World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக்

Behind the Solomons intervention: Australia stakes out its sphere of influence in the Pacific

சொலமன் தீவுகளின் தலையீட்டின் பின்னணியில்: ஆஸ்திரேலியா பசிபிக் பகுதியில் தன்னுடைய செல்வாக்கு மண்டலத்தை நிறுவும் முயற்சிகள்

By The Editorial Board
15th August 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக்கின் மீதான அமெரிக்காவின் சட்ட விரோதமான படையெடுப்பும் ஆக்கிரமிப்பும் மேற்கொண்டுள்ள முறை, வல்லரசுகளிடையே புதிய செல்வாக்கு மண்டலங்களுக்கான ஒரு புதிய போட்டிகள் நிறைந்த காலகட்டத்தை நோக்கி இட்டுச்சென்றுள்ளது. ''புஷ் நிர்வாகத்தின் விருப்பமுடையோரின் கூட்டணியில்'' (Coalition of the willing) விசுவாசமுடைய சிறு பங்காளியாகச் செயல்படும், ஒரு மூன்றாம் தரமான ஏகாதிபத்திய சக்தியான ஆஸ்திரேலியா தென் பசிபிக் பகுதியில் தன்னுடைய நவீன-காலனித்துவ நிகழ்ச்சிநிரலை நடைமுறைப்படுத்த நேரத்தை வீணடிக்கவில்லை.

ஈராக் கைப்பற்றப்பட்ட சில மாதங்களுக்குள், ''தோல்வியுற்ற நாடு'' சர்வதேச குற்றங்களுக்கும், பயங்கரவாதச் செயல்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் இடமாக மாறுவதைத் தடுத்து, சட்டத்தையும் ஒழுங்கையும் உருவாக்குவதற்காகவும் காரணம் காட்டி, ஆஸ்திரேலியத் தலைமையில் போலீஸ், இராணுவப் படைகள் சொலமன் தீவுகளில் இறக்கப்பட்டுள்ளன. சொலமன் தீவில் அரசாங்கம் செயல்பட்டுக்கொண்டிருக்கும் போதே மூத்த தூதர் நிக் வார்நரை (Nick Warner) கான்பெர்ரா இந்த நடவடிக்கையை மேற்பார்வையிடவும், பிரதம மந்திரி அலன் கேமகேசாவிற்கு (Allan Kemakeza) அரசியல் ஆலோசகராக நியமித்துள்ளது. ஆஸ்திரேலிய அதிகாரிகள் நாட்டின் முக்கிய பணிகளான நிதி, போலீஸ், சிறைகள், நீதித்துறை ஆகியவற்றின் மத்திய பங்கினை கையேற்கவும் தயாராகிவிட்டனர்.

Operation Helpem Fren (''நண்பனுக்கு உதவு'') என்ற இகழ்ச்சிப் புனைபெயரைக் கொண்ட இந்த சொலமன் தீவுத் தலையீடு ஏதோ ஒரு முறை நடக்கும் செயல் அல்ல என்பது தெளிவாகிவிட்டது. இது இப்பகுதி முழுவதுமே நீண்டகால நிகழ்ச்சிநிரலுக்கு ஒரு மாதிரியாகும். உலக அரங்கில் ஒரு பெரிய வல்லரசாக இல்லாவிட்டாலும், தென் பசிபிக்கில் உள்ள மிகச்சிறிய தீவுகளுடன் ஒப்பிடும் அளவில் அது பெரிய ராட்சதன்போல் விளங்குகிறது. தன்னுடைய பொருளாதார, இராணுவச் செல்வாக்கைப் பயன்படுத்தி, சிறிய அண்டை நாடுகளைத் தனது கட்டளைக்கு கீழ்ப்படுத்தும் முடிவை எடுத்துவிட்டதை ஹோவார்ட் அரசாங்கம் மிகத்தெளிவாக்கிவிட்டது.

ஜூலை 24ம் தேதி, வடகிழக்கு ஆஸ்திரேலிய நகரமான ரைளன்ஸ்வில் (Townsville) இல் இருந்து அதிகாரபூர்வமான படையனுப்பு விழா, அரசாங்கம் எவ்வாறு ஒரு புது வகை உறவுகளை நிறுவ முயற்சிக்கிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளது. தன்னுடைய ''விருப்பமுடையோர் கூட்டணி'' உறுப்பினர்களான நியூசிலாந்து, பாப்புவா நியூகினியா, பிஜி, ரொங்கா ஆகிய நாடுகளின் தலைவர்களை அழைத்து சொலமன்ஸ் செயலுக்கு சட்டபூர்வத்தன்மை வழங்க ஆஸ்திரேலியப் பிரதம மந்திரி ஹோவார்ட் முற்பட்டார். நியூசிலாந்தின் தொழிற் கட்சி பிரதம மந்திரியான ஹெலன் கிளார்க், சற்று பயத்துடன் நியூசிலாந்தின் சொந்த நலன்களை விரிவுபடுத்த இதை ஒரு வாய்ப்பாக இந்தச் செயலுக்கு ஆதரவு அளித்தார். தங்கள் நாடுகளில் பெரிய பொருளாதார, அரசியல், சமூகப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள பாப்புவா நியூகினியா, பிஜி, டொங்கா நாடுகளின் தலைவர்கள் இதில் பங்குபெற மறுத்தால் ஆஸ்திரேலியாவிடமிருந்து விளைவுகளைச் சந்திக்கவேண்டும் என்பதை மனத்திற்கொண்டு இதில் கலந்துகொண்டனர்.

தன்னால் பிடித்துவைக்கப்பட்ட பார்வையாளரிடம், ஹோவார்ட், பசிபிக் நாடுகள் இந்த நடைமுறையில் பங்குபெறுவது ''அடையாளமான ஒரு முக்கிய விடயம், அதன் தாக்கம் இனிவரவுள்ளது'' என்று புகழ்ந்தார். தன்னுடைய அரசாங்கத்தின் பரந்த நோக்கங்களை அவர் சுட்டிக்காட்டும் வகையில் ''இந்தப் பணி சொலமன் தீவுகளுக்கு மட்டுமில்லாமல் இப்பகுதியிலுள்ள மற்ற நாடுகளுக்கும் உதவி தேவைப்பட்டால் கிடைக்கும் என்பதை நினைவுறுத்தும் முக்கிய அடையாளமாக அமையும்'' என அறிவித்தார்.

மறுநாள் இதே பல்லவியை மீண்டும் செய்தி ஊடகத்திடம் ஹோவார்ட் தெரிவிக்கையில் ''பசிபிக் நம்முடைய கவனத்திற்கு உட்பட்ட பகுதியேயாகும். இப்பகுதியிலேயே ஆஸ்திரேலியா பெரிய, பலமான நாடாகும். எனவே ஆஸ்திரேலியாவைச் சுற்றியுள்ள நாடுகள் ஆஸ்திரேலியா சுமையைத் தாங்கவேண்டும் என எதிர்பார்ப்பது முறையேயாகும்; நாமும் அதைச் செய்வோம்'' என்றார். ''எப்பொழுது அழைத்தாலும் தலையிடுவோம் என்று நான் முன்னரே கூறவில்லை. ஆனால் ஆஸ்திரேலியா தன்னுடைய கொள்கையை மாற்றிக் கொண்டுள்ளது என்பதை நான் சைகை காட்டியுள்ளேன்'' என முடித்தார்.

பசுபிக் அயல்நாட்டவர்களுக்கு தான் உதவுவதாக கன்பரா கூறுவது முழ ஏமாற்று மட்டுமல்லாது, பிரான்சு உதவ முன்னவந்ததை ஹவார்ட் வேண்டுமென்றே நிராகரித்ததிலிருந்து வெளிப்படுகின்றது. 100 வருடங்களுக்கு மேலாக ஆஸ்திரேலியாவினதும் பிரான்சினதும் நலன்கள் 19ம் நூற்றாண்டின் இறுதியில் காலனிகளுக்கான போட்டி ஆரம்பித்ததிலிருந்து பசுபிக் பிராந்தியத்தில் போட்டிபோட்டுக் கொண்டிருக்கின்றன. ஆஸ்திரேலிய அரசாங்கத்தை பொறுத்தவரையில் பிரான்சினது தலையீடானது தென்மேற்கு பசுபிக்கில் ஆஸ்திரேலியாவின் நிலையை உறுதிப்படுத்தும் அதனது நண்பனுக்கு உதவு நடவடிக்கையின் அடிப்படை மூலோபாய நோக்கத்தை இல்லாதொழிக்கும்.

அதனுடைய பங்கிற்குப் பிரான்சும் செல்வாக்கை உயர்த்திக்கொள்ள முன்வந்துள்ளது. பசிபிக் பகுதியில் பிரான்சின் குடியேற்றங்களில், பிரெஞ்சு ஜனாதிபதி சிராக் பயணம் மேற்கொண்டிருந்தார். பிரெஞ்சு, பொலிநீசியாவில் (French Polynesia) அணுவாயுதச் சோதனையைத் தொடர்வதற்கு சிராக் உத்திரவு இட்ட பின்னர், 1995 இற்கு பின்னர் இப்பகுதிக்கான ஒரு பிரெஞ்சு ஜனாதிபதியின் முதல் விஜயமாகும். இவ் அணுப்பரிசோதனைக்கு பரந்த அளவில் எதிர்ப்புத் தோன்றியதுடன், இந்த வாய்ப்பை கான்பெரா பிரெஞ்சு எதிர்ப்பு உணர்வைப் பெருக்கும் முயற்சிக்கு பயன்படுத்தியது. இந்தப் பயணத்தில் சிராக் அணுப்பரிசோதனையை நியாயப்படுத்தியதுடன், தன்னுடைய வருகைக்கான காரணத்தையும் ஒளிவுமறைவின்றித் தெரிவித்தார். ''பொலினீசியா இல்லாவிட்டால், உலக நாடுகளிடையே தனிப்பட்ட, மரியாதைக்குரிய நிலையை வலியுறுத்தும் தகமையை உள்ள ஒரு சக்திவாய்ந்த நாடாக இப்பொழுது இருப்பதுபோல் பிரான்ஸ் இருந்திருக்க முடியாது'' என்றார்.

ஜூலை கடைசியில், சிராக் பிரெஞ் பொலினீசியத் தலைநகரமான Pape'ete ல் ''பிரான்ஸ் கடலிடையே'' (France-Oceania) என்ற உச்சிமாநாட்டைக் கூட்டினார். பசிபிக் தீவுகளின் நாடுகளில் ''பேச்சுவார்த்தைகளும் ஒத்துழைப்பும் புத்துயிர் பெறவேண்டும்'' என்று உரத்த குரலில் கூறினார். குறிப்பிடத்தக்க வகையில் ஆஸ்திரேலியா தவிர, அப்பகுதியின் மற்ற நாடுகள் அனைத்தும் அதில் பங்குகொண்டன. பிஜி, பாப்புவா நியூகினியாத் தலைவர்கள் டெளன்ஸ்வில் இல் இருந்து பிரான்ஸின் ஜனாதிபதியுடன் நேரடியாகப் பேச பறந்துவந்திருந்தனர். சிராக் பிரான்ஸ் அளிக்கும் உதவித்தொகையை 50% அதிகரித்ததுடன், பிரான்சின் இராணுவ வளங்கள் அழிவுகளின்போது உதவிவழங்கப் பயன்படுத்தலாமென்று அறிவித்ததுடன் பாரிசில் பசிபிக் கலாச்சாரம் பற்றிய அருங்காட்சியகம் அமைக்கப்போவதாகவும் தெரிவித்ததுடன், பசிபிக் நலன்கள் பற்றி ஐரோப்பிய ஒன்றியத்தில் வாதாடுவதாக உறுதிமொழியையும் அளித்தார்.

ஆஸ்திரேலியத் தலையீடு

ஏகாதிபத்திய போட்டிகளுக்கான பகுதியாக மீண்டும் தென்பசிபிக் பகுதி உட்பட்டுள்ளது. டெளன்வில் இல் ஹோவார்ட் சைகை காட்டியுள்ள கொள்கை மாறுதல், ஆஸ்திரேலிய ''செல்வாக்கு மண்டலம்'' என்று பாரம்பரியமாக கருதப்பட்ட பகுதியில் ஆஸ்திரேலிய ஆளும் வர்க்கத்தின் மத்தியில் இடம்பெற்ற விவாதத்தின் இறுதி வெளிப்பாடு ஆகும். 1970இல் பிஜி, 1975இல் பாப்புவா நியூகினியா, 1978ல் சொலமன் தீவுகள், 1980ல் வானுவடு என்று மிகச்சிறிய பசிபிக் நாடுகளுக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டபோதிலும் அவற்றின் உயிர்வாழ்வு கேள்விக்குரியதாகவுள்ளது.

கான்பெராவும் வாஷிங்டனும் கடுமையான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பொருளாதார மறுசீர்திருத்தங்கள் செயல்படுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தியதையும், குறிப்பாக 1997-98 ஆசிய நிதிநெருக்கடியையும் தொடர்ந்து இச்சிறிய பொருளாதாரங்கள் அனைத்துமே நெருக்கடியால் சீர்குலைந்துள்ளன. இதையொட்டி எழுந்த சமூக, பொருளாதார நெருக்கடிகள் 1998ல் இந்தோனேசியாவில் சுகார்ட்டோவின் வீழ்ச்சி, 2000ல் பிஜி, சொலமன் தீவுகள் ஆகியவற்றில் திடீர் ஆட்சி மாற்றங்கள், பாப்புவா நியூகினியாவின் உறுதியற்ற தன்மை என்பவற்றால் காணக்கூடியதாக இருந்தது. ஆஸ்திரேலிய வல்லுனர்கள் மிகுந்த அமைதியின்மையுடன் ஆஸ்திரேலியாவிற்கு வடக்கே ''உறுதியற்ற வளைவு'' தோன்றி உள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தன்னுடைய எல்லைகளுக்குள்ளேயே ஆழ்ந்த சமூக அரசியல் நெருக்கடியைச் சந்திக்கும் ஆஸ்திரேலிய அரசாங்கம் இந்தப் பகுதியின் வளரும் உறுதியற்ற தன்மையை சுரண்டப் பார்க்கிறது. பாப்புவா நியூகினியாவின் கடலோரப் பகுதியைத் தாண்டியுள்ள பூகேயின்வில் (Bougainville) தீவில் உள்ள பெரும் செப்புச் சுரங்கம் தொடர்பான ஆஸ்திரேலிய நிதி நலனின் அச்சுறுத்தலை தடுப்பதற்காக முன்னாள் ஆஸ்திரேலிய காலனியான பாப்புவா கினியாவில் 1997ம் ஆண்டு ஆஸ்திரேலியா தலையிட்டது. பிரிட்டிஷ், தென்னாபிரிக்க நலன்கள் உட்பட, பாப்புவா நியூகினியா அரசாங்கத்திற்கும் சான்ட்லைன் (Sandline) நிறுவனத்திற்கும் இடையே இருந்த இரகசிய ஒப்பந்தத்தை ஹாவார்ட் அரசாங்கம் அம்பலப்படுத்த தீர்மானித்தது. அவை தீவிற்கு உள்நாட்டுப் போரை நிறுத்த கூலிப்படையொன்றை அனுப்புவதாக இருந்தன. இந்த இரகசிய ஒப்பந்தப்படி செப்புச்சுரங்க உற்பத்தி ஆஸ்திரேலிய நலன்களை வெளியேற்றி புதிய நிர்வாகத்தை ஏற்படுத்தியிருக்கும். திட்டம் அம்பலப்படுத்தப்பட்டது அரசியலளவில் ஒரு புயலையே கிளப்பி பாப்புவா நியூகினியாவின் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதில் முடிவுற்றது. இதற்கு அடுத்த ஆண்டு, நியூசிலாந்துடன் சேர்ந்துகொண்டு பூகேயின்வில் இல் தன்னுடைய சொந்த அமைதி ஒப்பந்தத்தைக் கொண்டுவந்து, தீவுகளுக்கு ஆஸ்திரேலியப் படைகளை ஹாவார்ட் அரசாங்கம் அனுப்பிவைத்தது.

1999ல் இப்பகுதியில் தன்னுடைய ''செயல்பாடுகளை'' ஆஸ்திரேலியா இம்முறை கிழக்கு திமோரில் தலையிட்டதன் மூலம் முன்னெடுத்தது. கிழக்கு திமோரிய மக்களைக் காப்பாற்றுவதற்காக மனிதாபிமான காரணத்திற்காக தலையீடு செய்வதாக ஹாவார்ட் அரசாங்கம் வற்புறுத்தியிருந்தபோதிலும், படைகளை அனுப்பிவைத்ததின் உண்மையான காரணம், திமோரிய கேப் எண்ணெய், எரிவாயு வயல்களிலும் ஆஸ்திரேலிய நலன்களைக் காப்பதையும், போர்த்துகல் தன்னுடைய முன்னைய காலனிமீது மீண்டும் உரிமைகளைக் கோராது தடுத்து நிறுத்தவுமாகும். ஆசியா முழுவதும் இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு வந்தவுடன், ஹாவார்ட் அதை மறுத்தபோதிலும், கிழக்கு திமோர் மீதான வெற்றிக்களிப்பில் ஆசிய - பசிபிக் பகுதியில் ஆஸ்திரேலியா அமெரிக்காவின் ''துணை காவலாளி'' என்ற புதிய பாத்திரத்தை பெற்றுள்ளதாக விளக்கத் தலைப்பட்டார்.

ஆக்கிரமிப்புத்தன்மை அதிக அளவில் பெருகத் தலைப்பட்டாலும், வடிவத்திலாவது தேசிய அமைப்பைத் தாக்காமல் இருப்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் ஹாவார்ட் அரசாங்கம் இருந்தது. உதாரணமாக கிழக்கு திமோரிலும் பூகேயின்வில் இலும் அது தலையீடுகள் செய்தபொழுது ஐக்கிய நாடுகளின் ஆசீர்வாத்துடன் நிகழ்த்தப்பெற்றன. 2000 த்தில் சொலமன்ஸ் தீவுகளில் இன அடிப்படையிலான குழுமோதல்களின்போது மிரட்டுதலையும் லஞ்சம் கொடுத்தலுமாகிய, ஒரு கலவையினால் அப்பிரிவுகளை டெளன்ஸ்வில்லேயிற்கு அழைத்து அவர்களைக் கட்டாயப்படுத்தி அமைதி உடன்பாட்டிற்கு பணிய வைத்தது. ஒரு சில போலீஸ்காரர்களே அமைதி மேற்பார்வையாளர்களாக அனுப்பப்பட்டனர்; அதைவிடப் பரந்த அளவில் ஏதும் செய்வதற்கில்லை என ஹாவார்ட் வெளிப்படையாகக் கூறிவிட்டார்.

சமீப காலத்தில், ஜனவரி 2003ல் கூட ஆஸ்திரேலிய அயல்நாட்டு மந்திரி அலெக்சாந்தர் டெளனர் இராணுவத் தலையீட்டைத் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். மேர்டொக்கினுடைய ஆஸ்திரேலியன் பத்திரிகையில் எச்சரிக்கை விடுத்து அவர் எழுதியதாவது: ''இராணுவப் படைகளை சொலமன் தீவுகளுக்கு அனுப்பி, நிறுத்திவைப்பது தீவிரமான மடமையாகும். பசிபிக் பகுதி முழுவதும் அதற்கு விரோத உணர்வு பாராட்டும். ஆஸ்திரேலியாவில் வரி செலுத்தும் குடிமக்களிடம் அதை நியாயப்படுத்துவது மிகக்கடினமாகும். எத்தனை ஆண்டுகளுக்குத் தான் அப்படிப்பட்ட ஆக்கிரமிப்பில் இருக்க முடியும்? அங்கிருந்து வெளியேறுவதற்கான மூலோபாயம் எப்படி இருக்கவேண்டும்? உண்மையில் அத்தகைய செயல், ஆஸ்திரேலியாவினதோ, ஒரு பொதுநலவாய அமைப்பினதோ, பசிபிக் தீவுகள் அமைப்பினதோ என எப்படி காட்டப்பட்டாலும், எவ்வாறு முயலப்பட்டாலும், நடைமுறைக்கு ஒவ்வாது''.

இக்கொள்கை மாறுதல் அமெரிக்காவின் ஈராக்கிய ஆக்கிரமிப்பை அடுத்தே திடீரென்று வந்தது. ஜூலை 4-5ம் தேதி சிட்னியில் நடைபெற்ற உலக சோசலிச வலைத் தளமும் சோசலிச சமத்துவ கட்சியும் இணைந்து நடத்திய மாநாட்டின் ஒருமனதானக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் விளக்கியுள்ளதுபோல், ''புஷ் நிர்வாகத்தின் பொய், ஏமாற்றுச் செயல்களை மிக அதிக உரத்த குரலில் ஹோவார்ட் அரசாங்கம் ஆதரிப்பது தற்செயலான நிகழ்வு அல்ல. ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகவும், அல்கொய்தாவுடன் அதற்குத் தொடர்பு உண்டு என்று எட்டுக்கட்டிக் கூறப்பட்டுள்ள காரணங்களுக்கும் ஆஸ்திரேலியா போரில் சேர்ந்ததற்கும் தொடர்பு கிடையாது. புஷ்ஷின் வெளிப்படையான ''விரும்புவோர் கூட்டணியில்'' சேர்ந்தது, அமெரிக்க - ஆஸ்திரேலிய இராணுவக் கூட்டுறவு இரண்டுமே இதன் செல்வாக்கை பசிபிக் பகுதியில் உருவாக்குவதற்குக் கொடுக்கப்பட்ட விலைதான்''.

ஆஸ்திரேலியாவின் பொருளாதார, மூலோபாய நலன்கள்

ஆஸ்திரேலிய அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் அமெரிக்கத் தலைமையிலான ஈராக்கின் மீதான போர் ''வலிந்து தாக்கும்'' கோட்பாட்டை நியாயப்படுத்தியதுடன், சொலமன் தீவுகளில் இராணுவத் தலையீட்டை நியாயப்படுத்துவதற்கும், மிகவும் அடிப்படையாக பசிபிக் பகுதியில் ஆஸ்திரேலியக் கொள்கையில் நீண்டகாலப் போக்கிலான மாற்றத்தை குறிக்கும். சொலமன்லோ, பசிபிக் பகுதியிலோ பயங்கரவாதத் தொடர்பு பற்றி எந்தவிதமான சான்றும் இல்லை என்ற அளவில், ஹாவார்ட் இந்த ''சட்டம் காக்கத் தவறிய நாடுகள்'' (failed states) குற்றங்கள், பயங்கரவாதச் செயல்களுக்கான விளைநிலமாக அமைந்து வருங்காலத்தில் ஆஸ்திரேலியாவிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று வலியுறுத்துகிறார்.

இந்தப் புதிய சிந்தனைப்போக்கு ஈராக்கியப் போருக்குப்பின் சில மாதங்களில் அரசாங்க உதவி நிறுவனமான ஆஸ்திரேலிய மூலோபாய கொள்கை அமைப்பு(Australian Strategic Policy Institute-ASPI) தயாரித்த ஆவணம் ஒன்றில் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது. Our Failing Neighbour என்ற தலைப்பில் டெளனரால் ஜூன் 10 வெளியிடப்பட்ட இவ்வறிக்கை, சொலமன்ஸ் அரசாங்கத்திடமிருந்து முறையான அழைப்பு, பசிபிக் தீவுகள் அமைப்பின் ஆதரவு, செலவினங்களின் விவரங்கள், 10 ஆண்டுகள் ஆஸ்திரேலியா தொடர்ந்திருக்கத் தேவையானவை என்பன சொலமன் தீவுகளின் இராணுவத் தலையீட்டிற்கான முன் தேவைகள் என தெளிவாக்கியுள்ளன.

ஆஸ்திரேலிய மூலோபாய கொள்கை அமைப்பின் அறிக்கை பசிபிக் நாடுகள் மீது பரந்த அளவில் கொள்கை மாற்றத்திற்கான காரணத்தையும் எடுத்துக்கூறியுள்ளது. ''கடந்த காலங்களில், ஆஸ்திரேலிய அரசாங்கங்கள் அவற்றின் உள்நாட்டு விவகாரங்களில் நேரடியாகத் தொடர்புகொள்வதைத் தவிர்க்க அரும்பாடுபட்டன. அவர்களுடைய இறைமையைப் பாதிக்கும் வகையில் எதையும் செய்யாமலிருக்க அரிய முயற்சிகளையும் எடுத்துள்ளன.'' ஆனால் இப்பொழுது '' வழமையான கொள்கை'' அழுத்தத்திற்குள்ளாகியுள்ளதால் புதிய வழிமுறைகள் தொடர்பாக கருதப்படவேண்டியுள்ளதுடன், ''நவீன காலனித்துவம்'' என்ற பெயர் இழப்பு ஏற்பட்டாலும் கூட, புதிய வழிவகைகள் ஆராயப்பட வேண்டும். தேசிய இறைமை நசுக்கப்பட்டதை நியாயப்படுத்தும் பல முன்னோடியான நிகழ்ச்சிகளும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

''நாம் மட்டும் தான் இப்படிப்பட்ட பிரச்சினைகளுடன் போராடிக்கொண்டிருக்கவில்லை என்பதுதான் நல்ல செய்தி.... கடந்த 10 வருடங்களாக, உலகெங்கிலும் சர்வதேச சமூகங்கள் இந்தப் பிரச்சினைகளை மறு ஆய்வு செய்து சட்டத்தை பாதுகாக்க முடியாத, பாதுகாக்க முடியாமல் போய்க்கொண்டிருக்கின்ற நாடுகளால் ஏற்படும் சவால்களைச் சமாளிக்கத் திட்டமிட்டுள்ளன. மிகச்சமீபத்தில் ஈராக் போன்ற மோசமான நாடுகளால் ஏற்படக்கூடிய அபாயங்களை எவ்வாறு சமாளிப்பது என்ற முடிவுகூட ஓரளவு தெளிவாகியுள்ளது... மனிதாபிமானத் தலையீடு என்ற கோட்பாடு உருப்பெற்று, வளர்ச்சியுற்று, திருத்தப்பெற்ற பல சூழ்நிலைகளில் பொஸ்னியா, கொசவோவிலிருந்து சோமாலியா, ஹைற்றி, ருவண்டா, சீயாரா லியோன், கிழக்கு திமோர் என்று பல இடங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது'' என அவ்வறிக்கை குறிப்பிடுகின்றது.

இந்த அறிக்கை சொலமன் தீவுகளில் ஆஸ்திரேலியத் தலையீட்டின் உண்மையான பின்னணி மனிதாபிமான நலன்களோ, அச்சுறுத்தும் பயங்கரவாதமிருப்பதான குற்றச்சாட்டோ அல்ல என்பதை விளக்கியுள்ளது. ''ஆஸ்திரேலியாவின் சர்வதேசத் நிலைப்பாட்டின் ஒவ்வொரு விடயத்தையும் போலவே, நம்முடைய சொலமன் தீவுகள் மீதான கொள்கையும் நம்முடைய தேசிய நலன்களுக்கு உதவும் நோக்கத்துடன் திட்டமிடப்படவேண்டும்.... புதிய கொள்கை அணுகுமுறைகளை ஆராயும்போது, தேசிய நலன்களின் முக்கியத்துவத்திற்கு தொடர்பாக செலவினங்களையும் பல வேறு இழப்புக்களையும் கருத்தில்கொள்ளவேண்டும்`` என்று அது தெரிவிக்கிறது.

எமது தோல்வியுற்ற அயலவர்கள் (Our Failing Neighbour) ஐயத்திற்கிடமின்று சொலமன்ஸிலும், உட்குறிப்பாக தென்மேற்கு பசிபிக் முழுவதும் ஆஸ்திரேலிய நலன்களை ஆபத்திற்கு உள்ளாக்கும் அளவில் உள்ளது என்றும் கூறுகிறது.

முதலாவது பொருளாதார நலன்களாகும். வர்த்தகத்திற்கும் முதலீட்டிற்கும் பசிபிக் தீவுகளின் நாடுகள் பாரியளவானதாக இல்லாவிட்டாலும், ஆஸ்திரேலிய மூலதனம் அங்கு முக்கியமான பகுதியை கொண்டுள்ளது. அரசியலில் உறுதியற்ற தன்மை குறிப்பிட்ட வர்த்தக நலன்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அப்பகுதியில் ஆஸ்திரேலியப் பொருளாதார ஆதிக்கத்தை மதிப்புக்குறைப்பு செய்துவிடும். பசிபிக் அரசாங்கங்கள் நிதித்தேவை மற்றும் முதலீட்டிற்கும், உதவிக்கும் ஆசியாவின் பக்கம் செல்லும் நோக்கங்களால் கான்பெரா அதிகரித்தளவில் கவலை கொண்டுள்ளது.

ஆஸ்திரேலிய மூலோபாய கொள்கை அமைப்பின் அறிக்கை சொலமன் தீவுகளிலுள்ள கொந்தளிப்பு ''மிகப்பெரிய அளவில் இல்லாவிடினும் ஒரளவு பெறுமதிமிக்க ஆஸ்திரேலிய வர்த்தக, முதலீடு வாய்ப்புக்களை'' இழக்கச் செய்துகொண்டிருக்கிறது. 2000 ஆட்சி வீழ்ச்சிக்கு முன் - இரு நாடுகளிடையேயான வர்த்தக அளவு $A106 பில்லியன் ஆகும். 2000-01 இது பாதியாக $56ஆகக் குறைந்து, பின்னர் சற்று கூடியது. அதே காலத்தில் சொலமன் தீவுகளில் இயங்கிவந்த ஆஸ்திரேலிய நிறுவனங்கள் 100லிருந்து 30ஆகக் குறைந்துவிட்டன. ''இது ஆஸ்திரேலியாவிற்கு ஒரு குறிப்பிடத்தக்க பொருளாதார இழப்பு ஆகும்'' என்று அறிக்கை வலியுறுத்துகிறது.

இரண்டாவது மூலோபாய நலன்களாகும். இப்பகுதியிலிருந்து பொருளாதாரப் போட்டியை வெளியேற்றுவதில் மட்டும் ஆஸ்திரேலியாவின் கவனம்கொண்டிருக்கவில்லை, மாறாக இராணுவரீதியிலான போட்டியாளர்களும் அகற்றப்படவேண்டும். ''கண்டத்தைச் சுற்றிலுமுள்ள தீவுகளின் உறுதித்தன்மையும் பாதுகாப்பும் நம்முடைய அக்கறையாகும். ஆஸ்திரேலியப் பாதுகாப்பு நலன்களுக்கு அது நீண்டகாலப்போக்கானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுதான் நம்முடைய முதலாவது முக்கிய மூலோபாய அரசியல் நோக்கமாகும். இது 1887ல் ஆல்ப்ரட் டெகின் (Alfred Deakin) வானுவாடுவில் (Vanuatu) பிரெஞ்சுத் தலையீட்டைப் பற்றிய ஆஸ்திரேலியாவின் கவலைகளை இலண்டனுக்குத் தெரிவித்ததோடு அவர்களை கேட்டு உணரவும் வைத்த நாளிலிருந்து, அதே அடிப்படையைத்தான் கொண்டுள்ளது'' என்று அறிக்கை விளக்குகிறது.

பசிபிக் நாடுகளுடைய சம்பிரதாயமான சுதந்திரத்தின் பின்னர், கான்பெராவில் தொடர்ந்துவந்த அரசாங்கங்கள், தென்மேற்குப் பசிபிக்கை ஆஸ்திரேலியாவின் விரிவாக்கப்பட்ட இராணுவச் செல்வாக்கு மண்டலங்களாகவே பாதுகாத்துவந்தன. கூட்டுச் செயல்பாடுகள், பயிற்சித்திட்டங்கள், உளவுத்துறை, இராணுவ தளவாடங்கள் அளிப்பு என்று பல வகையில் ஆஸ்திரேலிய இராணுவம் இப்பகுதியோடு நெருங்கிய தொடர்பையே கொண்டுவந்துள்ளது. அரசியல் உறுதியற்ற தன்மை இந்நாடுகளின் அரசு இயந்திரத்தையே இல்லாதொழிக்க முயல்கையில், பல ஆண்டுகளாகக் கவனித்து வளர்க்கப்பட்ட இந்த உறவுகள் அச்சுறுத்தலுக்குள்ளாகின்றன.

சொலமன் தீவுகள் தெளிவான உதாரணத்தை அளிக்கிறது. 1990களின் கடைசிப்பகுதியில் இன மோதல்கள் தீவிரமடைந்த அளவில் போலீஸ் படை நடைமுறையில் இல்லாதுபோயிற்று. அதனுடைய உறுப்பினர்கள், ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு போராளிகளுடன் சேர்ந்துவிட்டனர். 2000த்தில் ஏற்பட்ட ரெளன்வில்லே உடன்பாட்டின்பின் நிலைமை மேலெழுந்தவாரியாகத்தான் மாறியது. அரசாங்கமும் அதிக அளவிலான Malaitan பொலிசும் தலைநகரான கொனைராவை தமது பொறுப்பில் வைத்திருக்கையில், போட்டிப் போராளிகள் முக்கிய தீவான குவடல்கானல் (Guadalcanal) உட்பட மற்றும் பல பகுதிகளைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர்.

ஆஸ்திரேலிய மூலோபாய கொள்கை அமைப்பின் அறிக்கை அப்படிப்பட்ட அதிகார வெற்றிடம் ஆஸ்திரேலிய மூலோபாய ஏகபோக உரிமைக்கு நேரடி அச்சுறுத்தல் என்று வாதிடுகிறது. ''நம்முடைய அண்டை நாடுகள் விடுதலை அடைந்துவிட்டதால், நாம் அவர்களுடன் உறுதியான உணர்வையும் மற்றும் பொதுவான மூலோபாய நலன்களையும் அபிவிருத்திசெய்து பாதுகாக்க திட்டமிட்டுள்ளோம். அதற்காக அவர்கள் விரும்பத்தகாத சக்திகள் நம்முடைய உடுனடிப் பகுதியில் நுழையாமல் பாதுகாப்பர்... சொலமன் தீவுகளின் அரசாங்கம் திவால் ஆகிவிட்டது என்றால், அரசாங்க, மற்றும் அரசாங்கமற்ற சக்திகளின் வெளிச்செல்வாக்கிற்கு தாக்கத்திற்கு உட்பட்டுவிடும் என்ற ஆபத்து உள்ளது.... சொலமன் தீவுகளில் எந்த சக்தி செயலாற்ற விரும்பினாலும் எளிதான விலைக்கு உடனடி ஒப்புதலை அது பெறமுடியும். சொலமன் தீவுகளில் ஆஸ்திரேலியா உறுதியாக தலையிடவில்லையானால், அந்த இடத்தை மற்ற சக்திகள் நிரப்பிவிடும்'' என குறிப்பிட்டது.

ஆஸ்திரேலிய ''பெரிய, பிரத்தியேகமான பங்கை'' சொலமன் தீவுகளில் கொண்டுள்ளது என்பதை இந்த அறிக்கை வலியுறுத்துகிறது. ''உலகின் பல பகுதிகளில் நமக்குப் பாதுகாப்பு அக்கறைகள் உண்டு. ஆனால் தென்பசிபிக்கில் நம்முடைய நலன்கள் மட்டுமே உள்ளன. இந்தச் சிறிய தீவுகளுக்கு உதவுவதில் நாம் தெற்கு பசிபிக் பகுதியின் முனைப்புடன் இருக்கவேண்டும். நாம் அவ்வாறு செய்யவில்லையென்றால், நிலைமையைச் சாதகமாக்கிக்கொள்ள மற்றவர்கள், நம் நலனுக்குப் புறம்பாக நுழைந்துவிடுவர்.''

பரந்த அளவிலான மூலோபாய பிரச்சனைகள் இதில் உள்ளடங்கியுள்ளது. ஹோவார்ட் அரசாங்கம் வாஷிங்டனின் துணை பொலிஸைப்போல நடந்துகொள்ள விரும்பினால் செயல்கள் அவ்வாறே விரைவில் முடிக்கப்படவேண்டும். அல்லது ஆஸ்திரேலிய மூலோபாய கொள்கை அமைப்பு குறிப்பாகத் தெரிவித்துள்ளதுபோல, ''ஒரு சூட்சமமான, முக்கியமான அடிப்படையில் தெற்குபசிபிக் பகுதியில் அரசாங்கங்களின் செயலற்ற தன்மை என்பது ஆஸ்திரேலியா மீது மோசமானமுறையில் பிரதிபலிக்கின்றது. நம்முடைய முக்கிய நட்பு நாடுகளும், மற்றைய நாடுகளும், உலகின் இப்பகுதியில் ஆஸ்திரேலியா முக்கிய பங்கைவகிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கின்றன. எவ்வாறு அப்பணியை நாம் செய்கிறோம் என்பதை வைத்தும், நம்முடைய பொறுப்பை எவ்வாறு கொள்கிறோம் என்பதையும் எடையிட்டுப் பார்க்கின்றன. அமெரிக்காவுடன் பரந்த அளவிலான உலகில் ஆஸ்திரேலியா நிற்கின்றது. இதனால் ஆஸ்திரேலியாவின் நிலைமை மிக முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.''

பரந்த அளவிலான பேரவாக்கள்

எமது தோல்வியுற்ற அயலவர்கள் சொலமன் தீவுகளைப் பொறுத்தவரையில் குறிப்பிட்ட திட்டத்தை விளக்குகையில், ஏனைய பசிபிக் பகுதி மீதான தாக்கங்கள் பிழையாக விளங்கமுடியாதவை. ''நம்முடை அண்டை நாடுகளிலேயே சொலமன் தீவுகள் தாம் மிகுந்த சோதனைகளுக்கு உட்பட்டுள்ளது என்றாலும், பெரும்பாலான தென்பசிபிக் நாடுகள் அரசியல், பொருளாதாரத் உயிர்வாழ்வு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளன. அவற்றில் சில சொலமன் தீவுகளின் வழிக்கு சென்றுவிடக்கூடும். சொலமன் தீவுகளைப் பற்றி நாம் எடுக்கும் முடிவு, இப்பகுதியில் எமக்கு நெருக்கமாகவுள்ள மற்றைய தீவு நாடுகளில் உள்ள அரசியல் உறுதித்தன்மை பற்றிய ஆஸ்திரேலியாவின் பொதுவான அணுகுமுறையை ஒழுங்கமைக்கும்'' என்று அறிக்கை வலியுறுத்துகிறது.

இதன்படி, சொலமன் நடவடிக்கை அறிவிப்பைச் செய்யும்பொழுதே, ஆஸ்திரேலிய வெளிநாட்டு மந்திரி டெளனர் அரசாங்கத்தின் புதிய கொள்கையையும் தெளிவாக்கிப் பேசினார். '' எமது பார்வையில் தேசிய இறைமை முழுமையானது அன்று'' என அவர் அறிவித்தார். ஜூலை மாதக் கடைசியில் ஹோவார்ட் அதற்குக் கூடுதலான விரிவாக்கம் கொடுக்கும் முறையில், ''பசிபிக் பகுதியில் ஒன்று திரட்டப்பட்ட பகுதி ஆட்சி முறை'' என்று அழைத்து ஒரு பரந்த திட்டத்தின் வகையைக் கோடிட்டுக்காட்டியுள்ளார். அவருடைய கருத்தின்படி பல பசிபிக் நாடுகளும் மிகச்சிறிய அளவில் இருப்பதால் உயிர்வாழ முடியாதவையாக இருக்கின்றன. 1,00,000 மக்கள் கொண்ட ஒரு சிறுநாடு ஓர் அரசாங்கத்தின் உயர்தர ஆயுத வகைகள் அனைத்தையும் கொண்டிருப்பது இயலாத காரியமாகும்'' என்று அவர் கூறியுள்ளார்.

ஹோவார்டின் திட்ட விளக்கங்கள் முழுமையாகத் தெரிவிக்கப்படவில்லை என்றாலும் பசிபிக் பகுதி தீவு நாடுகளின் இறைமையை அது பெருமளவில் மீறும் என்பதில் ஐயமில்லை. ''ஒன்றுதிரட்டப்பட்டது'' எப்படியிருப்பினும் கான்பெராவின் உத்தரவுப்படிதான் அமையும். ஹாவர்ட், சிறு நாடுகள் தங்கள் விமான, போலீஸ் பிரிவுகளை ''திரட்டுதல்'' முறையில் கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார். ஓக்லாந்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பசிபிக் தீவுகள் அமைப்புக் கூட்டத்தில் இத்திட்டத்திற்குக் கொள்கையளவிலான ஒப்புதலையும் அவர் எதிர்பார்த்து அழைப்பு விடுத்துள்ளார்.

பசிபிக் நாடுகளைப் ஒரு பொருளாதார ஒன்றிணைப்பாக இணைத்துச் செயலாற்றும் பரந்த திட்டமும் பரிசீலனைக்கு விடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய மூலோபாய கொள்கை அமைப்பின் இயக்குனரான ஹூக் வைற் (Hugh White), புல்லட்டீன் இதழிற்கு ''மிகக்கடினமான கேள்வி என்னவென்றால்.... இன்னும் 100 ஆண்டுகளில் இந்தத் தீவு ஒவ்வொன்றும் தனிப்பட்ட சுதந்திரமான இறைமையைச் செலுத்தும் நாடாகச் செயல்படும் என்பதை நாம் மிகுந்த அக்கறையுடன் நம்புகின்றோமா என்பதுதான்'' என்றார். ஐரோப்பிய ஒன்றிணைப்பை பற்றிச் சுட்டிக்காட்டி, பசிபிக் தங்கள் இறைமையின் ஒரு பகுதியைத் திரட்டி, எல்லைகள் தாண்டி சுதந்திரமாகச் செல்லுதல், ஒரே நாணயமுறை, போன்ற செயல்முறைகளை தங்கள் அரசாங்க நடைமுறைகளில் கொண்டுவர முயற்சிக்கலாம்.'' என்றார்.

பிராந்திய ஏகாதிபத்திய அரசுகளான ஆஸ்திரேலியா, அதன் இளைய பங்காளி நியூசிலாந்தின், ஆதிக்கத்திற்குட்பட்ட இப்படிப்பட்ட ஒரு ஒன்றிணைப்பானது பசிபிக் பகுதியில் பெருமளவிலான பொருளாதார மறு சீரமைப்பிற்கும், உள்ளூர் மக்களைச் சுரண்டுதல் தீவிரமாக்கப்பட்டு கூடுதலான, நேரடியான அடக்குமுறை வகையிலான நவீன காலனித்துவ ஆட்சியை அப்பகுதி முழுவதும் கொண்டுவரும்.

உலக சோசலிச வலைத் தளமும் சோசலிச சமத்துவ கட்சியும் சொலமன் தீவு, மற்றும் பசிபிக் பகுதி மக்கள் அனைவருக்கும் ''நண்பனுக்கு உதவு'' (Operation Helpem Fren) என்ற நடைமுறையை எதிர்க்கும் முழு உரிமை உண்டு என்றும், ஆஸ்திரேலிய அரசாங்கம் அப்பகுதியை தனது கட்டுப்பாட்டின் கீழ்கொண்டுவரும் முயற்சியை எதிர்க்கும் உரிமை உண்டு என்றும் உறுதியாகக் கூறுகின்றன. இப்படியான அரசியல் எதிர்ப்பானது, 19ம் நூற்றாண்டில் காலனித்துவ அரசுகள் தன்னிச்சையாக ஏற்படுத்திய காலத்திற்கு ஒவ்வாத பழைமையான பிரிவுகளை பாதுகாப்பதால் முடியாது. பசிபிக் பகுதி தொழிலாள வர்க்கம் உட்படுத்தப்பட்டிருக்கும் ஆழமடைந்துவரும் வறுமை வட்டம், வன்முறை, ஒடுக்குமுறை போன்றவற்றிலிருந்து விடுபெற ஒரேயொரு முற்போக்கான தீர்வு, அவர்கள் தங்கள் போராட்டங்களை நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஆசிய மற்றும் சர்வதேசரீதியான தொழிலாள வர்க்கத்துடன் ஒன்றிணைத்து, முதலாளித்துவ இலாப முறைக்கு முற்றுப்புள்ளிவைத்து, உண்மையான சமூக சமத்துவ அடிப்படையில் சமூகங்களை உருவாக்குவதாகும்.

Top of page