World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

US, Israel prepare mass killings in Iraq

அமெரிக்கா, இஸ்ரேல் ஈராக்கில் பொதுமக்களைக் கொன்று குவிக்க தயாராகின்றன.

By Bill Vann
10 December 2003

Use this version to print | Send this link by email | Email the author

இஸ்ரேல் இராணுவத்தின் உதவியோடு ஒட்டுமொத்தமாக ஈராக் மக்களைக் கொன்று குவிக்க புஷ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க உள்ளதாக அமெரிக்க மற்றும் இஸ்ரேல் வட்டாரங்களை மேற்கோள் காட்டி அண்மையில் செய்திகள் வெளிவிடப்பட்டு வருகின்றன.

அடுத்த நவம்பரில் தேர்தல் நடப்பதற்கு முன்னர் ஈராக்கில் நடந்து கொண்டிருக்கும் தாக்குதல்களால் அமெரிக்கத் தரப்பிற்கு ஏற்பட்டு வரும் சேதங்களை குறைப்பதில் உறுதியுடன் உள்ள அமெரிக்க இராணுவம் பெருகிவரும் பொதுமக்களது எதிர்ப்பைக் கண்டு விரக்தியடைந்துள்ளது. வியட்நாம் போரின்போது CIA மேற்கொண்ட களங்கம் நிறைந்த "Operation Phoenix" படுகொலைத் திட்டங்களைப் போன்று ஈராக்கிலும், அமெரிக்கப் படைகளை எதிர்த்து நிற்கும் பொதுமக்களைக் கொன்று குவிக்கும் கொள்கையை அமெரிக்கா வகுத்துள்ளது. இத்திட்டத்தினால், 1968 இல் இருந்து நான்கு வருட காலத்தில் 41,000 வியட்நாம் மக்கள் கொல்லப்பட்டனர்.

புதிய கிளர்ச்சி எதிர்ப்பு பிரச்சாரத்தை நகரப்பகுதிகளில் நடத்துவது தொடர்பான நடவடிக்கைகளில் ஆலோசனைகளை வழங்குவதற்காக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த (IDF) நகர்ப்புற போர் நடவடிக்கை நிபுணர்களை, அமெரிக்க சிறப்புப் படைகளின் தலைமையிடமான வடக்கு கரோலினாவின், ஃபோர்ட் பிரேக் (Fort Bragg) பகுதிக்கு வந்திருக்கின்றனர். மேற்குக்கரை, காசா பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்த இஸ்ரேல் படைகளுக்கு எதிராக பாலஸ்தீன மக்கள் நடத்திவரும் எதிர்ப்பைக் கொன்று குவித்துவரும் இஸ்ரேல் படைகள் பயன்படுத்தி வரும் முறைகளில் அமெரிக்கச் சிறப்புப் படையினருக்கு தற்போது பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

''இது அடிப்படையிலேயே ஒரு கொலைத் திட்டம்தான்...... இது ஒரு வேட்டை- கொலைகாரன் குழுவாகும்'' என்று மூத்த முன்னாள் புலனாய்வு அதிகாரி பிரிட்டன் கார்டியன் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இஸ்ரேலின் உதவியை வாஷிங்டன் சார்ந்திருப்பது அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிராக மத்தியக்கிழக்கு முழுவதிலும் ஆத்திரத்தைத் தீவிரப்படுத்தவே செய்யும் என அவர் எச்சரிக்கை செய்திருக்கிறார்.

''இது அபத்தமானது, பைத்தியக்கார நடவடிக்கையாகும். ஏற்கனவே அரபு நாடுகளில் எம்மை இஸ்ரேல் பிரதமர் ஷரோனோடு ஒப்பிட்டுப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதை நாம் நியாயப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள் உதவியோடு கொலைக்காரக் குழுக்களை அமைத்துக் கொண்டிருக்கிறோம்'' என்றும் அந்த முன்னாள் அதிகாரி தெரிவித்தார்.

கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அமெரிக்கப் படைகளுக்கு ''ஆலோசனை'' வழங்குவதற்காக இஸ்ரேல் இராணுவ ''ஆலோசகர்கள்'' ஈராக்கிற்கு அனுப்பப்பட்டிருப்பதாக வாஷிங்டன் புலனாய்வு வட்டாரங்களை மேற்கோள் காட்டி கார்டியன் தகவல் தந்திருக்கிறது.

ஐமிச்சத்திற்குரிய எதிர்ப்பு போராளிகளை வேட்டையாடும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சிரியா நாட்டிற்குள்ளும் கொலைக் குழுக்கள் அனுப்பப்படும். பிற அரபு நாடுகளிலிருந்தும் ஈராக்கிற்கு அனுப்பப்படும் எதிர்ப்பாளர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களை வேட்டையாடி பிடிப்பதற்காகவும், அவர்கள் ஈராக் எல்லைக்குள் நுழையும் முன்னர் அத்தகைய திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அந்த பிரிட்டிஷ் பத்திரிகை விவரம் தந்திருக்கிறது.

இதற்கிடையில் முன்னாள் அமெரிக்க புலனாய்வு நிருபரான ஷூமர் ஹெர்ஷ் (Seymour Hersh) இந்த வார நியூ யோர்க்கர் சஞ்சிகையில் ஒரு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். ''ஈராக்கில் சிறப்புப் படைகள் மறைமுகமாக நடத்தி வரும் போர் தீவிரமடையக்கூடும்'' என அவர் கூறினார். படுகொலைகளை மேற்கொள்ளும் திட்டத்தில் பயிற்சியில் இஸ்ரேலின் பங்களிப்பு தொடர்பான தகவல்களை மேலும் உறுதிப்படுத்துகிற வகையில் ஷூமர் ஹெர்ஸ் கட்டுரை அமைந்துள்ளது.

அவர் தந்துள்ள தகவலின்படி புதிய சிறப்புப்படைகள் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. 121ஆவது பணிக்குழு (Task Force 121) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இராணுவத்தின் டெல்டா படைத்துருப்புக்கள் கடற்படை SEAL பிரிவினர், CIA துணை இராணுவத்தினர் இந்த சிறப்புப் படைகளில் இடம் பெற்றுள்ளனர். ''பாத்திஸ்ட் கிளர்ச்சிக்காரர்களை பிடித்து அல்லது படுகொலை செய்து அவர்களை செயலிழக்கச் செய்வதை முன்னுரிமையாகக் கொண்டு இந்தச் சிறப்புப் படைப்பிரிவு செயல்படும்'' என்று அவர் எழுதியுள்ளார்.

ஹெர்ஷ் தொடர்ந்தும் ''அமெரிக்க, இஸ்ரேலிய மற்றும் புலனாய்வு அதிகாரிகள் தந்துள்ள தகவல்களின்படி இஸ்ரேல் அதிரடிப்படையினரும், அமெரிக்க அதிரடிப்படையினரும் வடக்கு கரோலினாவின் ஃபோர்ட் பிரேக் பயிற்சித் தளத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இஸ்ரேலும், ஈராக்கில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஆயத்தப் பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. இஸ்ரேல் அதிரடிப்படையினர் ரகசியமாக தற்காலிக ஆலோசகர்களாக பணியாற்றுபவர், முழு அளவிலான நடவடிக்கைகள் ஆரம்பமாகும் போதும் இரகசிய ஆலோசகர்களாகப் பணியாற்றுவார்கள்.''

ஈராக்கில் நடைபெறும் இந்த கிளர்ச்சி எதிர்பு நடவடிக்கைகள் குறித்து கருத்து எதுவும் கூறுவதற்கு அமெரிக்க மற்றும் இஸ்ரேல் அதிகாரிகள் மறுத்து விட்டனர். ''இதைப்பற்றி எவரும் பேசுவதற்கு விரும்பவில்லை. ஏனெனில் இது கொந்தளிப்பைக் கிளறும் தன்மை கொண்டது'' என்று ஒரு இஸ்ரேல் அதிகாரி ஹெர்ஸ்சிடம் கருத்துத் தெரிவித்தார். ''கொலைத் திட்டம் தொடர்பாக இரண்டு அரசுகளுமே மறைத்து வைப்பது அவர்கள் இருதரப்பு நலனுக்குமே உகந்தது என்று உயர் மட்டத்தில் முடிவு செய்திருப்பதாகவும்'' அதிகாரி தெரிவித்தார்.

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு செய்துள்ள பாலஸ்தீன பகுதிகளில், பாலஸ்தீன மக்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் இரத்தக்களரி நடவடிக்கைகள் போன்று ஈராக்கில் அமெரிக்கப் படைகள் ஏற்கனவே நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக வந்து கொண்டிருக்கும் தகவல்களைத் தொடர்ந்து தற்போது இஸ்ரேல் ஒத்துழைப்போடு மேற்கொள்ளப்படவிருக்கும் நடவடிக்கைகள் பற்றிய செய்திகளும் வருகின்றன.

அண்மை வாரங்களில் அமெரிக்கப் படைகள், ஈராக்கில் எதிர்ப்பாளர்கள் என நம்பப்படுபவர்களது வீடுகளை இடித்துத் தள்ளுவதாக திரும்பத்திரும்பச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் எதிர்ப்பாளர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களின் உறவினர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். குறைந்த பட்சம் ஒரு குறிப்பிட்ட சம்பவத்தில் ஒரு கிராமம் முழுவதையுமே முள்ளுகம்பிகளால் சுற்றி வளைத்துக் கொண்டு நின்று சோதனைச்சாவடி ஒன்றை அமைத்தனர். அமெரிக்க இராணுவத்தினரது அந்தச் சோதனைச் சாவடி மூலம்தான் அந்த கிராம மக்கள் கிராமத்திற்கு வெளியில் சென்றுவர முடியும் என்ற நெருக்கடி ஏற்பட்டது.

இந்த நடவடிக்கைகள் எல்லாம் இஸ்ரேல் ஆக்கிரமிப்புப் படைகள் மேற்குக்கரை மற்றும் காசா பகுதியில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தந்திரங்கள் ஆகும்.

இத்தகைய தாக்குதல் உத்திகளை இஸ்ரேல் அமெரிக்கப் படைகளுக்குத் தந்துகொண்டிருப்பதாக சென்ற ஜூலை மாதம் ஆர்மி (Army) சஞ்சிகைக்கு மூத்த பென்டகன் திட்ட அதிகாரி எழுதிய கடிதத்தில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

மூலோபாயங்கள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பாக துணைத்தலைமை அலுவலர் பிரிகேடியர் ஜெனரல் மைக்கேல் வேனே (Brig. Gen. Michael Vane) ஏற்கனவே அமெரிக்க அதிகாரிகள் நகர்புற எதிர்ப்பு போர் மற்றும் புலனாய்வு முறைகளில் அமெரிக்க அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்க இஸ்ரேல் இராணுவத்திடம் அனுப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

''இன்னும் ஏராளமான பணிகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது. நகர்புற போர் தொடர்பாக நமது சிந்தனை மற்றும் தத்துவத்தை காலத்திற்கு ஒவ்வாதது என வர்ணிப்பது சரியல்ல. அனுபவம் நமக்குப் பல படிப்பினைகளைத் தந்து கொண்டிருக்கிறது. அந்த அனுபவங்களை படிப்பினைகளைத் தொடர்ந்து மதிப்பீடு செய்து நம்முடைய கருத்துக்கள் மற்றும் பயிற்சி முறைகளில் தக்கவகையில் இணைத்து வருகிறோம்'' அவர் எழுதினார்

''எடுத்துக்காட்டாக அண்மையில் நாங்கள் இஸ்ரேலுக்குச் சென்றோம். நகரப் பகுதிகளில் அவர்கள் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளிலிருந்து படிப்பினைகளை ஈர்த்துக் கொள்வதற்காகச் சென்றோம்.'' இவ்வாறு அந்த அதிகாரி தமது கடிதத்தில் விளக்கம் தந்திருக்கிறார்.

அமெரிக்காவிற்கும், இஸ்ரேலுக்கும் இடையில் ஈராக் விவகாரத்தில் ஒத்துழைப்பு நிலவுவது புதிதல்ல. சென்ற மார்ச் மாதம் படை எடுப்பு ஆரம்பமாவதற்கு முன்னர் அமெரிக்கப் படைகள் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டன. அங்கு நெகேவ் பாலைவனத்தில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய நகர்புற போர் ஒத்திகையொன்றில் கலந்து கொண்டன. அதற்கு முந்தைய ஆண்டில் ஜெனின் பகுதியிருந்த பாலஸ்தீன அகதிகள் முகாமில் இஸ்ரேல் படைகள் நடாத்திய கொடூர தாக்குதல்களில் கையாளப்பட்ட உத்திகளையும் அமெரிக்க அதிகாரிகள் ஆராய்ந்தனர்.

இப்போது வாஷிங்டன், இஸ்ரேல் ஒடுக்கு முறை நிபுணர்களை நோக்கி திரும்பியுள்ளமையில் ஒரு வஞ்சகமும் அடங்கியுள்ளது. சென்ற ஒரு மாதத்திற்குள்ளேயே பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு கட்டளையிடும் அதிகாரம் படைத்த ''ஷின்பெட்'' (Shin Bet) என்கிற இஸ்ரேலின் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த முன்னாள் தலைமை அதிகாரிகள் 4 பேரும் மற்றும் இன்றைய இஸ்ரேல் இராணுவத் தலைமை அதிகாரி ஆகியோரும் ஒரு எச்சரிக்கை விடுத்திருந்தனர். இஸ்ரேலின் பிரதமர் ஏரியல் ஷரோனின் வலதுசாரி சியோனிஸ்ட் அரசாங்கம் ஆக்கிரமித்துக் கொண்டுள்ள பகுதிகளில் மேற்கொண்டுவரும் இரும்புகர ஒடுக்கு முறைகள் மூலம் சமூக மற்றும் இராணுவ பேரழிவு ஏற்படும் என்று அவர்கள் எச்சரிக்கை செய்திருந்தனர்.

''குறிவைத்து நடத்தப்படும் படுகொலைகள்'' மூலம் பெரும்பாலும் வழிப்போக்கர்கள், தெருவில் நடமாடுவோர், வேடிக்கை பார்ப்பவர்கள் பெருமளவில் பலியாகின்றனர். கூட்டுத்தண்டனைகள் மூலம்.... பெருமளவில் வீடுகள் இடிக்கப்படுகின்றன. சாலைத் தடைகள் உருவாக்கப்படுகின்றன. ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. இது போன்ற ஒடுக்குமுறை நடவடிக்கைகளால் பாலஸ்தீன மக்களின் வெறுப்பு அதிகரித்து எதிர்ப்புக்கு மக்களது ஆதரவு பெருகிக் கொண்டே வருகிறது.

இஸ்ரேல் பயிற்சிபெற்ற அதிரடிப்படை வீரர்கள் தற்போது ஈராக்கிற்கு அனுப்பப்படுவதால் அதே அடிப்படையில் ஆக்கிரமிப்பு எதிர்ப்புக் கிளர்ச்சி வலுவடைந்து, ஈராக்கிய பொதுமக்களது ஆதரவு கிளர்ச்சியாளர்கள் பக்கம் திரளும் என்பதில் சந்தேகத்திற்கு இடம் இல்லை. கொலைக்குழுக்களின் அதிரடி நடவடிக்கைகளால் மக்களது வெறுப்புத்தான் அதிகமாகும். புஷ் இன் கொள்கையால் உருவாக்கப்பட்ட ஈராக்கிய புதைசேற்றில் சிக்கித் தவிக்கும் அமெரிக்கத் துருப்புக்கள் விடிவிப்பதற்கு பதிலாக இப்புதிய கொலைகாரத்தனமான தந்திரோபாயங்கள் ஈராக்கின் மோதல்களை இன்னும் தீவிரமடையச்செய்யும்.

ஈராக் படை எடுப்பிற்குத் திட்டமிட்ட மற்றும் ஈராக் ஆக்கிரமிப்பை தொடருமாறும் நெருக்கும் புஷ் நிர்வாகத்தில் உள்ள பல முன்னணித் தலைவர்கள், அதிகாரிகள் அனைவரும் இஸ்ரேலில் உள்ள வலதுசாரி லிக்குட் அரசாங்கத்தோடு மிக நெருக்கமாக அரசியல் தொடர்புகள் உள்ளதுடன், ஷரோனின் ஒடுக்குமுறை மூலோபாயத்தின் வெற்றுத் தன்மை குறித்தும் அரசியல் குருட்டுத்தன்மை கொண்டவர்களாக இருக்கின்றனர்.

இதற்கிடையில் புதிய கிளர்ச்சி எதிர்ப்பு இராணுவ பிரசார நடவடிக்கைகளைத் திட்டமிடுவதில் முன்னணி பங்கு வகிப்பவர் லெப்டினன்ட் ஜெனரல் வில்லியம் மஜர்ரி போய்க்கின் என்பவராவர். இந்தத் தளபதி வியட்னாமில் சிறப்புப்படைப் பிரிவில் பணியாற்றிய அனுபவமிக்கவர். இவர் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஈராக்கிய போர் இஸ்லாமியருக்கும், கிறிஸ்துவ மதத்திற்கும் இடையே நடைபெற்றுவரும் கிளர்ச்சி என்று சித்தரித்ததன் மூலம் ஒரு கருத்து மோதலில் சிக்கிக்கொண்டார். கிறிஸ்துவ மத போதகர்களுக்கான கூட்டங்களில் கலந்து கொண்ட இந்தத் தளபதி ''கிறிஸ்துவ இராணுவத்திற்கு'' (Christian army) தளபதி என்ற முறையில் தான் தனது நடவடிக்கைகளுக்காக இறைவனுக்கு மட்டுமே பதில் கூறவேண்டியவர் என்றும் அறிவித்தார். பெரும்பாலான அமெரிக்க மக்கள் புஷ்ஷிற்கு வாக்களிக்கவில்லை என்ற உண்மைக்கு அப்பாலும் இறைவனே புஷ்ஷை வெள்ளை மாளிகையில் பதவியில் அமர்த்தியதாகவும் கருத்துத் தெரிவித்தார்.

இப்படி இவர் கொந்தளிப்பை உருவாக்கும் வகையில் பேசியது அக்டோபர் மாதம் பிரசுரிக்கப்பட்டவுடன், அந்தத் தளபதியை இராணுவத்திலிருந்து பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் பரவலாக எழுப்பப்பட்டன. அந்தக் கோரிக்கைகளைப் பாதுகாப்பு அமைச்சர் டோனால் ரம்ஸ்பீல்ட் ஏற்றுக்கொள்ளவில்லை. ஈராக்கில் ஒடுக்கு முறை நடவடிக்கைகளை முடுக்கி விடுவதில் அந்தத் தளபதி தீவிரமாகத் திட்டமிட்டுக் கொண்டிருந்ததால் தான் அப்போது ரம்ஸ்பீல்ட் அந்தத் தளபதி அவரது பதவியிலேயே நீடித்திருக்கட்டும் என்று வற்புறுத்தினார் என்பது இப்போது தெளிவாகத் தெரிய வருகிறது.

ஈராக்கில் சிறப்புப்படைத் துருப்புகளை அதிகம் சார்ந்திருக்க வேண்டும் என்ற நிலை தோன்றி இருப்பதற்கு கூடுதல் நோக்கம் ஒன்றை ஹெர்ஸ் (Hersh) சுட்டிக் காட்டியுள்ளார். பென்டகன் நடைமுறை விதிகளின்படி சிறப்புப் படைகளின் போர் நடவடிக்கைகள் அவை வெளிநாடுகளில் எங்கு அனுப்பப்படுகின்றன என்ற விவரங்கள் இரகசியமாகவே வைக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே ஈராக்கில் தற்போது நிலை கொண்டுள்ள அமெரிக்கத் துருப்புக்களுடன் இத்தகைய சிறப்புப்படைகள் இணைவது பகிரங்கத் தகவலாக வெளிவராது அரசியல் காரணங்களுக்காக புஷ் நிர்வாகம் ஈராக்கிற்கு அனுப்பப்பட்டுள்ள படைகளின் எண்ணிக்கையை குறைத்துவிட உறுதி எடுத்துள்ளது. இந்த நிலையில் மறைமுகமாக சிறப்புப் படைப்பிரிவுகளை அமெரிக்க மக்களது கவனத்திற்கு வராமலேயே அவர்களின் கண்ணிலிருந்து மறைத்து கட்டியெழுப்ப முடியும்.

புஷ் நிர்வாகத்தின் கீழ் சிறப்புப் படைகளின் எண்ணிக்கை கணிசமான அளவிற்கு உயர்ந்துள்ளது. பென்டகன் வரவுசெலவுத்திட்டத்தில் 6.5 பில்லியன் டொலர்கள் சிறப்புப் படைகளின் செலவிற்காக ஒதுக்கப்படுகிறது. இந்தச் சிறப்புப் படைப் பிரிவுகளில் பணியாற்றுவோர் மற்றும் ரிசர்வில் இருப்போர் எண்ணிக்கை 47,000 மாக உயர்ந்துள்ளது என ஹெர்ஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

Top of page