World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Escalating attacks on US troops in Iraq

ஈராக்கில் அமெரிக்க துருப்புகள் மீது பெருகி வரும் தாக்குதல்கள்

By Peter Symonds
22 September 2003

Use this version to print | Send this link by email | Email the author

வாஷிங்டனும், அமெரிக்க இராணுவமும் மறுப்புக்களை வெளியிட்டுக் கொண்டிருந்தாலும், ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்துக் கொண்டதற்கு ஆயுதம் தாங்கிய எதிர்ப்புக்கள் தீவிரமடைந்து, பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. சென்ற வாரக் கடைசியில் டிக்கிரிட் மற்றும் கால்டியா பகுதிகளில் அமெரிக்கப் படைகள் மீது திடீர் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பாக்தாத்தின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் இருந்து சுற்றி வளைத்து அமெரிக்கப் படைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் பல மணி நேரம் துப்பாக்கி சண்டையாக நடைபெற்றுள்ளது. அமெரிக்க இராணுவம், மிகப் பெரும் அளவில் இராணுவ வலிமை மிக்கதாகயிருந்தும் இப்படி நடந்திருக்கின்றது.

வியாழக்கிழமை பிற்பகலில் கால்டியா பகுதியில் இரண்டு அமெரிக்க இராணுவ கவச வாகனங்கள் கண்ணி வெடிகளால் தாக்கப்பட்டன. முதல் கவச வாகனம் தாக்குதலில் நின்று விட்டது. அந்த வாகனத்தின் மீது துப்பாக்கிகளாலும், ராக்கெட் மூலம் ஏவப்படும் வெடி குண்டுகளாலும் (RPG) தாக்குதல்கள் நடைபெற்றன. இந்த சண்டை மூன்று மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றுள்ளது. அமெரிக்க இராணுவம் பீரங்கிகளையும், பிராட்லி போர் வாகனங்களையும், ஹெலிகாப்டர்களையும் பயன்படுத்தி போராடியவர்களை அழிக்க முயன்றது. இந்த சம்பவத்தில் இரண்டு அமெரிக்க வாகனங்கள் அழிக்கப்பட்டன.

இந்தச் சண்டையை நேரில் கண்டவர்கள் அளித்துள்ள தகவல்களின்படி, அமெரிக்கப் படைகள் தங்களை தாக்கியவர்களை நோக்கி சுடாமல் இங்கொன்றும், அங்கொன்றுமாக பரவலாக சுட்டனர் என்றும், அந்த நிகழ்ச்சியை செய்தியாக திரட்டுவதற்கு முயன்ற பத்திரிகையாளர்களை மிரட்டியதாகவும் தெரிவித்தனர். அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனத்தின் புகைப்படக்காரரும் அதன் டிரைவரும், உயிர் பிழைப்பதற்காக தப்பி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்களின் கார் மீது கன ரக பீரங்கியால் சுட்டனர். இரவு நெருங்கியதும் அமெரிக்கத் துருப்புக்கள் அங்கிருந்து வெளியேறிச் செல்லும் போது எரிந்து விட்ட வாகனங்களை இழுத்துக் கொண்டு சென்றனர்.

இரண்டு அமெரிக்க இராணுவத்தினர் இந்தத் தாக்குதலில் காயமடைந்தனர். எவ்வளவு பேர் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத அளவிற்கு ஈராக் போராளிகளும், பொதுமக்களும் காயமடைந்துள்ளனர். பென்டகன், ஈராக் மக்களில் மடிந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பட்டியலைத் தயாரிக்க மறுத்து விட்டது. உள்ளூர் மக்கள் ஊடகங்களுக்கு பேட்டியளித்தபோது, மூன்று ஈராக் இளைஞர்கள் காயமடைந்ததாகத் தெரிவித்தனர். இருவருக்கு தோள்பட்டைகளிலும், ஒருவருக்கு மார்பிலும் காயம் ஏற்பட்டது. அமெரிக்க துருப்புக்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறிய பின்னர், நூற்றுக்கணக்கான கல்தியா குடிமக்கள் தெருக்களில் நடனமாடினர். விண்ணை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர்.

ஜிஹாத் அஃபாஷ் மாஸிர் (வயது 40) தனது வீட்டின் முன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் சுவற்றிற்கு பின்னால் நின்று கொண்டு, வாகனங்கள் மீது இருவர் சுடுவதற்கு அனுமதித்ததாக ஒரு நிருபரிடம் தெரிவித்தார். "சுடுவதற்கு அதை விடச் சிறந்த இடம் அவர்களுக்கு இல்லை. பழி தீர்க்கும் முறையில் நடவடிக்கை எடுப்பார்களே என்பது குறித்து நான் பயப்படவில்லை. எங்களது நாட்டிற்காக, எங்களை நாங்களே தியாக வேள்வியில் அர்ப்பணித்துக் கொள்கிறோம்." என அவர் குறிப்பிட்டார். மற்றவர்கள் சதாம் ஹூசைன் திரும்ப வந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டுமென்பதை கோடிட்டுக் காட்டினர். அவரது ஆட்சியில் நிலவிய ஸ்திரத்தன்மைக்கும் ஆதரவு தெரிவித்தனர்.

கல்தியா பகுதி, அருகாமையில் உள்ள பஃலூஜாவைப் போல், அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மையமாக ஆகிவிட்டது. அமெரிக்க துருப்புக்கள் நடமாட முடியாத இடமாகவும் ஆகிவிட்டது. உள்ளூர் போலிஸார் அமெரிக்காவிடம் சம்பளம் வாங்கும் கூட்டாளிகள் என்று மக்களால் கருதப்படுகின்றனர். சென்ற திங்கள் கிழமையன்று நகர போலீஸ் தலைமை அதிகாரியான கேர்னல் காதர் மக்கலீப் அலி, பலூஜாவில் உள்ள தனது வீட்டிற்கு வரும் போது பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டார். "எந்த விதமான பாதுகாப்பும் இல்லை. அமெரிக்கர்கள் ஈராக்கில் இருக்கும் வரை ஸ்திரத்தன்மை எதுவும் இல்லை" என்று காயமடைந்த அதிகாரியான பெளது பாதில் ஈசா என்பவர் தான் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையிலிருந்து அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

இச் சம்பவத்திற்குப் பின்னர் வியாழக்கிழமை இரவு டிக்கிரிக் நகரின் புறநகர் கிராமமான அல்ஹவுசாவில், ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த மூன்று அமெரிக்க இராணுவத்தினர் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்களில், அவர்கள் மூவரும் மாண்டனர். அங்கு இரவு முழுவதிலும் அமெரிக்க இராணுவம் அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக மிகப் பெரும் படையுடன், அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்களுடன் வீடுகள் மீதும், பண்ணை இல்லங்கள் மீதும் தாக்குதல் நடத்தியது. காலை விடிந்ததும் ஏறத்தாழ 60 ஈராக் மக்கள் கைது செய்யப்பட்டு, தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் காவலில் வைக்கப்பட்டனர்.

உள்ளூரில் பணியாற்றிக் கொண்டுள்ள அமெரிக்கத் தளபதியான கேர்னல் ஜேம்ஸ் ஹிக்கி, திடீர் தாக்குதல்களின் தன்மை குறித்து விளக்கம் அளித்தார். ''அமெரிக்க படைகள் மீது ஒருங்கிணைந்த அடிப்படையில், ஒன்றன்பின் ஒன்றாக தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. ஒருங்கிணைப்பு அடிப்படையில் இந்த திடீர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக தோன்றுகிறது. டிக்கிரிக் நகரத்தின் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதியிலிருந்து தாக்குதல்கள் நடத்துப்படுகின்றன. இது வழக்கத்திற்கு மாறானதாக உள்ளது'' என்று விளக்கிய ஹிக்கி, இத் தாக்குதல்களை மிகவும் அமுக்கியும், ஓரளவிற்கு அரசியல் ஏற்புடைமையை நிலை நாட்டுவதற்காக ஒரு சிலர் பின்னால் இருந்து கொண்டு இந்த தாக்குதல்களில் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

பொதுவாக, வாஷிங்டனில் இருந்து வருகின்ற விளக்கத்தை எதிரொலிக்கின்ற வகையில் தான் ஹிக்கியின் விளக்கம் அமைந்திருக்கின்றது. அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் ஈராக்கில், மீதமுள்ள பாத் கட்சிகாரர்கள் என்றும் குற்றவாளிகள் என்றும், அல்லது ஈராக்கிற்கு வெளியில் இருந்து வருகின்ற பயங்கரவாதிகள் என்றும் வாஷிங்டன் தொடர்ந்து கூறி வருகின்றது. இதே கருத்தைத் தான் கேர்னல் ஹிக்கியும் தெரிவித்துள்ளார். ஆனால் இந்தப் பொய்கள் நாளுக்கு நாள் அம்பலமாகிக்கொண்டு வருகின்றன. அமெரிக்காவிற்கும், அதன் கூட்டணிகளுக்கும் பரவலாக, எதிர்ப்பும் பகை உணர்வும் வெளிப்படையாக வெளிவந்து கொண்டிருப்பது அவர்களது பொய்களை தோலுரித்துக் காட்டுவதாக அமைந்திருக்கின்றது. பென்டகன் ஈராக்கில் தனது படைகள் வீட்டுக்கு வீடு, நடத்திக் கொண்டிருக்கும் சோதனைகள், தான் தோன்றித் தனமான கைதுகள் அல்லது பாதிக்கப்பட்ட மற்றும் மாண்ட குடிமக்கள் பற்றிய விபரங்களைத் தராமல் இருக்கக் கூடும். ஆனால், அமெரிக்க இராணுவமும், அவர்களது கூட்டாளிகளும் நடத்தி வருகின்ற முரட்டுத்தனமான நடவடிக்கைகளின் தாக்கங்கள் எதிரொலிக்கவே செய்கின்றன.

செப்டம்பர் 17 அன்று ஒக்குபேஷன் வாட்ச் (Occupation Watch) என்ற வலைத் தளத்தில் ஒரு கட்டுரை பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு நாளும் அமெரிக்க இராணுவம் வீடுகளில் நடத்தி வருகின்ற டஜன் கணக்கான திடீர் சோதனைகள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்படுவதில்லை. கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து மக்களை மண்ணில் முகம் புதைக்கும் அளவிற்கு எட்டி உதைக்கிறார்கள் என்றும், சென்ற செவ்வாய் கிழமையன்று நடைபெற்ற சோதனையையும் இந்த வலைத் தளம் துல்லியமாக வர்ணித்திருக்கின்றது. அத்துடன் சுமார் ஒரு டஜன் ஆண்களை அமெரிக்க இராணுவத்தினர் இழுத்துக் கொண்டு செல்வதைக் கண்டித்து பெண்கள் ஓங்கார கூச்சல் இட்டதையும் விளக்கியுள்ளது. தனது குடும்பத்தாருடன் இருந்த பத்து வயது சிறுவன் ஒருவன் "நான் வளர்ந்ததும் ஓர் ஈராக் போர் வீரனாவேன் மற்றும் நான், அமெரிக்கர்களை கொல்வேன் அவர்கள் தான் எதிரிகள்" என்று குறிப்பிட்டான்.

சென்ற வாரம் நியுயார்க் டைம்ஸ் பத்திரிகையானது, ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பு பகை உணர்வு அதிகரித்து வருவது குறித்து சில அமெரிக்க அதிகாரிகள் மிகப் பெரும் அளவில் கவலை அடைந்து வருவதாக விளக்கியுள்ளது. பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரிகள், சாதாரண மக்கள் அமெரிக்கப் படைகள் தங்கள் நாட்டில் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோப ஆவேசமாக காணப்படுவதை புஷ் நிர்வாகம் பொருட்படுத்தாமலிருப்பது ஒரு தவறான நடவடிக்கையாகும் எனக் கருதுகின்றனர். சாதாரண மக்களது ஆவேச உணர்வுகள், அமெரிக்க படைகளை தாக்கிக் கொண்டிருப்பவர்கள் மீதே அனுதாபத்தை தூண்டிக் கொண்டு வருகின்றது. ''இன்றைய தினம் ஈராக்கில் மிகப் பெரும்பாலான மக்கள், அமெரிக்கர்களாகிய நாம் சதாம் ஹூசேனை பதவியிலிருந்து விரட்டியவர்கள் என்று நினைக்கவில்லை. ஆனால் தங்களது வீடுகளின் கதவுகளை உடைத்துக்கொண்டு, தங்களது மனைவி மற்றும் மகள்களை தாக்கிக் கொண்டிருப்பவர்கள் என்று கருதுகின்றனர்'' என்று ஒரு அமெரிக்க அதிகாரி நியூயார்க் டைம்சிடம் தெரிவித்தார்.

அமெரிக்க வெளியுறவுத் துறையின் புலனாய்வுப் பிரிவு அண்மையில் ஈராக்கில் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியிருக்கின்றது. அந்தக் கருத்துக் கணிப்பில் தங்கள் நாட்டை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா மீது கணிசமான அளவிற்கு பகை உணர்வு மக்களிடையே நிலவுவது தெரிய வந்திருக்கின்றது. இந்தப் பகை உணர்வு சன்னி பிரிவினரின் இதயம் போன்ற ஈராக்கிற்கு அப்பால், ஷியா பிரிவினர் நிறைந்துள்ள தெற்கிலும் நிலவுகின்றது. சாதாரணமாக அமெரிக்க இராணுவத்தை ஆதரித்து வந்தவர்களும் தற்போது திடீர் சோதனைகள் மற்றும் இதர நடவடிக்கைகளுக்கு மிக பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பதை அதிகாரிகள் தெரிவித்தனர். ஈராக்கின் ஷியா பிரிவினர் வாழும் பகுதிகளிலும், இத்தகைய எதிர்ப்பு உணர்வு வலுத்து வருவதை அந்தக் கருத்தாய்வு எடுத்துக்காட்டுவதாக நியூயார்க் டைம்ஸ் விளக்கம் தந்துள்ளது.

சில அதிகாரிகள் இந்த கருத்தாய்வு முடிவுகளை பொருட்படுத்தாவிட்டாலும் அல்லது அழுக்கி வாசித்தாலும் மற்ற அதிகாரிகள் விவகாரங்கள் மோசமடையும் என்றே எச்சரிக்கை செய்துள்ளனர். ''காலம் செல்லச் செல்ல ஈராக்கில் கட்டமைப்பு வசதிகள் மேம்படாவிட்டால் மேலும் அமெரிக்க துருப்புக்கள் முன்னணியிலும், மத்தியிலும் மனப்போக்கு நன்றாக இருக்காது'' என்று ஒரு அதிகாரி நியூயார்க் டைம்ஸ் நிருபரிடம் தெரிவித்தார். மேலும் ஈராக்கின் நிர்வாகக் குழுவில் இடம்பெற்றுள்ள ஷியா அமைப்புக்களும், குர்து இன படைகளும் அமெரிக்காவின் பொம்மைகள் என்று நாளுக்கு நாள் அம்பலப்படுத்தப்பட்டு வருவதால் அமெரிக்கப் படைகளுக்கு எதிராக உருவாகிவரும் ஆயுதம் தாங்கிய எதிர்ப்புக்கள் சன்னிகள் வாழுகின்ற பகுதிகளுக்கு அப்பாலும் விரிவாகி பரவக்கூடும்.

அமெரிக்கத் துருப்புக்கள் மீது நடத்தப்பட்டு வருகின்ற தாக்குதல்களால் தினசரி பலியாகின்றவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு பென்டகன், ஈராக் போலீசாருக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தையும், ஈராக் இராணுவத்தை சீரமைக்கும் நடவடிக்கைகளையும் விரைவுபடுத்தியுள்ளது. அது மட்டுமல்ல, பழங்குடி இனத்தவர்களது தலைவர்கள், தளபதிகள் மற்றும் உள்ளூர் யுத்த பிரபுக்கள் ஆகியோரது ஆதரவைப் பெற்று, அவர்கள் மூலம் கேந்திர நகரங்களில் ரோந்துப் பணிகளுக்கு ஏற்பாடு செய்வது குறித்து அமெரிக்க இராணுவம் பேரம் நடத்தி வருகின்றது. ஈராக்கில் உள்ள வாஷிங்டனின் தலைமை நிர்வாகியான மூன்றாவது போல் பிரேம்மர் (Paul Bremer III) இந்த மாத துவக்கத்தில், எண்ணெய் குழாய்கள் மற்றும் மின்சார இணைப்புக்கள் போன்ற தொழில் கட்டமைப்புக்களை காவல் புரிகின்ற பழங்குடி படையினருக்கு அமெரிக்கா ஊதியம் வழங்கும் என்ற ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.

இப்படிப்பட்ட நடவடிக்கைகளின் முடிவுகள் ஆப்கானிஸ்தான் நிலவரத்தை போன்று அமைவது தவிர்க்க முடியாதது ஆகும். ஆப்கானிஸ்தானில் பெரும்பாலான மக்களது சேம நலன் அல்லது ஜனநாயக உரிமைகளை சிறிதும் மதிக்காத யுத்த பிரபுக்கள் மேலாதிக்கம் செலுத்தி வருகிறார்கள். மேலும் அமெரிக்கா ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதை ஊக்குவிக்க உதவுபவர்கள், ஒத்துழைப்பவர்கள் காட்டிகொடுக்கும் துரோகிகள் என்று கருதப்பட்டு அவர்களும் கூட்டணி துருப்புக்களோடு இணைத்து தாக்குதல்களுக்கு இலக்காகின்ற நிலைதான் ஏற்படும். இப்படிப்பட்ட நிலை உருவாகும் அளவிற்குத்தான் ஈராக்கில் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதை கடந்த சில நாட்களாக நடைபெற்றுள்ள நிகழ்ச்சிகள் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.

* பலூஜா பகுதியில் மக்களது கோபத்தை மேலும் தூபம் போடுகின்ற நிகழ்ச்சி சென்ற புதன்கிழமை நடைபெற்றது. ஒரு திருமண கொண்டாட்டத்தின்போது துப்பாக்கியால் வெடித்து கொண்டாடுவதை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க சிப்பாய் ஒருவர் அந்தப் பகுதியின் திருமண கலாச்சார நடைமுறைகள் தெரியாத காரணத்தினால் தவறாக கருதி 14 வயது சிறுவனை சுட்டுக் கொன்றார். மற்றும் ஆறு பேர் காயம் அடைந்தனர். அந்த ஊரைச் சேர்ந்த ஒருவர் நேரில் கண்ட நிகழ்ச்சியை விவரிக்கும்போது, அமெரிக்கப் படைகள் தாங்கள் தாக்கப்படுவதாக நம்பி வாகனத்தில் இருந்து இறங்கினார்கள். எல்லா பக்கங்களிலும் சுட ஆரம்பித்தார்கள் என்று தெரிவித்தார். இந்த சம்பவம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்கப் படைகள் 10 பலூஜா போலீசாரையும், ஒரு ஜோர்டான் நாட்டு காவலாளியையும் சுட்டுக் கொன்றனர். பின்பு அதை நட்பு முறையிலான துப்பாக்கிச் சூட்டு (friendly fire) சம்பவம் என்று வர்ணித்துக் கொண்டனர்.

* சனிக்கிழமை காலை ஈராக் நிர்வாகக்குழு உறுப்பினரான திருமதி ஆக்கிலா அல் அசிமி அவரது மேற்கு பாக்தாத் வீட்டிலிருந்து வெளியே வந்ததும் அவர் மீது திடீரென்று தாக்குதல் நடத்தப்பட்டது. அவருக்கு கடுமையான காயம் ஏற்பட்டு அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது தோல்பட்டையில் மற்றும் காலில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் ஒருவர்தான் ஈராக் நிர்வாகக்குழுவில் இடம்பெற்றுள்ள பாத் கட்சி உறுப்பினர். சதாம் ஹூசேன் ஆட்சியிலும் பணியாற்றியவர். முதல் தடவையாக இப்போது ஈராக் நிர்வாகக்குழு உறுப்பினரையே கொலை செய்யும் முயற்சியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.

* சனிக்கிழமையன்று நடைபெற்ற இரண்டு தாக்குதல்களில் மேலும் மூன்று அமெரிக்க இராணுவத்தினர் பலியானார்கள். இந்த இரண்டு தாக்குதல்களும் வெவ்வேறு இடங்களில் நடைபெற்றவையாகும். பாக்தாத் நகருக்கு மேற்கே 20 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள அபுகாரிப் சிறைச்சாலையில் நடைபெற்ற பீரங்கி தாக்குதலில் இரண்டு அமெரிக்க இராணுவத்தினர் பலியானதுடன், மேலும் 13 பேர் காயம் அடைந்தனர். பாக்தாத்திற்கு மேற்கே 110 கிலோமீட்டருக்கு அப்பால் ரமாதி என்ற இடத்தில் ஒரு சிப்பாய் வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது ஒரு நூதன வெடிப்பு கருவி மூலம் அவரது வாகனம் தாக்கப்பட்டதில் பலியானார். மே முதல் தேதியன்று பிரதான போர் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யு புஷ் அறிவித்த பின்னர் நடைபெற்ற கொரில்லா தாக்குதல்களில் இதுவரை 82 அமெரிக்கப் படையினர்கள் மாண்டுள்ளனர்.

Top of page