World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Bechtel awarded Iraq contract: War profits and the US "military-industrial complex"

பெக்டலுக்கு ஈராக் ஒப்பந்தம் அளிக்கப்படுகிறது:
போர் இலாபங்களும் மற்றும் அமெரிக்க ''இராணுவ - வணிகக் கூட்டும்''

By Joseph Kay
29 April 2003

Back to screen version

ஏப்ரல் 17 அன்று சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க ஏஜென்சியானது (US Agency for International Development - USAID) 680 மில்லியன் டொலர்கள் மதிப்புள்ள ஒப்பந்தம் ஒன்றை பெக்டல் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. இந்த பெக்டல் நிறுவனம் குடியரசுக் கட்சி மற்றும் புஷ் நிர்வாகம் இரண்டோடும் நெருங்கிய உறவுகளைக் கொண்டதாகும்.

தெரிந்து எடுக்கப்பட்ட, குறிப்பிட்ட அமெரிக்க நிறுவனங்களுள், இரகசிய ஏலமுறைப்படி வந்த இந்த முடிவு, சதாம் ஹுஸேன் ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு பெரும் அமெரிக்க நிறுவனங்கட்கு கிடைத்துவரும் எதிர்பாரா பணமழையின் தொடர்ச்சியில் சமீபத்தியதும் மிக அதிக அளவிலானதுமாக இது இருக்கின்றது.

ஒப்பந்தத்தில் அடங்கியுள்ள பகுதிகளில், ஈராக் மீதான போரில் குண்டு வீச்சுக்களினால் அழிக்கப்பட்ட மின் சக்தி, நீர், வடிகால் திட்டம் மற்றும் விமான நிலையங்களைப் பழுதுபார்த்துப் புதுப்பித்தல், உம் கஸார் துறைமுகத்தின் ஆழ்மணல் அகற்றல் போன்றவையும் அடங்கும். பெக்டலின் வரவிருக்கும் வேலையானது ஈராக்கின் ஆஸ்பத்திரிகளைப் புதுப்பித்தல், பழுதுபார்த்தல் அதேபோன்று பாடசாலைகள், அரசாங்கக் கட்டடங்கள், பாசன வசதிகள் மற்றும் போக்குவரத்துத்துறை இவற்றிலும் சீரமைப்புப் பணிகளைச் செய்திடல் போன்றவைகள் இருக்கும்.

தொடக்க ஒப்பந்தத்தைவிடக் கூடுதலாக இலாபத்தையடையவும் பெக்டலிற்கு வாய்ப்பு உள்ளது. USAID அதிகாரிகள், இதன் இறுதி மதிப்பு பல்லாயிரக்கணக்கான மில்லியன் டொலர்களில் முடியலாம் எனக் கோடிட்டுக் காட்டியுள்ளனர். இந்த வேலையில் பெரும் பகுதி - நாட்டின் அடிப்படைக் கட்டுமானங்கள் ஒவ்வொன்றிலும் முக்கியமான பகுதியையும் அடக்கிய செயற்பாடுகள் - பெக்டெல்கிற்கும் அதனுடைய துணை ஒப்பந்தக்காரர்களுக்கும் செல்லும். ''ஓர் அமெரிக்க வணிக நிறுவனம் அயல்நாடு முழுவதையும் மீண்டும் கட்டி முடித்தலாகிய இதுபோன்ற பணி இதற்குமுன் செய்ததில்லை'' என்று வாஷிங்டனிலுள்ள அரசாங்க திட்டப்பணி நிர்வாக இயக்குநர் டேனியல் பிரைன் குறிப்பிடுகிறார்.

முந்தைய ஒப்பந்தங்களில் துணை ஜனாதிபதி டிக் செனி தலைவராக இருந்த நிறுவனமான ஹாலிபேர்டன் பெற்ற பன்மடங்கு பில்லியன் டொலர் ஒப்பந்தங்களும் இதில் அடங்கும். அடக்கச் செலவு மற்றும் இலாபம் அடங்கிய ஒப்பந்தம் எந்தப் போட்டியுமின்றி ஹாலிபர்டனின் துணை நிறுவனமான பிரளன் ஆன்ட் ரூட்டிற்குக் கொடுக்கப்பட்டது. இது பெக்டலுக்குப் போட்டியான ஆறு நிறுவனங்களில் ஒன்றாகும். ஏல முறையிலிருந்து பிரளன் அன்ட் ரூட்டு நிறுவனம் இறுதியில் தானாகவே பாரபட்சம் காட்டப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தவுடன் விலகிவிட்டது. செனி, இப்பொழுதும் ஆண்டு ஒன்றுக்கு ஹாலிபேர்டனிலிருந்து வெகுமதியின் ஒரு பகுதியாக ஒரு மில்லியன் டொலர்களைப் பெற்று வருகிறார்.

ஒப்பந்தங்களைப் பெற்ற மற்ற அமெரிக்க நிறுவனங்களுள் டிரியாங்ல் ஆய்வு நிறுவனமும் அடங்கும். இது 167 மில்லியன் டொலர்கள் ஒப்பந்தத்தை வட்டார நிர்வாகப் பணிகளுக்காகப் பெறும். கிரியேடிவ் அசோஸியேட்ஸ் இன்டர்நேஷனல் என்ற நிறுவனமானது ஈராக்கில் போரினால் தகர்க்கப்பட்ட கல்வி முறையைப் புதுப்பிக்க அளிக்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தைப் 62.2 மில்லியன் டொலர்களுக்குப் பெற்றுள்ளது.

இந்த முயற்சிகளின் செலவினங்கள் முழுவதுமே துவக்கத்தில் அமெரிக்க வரிசெலுத்துபவரால் கொடுக்கப்படும். இவர்களே ஈராக்கிய அடிப்படைக் கட்டுமானங்களை போரில் அழித்த குண்டு வீச்சுக்களுக்கும் பணம் அளித்தவர்கள் ஆவார். எஞ்சிய சுமை ஈராக்கிய மக்களால் ஏற்கப்படும். அமெரிக்கா ஈராக்கின் எண்ணெய் வளத்தை கொள்ளையடிப்பதானது மிகமிகப் பெரிய அளவிலான கார்ப்பரேட் ஒப்பந்தங்களுக்கு பணம் கொடுப்பதற்காக ஆகும்.

USAID ன் பேச்சாளர் லூக் ஜாகனேர், அரசியல் பாரபட்ச குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் முயற்சியில் கூறியதாவது: ''உண்மை என்னவென்றால் ஒரு சில நிறுவனங்களே இந்த அளவிலான ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியும்'' என்றார். இதில் உண்மையின் சாயல் கொஞ்சம் இருக்கிறது. மிகச் சிறிய எண்ணிக்கையிலான மாபெரும் நிறுவனங்களே ஒப்பந்தச் சந்தையில் உள்ளன. பெக்டலுக்குக் கொடுக்கப்பட்டதைப் போன்று இவை அனைத்துமே அரசியல் தொடர்பு உடையவைதாம். ஹாலிபேர்டனைத் தவிர மற்ற பெரிய போட்டி நிறுவனம் ப்ளூர் கார்ப்பரேஷன் ஆகும். இதனுடைய பழைய நிர்வாகக் குழுவில், தேசிய பாதுகாப்பு சபையின் பழைய தலைவரும், CIA வின் முன்னாள் துணை இயக்குனராக இருந்தவரும் இருந்திருக்கின்றார். இதைத் தவிர பல இராணுவத் தொடர்புகளும் அதற்கு உண்டு.

கடந்த மாதத்தில் போருக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றபொழுது, சான்பிரான்ஸிஸ்கோவில் உள்ள பெக்டலின் தலைமை அலுவலகமும் ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதலுக்கு உள்ளாயிற்று. ஏனெனில் எதிர்ப்பாளர்கள் இந்நிறுவனத்தை புஷ் நிர்வாகத்தின் இராணுவ-வணிகக் கூட்டின் முக்கிய பகுதியாகக் கருதினர். நாட்டின் 17 வது பெரிய இராணுவ ஒப்பந்த நிறுவனமாக அது உள்ளது. அக்டோபர் 2001 மற்றும் செப்டம்பர் 2002 க்கு இடைப்பட்ட காலத்தில் பெக்டலுக்கு இராணுவத்துறை 1.03 பில்லியன் டொலர்களைக் கொடுத்தது. பெக்டலின் 2002 ன் மொத்த வருமானம் 11.6 பில்லியன் டொலர்களாகும். இது கிட்டத்தட்ட 10 சதவிகிதமாகும்.

த சென்டர் பார் ரெஸ்பான்ஸிங் பாலிடிக்ஸ் (The Center for Responsive Politics) என்னும் அரசாங்க கண்காணிப்பு (Watchdug) அமைப்பு தெரிவித்துள்ளதன்படி, துவக்கத்தில் ஒப்பந்தத்திற்கு அனுமதிக்கப்பட்ட ஆறு நிறுவனங்களுமே அமெரிக்க அரசியல்வாதிகளுக்கு மிகப்பெரிய நன்கொடையை அளித்துள்ளன. அதிலும் குறிப்பாகக் குடியரசுக் கட்சிக்கு ஆகும். 1999 மற்றும் 2002 ல் இக்கட்சிக்கு 3.6 மில்லியன் டொலர்கள் குறிப்பாக 66 வீதமான நன்கொடையை இவை அளித்துள்ளன. பெக்டல் மட்டும் இக்கட்சிக்கு 1.3 மில்லியன் டொலர்களை அளித்துள்ளது.

ஆனால் பெக்டலின் தொடர்புகள் தேர்தல் அன்பளிப்புகளுக்கு அப்பாலும் பரந்து விரிந்துள்ளன. பல காலமாக இந்த நிறுவனம் குடியரசுக் கட்சி அரசியல்வாதிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் அரசுப் பணிக்குச் செல்லவும் அதிலிருந்து வெளியேறுவதற்கும் உதவி செய்யும் இடைவழிப் பாலமாக இருந்துள்ளது.

பெக்டலின் மூத்த துணைத் தலைவர்களுள் ஒருவரான ஜாக் ஷீஹன் என்பவர் பாதுகாப்பு கொள்கைக் குழுவில் உறுப்பினராக இருக்கின்றார். இக்குழுவானது பாதுகாப்பு அமைச்சரான டோனால்ட் ரம்ஸ்பெல்டிற்கு ஆலோசனை வழங்கி வருகிறது. ரம்ஸ்பெல்டுடன் நெருங்கி இணைந்துள்ள வலதுசாரி சக்திகள் பாதுகாப்புக் குழுவில் மேலாதிக்கம் கொண்டுள்ளனர். அதன் பழைய தலைவரான ரிச்சார்ட் பேர்ல் என்பவர் ஈராக்கியப் போருக்காக பெருங்குரல் எழுப்பியவர் ஆவார். இவருடைய தொடர்பு குளோபல் கிராஸிங் என்ற மாபெரும் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இருந்ததால், பணியின் நலன்கள் மோதல் அடிப்படையில் கடந்த மாதம் அவர் ராஜிநாமா செய்ய தள்ளப்பட்டார்.

ஷீஹன், பெக்டல் நிறுவனத்தின் பெட்ரோலிய இரசாயணத் துறைகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கிழக்கு, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென்மேற்கு ஆசியா ஆகிய நாடுகளின் நிர்வாகத்தின் நடவடிக்கைகளைப் பற்றிய செயல்முறையை விதித்துச் செயல்படுத்திக் கண்காணிக்கவும் செய்கிறார். ஒரு ஓய்வுபெற்ற நான்கு நட்சத்திர ஜெனரலான இவர், 1997 வரை அமெரிக்க அட்லாண்டிக் கட்டளை மையத்தின் உயர் தளபதியாக விளங்கினார். அத்துடன் கிளிண்டன் ஆட்சியில் மத்திய ஆசியப் பிரிவிற்கு சிறப்பு ஆலோசகராகவும் விளங்கினார்.

பெக்டலின் தலைவரும் CEO வும் ஆன ரைலி பெக்டல் என்பவர் புஷ்ஷினால் ஏற்றுமதிக் குழுவிற்கு நியமிக்கப்பட்டார். இக்குழு ஜனாதிபதிக்கு பன்னாட்டு வணிகப் பிரச்சினைகள் பற்றி ஆலோசனை கூறகிறது.

ஜோர்ஜ் ஷூல்ட்ஸ் என்பவர் பெக்டலில் ஏழு ஆண்டுகள் தலைவராக இருந்து வந்தவர். அத்துடன் இவர் நிக்ஸனின் அரசாங்க கருவூலக் காரியதரிசியாகவும், ரீகனின் அரச செயலாளராகவும் செயல்பட்டவர். அரசுப் பணியைவிட்ட பின் ஷல்ட்ஸ் மீண்டும் பெக்டலில் இயக்குநர் குழுவில் உறுப்பினராகச் சேர்ந்து இன்றளவும் தொடர்ந்து பதவியில் உள்ளார். அத்துடன், போரை நியாயப்படுத்தும் முயற்சிகளில் முக்கிய பங்கு கொண்டிருந்த ஈராக் விடுதலைக் கமிட்டி என்னும் வலதுசாரி அமைப்பினுடைய ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் உள்ளார்.

பெக்டலின் பொது வழக்கறிஞராக 1975 லிருந்து 1981 வரை இருந்த காஸ்பர் வென்பேர்கர் என்பவர், ரீகன் நிர்வாகத்தில் பாதுகாப்பு செயலாளராக இருந்தவர்.

இந்தப் பட்டியல் இன்னும் வளர்ந்துகொண்டே போகிறது. USAID யின் தலைவராக உள்ள ஆன்ட்ரே நட்சியோ என்பவர் ஒருமுறை பாஸ்டனின் Big Dip திட்டத்தின் இயக்குனராக இருந்தவர். பெக்டலும் வேறு ஒரு நிறுவனமும் இணைந்து பல பில்லியன் டொலர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளன. நிக்சன் ஆட்சியில் செக்யூரிடிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷனின் தலைவராகவும், Ford ன் கீழ் ஏற்றுமதி இறக்குமதி வங்கியின் தலைவராகவும், பின்பு ரீகன் ஆட்சியில் CIA யின் தலைவராகவும் விளங்கிய வில்லியம் கேசி என்பவர் பெக்டலின் ஒரு பழைய ஆலோசகர் ஆவார். நிக்சனின் காலத்தில் CIA டைரக்டராக இருந்த ரிச்சார்ட் ஹெல்மஸ், அவ்வாறே நிக்சனின் கருவூல செயலாளராக இருந்த வில்லியம் சிம்சன் ஆகியோர்கள் பெக்டலின் ஆலேசகர்களாக இருந்தவர்கள் ஆவர்.

இவர்கள் யாவரும் பெக்டலின் அரசியல் தொடர்புகளில் மிக முக்கியமானவர்கள் மட்டுமே ஆவர். Friends in High Places. The Bechtel Story என்ற புத்தகத்தில் 1950 களில் CIA க்கும் பெக்டலுக்கும் இருந்த நெருங்கிய பிணைப்புக்களை லியான் மக்கார்ட்னி என்பவர் ஆவணச் சான்றாகக் குறித்துள்ளார். பழைய CEU ஸ்டீவ் பெக்கல் அப்பொழுதிருந்த CIA ன் பிரதி டைரக்டர் ஆலன் டல்ஸூடன் நெருங்கிய உறவுகள் கொண்டிருந்தார். அவர் CIA யின் வர்த்தக கவுன்சிலின் தொடர்பு அதிகாரியாகவும், உளவுத்துறையின் மற்ற அமைப்புக்களோடும் பிணைந்திருந்தார். மக்கார்ட்னியின் கருத்துப்படி, இந்தோனேசியாவில் சுகர்னோ மற்றும் ஈரானில் மொசாடேக் ஆகியோர்களின் ஆட்சிகளை கவிழ்ப்பதற்கு பெக்டலின் கைவரிசை இருந்தது. இந்த ஆட்சிகளுக்கு பதிலாக வந்த அமெரிக்க சார்புடைய சர்வாதிகாரிகளின் ஆட்சிகளானது பல நன்மைகளை இந்தக் கம்பெனிக்கு அளித்தது. இவற்றின் விளைவாக நூறாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கை பலியானது.

இவ்வாறு பெக்டல் நிறுவனம் தனது அரசியல் தொடர்புகளைப் பயன்படுத்தி சுரண்டிக் கொண்டதும் மற்றும் இலாபத்தை அடைவதற்காக போரில் தொடர்புகளைக் கொண்டிருப்பதும் சமீபத்திய சுவையான செய்தி மட்டுமே அல்ல. இரண்டாம் உலக யுத்தக் காலத்தில் பாரசீக வளைகுடாவில் இந்த நிறுவனம் செயல்படத் துவங்கியதிலிருந்து சவூதி அராபியா, பஹ்ரின் போன்ற நாடுகளின் அமெரிக்க ஆதரவு ஆட்சிகளுடன் இணைந்து முக்கிய பங்கிணை, குறிப்பாக எண்ணெய்க் குழாய்களை அமைப்பதிலும், உள் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதிலும் ஈடுபட்டிருந்தது.

1991 ல் முதல் வளைகுடாப் போருக்குப் பின்பு இக் கம்பெனி ஓர் ஒப்பந்தத்தின் மூலம் - இது குவைத் அரச குடும்பத்திற்கு பெருந்தொகையான பணத்தை அன்பளிப்பு செய்ததன் மூலம் பெறப்பட்டது - 2 பில்லியன் டொலர்கள் அளவிலான பல பணிகளைப் புதுப்பித்தல், செப்பனிடல் போன்றவற்றைக் பெற்றுக்கொண்டது

ஆனால் மிகவும் வியத்தகு நிகழ்ச்சி அக்வாபா எண்ணெய்க் குழாய்களை அமைக்கும் திட்டத்தைப் பற்றியது ஆகும். Sustainable Energy and Economy Network, Institute for Police Studies இவற்றின் துப்பறியும் செய்தியாளர்களான ஜிம் வாலேட், ஸ்டீவ் க்ரட்ஸ்மன், டாப்னே வைஷம் ஆகியோரால் முதலில் வெளியிடப்பட்ட அறிக்கையாகும். மார்ச் 2003 ல் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையானது, ரீகன் நிர்வாகமும் பெக்டலும் ஈராக்கிலிருந்து ஜோர்டானுக்கு எண்ணெய்க் குழாய் தொடர்பு கட்டுமானப் பணியை மேற்கொள்ளப்பட்ட இணைந்த முயற்சிகளின் தொகுப்பு ஆகும்.

1983 லிருந்து 1985 வரை ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் உச்சக் கட்டத்திலிருந்த காலகட்டம்தான் ஈரான்-ஈராக் போரின் கடுமையான சண்டைகளையும் சந்தித்த காலம் ஆகும். இந்தக் காலகட்டத்தில்தான் ஈராக்கிய ஆட்சி ஈரானியப் படைகளுக்கு எதிரான இரசாயண ஆயுதங்களைப் பயன்படுத்தியது. பிற்காலத்தில் சதாம் ஹுசைனை ஆட்சியிலிருந்து அகற்றக் கூறப்பட்ட காரணங்களில் இது ஒன்றாக விளங்கியது. அந்த நேரத்தில் அமெரிக்க அரசாங்கம் ஈராக்கிய அரசாங்கத்தின் பேரழிவு ஆயுதங்களப் பற்றிச் சிறிதும் கவலை கொள்ளவில்லை.

அத்துடன் 80 ஜேர்மன் கம்பெனிகள், 20 அமெரிக்கக் கம்பெனிகளுள் ஹுசேனுக்கு இரசாயண, உயிரியல் ஆயுதங்கள் மற்றும் ஏனைய தளவாடங்களை அளித்த நிறுவனங்களில் ஒன்றாக பெக்டலும் விளங்கியது என்று பேர்லின் செய்தி ஏடான டகஸ்யூயிடுங் இச்செய்தியைக் கூறுகிறது. அப்பத்திரிகை கடந்த டிசம்பர் மாதம் ஈராக் ஐ.நா.விற்குக் கொடுத்த ஈராக்கிய ஆயுதங்களின் பட்டியலில் தனிக்கைக்கு உட்படாத அறிக்கையிலிருந்து பல பகுதிகளை ஆதாரம் காட்டியுள்ளது. அமெரிக்கா, அதன் முதல் அறிக்கையைப் பறித்து எடுத்துக்கொண்டு ஐ.நா. பாதுகாப்புக் குழு உறுப்பினர்களுக்குக் கொடுப்பதற்கு முன்பாக அமெரிக்க நிறுவனங்களைப் பற்றிய குறிப்புக்களை நீக்கிவிட்டது. இரசாயண ஆயுத தொழில்நுட்பத்தைப் பற்றி ஈராக்கிற்குத் தெரிவித்த ஒரு நிறுவனம் பெக்டலாகும்.

ரீகன் ஆட்சியும், (பழைய பெக்டல் தலைவர்) அரச செயலாளரான ஜோர்ஜ் ஷூட்ஸ்ம், முன்பு மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சிறப்புத் தூதுவராக இருந்து இப்பொழுது பாதுகாப்பு அமைச்சராக உள்ள டோனால்டு ரம்ஸ்பெல்டும், ஹுசேனுடன் பெக்டல் அமைக்கவிருந்த எண்ணெக் குழாய்களைப் பற்றித் தீவிரமான பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர். ஈரானிய அயதுல்லா கொமேனியின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையிலும் ஈராக்கிய எண்ணெய் வளம் கூடுதலாகப் பயன்படுத்தப்படவும் அந்த எண்ணெய்க் குழாய்த் திட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தது.

இத்திட்டம் மிக விரிவான அளவில் ரம்ஸ்பெல்டு, ஈராக்கியத் துணைப் பிரதமர் தாரிக் அஸிஸ் மற்றும் சதாம் ஹுசேனால் டிசம்பர் 1983 ல் விவாதிக்கப்பட்டது. ஈராக் இந்தத் திட்டத்தில் ஈர்க்கப்பட்டிருந்தாலும் இந்தக் குழாய் திட்டமானது இஸ்ரேலியர்களால் தாக்கப்பட்டுவிடுமோ என்ற அக்கறையை ரம்ஸ்பீல்டு கொண்டிருந்தார்.

இதையொட்டி துரிதமான நடவடிக்கைகள் அமெரிக்க அரசாங்கத்தில் இருந்த முக்கியமானவர்களால் மேற்கொள்ளப்பட்டன. அதில், தற்போது ஹலிபேர்ட்டன் இயக்குனர் குழுவில் ஒருவராக உள்ளவரும், அரசியல் விவாகாரத் துணை அமைச்சராகவும் இருந்த லோரன்ஸ் ஈகிள்பெர்ஜர் என்பவரும் இதில் அடங்குவார். அத்துடன் இஸ்ரேலின் ஒத்துழைப்பிற்கும் திட்டத்திற்கும் தேவையான பணத்தைத் திரட்டுவதற்கும் முயற்சிகள் கொள்ளப்பட்டன. 1982, டிசம்பர் 22 ல் ஈகிள்பெர்ஜர் ஏற்றுமதி-இறக்குமதி வங்கிக்கு ஈராக்கிற்கு உதவியளிக்க ஒரு குறிப்பை அனுப்பி வைத்தார். அதில் ''வருங்கால ஈராக்கியப் பொருளாதார ஸ்திரத்திற்கும், வலுவிற்கும் அமெரிக்கா பெருமளவு ஏற்றுமதிச் சந்தையில் காலூன்ற வாய்ப்பு நிறைந்ததாக இருக்க அத்தகைய உதவி வழிகாட்டும்'' என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த அழுத்தம் வெற்றியடைந்ததால் 1984 ஜூன் மாதம் இந்த வங்கி 484.5 மில்லியன் டொலர்களை இத்திட்டத்திற்கு வழங்கியது. அரசாங்கத்தின் மற்றொரு கடன் நிறுவனமான The Overseas Private Investment Corporation னும் இத்திட்டங்களில் அக்கறை காட்டியிருந்தது. இந்நிறுவனங்களின் ஆதரவுடனான எண்ணெய்க் குழாய் திட்டம், காங்கிரசின் இசைவுபெறாமல், அரசாங்கம் அளிக்கக்கூடிய ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டது.

இஸ்ரேலிய பிரதம மந்திரியாக இருந்தவரும், தொழிற் கட்சியின் தலைவருமான சிமோன் பெரஸின் நண்பரான ப்ருஸ் ரப்பாபோர்ட் என்ற சுவிஸ் பில்லியனரின் தலையீட்டின் மூலம் இஸ்ரேலிய ஒத்துழைப்பில் வரும் நெருக்கடியைத் தீர்க்க பெக்டல் நிறுவனம் முற்பட்டது. சுதந்திர வழக்கறிஞரான ஜேம்ஸ் மக்காயின் என்பவரின்படி, அட்டர்னி ஜெனரல் எட்வின் கேசியின் பங்கு என்ன என்பதைப் பற்றிய விசாரணை ஒன்று 1985 ல் மேற்கொள்ளப்பட்டது. ''திரு.ரப்பாபோர்ட் பெக்டலுடன் நடத்திய விவாதங்களில்..... இஸ்ரேல் ஒரு குறிப்பிட்ட தொகையையும் எழுத்து மூலமான பாதுகாப்பு உத்தரவாதத்தையும் இதற்கு விலையாகக் கேட்டது'' என்று மக்காயின் குறிப்பிட்டார்.

''பெக்டல் உடனான எண்ணெய் எடுப்பு உடன்பாடு மற்றும் ரப்பாபோட்டிற்கு 10 சதவிகிதத் தொகை உட்பட சகலதும் விவாதிக்கப்பட்டன. அது கணிசமான ஆதாயத்தை ஈட்டித்தருமாதலால், அவற்றின் ஒரு பகுதியை இஸ்ரேலுக்குக் கொடுக்க முன்வந்தார்....`` என மக்காயின் அறிக்கை தொடருகிறது:

மெஸ்ஸேக்கு எழுதிய கடிதத்தில் ரப்பாபோர்ட்டு ''அனைத்து இடங்களிலும் இது மறுக்கப்படும்.... அதாவது இந்த நிதியத்திலிருந்து ஒரு பகுதி நேரடியாக லேபருக்குச் செல்வது என்பது'' அதாவது இஸ்ரேலிய தொழிற் கட்சியின் கஜானாவிற்கு அளிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

பேச்சுவார்த்தைகளின்போது, ரப்பாபோர்ட்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இரு பெரும் தூண்களான ஜேம்ஸ் ஷ்லிசெஞ்சர், வில்லியம் கிளார்க் ஆகியோரின் சேவைகளையும் நாடினார். ஷ்லிசெஞ்சர் ஒரு முந்தைய CIA டைரக்டர் பதவியிலிருந்ததோடு, நிக்ஸன், போர்டு ஆகியோருடைய ஆட்சிக்காலத்தில் பாதுகாப்புச் செயலாளராகவும் இருந்தவர். கிளார்க், ரீகன் ஆட்சியில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்து பின்பு உள்துறைச் செயலாளராக 1985 வரை இருந்தார்.

''கார்ப்பரேஷனுக்கும் அரசாங்கத்திற்குமிடையேயான பிரிவுக் கோடுகள் தெளிவின்றி இருந்த நிலைமையில், கிளார்க் அவற்றை முற்றிலும் அழித்துவிட்டார். ரப்பாபோர்ட் அவருக்குப் பணம் கொடுத்த அளவில், கிளார்க்கோ தன்னை ஈராக்கியருக்கு அரசாங்க சார்பில் வந்துள்ளதாகக் காட்டிக்கொண்டார்'' என வாலேட்டு (Vallette) அறிக்கை கூறுகிறது

சுதந்திர வழக்கறிஞரான மெக்காயின், கேசியின் மீதான விசாரணையில் பண சம்பந்தப்பட்ட மற்றும் அறநெறிக்குட்பட்ட கட்டுப்பாட்டு மீறல்களையும் அடக்கியிருந்ததன் விளைவாக 1986 ல் அட்டர்னி ஜெனரல் ராஜிநாமா செய்தார்.

ஹுசைன் இத்திட்டத்தை மறுக்கத் தீர்மானித்ததினால், பெக்டலின் அக்வாபா எண்ணெய்க் குழாய் திட்டம் கைவிடப்பட்டது.

''ஈராக்கினுடைய எண்ணெய்க்கான பெக்டலின் நீண்டகால நாட்டம், இறுதியில் 20 ஆண்டுகளிலான இராஜதந்திர பேச்சுக்கு பின்பு, கடுமையான மூர்க்கத்தனத்தைப் பயன்படுத்தி இதனை வெற்றியடையக்கூடும்'' என்று வாலேட்டு அறிக்கை, ஈராக் போர் துவங்க இரண்டு மாதங்களுக்கு முன்பு கூறியுள்ளது.

ஒரு கம்பெனியின் உடனடித் தேவைகளுக்கு அப்பால் போரை நடத்தவேண்டும் என்ற காரணங்கள் இருந்தபோதிலும், மிகப்பெரிய மீள்கட்டுமான ஒப்பந்தம் பெக்டலுக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற முடிவு, அமெரிக்க முதலாளித்துவ அமைப்புக்களும், அரசியல் நிறுவனங்களும் முழுமையான இணைந்த நலன்களைக் கொண்டதைக் காட்டுகின்றது. அத்துடன் ஈராக் மீதான போர் எவ்வாறு திட்டமிட்டபடி கொள்ளை முறைகளை இலக்காகக் கொண்டு செயல்பட்டது என்பதையும் இது தெளிவாக்குகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved