினார். இதன் பின்பு அவரை ஈராக்கியப் போலீஸ் காரின்மீது முரட்டுத்தனமாக தள்ளியும், தரையில் போட்டு அடித்தும், துப்பாக்கி முனையைத் தலையுச்சியில் வைத்து அச்சுறுத்தலும் செய்தனர்..

பெயரை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையில் ஒரு அமெரிக்க இராணுவப் போலீஸ் அதிகாரி, அமெரிக்கப் படைகள் ஈராக்கியக் குடிமக்களைத் தாக்குதல், கொலை செய்தல் பற்றி வந்த அறிக்கைகளைப் பற்றி AFP யிடம் கூறியதாவது: ''இது எங்களுக்குப் பெரிய சங்கடனமான நிலைமையாகும். போர் முடிந்த பின்னர் பெரிய அளவில் இவையெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன. எங்களுக்கு அதிக வேலையில்லை. சில படையினர் கொல்லப்பட்டுள்ள நிலையில் அவர்களுடைய நண்பர்கள் சாதாரண குடிமக்களைத் தாக்குவதின் மூலம் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்'' என்றார்.

''கடும் நடவடிக்கைகளை கொடுமையான முறையில் செயல்படுத்தி அவர்களை குற்றவாளிகள் போல் நடத்துகின்றனர். அவர்களில் பல பேர் இப்பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு வேறு பணிக்கு அனுப்பப்பட வேண்டும். அதுவோ நடைபெறவில்லை.'' என்று இந்த அதிகாரி மேலும் கூறினார். சோதனைச் சாவடிகளில் குறைந்தது 20 தடவையாவது சாதாரண குடிமக்களை அடிப்பது, அவர்களிடமிருந்து பொருட்களை அபகரிப்பது போன்றவற்றைச் செய்வதைப் தான் பார்த்துள்ளதாகவும் கூறினார்.

அத்தோடு, ஜூலை 26 ம் தேதி, 4 அமெரிக்க இராணுவத்தினர் ஈராக்கியக் கைதிகளை அடித்தது பற்றி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று பென்டகன் தெரிவித்துள்ளது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved