World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

CIA-MI6 planned to assassinate Syrian leaders in 1957

CIA-M16 1957ல் சிரிய நாட்டுத் தலைவர்களை படுகொலை செய்ய திட்டமிட்டது

By Jean Shaoul
6 October 2003

Use this version to print | Send this link by email | Email the author

இஸ்ரேல் அண்மையில் யாசிர் அராஃபாத்தை கொலை செய்துவிடுவதாக மிரட்டியிருப்பதை கண்டிக்கும் தீர்மானம் ஐ.நா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பிற்கு வந்தபோது அமெரிக்கா வியப்படையும் விதத்தில் அந்த தீர்மானத்திற்கு எதிராக தனது ரத்து அதிகாரத்தை (Veto) பயன்படுத்தியது. பிரிட்டன் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கிக்கொண்டது. மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவும், பிரிட்டனும் கடைபிடித்து வந்த வெளியுறவுக் கொள்கையின் ஒரு பகுதியாக அந்நாட்டின் தலைவர்களை படுகொலை செய்வதற்கு திட்டங்கள் தீட்டப்பட்டதாக அண்மையில் பிரசுரிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் தெளிவுபடுத்துகின்றன.

செப்டம்பர் 27, சனிக்கிழமையன்று கார்டியன் நாளிதழில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் அமெரிக்காவின் CIA-வும், பிரிட்டனின் M-16 அமைப்பையும் சார்ந்த பாதுகாப்பு படைகள், அதிக அளவில் மாஸ்கோவை நோக்கி சாய்ந்து கொண்டிருந்த சிரிய அரசாங்கத்தைக் கவிழ்க்கவும் அதன் மூன்று முக்கிய தலைவர்களை கொலை செய்வதற்கும் திட்டமிட்டதாக விளக்கப்பட்டிருக்கின்றது. இந்த திட்டத்திற்கு, இரு நாடுகளின் அரசியல் நிர்வாக அமைப்புக்களின் பிரதான தலைவர்களான அன்றைய அமெரிக்க ஜனாதிபதி வைட் ஐசனோவராலும் பிரிட்டனின் பிரதமர் ஹரோல்ட் மக்மில்லனாலும் ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தது.

1957-ல் உருவாக்கப்பட்ட அந்த திட்டத்திற்கும் இன்றைய தினம் இஸ்ரேல் வெளியிட்டுள்ள பிரகடனத்திற்கும் இடையே ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு; 1957-ல் உருவாக்கப்பட்ட திட்டம் மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டதோடு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிலருக்குத்தான் தெரியும், பகிரங்கமாக அது அறிவிக்கப்படவில்லை. இன்றைய தினம் சர்வதேச கண்டனத்தை கண்டு கிஞ்சித்தும் அஞ்சாமல் இஸ்ரேலின் துணைப்பிரதமர் எகுட் ஒல்மெர்ட் (Ehud Olmert) அராபத்திற்கு விடுத்திருக்கும் அச்சுறுத்தலைப் போன்று பகிரங்கமாக அப்போது அறிவிக்கப்படவில்லை.

1957-ம் ஆண்டு ஆவணங்கள் இப்போது பகிரங்கமாக வெளியிடப்பட்டிருப்பது மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மேற்கொண்ட பங்கு பணியை ஆராய்வதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது.

1950-களில் மத்திய கிழக்கில் அமெரிக்காவும், பிரிட்டனும் சிரியாவில் தலையிடுவதற்கு மறைமுகமாக மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளுள் இந்த பிராந்தியத்து எண்ணெய் வளத்தை கட்டுப்பாட்டில் வைப்பதை உறுதிப்படுத்துவதற்காக நடைபெற்ற தலையீடும் ஒன்றாகும். தங்களது மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களுக்கு அச்சுறுத்தலாக செயல்பட்டுவந்த மத்திய கிழக்கின் மக்கள் ஆதரவு பெற்ற தேசிய அரசாங்கங்களை இரண்டாவது உலகப்போருக்கு பிந்திய காலம் முழுவதும் கவிழ்ப்பதற்கு முயன்றிருக்கின்றன.

* 1953-ம் ஆண்டு ஈரானில் மொஹம்மத் மொசாதிக் தலைமையில் செயல்பட்டு வந்த தேசிய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு அமெரிக்காவும், பிரிட்டனும் ஏற்பாடு செய்தன.

* எகிப்து ஜனாதிபதி நாசரை கொலை செய்வதற்கு பிரிட்டன் பலமுறை முயன்றிருக்கிறது. நாசர் எகிப்திலிருந்த பிரிட்டனின் இராணுவ தளத்தை காலி செய்தார், சூயஸ் கால்வாயை அரசுடமையாக்கினார் மற்றும் அஸ்வான் அணையை கட்டுவதற்கு சோவியத் யூனியனின் உறுதியான உதவியை பெற்றார் என்ற காரணங்களால் இத்தகைய கொலை முயற்சியில் பிரிட்டன் ஈடுபட்டது.

* சூயஸ் கால்வாயை கைப்பற்றவும், நாசரை கவிழ்க்கவும், தங்களுக்கு சாதகமான ஓர் ஆட்சியை உருவாக்கவும் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் மேற்கொண்ட முயற்சியின் ஒரு பகுதியாக 1956-ம் ஆண்டு எகிப்து மீது படையெடுப்பு நடத்தப்பட்டது.

மத்திய கிழக்கில் பிரதான வல்லரசாக பிரிட்டன் செயல்பட்டு வருவதை நீக்கிவிட்டு அந்த இடத்தில் தான் அமர்வதற்கு அமெரிக்கா உறுதியுடன் இருந்தது. எகிப்திலிருந்து வெளியேறிவிடுமாறு பிரிட்டனையும், பிரான்சையும், அமெரிக்கா நிர்பந்தித்தது. அப்படியிருந்தும் எகிப்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆங்கிலோ-பிரெஞ்சு பொருளாதார தடை நடவடிக்கைகளில் (முற்றுகை) சேர்ந்து கொண்டது. இப்படி சூயஸ் கால்வாய் தொடர்பாக நடைபெற்ற போர் எல்லா மேற்கத்திய நாட்டு ஏகாதிபத்திய அரசுகளுக்கும் இழிவான பெயரை உருவாக்கியது. எகிப்தையும், இதர அரபு ஆட்சிகளையும் மாஸ்கோவிற்கு நெருக்கமாக இட்டுச்சென்றது.

1957-மார்ச் மாதத்தில் அமெரிக்க நாடாளுமன்றம் ''ஐசனோவர் கொள்கை விளக்கம்'', என்று கூறப்படும் ஒரு விளக்கத்திற்கு ஒப்புதல் தந்தது. அரபு பிராந்தியத்தில் ''சர்வதேச கம்யூனிசம்'' மிகப்பெரும் அச்சுறுத்தல் என்று அந்த கொள்கை விளக்கம் குறிப்பிட்டது. அந்த அச்சுறுத்தலை எதிர்த்து நிற்க முயலுகின்ற எந்த நாட்டிற்கும் நிதி உதவி தருவதாக அந்த கொள்கை விளக்கம் உறுதியளித்தது. ''கம்யூனிச ஆக்கிரமிப்பிற்கு" எதிராக உதவிகோரும், எந்த மத்திய கிழக்கு நாட்டிற்கும் அமெரிக்கா துருப்புக்களை அனுப்புவதற்கு அந்த கொள்கை விளக்கம் ஜனாதிபதிக்கு அங்கீகாரம் அளித்தது.

சில வாரங்கள் கழித்து ஜோர்டான் நாட்டில் மன்னர் ஹூசேனுக்கும் மற்றும் நாசரது ஆதரவு அரசாங்கத்திற்கும் இடையே அதிகாரப்போட்டி தொடங்கியது. அரசாங்கம் சோவியத் ஒன்றியத்திடம் இராஜதந்திர உறவுகளை நிறுவுவதற்கு முயன்றது. அப்போது மன்னர் ஹூசைனுக்கு உதவுகின்ற வகையிலும் அவரது சொந்த அரசாங்கத்தை தூக்கி வீச ஆதரவு காட்டுகின்ற முறையிலும் அமெரிக்கா தனது ஆறாவது கடற்படையை கிழக்கு மத்திய தரைக்கடலுக்கு அனுப்பியது. லெபனானில் அப்போது இயங்கிய அமெரிக்க தூதரகமும் CIAவும் நாடாளுமன்ற தேர்தல்களில் பாசிச சமோன் (Chamoun) சார்பு சக்திகளுக்கு ஆதரவு தந்தன.

சிரியாவில் எண்ணெய் வளம் குறைவென்றாலும், அந்த நாடு அரபு தேசியவாதத்தின் மையம் என்ற வகையில், அந்த பிராந்தியத்தில் முக்கிய அரசியல் பாத்திரத்தை ஆற்றியது. ஈராக்கின் வடபகுதி எண்ணெய் வயல்களை மேற்கத்திய நாடுகள் அடையும் வழியை சிரியா தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றது. ஈராக்கின் எண்ணெய் கிணறுகளிலிருந்து துருக்கிக்கும் மத்திய தரைக்கடல் பகுதிகளுக்கும் எண்ணெயை கொண்டு செல்லும் குழாய் இணைப்புகள் சிரியா வழியாகத்தான் செல்கிறது. சிரியா, மத்திய கிழக்கில் சோவியத் யூனியனுக்கு எதிராக உருவாகியுள்ள மேற்கத்திய நாட்டு ஆதரவு பாக்தாத் உடன்படிக்கையில் சேரவில்லை மற்றும் அது ஐசனோவர் கொள்கை விளக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.

1957-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், குளிர் யுத்தம் உச்சகட்டத்தில் இருந்தபோது, சிரியா நாடு மாஸ்கோவுடன் இராணுவ மற்றும் பொருளாதார உதவிக்கான ஒப்பந்தத்தை செய்து கொண்டது. சீன அரசாங்கத்தை அங்கீகரித்தது. சிரியா ஆயுதப்படைகளின் தலைமை அதிகாரியாக ஸ்ராலினிச அனுதாபி Afif al-Bizri ஐ நியமித்தது.

துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெற்ற பாக்தாத் ஒப்பந்த நாடுகளின் கூட்டத்தில் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மூத்த அதிகாரியான லோய் ஹென்டர்சன் கலந்து கொண்டார். அப்போது அந்தக்கூட்டத்தில், ''சிரியாவில் தற்போது நடைபெற்று வருகின்ற ஆட்சி நீக்கப்பட்டாக வேண்டும்; இல்லாவிட்டால் கம்யூனிஸ்ட்டுகள் சிரியாவை கைப்பற்றிக்கொள்ளும் நடவடிக்கை பூர்த்தியாகிவிடும்'' என்பதில் ஓர் உடன்பாடு உருவாயிற்று. சிரியாவிற்கு எதிராக தலையிடும் வகையில் அந்நாட்டு எல்லையில் துருக்கி நாட்டு துருப்புக்கள் குவிக்கப்பட்டிருப்பதாக சோவியத் யூனியன் மேற்கத்திய நாடுகளை எச்சரிக்கை விடுத்தது. அதன் மூலம் சர்வதேச அளவில் மிகப்பெரும் நெருக்கடி உருவாயிற்று.

மாஸ்கோவின் செல்வாக்கிற்குள் சிரியா வந்து விடுவதை தடுக்கின்ற முறையில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் அரசாங்கங்கள் நீண்டகாலமாக சிரியாவில் ஆட்சிமாற்றத்திற்கான சதித்திட்டங்களை உருவாக்கி வருகின்றன என்பது அனைவருக்கும் தெரியும். இத்தகைய சதிச்செயல்களின் முழு விபரங்கள் மற்றும் அதில் படுகொலைகளும் உள்ளடங்கும் என்ற உண்மை விபரங்கள் அப்போது வெளிவரவில்லை.

தற்போது கார்டியன் நாளேடு அந்த சதியின் விபரங்களை சான்றுகளோடு விபரித்திருக்கின்றது. லண்டன் பல்கலைக்கழகத்தில், இரண்டாவது உலகப்போருக்கு பின்னர் பிரிட்டன் மற்றும் அமெரிக்க வெளியுறவு கொள்கைகளை ஆராய்கின்ற நிபுணரான மாத்யூ ஜோன்ஸ் ஆல் காணப்பட்ட, அன்றைய பிரதமர் மக்மில்லனின் பாதுகாப்புதுறை அமைச்சராக பணியாற்றிய டங்கன்சான்டிஸ் விட்டுச்சென்ற தனிப்பட்ட அவரது ஆய்வு அறிக்கைகளில் மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களை கொலை செய்வது உட்பட திட்டத்தின் எல்லா அம்சங்களையும் குறை நிறைகளையும் பற்றிய அறிக்கையை அந்தப் பத்திரிகை சான்றாதாரம் காட்டியிருக்கின்றது.

வாஷிங்டனில் உள்ள CIA- ன் முன்னணி அதிகாரிகளாலும், பிரிட்டனின் இரகசிய புலனாய்வு சேவை (SIS) அதற்கு அப்போதைய பெயர் M-16 ஆகிய இரண்டு தரப்பினராலும் இந்த ஆவணம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. வரிசையாய் சம்பவங்களை உருவாக்குவதற்கு ஆத்திரமூட்டல் ஏஜண்டுகளை பயன்படுத்த அவர்கள் திட்டமிட்டிருந்தனர் என்று அது காட்டுகிறது. இந்த சம்பவங்கள் உருவாக்கும் அரசியல் குழப்பம், சிரியா அரசாங்கத்தின் வலதுசாரி எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவாக சிரியாவின் மேற்கத்திய சார்பு பக்கத்து நாடுகள் ஒரு படையெடுப்பை நடத்துவதற்கு ஒரு சாக்குப்போக்கை வழங்கும். அந்த திட்டத்தின் ஓர் முக்கிய அம்சம் சிரியாவின் மூன்று முன்னணி தலைவர்களை- சிரியாவின் இராணுவ புலனாய்வு அமைப்பின் தலைவர் அப்துல் அல் ஹமீத், சிரியாவின் முப்படைத்தளபதி சோவியத் யூனியனுக்கு ஆதரவான ஹபீப் அல் பிசிரி சிரியாவின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் காலிப் பாஷா இந்த மூவரையும் கொலைசெய்வதற்கு திட்டம் தீட்டப்பட்டதாகும்.

இந்த அறிக்கையில் ஓர் அம்சம் தெளிவாகவே குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ''விடுவிக்க வருகின்ற படைகளின் நடவடிக்கைகளுக்கு வசதி செய்கின்ற வகையிலும், இழப்புக்களையும் அழிவுகளையும் மிகக்குறைந்த அளவில் நிலைநாட்ட சிரியாவின் ஆட்சி தனது இராணுவ நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதையும் அதை திறமையாக கொண்டு செலுத்துவதையும் பலவீனப்படுத்தவும், மற்றும் மிகக்குறுகிய கால எல்லைக்குள் விரும்பிய நடவடிக்கையை முடிக்கவும், சில குறிப்பிட்ட தனிமனிதர்களை தீர்த்துக்கட்டுவதற்கு சிறப்பு முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். கலவரம் தொடங்குகின்ற ஆரம்பக்கட்டத்திலேயே தலைவர்கள் தீர்த்துக்கட்டப்பட வேண்டும் அப்போது நிலவுகின்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டும்'' (அழுத்தம் நாம் கொடுத்தது).

சிரியாவில் உள்நாட்டு கலவரம் தொடக்கப்படுவது தொடர்பாக அரசியல் முடிவு எடுக்கப்பட்டதும் CIA- மற்றும் SIS (M-16) இரண்டும் சிறிய நாசவேலைகளையும் ஆட்சி கவிழ்ப்பிற்கான முக்கிய சம்பவங்களையும் சிரியாவின் தனிமனிதர்களுடனான தொடர்பு மூலம் மேற்கொள்ளும்.

''இரண்டு சேவைகளும் ஒன்றுக்கொன்று பணிகளில் குறுக்கிடாமலும் அல்லது ஒன்றன் பணியையே மற்றொரு அமைப்பு மேற்கொள்ளாமலும் உரிய நேரத்தில் இரு அமைப்புக்களும் கலந்து ஆலோசிக்க வேண்டும். டமாஸ்கசில் மட்டும் சம்பவங்களை உருவாக்குவதில் ஊன்றி கவனம் செலுத்தக்கூடாது. இந்த நடவடிக்கைகள் அளவிற்கு அதிகமாகவும் சென்றுவிடக்கூடாது. சிரியாவில் முன்னணித் தலைவர்கள் தங்களது தனிப்பட்ட பாதுகாப்புக்களில் சிரிய ஆட்சி மூலம் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாது தவிர்க்கும் வகையில் நம்மால் முடிந்தவரை முடிந்த அளவிற்கு கவனமாக காரியமாற்ற வேண்டும்.''

கார்ட்டியன் பத்திரிகை தந்துள்ள தகவலின் படி, சிரியாவில் பொதுவான பீதி உணர்வுகள் கிளப்பி விடப்பட்டதும், அந்த சூழ்நிலையை பயன்படுத்தி அதையே ஒரு சாக்காகக்கொண்டு பிரிட்டனின் பராமரிப்பில் அப்போது இருந்து வந்த ஜோர்டானும் ஈராக்கும் சிரியா மீது படையெடுக்கும். சிரியா "பக்கத்து நாடுகளின் அரசுகளுக்கு எதிராக பலாத்காரச் செயல்கள், நாச வேலைகள் மற்றும் சதிச்செயல்களை உருவாக்கியது என்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்ற வகையில்" திட்டமிடப்பட்டிருந்தது.

''சிரியாவில் கொந்தளிப்பை வளர்ப்பதில் மக்களிடையிலும் அவர்களது மனோதத்துவ அடிப்படைகளை கிளறுகின்ற வகையிலும் CIA- மற்றும் SIS- தங்களது திறமைகளை பயன்படுத்த வேண்டும்" என்று அது கூறிச்செல்கின்றது. இதைவேறு வார்த்தைகளில் விளக்குவது என்றால் அந்த இரண்டு அமைப்புக்களும் ஜோர்டான், லெபனான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் "தேசிய அளவிலான சதிவேலைகளை, நாசவேலைகளை மற்றும் முரட்டுத்தனமான நடவடிக்கைகளை" ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது தான். இந்த வகையான நடவடிக்கைகளில் 1940களிலும் மற்றும் 1950களிலும் SIS- நிபுணத்துவம் பெற்ற ஒரு குழுவாக சிறப்பு அரசியல் நடவடிக்கை குழுவில் இயங்கி வந்திருக்கின்றது. அதற்கு பின்னர் SIS- முற்றிலும் புலனாய்வு பணிகளில் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டது.

''சிரிய விடுதலை குழுவிற்கு'' நிதி உதவி வழங்கப்பட வேண்டும், "இணை இராணுவம் மற்றும் இதர செயல்பாட்டு திறன் கொண்ட அரசியல் கன்னைகளுக்கு" சிரியாவில் ஆயுதங்கள் வழங்கப்பட வேண்டும். சிஐஏவும் எம்-16ம் சிரியாவின் தெற்கு பகுதியில் வாழுகின்ற ட்ரூஸ் (Druze) சிறுபான்மையினர், டமாஸ்கஸ் நகரில் செயல்பட்டு வரும் முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பு ஆகியவை அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்வதற்கு ஊக்குவிக்க வேண்டும் மற்றும் சங்கடங்களை உருவாக்க வேண்டும். படுபயங்கரமான மெஸ்சா (Mezza) சிறையிலிருந்து அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு அவர்கள் உதவவேண்டும்.

இத்திட்டத்தின் நோக்கம் என்னவென்றால் சிரியாவில் பாத் கட்சியினர் ஆதரவோடும், மாஸ்கோவின் அரவணைப்போடும் செயல்பட்டு வருகின்ற ஆட்சிக்கு பதிலாக மேற்கத்திய ஆதரவான ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்பது தான். அத்தைகைய ஆட்சி உருவாக்கப்படுமானால், அது மக்களது அதிருப்திக்கு இலக்காகும். ''அந்த அதிருப்தியை சமாளிப்பதற்கு முதலில் ஒடுக்குமுறை நடவடிக்கைகள் தேவைப்படும், மற்றும் தான்தோன்றித் தனமாக அதிகாரத்தை செலுத்துவதும் தேவைப்படும்'' என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

இந்த திட்டம் வெற்றி பெறாவிட்டால், துருக்கி -ஐசனோவர் கொள்கை விளக்கத்தை பயன்படுத்தி சிரியாவிற்கு எதிராக அமெரிக்காவின் ஆதரவைக் கோருமானால், எகிப்து ஜனாதிபதி நாசர் அமெரிக்காவிற்கும், மற்றும், அரபு உலகில் அதன் அடிவருடிகளுக்கும் எதிராக குறிப்பாக ஈராக்கிற்கும், ஜோர்டானுக்கும் எதிராக நடவடிக்கையில் இறங்குவாரானால், சிரியாவிற்கு ஒரு சிறிய இராணுவப்பிரிவு அனுப்பப்படும். இது விரும்பிய விளவை ஏற்படுத்திவிடும். நாசர் அரபு தேசியத்தின் பாதுகாவலர் என பார்க்கப்பட்டார், அதேவேளை, ஜோர்டான் மற்றும், ஈராக் அரசாங்கங்கள் தங்களது சொந்த மக்களையே தத்தம் செய்து மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் ஆதரவை நாடிப் பெறுபவர்கள் என்று பரந்த அளவில் கண்டிக்கப்பட்டனர்.

இப்படி பொது மக்களது கருத்துக்கள் ஏகாதிபத்திய ஆதரவு அரசாங்கங்களுக்கு எதிராக திரும்பிக் கொண்டிருப்பதை உணர்ந்து தங்களது அரசியல் அந்தஸ்தை காப்பாற்றிக் கொள்வதற்காக ஜோர்டான் மற்றும் துருக்கி அரசாங்கங்கள் தங்களது நிலைப்பாட்டிலிருந்து தலைகீழாக மாறிவிட்டன. ஜோர்டான் வெளியுறவு அமைச்சர், சிரியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகின்ற எண்ணம் எப்போதுமே தன் நாட்டிற்கு இருந்ததில்லை என ஒரு மறுப்பை வெளியிட்டார். அந்த நேரத்தில் ஈராக்கின் பிரதமராக இருந்த நூரி அல்-சையத் அப்பட்டமான பொய்யை சொன்னார். "சிரியா ஜனாதிபதியுடன் முழுமையான நட்புறவு நிலவுவதாக" குறிப்பிட்டார். சவூதி அரேபிய மன்னர் ஜனாதிபதி ஐஸனோவேருக்கு விடுத்த கோரிக்கையில் நிதானத்தோடும், முன் எச்சரிக்கையோடும் நடவடிக்கையில் இறங்குமாறு வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

அரபு ஆட்சிகளின் அரசியல் முகமுடியில்லாமல் சிரியா மீது துருக்கி படையெடுக்குமானால் அது ஏற்றுக்கொள்ள முடியாததாக ஆகிவிடும், எனவேதான் CIA,-M-16- திட்டங்கள் தகர்ந்து போய் விட்டன.

Top of page