World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Washington Post
justifies jingoism on Iraq

வாஷிங்டன் போஸ்ட் ஈராக் மீதான தீவிர தேசியவாதத்தை நியாயப்படுத்துகின்றது

By Bill Vann
4 March 2003

Use this version to print | Send this link by email | Email the author

பெப்ரவரி 27ம் திகதி பதிப்பில், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை வழமைக்குமாறான தலையங்கம் ஒன்றை பிரசுரித்திருந்தது. ஈராக்கிற்கு எதிராக நடைபெறவிருக்கும் போரில், அமெரிக்க அரசியல் நிர்வாகத்திற்கும், அமெரிக்க மக்களில் மிகப் பரவலான பிரிவினருக்கும் இடையே நிலவுகின்ற இடைவெளியை மேலும் எடுத்துக்காட்டுவதாக அந்த தலையங்கம் அமைந்திருக்கிறது.

''ஈராக் போர் முரசு? வாசகருக்கு ஓர் பதில்'' என்ற தலைப்பில் அந்தத் தலையங்கம் எழுதப்பட்டிருக்கிறது. தமது பத்திரிகை இடைவிடாது தொடர்ச்சியாக அமெரிக்க போர் முயற்சியை ஆதரித்து வருவதால், போருக்கு எதிராக, ''வெள்ளம் போல்'' கடிதங்கள் வந்து குவிந்திருக்கின்றன என்பதை தலையங்கம் ஏற்றுக்கொள்கிறது. இந்தக் கடிதங்கள், ''கோபத்தையும், அதிருப்தியையும்'' அடைந்தவர்களது வெளிப்பாடு என்பதையும் அந்தப் பத்திரிகை குறிப்பிட்டிருக்கின்றது. இப்பத்திரிகை ''ஈராக் போர் முரசை முடிவில்லாமல்'' ஒலித்துக்கொண்டிருப்பதாக கண்டனம் செய்த ஒரு கடிதத்தை அது மேற்கோள் காட்டியிருந்தது. மற்றொரு கடிதம், ''ஈராக்கிற்கு எதிரான போருக்கான தீவிர தேசியவாத ஓட்டத்தில் வாஷிங்டன் போஸ்ட் ஆசிரியர்கள் இவ்வளவு தரம் தாழ்ந்து சென்றுவிட்டது, உண்மையிலேயே வருத்தம் தருவதாக அமைந்திருக்கிறது'' என்று கண்டனம் செய்திருக்கிறது.

''இது ஒரு கடுமையான குற்றச்சாட்டு, இதற்கு கடுமையான பதில் தர வேண்டும்'' என்று தலையங்கம் மிக பவ்வியமாக அறிவித்தது. ஆனால், துரதிஷ்டவசமாக அந்தப் பத்திரிகை ஆசிரியர்கள் அத்தகைய பதில் எதையும் தரவில்லை. அதற்கு மாறாக, புஷ் நிர்வாகத்தின் போர்க் கொள்கையின் பழைய பல்லவிக்கு புது மெருகு கொடுத்து வெளியிட்டிருக்கின்றது.

1977ல், அந்தப் பத்திரிகையின் காலஞ்சென்ற வெளியீட்டாளர் கத்தரின் கிரஹாம் (Katharine Graham) பழைமைவாத குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர். தன்னை நடுநிலையாளர் என்று வர்ணித்துக்கொள்ளும் அவர் வித்தியாசமானவர் அல்லது தீவிரமானவர் என்று கூறுவதை தவிர்த்து வந்தவர். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கிரஹாம் கிரீன், வோல்டர் லிப்மானை மேற்கோள் காட்டி, தனது பத்திரிகையின் நிலை குறித்து கீழ்கண்டவாறு அறிவித்தார் ''ஒரு பத்திரிகை தான் சார்ந்துள்ள சமுதாயத்திற்கு சிறிதளவிற்கு இடதுசாரிப் பக்கமாகவோ அல்லது சிறிதளவிற்கு வலதுசாரிப் பக்கமாகவோ இருக்கலாம். ஆனால், தனது ஆதரவாளர்களிடம் இருந்து அந்நியப்படாமலும், தனது வாசகர்களை இழக்காமலும் நடுநிலையான ஒரு கருத்தில் இருந்து வெகுதூரம் விலகிச் சென்றுவிடமுடியாது''.

இடைப்பட்ட 25 ஆண்டுகளில் வாஷிங்டன் போஸ்ட் படிப்படியாக வலதுசாரிகள் பக்கம் சாய்ந்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது. குறிப்பாக வெளிநாட்டுக் கொள்கைகளை பொறுத்தவரை வலதுசாரி சார்புடையதாகிவிட்டது. றீகன் நிர்வாகம் நிக்கரகுவா நாட்டில் எதிர்புரட்சி கூலிப்பட்டாளத்திற்கு நிதிஉதவி செய்ததை அது ஆதரித்தது. கிரனடா மற்றும் பனாமா படையெடுப்புக்களை ஆதரித்தது. லிபியா, சூடான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் குண்டு வீசி தாக்கதல்கள் நடத்தியதை ஆதரித்ததுடன் முதலாவது, பாரசீக வளைகுடாப் போரையும், யூகோஸ்லாவியாவில் இராணுவம் தலையிட்டதையும் ஆதரித்தது.

வாராந்த அடிப்படையில் ஈராக்கிற்கு எதிரான போரை ஆதரிக்கும் அடிப்படையில் தலையங்கங்களை அந்தப் பத்திரிகை பிரசுரித்து வருகிறது. இதற்காக, வலதுசாரி மற்றும் புதிய பழைமைவாத எழுத்தாளர்கள் பட்டாளத்தையே தயாரித்து வைத்திருக்கிறது சார்லஸ் கிரவுடாமர், சார்ஜ் வில்ஸ், மைக்கேல் கெல்லி, ராபர்ட் நோவக், ஜிம்ஹோக்லண்ட் (Charles Krauthammer, George Wills, Michael Kelly, Jim Hoagland) ஆகியோர் அமெரிக்காவில் இராணுவ மயத்தை உற்சாகமாக ஏற்றுக்கொள்வதுடன், போரை எதிர்ப்பவர்களை அவதூறு செய்து எழுதுகின்றனர். இந்த அணிவகுப்பை பூர்த்தி செய்கிற வகையில் அந்தப் பத்திரிக்கை தனது கருத்துக் களப்பகுதியில், இராணுவ ஆக்கிரமிப்பிற்கு ஆதரவாக கருத்துக்களை எழுதி வரும், ஹென்றி கிசிங்கர், அலெக்ஸாண்டர் ஹெய்க், ராபார்ட்டோல், ஜார்ஜ் சூல்ஸ் (Henry Kissinger, Alexander Haig, Robert Dole, George Shultz) மற்றும் இதர அமெரிக்க அதிகாரிகளை எழுதுவதற்கு அனுமதிக்கிறது.

போஸ்ட் பத்திரிகையின், தலையங்கங்கள் அந்தப் பத்திரிகையின் அரசியல் பாதையை எடுத்துக்காட்டுகின்றது. 1991ல் நடைபெற்ற வளைகுடாப் போர் முடிவில் அந்தப் பத்திரிகை, ''சதாம் ஹூசேன் ஐ பதவியில் நீடிக்கவிட்ட ஒரு போர்நிறுத்த ஒப்பந்தத்தை நாம் தொலைநோக்கோடு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லாமல் ஆதரித்தோம்'' என அந்த தலையங்கத்தில் எழுதியிருக்கிறது.

அந்த நேரத்தில் அந்த போர் நிறுத்த உடன்பாட்டை புஷ்ஷின் (முன்னாள்) குடியரசுக் கட்சியின் முக்கியமான பிரிவினர் ஆதரித்துடன், அப்போது தீவிர வலதுசாரி வட்டத்தினுள் இருந்தவர்கள் என்று கூறப்பட்டவர்கள் மட்டுமே, மத்திய கிழக்கில் அதிகார சமநிலையை மாற்றும் மூலோபாயத்தின் ஒரு பகுதியாக பாக்தாத் மீது தொடர்ந்து இராணுவம் படையெடுத்துச் சென்று பிடித்துக்கொள்ள வேண்டும் எனக் கூறினர். அப்போது ''நடந்தவற்றை விளங்கிக்கொண்டு'', போஸ்ட் பத்திரிக்கை தான் தற்போது அதிகாரத்தில் இருக்கும் மற்றும் ஈராக்கை வெற்றிகொள்ள முயலும் புஷ்ஷின் மூலோபாயங்களை வழிநடத்தும் வலதுசாரி வட்டத்தினுள் இருந்தவர்களை ஆதரித்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்தது. இந்த வட்டாரத்துடன் தற்போது பத்திரிகை ஆசிரியர்கள் உடன்பாடு கொண்டிருக்கின்றனர்.

கிளின்டன் ஈராக்கிற்கு எதிராக முழுமையான போர் நடத்துவதற்கு தவறிவிட்டதை தலையங்கம் கண்டித்த பின்னர் அவர் மீதான பதவிவிலக்கல் தீர்மான நெருக்கடியில் (Impeachment Crisis) இருந்து மக்களது கவனத்தை திசை திருப்பும் முயற்சியாக 1998ல் பாக்தாத் மீது ராக்கெட் தாக்குதலை இல்லாது செய்தனர் என்று காங்கிரசிலுள்ள குடியரசுக் கட்சியினரையும் இத் தலையங்கம் கண்டிக்கிறது. ''2001 செப்டம்பர் 11ற்கு பின்னர், இரண்டு கட்சிகளையும் சேர்ந்த பலர், இந்த நாடு இப்படியான விருப்பங்களுக்கான பிழைகளிலிருந்தும் மற்றும் பயங்கரமான வெளிநாட்டு மிரட்டல்களை அரசியல் மயமாக்குவதிலிருந்தும் அப்பால் சென்றுவிட்டது என நாம் நிச்சயமாக நம்பினோம் என கூறினர். சட்டவிரோதமான ஒரு சர்வாதிகாரி ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை பகிரங்கமாக புறக்கணித்துவிட்டு, சந்தேகத்திற்கு இடம் இல்லாமல், உயிரியல் மற்றும் இரசாயன ஆயுதங்களை வைத்துக்கொண்டும், அதைப் பயன்படுத்தி வருவதுடன் செப்டம்பர் 11 தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். எனவே, இதுபோன்ற அபாயங்களில் நாடு குழப்பமடையக்கூடாது'' என்று பெப்ரவரி 27ம் திகதி தலையங்கத்தில் வாஷிங்டன் போஸ்ட் கூறியிருக்கிறது.

இந்த தலையங்கம், தீவிர தேசியவாதம் என்ற குற்றச்சாட்டை மறுப்பதற்காக எழுதப்பட்டிருக்கிறது என்பதை இதைவிட தெளிவாக நிரூபிக்க முடியாது. இது அமெரிக்க பத்திரிகைகளில், 1890-களில் குறிப்பாக, வில்லியம் ரன்டால்ப் ஹெர்ஸ்ட் (William Randolph Hears) நடத்திய மிகஇழிவாக கருதப்பட்ட ''மஞ்சள் பத்திரிகை'' பாரம்பரியத்தை சார்ந்ததாக இருக்கிறது. மஞ்சள் பத்திரிகைகள் போர் வெறியை கிளப்பிவிடுவதற்காகவும், ஸ்பெயின் நாட்டிற்கு எதிரான வெறுப்பு உணர்வை தூண்டிவிடுவதற்காகவும் திட்டமிட்டு சம்பவங்களை திரித்து வெளியிட்டன. அவர்களது முயற்சிகள் போருக்கான தவறான சாக்குபோக்குகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டிருக்கிறது. கியூபா அல்லது பிலிப்பீனோ மக்களை விடுவிக்கப்போவதாகவும், ஹவானா துறைமுகத்தில் போர்க்கப்பல் மைனே (Maine) மர்மமான முறையில் மூழ்கியதற்கு பழிக்குப்பழி வாங்கப்போவதாகவும் அல்லது ஸ்பெயின் நாட்டு காலனித்துவவாதிகள் மனித உரிமைகளை மீறியதற்காக தண்டிக்கப்போவதாகவும் குறிப்பட்டன. ஆனால் அவை அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை மேலை நாடுகளிலும், கணிசமான பசுபிக் பகுதிகளிலும் நிலைநாட்டுவதற்கான ஆளும்தட்டினரது உண்மையான நோக்கங்களை மறைத்துள்ளன.

இன்றைய தினம், போஸ்ட் உம் உண்மையிலேயே இதர அரசு ஆதரவு ஊடகங்களும் இப்போது என்ன செய்து கொண்டிருக்கின்றன? பழைய காலத்து மஞ்சள் பத்திரிகைகளைப்போல், இன்றைய ஊடகங்கள் உண்மையான போர் நோக்கங்களை மறைக்க பாடுபடுகின்றன. தனது நிலைப்பாட்டை சரி என்று நிரூபிப்பதற்காக வாஷிங்டன் போஸ்ட் எழுதியுள்ள தலையங்கத்தில் எந்த இடத்திலும் ''எண்ணெய்'' என்ற சொல் ஓரிடத்திலும் கூட குறிப்பிடவில்லை. அல்லது அந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் மூலோபாய நலன்கள் குறித்து எந்தக் குறிப்பான தகவலும் தலையங்கத்தில் இடம் பெறவில்லை.

இதற்கு பதிலாக மந்திரம் ஓதுவதைப்போல், செப்டம்பர் 11ன் பயங்கரவாத தாக்குதல் என்பதை கூறிக்கொண்டிருக்கிறார்கள். மஞ்சள் பத்திரிகையின் மூலகர்த்தாவான ஹெர்ஸ்ட், மைனே கப்பல் மூழ்கியதற்கு பழிக்குப்பழி என்று எழுதியதற்கு சமமாக நவீன காலத்தில் தற்போது, பயங்கரவாதிகள் தாக்குதலை கூறிக்கொண்டிருக்கிறார்கள். இந்த தாக்குதல்களில் எந்த வகையிலும் ஈராக்கிற்கு தொடர்பு இல்லை என்பதை முழுமையாக அறிந்திருந்தும், வாஷிங்டன் போஸ்ட் ஆசிரியர்கள் அப்படி ஒரு தொடர்பை கண்டுபிடிக்க முயலுகிறார்கள். சதாம் ஹூசேன் செப்டம்பர் 11 தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்த குற்றத்தை செய்திருக்கிறார் என்று எழுதியிருக்கிறார்கள். இது துணிந்து கூறப்படும் பொய். இதே வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் எப்போது, சதாம் ஹூசேன் ஆதரவு தெரிவித்த செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது? அந்த தாக்குதல் நடந்த அன்றே ஈராக் அரசு அதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது. சென்ற வாரம் சதாம் ஹூசேன் CBS செய்தியைச் சேர்ந்த டான் ராதருக்கு (Dan Rather) அளித்த பேட்டியில் இதே கருத்தைத்தான் கூறியிருக்கிறார்.

அடுத்து, ஈராக் அரசு உயிரியல் மற்றும் இரசாயன ஆயுதங்களை வைத்திருப்பதும், தொடர்ச்சியாக ஆய்வுசெய்வதும் சந்தேகத்திற்கு இடமில்லாததால், இந்த போர் முயற்சிக்கு எதிராக நாடு ஒன்றுபட்டு நிற்கவேண்டும் என போஸ்ட் வலியுறுத்திக் கூறுகின்றது. அத்தகைய ஆயுதங்கள் இருப்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை என்று யார் சொன்னது? ஐ.நா. ஆயுதங்கள் சோதனைக்கு பொறுப்பு வகிப்பவர்கள் அதற்கு நேர் எதிரான தகவலை தந்திருக்கின்றனர். அமெரிக்க புலனாய்வு அமைப்புக்களால் வழங்கப்பட்ட தகவல்கள் உள்ளடங்கலாக அத்தகைய சான்று எதையும் ஐ.நா. ஆயுத பரிசோதகர்கள் காணவில்லை. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், போஸ்ட் தனது நீண்ட குற்றச்சாட்டு பட்டியலில் அணு ஆயுதங்கள் பற்றிய குற்றச்சாட்டை விட்டுவிட்டது. இது அந்தக் குற்றச்சாட்டு திரும்ப சொல்ல முடியாத அளவிற்கு மறுக்கப்பட்டு மதிப்பிழந்துவிட்டது என்பதற்கான வார்த்தைகளில் கூறமுடியாத நிரூபணமாகும்.

போஸ்ட் இன் ஆசிரியர்கள் போர் வெறியர்கள் என்ற குற்றச்சாட்டை சகித்துக்கொள்ள முடியாமல், ''நாங்கள் அமெரிக்க, ஈராக் இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போரினால் ஏற்படும் ஆபத்துக்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ளமாட்டோம்'' என வலியுறுத்தியுள்ளனர். அத்துடன் எதிர்வரவிருக்கும், ''தியாகங்களுக்கு'' ''மக்களை தயார்ப்படுத்த புஷ் நிர்வாகம் ஆரம்பித்துள்ளதாக'' மிக மெல்லிய கண்டனத்தையும் தெரிவிக்கின்றது.

''போர் பற்றிய ஆபத்துக்கள்'' குறித்து எப்போதாவது போஸ்ட் எச்சரிக்கையில், அதனை ஒரு வரவிருக்கின்ற படுகொலைகளை வர்ணிக்கும் நோய்தடுப்பு குணம் கொண்ட வார்த்தையாகவே எச்சரித்தது. எவ்வளவு ஈராக் மக்களது மரணத்தை அதன் ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்வார்கள்? ஒரு சர்வதேச நிவாரண அமைப்பு மதிப்பீடு செய்திருக்கின்ற அளவான 2 1/2 லட்சம் மக்களை கொன்று குவிக்க விரும்புகிறார்களா? போருக்குப் பின்னால் ஏற்படும் விளைவு என்ன? கடந்த வளைகுடாப் போருக்குப் பின்னர், அமெரிக்காவால் ஈராக்கின் பொருளாதாரம், சுகாதார சேவைகள் மற்றும் கழிவு நீர் வெளியேற்ற வசதிளை தாக்கி தகர்த்ததால் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மரணங்கள் நடைபெற்றிருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை குழந்தைகள். இந்த ''அபாயமும்'' ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றா?

ஈராக் ஆயுதங்களால் எந்தவிதமான ஆபத்தும் உள்ளதாக சான்று எதுவும் இல்லாததால், அந்த தலையங்கம் மோசமான சாட்டினை தேடும் வாதத்தில் ஈடுபட்டிருக்கிறது. ''இந்த உலகம், ஏற்கனவே ஓர் ஆபத்தான இடமாகிவிட்டது, புளோரிடாவில், நியூயோர்க்கில், மற்றும் வாஷிங்டனில் அந்த்ராக்சை பயன்படுத்துகிறார்கள். சதாம் ஹூசேனை ஒன்றும் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டு பின்வாங்கிக்கொண்டால் அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் இறுதியாக பாதுகாப்பாக இருக்க முடியுமா?'' என கேட்கின்றது.

அந்த்ராக்ஸ் தாக்குதல்களுக்கும், ஈராக் ஆட்சிக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பது போஸ்ட் டுக்கு நன்றாகத் தெரியும். அமெரிக்க உயிரியியல் ஆயுதங்கள் திட்டம் மற்றும் இராணுவ புலனாய்வு அமைப்போடு நேரடியாக தொடர்பு கொண்டிருக்கும் யாரோ ஒருவர் மூலம் தான் அந்த்ராக்ஸ் பொடி கலந்த கடிதங்கள், ஊடகங்களுக்கும், நாடாளுமன்ற முன்னணி ஜனநாயகக் கட்சி தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்பதற்கு தள்ளிவிட முடியாத சான்றுகள் மிக அதிகமாக உள்ளன.

ஐந்து உயிர்கள் பலியாவதற்கும் 18 பேர் பாதிக்கப்படுவதற்கும் காரணமான இந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு காரணமானவர்களை நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தவதற்கான போஸ்ட் ஆசிரியர் குழுவின் பிரச்சாரம் எங்கே? அந்த்ராக்ஸ் தாக்குதல் நடந்ததற்காக, போஸ்ட் போர்பறை சாற்றுவதாக யாரும் குற்றம் சாட்டமாட்டார்கள். இந்த இதர ஊடகங்களைப் போல் இந்த பிரச்சனையில், போஸ்ட் மெளனமாகிவிட்டது. அவை ஈராக் மீதான போருக்கு மற்றொரு சாக்குபோக்காக மட்டுமே அவர்களால் குறிப்பிடப்படுகின்றது.

ஈராக் மீது படை எடுப்பது ''வேறு வழியில்லாமல்'' தேர்ந்தெடுக்கப்படுகின்ற ஒரு வாய்ப்பு என தலையங்கம் வர்ணிக்கிறது. ''ஒரு தொடர் பயங்கர சம்பவங்கள் தவறான பாதையில் போகலாம்'' என்பதை ஒத்துக்கொண்டு, ''இதில் சரியான கேள்வி என்பது, போர் ஆபத்தானதா என்பதல்ல ஆனால், செயல்படாமல் இருப்பதால் ஆபத்து குறையுமா? என்பதுதான்'' என போஸ்ட் ஆசிரியர்கள் வலியுறுத்கின்றனர்.

''யாருக்கு 'சரியான கேள்வி' அது''? இது கேட்கப்படவேண்டும். இந்த அணுகுமுறை உலகம் முழுவதற்கும் பிரயோகிக்ககூடியதா? இதே கேள்வி பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் பொருந்தும் அல்லவா? இதில் பாகிஸ்தானோ அல்லது இந்தியாவோ, நடவடிக்கை எடுக்காமல் இருப்பதைவிட முதலில் அணுகுண்டு வீசி தாக்குவதால் ஆபத்து குறைவு என்று கருதலாம் அல்லவா? அமெரிக்கா எதிர்காலத்தில் தாக்குதல் நடத்தவிருக்கும் நாடுகளின் நிலை என்ன? அந்த நாடுகள் துருப்புச்சீட்டை சரியாக நகர்த்தி அமெரிக்கப் படைகள் தங்கள் நாட்டில் இறங்கும் முன்னர் வாஷிங்டன் மீது தாக்குதல் நடத்த யோசிக்கலாமல்லவா?

1941ல் ஜப்பான் ஆளும் வட்டாரங்களுக்குள் இதே மாதிரியான சிந்தனைகள் தானே நிலவின? ஜப்பானிய இராணுவ தலைவர்களுக்கு அமெரிக்காவை தாக்குவது ஆபத்தானது என்று தெரியும். அதிகரித்துவரும் அமெரிக்க இராணுவ வலிமையின் முன்னே ஜப்பான் சோம்பியிருப்பது அதைவிட ஆபத்தானது எனக் கருதியது. இதன் விளைவுதான் பேர்ல் துறைமுகத்தின் மீதான தாக்குதல். இத்தாக்குதல் ஒரு ''கோழைத்தனமான தாக்குதல்'' எனவும் ''இழிவான நடவடிக்கை'' எனவும் நிராகரிக்கப்பட்டது. இப்போது, இதேமாதிரியான இராணுவ தர்க்கவியல்தான் புஷ் நிர்வாகத்தாலும், போஸ்ட் இனாலும் கட்டிஅணைக்கப்பட்டு ஒருதலைப்பட்சமான "யுத்தத்திற்கான முன்னோக்காக" வகுக்கப்பட்டுள்ளன.

தோற்கடிக்கப்பட்ட நாஜி ஜேர்மனியினதும், ஏகாதிபத்திய ஜப்பானினதும் தலைவர்கள் இரண்டாம் உலகப்போர் முடிவில் போர் குற்றவாளிகளாக விசாரிக்கப்பட்டதுடன், அவர்கள் மீதான பிரதான குற்றச்சாட்டு ஆக்கிரமிப்பு போருக்கு அவர்கள் திட்டமிட்டு அதை ஆரம்பித்தார்கள் என்பதுதான் என்பதை நாம் நினைவுகூருவது முக்கியமானது.

இரண்டாம் உலகப்போருக்கு பின் உருவாக்கப்பட்ட சர்வதேச சட்டங்களும் உடன்படிக்கைகளும், ஐக்கிய நாடுகள் சபையில் உருவாக்கப்பட்டது உட்பட அனைத்துமே, இத்தகைய ''யுத்தத்தை தேர்ந்தெடுக்கும்'' முன்னோக்கை நிராகரிக்கும் வகையில் உருவானவைதான்- தற்போது அதே முன்னோக்கை "ஆட்சி மாற்றம்" மற்றும் ''திடீர் தாக்குதல்'' என்ற பெயரால் தாங்கி நிற்கிறார்கள்.

அண்மையில் வாஷிங்டன் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள மறுத்ததற்கு பின்னணியில் உள்ள காரணம், சந்தேகத்திற்கு இடமின்றி ஈராக்கிலும் மற்றும் வேறு எங்காயினும் சர்வதேச சட்டத்திற்கு தெளிவாக மீறிச் செல்லுகின்ற ஆக்கிரமிப்பு போர்களை நடத்தப்போவது தொடர்பான அமெரிக்காவின் குற்ற உணர்வுதான் ஆகும்.

கத்தரின் கிரஹம் 26 ஆண்டுகளுக்கு முன்னர் என்ன எச்சரிக்கை செய்தாரோ அது இப்போது உண்மையாகிவிட்டது. போஸ்ட் பத்திரிகை தன்னுடைய வாசகர் அடித்தளத்திலிருந்து கணிசமான அளவிற்கு விலகி வலதுசாரி பக்கம் வந்துவிட்டது. அத்துடன் தற்போது வாசகர்களிடம் இருந்து தான் அந்நியப்பட்டதையும், புஷ் நிர்வாகத்தின் போர் பிரச்சாரத்தை பத்திரிகை இயந்திரரீதியாக எதிரொலிப்பதை எதிர்த்து அவர்கள் கிளர்ச்சி செய்வதையும் கண்டுகொண்டுள்ளது.

அதிகரித்தவகையில் அந்தப் பத்திரிகையின் ஆசிரியர்கள் பெரும்பாலான ஊடக அமைப்புகளைப் போல் பரவலான பொதுமக்களுக்காக குரல் கொடுக்கவில்லை. மாறாக தனது செல்வத்தையும், சலுகைகளையும் பாதுகாத்துகொள்வதற்காக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் கிரிமினல் கொள்கைகளை ஆதரிக்க தயாராக உள்ள ஒரு குறுகிய செல்வந்தர்கள் மற்றும் அரசியல் தட்டினருக்காக குரல் கொடுக்கிறார்கள்.

போஸ்ட் பத்திரிகையின் ஆசிரியர்குழு தனது வாசகர்களினது கருத்துக்களை போலியான முறையில் கவனத்திற்கு எடுக்காதிருக்க முடிவெடுத்துள்ளது. ''போர் படுமோசமான தேர்வு என்று நம்பும் நமது வாசகர்களை நாம் மதிக்கிறோம். ஆனால் இந்தச் சூழ்நிலையில், சலுகைகளால் ஆனதைவிட பலத்தினாலான நீண்டகால அடிப்படையிலான அமைதிதான் பாதுகாக்கப்படும் என நாங்கள் நம்புகின்றோம்'' என குறிப்பிட்டது.

யாருக்கு, எதற்கு சலுகை? என்பதை அந்த தலையங்கம் கூறவில்லை. சிலவேளை, அந்தப் பத்திரிகை ஆதரிக்கின்ற கொள்கையான போர் குற்றத்தை சர்வதேச சட்டமாக கடைப்பிடிப்பவர்களுக்குதான் சலுகைகள் கொடுக்கப்படவேண்டுமா. அல்லது, புஷ் மற்றும் போஸ்ட் பத்திரிகை ஆகிய இரு தரப்பினரும் ஆதரித்து நிற்கும் ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து நிற்கின்ற உலகின் பெரும்பாலான மக்களது உணர்வுகளுக்கு சலுகைகள் கொடுக்கப்படவேண்டுமா?

See Also :

போருக்கு எதிரான இயக்கத்தை சிதைப்பதற்கு நியூயோர்க் டைம்ஸ் கூறும் ''நட்பு ஆலோசனை''

வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையாளர் மைக்கேல் கெல்லி உலக தொழிலாளர் கட்சி மீது காட்டும் கம்யூனிச பூச்சாண்டி

Top of page