World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Blueprint for a US colonial regime in Baghdad

பாக்தாதில் அமெரிக்க காலனித்துவ அரசாங்கத்திற்கான பிரதி

By Peter Symonds
21 January 2003

Use this version to print | Send this link by email | Email the author

எதிர்வரவுள்ள ஈராக் மீதான ஆக்கிரமிப்பிற்கு மத்திய கிழக்கில் இராணுவம் குவிக்கப்படுவதுதற்கு சமமாக, பாக்தாதில் ஒரு காலனித்துவ அரசாங்கத்தை அமைப்பதற்கான வாஷிங்டனின் தயாரிப்புக்களும் ஒரு உயர் மட்டத்தை அடைந்துள்ளது. இத்திட்டங்கள் இரகசியமாக இருக்கின்றபோதிலும், புஷ் நிர்வாகத்தில் உள்ள கூரிய முரண்பாடுகள் காரணமாக அதன் முன்னேற்றம் தொடர்பான தகவல்கள் இடைக்கிடையே அமெரிக்க செய்தித்துறையினருக்கு வெளிவந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் இது தொடர்பான ஒரு தெளிவான செய்தி வெளிவந்திருந்தது. புஷ் இன்னும் தன்னுடைய இறுதி அங்கீகாரத்தை வழங்கவேண்டியுள்ளபோதிலும், நாட்டினை மீளகட்டி எழுப்புவதை சமாளிப்பதில் அமெரிக்காவின் பரந்த மற்றும் நீடித்த பங்கினை வரையறுக்கும் ''ஈராக்கின் எதிர்காலம் குறித்த பிரதி'' ஒன்று வரையப்பட்டுள்ளது. அக்கட்டுரை எடுத்துக்காட்டுவதுபோல், வாஷிங்டன் ஒரு நீண்ட இராணுவ ஆக்கிரமிப்பிற்கு தயாரிக்கின்றது.

அப்பத்திரிகை தொடர்ந்தும், ''ஒரு சில மாதங்களுக்குள் அரசாங்க மாற்றத்தை தொடர்ந்து ஒரு சிவில் நிர்வாகத்தை பதவி இருத்துவதற்கான புஷ் நிர்வாகத்தின் திட்டங்கள் முற்றுப்பெறும் தறுவாயில் இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எவ்வளவிற்கு நிலைமைகள் சாதகமாக இருந்தாலும், யுத்தம் முடிவடைந்த பல மாதங்களின் பின்னரும் அமெரிக்க இராணுவம் முழுப்பலத்துடன், பல வருடங்களுக்கு ஆயிரக்கணக்கான அமெரிக்க படையினரின் தொடர்ச்சியான பங்கு அங்கு இருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக'' குறிப்பிட்டது.

காலனித்துவப் பிரதியின் மத்திய புள்ளியாக ஈராக்கின் எண்ணெய் வளங்கள் மீதான கட்டுப்பாடு இருப்பதுடன், இது ஆக்கிரமிப்பிற்கு நிதிவழங்க பயன்படுத்தப்படும். இதற்கு பல எண்ணெய் வயல்கள் உள்ள வடக்கில் குர்திஸ்தான் சிறுபான்மையினரினதும், தெற்கில் உள்ள ஷியீட் பெரும்பான்மையினரதும் பிரிவினைக்கான முயற்சிகள் அனைத்தும் ஒடுக்குவது தேவையாக உள்ளது. குர்திஸ்தான் எழுச்சி தொடர்பான பிரச்சனைக்காக, யுத்தத்தின்போது வடக்கின் முக்கிய நகரங்களான Mosul இலும் Kirkuk இலும் அமெரிக்க படையினர் நிலைகொண்டிருப்பர் என துருக்கிக்கு அமெரிக்க அதிகாரிகள் உத்தரவாதமளித்துள்ளனர்.

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை ''அமெரிக்க படையினரது முக்கிய நடவடிக்கைகளில் ஈராக்கின் எல்லைகளை அயல்நாடுகள் எவ்விதமான திடீரென சொந்தம் கோருவதிலிருந்து பாதுகாப்பதும், நாட்டின் எண்ணைய் வளங்களையும் பாதுகாப்பது உள்ளடங்கியிருக்கும். எண்ணெயில் இருந்து கிடைக்கும் வருமானமானது ஈராக்கை மீளக்கட்டி எழுப்புவதற்கான முக்கிய ஊற்றாகவும், எண்ணெய் வர்த்தகம் நாட்டின் பல்வேறு பிரிவினரை ஒன்றிணைக்கும் பசையாக கருதப்படுகின்றது'' என குறிப்பட்டது.

இத்திட்டத்தின் ஒரு பகுதி ஐக்கிய நாடுகள் சபையின் ஆசீர்வாதத்தின் கீழ் ஒரு சர்வதேச சிவில் நிர்வாகியை நியமிப்பதாகும். இது அண்மைக்காலத்தில் ஒரு திருப்பமாகும். முன்னர், இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ஜப்பானிலும், ஜேர்மனியிலும் செய்ததுபோன்று, தனது இராணுவ தளபதி ஒருவர் ஈராக்கை நிர்வகிப்பதற்கு முன்னுரிமை கொடுத்தது. ஆனால் அமெரிக்காவிலும், சர்வதேசரீதியாகவும் யுத்தத்திற்கு எதிர்ப்பு அதிகரித்ததும் தனது நோக்கத்தை கைவிடுவது அவசியம் என்பதை உணர்ந்துகொண்டது.

ஜனவரி 6ம் திகதி New York Times பத்திரிகையின் கட்டுரை ஒன்று, அமெரிக்க இராணுவ நிர்வாகம் தொடர்பாக உத்தியோகபூர்வமான அரபுநாடுகளின் பிரதிபலிப்பு சாதகமற்றதாக இருந்ததாக குறிப்பட்டது. அது ''ஈராக்கில் ஒரு அமெரிக்க சீசரை அல்லது காலனித்துவ ஆளுனர் போன்ற அடையாளத்தையோ அராபியர்கள் விரும்பவில்லை'' என குறிப்பிட்டதுடன், யுத்தத்தின் பின்னர் ஜப்பானில் தளபதி MacArthur இன் பங்கை ஞாபகப்படுத்திய ஒரு உயர் இராணுவ அதிகாரி ''எங்களுக்கு இறுதியில் தேவையானது சுங்கானுடன் சுற்றிவந்து ஒரு அரசாங்கத்தை எவ்வாறு உருவாக்குவது என ஈராக்கியருக்கு கூறக்கூடிய ஒருவரே தேவை'' என குறிப்பட்டதாக அப்பத்திரிகை தெரிவித்தது.

எவ்வாறிருந்தபோதிலும், ஐக்கிய நாடுகளின் உதவியுடனோ அல்லது உதவியில்லாமலோ தனது திட்டங்களை உருவாக்குவதற்கே புஷ் நிர்வாகம் முனைகின்றது. அதன் வார்த்தை ஜாலங்கள் உறுதியற்றவை. அமெரிக்க அதிகாரிகள் தமது சுயவிருப்பத்தின்படி ஆக்கரமிப்பிற்கான காரணமாக ''ஜனநாயக ஈராக்கை'' உருவாக்குவதாக கூறுகின்றனர். ஈராக்கிய மக்களுக்கு நாட்டை ஆள்வது தொடர்பாக ஒன்றும் கூறமுடியாது. ஒரு பெயரளவிலான ஒரு வாக்கெடுப்பு கூட ஒரு வரையறுக்க முடியாத காலத்திற்கு பின்போடப்பட்டுள்ளது.

சதாம் ஹூசேன் தனது அதிகாரத்துவ ஆட்சிக்கு அடித்தளமாக கொண்டிருந்த ஒடுக்குமுறைமிக்க அரச அமைப்பு முறையின் பெருமளவினை அப்படியே வைத்திருக்க வாஷிங்டன் முனைகின்றது. விசாரணைக்காக உயர் நிர்வாக மற்றும் இராணுவ தலைவர்களின் பட்டியல் ஒன்றை C.I.A தயாரித்துள்ளது. ஆனால் New York Times இன்படி, ஒரு சிறிய அளவிலான உயர் அதிகாரிகளே அகற்றப்படுவர். சதாம் ஹூசேனுக்கு நெருக்கமான புரட்சிகர நீதிமன்றமும், விஷேட பாதுகாப்பு அமைப்புமே அகற்றப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளன.

புஷ் நிர்வாகத்தினுள் முக்கியமாக விவாதிக்கப்படும் விடயம், பல பத்துவருடங்களாக அமெரிக்காவின் நிதியால் கவனமாக ஊட்டிவளர்க்கப்பட்ட வெளிநாட்டிலுள்ள ஈராக் எதிர்குழுக்களின் பங்காகும். வலதுசாரி கருத்தியல்வாதிகளான அமெரிக்க பாதுகாப்பு கொள்கை சபையின் தலைவரான Richard Perle, மற்றும் பாதுகாப்பு அமைச்சரான கொலின் பெளல் போன்றோரால், ஆப்கானிஸ்தானில் போன்று அமெரிக்க கையாளான ஈராக் தேசிய காங்கிரசின் தலைவரான அகமத் ஷாலாபியை தலைவராக தேர்ந்தெடுத்து ஒரு ''ஜனநாயக'' ஈராக் அரசாங்கத்தை உருவாக்குவது முன்வைக்கப்படுகின்றது.

C.I.A உம் வெளிநாட்டு திணைக்களமும், ஷாலாபிக்கும் ஏனைய ஈராக் தேசிய காங்கிரசின் தலைவர்களுக்கும் ஈராக்கில் போதியளவு ஆதரவில்லை என்பதை சுட்டிக்காட்டி இம்முன்மொழிவை தந்திரோபாய அடித்தளத்தில் நிராகரிக்கின்றன. ஹூசேனுக்கு பின்னான அரசாங்கத்தின் பதவிக்கு போட்டியிடும் சில முன்னாள் இராணுவ தளபதிகள் யுத்த குற்றங்களை செய்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். மேலும், ஈராக்கினுள் ஆதரவுள்ள இரண்டு எதிர்குழுக்களான குர்திஸ்தான் கட்சிகளும், ஷியிட்டுகளின் ஆதரவுள்ள ஈராக்கில் இஸ்லாமிய புரட்சிக்கான உயர் குழுவும் (Supreme Council for the Islamic Revolution in Iraq -SCIRI) வாஷிங்டனின் விருப்பத்திற்கு மாறாக தமது பிரிவினைவாத, வகுப்புவாத கோரிக்கைகளை முன்வைக்கலாம்.

எதிர்க்குழுக்களின் மாநாடு

இவ்விடயமானது கடந்த மாதம் லண்டனில் நிகழ்ந்த எதிர்க்குழுக்களின் கூட்டத்தில் C.I.A இற்கும் வெளிநாட்டு திணைக்களத்திற்கும் சாதகமாக தீர்க்கப்பட்டது. இம்மாநாட்டின் முன்னதாக எதிர்குழுக்களின் தலைவர்களுக்கு, அமெரிக்காவின் நேரடித் திட்டங்களை சிக்கலாக்கக்கூடிய விடயமான வெளிநாட்டில் ஒரு அரசாங்கம் உருவாக்கப்படுவதை எதிர்த்து அமெரிக்க அதிகாரிகள் ஒரு அறிக்கையை வினியோகித்திருந்தனர். New York Times இன் அறிக்கை ஒன்று குறிப்பிட்டிருந்ததுபோல, அமெரிக்க விஷேட தூதுவரான Zalmay Khalilzad உள்ளடங்கலான அமெரிக்க அதிகாரிகள் ''அம்மாநாட்டை அவதானித்ததுடன், வாஷிங்டனின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக அதன் தலைவர்களை தனிப்பட்டரீதியில் சந்தித்து வசப்படுத்தி அமெரிக்கா வரைந்த எல்லைகளை அவர்கள் தாண்டமாட்டார்கள் என உறுதியளிக்க வைத்தனர்''.

அம்மாநாடானது ஒருங்கிணைந்து வழிப்படுத்தும் குழுவில் பதவிகளுக்காக போட்டி குழுக்களுக்கிடையே மோதல்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டதுடன், வேறுபட்ட நோக்கங்களை சமாளிப்பதற்காக அக்குழு 65 அங்கத்தவர்களை கொண்டதாக அதிகரிக்கப்பட்டது. அம்மாநாடு ஒரு ''ஜனநாயக, கூட்டாட்சி, பாராளுமன்ற அரசாங்கத்திற்கு'' அழைப்பு விட்டு முடிவடைந்ததுடன், ஹூசேனின் வீழ்ச்சிக்கு பின்னர் நாட்டின் கட்டுப்பாட்டை ஈராக்கியர்கள் எடுக்க அமெரிக்கா அனுமதிக்கவேண்டும் என்றும் கோரிக்கைவிட்டனர். ஆனால், இந்த அறிக்கையானது ஈராக்கிய குழுக்களுக்கு ஒரு அரசியல் மூடுதிரையை வழங்குவதை முக்கிய நோக்கமாக கொண்டது எனவும், ''எந்தவொரு குழுவும் தாம் அமெரிக்காவின் கையாக நோக்கப்படுவதை விரும்பவில்லை'' என New York Times குறிப்பட்டது.

அம்மாநாடானது, ஜனவரி 15ம் திகதி வட ஈராக் நகரமான Salahuddin இல் இன்னுமொரு கூட்டத்தை நடாத்துவதற்கு முன்மொழிந்தது. ஏப்பிரல் 1991ல் இருந்து வட ஈராக்கானது அமெரிக்காவும், பிரித்தானியாவும் ஒரு தலைப்பட்டசமாக ''பறக்க தடைசெய்யப்பட்ட பிரதேசமாக'' அறிவித்ததிலிருந்து உண்மையான சுயாதீனமானதாகவே உள்ளது. ''இந்த மாநாடானது ஈராக்கினுள் நடைபெறுவதால் மிகவும் முக்கியமானது எனவும், விடுதலை வருகின்றது என சதாம் ஹூசேனுக்கு பலமான ஒரு செய்தியை அனுப்பும்'' என ஈராக்கிய தேசிய குழுவின் தலைவரான ஷலாபி தெரிவித்துள்ளார். ஆனால் அம்மாநாட்டின் பிரதிநிகளுக்கான பாதுகாப்பிற்கு தம்மால் உத்தரவாதம் வழங்க முடியாது என அமெரிக்கா அறிவித்ததில் இருந்து இது பிற்போடப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை Washington Post பத்திரிகையின் கட்டுரை ஒன்று, ஈராக்கிய வெளிநாட்டு குழுக்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பட்டது. மேலும் ''ஈராக்கிய குழுவின் ஆலோசனை வழங்கும் பங்கிற்கு யுத்தத்தை தொடர்ந்த காலத்தில் கூடியளவு படிப்படியாக முக்கிய பாத்திரம் வழங்கப்பட்டாலும், தற்போதைய அமெரிக்காவின் சிந்தனையின்படி அவர்களால் (ஈராக்கிய வெளிநாட்டு குழு) தமது நாட்டின் மீதான கட்டுப்பாட்டை ஒரு வருடத்திற்கோ அல்லது அதற்கு மேலோ வைத்திருக்க முடியாது'' என குறிப்பட்டது.

எவ்வாறிருந்தபோதிலும், ஹூசேனை அமெரிக்க இராணுவம் வெளியேற்றும் என்பதின்மேல் தமது நம்பிக்கைகளை தொடர்ச்சியாக கொண்டுள்ளனர். கடந்த வாரம், நூற்றுக்கணக்கான வெளிநாட்டிலுள்ள ஈராக்கியர்கள் சம்மதத்தை வெளிக்காட்டிக்கொள்ள அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலுமுள்ள இராணுவத்தளங்களில் தம்மை பதிவு செய்ய ஆரம்பித்துள்ளனர். இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஹங்கேரிக்கு அனுப்பப்பட்டு, அங்கு அவர்களுக்கு ஈராக்கினுள் உதவி படையினராக செயற்படுவதற்கு ஏற்றதான அடிப்படை பயிற்சியை பெறுவர்.

கூடியளவு பெயர்களை வழங்கியுள்ள ஈராக் தேசிய குழு, பயிற்சியளிக்கப்படும் 3000 பேரை கொண்டு புதிய ஈராக்கிய இராணுவத்தின் மையக்கரு அமையலாம் என எதிர்பார்க்கின்றது. ஆனால், வெளிநாட்டு ஈராக்கியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாத்திரம் இரண்டாம் பட்சமானது. அதாவது, அவர்கள் மொழிபெயர்ப்பாளர்களாகவும், வழிகாட்டிகளாகவும், பொலிசாராகவும், அமெரிக்க இராணுவத்திற்கும் ஈராக்கிய மக்களுக்கும் இடையிலான தூதர்களாகவும் செயற்படுவர்.

சில எதிர்க்குழுக்கள் தமது தலையீட்டை முற்றாக நிராகரித்துள்ளனர். ஈராக்கில் இஸ்லாமிய புரட்சிக்கான உயர் குழுவின் லண்டன் நிர்வாகியான Hamid Bayati ''நாங்கள் அமெரிக்கர்களுடன் உள்ள ஆக்கிரமிப்பின் ஒரு பகுதியாக நோக்கப்படுவோம். பொதுவாக, அமெரிக்கர்களின் கைப்பொம்மை என ஈராக்கில் செய்யப்படும் பிரச்சாரத்தால் நாங்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளோம்'' என தெரிவித்தார்.

ஹூசேனுக்கு பின்னரான நிர்வாகத்திற்கான தயாரிப்புக்கள் இன்னமும் இறுதி முடிவெடுக்கப்படாது உள்ளதுடன், இது அதில் உள்ளடக்கப்பட உள்ளவர்களின் வகைகளில் தங்கியுள்ளது. ஹூசேனை பலாத்காரத்தால் வெளியேற்றுவது அல்லது உள்சதியால் அகற்றுவது வெற்றிபெறுமானால், புஷ் நிர்வாகம் ஈராக்கினுள் உள்ள இராணுவ மற்றும் சிவில் தலைவர்களை தனது திட்டத்தில் இணைத்துக்கொள்ள வேண்டியிருக்கலாம். ஆனால், இது எவ்வகைப்பட்டதாக இருந்தாலும், பிரதியின் மத்திய நோக்கம் மாறாது. அதாவது ஈராக்கின் மீதும் அதன் எண்ணெய் விநியோகத்தின் மீதும் அமெரிக்காவின் இராணுவ, அரசியல் ஆழுமையை நிலைநாட்டுவதாகும்.

See Also :

போருக்கு எதிரான போராட்டத்தில் அரசியல் பிரச்சினைகள்

ஈராக்கிற்கு எதிராக அமெரிக்காவின் போர் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில்: 2003-ம் ஆண்டின் அரசியல் சவால்

ஈராக்கிற்கு எதிரான போரை எதிர்ப்பதற்கு ஒரு சோசலிச மூலோபாயம்

ஈராக்கிற்கு எதிரான போரும் உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க முன்னெடுப்பும்

Top of page