World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

International clamour for revaluation of the Chinese yuan

சீன யுவான் மறு மதிப்பீட்டிற்கு சர்வதேச அளவில் ஆரவாரமான கூக்குரல்

By John Chan
18 August 2003

Use this version to print | Send this link by email | Email the author

கடந்த சில மாதங்களாக, சீன நாணயமான யுவான் மறுமதிப்பீடு செய்யப்படவேண்டுமென வளர்ந்துவரும் சர்வதேசப் பிரச்சாரம், சீனாவை இலக்காகக் கொண்டு இருந்து வருகின்றது. 1994ம் ஆண்டிலிருந்து, அமெரிக்க டாலருக்கு எதிராகக் குறைந்த அளவிலேயே யுவான் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது அல்லது "படி இறக்கம்" செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டாலர், யூரோ மற்றும் பல நாணய முறைகளுக்கு எதிராக மதிப்புக் குறைந்தவுடன், அதையே யுவானும் பின்பற்றிய அளவில், இன்னும் கூடுதலான அளவு சீன ஏற்றுமதி நல்ல போட்டித் தன்மையைப் பெற்றுள்ளது, குறிப்பாக ஐரோப்பிய, ஜப்பானிய சந்தைகளில் நல்ல போட்டித் தன்மையைப் பெற்றுள்ளது.

இதன் விளைவாக, ஐரோப்பா, ஜப்பான், அமெரிக்க உற்பத்தித்துறை ஆகியவற்றிலிருந்து கூட்டாக யுவானின் மதிப்பு 30லிருந்து 40 சதவிகிதம் மறுமதிப்பிடப்படவேண்டும் என்ற கூக்குரல் எழுப்பப்பட்டுள்ளது. ஜப்பானின் தொடர்ந்த மந்த நிலையிலிருந்து, ஐரோப்பிய அமெரிக்க உற்பத்தியாளர் வரை எதிர்கொள்ளும் பல பொருளாதாரத் தாக்குதல்களுக்குச் சீனாவின் ``குறைத்து மதிப்பிடப்பட்டுள்ள நாணயம்`` மற்றும் மலிவான பொருட்கள்தான் காரணம் என்று இது பலியாடாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க தேசிய உற்பத்தியாளர்கள் சங்கத்தின் துணைத்தலைவரான பிராங்ளின் ஜே.வார்கோ, மே மாதம் நடந்த பாராளுமன்ற விசாரணையில் குறை கூறியதாவது: ``நாம் சீனாவை, அதனுடைய நாணயமான யுவானை சூழ்ச்சியுடன் கையாளும் உத்தியில் ஈடுபட்டுள்ளதை தடுக்க வலியுறுத்தி யுவான் டாலர் மாற்று விகிதம் சந்தைமுறையில் நிர்ணயிக்கப்பட, வற்புறுத்தவேண்டும்.`` கடந்த வாரம் அமெரிக்க ஜவுளி நிறுவனங்களின் நிர்வாகிகள் கூட்டத்தில், சீனச் சரக்குகளுக்கு எதிராக கூடுதல் பாதுகாப்பு தேவை என வற்புறுத்தப்பட்டது. ``இந்த இறக்குமதி வேகம் தொடருமேயானால், மிகக்குறுகிய காலத்தில் சீனா முழுச்சந்தையின் 70 சதவிகிதப் பங்கைக் கொண்டுவிடும். அதாவது, கிட்டத்தட்ட கூடுதலாய் 630, 000 வேலைகள் இழப்பு ஏற்படக்கூடும் என்று பொருளாகும்`` என ஒரு தலைமை நிர்வாகி கூறினார்.

அமெரிக்க அரசியல் வாதிகளும் உடனேயே சளைக்காமல் கும்பலில் சேர்ந்து கொண்டனர். ஜனாதிபதித் தேர்தல் மாநாட்டில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் செனட்டர் ஜோசப் லீபர்மன் புஷ் நிர்வாகத்தைப் பற்றி குறைகூறி அறிவித்தார்: ``புஷ்ஷினுடைய தடையற்ற வர்த்தகம் என்றால் `எனக்கு அதைப் பற்றி எனக்கு அக்கறையில்லை` என்ற பொருள்போலும்.`` ஜூலை 31ம் தேதி 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் புஷ்ஷிற்கு எழுதிய கடிதத்தில் யுவான் "நியாயமற்ற முறையில்" 15லிருந்து 40 சதவிகிதம் வரை குறை மதிப்பு செய்யப்பட்டதால் அமெரிக்காவில் வேலைகள் இழப்பு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளனர். குடியரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரான டொன் மன்ஜில்லொ தேர்தலில் கடும் பின்விளைவுகள் நேரும் என்று புஷ்ஷை எச்சரித்தார்: ``வேலைகள் பாதுகாக்கப்படவில்லை என்றால், அடுத்த ஆண்டு வாக்காளர்கள் தங்கள் கோபத்தைத் தேர்தல்களில் வெளிப்படுத்துவர்.``

ஜப்பானிலும் கூக்குரல்கள் தொடர்ந்து எழுப்பப்படுகின்றன. ஜப்பானின் நிதியமைச்சர் மாசஜிரோ ஷியோகவா, ஜப்பானுக்குப் ``பணத் தளர்ச்சியை" சீனா ஏற்றுமதி செய்கிறது என பலமுறை குற்றஞ்சாட்டியுள்ளவர், ஆகஸ்ட் 7ம் தேதி மனிலாவில் நடந்த நிதியமைச்சர்கள் கூட்டத்தில் தன்னுடைய அழுத்தமான பார்வையை மீண்டும் கூறியுள்ளார். ``செயற்கையான உயர்மதிப்புடையதென நாங்கள் கூறும் யுவான் ஜப்பானிய நலன்களுக்கும் பயன்படாது என்பது எங்கள் கருத்து`` என்று அவர் கூறினார். மிகப்பெரிய அளவான 2.9 டிரில்லியன் யென்னைக் கொடுத்து அமெரிக்க டாலர்களை வாங்கித் தங்கள் நாணயத்தின் மதிப்பை நிறுத்திக்கொண்டுள்ள டோக்கியோ அம்முயற்சிகள் யுவானின் நிலையினால் உள்வெட்டிற்கு ஆளாகியுள்ளதைக் காண்கிறது.

ஐரோப்பாவிலும் இதேபோன்ற கோரிக்கைகள் தோன்றியுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையாளர் ரோமனா பிரோடி South China Morning Postக்குக் கடந்த மாதம் கொடுத்த பேட்டியில், டாலருக்குப் பதிலாக யூரோவை அயல்நாட்டுச் செலாவணி மாற்று இருப்பாக சீனா கொள்ளாவிடில் ``ஐரோப்பாவில் பாதுகாப்பு அலை தோன்றக்கூடுமோ என்ற கவலை`` தனக்கிருப்பதாகத் தெரிவித்துள்ளார். டாலரின் மதிப்பு குறைந்துவரும் அளவில் சீனா தன்னுடைய யுவானை குறிப்பிட்ட அளவிற்கு மேல் குறையாமல் பார்த்துக்கொள்ள நடவடிக்கைகள் எடுக்காததால், டாலர் தொடர்புடைய பத்திரங்களை, டாலர் இருப்பில் பெரிய அளவில் வாங்கும் நிலை தோன்றும்.

உலகின் பெரிய பொருளாதாரங்கள், எவ்வாறு மலிவான விலையில் உழைப்பு கிடைப்பதால் சீனாவிடம் பெரும் அளவு சார்ந்துள்ளன என்பதையும், அமெரிக்காவைப் பொறுத்தவரையில் தன்னுடைய மாபெரும் வணிக, வரவு செலவுப் பற்றாக்குறையைச் சமாளிக்க உதவும் நிதி ஆதாரமாகவும் சீனா உள்ளது என்பது யுவானைப் பற்றிய விவாதங்கள் உயர்த்திக் காட்டுகின்றன. ஐரோப்பா, ஜப்பான், அமெரிக்கா இவற்றின் பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்ப்பது இயலாது என்பது ஒருபுறமிருக்க, யுவான் மறு மதிப்பீடு செய்யப்பட்டால் உறுதியற்ற தன்மைக்கு வழிகோலும், குறிப்பாக அமெரிக்காவில் என்பதும் புலனாகிறது.

கடந்த மாதம் சீனாவில் மேற்கொண்ட பயணத்தின்போது, மோர்கன் ஸ்டான்லியின் தலைமைப் பொருளாதார நிபுணர் ஸ்டீபன் ரோச், வர்ணனையாளர்களும் அரசியல்வாதிகளும் ``யார் மீது குற்றம்`` எனும் தவறான விளையாட்டை விளையாடிக்கொண்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார். மலிவான "சீன" ஏற்றுமதிகளின் பெரும்பகுதி உண்மையில் சீனாவை அடிப்படையாகக் கொண்ட வெளிநாட்டவருக்குச் சொந்தமான நிறுவனங்களிலிருந்து உற்பத்தியாகின்றன என விளக்கியுள்ளார்.

``புதிதாக தோன்றும் சீன நிறுவனங்கள் உலகச்சந்தையின் விளைவைப்பற்றிக் கவலைப்படாது கைப்பற்றி வருவதாகத் தவறான கருத்தை உலகம் கொண்டுள்ளது. உண்மையில் சீனாவின் சக்திவாய்ந்த ஏற்றுமதிக் கருவி அமெரிக்கா, ஐரோப்பிய, ஜப்பானிய முத்திரைகளைத்தான் தன் தன்மையில் பதித்துக்கொண்டு உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளிலும் இந்த நிலைதான் இருந்திருக்கிறது`` என்று அவர் மேலும் கூறினார்.

``1994லிருந்து இந்த ஆண்டின் நடுப்பகுதி வரை, சீனாவின் ஏற்றுமதி $ US 121.0 பில்லியனிலிருந்து $ US 365.4 பில்லியன், மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. ஆனால் 'அந்நிய முதலீட்டு நிறுவனங்கள்' -சீன மானியம்பெறும் பூகோள பன்னாட்டுக் கம்பெனிகள், கூட்டு உலக அளவுத் தொழில் பங்காளிகளாகவும் இணைந்த கூட்டு நிறுவனங்கள்- அக்காலக்கட்டத்தில் சீனாவின் மொத்த ஏற்றுமதியில் 65 சதவிகிதம் வளர்வீத அதிகரிப்பை பெருக்கியிருந்தன.``

யுவானை மறுமதிப்பீடு செய்யும் முயற்சிகள் திரும்பத் தாக்கும் தன்மையுடையவை என்று ரோக் விளக்கினார். ``தன்னுடைய நாணய ஆட்சியை மாற்றுமாறு சீனாவை அழுத்தத்திற்கு உட்படுத்தினால், தொழில் உலகம் மாறுபட்ட நோக்கங்களில் செயல்படும் -தன்னுடைய முயற்சிகளின் பலன்களையே வீணடிக்கும் நிலை ஏற்படும். சீனா அச்சுறுத்தல் என்று கூறப்படுவது இந்த முக்கிய கருத்தை அடியோடு புறக்கணிக்கிறது: சீன ஏற்றுமதி ஆற்றல் ``அவர்களிடத்தில்`` என்பதைவிட ``நம்மிடம்தான்`` என்பதே தேடிக் காணக்கூடியதாகும் என்று அவர் கூறினார்.

சீனாவில் அமெரிக்க நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் பெறும் லாபங்கள் புஷ் நிர்வாகம் சற்று மெதுவான நடையில் அதைப் பற்றி அணுகுவது ஒரு காரணமாயிருக்கலாம். அமெரிக்க கருவூலச் செயலர் ஜோன் ஸ்நோ செனட்டின் வங்கிக் குழு ஒன்றிற்கு ஜூலை 31ம் தேதி கூறுகையில், யுவான் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதா என்பது பற்றி அவருக்கு "உறுதியான கருத்துக்கள் கிடையாது" எனக் குறிப்பிட்டார். ஆயினும்கூட வாஷிங்டன் "அமைதியான ராஜிய முறையைக்" கையாண்டு யுவான் டாலருக்கு எதிராகத் தன் மதிப்பை அதிகப்படுத்தும் முயற்சியை மேற்கொள்ளும் என்று சுட்டிக்காட்டினார்.

சீனப் பணத்தில் அமெரிக்கா சார்ந்திருத்தல்

வாஷிங்டனின் அமைதியான அணுகுமுறைக்கு வேறு ஒரு அடிப்படையான காரணம் உள்ளது; எந்த விரைவான யுவான் மதிப்பு மாற்றமும் உறுதியற்ற நிலையை ஏற்படுத்தும் நிலைத் திறனுடன் சீன மூலதனம் அமெரிக்காவிற்குள் வருவதைத் தாக்கக்கூடும்; அதையொட்டி உறுதியற்ற நிலைத்திறன் ஏற்பட்டுவிடும். லண்டனிலிருந்து வரும் Economist ஜூலை 12ல் குறிப்பிட்டுள்ளதுபோல், ``சீனாவின் மீது தாக்குதல்களை அமெரிக்கா நடத்தாதற்கு மற்றொரு காரணம் சீனாவும், மற்ற ஆசிய நாடுகளும் தங்கள் இருப்புக்களைப் பெருமளவு அமெரிக்க அரசாங்க பத்திரங்களில் கொண்டுள்ளன. டாலர் உடைமைகளுக்கு ஆசியர்கள் ஆர்வத்தை இழந்துவிட்டால் Greenback இன்னும் வேகமாகச் சரியும், அமெரிக்கப் பத்திரங்கள் கூடுதலான வருமானங்களை, நன்மைகளை அளிக்கும்.``

8.276 லிருந்து 8.28 அளவிற்குள் -குறுகிய சிறிய அளவு- அமெரிக்க டாலருக்கு எதிராக யுவானைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, சீனாவின் அமெரிக்காவிற்கெதிரான கணிசமான வணிக இலாபங்களைச் சரி செய்ய, சீனாவின் மத்திய மக்கள் வங்கி மாபெரும் அளவில் டாலர் உடைமைகளைக் கடந்த பத்து ஆண்டுகளில் கட்டாயமாக வாங்கவேண்டியிருந்தது. கடந்த ஆண்டு இந்த முயற்சி குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாயிற்று. இதன் விளைவாக ஜப்பானுக்கு அடுத்தபடியாக சீனாதான் அமெரிக்கக் கருவூலப்பத்திரங்களைக் கொண்டுள்ள நாடாக உள்ளது; கடந்த ஆண்டு 82 பில்லியன் டாலர்களிலிருந்து 119 பில்லியன் டாலர்கள் அதிகரித்தது.

பிரிட்டனிலிருந்து வெளிவரும் Financial Times ஜூலை 31 பதிப்பில், "மத்திய வங்கி சீனாவுடன் அபாயகரமான விளையாட்டில் உள்ளது" (The Fed is in a dangerous game with China) என்ற தலைப்பில் வந்த கட்டுரையொன்றில், பெய்ஜிங் அமெரிக்க மத்திய ரிசேர்வ் வங்கிக்கும் அதன் கொள்கைகளுக்கும் தூணாக உள்ளது என்று வர்ணித்துள்ளது. ``மத்திய வங்கியின் பணம் திரட்டும் முயற்சியில் சீனா அமைதியான, ஆனால் அதிக ஊக்கத்துடன் செயல்படும் பங்காளியாக உள்ளது. சீனா விருப்பத்துடனும் நிறைந்த அளவிலும் ஆதரவு கொடுத்து அமெரிக்காவை காப்பாற்றவில்லையென்றால், அமெரிக்கக் கருவூலப் பத்திரங்கள் தற்போதைய மட்டத்திற்கு இலாபத்தை கொடுத்திருக்க முடியாது" என்றது அது.

வேறுவிதமாகக் கூறினால், அடிப்படைச் சமுதாயப் பொருளாதார, அரசியல் சிக்கல்களில் மூழ்கியிருக்கும் சீன நாட்டிலிருந்துதான் அதிக அளவு மூலதன வரவை, உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்கா நம்பியுள்ளது. அமெரிக்க மத்திய ரிசேர்வ் தலைவர் அலன் க்ரீன்ஸ்பான் போன மாதம், எப்பொழுதும்போல் குறைத்து மதிப்பிட்ட அளவில் கூறினார்: யுவானின் தற்பொழுதைய அளவு சீன அரசாங்கத்தை "மிகப்பெரிய அளவில் டாலர் தொடர்புடைய உடைமைகளை வாங்க வைத்துள்ளது.`` இத்தகைய நிலை காலவரையின்றி நீடிக்கப்படக்கூடாது என்றும், அவ்வாறு ஆனால் சீனாவின் பண முறையில் உறுதியற்ற தன்மையை ஏற்படுத்திவிடும் என்றும் கூறினார்.

சீனப் பொருளாதாரத்திற்குப் பல சிக்கல்கள் இருப்பது க்ரீன்ஸ்பானுக்கு நன்றாகவே தெரியும். கடந்த பத்து ஆண்டுகளில் மிகப்பெரிய பொருளாதாரச் சீரமைப்பு முயற்சிகளும், நாணய விகிதத்தை தக்கவைப்பதற்கான செலவினங்களோடு சேர்ந்து 1.8 டிரில்லியன் டாலர்கள் லாபம் சாரா வங்கிக் கடன்களை ஏற்படுத்தியுள்ளன. இது சீனாவின் உள்நாட்டு மொத்த உற்பத்திக்கு (GDP) 140 சதவிகிதம் சமமானதாகும். பெரும்பாலான தீர்க்கப்படாத கடன்கள் நாட்டின் 4 பெரிய வங்கிகளால் கொடுக்கப்பட்டவை, இவையே திவால் நிலையில்தான் உள்ளன.

சீனாவின் அயல்நாட்டு செலாவணி இருப்புக்கள் கடந்த ஆண்டு 286 பில்லியன் டாலர்களிலிருந்து அதிகபட்சமாக 340 பில்லியன் டாலர்களாக ஜூன் மாதத்தில் உயர்ந்துள்ளது மற்றொரு பிரச்சினையாகும். இது யுவானில் சர்வதேச முதலீட்டாளர்களால் ஊக முறை ஈடுபாட்டினால், ஓரளவு ஏற்பட்ட விளைவாகும்; இவர்கள் சீனப் பங்குச் சந்தையில் யுவான் மறுமதிப்பீட்டில் பணம் சம்பாதிப்பதற்காக பங்குகளை ரொக்கத்திற்கு வாங்குபவர்கள். சீன முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் இந்த அதிகப் பணம் சீனாவின் பெருநகரங்களில் சொத்துச் சந்தையினை சென்றடைந்துள்ளது; அது ஊகவாணிப குமிழியை உருவாக்கியுள்ளது, உறுதியற்ற தன்மையின் ஆபத்தை அதிகரித்துள்ளது.

யுவானின் மதிப்பை மறுபரிசீலனை செய்யும் அழுத்தத்தை சீன அதிகாரிகள் தடுக்கும் முயற்சியில் உள்ள காரணம், அதிக மாற்றுவிகிதம் அயல் மூலதனத்தையும், ஏற்றுமதியையும் பாதிக்கும் என்பதால்தான். சீனாவின் உயர்மட்ட வேலையின்மை மாபெரும் சமூக கொந்தளிப்புக்கு வழிவகுக்கும் என்பதால், எந்த பொருளாதார மோதலும் அரசாங்கத்தின் மீது அரசியலளவில் திருப்பித் தாக்கும். அதே நேரம், மூலதன வாய்ப்பிற்கு இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்தி, வாஷிங்டனுடன் நல்லுறவையும் கொள்ள பெய்ஜிங் தன்னால் முடிந்தவரை பாடுபடுகிறது.

Asian Wall Street Journalல் ஜூலை 31ம் தேதித் தலையங்கம், இந்த உறவைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளது. ``சீனாவினுடைய நாணயமுறை டாலரோடு பிணைக்கப்பட்ட தன்மையையும் மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் தங்களுடைய குறைந்த செலவின உற்பத்திக்கு அதைத் தான் தளமாகக் கொண்டுள்ளதையும் கருதினால், அமெரிக்காவின் பொருளாதாரக் காலனிதான் சீனா என்று கூடச் சொல்லலாம். பெய்ஜிங் ஆட்சி எந்த அளவு தேசியப் போக்கு உடையது என்பதை அறியும்போது இது வினோதமாகப்படலாம். ஆனால் அரசாங்கத்தின் நடைமுறைச் செயல்களைப் பார்க்கும்போது, போல் பிரேமர் (பாக்தாத்தில் அமெரிக்காவின் நிர்வாகி) சீனப் பொறுப்பில், ஹூ ஜின்டாவோவிற்கு (சீன ஜனாதிபதி) பதிலாக இருந்தால், நாட்டின் பொருளாதாரத்தை அமெரிக்க, மேற்கத்திய நாடுகளின் நன்மைகளுக்காகச் சுரண்ட விட்டுவிட்டார் எனக் குற்றஞ் சாட்டப்படுவார்."

பெய்ஜிங்கை அதன் நாணய மாற்றுமதிப்பீட்டைச் செய்ய அழுத்தம் கொடுப்பதில் உள்ள ஆபத்துக்களைக் குறித்து ஆசிரியர் உரை விளக்குகிறது. ``(சீனப் பொருளாதாரத்தில்) திடீரெனச் சரிவு ஏற்பட்டால் அமெரிக்காவையும் அது பாதிக்கும், ஏனென்றால் அமெரிக்கக் கருவூலப்பத்திரங்கள் சீர்குலையும், சமுதாய அமைதியின்மை அமெரிக்க உடைமை ஆலைகளைத் தாக்கும், அமெரிக்கப் பொருட்களுக்கான சந்தை மறைந்துபோகும். சுருங்கக்கூறின், அமெரிக்கர்கள் தாங்கள் நினைக்கும் காரணத்திற்கு அல்லாமல், வேறொன்றிற்காக சீனா பற்றி அக்கறை செலுத்தவேண்டும்."

இவையனைத்தும் சீனா, அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் மேலும் நிதி உறுதியற்ற தன்மைக்கு துளையிடும்.

Top of page