World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

US military kills another journalist in Iraq

ஈராக்கில் அமெரிக்க இராணுவம் மற்றொரு பத்திரிகையாளரைக் கொன்றுள்ளது

By Mick Ingram and Mike Head
21 August 2003

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்கப் படையினரால் ஈராக்கில் தொடர்ந்தும் செய்தியாளர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த வரிசையில் கடைசியாக ஆகஸ்டு 17 ம் தேதி, பாக்தாத்தில் அமெரிக்கப் படையினரால் கொடூரமாக நடத்தப்படும் சிறைக்கு வெளியே இருந்த இரண்டு அமெரிக்க டாங்கிகள் வீசிய குண்டுகள், பாலஸ்தீனத்தில் பிறந்த ராயிட்டர் (Reuters) புகைப்படக்காரர் ஒருவர் மீது தாக்கின. பெரும் புகழ்பெற்றிருந்த, பரிசுகள் வாங்கியிருந்த 43 வயது மாசன் டேனா (Mazen Dana) மார்பில் அடிபட்டு அதே இடத்தில் உயிரை இழந்தார்.

அமெரிக்க ஆக்கிரமிப்பில் உள்ள ஈராக்கில், ஜனநாயக உரிமைகள் பெருமளவு மீறப்படுதல், நடைபெறும் போர்க்குற்றங்கள் ஆகியவற்றை தனிப்பட்ட முறையில் செய்தி தொகுப்பவர்களைப் பயமுறுத்தும் நோக்கத்துடன் மீண்டும் புத்துயிர் கொடுக்கப்பட்ட அளவில் நடப்பதாகத்தான் இந்த இறப்புக்களின் சூழ்நிலை சுட்டிக்காட்டுகிறது.

டேனாவின் வீடியோக் காமிரா அவர் இறந்தபின் அவ்விடத்திலிருந்து மீட்கப்பட்டது. இரண்டு அமெரிக்க டாங்கிகள் அவரை நோக்கி வருவதை அவை காட்டி உள்ளன. 6 முறை வெடிச்சத்தங்கள் பதிவாகியுள்ளன. முதல் வெடிக்குப்பின் காமிரா ஒருபுறம் சாய்ந்து விழுந்திருக்க வேண்டும். அந்த இடத்தில் பூசல்கள் ஏதும் நிகழ்ந்து கொண்டிருக்கவில்லை. ஆயினும் கூட அமெரிக்கப் படையினர் எச்சரிக்கை ஏதும் கொடுக்காமல் டேனாவின் மீது குண்டை வீசியுள்ளனர்.

தெளிவாக அடையாளமிடப்பட்டுள்ள வண்டிகளில் இருந்த செய்தியாளர்களுடன்தான் டேனாவும் இருந்தார். டேனா வைத்திருந்த காமிராவை, இராணுவத்தினர் ராக்கட் மூலம் செலுத்தக்கூடிய எறிகுண்டு என்று தவறாகக் கருதினர் என்ற அமெரிக்க இராணுவத் தலைமையின் கூற்றைச் செய்தியாளர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.

''நாங்கள் அத்தனைபேருமே குறைந்தது அரைமணி நேரமாவது அங்கு இருந்தோம். நாங்கள் செய்தியாளர்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்'' என்று பிரான்ஸ் 2 தொலைக்காட்சியின் Stephan Breitner என்பவர் கூறியுள்ளார். "டேனாவைக் கொன்ற பிறகு பீரங்கியை எங்களை நோக்கித் திருப்பினர். அது ஒன்றும் தற்செயலான விபத்து என்று நான் நினைக்கவில்லை. அவர்கள் கடுமையான மன அழுத்தத்தில் இருந்தனர். அவர்கள் கிறுக்குத்தனமாகச் செயல்பட்டனர். என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை அறியாத இளைஞர்கள் அவர்கள்'' என்று அவர் கூறினார்.

டேனாவின் சக ஊழியர்கள் டாங்கிகள் குண்டு வீசியபோது தாம் அவரிடமிருந்து 30 மீட்டர்கள் தொலைவில் இருந்ததாகவும் கூறினர். தொலைக்காட்சி புகைப்படக்கருவி ஒன்றும் கையெறிகுண்டு இயக்கும் சிறு ராக்கட் சாதனம் போல் இல்லையென்றும் அவர்கள் கூறினர். பட்டப்பகலில், அவ்வளவு சமீபத்தில் இரண்டையும் போட்டுக் குழப்பிக்கொள்ள வழியில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

பாக்தாத் நகரின் மேற்கு நகர்புறப் பகுதியொன்றில் இதற்கு முந்தைய தினம் அங்கிருந்த சிறையின் மீது வெடிகுண்டுகள் போடப்பட்டு 6 கைதிகள் இறந்து, 60 பேர் காயமுற்றனர் என்ற சந்தேகத்திற்கிடமான அமெரிக்க அதிகாரிகளின் கூற்றை ஆராய்வதற்காகச் செய்தியாளர்கள் குழு அங்கு சென்றிருந்தது.

சிறையைச் சுற்றி பாதுகாத்து கொண்டிருந்த அமெரிக்க இராணுவத்தினரிடம் ராய்ட்டர் குழுவினர் தம்மை அறிமுகப்படுத்தினர். சிறைக்குள்ளே சென்று புகைப்படம் எடுப்பதற்கு அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் அருகிலிருந்த பாலத்திலிருந்து சிறையின் பொதுத் தோற்றத்தை அவர்கள் புகைப்படம் எடுக்கலாம் என்றும் கூறப்பட்டது.

''படமெடுத்த பிறகு நாங்கள் காருக்குள் உட்கார்ந்து புறப்படத் தயாரானோம். அப்பொழுது பீரங்கி வண்டி தலைமையில் ஒரு கார் அணிவரிசை வந்தது. டேனா அதைப் படமெடுக்கக் காரைவிட்டு இறங்கித் தயாரானார். நானும் அவரைப் பின் தொடர்ந்தேன். மூன்று அல்லது நான்கு மீட்டர்கள் நாங்கள் நடத்திருப்போம். எங்களை அவர்கள் தெளிவாகப் பார்த்து யாரென்று அறிந்திருந்தனர். அமெரிக்கப் படையினருக்கு நாங்கள் யார், எதற்கு வந்திருக்கிறோம் என்பது நான்றாகத் தெரிந்திருக்கவேண்டும்'' என்று டேனாவுடன் பணிபுரியும் ராய்ட்டரின் ஒலிப்பதிவாளர் Nael al Shyouki கூறினார்:

திருமணமாகி, நான்கு குழந்தைகளுடன் வாழ்ந்துவந்த டேனா, இராணுவ ஆக்கிரமிப்பின் ஆபத்தான நிலைகளின் மிகுந்த அனுபவம் கொண்டிருந்தவர். பாலஸ்தீனத்தில் ராய்ட்டர் நிறுவனத்திற்காகப் பணி செய்திருந்த 14 ஆண்டுகளில், இஸ்ரேலியரின் கணக்கிலடங்கா குண்டுத் தாக்குதல்களையும், அடிகளையும் அவர் வாங்கியுள்ளார். பாலஸ்தீனியர்கள் மீது நடத்தப்பெறும் தாக்குதல்களைப் புகைப்படமெடுத்துத் தொகுத்துப் போடுவதை இஸ்ரேலிய அதிகாரிகள் தடுத்து நிறுத்தப் பார்த்துள்ளனர். ஹெப்ரானில் இவருடைய வீரமான பணிக்காக 2000 ல் இஸ்ரேலியப் படைகளால், மற்றும் போலிஸ், குடியேறியவர்கள் ஆகியோரால் 3 முறை சுடப்பட்டும் இரண்டு முறை கடுமையாக உதைத்தலும் நிகழ்ந்தன. 2001 ல் செய்தியாளரைப் பாதுகாக்கும் குழுவின் (CPJ) சர்வதேசச் செய்தியாளர் சுதந்திரச் சான்றிதழ் (International Press Freedom Award) இவருக்கு கொடுக்கப்பட்டது.

இந்தப் பெருமையைப் பெற்ற பின் அளித்த பேட்டியொன்றில்; இஸ்ரேலிய இராணுவம் வேண்டுமென்றே செய்தியாளர்கள் மீது சுடுவதற்கும், இஸ்ரேலிய முற்றுகைக்குள் இருக்கும் பகுதிகளில் அவர்களைத் தடை செய்வதற்கும் கடும் கண்டனத்தைக் கூறினார். உண்மையான தோட்டாக்களால் மூன்று முறையும், ரப்பர் தோட்டக்களால் 70-80 தடவைகளும், 100 முறை அடி, உதைகளாலும் தாக்கப்பட்டுள்ளதாக அவர் அப்பொழுது நினைவு கூர்ந்திருந்தார்.

''ஹெப்ரானில் நிகழ்பவற்றை எழுதியதற்காக இரண்டுமுறைகள் என்னுடைய கைகளை உடைத்தார்கள். ஹெப்ரானில் நிலைமை மோசமாதலால், இராணுவத்தினரால் எப்பொழுதும் துன்புறுத்தலும், அடி உதைகளும் கிடைக்கும். நாம் படத்தை வெளியிட அவர்கள் எப்பொழுதுமே விரும்பியதில்லை.... இதுதான் செய்தியாளர்கள் சுதந்திரம் என்று இஸ்ரேலியர் தங்களுடைய ஜனநாயகமுறை என்று பீற்றிக் கொள்வதில் உள்ள நிலை'' என்று டேனா கூறியிருந்தார்.

பாலஸ்தீனிய மக்கள், சர்வதேசச் செய்தி ஊடகங்கள், சாதாரண மக்கள் என்று எல்லோரிடத்தும் டேனாவின் கொலை பெரும் துயரத்தையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. டேனாவுடைய சொந்த வலைத் தளத்தில் 12,000 துக்கச் செய்திகள் நிறைந்தன. பாலஸ்தீனியச் செய்தி ஏடுகள், உதவி அமைப்புக்கள் முதல் பாலஸ்தீனிய அமைப்புக்கள் வரை கொடுத்திருந்த நினைவுப் புகழாஞ்சலியையும் நிரப்பின.

ஆகஸ்ட் 19 ம் தேதி உலகில் பல பகுதிகளிலிருந்து வந்த செய்தியாளர்கள், அரசியல்வாதிகள் உட்பட பல நூற்றுக்கணக்கானோர் மேற்குக்கரை ஹெப்ரான் நகர்ப்பகுதியிலுள்ள அவருடைய குடும்ப இல்லத்தில் கூடினர். மேற்குக்கரை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடாது என்று இஸ்ரேலில் தடை செய்யப்பட்டிருந்த பாலஸ்தீனியச் செய்தியாளர்கள் 150 பேர் டேனாவிற்காக ஓர் அடையாள இறுதி ஊர்வலம் நடத்தி ஒரு ஊர்தியின் உயரே புகைப்படக் கருவையையும் மாட்டிக்கொண்டு சென்றனர். ''மாசன் டேனா ஒரு வெற்றியாளர். அவரைக் கொன்றவர்கள் பூஞ்யமானவர்கள்" (Mazen is a hero, his killer is a zeor) என்று பாடிக்கொண்டு சென்றனர்.

டேனாவுடைய விதவை மனைவியான 36 வயது சூசேன், அவருடைய இறப்பைப் பற்றி ஓர் உயர் மட்ட விசாரணை நடத்தப்படவேண்டும் என்று கோரியுள்ளார். "தன்னுடைய வேலையில் ஈடுபட்டிருந்தபோது, அவர் வேண்டுமென்றே கொல்லப்பட்டார். ஜனாதிபதி புஷ் செய்தியாளர்களைக் கொல்வதை நிறுத்த தன் படைகளுக்கு சொந்த உத்தரவு இடவேண்டும். வெறும் விசாரணை போதாது, குற்றம் இழைத்தவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டுச் சிறைக்கு அனுப்பப்பட வேண்டும்" என்று அவருடைய மூத்த அண்ணன் நாதமி கூறினார்.

ராய்ட்டரினுடைய தலைமை நிர்வாக அதிகாரி டாம் க்ளோசரும், சர்வதேச செய்தி ஊடக உரிமைக் குழுக்களும் பொது விசாரணையைக் கோரியுள்ளன. பாரிஸ் சார்ந்த "எல்லையில்லா நிருபர்கள்" என்ற அமைப்பினர், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் டோனால்ட் எச். ரம்ஸ்பெல்டிற்கு, "நேர்மையான, விரைவான, இச் சம்பவத்தைப் பற்றிய விசாரணை தேவையென்றும், அமெரிக்கப் படைகளின் குற்றத்தைச் சுண்ணாம்பு அடித்து மூடும் முயற்சியில்லாமல் அது இருக்க வேண்டும்" என்றும் எழுதியுள்ளனர். நியூயோர்க்கில் செய்தியாளர்களைப் பாதுகாக்கும் குழுவினர், "எந்தச் சூழ்நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்று பொதுப் பொறுப்பை விளக்கும் வகையில் ஒரு முழு அளவு விசாரணை தேவை" என்று கூறியுள்ளனர்.

இந்தக் கோரிக்கைகளை, தானே முழு விவரம் தெரிவிக்கப்படாத விசாரணையொன்றை மேற்கொண்டு இருப்பதாக கூறி, பென்டகன் இந்தக் கோரிக்கைகள் அனைத்தையும் நிராகரித்து விட்டது. டேனாவின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த மூத்த இராணுவ பேச்சாளர், தாங்கள் ஆபத்திற்குட்பட்டிருக்கும் போது எச்சரிக்கை தெரிவிக்க தேவையில்லை என்று படைகளிடம் தெரிவித்துள்ளதாகக் கூறினார். "இந்த நடவடிக்கை பற்றி முழு விவரமும் கொடுப்பதற்கில்லை. விரோதி அணிவகுத்து நிற்காத நிலையிலும், சீருடை இல்லாமலும் இருக்கும் போதும் நாம் எச்சரிக்கை கொடுக்கத் தேவையில்லை" என்று லெப்டினன்ட் கேர்னல் கை ஷீல்ட்ஸ் என்பவர் கூறினார்.

அபு கரைப் (Abu Ghraib) சிறையில் கொடுமைகள்

அபுகரைப் சிறையில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி எழுப்பப்படும் பல கேள்விகளுக்கும் விடை கிடைக்கவில்லை. சிறைச்சாலைக்குள் மோட்டார் வெடி குண்டுகளை வீசியது யார், எதற்காக அத்தாக்குதல்கள் நடைபெற்றன என்பது பற்றியவை தெளிவாக இல்லை. "மூன்று கைதிகள் இத் தாக்குதலில் இறந்துள்ளனர். மூன்று பேர்கள் மருத்துவமனையில் இறந்துள்னர்" என்று அமெரிக்க இராணுவப் பேச்சாளர் மிகவும் சாதாரணமாக குறிப்பிட்டார். இதைவிட வேறு எந்தத் தகவலும் கொடுக்கப்படாததுடன், செய்தி ஊடகத்தினருக்கும் உள்ளே சென்று பார்க்கும் அனுமதியும் மறுக்கப்பட்டது.

சிறைக்குள் இருக்கும் நிலைபற்றிய பொது ஆய்வைத் தவிர்க்க அமெரிக்க ஆக்கிரமிப்பு அதிகாரிகள் கவலை கொண்டுள்ளார்கள் என்பது தெளிவு. சதாம் ஹூசேன் நிர்வாகத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் சித்திரவதைக்குட்பட்ட பகுதி என இழிவுப் பெயர் கொண்டிருந்த போதிலும், அமெரிக்க அதிகாரிகள் இச்சிறையை மீண்டும் பயன்படுத்தத் தள்ளப்பட்டுள்ளனர். 500 கைதிகளுக்கும் மேலாக, பாத் கட்சி உறுப்பினர்கள், சந்தேகத்திற்குட்பட்ட கொரில்லாப் போராளிகள், அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு அரசியல் அளவில் எதிர்ப்பாளர்கள், போர்க்கைதிகள் என்று பலவகைப்பட்ட கைதிகளும் இங்குள்ளனர்.

ஈராக் முழுவதிலும் உள்ள 18 அமெரிக்க இராணுவத்தினரின் சிறைகளுள் இதுவும் ஒன்றாகும். ஏறத்தாழ 5000 கைதிகள், அடிப்படை ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டுக் கொடூரமான நிலைமையில் இவற்றில் வைக்கப்பட்டுள்ளனர். கடுமையான சோதனை வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட போது பிடிக்கப்பட்டவர்கள், மிகச் சிறிய ஆதாரம் கூட இல்லாமல் எந்த குற்றச்சாட்டோ விசாரணையோ இன்றி இவர்கள் உள்ளனர். தங்கள் குடும்பங்களோடு தொடர்புகொள்ள இவர்களுக்கு எந்த அனுமதியும் இல்லை. தங்கள் வழக்கறிஞர்களைப் பார்க்கவும் மறுக்கப்பட்டுள்ளனர். இவை சர்வதேசச் சட்டங்களுக்கு முரணானவை ஆகும்.

அபுகரைப்பில், 50 டிகிரி வெப்பத்தில் (122 டிகிரி பாரன்ஹீட்) கூர்மையான கம்பிகள் பின்னிய கூடாரங்களில் இந்தக் கைதிகள் வைக்கப்பட்டுள்ளனர். சர்வதேச மனித உரிமைச் சங்கம் சமீபத்தில் கைதிகளாயிருந்து விடுவிக்கப்பட்டவர்களை பேட்டிகண்டு ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் எவ்வாறு மனிதத்தன்மை அற்ற நிலைமையிலும், கொடூரமான அமெரிக்கப் படைகளின் தாக்குதல்களும், அவர்கள் குடும்பங்களைப் பற்றிக் கூறாத நிலையும் உள்ளன என்பது தெரியவந்துள்ளது. தொடர்ச்சியான தூக்கமின்றிச் செய்தல், உடல் வலிமிகும் அளவிற்கு தண்டித்தல், இரைச்சலான இசையொலி, கண்ணைக் கூசும் ஒளிவிளக்குகள், கைதிகளின் தலைகளைச் சுற்றிப் போடப்படும் முகமூடி போன்றவை சில தந்திர சித்திரவதை உத்திகளாக இருக்கின்றன.

சில கைதிகள் காவலில் இறந்துள்ள தகவல்கள் தங்களுக்கு வந்துள்ளதாக மனித உரிமைச் சங்கம் தெரிவிக்கிறது. "இவை கூட்டணிப் படைகளின் உறுப்பினர்கள் சுட்டதின் விளைவாக ஏற்பட்டவையாகும்." அபு கரைப்பில் ஜூன் 13 அன்று நடந்த கலகமொன்றில் இராணுவத்தினர் சுட்டபொழுது 22 வயது அலா ஜாசேம் என்பவர் கொல்லப்பட்டார். ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களையும், உருட்டுத் தடிகளையும் இராணுவத்தினர்கள் மீது வீசி எறிந்தனர்.

"சாட்சியங்களின்படி, ஒரு முகாமிற்குள்ளிருந்த அலா ஜாசேம் இறந்து போனார். ஏழு அடைத்து வைக்கப்பட்ட கைதிகள் காயமடைந்தனர்."

ஒரே ஒரு தடவை நிருபர்கள் சிறைக்குள் அனுமதிக்கப்பட்டபோது, அது கூட ஆகஸ்ட் 4 ம் தேதி நிருபர்கள் நல்லதைக் காண வேண்டும் என்ற முன்னேற்பாடுகளுக்குப் பின்னரும் கூட, நூற்றுக்கணக்கான கைதிகள் அமெரிக்க துருப்புகள் முகத்தெதிரே "சுதந்திரம், சுதந்திரம்" என்று உரத்துக் கூவினர்.

பாலஸ்தீனிய ஹோட்டல் பற்றிச் சுண்ணாம்பு பூசிய படலம்

ஈராக் மீதான ஆக்கிரமிப்பின்போது, பாலஸ்தீனிய ஹோட்டல் செய்தி திரட்ட வந்த சர்வதேச செய்தியாளர்களுக்கு அதிகாரபூர்வமற்ற தலைமையகமாக இருந்தது. ஏப்ரல் 8 அன்று ஹோட்டல் மீது குண்டு வீசிய அமெரிக்கப் படைகள் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று பென்டகன் அறிக்கை ஒன்று கூறியதை டேனாவின் இறப்பிற்கு 5 நாட்கள் முன் சர்வதேச ஊடக குழுக்கள் நிராகரித்தன. அந்தத் தாக்குதலில் மற்றொரு ராய்ட்டர் புகைப்படக்காரரான உக்ரேனியாவைச் சேர்ந்த டரஸ் புரோட்ச்யுக் (Taras Protsyuk) உட்பட இருவர் இறந்தும், மற்ற மூவர் காயமடைந்தும் போயினர்.

புரோட்ச்யுக்குடன் இறந்த மற்றொரு புகைப்படக்காரர் ஸ்பெயினின் ஜோசே க்யூசோ ஆவார். அன்றே அமெரிக்கப் படைகள் பாக்தாத்திலிருந்த அல் ஜஸீரா, அபுதாபி தொலைக்காட்சி அலுவலகங்களைத் தாக்கியதோடு, ஜோர்டானிலிருந்து வந்திருந்த பாலஸ்தீனியரான தாரிக் ஆயோப் என்ற தொலைக்காட்சி நிருபரையும் கொன்றனர். இந்தக் கொலைகள் உலகெங்கிலும் எதிர்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளதுடன், பல சர்வதேசச் செய்தியாளர்கள் அமெரிக்க நடவடிக்கைகளை கொலைக்கு ஒப்பாகும் என்றும் கண்டனமும் தெரிவித்தனர்.

பொதுமக்களுக்கு முழு விவரம் தெரிவிக்காத பென்டகன் அறிக்கையானது, ஓர் அப்பட்டமான வெள்ளைப் பூச்சு ஆகும். அமெரிக்க மத்தியத் கட்டளைத் தலைமையானது, ஈராக்கிய ''வேட்டைக்காரக் கொலையாளி'' ஒருவர் ஹோட்டல் பகுதியில் இருந்து தங்களை நோக்கிச் சுட்டதால், இராணுவ விதிமுறைப்படி பதிலடி கொடுக்கும் சூழ்நிலையில் அவர்கள் தாக்கியது ஏற்கத்தக்கதே எனக் கூறியுள்ளது.

அமெரிக்க மூத்த தளபதிகள் தங்கள் படைகளுக்கு இந்த ஹோட்டல் ஒரு செய்தி மையம் என்று தெரிவிக்கத் தவறியது பற்றியோ, செய்தியாளரும் புகைப்படக்காரர்களும் தொலைதூர கண்ணாடியினால் போர்க் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தது பற்றியோ செய்தியாளர்களுக்கு விளக்கவில்லை. அமெரிக்க அதிகாரிகளும் செய்தி ஊடகமும் தாக்குதலுக்குப் பின் பூசிமெழுகிக் கூறிய பொய்க் கூற்றுக்களான ஹோட்டலிலிருந்து படைகள் குண்டுவீச்சைச் சந்தித்தது என்பது பற்றிய குறிப்பும் இல்லை. பல செய்தியாளர்கள் அந்த இடத்திலேயே இருந்தவர்கள் ஹோட்டலிலிருந்து எந்தத் தாக்குதலும் நிகழவில்லை என்று பல முறை வலியுறுத்திய பின்னர்தான் அவர்கள் அக்கதையைக் கைவிட்டனர்.

சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பு (International Federation of Journalists - IFJ) பென்டகனின் கூற்றை "சிடுமூஞ்சித்தனமான மேல்பூச்சு" என்று நிராகரித்துள்ளது. IFJ யின் பொதுச் செயலாளர் அய்டன் வெய்ட், "துவக்கத்திலிருந்தே பொய்களிலும், ஏமாற்றுத்தனத்திலும் மூழ்கிய இந்த அறிக்கை, தொடர்ந்து நிகழ்ந்தவற்றிற்குப் பொறுப்பேற்க மறுக்கும், இராணுவ, அரசியல் அதிகாரிகளின் போக்கைத்தான் காண்பிக்கிறது" என்று கூறினார்.

மார்ச் மாதம், அமெரிக்கத் தலைமையில் துவக்கப்பட்ட இப்போரில் அமெரிக்க நடவடிக்கையின் சரியான குற்றஞ்சார்ந்த முறையைப் பற்றிய செய்தி வெளியீட்டைத் தடுக்கும் திட்டம் பிழையின்றி இழையோடும் தன்மைதான் தெளிவாகத் தெரிகிறது.

12 பேர் போரின் நடவடிக்கைப்பற்றி செய்தியாளர்கள் ஈடுபட்டிருந்தபோது கொல்லப்பட்டது உட்பட, டேனாவின் இறப்பு 17 வது செய்தியாளர் கொலையாகும். இந்த எண்ணிக்கையில் 5 பேர் அமெரிக்க குண்டுத் தாக்குதலில் மாண்டவர்களாவர். ITN நிருபரான பிரிட்டனைச் சேர்ந்த டெரி லாயிட்தான் மார்ச் 22 அன்று பாஸ்ரா அருகே ஈராக்கியர்கள் கொல்லப்பட்டதை செய்தியாக்கும்போது கொல்லப்பட்ட முதல் செய்தியாளராவார். லாயிட்டுடைய குழுவில் இருந்த புகைப்படக்காரர் ப்ரெட் நெராக்கும், மொழி பெயர்ப்பாளர் ஹூசேன் ஒஸ்மானும் இன்னும் அதிகாரபூர்வமாக "காணவில்லை" என்ற பட்டியலில் தான் உள்ளனர்.

சர்வதேசச் செய்தியாளர் கூட்டமைப்பு, எல்லையில்லா நிருபர்கள், ஜரோப்பிய ஒலிபரப்புச் சங்கத்தினர் ஆகிய அமைப்புக்கள் அனைத்தும் செய்தியாளர்மீது துப்பாக்கித் தாக்குதல், காவலில் வைக்கப்படுதல், அமெரிக்க இராணுவத்தினரால் உதைக்கப்படுதல் போன்றவை கணக்கிலடங்காத அளவு நிகழ்ந்ததைக் கண்டித்துள்ளன. இந்தச் செயல்கள் அமெரிக்க ஆட்சியினால், யுத்தத்திற்கு எதிராக மக்கள் எதிர்ப்புப் பெருகிய அளவில் அதிகமாகவும், அடிக்கடியும் நிகழ்ந்துள்ளன. மக்களுக்கான அடிப்படை வசதிகள் திவாலடைந்து, பெருமளவில் குறைந்த போவதுடன் அமெரிக்க இராணுவ பழிவாங்கல்களும் அதிகரித்து வருகின்றன. கடந்த மாதம் மட்டும், ஈரான், துருக்கி, ஜப்பான் ஆகிய நாடுகளின் செய்தியாளர்கள் உதைக்கப்பட்டு, பயமுறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

இதே மாதத்தில் அமெரிக்க அதிகாரிகள் ஈராக்கிய நாளேடு ஒன்றைத் தடைசெய்தனர். மற்றொரு நாளேட்டு அலுவலகத்தைச் சூறையாடி, செய்தி இதழ்களைப் பறித்தனர். அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்த பாக்தாத் வானொலி நிலையத்தை மூடிவிட உத்தரவிட்டனர். இதற்கிடையில் முக்கிய அமெரிக்க செய்தித் தளங்கள் அரசாங்கத்தின் அதிகார பூர்வமான பிரச்சாரர்கள்போல் வெள்ளை மாளிகைக்கும், பென்டகனுக்கும் குற்றேவல் புரிந்து ஈராக்கிலுள்ள அமெரிக்க இராணுவக் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் தொலைக்காட்சிக்கும் செய்திகள் தொகுத்துக் கொடுக்கின்றன.

பென்டகனிடமிருந்து சுதந்திரமாக தனித்தியங்கி நிற்க முயற்சி செய்த செய்தி ஊடகவியலாளர்கள், வாஷிங்டனுடன் ''ஒட்டிப் பதிந்து வேலை செய்யும்'' செய்தியாளர்களிடமிருந்து வெளியே நிற்பவர்களாவர். அத்துடன் உருண்டு திரண்டுள்ள, ஒட்டிப் பதிந்து வேலை செய்யும் இவர்கள் போரைப்பற்றிய செய்திகளை தமக்குத் தாமே தணிக்கை செய்து அமெரிக்க நலன்களுக்காக வெள்ளையடித்து எழுதுபவர்களாக இருக்கின்றனர். இப்படிப்பட்ட ஒரு குழுவிற்கு, அமெரிக்க இராணுவவாதத்திற்கு நலன்தரும் செய்தியாளர்களுக்கு ஆதரவு தரும் போக்கு, ஜனாதிபதி புஷ் போர் நடவடிக்கைகள் முடிந்துவிட்டன என்று அறிவித்துப் பல காலம் ஆகியும் தொடருகிறது.

Top of page