World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Saddam Hussein's capture will not resolve Iraqi quagmire

சதாம் ஹூசைன் பிடிக்கப்பட்டமை ஈராக்கின் புதைசேற்றுச் சிக்கலைத் தீர்த்து வைக்காது

By the Editorial Board
15 December 2003

Back to screen version

ஈராக்கின் முன்னாள் சர்வாதிகாரி சதாம் ஹூசைன் மத்திய ஈராக் நகரான டிக்ரிட்டுக்கு வெளியில் உள்ள பண்ணை வீட்டு பதுங்கு குழியில் மறைந்திருந்த போது பிடிக்கப்பட்டிருப்பது தொடர்பாக புஷ் நிர்வாகமும், ஈராக்கில் உள்ள அமெரிக்க ஆக்கிரமிப்பு நிர்வாகிகளும் அமெரிக்க ஊடகங்களும் ஓங்காரக் கூச்சலிட்டு மகிழ்ச்சிப் பெருக்கில் அதைக் கொண்டாடியுள்ளன.

ஈராக்கில் சட்டவிரோதப் படையெடுப்பில் அமெரிக்கா ஈடுபட்டதை முன்னர் கண்டித்துவந்த முன்னாள் எதிரிகளும் இப்போது வாஷிங்டனின் வெற்றிக்களிப்பு அலையில் அடித்துச் செல்லப்பட்டு விட்டனர். ஜேர்மனியின்அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடரும், பிரெஞ்சு ஜனாதிபதி ஜாக் சிராக்கும் ஜோர்ஜ் புஷ்ஷூக்கு தங்களின் கோழைத்தனமான பாராட்டுக்களைத் தெரிவிப்பதில் நேரத்தை அதிகம் வீணாக்கவில்லை.

இந்த வெற்றிக் களிப்பு இன்னும் பல நாட்களுக்கு வெள்ளை மாளிகையிலும் ஊடகங்களிலும் நீடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஹிட்லருக்கு இணையானவர் ஹூசைன் என்று பூதாகரமாகச் சித்தரித்து விட்டு இப்போது அவர் பிடிபட்டது ''சுதந்திர'' மற்றும் ''ஜனநாயக'' ஈராக் பிறப்பதில் ஒரு மைல்கல் என்று கூறப்படுகிறது. சம்பவங்களை இந்த வகையில் விளக்குவது பல சங்கடமான கேள்விகளைத் தவிர்க்கும் போக்காகும்.

சதாம் ஹூசைன் பிடிபட்டதை அறிவிப்பதற்காக பாக்தாதில் உள்ள இடைக்கால கூட்டணி நிர்வாகத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிகை நிருபர்களுக்கான பேட்டியில் ஒரு நிருபரால் இப்படி தவிர்க்கப்பட்ட கேள்விகளில் முதலாவது கேள்வி எழுபப்பட்டது. ''பூமிக்கு அடியில் ஒரு குழாயில் பதுங்கிக் கொண்டிருந்து கொரில்லாப் போர் நடத்த முடியுமா? என்று அவர் கேட்டார்.

இந்தக் கேள்விக்கு தெளிவான பதில் முடியாது என்பதுதான்: ஈராக் முழுவதிலும் நடைபெற்றுக் கொண்டுள்ள கொரில்லாத் தாக்குதல்கள் ஒரு நாளைக்கு 55-என்ற அளவிற்கு உயர்ந்து கொண்டிருக்கிறது, இத்தகைய தாக்குதல்களுக்கு ஒருங்கிணைப்பாளராகச் செயல்படும் வல்லமையுள்ள நிபுணரல்ல சதாம் ஹூசைன். அவர் வேட்டையாடப்பட்டு வந்த தனிநபர், தான் உயிர்பிழைப்பதற்காக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு தலைமறைவாகித் தப்பியோடுவதில் உள்ளத்தை முழுவதும் ஈடுபடுத்திக் கொண்டவர். சதாம் ஹூசைன் மற்றும் அவரது கூட்டாளிகளான மற்றும் இருவரிடம் அவர்கள் பிடிபட்டபோது எந்தவிதமான தகவல் தொடர்பு சாதனங்களோ, ஏன் செல்போனோ கூட இல்லை என்பதை அமெரிக்க இராணுவ வட்டாரங்கள் குறிப்பிட்டன.

அவர் மறைந்திருந்த இடம் எப்படி தங்களுக்குத் தெரிந்தது என்பதைப் பற்றியும் அவரது தலைக்கு வெகுமதியாக அறிவிக்கப்பட்ட 25மில்லியன் டாலர்களை யாரும் உரிமை கோரினார்களா என்பதையும் விவாதிக்க அமெரிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். சதாம் ஹூசைனின் சொந்த முன்னாள் ஆளுங்கட்சியான பாத் கட்சியில் இருந்த அவருக்கு எதிரிகளான சக்திகள் அவரைக் காட்டிக்கொடுத்திருக்கலாமென ஆரம்பத்தில் ஊகங்கள் இருந்தன.

ஈராக்கில் படையெடுப்பு நடத்திய அமெரிக்காவின் கெளரவம் தற்போது வீழ்ச்சியடைந்து கொண்டு வருகிறது. சதாம் ஹூசைனைப் பிடித்த தந்திரோபாய வெற்றிப் படையெடுப்பு, தளர்ந்து செல்லும் கெளரவத்திற்கு தற்காலிகமாக முட்டுக் கொடுப்பதில் குறுகிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆயினும், இதுவே, ஈராக்கை மீண்டும் தனது காலனியாக ஆக்கிக்கொள்ள அமெரிக்கா மேற்கொண்டுள்ள முயற்சிகளை சீர்குலைத்துக் கொண்டிருக்கும் தீர்வுகாணவியலாத பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதற்கோ அல்லது பெருகிக் கொண்டுள்ள ஈராக் மக்களின் தேசியவாத எதிர்ப்பை சமாளிக்கவோ அடிப்படையாக அமைய முடியாது.

இதில் மிகவும் வேடிக்கையாக, ஹூசைன் பிடிபட்டது தொடர்பாக ஈராக்கில் மூச்சுவிடக்கூட நேரம் இல்லாமல் நடத்தப்பட்டு வரும் கொண்டாட்டங்களுக்கு நடுவில், அமெரிக்கத் தொலைக்காட்சி அலைவரிசைகள் இரண்டு ஆர்ப்பாட்டங்கள் பற்றிய காட்சிகளை அடிக்கடி ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. முதல் ஆர்ப்பாட்டம் ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர்கள் நடத்தியது. சுத்தியல், அரிவாள் பொறிக்கப்பட்ட செங்கொடிகளை அசைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியது. இரண்டாவது ஆர்ப்பாட்டம் ஷியைட் முஸ்லீம் குழுவினர் நடத்தியது. அவர்கள் அயத்துல்லாக்களின் படங்களை ஏந்தி வந்தனர். இந்த இரண்டு போக்கினருமே ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்துக் கொண்டதுடன் ஏதாவது ஒரு வகையில் ஒத்துழைத்து வந்திருக்கின்றனர். புதிய நிலையான அமெரிக்க ஆதரவு ஆட்சியை உருவாக்குவதற்கு இவை இரண்டில் எந்தக் குழுவையும் அடிப்படையாக எடுத்துக் கொள்ள முடியாது.

ஹூசைன் தற்போது அமெரிக்காவின் காவலில் இருப்பதால் அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெளிவுபடுத்த மறுத்து விட்டனர். அவர் ஈராக் ஆளும் குழுவிடம் ஒப்படைக்ப்படுவாரா அல்லது சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டு உருவாக்கப்பபட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்தப்படுவாரா என்பது தொடர்பான கேள்விகளை ஈராக்கில் உள்ள அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகளின் தளபதி ஜெனரல் ரிக்கார்டோ சாஞ்செஸ் திசைதிருப்பிவிட்டார். சதாம் ஹூசைன் மீது இராணுவம் தொடர்ந்து ''விசாரணையை நடத்திக் கொண்டே'' இருக்கும் என்று மட்டுமே பதிலளிப்பதோடு நிறுத்திக்கொண்டார்.

சதாம் ஹூசைன் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அது வென்றவர் வழங்குகின்ற நீதியாகவே இருக்கும். ஈராக் ஆளும் சபையும் புதிய நீதிமன்றமும் வாஷிங்டன் உருவாக்கியவை. அவற்றிற்குச் சட்டப்பூர்வமான அந்தஸ்து இல்லை. முன்னாள் ஈராக்கிய தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் மீது எந்தவிதமான விசாரணையும் நடத்துவதற்கு ஈராக்கை ஆக்கிரமித்திருக்கும் நிர்வாகிகளுக்கு சர்வதேச சட்டப்படி எந்தவிதமான அடிப்படையும் இல்லை.

அது எப்படி இருந்தாலும், ஈராக் தொடர்பாக போர் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் கொண்டு வரப்பட்டால், எந்தவிதமான ஆத்திரமூட்டலும் இல்லாமலேயே ஆக்கிரமிப்புப் போருக்கு சதித்திட்டம் தீட்டி அதைச் செயல்படுத்தியதற்காக, புஷ் நிர்வாகத்தின் மீதே மிகக்கடுமையான போர்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை கூற வேண்டும்.

ஹூசைன் மீது பகிரங்கமாக குற்றச்சாட்டு எதையும் கொண்டுவர விரும்பாமல் தவிர்ப்பதற்கு சரியான காரணங்கள் உள்ளன. சனிக்கிழமை சதாம் ஹூசைன் பிடிக்கப்பட்டபோது அவர் ''ஒத்துழைத்து'' வருவதாக ஆக்கிரமிப்புச் செய்துள்ள அதிகாரிகள் விவரித்தனர். அமெரிக்க நிர்வாகங்களுடன் பல ஆண்டுகள் அவர் கொண்டிருந்த உறவுகளை வர்ணிக்கவும் அந்தப் பெயரடையைப் பயன்படுத்தலாம்.

உண்மையிலேயே சதாம் ஹூசைனின் ஈராக் ஆட்சி அந்த நாட்டு மக்களுக்கு எதிராகப் புரிந்த மிகப்பெரும் குற்றங்கள் - ஈரான்-ஈராக் போர், ஷியைட்டுகள் மற்றும் குர்து இனத்தவர்களை அடக்கி ஒடுக்கிய நடவடிக்கைகள் முதலியவற்றைக் கூறலாம். தற்போது அமெரிக்காவின் கொள்கையில் தீவிர பங்கெடுத்துக் கொண்டிருக்கும், பாதுகாப்புத்துறை அமைச்சர் டொனால் ரம்ஸ் பீல்ட் புஷ்ஷின் புதிய சிறப்புத்தூதர் முன்னாள் வெளியுறவுச் செயலாளர் ஜேம்ஸ் பேக்கர் போன்றோருள் சிலர் நேரடியாகப் பங்கெடுத்துக் கொண்டதும் சம்பந்தப்பட்டுள்ளது.

தற்போது அமெரிக்காவின் பொறுப்பில் இருக்கும் அந்த மனிதர் யார் மற்றும் அவர் இன்றைய தினம் விரும்பத்தகாத நபர் என்ற நிலைக்கு வந்தது எப்படி? இருபதாவது நூற்றாண்டின் கடைசி ஐம்பது ஆண்டுகளிலும் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈராக்கின் மீது மேலாதிக்கம் செலுத்திவந்ததுடனும் அரபு தேசியத்தின் எதிர்காலத்துடனும் இந்தக் கேள்விகளுக்கான விடைகள் சம்மந்தப்பட்டிருக்கின்றன.

ஹூசைனை ஈராக்கில் பதவிக்கு இட்டுச்சென்ற பாதை அவர் 20-வயது இளைஞராக அரசு பாத் சோசலிஸ்ட் கட்சி உறுப்பினராகச் சேர்ந்ததில் 1957ல் தொடங்கியது. பாத் கட்சியைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி ஊடகங்களில் ''தேசிய சோசலிஸ்டுகள்'' என்று வர்ணிக்கப்படுகின்றனர். இந்த விளக்கம் ஒரு குறிப்பிட்ட வரையறைக்கு உட்பட்டுத்தான் பயன்படுத்தக் கூடியது ஆகும். பாத் கட்சியை நாஜிக்களோடும், ஹூசைனை ஹிட்லரோடும் ஒப்பிட்டு வாஷிங்டனும், இஸ்ரேலின் சியோனிச ஆட்சியும் அடிக்கடி அறிக்கை விட்டுக்கொண்டிருப்பது திட்டமிட்ட வரலாற்றுப் புரட்டாகும்.

ஈராக் பின்தங்கிய வரலாற்று அடிப்படையில் ஒடுக்கப்பட்ட நாடு சர்வதேச அளவில் வெற்றிக்கொடி நாட்ட வேண்டும் என்ற நாட்டம் கொண்ட ஒரு ஏகாதிபத்திய வல்லரசல்ல. ஹூசைன் கொடூரமான சர்வாதிகார ஆட்சியை நடத்தினார், அது படிப்படியாக ஈராக் தொழிலாள வர்க்கத்தை ஒடுக்கியது. என்றாலும் ஹூசைன் நடத்திய தேசிய இயக்கத்திற்கும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நியமித்த அரை நிலப்பிரபுத்துவ, தரகு முதலாளித்துவ ஆட்சிகளுக்கும் இடையில் ஒரு திட்டவட்டமான வேறுபாடு உண்டு. தனது சொந்த மக்களிடத்தும், அரபு உலகம் முழுவதிலும் துரோகி என்று கருதப்பட்ட நூரி-அல்-சையது ஆட்சியை நிறுவியது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தான்.

ஈராக்கில் உள்ளதைப் போன்று பல்வேறு நாடுகளில் தேசிய ஆட்சிகள் அதிகாரத்திற்கு வந்தன. அந்த ஆட்சிகள் தேசிய மற்றும் சமூக செயல் திட்டங்களைக் கொண்டு வந்தன. அது காலனி ஆதிக்கத்திற்கு எதிரான மக்கள் இயக்கத்தித்தின் தோற்றத்துடன் கட்டுண்டிருந்தது. இத்தகைய ஆட்சிகளுக்கு முன்னர் இருந்த காலனித்துவ பொம்மை ஆட்சிகள்-அதேபோல நிலப்பிரபுத்துவ முடியாட்சிகள் வளைகுடா எமிரேட்டுகள் ஆட்சிகளுடன் ஒப்பிடுகையில்- அவை நிறைவேற்றிய கொள்கைகளின் காரணமாக பொதுமக்களது வாழ்க்கைத் தரத்தில் திட்டவட்டமான மாற்றங்கள் ஏற்பட்டன. சுகாதார சேவைகள், கல்வி, மற்றும் மகளிர், சமுதாய உரிமைகளில் முன்னேற்றம் ஆகியவை இவற்றுள் அடங்குவன. ஈராக்கிலும் இதர மத்திய கிழக்கு நாடுகளிலும் நடைபெற்ற தேசிய ஆட்சிகள் பிரதான வல்லரசுகளைப் பகைத்துக் கொள்ளும் கொள்கைகளை குறிப்பாக எண்ணெய் வளங்களைத் தேசிய மயமாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டன.

பாத்-கட்சியின் முரண்பாடுகள்

இரண்டாவது உலகப்போரின் போது மத்திய கிழக்கு ஆபிரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் தேசியவாதம் மற்றும் காலனி ஆதிக்க எதிர்ப்பு அலைகள் வளர்ச்சியுற்றதன் பகுதியாக அப்போது ஈராக்கி பாத் கட்சி நிறுவப்பட்டது. இந்த இயக்கத்தின் நிறுவனர்கள் மைக்கல் அஃப்லாக் தலைமையிலான பிரான்சில் உயர் கல்வி கற்ற சிரிய நாட்டு புத்திஜீவிகள், இவர்கள் அரபு பிராந்தியத்தின் பிளவுகள் வெளிநாட்டு மேலாதிக்கம், பின்தங்கிய தன்மை ஆகியவற்றை முறியடித்து அரபு மண்டலம் முழுமைக்குமான வேலைத்திட்டத்தை முன்னெடுத்தனர். முதல் உலகப்போருக்குப் பின்னர் காலனி ஆதிக்கம் விட்டுச் சென்ற மரபுரிமைச் சொத்தாக "மணலில் உள்ள எல்லைக் கோடுகளை" அழிப்பதற்கு மற்றும் மத்திய கிழக்கை பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நிலைத்திருக்க முடியாத அரசுகளின் தொகுதிகளாகப் பிளவுபடுத்தியதையும் அழிப்பதற்கு அரபு ஐக்கியத்தை அது முன்னெடுத்தது. அது மதச்சார்பற்ற ஜனநாயக அரசாங்கத்தை உருவாக்குவதற்கும் அழைப்பு விடுத்தது.

''அட்லாண்டிக்கில் தொடங்கி (பாரசீக) வளைகுடா வரை ஒரே நாடு'' என்பது கட்சியின் முழக்கமாக இருந்தது. இந்த மண்டலத்தில் அப்போது செயல்பட்டு வந்த இதர கட்சிகளைப் போல், அதேபோல ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளில் இயங்கிய கட்சிகளைப் போல் பாத்திஸ்டுகளும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தொடர்ச்சியான போராட்டத்தை நடத்தமுடியாத அளவு அமைப்புரீதியாக திராணி அற்று இருந்தனர். சிரியாவிலும் ஈராக்கிலும் சிறிய, பலவீனமான மற்றும் பேராசை பிடித்தலையும் தேசிய முதலாளித்துவத்தின் பிரதான அரசியல் கருவியாக அவை தோன்றியதும், காலனித்துவத்திலிருந்து மரபுவழி பெறப்பட்ட அரசு கட்டமைப்பை பராமரிப்பதில் உள்ளூர் ஆளும் செல்வந்த தட்டுக்களின் நலன்கள், டமாஸ்கசிலிருந்து பாக்தாத்வரை ஐக்கியத்தைப் பேணுவது கூட சக்தி மிக்கது என்பதை நிரூபித்தது. உண்மையில், சிரியாவிலும் ஈராக்கிலும் பாத் இயக்கங்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் பெரும்பாலான காலகட்டத்தின்பொழுது இரண்டு ஆட்சிகளுமே கடும் எதிரிகளாகத்தான் தொடர்ந்து செயல்பட்டு வந்தனர்.

ஈராக்கில் ஆட்சிக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் தான் பிரதானமாக மோதல் தொடர்ந்து இருந்தது. மத்திய கிழக்கு முழுவதிலும் தொழிலாள வர்க்கம் மிக அணிதிரட்டப்பட்டதாகவும் அரசியல் அடிப்படையில் வளர்ச்சி பெற்றதாகவும் இருந்தது.

இந்த சிக்கலான மற்றும் முரண்பாடுகளைக் கொண்ட இயக்கத்தினுள்தான் முதலாளித்துவ தேசியவாதத்தட்டின் பகுதியாக சதாம் ஹூசைன் வெளிப்பட்டார். அவர்கள் கம்யூனிசத்திற்கு வெறித்தனமாக பகைமைபாராட்டி வந்தனர் மற்றும் பிரதான ஏகாதிபத்திய வல்லரசுகளுடன் தொடர்புகளை வைத்துக்கொள்ள தயாராக இருந்தனர். 1958-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருந்த தனது மைத்துனரைக் கொலை செய்ததற்காக அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார். ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் புலம்பெயர்ந்த நிலையிலிருந்து ஈராக் திரும்பினார். பாத்கட்சி இடது தேசியவாத தலைவர் தளபதி அப்துல் கரீம் காசீம் ஆட்சியைக் கவிழ்த்ததில் பாத் கட்சி ஆட்சிக்கு வர முடிந்தது. சிஐஏ- யின் ஆதரவோடு காசீம் தூக்கி எறியப்பட்டார், சிஐஏ-ஆட்சிக்கவிழ்ப்பு அமைப்பாளர்களுக்கு ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் பெயர்களையும் முகவரிகளையும் தந்தது, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களை கைது செய்து தூக்கிலிடுவதற்காக இவ்வாறு செய்தது.

1968-ம் ஆண்டு இரண்டாவது இராணுவ ஆதரவு ஆட்சி கவிழ்ப்பு நடைபெற்றதன் மூலம் பாத் கட்சிக்காரர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்க படையெடுப்பு நடத்தும் வரை பாத்கட்சி தனது ஆட்சியை நிலை நாட்டியது. ஹூசைன் உள்நாட்டு பாதுகாப்பு பொறுப்பை ஏற்றுக்கொண்டார். புதிய ஆட்சியில் உண்மையான அதிகாரம் அவர் கைக்கு வந்துவிட்டது.

வாஷிங்டனுக்கும் பக்கத்து நாடான ஈரானின் சர்வாதிகாரி ஷாவுக்கும் இடையே ஏற்பட்ட மூலோபாய உடன்படிக்கையின் அடிப்படையில், பாத்திஸ்டுகள் ஈராக்கில் பதவிக்கு வந்தார்கள். அமெரிக்காவுடன் சேர்ந்துகொண்டு ஈரானின் ஷா ஆட்சி இந்தக்கால கட்டத்தில் ஈராக்கிற்கு நிர்ப்பந்தம் கொடுத்து ஷட்- அல் அரபு பகுதியில் சர்ச்சைக்குரிய எல்லை தொடர்பாக ஈராக்கிற்கு பாதகமான சலுகைகளை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஈரானின் நலன்களை மேலும் வளர்ப்பதற்காகவும் பாத்திச ஆட்சி ஈராக்கில் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களை அரசுடமையாக்கியதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் வாஷிங்டனும் டெஹ்ரானும், இஸ்ரேலின் ஒத்துழைப்போடு பாக்தாத்திற்கு எதிராக குர்து இனத்தவர்கள் நடத்திவந்த தேசிய கிளர்ச்சியை தூண்டிவிடவும், ஆதரிக்கவும் நடவடிக்கை எடுத்தார்கள். குர்து குழுக்களுக்கு சிஐஏ- ஆயுதங்களையும் நிதியையும் கொடுத்தது, அதேவேளை ஈரானிய இராணுவம் நேரடியாக குர்து கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆதரவும் கொடுத்தது.

ஈரானில் அரசியல் காற்று திடீரென்று மாறி அடித்ததும் மன்னர் ஷா-வின் போலீஸ் அரசாங்கம் வீழ்ந்து நொருங்கியது மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாத ஆட்சி ஒன்று பதவிக்கு வந்தது. இந்த பிராந்தியத்தில் வாஷிங்டனின் கொள்கையும் மாறியது. தற்போது ஈராக்குடன் வாஷிங்டன் நெருக்கமான உறவை வளர்த்துக்கொண்டது. ஈரானுடன் எல்லைத் தகராறை பயன்படுத்தி தாக்குதல் நடத்துமாறு வாஷிங்டன் ஈராக்கை வற்புறுத்தியது. ஈரானின் புரட்சி எந்தவிதத்திலும் பரவாது தீவிரமாக எதிர்க்க வேண்டும் என ஈராக்கை வாஷிங்டன் கேட்டுக்கொண்டது. குறிப்பாக, ஈரான் ஷியைட்டுகளின் கிளர்ச்சியை தூண்டிவிடக்கூடும் என்று அமெரிக்கா அஞ்சியது. இந்தக் கிளர்ச்சி ஈராக்கின் தெற்குப் பகுதியிலும், சவுதி அரேபியாவின் கிழக்குப் பகுதிகளிலும் எண்ணெய் தயாரிக்கும் மண்டலங்களில் பரவுவது அமெரிக்காவிற்கு எண்ணெய் அளிப்பிற்கு அச்சுறுத்தலாகும் என அமெரிக்கா பயந்தது.

வாஷிங்டனின் புதிய மூலோபாய தகவமைவிற்கு ஈராக்கின் பதில்வினை, பாத் கட்சியில் பெருமளவில் களையெடுப்பை நடத்தியதில் அதன் வெளிப்பாட்டைக் கண்டது. ஹூசைன் 1979-ஜூலை மாதம் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்தக் களையெடுப்பின் பிரதான நோக்கம் ஈராக்கிய கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டு வைத்த முன்னாள்கூட்டு ஆகும், தேசிய கூட்டரசாங்கத்தில் ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி பாத்திஸ்டுகளுடன் சேர்ந்திருந்தது. இந்த கூட்டணியில் மிக நெருக்கமாகத் தொடர்பு கொண்டிருந்த பாத்திஸ்டுகளுடன் சேர்த்து கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் கொலை செய்யப்பபட்டனர். இது வாஷிங்டனுக்கு தெளிவாக சமாதான சமிக்கை காட்டியது. இதற்கு ஓர் ஆண்டிற்கு பின்னர் ஷட் அல் அராப் தொடர்பாக ஈராக் ஆட்சி ஈரான் மீது போர் தொடுத்தது.

ஈராக்கின் நோக்கங்கள் மிக குறுகலானது. மற்றும் ஹூசைன் சந்தர்ப்பவாத அடிப்படையில் அந்த நோக்கங்களை தனது புதிய அமெரிக்க ஆதரவின் விளைவாக அடையப்பட முடியும் என்று நம்பினார். இப்படி எடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கை சதாம் ஹூசைன் செய்த மிகப்பெரிய அரசியல் தவறாக முடிந்துவிட்டது. ஈராக் கொலை வெறிமோதலில் சிக்கிக்கொண்டது, அதனால் பத்துலட்சம் மக்கள் பலியானார்கள். அந்த போரைத் தூண்டியது ஈரானிய புரட்சியின் அரசியல்தான்.

இந்தக் காலகட்டத்தில் வாஷிங்டன், ஹூசைனுடன் மிக நெருக்கமான உறவை வளர்த்துக் கொண்டது. பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள உதவிகளை, ஆயுதங்களை அனுப்பியது. இவற்றில் பாத் ஆட்சிக்கு அதிநவீன இராணுவ மற்றும் தகவல் தொடர்பு தொழில் நுட்பம் வழங்கப்பட்டதும் உள்ளடங்கும்.

1987-மே மாதம், மோதலுக்கு நடுவில் ஹூசைனுக்கு அமெரிக்க ஆதரவுக்கான மிகவும் பரபரப்பான வெளிப்பாடு ஈராக் போர் விமானம் ஒன்று எக்சோசெட் ஏவுகணையை பாரசீக வளைகுடாவில் நின்றிருந்த அமெரிக்க விமானந்தாங்கி கப்பலான USS- ஸ்டார்க் மீது சுட்டதில் 33- அமெரிக்க கடற்படையினர் கொல்லப்பட்டனர். இதற்கு வாஷிங்டனின் பதில், ஈராக்கிய ஆட்சியை விட்டுவிட்டு ஈரான்தான் தாக்குதலுக்கு பொறுப்பு என பழி கூறியது. அமெரிக்க இராணுவக் குவிப்பின் இலக்கு ஈரானாக இருந்தது, அதன் ஒரு பகுதியாகவே ஸ்டார்க் அங்கு நிறுத்தப்பட்டது. ஆனால் அதற்கு ஓர் ஆண்டிற்குப் பின்னர், ஈரானின் கடற்பகுதியில் சென்று கொண்டிருந்த அமெரிக்க போர்க்கப்பலான USS- வின்சென்னஸ் ஈரானின் பயணிகள் விமானத்தை நோக்கி ராக்கெட்டால் சுட்டதில் அந்த விமானத்தில் பயணம் செய்த 290-பேரும் பலியானார்கள்.

தற்போது அமெரிக்க கொள்கையில் முக்கிய பங்கு வகிக்கும் பிரதான தலைவர்கள் ஈரான்-ஈராக் போரின்போது ஹூசைனோடு தொடர்பு வைத்திருந்தவர்களாவர். றேகன் நிர்வாகத்தில் டொனால்ட் ரம்ஸ் பெல்ட் சிறப்புத் தூதராக செயல்பட்டார், இவர் 1983- இறுதியில் பாக்தாத்திற்கு சென்று ஹூசைனுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தினார், அதில் நேரடியாக தூதரக உறவுகளை நிறுவுவதற்கு அமெரிக்காவின் அழைப்பை விடுத்தார்.

அன்றைய வெளியுறவுத் துறை அமைச்சர் தாரிக் அசீசுடன் பேச்சுவார்த்தை நடத்த 1984- மார்ச்சில் ரம்ஸ்பெல்ட் பாக்தாத்திற்கு திரும்பினார். முழு உறவுகளும் திரும்ப நிலைநாட்டப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது, ஆனால் அது பெயரளவிற்கு நடந்த அறிவிப்பாகும்.

முதலாவது புஷ் நிர்வாகத்தில் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பணியாற்றி வந்த ஜேம்ஸ் பேக்கர் ஈராக்கிற்கு மிகப் பெருமளவில் அமெரிக்க உதவிக்கும் சட்டவிரோதமாக ஆயுதங்களையும் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்தார். பேக்கர்தான் ஈராக் இராணுவ தொழில் நுட்பத்தையும் இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களுக்கான பொருட்களையும் ஈராக் பெறுவதற்கு அனுமதி வழங்கினார். சிஐஏ பாக்தாதிற்கும் அமெரிக்கவின் கூட்டாளிகளான சிலியில் உள்ள பினோசே ஆட்சி மற்றும் தென்னாபிரிக்காவில் உள்ள நிறவெறி ஆட்சி அதேபோல பல்வேறு நேட்டோ நாடுகளுக்கும் ஆயுத பேரங்களுக்கு ஏற்பாடு செய்தார்.

ஈராக் மீது அமெரிக்கப் படை எடுப்பை நியாயப்படுத்துதற்கும் சதாம் ஹூசைனை ஹிட்லருக்குப் பின்னர் மோசமான சர்வாதிகாரி என சித்தரிப்பதற்கும் புஷ் நிர்வாகம் காட்டும் ஈராக்கில் நடைபெற்ற படுகொலைகள், விஷவாயுப் படுகொலைகள் மற்றும் இதர அட்டூழியங்கள் இவற்றில் பெரும்பாலானவை இந்தக் காலகட்டத்தில்தான் மேற்கொள்ளப்பட்டவை. அமெரிக்க-ஈராக் கூட்டில் அது உயர்ந்த அளவாக இருந்தது மற்றும் இந்த சம்பவங்களில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் வாஷிங்டனால் வழங்கப்பட்டவை.

இது வெறுமனே அமெரிக்க முயற்சி மட்டுமல்ல. அமெரிக்க போர்க் கப்பலை மூழ்கடிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட ஏவுகணையில் பிரான்சின் வர்த்தக குறியீடு காணப்பட்டது. பிரான்சும், சதாம் ஹூசைனுடன் மிக நெருக்கமாக இருந்தது. பிரான்சில், இதற்கு மிகப் பொறுப்பான தனிநபர் ஜாக் சிராக் ஆவார். அவர்தான் இப்பொழுது முன்னாள் ஈராக்கிய ஜனாதிபதி பிடிபட்டதற்கு புஷ்ஷிற்கு பாராட்டு தெரிவித்து செய்தி அனுப்பியிருக்கிறார்.

குவைத் தொடர்பான ஆத்திரமூட்டல்

பாக்தாத்திற்கும் குவைத் சிற்றரசுக்கும் இடையில் நடைபெற்ற சிக்கலான தகராறு ஈராக் அமெரிக்க உறவை சிதைப்பதாக அமைந்துவிட்டது. குவைத் வரலாற்று அடிப்படையில் ஈராக்கிற்கு சொந்தமானது என்று ஹூசைன் உரிமை கொண்டாடினார். குவைத், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் செயற்கையாக உருவாக்கிய ஒரு நாடு. அந்த நாடு பின்னர் பல்வேறு தகராறில் சிக்கிக்கொண்டது. குவைத், உலகச் சந்தையில் எண்ணெய் விலையை திட்டமிட்டு குறைத்துக் கொண்டிருந்தது, மேலும் தெற்கு ஈராக்கிலுள்ள அல்-ரமலா எண்ணெய்க் கிணறுகளிலிருந்து ஷிபான் எண்ணெயை எடுப்பதற்கு கிடைமட்டமாக துளையிடும் பணியை மேற்கொண்டு வந்தது. இந்த சூழ்நிலையில் ஈரான் போரின்போது பெற்ற கடனுக்காக ஈராக் பில்லியன்கள் கணக்கில் டாலர்களை திருப்பித் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. ஈராக்கின் பொருளாதார மற்றும் அரசியல் நிலைப்பாட்டிற்கு அப்பட்டமான ஆத்திரமூட்டலாக இது அமைந்தது.

இந்த மோதலுக்கு நடுவில் சதாம் ஹூசைன் ஈராக்கிலுள்ள அமெரிக்க தூதர் ஏப்ரல் கிளாஸ்பியுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். வாஷிங்டனுக்கு, "குவைத்துடன் எல்லை பற்றிய உடன்பாடின்மை, அரபுக்கும் அரபுக்கும் நடக்கும் இந்த மோதல்கள் பற்றி கருத்து எதுவும் இல்லை" என்று அவர் கூறினார். இந்தப் பிரச்சனையில் அமெரிக்காவிற்கு அக்கறை எதுவுமில்லை என்பதை வெளியுறவுத்துறை அமைச்சர் பேச்சர் "அழுத்தம் திருத்தமாக" குறிப்பிட்டதாக அந்த அம்மையார் கூறினார். இந்த அறிவிப்பை ஹூசைன் ஒரு படை எடுப்பிற்கான பச்சை விளக்கு என எடுத்துக்கொண்டு 1990-ல் ஆகஸ்டில் குவைத் மீது படையெடுத்தார். எட்டு ஆண்டுகளாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தன்னோடு வைத்திருக்கும் நடப்பில் உள்ள கூட்டினால் வாஷிங்டன் சம்மதத்தை பெற்றுவிட முடியும் என்று நம்பினார்.

மீண்டும் இந்த ஈராக் சர்வாதிகாரி மிகப்பெருமளவிற்கு தவறாக மதிப்பீடு செய்துவிட்டார். தூதர் கிலாஸ்பி திட்டமிட்டு ஈராக்கை குவைத் போரில் ஈடுபடுத்தி உள்ளார். பாரசீக வளைகுடாவில் அமெரிக்கா தனது நேரடி இராணுவ நிலைகொள்ளலை நிலைநாட்டுவதற்கான அமெரிக்காவின் நீண்டகால திட்டங்களுக்கு ஒரு சாக்குப்போக்கை வழங்கும் பொருட்டு குவைத் மீதாக ஈராக் தாக்குதல் நடத்துவதற்கு தூண்டிச்செயலாற்றுவிக்க திட்டமிட்ட ஒரு முயற்சியாக கிளஸ்பியின் பேட்டி இருந்தது என நம்புதற்கு பலமான காரணம் உண்டு. இப்பொழுது வாஷிங்டன், தொந்தரவு கொடுத்து கொண்டிருந்த நண்பனை தூக்கி எறியவும் கூட தயாராக இருந்தது இனி அவரது சேவைகள் அதற்கு தேவைப்படவில்லை.

ஹூசைன் தற்பொழுது மிகப்பெருமளவில் மாறிவிட்ட புவிசார் அரசியல் நிலையை எதிர்கொண்டார். ஏனைய பல்வேறு முதலாளித்துவ தேசியவாத ஆட்சிகளின் தலைவர்களைப் போல சதாம் ஹூசைன் மொஸ்கோவிற்கும் வாஷிங்டனுக்குமிடையே சர்க்கஸ் வித்தைக்காரன் கம்பி மேல் நடந்தது போல் முதலில் ஒரு பக்கமாகவும் பின்னர் மறுபக்கமாகவும் சாய்ந்து தனது அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொண்டார். 1990-வாக்கில் அத்தகைய கையாளுதல்கள் பொருந்தாதவையாக ஆகிவிட்டன. மொஸ்கோ ஸ்ராலினிச அதிகாரத்துவம் கோர்பச்சேவ் கீழ் ஆட்சியில் உறுதியாக முதலாளித்துவ மீட்சிப் பாதையில் சென்று கொண்டிருந்தது மற்றும் அமெரிக்காவின் ஆதரவை பெறுவதற்கு எல்லாவற்றையும் விட்டுக்கொடுக்க தயாராக இருந்தது. இப்படி மொஸ்கோ ஏலம் போடுகின்ற பட்டியலில் தனது ஆட்சியும் இடம் பெற்றிருப்பதை சதாம் ஹூசைன் கண்டார்.

100,000-பேர் மாண்டதுடன் ஈராக்கை அழிவில் விட்ட ஒரு அமெரிக்கப் போரைத் தவிர்ப்பதற்கு அவர் ஒன்றும் செய்திருக்க முடியவில்லை. அப்படியிருந்தும் தெற்குப் பகுதியில் ஷியைட்டுக்களும், வடக்குப் பகுதியில் குர்துகளும் ஹூசைனுக்கு எதிராக எழுந்த பொழுது வாஷிங்டன், ஈராக் சர்வாதிகாரியை அரபு மண்டலத்தில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் ஒரு சக்தி எனக் கருதியது.

அமெரிக்க இராணுவம் ஈராக்கின் ஐந்தில் ஒரு பங்கு நிலபரப்பை பிடித்துக்கொண்டதுடன், ஹூசைன் ஆட்சியின் ஷியைட்டுக்கள் மற்றும் குர்திஷ் கிளர்ச்சிக்காரர்கள் மீதான காட்டு மிராண்டித்தனமான ஒடுக்குமுறையை தடுத்து நிறுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என வாஷிங்டன் கட்டளையிட்டது. உண்மையில், ஈராக் போர் ஹெலிகாப்டர்களை தடையின்றி பறப்பதற்கு அனுமதிக்கும்படி கட்டளையிட்டது. 1991-ஏப்ரல் 11-அன்று நியூயோர்க் டைம்ஸ் குறிப்பிட்டிருப்பதைப் போல், இந்த கிளர்ச்சிகள் "அமெரிக்காவிற்கும் அதன் அரபு நாட்டு நண்பர்களுக்கும் ஒரே மாதிரியான கருத்தை உருவாக்கியுள்ளது: ஈராக் தலைவரின் பாவச் செயல்கள் எதுவாக இருந்தாலும் அவர் மேற்கத்திய நாடுகளுக்கும் இந்த பிராந்தியத்திற்கும் தனது நாடு குழப்பமில்லாமல் இருக்கும் என்ற சிறந்த நம்பிக்கையை அவரது ஒடுக்கு முறைகளால் பாதிக்கப்பட்டவர்களை விட தந்திருக்கிறார்."

பாரசீக வளைகுடாப் போரைத் தொடர்ந்து பத்தாண்டுகளில் அமெரிக்க அரசியலில் இடம்பெற்றுள்ள தீவிர வலதுசாரி சக்திகள் மிக ஆவேசமாக ஈராக்கை வென்றுகைப்பற்ற, போர் தொடுக்க வேண்டுமென பிரச்சாரம் நடத்தி வந்தார்கள். இந்த தட்டினரின் பார்வையில் கிளிண்டன் நிர்வாகத்தின் பிரதான பாவச்செயல் என்னவென்றால் அத்தகைய நடவடிக்கையை நடத்த தவறிவிட்டது என்பதுதான். புஷ் நிர்வாகம் வெள்ளை மாளிகையில் அமர்த்தப்பட்டதும், இந்த சக்திகள் வலதுசாரி குடியரசு கட்சி சிந்தனையாளர் குழுக்களிலிருந்து அரசாங்கத்தின் முக்கிய பதவிகளை பிடித்துக்கொண்டார்கள். பென்டகனின் சிவிலியன் தலைமை முழுவதும் இந்தக் குழுவின் கையில் வந்தது. ஹூசைனை கவிழ்ப்பதற்கு "முன்கூட்டிய திடீர் தாக்குதல்" போரை நடத்துவதற்கு ஆயத்தமானார்கள்.

ஞாயிறு பிற்பகல் தொலைக்காட்சியில் உரையாற்றிய புஷ் ஈராக்கிய மக்களுக்கு ஒரு செய்தியை படித்தார். சதாம் ஹூசைனை பிடித்ததன் மூலம் ''இருண்ட மற்றும் துன்பம் நிறைந்த சகாப்தத்திற்கு'' முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டதாகவும் ''நம்பிக்கை தரும் நாள்'' வருவதற்கு சமிக்கை காட்டப்பட்டு விட்டதாகவும் புஷ் தனது செய்தியில் குறிப்பிட்டார்.

''உங்களது நாட்டிற்கு இறையாண்மையையும், உங்களது மகத்தான பண்பாட்டிற்கு கண்ணியத்தையும் ஈராக்கிய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் சிறப்பான வாழ்விற்கு வாய்ப்பு வழங்கும்" நோக்கமுடைய ஒரு அமெரிக்கக் கொள்கையை இந்த சம்பவமானது மேலும் முன்னெடுக்க வைக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி புஷ் தனது செய்தியில் குறிப்பிட்டார்.

ஈராக்கிய மக்களுக்கு இறையாண்மையை தருவதற்கு பதிலாக, ஈராக்கை மீண்டும் ஒரு காலனியாக ஆக்குவதற்கும் அதன் எண்ணெய் வளத்தை கைப்பற்றுவதற்கும், அதன் மூலோபாய- பூகோள அரசியல் நிலைப்பாட்டை தன்வசமாக்கி அமெரிக்கா தனது பூகோள மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான ஒரு வேலைத்திட்டத்தை மேலும் முன்னெடுத்து வருகிறது. ஆக்கிரமிப்பானது ஈராக்கிய மக்களின் அதிகப்படியான தட்டினரின் கண்ணியத்தைப் பறித்துவிட்டது, இது அமெரிக்க படைகள் மீதான தாக்குதலுக்கு பரந்த மக்களின் ஆதரவை பெருக்கிவருகிறது. வாய்ப்புக்கள் என்று வரும்போது, அரசியல் ரீதியாக தொடர்புடைய ஆலிபர்டன் போன்ற பெரிய அமெரிக்க கம்பெனிகளுக்கு ஈராக்கின் எண்ணெய் வளங்களை சூறையாடுவதற்கும் அமெரிக்க வரிசெலுத்துவோர் நிதிகளை சூறையாடவும் வரைமுறையில்லாத அளவு ஊழல் புரிவதற்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் ஈராக்கிய மக்கள் வேலையில்லாத் திண்டாட்டத்திலும், வறுமையிலும் வாடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஈராக்கின் முன்னாள் சர்வாதிகாரியை பிடித்திருப்பதன் மூலம், சட்டவிரோத ஆக்கிரமிப்பை நியாயப்படுத்திவிட முடியாது அல்லது வாஷிங்டனின் கைகூலிகள் தேர்ந்தெடுத்திருக்கும் ஓர் ஆட்சிக்கு ஈராக்கின் முகச்சாயலை காட்டி விட முடியாது அல்லது இறுதியாக ஈராக்கில் இரத்தக் களரி பெருகிக் கொண்டிருக்கிறது அதில் ஈராக்கியர்களும், இளம் அமெரிக்க சிப்பாய்களும் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள் அதற்கும் இந்த நடவடிக்கை மூலம் முற்றுப் புள்ளி வைத்துவிட முடியாது.

சதாம் ஹூசைன் பிடிக்கப்பட்டிருப்பதால் ஈராக் மக்களது எதிர்ப்பு மிகவேகமாக நிலை குலைந்துவிடும் என்று புஷ் நிர்வாகம் தெளிவாக நம்புகிறது. ஆனால் காலப்போக்கில் இதற்கு எதிரான விளைவுகள்தான் ஏற்படும். முன்னாள் ஈராக்கிய சர்வாதிகாரி பிடிபட்டதால் ஏற்படுகின்ற நினைத்துப்பாராத தாக்கம் என்னவென்றால் அமெரிக்க ஆக்கிரமிப்பு மேலும் சட்டவிரோதமாக ஆகுமே தவிர அதன் மூலம் தகராறு முற்றுமே தவிர அவர்கள் எதிர்பார்க்கின்ற விளைவு எற்படாது.

இந்தக் கேள்வி அதிக வலிமையோடு எழுப்பப்படுவது தவிர்க்க முடியாதது: சதாம் ஹூசைன் இனி அச்சுறுத்தலாக இருக்கமாட்டார் என்றால் இன்றும் ஈராக்கில் 130,000- அமெரிக்க துருப்புக்கள் இருப்பது ஏன்? இதற்கு தெளிவான விடை என்னவென்றால், அமெரிக்கா தனது துருப்புக்களை விலக்கிக் கொள்ளும் நோக்கம் கொண்டதல்ல. அது ஒரு சூறையாடும் போரை நடத்தியது மற்றும் இந்த பிராந்தியத்து மிக முக்கிய சக்தி ஆதாரங்களை (Energy Resources) கட்டுப்பாடு ஏதுமில்லாமல் தன் கரங்களில் வைத்துக் கொள்வதை உறுதிப்படுத்துவதற்கும் மேலும் நிரந்தரமாக ஈராக்கை ஆக்கிரமித்துக்கொள்ளவும் கருதி அது இந்த படையெடுப்பை நடத்தியிருக்கிறது.

ஹூசைனுக்கும் வாஷிங்டனுக்குமிடையில் நிலவிய உறவுகள் பெரும்பாலும் அமெரிக்க மக்களின் கவனத்திலிருந்து மறைக்கப்பட்டுவிட்டது. ஆனால் அரசியல் அடிப்படையில் கற்றறிந்த ஈராக்கிய மக்களுக்கு இவை பரவலாகத் தெரியும். இப்பொழுது உண்மையான கேள்வி என்னவென்றால் சதாம் ஹூசைனின் குற்றங்களுக்கு ரம்ஸ்பெல்ட் மற்றும் பேக்கர் போன்றவர்கள் உடந்தையாக இருந்தார்கள் என்று எடுத்துக் கொள்வதா? அல்லது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மிகப்பெரும் போர்க் குற்றங்களில் சதாம் ஹூசைன் உடந்தையாக செயல்பட்டார் என்று எடுத்துக் கொள்வதா?

சதாம் ஹூசைன் "நீதியை" சந்திப்பார் என்று புஷ் ஒரு வெற்று உறுதிமொழியை தந்திருக்கிறார், அது உடனடியாக அமெரிக்கப் படைகள் அனைத்தும் ஈராக்கிலிருந்து வெளியேற வேண்டும் மற்றும் பல்லாயிரக்கணக்கான ஈராக் மக்களது வாழ்வை பலிகொண்ட இந்த போருக்குப் பொறுப்பான மற்றும் முந்தைய கொள்கைகளுக்கு பொறுப்பான அமெரிக்க அதிகாரிகள் அனைவரும் இந்தக் குற்றங்களுக்கு பொறுப்பை ஏற்குமாறு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையால் பதில் கொடுக்கப்பட்டாக வேண்டும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved