World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

What is the US military doing on the Iraq-Syria border?

ஈராக்-சிரியா எல்லையில் அமெரிக்க இராணுவம் என்ன செய்து கொண்டிருக்கிறது?

By Peter Symonds
28 June 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக்-சிரியா எல்லையில், ஒரு தொலைப் பகுதியில், வாகனங்களின் வரிசை ஒன்றின் மீது அமெரிக்க இராணுவம் ஆத்திரத்தைத் தூண்டும் முறையில் நடத்திய தாக்குதல் பற்றிய விரிவான விவரத்தை, ஒரு வாரத்திற்கும் மேலாக புஷ் நிர்வாகம் கொடுக்க மறுக்கிறது.

ஜூன் 18-19 இரவில் நடந்த இந்த நடவடிக்கையில், ஹெலிகாப்டர், AC130 துப்பாக்கிகளும், ஆயுதமேந்திய Predator Drones மற்றும் தரை தாக்கும் விமானங்களின் ஆதரவுடன் அமெரிக்கச் சிறப்புப் படைகள் ஈடுபட்டிருந்தன. வாகன அணிவரிசையை பெரும் நாசத்திற்கு உட்படுத்தியதோடன்றி, அருகிலிருந்த கிராமமான டிப் (Dhib) தாக்குதலுக்காளாகி, வாகனங்களும், கட்டிடங்களும் அழிக்கப்பட்டன. சிரிய எல்லைப் பகுதியிலிருந்த காவற்படையோடும் போரிட்ட அமெரிக்க இராணுவப் பிரிவினர், அவர்களில் படுகாயமடைந்த மூவருட்பட ஐந்து பேரைச் சிறையும் பிடித்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியைப் பற்றி பல நாட்கள் எதுவும் சொல்லப்படவில்லை. இதைப் பற்றி ஓரளவு விவரங்களை மட்டுமே வெளியிட்டு, இந்தத் தாக்குதலால் சதாம் ஹூசேனோ அல்லது அவருடைய மகன்களோ கொல்லப்பட்டுவிட்டனரோ என்பதற்காக DNA ஆய்வுகள் நடத்தப்பட்டதாகக் கூறிய தகவல் பிரிட்டனின் Observer செய்தித்தாளில் கடந்த ஞாயிறன்று தான் வெளிப்பட்டது. அமெரிக்கப் படைகள் அவர்களை "கடுமையாகத் துரத்திக்கொண்டு" போனதில் சிரியாவிற்குள்ளும் நுழைந்ததாக அமெரிக்க அதிகாரிகளை மேற்கோளிட்டு அமெரிக்க செய்திப் பத்திரிகைகள் அறிவித்தன.

செவ்வாய்க்கிழமையன்றுதான் செய்தியாளர் கூட்டம் ஒன்றில் அமெரிக்கப் பாதுகாப்பு செயலர் டொனால்ட் ரம்ஸ்பெல்டும் கூட்டுப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் ரிச்சர்ட் மையர்ஸும் தாக்குதல் நடந்ததை உறுதிப்படுத்தினர். "மிக நல்ல உளவுத் தகவலை" அடிப்படையாகக் கொண்டு அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறிய மையர்ஸ் அந்தத் தகவல் என்ன என்பதைக் கூற மறுத்துவிட்டார். சதாம் ஹூசேனோ, அவருடைய மகன்களோ, அல்லது பழைய மூத்த அதிகாரிகளோ கொல்லப்பட்டுவிட்டார்களா என்பது பற்றிய "நம்பிக்கை தனக்குக் கிடையாது" என்று ரம்ஸ்பெல்டு அறிவித்துவிட்டார்.

எத்தனை பேர் கொல்லப்பட்டனர் அல்லது காயமுற்றனர், அவர்கள் யார் போன்ற விவரங்களை, நிகழ்ச்சியைப் பற்றிய கூடுதல் விசாரணையில்லாமல் தெரிவிப்பதற்கில்லை என்று ரம்ஸ்பெல்டும் மையர்சும் கூறிவிட்டனர். ஏன் அமெரிக்கப் படைகள் சிரியாவின் எல்லைப்புறக் காவல் படையுடன் போரிட்டனர், சிரியாவிற்குள் நுழைந்தனரா அல்லது அவர்கள் அவ்வாறு செல்ல அனுமதிக்கப்பட்டனரா என்பதைப் பற்றியும் ரம்ஸ்பெல்ட் விளக்க மறுத்துவிட்டார். சிரியாவின் தேசிய இறைமையைப் பற்றி, "வாழ்க்கையில் எப்பொழுதும் எல்லைகள் தெளிவாக இருந்ததில்லை" என்ற அறிவிப்புடன் இகழ்ச்சியுடன் அப்பிரச்சினையை முடித்துவிட்டார்.

பென்டகன் அதிகாரிகள் வேறு எந்தத் தகவலையும் அளிக்கவில்லை என்றாலும், கிராமத்தைப் பார்வையிட்ட பத்திரிகையாளர்கள் அண்மையிலிருந்த கைம் (Qaim) நகர மருத்துவமனையில், கண்மூடித்தனமான கொலைக்கு சான்றுகளைக் கண்டனர். உயிர் தப்பியவர்களின் கூற்றின்படி, கொல்லப்பட்ட நபர்கள் உள்ளூர் கிராமவாசிகள், கடத்தல்காரர்கள் என்றும் சதாம் ஹூசேனின் மூத்த அதிகாரிகள் அல்லர் என்பதும் தெரிகிறது. இப்பகுதி கடத்தலுக்குப் பெயர் போனது என்றும், உள்ளூர் ஆடுமேய்ப்பவர்கள்கூட தங்கள் ஆடுகளுக்கு எல்லை தாண்டினால் சிரியாவில் நல்ல விலைபெற முடியும் என்றும் தெரிய வருகிறது.

அகம்மது ஹமாத் என்ற 27 வயதான இளைஞர், நள்ளிரவில் தன் தாயாரால் எழுப்பப்பட்ட பின், சற்று தூரத்தில் அமெரிக்க விமானங்கள் டிரக்குகளைத் தாக்கிக்கொண்டிருப்பதைத் தான் பார்த்ததை விவரித்தார். இதையடுத்து அவருடைய வீட்டுக் காம்பெளண்டிற்குள் ஏவுகணைகள் தாக்கிய அளவில் அவருடைய மனைவியின் சகோதரி 20 வயதான ஹக்கிமா கலீலும் அவருடைய ஒரு வயதுப் பெண்ணான மகாவும் கொல்லப்பட்டனர். அவருடைய குடும்பத்தில் கோடை வெப்பத்தையொட்டி வெளியில் பலரும் படுத்திருந்ததால் பெரும்பாலானோர் உயிர் தப்பினர்.

"போரின் போது அவை (அமெரிக்க விமானங்கள்) எங்கள் கிராமத்திற்கு உயரே பறந்து சென்றபோதிலும் தாக்கியதில்லை. ஏன் இப்பொழுது அவ்வாறு செய்யப்படுகிறது?" என்று கோபத்துடன் அகம்மது கேட்டார். ஹுசைனுக்கோ மற்ற பழைய அரசாங்கத் தலைவர்களுக்கோ இந்த கிராமம் புகலிடம் கொடுத்துள்ளது என்பதை இவர் மறுத்தார். "நாங்கள் குற்றவாளிகள் இல்லை. எங்கள் குடும்பங்களை அவர்கள் ஏன் தாக்குகிறார்கள்? ஏன் எங்கள் குடும்பங்களைத் தாக்குகிறார்கள் என்பது பற்றிய காரணத்தை நாங்கள் விரும்புகிறோம்."

சிரியாவில் எல்லையிலிருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்தில் 20 வீடுகள் கொண்ட மிகச்சிறிய கிராமம்தான் தீப் (Dhib) ஆகும். கிராமத்தின் மீதான விமானத் தாக்குதல் முடிந்த அளவில் அவற்றில் நான்கு வீடுகள், இரு தானிய சேமிப்புப் பகுதிகள், பல வாகனங்கள் உட்பட அழிக்கப்பட்டுவிட்டன. வாஷிங்டன் போஸ்டிடம் குறைந்தது மேலும் இருவராவது எல்லைக்கருகில் சரக்கு வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் இறந்திருக்கவேண்டும் என்று கிராமவாசிகள் கூறினர்.

அமெரிக்க இராணுவம் எந்தக் காரணமும் கொடுக்காமல் ஐந்து குடும்பங்களை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டனர். ஆக்கிரமிக்கப்பட்ட அப்பகுதியை அடைந்த நியூயோர்க் டைம்ஸின் நிருபர் ஒருவரிடம் கடுமையாகக் கூறப்பட்டது: "அங்கேயே அப்படியே நில். நீ படமெடுத்தால் உன்னுடைய காமிராவை நான் உடைத்துவிடுவேன்." இப்பொழுது கிராமத்தின் நுழைவாயில்கள் ஆயுதங்கொண்ட வாகனங்களால் காக்கப்பட்டு வருகின்றன; மேலும், செவ்வாயன்று, மண்ணகற்றும் கருவிகளுடன் 20 போக்குவரத்து வண்டிகளடங்கிய அணி ஒன்று வந்து சேர்ந்தது, இந்தக் கிராமத்தை இராணுவத் தளமாக ஆக்குவரோ அமெரிக்கப் படையினர் என்ற ஊகம் அதிகமாயிற்று.

சிரிய எல்லைக்கு அருகே மூன்று கருகிய வாகனங்களின் எஞ்சிய பகுதிகள் இருந்தன - ஒரு சரக்கு லாரி, ஒரு பெரிய சரக்கு லாரி, ஒரு டாங்கர் (Tanker) வாகனம், பொதுவாக நியூயோர்க் டைம்ஸ் குறித்துள்ளபடி ``ஆடுகளைக் கடத்திச் செல்லப் பயன்படுத்தும் வகையான வாகனம்`` என்பவையே அவையாகும். வாகன வரிசையிலும் கிராமத்தின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலின்போது 20 ஈராக்கியர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். அமெரிக்க இராணுவத்தின்படி இவர்களில் பெரும்பாலோர் ஆபத்து கொடுக்க கூடியவர்கள் இல்லை என்று பின்னர் விடுவிக்கப்பட்டுவிட்டனர்; தாக்கப்பட்டவர்கள் முற்றிலும் குற்றம் அற்றவர்கள் என்பது மறைமுகமாக இதன் மூலம் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

திங்களன்று டமாஸ்கஸில் பேச்சுவார்த்தைகளுக்காக எலிசபெத் டிப்பிள் (Elizabeth Dibble) என்பவரைத் தூதுவராக புஷ் நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளபோதிலும், ஈராக்கில் அமெரிக்கருடைய சிறைபிடிப்பில்தான் ஐந்து சிரிய எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் உள்ளனர். மீண்டும், இதற்கான காரணம் எதுவும் கொடுக்கப்படவில்லை. வாஷிங்டன் போஸ்டிற்கு அமெரிக்க அதிகாரி ஒருவர் இத்தூதுமுறைப் பேச்சுவார்த்தைகளின் போது அமெரிக்கர் குரல் "மன்னிப்புக் கேட்கும் வகையில்" ஒலிக்கவில்லை என்றார். இன்னும் சொல்லப்போனால் சிரிய அரசாங்கம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்த இக்கூட்டம் பயன்படுத்தப்பட்டது, பழைய ஈராக்கிய அதிகாரிகளைத் தேடும் முயற்சியில் முழு ஒத்துழைப்புத் தரும் வகையில் எல்லை முழுவதும் மூடப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதிகாரி ஒருவர் பத்திரிகையிடம் கூறியவாறு "நிகழ்ச்சிக்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டதேயொழிய மன்னிப்பு கேட்கப்படவில்லை. இது ஒரு விரைவு வேட்டை போன்றதாகும். பழைய ஆட்சியின் உறுப்பினர்களைக் கைப்பற்றுவதற்காக அவ்வப்பொழுது இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அதிகாரிகள் சிரியர்களுக்குத் தெளிவுபடுத்தினர். வேறுவிதமாகச் சொன்னால், டமாஸ்கஸிடமிருந்து ஒப்புதல் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அமெரிக்க இராணுவம் சிரிய எல்லைப் பகுதியில் இதுபோன்ற தீவிர நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுவதில் முழுமையாய் நோக்கங்கொண்டிருக்கிறது.

தன்னுடைய பங்கிற்கு, வாஷிங்டனைத் திருப்திப்படுத்துவதற்கும் இந்த நிகழ்ச்சியின் தன்மையைப் பெரிதுபடுத்தாமல் இருப்பதற்கும் சிரிய அரசாங்கம் ஆவன செய்துள்ளது. பன்னாட்டு அளவில் செய்தி வெளியாகும்வரை இதைப் பற்றொன்றும் கூறப்படவில்லை. புதன்கிழமையன்று நிகழ்ச்சியைப் பற்றி விளக்கம் கேட்கும் வகையிலும், ஐந்து எல்லைப்புறக் காவலர்கள் திருப்பியனுப்பப்படவேண்டும் என்ற அளவில் அதிகாரபூர்வமான மென்மையான எதிர்ப்புக் கூறப்பட்டது. வெள்ளிக்கிழமை வரை புஷ் நிர்வாகம், அமெரிக்க இராணுவத்தினரிடம் சிரிய எல்லைப்புற காவல் வீரர்கள் ஏன் இன்னமும் கைதிகளாக உள்ளனர் என்பது பற்றிய விளக்கத்தையும் அளிக்கவில்லை.

இஸ்லாமிய ஆயுதம் ஏந்தியோரை ஈராக்கில் அனுமதிப்பதாகவும், ஆயுதத்தளவாடங்களையும் செல்ல அனுமதிப்பதாகவும், உயர்மட்ட ஈராக்கிய அதிகாரிகள் சிரியாவிற்குள் தப்பி ஓட அனுமதிப்பதாகவும், டமாஸ்கஸ் மீது ஏப்ரல் நடுப்பகுதியிலிருந்தே அச்சுறுத்தும் வகையில் அமெரிக்க அறிக்கைகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளதையடுத்துத்தான் இப்பொழுதைய பூசல் விளைந்துள்ளது. ஜனாதிபதி புஷ் சிரியா இரசாயன ஆயுதங்கள் திட்டம் ஒன்றைக் கொண்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். அதைத் தொடர்ந்து, சிரியா "ஒரு போக்கிரித்தனமான (rogue) நாடு" என்று முத்திரையிட்டு, அதன் நடவடிக்கைகளின் "ஆபத்தான விளைபயன்கள் பற்றி தீர எண்ணிப்பார்க்க வேண்டும்" என்றும் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் Ari Fleischer எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த வாரம் நடந்த செயலின் தன்மையைப் பற்றி, வெள்ளை மாளிகை மற்றும் பெண்டகன் அதிகாரிகளின் பொய்யுரை அறிக்கைகள் விடும் தன்மையைக் கருத்திற்கொண்டு பார்க்கும்போது, இந்த காலகட்டத்தில் கடந்த வார நடவடிக்கைக்கான நோக்கம் என்ன என்பதைத் திட்டவட்டமாகக் கூற இயலவில்லை. ஆனால் மனித உயிர்களைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாத அளவில் தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பது தெளிவு. "மிக நல்ல உளவுச் செய்தி" என்று பென்டகன் கூறினாலும்கூட அமெரிக்கச் சிறப்புப் படைகளோ, அமெரிக்கப் போர் விமானங்களோ, நள்ளிரவில் வாகனங்களின் வரிசையிலோ கிராம சுற்றுவளாகங்களிலோ யார் இருந்தது என்பது பற்றித் தெளிவாக நிர்ணயிக்கும் நிலையிலில்லை.

 ஈராக்கில் தன்னுடைய ஆட்சியை எவ்வாறு ஈவு இரக்கமில்லாமல் திணித்துக்கொண்டிருக்கிறது என்பதை மட்டுமல்லாமல், சிரியாவிலும் மத்திய கிழக்கின் மற்றைய பகுதிகளிலும் தன்னுடைய நடவடிக்கைகளின் பகுதிகளை விரிவாக்கும் எண்ணம் எப்படிப்பட்டது என்பதையும், இந்த பெருஞ்சோகம் ததும்பிய நிகழ்ச்சி கோடிட்டுக்காட்டுகிறது.

Top of page