World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Kerry campaigns as candidate of big business

பெருவர்த்தகத்தின் வேட்பாளரைப் போல் கெர்ரி பிரச்சாரம் செய்கிறார்

By Bill Van Auken, SEP presidential candidate
7 August 2004

Use this version to print | Send this link by email | Email the author

வரலாற்று அடிப்படையில் ஜனநாயகக் கட்சி தன்னை ''மக்களின் கட்சி'' என்று வடிவமைத்துக் கொண்டது. பிராங்ளின் D. ரூஸ்வெல்ட் வர்ணித்த ''பொருளாதார முடியாட்சியினருக்கு'' எதிராக ''எல்லா மனிதருக்கும்'' அக்கட்சி நிற்பதாகக் கூறியது.

ஆனால் அது 65 ஆண்டுகளுக்கு முன்னர் ஆகும். எப்படி அந்தக் கட்சி வலது பக்கத்திற்கு நகர்ந்துள்ளது, தாராளவாத சமூக சீர்திருத்தத்திற்கு கடைசி சான்று கூறும் அடையாளத்தைக் கூட கைவிட்டுவிட்டது என்பது, அதன் ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் கெர்ரி தன்னைச் சுற்றிலும் இன்றைய நவீன-கால பெருஞ்செல்வந்த இளவரசர்களால் சூழப்பட்டு நின்ற பொழுது இந்த வாரம் காட்சிக்கு வந்தது.

கெர்ரி பிரச்சாரம் புதன்கிழமையன்று 200 பில்லியனர்கள் மற்றும் மில்லியனர்கள் மற்றும் பெரு நிறுவன நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டது, அவர்கள் இவர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதை ஆதரித்துள்ளனர், அவருடைய பிரச்சாரத்திற்கு அவர்களுடைய பாராட்டு ஆதரவு அமெரிக்க முதலாளித்துவத்தின் நலன்களை காக்கும் ''பொறுப்பான'' வேட்பாளர் என்பதற்கு சான்றாகும்.

புஷ் பிரச்சாரம் பதவியில் இருப்பவரை ஆதரிக்கும் இதைவிட பெரிய முதலாளிகள் பட்டியலை எளிதில் திரட்டிக்காட்ட முடியுமென்றாலும், கெர்ரியின் பக்கம் வந்திருப்பவர்கள் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்கது. பெரு வர்த்தக நிறுவனங்களின் மிகப்பெரும்பாலான தலைவர்கள் வரலாற்று அடிப்படையில் குடியரசுக் கட்சியை சார்ந்தவர்களாக இருந்து வருகின்றனர், நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் அந்தக் கட்சியின் கட்டுப்பாடுகளில் இருந்தபொழுதும், பதவி வகிக்கின்ற ஜனாதிபதியை பகிரங்கமாக எதிர்ப்பதில் பொதுவாக குறைவாகவே செயலூக்கம் உள்ளது.

பில் கிளின்டன் 1992ல் மூத்த புஷ்ஷிற்கு எதிராக போட்டியிட்டபோது, அவர் விரல்விட்டு எண்ணத்தக்க வோல்ஸ் ஸ்ரீட் மற்றும் கம்பெனி ஆதரவாளர்களையே நம்பியிருக்க வேண்டி வந்தது என்பது நினைவுகூரத்தக்கது. அவர் அப்போது பகிரங்கமாக இந்த வட்டாரங்களின் ஆதரவைக் கோரினார் என்ற உண்மையே ஜனநாயகக் கட்சி பாரம்பரியத்திலிருந்து முறித்துக் கொள்வதாகக் கருதப்பட்டது.

கெர்ரி வேட்புமனுவுக்கு ஆதரவு அளிக்கும் மிக உச்சியில் உள்ள பணக்காரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து ஐயோவா வில் உள்ள டாவன் போர்ட்டில் ஒரு ''பொருளாதார உச்சிமாநாடு'' நடத்தப்பட்டது. இந்த சம்பிரதாய சடங்கு விவகாரங்கள் ----அமெரிக்காவின் பொருளாதாரத்தைப் பற்றி ''நேர்மையான கலைந்துரையாடலை'' நடத்துவதை நோக்கமாகக் கொண்டது எனக் காட்டுவது, இரண்டு கட்சிகளின் வாடிக்கையான நடவடிக்கையாக அமைந்துவிட்டது. கிளின்டனும், ஜோர்ஜ் டபுள்யூ. புஷ்ஷூம் சாதாரண மக்களின் அவல நிலைக்கு ''அக்கறை'' காட்டுவதாக வெளிப்படுத்திக்கொண்டு, அமெரிக்க நிதியாதிக்க ஒருசிலவராட்சியின் நலன்களை முன்னெடுப்பதற்கு அவர்களது கொள்கைகள் முற்றிலும் செலுத்தப்பட்டன என்ற உண்மையை பரந்த உழைக்கும் மக்களை பலியிட்டு மூடிமறைக்க அவர்கள் இருவராலும் அவை பயன்படுத்தப்பட்டன.

அந்த நடவடிக்கைப்படி துணை நடிகர்களாக, தொழிற்சங்க அதிகாரத்துவத்தினுடைய பிரதிநிதிகள் குழு அந்த மேசைக்கு கொண்டுவரப்பட்டது. பில்லியனர் முதலீட்டாளர்களும், வேலையில்லாதிருக்கும் தொழிலாளர்களும், ஒரே மாதிரியாக ''அனைவரும் ஒரே படகில் செல்கின்றனர்'' என்று காட்டுவதற்காக இந்த மாநாடு நடத்தப்பட்டது.

கெர்ரியை ஆதரிக்க முன்வந்திருப்பவர்கள் மத்தியில் அமெரிக்காவின் நிதி மற்றும் தொழிற்துறை மூலதனத்தின் உச்சாணிக்கொம்பிலுள்ள மிக முக்கியமான கொடூர சக்திகளும் இடம் பெற்றிருக்கின்றன ----அவர்களில் சிலர் வாழ்நாள் முழுவதும் குடியரசுக்கட்சியில் இருந்தவர்கள் புஷ்ஷிற்காக 2000 தேர்தலில் பகிரங்கமாக பிரச்சாரம் செய்தவர்களாவர். அமெரிக்க பெருநிறுவன வரலாற்றிலேயே ஊதிய வெட்டு, ஆட்குறைப்பிற்கு பெருமளவில் பொறுப்பான ---Lee Iacocca ஐயோவா உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட ஒரு முன்னணி நபராவார்---- இவர் இந்த வட்டாரங்களின் சிந்தனையை இரத்தினச் சுருக்கமாக இப்படி அறிவித்தார்: ''இறுதி அளவீடு மிக எளிதானது: நமக்கு ஒரு புதிய CEO தேவை.''

அந்தப் பட்டியலில் டெக்ஸாஸ் பசிபிக் குழு நிறுவனத்தை வாங்கிய பங்குதாரர்களில் ஒருவரான டேவிட் போன்டர்மனும் இடம்பெற்றிருந்தார். இவர் டெக்சாசில் உள்ள போர்ட் வோர்த் நகரத்தை அடித்தளமாகக் கொண்ட நிதியாளர், கொண்டினன்டல் மற்றும் அமெரிக்க மேற்கு விமான நிறுவனங்கள் திவாலானதை பயன்படுத்தி செல்வத்தை உருவாக்கியவர் ஆவார், தற்போது என்ரோன் நிறுவனத்தை வாங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். புஷ், டெக்ஸாஸ் கவர்னர் பதவிக்கு போட்டியிட்ட நேரத்திலும் முதல் முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோதும் இரண்டிலும் பதவி வகித்த அவருக்கு முன்னணி ஆதரவாளராக இருந்தார்.

இத்தாலி அருகே கடலில் ஒரு வாடகைக்கு அமர்த்தப்பட்ட உலாப் படகிலிருந்து வோல்ஸ் ஸ்ரீட் ஜேர்னலுக்கு பேட்டியளித்த போன்டர்மன் கூறினார்: ''தனிப்பட்ட முறையில் ஜோர்ஜ் இளமையான இனிய மனிதன்தான். ஆனால் அவரது கொள்கைகள் பயங்கரமானவை..... Millard Fillmore-க்கு பின் அவர் மோசமான ஜனாதிபதியாக மாறிக்கொண்டு வருகிறார்---- ஆனால் அது அநேகமாய் Millard Fillmore-யே இழிவுபடுத்துவதாக ஆகும்''

கெர்ரியின் உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட மற்றொரு புஷ்ஷின் முன்னாள் ஆதரவாளர், ஜக் டானியல் விஸ்கி தயாரிப்பாளரும், பிரெளன் - போர்மன் தலைவருமான Owsley Brown ஆவார். அவர் ஜேர்னலுக்கு பேட்டியளிக்கும்போது கூறினார்: ''ஐயத்திற்கிடமின்றி இதை ஏதோ சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. வாழ்நாள் முழுவதும் குடியரசுக் கட்சிக்காரர் என்று பதிவு செய்யப்பட்ட எனக்கு இது நிச்சயமாக ஏற்புடையதல்ல. செனட்டர் கெர்ரி கொண்டுவரும் தலைமை நிச்சயமாக வரிவருவாய் விவகாரங்களில் நான் எதிர்பார்க்கும் அளவிற்கு இருக்கும்'' என அவர் மேலும் குறிப்பிட்டார்.

அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்த மற்றவர்கள்: Bank of America தலைவர் Charles Gifford; August A.Busch IV-ன் தலைவர் Anheuser-Busch, Rupert Murdoch- ன் செய்தி நிறுவன துணைத்தலைவர் Peter Chernin, Costco மொத்த விற்பனை கார்பரேஷன் நிறுவனர் Jeff Brotman, டெக்ஸ்ஸாசை அடித்தளமாகக் கொண்ட, 2000-தேர்தலில் புஷ்ஷிற்கு வலுவான அடிப்படையில் நிதியுதவி தந்த Wyndam Hotels CEO Fred Kleisner ஆகியோராவர்.

பல நிகழ்ச்சிகளில், கெர்ரி பட்டியலில் இடம்பெற்றிருந்த பலர் தீர்க்கமாகவும் துல்லியமாகவும் வெளிநாடுகளில் குறைந்த ஊதிய பணியாளர்களை பயன்படுத்திக்கொள்வதற்காக வெளிநாடுகளுக்கு தங்களது நிறுவனங்களை மாற்றியவர்கள்----இந்தப்போக்கை கெர்ரி தனது பிரச்சாரத்தில் கண்டித்துள்ளார். ஆரம்ப தேர்தல்களின்போது கெர்ரி பயன்படுத்திய ''Benedict Arnold நிறுவனங்களை'' காப்பாற்ற வேண்டுமென்ற வாய்வீச்சை அவர் மீண்டும் கையாளவில்லை என்பது புரிந்துகொள்ளக்கூடியதாகும்.

கடந்த நான்காண்டுகளாக மிகப்பெருமளவில் நிதி வரி வெட்டு செய்யப்பட்டு அதன் மூலம் நாட்டின் வளங்களை சூறையாடியதிலிருந்து பெருமளவில் இலாபத்தை அறுவடை செய்துகொண்ட இது போன்ற சக்திகள், புஷ்ஷை விட்டு கெர்ரி பக்கம் திரும்புவது ஏன்?

நாட்டின் மிகப்பெரிய பணக்கார குடும்பங்களில் ஒன்றைச் சேர்ந்த கெர்ரி, இந்த வட்டாரங்களுக்கு அந்நியமானவர் அல்லர். வோல்ஸ் ஸ்ரீட் கம்பெனி நிர்வாகிகளில் அவரை ஆதரித்து நிற்கின்ற பலர் அந்த மசாச்சூசெட்ஸ் செனட்டரால் வழங்கப்பட்ட முன்னாள் சேவைகளுக்கு கடனாற்றுகின்றவர்களாவர். Charles Lewis எழுதியுள்ள Buying of the President 2004- என்ற நூலின்படி, ''1995-முதல் கெர்ரி தனது பல்வேறு பிரச்சாரங்களுக்காக 30- மில்லியன் டாலர்களுக்கு மேல் திரட்டியுள்ளார். இவற்றில் பெரும்பாலன பகுதியானது, நிதி மற்றும் தகவல் தொடர்பு தொழிற்சாலைகளிலிருந்து கிடைக்கப்பெற்றவை--- அவர் பணியாற்றும் செனட் மன்ற குழுக்கள் இவற்றைக் கண்காணித்து வருகின்றன.''

ஜனநாயகக் கட்சிக்காரர்கள் தங்களது பிரச்சார அரங்கை அமெரிக்க நிதியாதிக்க ஒருசிலவராட்சிற்கு ஏற்றவகையில் வேண்டுகோள் விடுகின்றனர். பெரும்பாலும் போர் மற்றும் ''உள்நாட்டு பாதுகாப்பிற்கு'' அர்ப்பணித்தும், அது முக்கியத்துவம் வாய்ந்த சமூக சீர்திருத்தம் பற்றி குறிப்புக் கொண்டிருக்கவில்லை.

மாறாக, அது ''சுதந்திர- சந்தை'' கொள்கையை அது வலியுறுத்துகிறது: ''அரசாங்கம் அல்ல, தனியார் துறை தான் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதற்கும் சாதனம் என்று நாங்கள் நம்புகிறோம். தனியார்துறை முதலீடுகளை ஊக்குவிக்கும் சூழ்நிலையை உருவாக்குவதும், மிகத்தீவிரமான போட்டியை வளர்ப்பதும், புதுமை பொருளாதாரத்தின் அஸ்திவாரத்தை வலுப்படுத்துவதும்தான் அரசாங்கத்தின் பொறுப்பாக இருக்க வேண்டும்'' அது "ஜோன் கெர்ரி மற்றும் ஜோன் எட்வர்ட்சின் கீழ் 99 சதவீத அமெரிக்க வர்த்தகங்கள் இன்று செலுத்துவதை விட குறைவாகவே வரி செலுத்தும்'' என்று உறுதியளிக்கிறது.

மறுபடியும், மறுபடியும், பொருளாதார அரங்கு, கெர்ரி நிர்வாகம் முதலாளித்துவ பூகோளமயமாக்கலை எதிர்த்து சவால்விடுவதற்கு உலகச்சந்தைகளில் ''அமெரிக்காவின் போட்டிபோடும்'' திறனை வளர்ப்பதன் மூலம் புதுபிக்க முயற்சிக்கும் என்று சபதம் செய்கிறது. அது, கெர்ரி நிர்வாகம் ''போட்டியிடுவதற்கான நமது தெழிலாளர்களின் திறனை பலப்படுத்த" கடப்பாடுடையதாக இருக்கும் என்கிறது மற்றும் அது ''நமது கம்பனிகள் போட்டித்திறனை தியாகம் செய்துவிடாமல் அமெரிக்காவில் வேலைவாய்ப்புக்களை உருவாக்கும்'' என்று ஜனநாயகக் கட்சியினர் நம்புவதாக அது விளக்குகிறது.

இந்த வாதத்தின் அழுத்தம் என்னவென்றால் அமெரிக்க முதலாளித்துவம் பூகோள அளவில் தனது போட்டித்திறனை பெருக்கிக்கொள்வதற்காக அமெரிக்கத் தொழிலாளர்கள் தங்களை அந்த முயற்சிக்கு கீழ்ப்படிந்து நடப்பவர்களாக ஆக்கிக்கொள்ளவேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது உற்பத்திப் பிரிவுகளை தங்களது விருப்பப்படி கண்டம் விட்டு கண்டம் மாற்றிக்கொண்டு செல்லுகின்ற சூழ்நிலைகளில் இது, அமெரிக்க தொழிலாளர்களுக்கும், மெக்ஸிகோ முதல் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து இந்தியாவரை உள்ள மிகக் கொடூர வடிவமான சுரண்டலை சந்திக்கின்ற தொழிலாளர்களுக்கும் இடையே இடைவெளியை குறைப்பதற்காக ஊதியத்தில், தொழிலாளர் வென்ற சலுகைககளில், வேலை நிலைமைகளில் வெட்டுக்களுக்கு கீழ்ப்படியும் நிலையை மட்டுமே அர்த்தப்படுத்த முடியும்.

புஷ்ஷும் அவரது நிர்வாகமும் மிகப்பெருமளவில் உழைக்கும் மக்களிடையே செல்வாக்கை இழந்து நிற்பதால் மேலும் தியாகம் செய்யவும், சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முயன்றால் அது சமூக கிளர்ச்சியை தூண்டிவிடும் என்று நிதியாதிக்க ஆளும் செல்வந்தத் தட்டினருக்குள்ளேயே சந்தேகத்திற்கிடமில்லாத உணர்வு நிலவுகிறது.

தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தின் மீது மேலும் தாக்குதல் நடத்துவதற்கான செயற்திட்டம் உள்ளது என்பதில் சந்தேகத்திற்கிடமில்லை. அமெரிக்கப் பொருளாதாரம் மிகப்பெருமளவில் நிலையற்றதாகவும், நெருக்கடிகளுக்கு இலக்காகக் கூடிய பலவீனமுள்ளதாகவும் வளர்ந்து வருகிறது. அண்மையில் இந்த நாட்டு வரலாற்றிலேயே இல்லாத மிகப்பெருந் தொகையான 445 பில்லியன் டாலர்கள் பற்றாக்குறை சமீபத்திய மத்திய வரவு செலவு திட்டத்தில் இருக்கிறது. இந்த ஆண்டு மட்டுமே அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறை மேலும் 600- பில்லியன் டாலர்கள் உயருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. 2002 முதல் இதர வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக அமெரிக்க டாலர் ஏறத்தாழ 20- சதவீதம் மதிப்பு குறைந்துவிட்டுள்ளது.

இதற்கிடையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த 21 ஆண்டுகளில் இல்லாத உயர்ந்த அளவை தொட்டுவிட்டது, சென்ற ஆண்டுமட்டும் ஏறத்தாழ 40 சதவீதம் உயர்ந்துவிட்டது. இப்படி உயர்ந்து கொண்டே செல்லும் எண்ணெய் விலை, சுழற்சிப் பேரழிவை உருவாக்கும் பண வீக்கம் மற்றும் மந்த நிலையை ஒரு சேர உருவாக்கிவிடும். புஷ் நிர்வாகத்தின் பொருளாதார விரிவாக்க வளர்ச்சி பற்றிய பேச்சு பெருமளவில் வெற்றாகும், கடந்த 4 மாதங்களில் வேலை வாய்ப்புக்கள் சிதைந்து கொண்டு வருகின்றன, ஜூலை மாதத்தில் 32,000 தொழிலாளர்கள் மட்டுமே சம்பளப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர், பொருளாதார வாதிகள் கணக்கிட்ட 200,000 ஐ விட குறைவாகவே வேலை கிடைத்திருக்கிறது.

கெர்ரி தமது முதல் நான்காண்டு பதவிக்காலத்தில் மத்திய பட்ஜெட் பற்றாக்குறையை பாதியாக குறைத்து அமெரிக்க பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உறுதியெடுத்துக் கொண்டிருக்கிறார். அமெரிக்க மக்களின் முதல் நிலையிலுள்ள 1 சதவீதம் பேருக்கு வரி குறைக்கப்பட்டுள்ள புஷ் நிர்வாகத்தின் சில விகிதங்களை இரத்து செய்வதன் மூலமும், அரசாங்க செலவினத்தை தானாகக் கட்டுப்படுத்தல் உள்பட, "போவதானால் செலவு செய்" என்ற அடிப்படையில் அரசாங்கத்தை நடத்தத்தேவைப்படும் சிக்கன நிதிக்கொள்கை மூலமும் இது நிறைவேற்றப்படும் என்று அவர் கூறுகிறார்.

கெர்ரியின் நவீன திட்டமான சுகாதார நலன் வேலைத்திட்டங்களை விஸ்தரிப்பதற்கு அவர் பட்ஜெட் பற்றாக்குறையை குறைக்கும் நடவடிக்கை ஏற்புடையதாக இருக்காது என்று பெரும்பாலான பொருளாதார ஆய்வாளர்கள் முடிவுக்கு வருகின்றனர். கெர்ரி நிர்வாகம் எதிர் திசை வரிவெட்டுக்களை குடியரசுக் கட்சிக்காரர்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி நிறைவேற்ற முடியுமா என்ற ஐயுறவாதம் பரவலாக நிலவுகிறது.

இந்த ஆண்டு பென்டகனின் அதிகரித்த பட்ஜெட் 416 பில்லியன் டாலர்கள் அளவிற்கு பெருகியுள்ளது, அதைத் தொடக்கூடாது என்று கெர்ரி திரும்பத்திரும்ப கூறியுள்ளார். ''நட்சத்திர போர்கள்'' ஏவுகணை பாதுகாப்புத் திட்டம் உட்பட ஏற்கனவே புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு திட்டமும் செயற்படுத்தப்படும். இதற்கிடையில், இராணுவச் செலவினங்களுக்கு நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை வழங்கவும் உத்திரவாதமளித்து ஈராக்கில் அமெரிக்கத் துருப்புக்களை குறைந்த பட்சம் மேலும் நான்காண்டுகள் வைத்திருக்க ஜனநாயகக்கட்சி வேட்பாளர் தயாராக இருக்கிறார்.

இராணுவ வாதத்திற்கு இந்த உறுதிமொழி தந்திருப்பதுடன் வரிவெட்டுக்களை குறிப்பிடத்தக்க அளவிற்கு நிறைவேற்றுவதில் தடைக்கற்கள் உருவாகும் என்பதையும் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, கெர்ரி நிர்வாகம் கடுமையான நிதிநெருக்கடியை விரைவில் சந்திக்க வேண்டிவரும். எனவே அதன் சுகாதார வேலைத்திட்ட ஆலோசனைகளை கைவிட வேண்டியது தவிர்க்க முடியாததாக ஆகிவிடும், மேலும் பட்ஜெட் வெட்டு நடவடிக்கைகள் மூலம் 1930-களில் தொடங்கி 1960-கள் வரை நிறைவேற்றப்பட்டு வந்த சமூக வேலைத்திட்டங்களில் மிச்சமிருப்பதும் செயலூக்கத்துடன் ஒழித்துக்கட்டப்பட்டுவிடும்.

இங்கே, மிகவும் சாதகமான பொருளாதார சூழலில் செயல்பட்ட, கிளின்டன் நிர்வாகத்தின் சான்றை மதிப்பிடுவது பயனுள்ளது. குடியரசுக் கட்சிக்காரர்களின் எதிர்ப்பினால் முதலாண்டில் சுகாதார பாதுகாப்பு சீர்திருத்த ஆலோசனைகளைக் கைவிட்டது, அரசு செலவின சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டதால் ஏழைகளுக்கான சமூக நலன்புரி ஏறத்தாழ நீக்கப்பட்டுவிட்டது. எனவே கெர்ரி மற்றும் எட்வார்ட்ஸின் ''தாராளவாதம்'' அதே போன்று திவாலானது என்பதை நிரூபிக்கும்.

கெர்ரி நிர்வாகம் ஈராக் போரை நீடிக்கவும், அதன் அடிப்படையாகவுள்ள பூகோள இராணுவவாத கொள்கைகளை, பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் பெயரால் நீடிக்கவும் உறுதி எடுத்துக் கொண்டிருப்பதால், உள்நாட்டில் புஷ் நிர்வாகம் முன்னெடுத்து வைக்கத் தயாராக இருந்த அதே கொடுமையான சமூகக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லவது தவிர்க்கவியலாது.

குடியரசுக் கட்சி நிர்வாகத்திலும் நாடாளுமன்றத்திலும் இடம்பெற்றுள்ள தீவிர வலதுசாரி தலைமை அமெரிக்க நிதிவருவாய் (fiscal) நெருக்கடியை திட்டமிட்டு வளர்த்தது, அவர்களை அடுத்து ஆட்சிக்கு யார் வந்தாலும், 2005 ல் வெள்ளை மாளிகையை யார் கைப்பற்றினாலும், சமூக நலன்புரி வேலைத்திட்டங்களை குறிப்பாக சமூக பாதுகாப்பை அழிக்கவேண்டிய கட்டாயத்தை உருவாக்கும் வகையில் மத்திய அரசாங்கத்தை திவாலாக்க அது கணக்கிடப்பட்டது.

தொழிற்சங்க அதிகரத்துவத்தின் ஆதரவோடு ஒரு ஜனநாயகக் கட்சியாளை வெள்ளை மாளிகை பதவியில் அமர்த்தி பூமியை எரிக்கும் கொள்கையான சமூகத் திட்டங்களை வெட்ட திட்டமிடுவது நிதியாதிக்க செல்வந்தத் தட்டுக்குள் உள்ள மிகத்தொலைநோக்குடைய சக்திகளுக்கு ஒரு திட்டவட்டமான வேண்டுகோளைக் கொண்டிருக்கிறது. குறைந்த பட்சம் தற்காலிகமாகவாவது, ஜனநாயகக் கட்சி நிர்வாகம் ஈராக் போருக்கு எதிராகவும், உள்நாட்டில் சீர்குலைந்துவரும் பொருளாதார நிலவரத்திற்கெதிராகவும் உருவாகும் சமுதாய கொந்தளிப்பு அலையை அழிவிலிருந்து மட்டுப்படுத்திவிட முடியுமென்று அவர்கள் கருதுகிறார்கள்.

பெரு வர்த்தக நிறுவனங்களின் குறிப்பிடத்தக்க பிரிவுகள் கெர்ரியை தழுவிக்கொள்ள முன்வந்திருப்பது ஓர் எச்சரிக்கை விடுப்பதாக இருக்கும்: 2005-ல் வெள்ளை மாளிகை எந்த கட்சி கட்டுப்பாட்டில் வந்தாலும் வேலைவாய்ப்புக்கள், வாழ்க்கத்தரம், அடிப்படை ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீதான தாக்குதல் முடுக்கிவிடப்படும். கெர்ரி தேர்ந்தெடுக்கப்படுவாரானால், ஜனநாயகக் கட்சிகாரர்களின் வரையறுக்கப்பட்ட தேர்தல் பிரச்சார உறுதிமொழிகள் கூட விரைவில் மறைந்துபோய்விடும், அவரது நிர்வாகக் கொள்கைகள் அமெரிக்க முதலாளித்துவத்தின் நெருக்கடியாலும், நிதியாதிக்க ஒருசிலவராட்சியின் கோரிக்கையாலும் உந்தப்படும்.

அமெரிக்க சமுதாயத்தை ஆதிக்கம் செலுத்துகின்ற பெருகிவரும் பொருளாதார பாதுகாப்பின்மை, ஆழமாகிவரும் சமுதாய ஏற்றத்தாழ்வு, வாழ்க்கைத் தர வீழ்ச்சி ஆகியவற்றை, பரந்த வெகுஜன உழைக்கும் மக்களது நலன்களை கருத்தில் கொண்டு பொருளாதார வாழ்வை மறுஒழுங்கமைக்க ஆதரவு தரும், ஒரு சோசலிச வேலைத் திட்டத்திற்கான போராட்டத்துக்கு வெளியில் தீர்வு காண முடியாது.

அத்தகைய ஒரு வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக சோசலிச சமத்துவக் கட்சி 2004 தேர்தலில் போட்டியிடுகின்றது. ஒரு சிறிய செல்வந்தத்தட்டு மேலும் மேலும் பணக்காரர் ஆவதற்கு, இலாபத்தைப் பெருக்குவதற்கு, உற்பத்தி சக்திகளை கீழ்ப்படுத்துவதற்கு மாறாக, அதன் கொள்கைகள் சமுதாயத்தின் மகத்தான வளங்களை, வாழ்க்கைத்தரத்தை முன்னேற்ற, வேலைவாய்ப்பை உருவாக்க, கல்வியை, மற்றும் வீட்டுவசதியை, உயர்த்துவதற்கும் சுகாதார சேவைத்திட்டங்களுக்கு நிதிஒதுக்கீடு செய்ய சமுதாயத்தின் வளங்களைத் திரட்டுவதை அவற்றின் புறப்பாட்டுப் புள்ளியாக எடுக்கும் கொள்கைகளை முன்னெடுத்து செல்கிறது.

எங்களது பிரச்சாரம், வரவிருக்கும் போராட்டத்திற்கு தேவையான, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான பரந்த சோசலிச இயக்கத்தின் அரசியல் தயாரிப்புக்கு அர்ப்பணித்துள்ளது. எனவே எங்களது ஆதரவாளர்கள், மற்றும் வாசகர்களை இன்றே SEP பிரச்சாரத்தில் இணையுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். என்னையும், எனது துணை ஜனாதிபதி வேட்பாளருமான ஜிம் லோரன்ஸ் ஆகிய இருவரையும், மற்றும் நமது நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற வேட்பாளர்களையும், வாக்குச்சீட்டில் இடம்பெறச் செய்வதற்கான போராட்டத்தில் பங்கெடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். நாடு முழுவதிலும் SEP பிரச்சாரத்தையும், அறிக்கைகளையும் பரப்புகின்ற பணியை மேற்கொள்ள வேண்டும், எங்களது கட்சியில் இணைய முடிவு செய்து சிறந்த உலகை படைப்பதற்கான போராட்டத்தில் பங்கெடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

See Also :

ஜனநாயகக் கட்சி மாநாட்டின் பொருள்
சமூக பிற்போக்கையும் போரையும் தொடர கெர்ரியும் எட்வர்ட்சும் உறுதி கொள்ளுகின்றனர்

ஜனநாயகக் கட்சி மாநாடும் இரு-கட்சி முறையின் நெருக்கடியும்

Top of page