World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Moves to restart Sri Lankan peace talks

இலங்கை சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நகர்வுகள்

By Wije Dias
14 August 2003

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கையின் புதுப்பிக்கப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஐக்கிய தேசிய முன்னணி (ஐ.தே.மு) அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு இடைக்கால நிர்வாகத்தை நிறுவுவதற்கான பிரேரணையை முன்வைத்ததை அடுத்து, அடுத்த மாதம் பாரிசில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

விடுதலைப் புலிகள், தாம் மேலும் மேலும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை உணர்ந்து வெளியேறியதை அடுத்து, பேச்சுவார்த்தைகள் கடந்த ஏப்பிரலில் முறிவடைந்தன. தமது படகுகளை மூழ்கடித்தல் மற்றும் ஆயுதங்களைக் களைவதற்கான வாஷிங்டனின் கோரிக்கை உட்பட ஒரு தொடர் ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளை விடுதலைப் புலிகள் எதிர்கொண்டனர். அதே சமயம், 2002 பெப்பிரவரியில் யுத்த நிறுத்தம் அமுலுக்கு வந்த பின்னரும் வாழ்க்கை நிலைமைகள் அபிவிருத்தி அடையாததால் தமிழ் மக்கள் மத்தியில் வளர்ச்சி கண்டுவரும் எதிர்ப்புக்கும் முகம் கொடுத்தனர்.

அமெரிக்காவின் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் இன்னமும் இருக்கின்றது என்பதை சுட்டிக் காட்டிய புஷ் நிர்வாகம், ஏப்பிரல் நடுப்பகுதியில் வாஷிங்டனில் இடம்பெற்ற உதவி மாநாட்டுக்கு விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளை அனுமதிக்க மறுத்ததை அடுத்து கடைசித் துரும்பு கிட்டியது. ஜூனில் இன்னுமொரு உதவி மாநாட்டில் பங்குபற்றத் தவறிய விடுதலைப் புலிகள், இடைக்கால நிர்வாகத்துக்கான உடன்பாடு காணப்பட்டால் மாத்திரமே தாம் மேலதிக பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றுவதாக சுட்டிக்காட்டினர்.

எவ்வாறெனினும் இரு சாராரும் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான பெரும் வல்லரசுகளின் நெருக்குவாரத்துக்கு உள்ளாகினர். டோக்கியோ மாநாட்டில் வாக்குறுதியளிக்கப்பட்ட 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் மற்றும் சலுகைகள், சமாதான முன்னெடுப்புகளின் திருப்திகரமான முன்னேற்றத்தைப் பொறுத்தே நிச்சயிக்கப்படும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த மே மற்றும் ஜூனில் இடைக்கால நிர்வாக சபை பிரேரணைகளுடன் விடுதலைப் புலிகளை மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு இழுக்க முயற்சித்தார் --இரண்டும் நிராகரிக்கப்பட்டன. ஆனால், விடுதலைப் புலிகள் ஜூலை 17 முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் புதிய திட்டமான தற்காலிக சபை பற்றி செயல் ரீதியில் அக்கறை காட்டுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

வடக்கு கிழக்கில் எதிர்கால நிர்வாகத்துக்கான தனது திட்டங்களை அரசாங்கம் பிரேரணையில் விபரமாக வெளிப்படுத்தியது இதுவே முதல் தடவையாகும். அதனது ஜனநாயக விரோத மற்றும் இனவாத இயல்பு சமாதான முன்னெடுப்புகளின் பண்பை கோடிட்டுக்காட்டுகின்றது. இது தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்கப்படும் மக்களையும் மாறி மாறி சுரண்டுவதன் பேரில் இலங்கையில் ஒரு அதிகாரப் பகிர்வை எட்டும் ஆளும் கும்பல்களின் முயற்சியாகும்.

தேர்தல்கள் இடம்பெறமாட்டாது. விடுதலைப் புலிகள், அரசாங்கம் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் தற்காலிக சபை உறுப்பினர்களை சாதாரணமாக நியமிப்பர். அரசாங்கம் தாம் நியமிப்பவர்களில் எதிர்க்கட்சியான பொதுஜன முன்னணியின் உறுப்பினர்களையும் சேர்த்துக்கொள்ளும் என சுட்டிக்காட்டியுள்ளது. ஏனைய தமிழ் கட்சிகள் பிரதிநிதித்துவம் செய்யப்போவதில்லை --இது தாம் இலங்கை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என விடுதலைப் புலிகள் உரிமை கொண்டாடுவதை ஏற்றுக்கொள்வதாகும்.

சபையில் விடுதலைப் புலிகள் பெரும்பான்மையினராகவும் அமலாக்கல் அதிகாரத்துடன் (வீட்டோ) பாத்திரம் வகிக்கும் தலைவராகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தலைவர் பதவியை நிரப்புவதற்காக இரண்டு பதிலீட்டுத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஒன்று சபையால் தேர்ந்தெடுக்கப்படல். இது பதவியை விடுதலைப் புலிகளுக்கு வழங்குவதை அனுமதிக்கும். அல்லது, அமலாக்கல் அதிகாரத்துடன் விடுதலைப் புலிகளில் ஒருவரும் அரசாங்க சார்பில் ஒருவருமாக இரண்டு தலைவர்கள் இருத்தப்படுவார்கள். இரண்டு வழிகளும் விடுதலைப் புலிகளை தலைமைப் பதவியில் இருத்தும்.

இந்தத் திட்டம் தற்காலிக சபையின் கீழ் எட்டு மாவட்ட சபைகளை நிறுவுவதையிட்டு ஆழமாக சிந்திக்கும். இந்த சபைகள் மீண்டும் தேர்வுசெய்யப்படமாட்டா. மாகாண சபையானது சபைகளின் அங்கத்தவர்களை தேர்வு செய்வதோடு ஒவ்வொன்றிலும் தலைவராக செயற்படுவதற்கு தனது சொந்த அங்கத்தவர்களை நியமிக்கும்.

அரசாங்கம் சபையில் பிரதான பாத்திரம் வகிப்பதற்காக விடுதலைப் புலிகளை நியமிக்கும் அதேவேளை, விடுதலைப் புலிகளுக்கான அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. சபையானது "கொள்கைத் திட்டமிடல், அமுலாக்கல் மற்றும் கண்காணிப்பில்" தலையீடு செய்யும். ஆனால் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு, காணி மற்றும் வரி போன்ற கடினமான பகுதிகள் வெளித்தள்ளப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளுக்கான இலஞ்சமாக, சபையானது வடக்கு கிழக்கில் புணரமைப்புக்காக வெளிநாட்டு நிதியை பங்கீடு செய்வதை கடமையாகக் கொள்ளும் என அரசாங்கம் முன்மொழிகின்றது.

பாதுகாப்பு மூலப் பிரதேசங்கள், காணி மற்றும் வருமானம் போன்றவை தெளிவான முரண்பாடுகளின் தோற்றுவாய்களாக இருந்து வந்துள்ளன. விடுதலைப் புலிகள் பிரேரணைகளை ஏற்றுக்கொண்டால், தனது போராளிகள் நிராயுதபாணிகளாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு முகம் கொடுப்பதோடு, தனது சொந்த பணிகளுக்கு முடிவுகட்ட வேண்டிவரும். கடந்த பெப்பிரவரியில் வாஷிங்டனின் கோரிக்கைகளை உச்சரித்த அமெரிக்க ராஜாங்க செயலாளர் ரிச்சார்ட் ஆமிடேஜ், விடுதலைப் புலிகள் வன்முறைகளை முழுமையாக கைவிடுவதோடு நிராயுதபாணிகளாக வேண்டும் என்றார். "ஒரே இலங்கைக்குள் உள்ளக சுயநிர்ணயம் என்பது, நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கு தனியான இராணுவம் மற்றும் கடற்படையை ஒத்திருக்க மாட்டாது," என அவர் பிரகடனம் செய்தார்.

நிலமும் முரண்பாடுகளின் கீழ் உள்ளது. வடக்கு கிழக்கில் இராணுவம் உயர் பாதுகாப்பு வலையங்களை நிறுவியபோது தமது வீடுகள் வியாபார நிலையங்களை விட்டு வெளியேறத் தள்ளப்பட்ட 40,000 க்கும் அதிகமான தமிழ் குடும்பங்கள் மீண்டும் குடியேறுவதற்கான உரிமையைக் கோருகின்றன. இந்தப் பகுதிகளை விட்டு வெளியேற ஆரம்பிப்பதற்கு முன்னர் விடுதலைப் புலிகள் நிராயுதபாணிகளாக்கப்பட வேண்டும் என இராணுவம் சுட்டிக்காட்டி வந்துள்ளது. உயர் பாதுகாப்பு வலைய விடயத்துக்கும் அப்பால், காணிப் பிரச்சினையானது முன்னர் தமிழர்கள் வாழ்ந்த பிரதேசத்தில் காலனிகளை அமைப்பதற்காக, ஏழை சிங்கள கிராமத்தவர்களை தூண்டிவிட்ட கொழும்பு அரசாங்கங்களின் கொள்கைகளால் தோற்றுவிக்கப்பட்ட தீர்க்கப்படாத காணி முரண்பாடுகளின் தொடர்ச்சியேயாகும்.

தற்காலிக சபையின் அதிகாரங்களை வரையறுப்பதற்கும் மேலாக, ஐ.தே.மு அரசாங்கமானது சபையின் தீர்மானங்களை அமுல் செய்வதன் பேரில் ஒரு விசேட ஆணையாளரை நியமிப்பதன் ஊடாக முழு நிர்வாக கட்டுப்பாட்டையும் தன்வசம் வைத்துக்கொள்ள திட்டமிடுகிறது. மாவட்ட மட்டத்தில், அரசாங்கமானது புதிய மாவட்ட சபைகளுக்கு செயலாளர்களாக நியமிக்கப்படும் மாவட்ட உயர் அதிகாரிகள் உடாக நிர்வாகத்தை தன்வசம் வைத்திருக்கும்.

இத்தகைய ஜனநாயக விரோத பிரேரணைகள், வடக்கு கிழக்குப் பகுதியில் தற்போது காணப்படும் நிலைமைக்கும் அப்பால் இனவாத அமைப்புகளை நிறுவனமயப்படுத்துவதோடு மேலும் இன முரண்பாடுகளுக்கும் மோதல்களுக்கும் வழிவகுக்கும். இந்த திட்டம் விடுதலைப் புலிகளை தமிழர்களின் ஏகபிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்வதோடு, முஸ்லிம் சமுதாயத்தைப் பொறுத்தளவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் (ஸ்ரீ.ல.மு.கா) இதே தகமையை வழங்குகிறது. ஐ.தே.மு. மற்றும் பொதுஜன முன்னணியும் சிங்களவர்களின் பிரதிநிதிகளாக செயற்படுவார்கள். அவர்களது சமூகத்தின் நலன்களுக்கு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்கள் தொடர்பாக அமலாக்கல் உரிமையைக் கொண்டிருப்பர் --இது நிலவுகின்ற இனவாத பதட்டநிலைமையை மோசமாக்கும் வழிமுறையாகும்.

ஆரம்பத்திலிருந்தே ஸ்ரீ.ல.மு.கா மற்றும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தெளிவான உடன்பாடின்மைகள் இருந்து கொண்டுள்ளன. ஸ்ரீ.ல.மு.கா, தீவின் கிழக்கில் உள்ள பெருந்தொகையான முஸ்லிம் மக்களின் துன்பங்களை சுரண்டுவதற்காக 1980ல் அமைக்கப்பட்டது. 1990 களின் முற்பகுதியில், விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்களை மொத்தமாக வெளியேற்றியதை விசேடமாக சுட்டிக்காட்டி வந்த ஆட்சியிலிருந்த கொழும்பு அரசாங்கங்கள், விடுதலைப் புலிகளுக்கு எதிராக பொதுமக்களை பிரிப்பதன் பேரில் ஸ்ரீ.ல.மு.கா. வைப் பயன்படுத்த முயற்சித்தன.

முஸ்லிம் பிரமுகர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஸ்ரீ.ல.மு.கா, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களுக்கு ஒரு தனியான நிர்வாக அலகை நிறுவ அழைப்புவிடுத்தது. இக் கோரிக்கையை விடுதலைப் புலிகள் எதிர்த்தனர். ஸ்ரீ.ல.மு.கா, தற்போது ஐ.தே.மு. சார்பானவர்கள் பொதுஜன முன்னணி சார்பானவர்கள் எனும் அடிப்படையில் பிளவுற்றுள்ளது. அதன் சில தலைவர்கள் விக்கிரமசிங்க அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வகிக்கின்றனர். வடக்கும் கிழக்கும் இணைக்கப்படுமானால் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கான ஒரு தனியான சபை உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அரசாங்க அமைச்சரான எம். அத்தாவுல்லா தலைமை வகிக்கும் ஒரு சிறு கும்பல், பிரேரிக்கப்பட்டுள்ள தற்காலிக சபையை தடம்புரளச் செய்ய அச்சுறுத்தியது.

அதே சமயம், விக்கிரமசிங்க அரசாங்கமானது சிறுபான்மையினருக்கு எந்தவொரு சலுகையையும் வழங்குவதை இராஜ துரோகமாக கருதும் சிங்கள தீவிரவாத அமைப்புக்களின் நெருக்குவாரத்துக்கு உள்ளாகியுள்ளது. எதிர்க் கட்சியான பொதுஜன முன்னணியுடன் ஒரு கூட்டணி அமைக்க திட்டமிடும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) பிரேரணைக்கு எதிராக தீவு பூராவும் ஏற்கனவே ஒரு பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது. அது பிரேரணையை தாய் நாட்டை பிரிக்கும் நடவடிக்கையாக வகைப்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான எதிர்க் கட்சியான பொதுஜன முன்னணி இதே குறிப்பையே வெளிப்படுத்தியுள்ளது. ஜனாதிபதியின் ஆலோசகரான லக்ஷ்மன் கதிர்காமர், எந்தவொரு தற்காலிக சபையும் அமைக்கும் முன்னர் விடுதலைப் புலிகள் மீது உறுதியான முன்நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். "இறுதி தீர்வு மற்றும் ஆயுதங்களைக் கீழ வைப்பது சம்பந்தமான சமிக்ஞைகள் இன்றி விடுதலைப் புலிகளுக்கு வடக்கு கிழக்கில் ஒரு இடைக்கால நிர்வாகத்தை வழங்குவது எப்படி. மொத்தத்தில் எந்தவொரு அரசாங்கத்துக்கும் அது விரும்பத் தகாததாகும். அது முடிவின் ஆரம்பத்தையே குறிக்கும் (ஒரு தனித் தமிழ் நாடு அமைப்பது)," என அவர் ஆகஸ்ட் 1 ஒரு கூட்டத்தில் தெரிவித்தார்.

இறுதியாக தற்காலிக சபை அமைக்கப்பட்டாலும் அல்லது இல்லாவிட்டாலும், பிரேரணையானது சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் ஆளும் கும்பல்களின் பிற்போக்கு நிகழ்ச்சி நிரலையே சுட்டிக்காட்டுகின்றது. மக்களின் சமூகத் தேவைகள் மற்றும் ஜனநாயக எதிர்பார்ப்புகளை இட்டு நிரப்புவதில் முழுமையாக இலாயக்கற்றுப் போயுள்ள இந்த சகல முதலாளித்துவ தட்டுக்களும், தனது சொந்த குறுகிய இனக்குழு நலன்களை காத்துக்கொள்வதன் பேரில் ஒரு அதிகாரப் பரவலாக்கல் ஒழுங்குக்காக மக்களின் சமாதானத்துக்கான எதிர்பார்ப்பை சுரண்டிக்கொள்கின்றன. இந்த கொடுக்கல் வாங்கலானது பதட்ட நிலைமைகளுக்கு முடிவுகட்டுவதற்கு அப்பால் மேலதிக மோதல்களுக்கே வழிவகுக்கும்.

Top of page