World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Rumsfeld pushes big lie on "human shields" in Iraq

ஈராக்கில் ''மனித கேடயம்'' பற்றி ரம்ஸ்பீல்டின் பெரிய பொய்

By Henry Michaels
24 February 2003

Back to screen version

உலகம் முழுவதிலும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் அமெரிக்காவின் போர்த் திட்டங்களுக்கு எதிராக கண்டனப் பேரணிகளை நடத்திக்கொண்டு வருவதைக் கண்டு புஷ் நிர்வாகமும், அமெரிக்க ஊடகங்களும் ஹிட்லர் மற்றும் ஸ்ராலின் போன்றவர்கள் படு பயங்கரமாகப் பயன்படுத்தி வந்த ''பெரிய பொய்'' சொல்லும் தந்திரங்களில் ஒன்றை, அதிக அளவில் பயன்படுத்திக்கொண்டு வருகின்றன. அதாவது, தாங்கள் புரியப்போகும் குற்றங்களை எதிரிகள் செய்யப்போகிறார்கள் என்று முன்கூட்டியே சொல்வதாகும்.

சர்வதேச அளவில் செயல்பட்டுவரும் மனித உரிமை அமைப்புகள் ஈராக் மீது அமெரிக்கா நடத்தும் தாக்குதல்களால் வரும் விளைவுகள் குறித்து எச்சரித்துள்ளன. இப்போரில் அரை மில்லியன் மக்கள் மடிவார்கள். 2 மில்லியன் மக்கள் அகதிகளாக மாறுவார்கள் என்று இவை தெரிவித்துள்ளன. ஆதலால், நடைபெறவிருக்கும் படுகொலைக்கு ஈராக் மீது பழிபோடுவதற்கு வெள்ளை மாளிகையும், பென்டகனும் மற்றும் இவற்றிற்கு உடந்தையாகச் செயல்படும் ஊடகங்களும் இணைந்து இதற்கு முயன்று வருகின்றன.

பாதுகாப்பு அமைச்சர் டோனால் ரம்ஸ்பீல்டு, இத்தகைய பிரச்சார முயற்சியை பிப்ரவரி 19 ந் தேதி பென்டகனில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் துவக்கி வைத்தார். சதாம் ஹூஸேன், அமெரிக்கா நடத்தும் தாக்குதலுக்கு எதிராக பொதுமக்களை ''மனித கேடயங்களாக'' பயன்படுத்திக்கொள்ள ஆயத்தம் செய்து வருகிறார் என்று ரம்ஸ்பீல்டு குற்றம் சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டிற்கு சிறிய சான்றைக்கூட அவரால் தர முடியவில்லை.

''மனித கேடயம் நடைமுறையானது மனித நேய நெறிமுறைகளையே இழிவுப்படுத்துவதாகும். அது இராணுவ சட்டங்கள், இஸ்லாமிய சட்ட நடைமுறை மற்றும் நம்பிக்கையை அவமதிப்பதாகும் என எனக்கு ஆலோசனை கூறப்பட்டிருக்கிறது'' என ரம்ஸ்பீல்டு கூறினார்.

இந்த நடவடிக்கைகளுக்கு பொறுப்பானவர்கள் போர்க் குற்றவாளிகளாகக் கருதப்படுவார்கள் என்றும் அவர் மேலும் அறிவித்தார். ''இவைகள் போர்த் தந்திரங்கள் அல்ல. இவை போர்க் குற்றங்கள். மனிதக் கேடயங்களை அனுப்புவது இராணுவ உத்தியல்ல. இது போர் தொடர்பான சட்டங்களை மீறுவதாகும். மேலும், மனித இனத்திற்கு எதிரான திட்டமாகும். மற்றும் அப்படித்தான் அது எடுத்துக்கொள்ளப்படும்'' இவ்வாறு ரம்ஸ்பீல்ட் தெரிவித்தார்.

இது மனிதனை உறையவைக்கும் சாதனையாகும். பென்டகன் அதிர்ச்சியூட்டி நிலைகுலையச் செய்யும் போர் திட்டம் ஒன்றை தயாரித்திருக்கிறது. அதன்படி, முதல் 48 மணி நேரத்தில் 3000 க்கு மேற்பட்ட ராக்கெட்டுக்களை வீசி ஈராக் மீது குண்டுத் தாக்குதலை நடத்தும்போது பரவலாக பொதுமக்கள் உயிர் பலியாவது தவிர்க்க முடியாதது. இதற்கு அமெரிக்காவிலும், உலகில் பிற நாடுகளிலும் உள்ள மக்கள் கருத்தை திரட்டுவதற்காக ரம்ஸ்பீல்ட் கடினமாக முயன்று வருகிறார்.

சதாம் ஹூசேன் ''திட்டமிட்டு இராணுவ முகாம்கள், இராணுவ வசதிகள் இருக்கும் இடங்களில் மசூதிகளைக் கட்டி வருகிறார் என்றும் பள்ளிகள், மருத்துவமனைகள், அனாதை விடுதிகள் மற்றும் பழைய கலாச்சார பொக்கிஷங்கள் உள்ள இடங்களில் தனது இராணுவப்படைகளை மறைப்பதற்கான கேடயமாக பயன்படுத்தி அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை ஆபத்தில் சிக்கவைக்கிறார்'' என்று ரம்ஸ்பீல்ட் குற்றம் சாட்டினார். அவரது குற்றச்சாட்டின் பொருள் என்னவென்றால் மசூதிகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், அனாதை விடுதிகள், பண்பாட்டு நினைவுச் சின்னங்கள், கருவூலங்கள் மற்றும் இதர பொதுமக்களின் பகுதிகளில் தாக்குதல் நடத்துவதற்கு பென்டகன் இலக்கு வைத்திருக்கிறது என்பதாகத்தான் இருக்க முடியும்.

பென்டகனில் நடைபெற்ற பத்திரிகையாளர் பேட்டியில் கலந்துகொண்ட ஒரு பத்திரிகையாளர்கூட இந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு ரம்ஸ்பீல்ட்டுக்கு அறைகூவல் விடுக்கவில்லை.

இதனுடைய விளைவு என்னவென்றால், பாக்தாத்தானது ஈராக் மக்கள் அனைவரையும் மனித கேடயங்களாக பயன்படுத்தி வருகிறது என்ற புஷ் நிர்வாகத்தின் குற்றச்சாட்டு எந்த விதமான மறுப்பும் இல்லாமல் அப்படியே உலாவிக்கொண்டிருக்கிறது என்பதாகும். எந்த விதமான ஆத்திரமூட்டலும் இல்லாமல் வாஷிங்டன் மலை அளவிற்கு போர் குற்றங்களை புரிவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. அத்துடன் போரைத் தொடங்கிவிட்டு, பொதுமக்களுக்கு பயங்கரமான சேதங்களை விளைவித்துவிட்டு, பின்னர் ஈராக் தலைவர்களை போர்க் குற்றவாளிகள் என்று சித்தரித்துக்காட்ட வாஷிங்டன் தயாராகியும் வருகிறது.

ஈராக் தலைவர்கள் மட்டுமே இத்தகைய தாக்குதலுக்கான இலக்கு அல்ல. உண்மையிலேயே ஜோர்ஜ் ஆர்வெல் கதைகளில் வருகின்ற தத்துவங்களைப்போல், ரம்ஸ்பீல்ட் அமைதிப் பேரணி நடத்துபவர்களையும் மிரட்டியுள்ளார். பிரிட்டன், அமெரிக்கா மற்றும் இரத நாடுகளைச் சேர்ந்த சமாதான விரும்பிகள் நூற்றுக்கணக்கில் பாக்தாத்தில் திரண்டு கொண்டிருக்கிறார்கள். அவர்கள் 1991 ம் ஆண்டு நடைபெற்ற வளைகுடாப் போரில் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் குண்டு வீசித் தாக்குதல் நடத்திய மின்சார நிலையங்கள், குடிநீர் நிலையங்கள், மற்றும் இதர பொதுமக்களது இருப்பிடங்களுக்கு அருகில் முகாமிடத் திட்டமிட்டிருக்கின்றனர்.

இதில் ஒரு குழு ஈராக் சமாதான அணியாகும். இதில் வியட்நாம் போரில் கலந்துகொண்ட முன்னாள் அமெரிக்க இராணுவத்தினரும் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழுவினர் ஈராக்கில் உள்ள பாலங்கள், மின்சார நிலையங்கள் ஆகியவற்றில் பதாகைகளை தொங்கவிட்டிருக்கின்றனர். அவற்றில், இதுபோன்ற இடங்களில் குண்டு வீசி தாக்குதல் நடத்துவது போர் குற்றம் என்று எழுதியிருக்கிறார்கள். மனித கேடயங்கள் என்ற மற்றொரு குழு அமெரிக்காவின் தாக்குதலைத் தடுத்து நிறுத்துவதுதான் தனது நோக்கம் என்றும் கூறியுள்ளது.

ரம்ஸ்பீல்ட் அருகே அமெரிக்க முப்படைகளின் கூட்டுக்குழு தலைவர் ஜெனரல் ரிச்சர்ட் மயேஸ் அமர்ந்திருந்தார். அப்போது, இத்தகைய போர் எதிர்ப்பு தொண்டர்களும் போர்க் குற்றம் புரிந்ததாக குற்றம் சாட்டப்படுவார்கள் என்று டிரம்ஸ்பீல்ட் கோடிட்டு காட்டினார். ''சதாம் ஹூசேனின் கட்டளைகளை ஏற்று மனித கேடயங்களை பயன்படுத்துபவர்கள் தங்களது நடவடிக்கைகளுக்காக கடுமையான விலைதர வேண்டியிருக்கும்'' என்று அவர் அறிவித்தார்.

அங்கு மயர்ஸ் கருத்து தெரிவிக்கும்போது ''இராணுவத் தாக்குதலுக்கு இலக்காகக் கூடிய பகுதிகளில் இராணுவம் அல்லாத மற்றவர்களை கேடயங்களாகப் பயன்படுத்துவது போர்கள் தொடர்பான சட்டங்களை மீறுகின்ற நடவடிக்கையாகும். இந்த நோக்கத்திற்காகத் தொண்டர்களாகப் பணியாற்றுவதற்கு முன் வருபவர்களும் கூட....... எனவே இந்த முயற்சிகளில் படைகளில் அல்லாதவர்கள் இறந்துவிட்டாலோ அல்லது கடுமையான காயமடைந்தாலோ, அப்பாவிப் பொதுமக்களை மனித கேடயங்களாக அனுப்புவதற்கு பொறுப்பான தனி மனிதர்கள் ஜெனிவா உடன்படிக்கையை மீறும் கடுமையான குற்றம் புரிந்தவர்கள்'' என்று விளக்கினார்.

உண்மை என்னவென்றால் ரம்ஸ்பீல்ட் மற்றும் மயர்ஸ் ஆகியோர் புஷ்ஷூடன் சேர்ந்து ஆக்கிரமிப்பு போருக்கு ஆயத்தம் செய்த குற்றவாளிகளாவர். நூரம்பேர்க்கில் கிட்லரது அடிவருடிகள் எந்தக் குற்றங்களுக்காக விசாரணைக்கு இலக்கானார்களோ, அதே குற்றங்களை இவர்களும் இன்று செய்து கொண்டிருக்கிறார்கள். 1868 ம் ஆண்டு பீட்டர்ஸ்பேர்க்கில் வெளியிடப்பட்ட பிரகடனத்தில் இருந்து உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு சர்வதேச சட்டங்கள் உடன்படிக்கைகளை அப்பட்டமாக மீறுகின்ற வகையில் இந்தப் போர் அமையும். சண்டைகள் நடக்கும்போது அதில் ஈடுபடும் ஆயுதப்படைகள் பொதுமக்களுக்கு ஏற்படும் சேதத்தை மிகக் குறைவாக மட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ளவேண்டும் என இந்தப் பிரகடனம் தெரிவிக்கிறது.

ஈராக் மற்றும் பால்கன் ஆகிய இரு பகுதிகளையும் சேர்ந்த மக்கள் ஏற்கெனவே ''மனிதக் கேடயங்கள்'' என்ற பொய்யை எப்படி தனது போர்க் குற்றங்களை மூடி மறைப்பதற்கு வாஷிங்டன் பயன்படுத்தியதை நேரடியாக அனுபவித்தவர்கள். 1991 வளைகுடாப் போரில் வெள்ளை மாளிகையும், பென்டகனும் அமெரிக்க குண்டுத் தாக்குதல்களில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டதற்கு இடைவிடாது சதாம் ஹூசேன் மீது பழிபோட்டுக் கொண்டேயிருந்தார்கள். அப்போது பாக்தாத்திலுள்ள அல் அமாரியா பகுதியில் குண்டு வீச்சிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக பதுங்கியிருந்த மக்கள் மீது அமெரிக்க விமானங்கள் குண்டு வீசியதில் 288 மக்கள் கொல்லப்பட்டனர்.

1999 ம் ஆண்டு சேர்பியாவில் மிகக் கொடூரமான முறையில் அகதிகளின் வாகனங்கள் மீது குண்டு வீசி நடத்திய தாக்குதலை, ஆரம்பத்தில் அமெரிக்கா மற்றும் நேட்டோ அதிகாரிகள் அவை இராணுவ வாகனங்கள் என்று மறுத்து குறிப்பிட்டார்கள். இந்தத் தாக்குதலை விசாரித்த நிருபர்கள் அவை அகதிகள் சென்ற வாகனங்கள் என்று உறுதிப்படுத்திய பின்னர், சேர்பிய இராணுவப்படைகளும் தளவாடங்களும் அகதிகள் வாகன போர்வைக்குள் ஊடுருவிவிட்டதாக நேட்டோ அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரம்ஸ்பீல்ட்டை பொறுத்தவரை ஆப்கானிஸ்தானில் நடைபெறும் போர்க் குற்றங்களுக்கு அவர் அரசியல் அடிப்படையில் உடந்தையாகயிருப்பவர். 2001 நவம்பரில் மஜார்-இ-ஷெரீப் பகுதியில் கைது செய்யப்பட்ட 800 தாலிபான் கைதிகள் கொல்லப்பட்டது உட்பட பல போர்க் குற்றங்கள் ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வருகின்றன. ஆப்கானிஸ்தானைவிட்டு வெளிநாடுகளைச் சேர்ந்த தாலிபான் உறுப்பினர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு அனுமதிக்க வேண்டுமென்று வடக்கு முன்னணி ஜெனரல் கான் தாவூத் தெரிவித்த யோசனையை ரம்ஸ்பீல்ட் ஏற்றுக்கொள்ள மறுத்தார். மேலும் அவர்களைக் கொன்று குவிப்பதற்கு பச்சைக்கொடி காட்டி ''அவர்கள் கொல்லப்படுவார்கள் அல்லது கைது செய்யப்படுவார்கள் என்பது என் நம்பிக்கை'' என்று தெரிவித்தார். ["ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் யுத்தக் குற்றங்கள்: மஸார்- இ- ஷரீபில் நூற்றுக்கணக்கான யுத்தக் கைதிகள் கொலைசெய்யப்பட்டனர்" - இக் கட்டுரையைப் பார்க்க]

மத்திய கிழக்கில் ஒரு அரசாங்கம் பொதுமக்களை மனிதக் கேடயங்களாக செயல்படும் அளவிற்கு தூண்டியதாக ஒப்புக்கொண்டிருக்கிறது. அதனால், ஏராளமான பாலஸ்தீன மக்கள் பலியாகினர். அப்படியிருந்தும், இஸ்ரேலின் ஷரோன் அரசாங்கத்தை மிகத் தீவிரமாக புஷ் நிர்வாகம் பாதுகாத்து வருகிறது. சென்ற மே மாதம் இஸ்ரேலிலுள்ள மனித உரிமை அமைப்புகள் உச்சநீமன்றத்தில் மனுச் செய்து, ஜெனின் இதர மேற்குக்கரை நகரங்களில் இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தப்படுவதை தடுக்கவேண்டும் என்று முறையிட்டார்கள். இராணுவத்தினரின் இந்தக் கொள்கை சட்ட விரோதமானது என்பதை ஒப்புக்கொண்டு இதனை நிறுத்திவிட அவர்கள் உறுதியளித்தனர். ஆனால், இன்றைக்கும் அவர்கள் பாலஸ்தீன மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தி வருவது நடைபெற்றுக் கொண்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

செய்தி ஊடகங்களின் உடந்தை

பெரிய அமெரிக்க செய்தி ஊடகங்கள் தொடர்ந்தும் புஷ் நிர்வாகத்தின் அதிகாரபூர்வமான நிலைப்பாட்டை மக்களுக்கு எடுத்துச் செல்லுகின்ற சில்லரை அங்காடிகளைப்போல் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. புஷ் நிர்வாகமும், இராணுவத் தலைமையும் பொதுமக்களின் சேதங்களை மிகக் குறைவாக இருக்கும் வகையில் துல்லியமாக குண்டு வீசுகிற ஏற்பாடுகளை செய்திருப்பதாக தொடர்ந்தும் இவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தற்போது ஊடகங்கள் இத்தகைய பிரச்சாரங்களோடு ஈராக்கின் மனித கேடயங்கள் பற்றியும் அதன் போர்க் குற்றங்கள் பற்றியும் விரிவாக எழுதி வருகின்றன. அதே நேரத்தில் நடைபெறவிருக்கின்ற பேரழிவு முழுவதையும் மூடி மறைத்துவிட முடியாது என்பதையும் இந்த ஊடகங்கள் உணர்ந்திருக்கின்றன. எனவே, அமெரிக்காவின் குண்டு வீச்சுக்களில் ஈராக்கின் பொதுமக்கள் பாதிக்கப்படுவது குறித்த தகவல்களை தற்போது உற்சாகமாக வெளியிட்டு வருகின்றன.

எடுத்துக்காட்டாக, பிப்ரவரி 5 ந் தேதியன்று வாஷிங்டன் போஸ்ட் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிராக கடைசி பாதுகாப்பு அணியாக கருதப்படும் 1 மில்லியன் ஈராக்கின் பொதுமக்களுக்கு துப்பாக்கிகளையும் வெடிகுண்டு வீசும் கருவிகளையும் சதாம் ஹூசேன் வழங்கியிருப்பதாக தகவல் தந்தது. மறுநாள் ஜெனரல் மயர்ஸ், அத்தகைய மக்களை எதிரிகளாகக் கருதி வாஷிங்டன் நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்தார்.

பிப்ரவரி 18 அன்று, ரம்ஸ்பீல்ட் கடைசியாக பென்டகனில் பத்திரிகையாளர்களுக்கு விளக்கம் அளிப்பதற்கு முன்னர் நியூயார்க் டைம்ஸ்சில் அமெரிக்காவின் பல்வேறு பட்டியல்கள் முன்கூட்டியே பிரசுரிக்கப்பட்டிருந்தது. ''போரைத் திட்டமிடுவோர் அதன் ஆபத்துகள் பற்றி பேசுகின்றனர்'' என்று தலைப்பிட்டு மூத்த எழுத்தாளர்களான டேவிட் சாங்கர் மற்றம் தோம் சங்கர் (David Sanger and Thom Shanker) இருவரும் ஒரு கட்டுரை எழுதியுள்ளனர். பென்டகன் மற்றும் வெள்ளை மாளிகை வெளியிட்ட பத்திரிகை குறிப்புக்களின் அடிப்படையில் இந்தக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. ரம்ஸ்பீல்ட் தனது அறையிலுள்ள மேசையில் நான்கு, ஐந்து பக்க தட்டச்சு செய்யப்பட்ட போர் ஆபத்துகள் பற்றிய பட்டியலை வைத்திருக்கிறார் என்று அவரது மூத்த உதவியாளர்கள் கூறியதாக இவர்கள் எழுதியுள்ளனர்.

''சதாம் ஹூசேன் மசூதிகள் அல்லது மருத்துவமனைகள், அல்லது கலாச்சார மையங்களில் ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கிறார். அல்லது கைது செய்யப்படும் வெளிநாட்டு பத்திரிகையாளர்களை மனித கேடயங்களாக பயன்படுத்தப்போகிறார்'' என்று எச்சரிக்கை செய்யப்பட்டிருப்பதாக ஷாங்கர் மற்றும் சங்கர் ஆகிய இரண்டு கட்டுரையாசிரியர்களும் கூறியுள்ளனர். இந்தக் கருத்துக்களை நிரூபிப்பதற்கான பாசாங்கைக் கூட அவர்கள் செய்யவில்லை. அவர்கள் ரம்ஸ்பீல்ட்டின் இதர கவலைகளையும் குறிப்பிட்டு தங்களது வாசகர்களுக்கு தகவல் மட்டுமே தந்துள்ளனர். பக்கத்து நாடுகள் தாக்கப்படலாம் மற்றும் மக்களை கொன்று குவிக்கும் ஆயுதங்களை ஈராக் அந்தப் பிராந்தியத்தில் பயன்படுத்தலாம் என்றே தகவல் தந்திருக்கின்றனர்.

''இந்தப் போர் ஆப்கானிஸ்தான் போரைப் போன்று இருக்காது'' என்று புஷ் நிர்வாகத்தின் ஒரு மூத்த அதிகாரி குறிப்பிட்டதாகவும், ஆப்கானிஸ்தானில் எதிர்பார்த்ததைவிட விரைவாகவும் மிகக் குறைந்த சேதத்துடன் வெற்றி கிடைக்கும் என்றும் இந்தக் கட்டுரையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கட்டுரையில் பெயர் குறிப்பிடப்படாத மூத்த அதிகாரி ஒருவர் விடுத்திருக்கின்ற எச்சரிக்கை மிக முக்கியமானதாகவும், மிகத் தெளிவாகவும் இருக்கின்றது. பல மாதங்களாக உள் ஆய்வுகள் நடத்தியும், முன்கூட்டியே திட்டமிட்டும் ஈராக்கிற்குள் CIA உளவாளிகள் மற்றும் சிறப்பு நடவடிக்கை குழுவினர் புகுந்ததை இந்த அதிகாரி உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார். ''அமெரிக்கப் படைகளுக்கு எப்படிப்பட்ட வரவேற்பு ஈராக்கில் கிடைக்கும் என்பது குறித்து எங்களுக்கு இன்னும் எதுவும் தெரியாது. மகிழ்ச்சி ஆராவாரமா! கேலி கிண்டல்களா! அல்லது வேட்டுச் சத்தமா? உண்மையில் நாம் அங்கு சென்று அடையும் வரை என்ன நடக்கும் என்று நமக்குத் தெரியாது'' என்று இந்த அதிகாரி கருத்து தெரிவித்துள்ளார்.

இதை வேறு வார்த்தைகளில் சொன்னால், அமெரிக்கப் படைகளை வெறுப்புணர்வோடு கொலைக்காரர்கள் என்றும், காலனியாதிக்க முறையில் நாடு பிடிப்பவர்களே தவிர தங்களை விடுவித்தவர்கள் அல்ல என்றும் ஈராக் மக்கள் வெளிப்படையாக கூறுவார்கள் என்பதை முன்கூட்டியே வெள்ளை மாளிகையும் அதன் நம்பிக்கைக்குரிய பத்திரிகையாளர்களும் அமெரிக்க மக்களுக்கு தெரிவிக்கிறார்கள் என்பதாகும். எனவே, இப்போது தயாரிக்கப்பட்டு வரும் போர்த் திட்டத்தினால் உருவாகும் பயங்கர அழிவுகள், மரணங்கள் முதலியவை ஈராக் மக்களது வெறுப்பை மேலும் அதிகரிக்கச் செய்யும்.

ஷாங்கரும், சங்கரும் நிர்வாகத்தின் இருண்ட பிரச்சாரத்திற்கு ஊதுகுழலாக செயல்படுகிறோம் என்பதை அவர்கள் தெளிவாக உணர்ந்தே இருக்கிறார்கள். எனவேதான், அவர்கள் இருவரும் அந்தக் கட்டுரையில் ''வெள்ளை மாளிகை, பென்டகன் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் இதுபோன்ற முன் எச்சரிக்கை குறிப்புக்களை தருவதற்கு ஒரு அரசியல் நோக்கம் இருக்கக்கூடும். இந்த ஆபத்துக்களை அமெரிக்க மக்களுக்கு முன்கூட்டியே தெரிவித்துவிடுவது நல்லது என்று நிர்வாகம் கருதி இருக்கலாம்'' என்று குறிப்பிட்டிருக்கின்றனர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved