World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Hutton Inquiry: A black day for democracy in Britain

ஹட்டன் விசாரணை பிரிட்டிஷ் ஜனநாயகத்திற்கு ஒரு கறுப்புநாள்

Statement of the Socialist Equality Party (Britain)
3 February 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக் யுத்தம் குறித்து மோசடியை வெளிக்கொணர்ந்த டாக்டர் கெல்லியின் மரணம் குறித்தான ஹட்டன் பிரபுவின் விசாரணை நடந்த முறையானது பிரிட்டனின் ஜனநாயக சீர்கேட்டின் முதிர்ந்த நிலையை வெளிப்படுத்தி இருக்கிறது. இரு பத்தாண்டுகளுக்கு மேலாக பிரிட்டனில் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் ஜனநாயக உரிமைகள் மீதாக நடத்தி வந்த தாக்குதல்களில் ஒரு நீர்வீழ்ச்சிபாயும் சரிவாக அது இருக்கிறது மற்றும் டோனி பிளேயரின் தொழிற்கட்சி அரசாங்கத்தின் கீழ் அது திடீரென விரைவுபடுத்தப்பட்டு இருக்கிறது.

நீதி விசாரணையின் முன் இருந்த அடிப்படைக் கேள்வியானது, ''வாழ்வா சாவா போன்ற தொடர்புடைய விஷயங்களில் தங்களது அரசாங்கத்தை பதில் கூற வைக்க பிரிட்டிஷ் மக்களுக்கு உரிமை இருக்கிறதா? என்பதுதான்.

ஹட்டன் விசாரணையின் இதற்கான பதில் எதிரொலி உண்டாக்கக்கூடிய சப்தத்தில் "இல்லை" என்பதுதான். ஹட்டன், டோனி பிளேயரின் அரை சர்வாதிகார அரசாங்கத்துக்கு நேரடியான ஆதரவாக செயல்பட்டிருக்கிறார். அதில் அதிகாரத்தில் இருப்பவர் தங்களது செய்கைகளுக்கு மக்களிடம் பதில் சொல்லத்தேவையில்லை என்கிறார். அரசாங்கத்திடமிருந்து சிறு அளவு சுதந்திரத்தை பேணும் மற்றும் அதன் கூற்றுக்களை விமர்சனத்திற்கு உள்ளாக்கும் செய்தி ஊடகத்தின் எந்த பகுதிக்கும் எதிராக, அவர்களை குறிவைத்து வேட்டையாடுவதற்குரிய வழிவகைகளை ஆரம்பித்து வைத்திருக்கிறார். கமிஷனின் முடிவுகள் பத்திரிகை சுதந்திரத்தின் மீதும், பேச்சுரிமையின் மீதும் இதுவரையில் இல்லாத அளவில் தாக்குதல் நடத்த வழியமைத்திருக்கிறது.

ஹட்டன் விசாரணை முடிவின் முக்கியத்துவம் குறித்து புரிந்துகொள்ள வேண்டும் என்றால், இந்த விசாரணைக்கு அழைப்பு விடப்பட்ட சூழ்நிலை குறித்து மீளாய்வு செய்வது அவசியமாகிறது.

ஈராக் மீதான தாக்குதல்கள் ஆரம்பிப்பதற்கு பல மாதங்களுக்கு முன்பாகவே புஷ் நிர்வாகத்தின் 'போருக்கான உந்துதல் பின்னே தன் அரசாங்கத்தை வழிநடத்த பிளேயர் முடிவு செய்தார். மக்களை நடுநடுங்க வைத்து போர் உந்துதலுக்குப் பின்னால் அவர்களை முண்டியடித்துச்செல்ல வைப்பதற்காக ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் பற்றியும் அப்பேரழிவு ஆயுதங்களால் பிரிட்டிஷ் மக்களுக்கு ஏற்படக்கூடிய உடனடி அச்சுறுத்தலையும், இரத்தத்தை உறைய வைக்கும் கூக்குரலுடன் பிரச்சாரத்தை அவர் கட்டவிழ்த்துவிட்டார். இவையனைத்தும் இதுவரை பொய்யென நிரூபணமாக்கப்பட்டிருக்கிறது.

பிரிட்டனில் பெரும்பாலான மக்களின் சர்ச்சைக்கிடமில்லாத பெரும் எதிர்ப்பினிடையே பிளேயர் தனது போர் கொள்கையை பின்பற்றினார், எஞ்சிய ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதிலும் இந்தப் போரை எதிர்த்த பெருவாரியானபரந்த மக்களின் விருப்பினைப் பற்றி இங்கு சொல்லத் தேவை இல்லை. பெப்ரவரி-15- ம் தேதி 2003-ல் இரண்டு மில்லியன் மக்கள் லண்டன் தெருக்களில் அதுவரை பிரிட்டிஷ் சரித்திரம் கண்டிராத அளவுக்கு அரசியல் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள், இதுவும் இதைப்போல மக்களின் எதிர்ப்பையும், கோபத்தையும், வெளிப்படுத்தக்கூடிய பல ஆர்ப்பாட்டங்கள் நடந்ததானது மக்கள் பிளேயரின் பேரழிவு ஆயுதங்களைப் பற்றிய குற்றச்சாட்டுக்கள் குறித்த மதிப்பீட்டை வெளிப்படுத்தியது மற்றும் அதை அவர்கள் நம்பத்தகுந்ததல்ல என்ற தங்களின் முடிவைத் தெரியப்படுத்தியது.

ஆனால் பிளேயரின் பதில் ஜனநாயகத்தின் அடிப்படையே, பொதுஜன விருப்பத்துக்கு எதிராக செயல்படுவது என்று அறிவிப்பதாக இருந்தது.

அவரது போருக்கான உந்துதல், அரசு சாதனங்களுக்குள்ளே குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை தூண்டி விட்டது. இராணுவத் தலையீடு பற்றிய முன்னரே முடிவு செய்யப்பட்ட கொள்கையை நியாயப்படுத்தும் நோக்கிற்காக புலனாய்வுத்துறையின் தகவல்களை திரித்தும், மாற்றியும் உபயோகப்படுத்தும் செய்கைகளுக்கு புலனாய்வுத் துறையின் சில பிரிவுகள் ஆட்சேபம் தெரிவித்ததும் இதில் உள்ளடங்கும். பிளேயர் அரசாங்கத்தின் இறுதி பதில் புலனாய்வுத் துறையிலிருந்த அதன் பிரதான விமர்சகர்களுள் ஒருவரான டாக்டர் கெல்லியை "வெளியேற்றி"யதன் மூலம் அத்தகைய எதிர்ப்பு அனைத்தையும் வாய்மூடப் பண்ண்ணுவதாக இருந்தது மற்றும் அவரை ஒரு உதாரணமாக்கியது.

போர் புரிந்தே ஆகவேண்டும் என வாதிட்ட செப்டம்பர்2000 மற்றும் பெப்ரவரி 2003-ன் ஆவணங்கள் வெளியிடப்பட்டவுடன் கடும்விமர்சனங்களுக்குள்ளானது. இப்போது பெரும் பழிப்புக்கு உள்ளாகி இருக்கின்ற ஈராக் பேரழிவை உண்டாக்கும் ஆயுதங்களை 45-நிமிட நேரத்தில் தாக்குதலுக்குரிய நிலைக்கு தயார் செய்ய முடியும் மற்றும் ஆபிரிக்காவிலிருந்து அணு ஆயுத தயாரிப்புக்கான பொருள்களை ஈராக் வாங்கியிருக்கிறது என்ற குற்றச்சாட்டு ஆகியன செப்டம்பர் ஆவணத்தில் அடங்கியுள்ளன. ஆபிரிக்க நாடான நைஜீரியா மஞ்சள் நிற யுரேனியம் கேக்குகளை சதாம் ஹூசேனுக்கு விற்றதாக சொல்லப்பட்டமை மோசடியான குற்றச்சாட்டு என்பதை சர்வதேச அணுசக்தி ஏஜென்சி வெளிப்படுத்தியது, அதுவும் இந்தக் குற்றச்சாட்டு அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் முக்கியமான பிரச்சாரமாக வெளியான சில வாரங்களிலேயே ஏஜென்சி தெளிவுபடுத்தியது. பெப்ரவரி 2003-ஆவணம் வெளியான ஒரு சில மணிநேரங்களிலேயே இந்த ஆவணத்தின் பெரும்பகுதி அமெரிக்க மாணவர் ஒருவர் தனது மேற்படிப்பு ஆய்வுக் கருத்தாக ஈராக்கின் ஆயுதங்கள் பற்றி பத்துவருடங்களுக்கும் முந்தைய புலனாய்வு தகவல்களை அடிப்படையாக வைத்து சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையிலிருந்து திருப்பப்பட்டது என்பது வெளியானது.

பிளேயரின் நம்பிக்கை என்னவாக இருந்தது என்றால், ஈராக்கின் மீதான பெரும் வெற்றி பல சங்கடமான உண்மைகளை நசுக்கிவிடும் மற்றும் அவரது அரசியல் விமர்சகர்களை அடக்கிவிடும் என்பதுதான். ஆனால் போர் முடிந்து விட்டது என்ற அறிவிப்புக்குப்பின் ஈராக்கினுள் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பி அமெரிக்க பிரிட்டிஷ் படைகளின் ஆக்கிரமிப்பை முழுமூச்சுடன் தாக்குதல் நடத்தி வருகின்றனர், இது இன்னொரு வியட்நாமாகி' விடுமோ என்ற பயத்தைத் தோற்றுவித்து இருக்கிறது.

இத்தகைய சூழ்நிலைகளில் பாதுகாப்புத்துறையின் சில பிரிவுகள் பிரச்சனைகளிலிருந்து தாங்கள் தப்பிப்பதற்காக ஈராக் குழப்பத்திற்கு முழு காரணம் பிளேயர்தான் என்று பழிபோட எத்தனித்தனர். இதன் விளைவாகத்தான் செப்டம்பர் 2000-ஆவணத்தை தயாரிப்பதில் மிக நெருங்கிய தொடர்புடைய பிரிட்டனின் முதன்மை ஆயுதக் கண்காணிப்பாளரான கெல்லி பி.பி.சி-யின் டுடே நிருபர் ஆண்ட்ரூ ஜில்லிகனுக்கு ஏற்பாடு செய்யப்படாத பேட்டியொன்றை அளித்தார்.

மார்ச் 2003-வாக்கில் ஜில்லிகன், ''பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் (கெல்லி) தனக்குத் தந்த தகவலின்படி செப்டம்பர் 2000-வருடத்திய ஆவணத்தின் உண்மைத் தன்மையை பற்றி புலனாய்வுத்துறை வட்டாரங்களில் சந்தேகமும், அதிருப்தியும், நிலவுவதாக தனது நிகழ்ச்சியான 'டுடே' வில் தெரிவித்தார். இந்த ஆவணத்தை மிகவும் "கவர்ச்சியாக" மாற்றியதற்கு காரணம் பிளேயரின் செய்தித்தொடர்பு இயக்குநரான அலிஸ்டர் காம்ப்பெல்தான் என்றும் கூறினார். அரசாங்கம் பி.பி.சி-யை அடக்குவதற்காக பெரும் பிரச்சாரத்தை மேற்கொண்டு அந்த நிறுவனம் தான் சொன்னதைப் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியது.

கெல்லிதான், ஜில்லிகனுக்கு தகவல் அளித்த மனிதர் என்பதை அரசாங்கம் தெரியப்படுத்தியது மட்டுமின்றி இரண்டு பாராளுமன்ற குழுக்களின் முன்பு அவரை சாட்சி சொல்ல நிர்பந்தித்தது. ஜூலை-18-ம் தேதி கெல்லி தனது இல்லத்துக்கு அருகே உள்ள தோட்டப்பகுதியில் இறந்து கிடந்தார்.

இந்த சம்பவம் கெல்லியின் மரணம் குறித்த சூழ்நிலைகள் மட்டும் இல்லாமல் போர் தயாரிக்கப்பட்ட விதம் குறித்தும் அரசாங்கத்தால் தவறான புலனாய்வுத் தகவல்கள் கூறப்பட்டதா என்பதையும் கூட விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு வழிவகுத்தது.

அத்தகைய புலன்விசாரணை எதையும் பிளேயரால் ஏற்றுக்கொள்ள முடியாது மற்றும் எந்தவித உத்தியோகபூர்வ விசாரணையாக இருந்தாலும் கெல்லியின் மரணம் மற்றும் அவரது அரசாங்கத்திற்கு பி.பி.சி-உடன் உள்ள பிரச்சனை ஆகியவற்றை குவிமையப்படுத்தும் என்பதில் உறுதியாக இருந்தார். இதன் அடிப்படையில் ஹட்டன் பிரபுவின் தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டார், இது உண்மையை எப்படி மறைப்பது என்பதற்கு வடிவமைக்கப்பட்டதே தவிர அதனை வெளிக்கொண்டுவருவதற்கு அல்ல.

வட அயர்லாந்தின் முன்னாள் தலைமை நீதிபதியான ஹட்டன், 1972-ம் ஆண்டின் இரத்த ஞாயிறு பற்றிய நீதி விசாரணையில் பிரிட்டிஷ் இராணுவ வீரர்களை பாதுகாத்ததில் பேர்பெற்றுக் கொண்டவர், மற்றும் ஜூரி இல்லாத டிப்லோக் நீதிமன்றங்களில் (No-jury Diplock courts) பயங்கரவாதிகள் என குற்றம் சுமத்தப்பட்டவர்களை எதிர்த்து வழக்காடியவர். "பாதுகாப்பானவர்" என கருதப்பட்டு, கெல்லியின் மரணத்திற்கு காரணமான உடனடிச் சூழ்நிலைகளை குறித்து மட்டும் விசாரணை செய்ய வேண்டும் என்று அவரது விசாரணையின் வரம்பு குறுக்கப்பட்டு கொடுக்கப்பட்டது. அரசாங்கம் மற்றும் சிவில் துறையின் முன்னணி நபர்களிடமிருந்து வாய்மொழி மற்றும் எழுத்து வழி வாக்குமூலங்கள் அவர் பதிவு செய்து கொண்டாலும், அதுவும் பிளேயர் உள்ளிட்டோரிடமிருந்தே இவ்வகையான விசாரணை நடத்தப்பட்டாலும் விஷயம் செப்டம்பர் 2000- உளவுத்துறை ஆவணத்தைப் பற்றியதாகத்தான் இருந்தது. ஹட்டனின் தீர்ப்பும் இந்த ஆரம்ப தடையிடலுடன் முற்றிலும் ஒத்ததாக இருந்தது.

இந்த விசாரணையைத் தொடர்ந்து கவனித்து வந்த பல விமர்சகர்கள் ஹட்டனின் இறுதித் தீர்ப்பு மீது அவநம்பிக்கையை வெளிப்படுத்தினார்கள். அவர் முன் வைக்கப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் பார்த்தாலே- பெருந்திரளான சாட்சியங்கள் அரசாங்கம் தன் வசமுள்ள புலனாய்வுத் தகவல்கள் சந்தேகத்துக்குரியவை என்பதைத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும் மற்றும் கெல்லி குறிப்பிட்டது போல ஆவணத்தை "கவர்ச்சி ஆக்குதற்கு" விழைந்திருந்தது- ஹட்டன் முடிவுகள் அறிவுக்குப் பொருத்தமானதாக இல்லை. ஆனால் அரசியல் ரீதியாகப் பார்த்தால், தனக்கு இடப்பட்ட பணியை ஹட்டன் சிறப்பாக செய்து முடித்திருக்கிறார்.

அவரது அபத்தமான முடிவுக்கு வருவதற்கு வேண்டி --பிளேயரும் அரசாங்கமும் எந்தத் தவறும் செய்யவில்லை மற்றும் பதிலாக பி.பி.சி-யும் கெல்லியும் தான் தவறிழைத்தவர்கள் என்று கண்டிப்பதற்கு ஹட்டன் கூறிய விளக்கம் இதுதான்-- பேரழிவு ஆயுதங்கள் ஈராக்கில் காணப்படவில்லை என்ற புறநிலை உண்மை மற்றும் அரசாங்கத்தின் கூற்றுக்கள் தவறென நிரூபிக்கப்பட்டுவிட்டன என்பததெல்லாம் கமிஷனின் விசாரணைக்கு சம்பந்தமில்லாதவை! விஷயம் என்னவெனில் பிளேயர் தவறான புலனாய்வுத்துறை தகவல்களை தெரிந்தே உபயோகப்படுத்தினாரா என்பதுதான். அந்த நேரத்தில் பிரதமரின் மனதில் எப்படிப்பட்ட எண்ண ஓட்டங்கள் இருந்தன என்பது குறித்து ஆதாரபூர்வ தகவல்கள் ஏதும் இல்லாததால் சந்தேகத்தின் பலன் அவருக்கு அளிக்கப்பட வேண்டும் மற்றும் அரசியல் ரீதியில் சரியானது.

பிளேயரின் புலனாய்வுத் துறையினரின் கூற்றுக்கள் பற்றிய ஹட்டனின் அறியொணாவாதம்- ஆதாரம் எதுவும் இன்றி, ஈராக் பேரழிவு ஆயுதங்களை வைத்திருப்பது உண்மையானதும், உடனடி ஆபத்தை விளைவிக்க கூடியது என்பதில் நம்பிக்கை வைத்து அராசங்கமும் பாதுகாப்பு துறைகளும் செயல்பட்டன என்று அறிவிப்பதில் அவரைத் தடுக்கவில்லை என்று கூறுகிறது. அது அவர்களது "நம்பகத்தன்மையை" சந்தேகிப்பது அனுமதிக்கமுடியாத விஷயம் என்று கண்டனம் செய்வதிலிருந்தும் அவரைத் தடுக்கவில்லை.

கெல்லியின் மரணத்தை பற்றியும்கூட அரசாங்கம் குற்றமற்றதாக காணப்படுகிறது மற்றும் அதன் அதிகாரிகளும் மிகவும் நியாயமான முறையில் நடந்து கொண்டிருக்கிறார்கள் என முடிவை தெரிவித்திருக்கிறார். அரசாங்கம் தன்னை விமர்சிப்பவர்களை வாய்மூடும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக விஞ்ஞானி கெல்லியை வெளியேற்றி இருக்கிறது என காட்டும் சாட்சியங்களையெல்லாம், காம்பெல் தனது நாட்குறிப்பில் கெல்லியின் பெயரைக் குறிப்பிட்டது "ஜில்லிகனை பாதிக்கும்" என்று எழுதியிருப்பது உட்பட அனைத்தையும் ஹட்டன் நிராகரித்து இருக்கிறார்.

ஒட்டுமொத்த பழியும் ஜில்லிகன் மற்றும் பி.பி.சி-யின் மேலும் போடப்பட்டது.

ஜில்லிகன் தனது பேட்டியில், ஈராக் தன்னிடமுள்ள பேரழிவு ஆயுதங்களை 45-நிமிடத்திற்கு தயார் நிலைக்கு கொண்டுவர முடியும் என்ற புலனாய்வுத் துறையின் தகவல் தவறானது என்று அரசாங்கத்துக்கு "ஒருவேளை" தெரிந்திருக்கலாம் என்று கூறியதானது அரசாங்கம் மற்றும் புலனாய்வுத்துறை ஆகியவற்றின் நாணயத்தை இழிவுபடுத்தும் செயலை செய்துவிட்டதாக காணப்பட்டார். பி.பி.சி-யின் ஆளுநர்கள் குழு "குறைபாடுடைய" ஆசிரிய அங்கத்தவர்களை கொண்டிருக்கிறது, ஏனெனில் இவரது செய்தியை அனுமதித்தது மற்றும் காம்ப்பல்லின் பழிவாங்கும் வேட்டையிலிருந்து தங்களது நிருபரை காப்பாற்ற முனைவது கண்டனத்துக்குரியது என்று ஹட்டன் அறிக்கை கூறியிருக்கிறது.

கெல்லியின் மரணத்திற்கு துரதிருஷ்ட வசமாக அவரே "பகுதி காரணமாக" இருந்தார் என்றும் கூட ஹட்டன் முடிவுரைத்தது, தனது ஆட்களின் மீதே பிரிட்டிஷ் அரசு மிக மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதை கோடிட்டுக் காட்டுகிறது.

இப்படியாக உண்மையானது திருப்பி மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.

ஜில்லிகனும் பி.பி.சி-யும் ஒரு நாள் அதிகாலை நேர நிகழ்ச்சியின்போது ஒரே ஒரு முறை ஒருநிமிடம் ஒலிபரப்பப்பட்ட வார்த்தைக்காக பதில் சொல்லியே ஆக வேண்டும் என பல விதங்களில் வற்புறுத்தப்படுகின்றனர். இதற்கு நேரெதிராக அரசாங்கமும், அதன் ஒற்று (Spy) அமைப்பின் தலைமை அதிகாரிகளும் உண்மையற்ற அறிக்கைகளை திரும்பத் திரும்ப சொல்லி நாட்டை தேவையற்ற ஒரு போருக்கு இழுத்துவிட்டு, அதன் மூலம் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களையும் கிட்டத்தட்ட அறுபது பிரிட்டிஷ் இராணுவ வீரர்களும் சாவதற்குக் காரணமாக இருந்து, ஒரு நாட்டை சின்னா பின்னப்படுத்தக் காரணமான அவர்கள் அதற்காக எந்தப் பதிலும் சொல்லத் தேவையில்லை என்று கமிஷன் கூறியிருக்கிறது.

பி.பி.சி-க்கு எதிரான இந்தத் தீர்ப்பு, பிரிட்டனில் அதன் எதிர்காலத்திற்கும், பரவலாக பத்திரிகை சுதந்திரங்ளுக்கும் மிகப்பெரிய தாக்கங்களை கொண்டிருக்கிறது. பொதுஜன செய்தி ஒளிபரப்பாளர் என்கிற பி.பி.சி-யின் தன்மையே வரும் 2006-ம் ஆண்டு அதன் விதிமுறை புதுப்பித்தலின்போது கேள்விக்குரியதாக்கப்படலாம். வியாபார ரீதியிலான பல ஒலிபரப்பு மையங்களுக்கு அதிக அளவில் சந்தைப் பங்கீடு அளிக்கப்படலாம். இதனால் மிகப்பெரிய இலாபமடையக் கூடியவர்களில் மிக முக்கியமானவர் தற்போதைய அரசாங்கத்தின் மிகத்தீவிர ஆதரவாளரான ரூபர்ட் முர்டொக் ஆவார்.

ஹட்டனின் அறிக்கை, பிரிட்டனில் ஜனநாயக உரிமைகளின் கறுப்பு தினத்தைக் குறிக்கிறது என்று கூறலாம். பொதுமக்கள் நலன் கருதி செய்தி வெளியிடுவதற்கு உரிமை இல்லை என்ற ஹட்டனின் தீர்ப்பினால் ஒரு விஷயம் தெளிவாகிறது. பொதுஜன விருப்பத்துக்கு, ஆளும் அரசியல் செல்வந்த தட்டிடையே இருக்கும் அவமதிப்பை ஹட்டனின் தீர்ப்பு உறுதிப்படுத்தியிருக்கிறது. ஒரு சமயம் உழைக்கும் மக்கள், அரசு மற்றும் அரசாங்கத்தின் மீது சில வரையறை கட்டுப்பாடுகளை செலுத்தக் கூடிய அத்தனை வழிகளும் அடைக்கப்பட்டு விட்டதையே ஹட்டனின் முடிவு நிரூபிக்கிறது.

அரசாங்கத்தின் "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்று அழைக்கப்படுவதுடன் மக்களின் சிவில் உரிமைகளுக்கு எதிரான தாக்குதலின் உள்ளடக்கத்தில் - யாரை வேண்டுமென்றாலும், எவ்வளவுகாலம் வேண்டுமென்றாலும் சிறையில் வைப்பதிருப்பதில் இருந்து அவசர நிலை பிரகடனம் செய்ய வேண்டுமென்றால் அதற்குப் பாராளுமன்ற ஒப்புதல் தேவையில்லை என்பன போன்ற சட்டங்களை இயற்ற திட்டமிடுவது வரையில் அவரது முடிவுகளை வைத்து பார்க்கப்பட்டாக வேண்டும்.

உண்மையாகவே பிரிட்டனுக்கு பகைவர் படையெடுப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருந்த இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் கூட இந்த அளவுக்கு அடிப்படை ஜனநாயக சுதந்திரங்கள் அகற்றப்படவில்லை.

இந்த நிலைமைக்கு மொத்த காரணம் பிளேயர் மற்றும் அவரது மந்திரிசபையின் தவறுகள் என்று மட்டுமே சொல்லிவிட முடியாது. அரசாங்கம், தனது போர் வெறிக்கூச்சல், மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் ஆகியவற்றிற்கு எந்தவிதமான எதிர்ப்பையும் சந்திக்கவில்லை, நீதித்துறையாகட்டும், எதிர்கட்சிகளாகட்டும், செய்தி ஊடகங்கள் மற்றும் எந்தவிதமான பிரிவுகளாகட்டும் எதிர்ப்பு எங்கிருந்தும் வரவில்லை. இதற்கு முன்னால் ஆட்சி செய்து கொண்டிருந்த கன்சர்வேட்டிவ் கட்சி விட்டுச் சென்ற பாரம்பரியத்தை இந்த அரசாங்கமும் தொடர்ந்து எந்தவித எதிர்ப்புமின்றி செய்து வருகிறது.

மறைமுக சர்வாதிகாரத்தை நிலைநிறுத்த அதற்கான சட்ட வரையறைகளை அழுத்தமாக சமூக மற்றும் பொருளாதார செயல்பாடுகளில் வெளிப்படுத்திக்கொள்கிறது. அது ஒரு சர்வதேச நிகழ்வுப்போக்கை, அதன் மிக முடிவுற்ற வெளிப்பாடாக ஐக்கிய அமெரிக்க அரசுகளில் வெளிப்படுத்துகிறது.

அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரம், மிகப்பெரிய செல்வந்த ஒருசிலவராட்சியின் கைகளில் குவிந்து கிடக்கிறது, அது வரலாற்று ரீதியில் எப்போதும் இல்லாத அளவு சமூக ஏற்றத்தாழ்வுகள் காணப்படும் ஒரு சமுதாயத்தை ஆண்டு கொண்டிருக்கிறது. பிரிட்டனின் பெரும் பணக்காரர்கள் 1000-பேரின் ஒட்டு மொத்த தனிச்சொத்துக்களின் மதிப்பு 155-பில்லியன் பவுண்டுகளுக்கும் மேலாகும் இவற்றில் பெரும்பாலானவை பெரு நிறுவனங்களுக்கான வரியை பெருமளவில் குறைத்தும் பொதுமக்கள் நலனுக்கான செலவினங்களை பெருமளவில் வெட்டிய அரசாங்கத்தின் கொள்கையின் விளைவாக குவிந்தது. இம்மாதிரியான கொள்கைகளின் நோக்கம் பூகோள முதலீட்டாளர்களுக்கு ஏதுவாக மிகக்குறைந்த சம்பளம் பெறும் பணியாளர்கள் கொண்ட மேடையாக இந்த நாட்டை மாற்றுவதுதான்.

வர்க்க வேறுபாடுகள் மிக அழுத்தந்திருத்தமாகவும், ஆள்பவர் நலன்களுக்கும் ஆளப்படுபவர் நலன்ககளுக்கும் இடையிலான முரண்பாடுகள் உள்ள ஒரு நிலையில் ஜனநாயக செயல்பாடுகள் மெலிவுற்று நோய்பீடிக்கின்றன. மக்கள் தொகையில் பெரும்பாலோரை அரசியற் செயல்பாடுகளில் இருந்து விலக்கினால்தான் தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு நேரெதிரான நலன்களை கொண்ட ஆளும் செல்வந்த தட்டின் செயல்பாடுகளுக்கு ஆபத்து ஏதும் இராது.

பெரு முதலாளிகளுக்கு ஆதரவான இந்த செயல்திட்டம் அரசியல் அரங்கில் நெடுங்காலம் இருக்கும் எந்த கட்சிக்கும் பொது மக்களின் ஆதரவு இருக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்துகிறது. தொழிற்கட்சிக்கும் இது மிக நன்றாகவே பொருந்தும். இதனுடைய பாரம்பரிய ஆதரவாளர்களான தொழிலாள வர்க்கம்தான் வலதுசாரி கொள்கைகளின் இலக்காகும். என்னதான் தந்திரோபாய வேறுபாடுகள் இருந்தாலும், ஆளும் வர்க்கத்தினரின் அனைத்துப் பிரிவினரும் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களை அழிப்பதிலும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு வேலைத்திட்டங்களுடன் முழு உடன்பாட்டில் இருக்கிறார்கள்.

இதுதான் ஹட்டனும் பிளேயரும் அத்தகைய தங்களது மேற்பூச்சு வேலையால் வெற்றியடைய முடியும் என நம்புவது ஏன் என்பதை விளக்க முடியும்.

இதிலிருந்து பல விஷயங்களை நாம் புரிந்து கொண்டாக வேண்டும். உழைக்கும் மக்கள் போரை எதிர்க்கவும் தங்களது அடிப்படை சமூக நலன்களையும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாப்பதற்கும் அரசு நிறுவனத்தின் எந்தப் பிரிவினரிடமிருந்தோ அல்லது அந்த அரசுக்குள் இருந்து கொண்டு போர் பற்றி எதிர்ப்பு தெரிவிக்கும் அதிருப்தியாளர்களிடமிருந்தோ, எதையும் எதிர்பார்க்கக் கூடாது. அரசாங்கத்திற்கு எதிரான பொதுஜன பகைமையானது, ஒரு சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் ஒரு புதிய தொழிலாளர் கட்சியைக் கட்டி அமைப்பதன் ஊடாக சுதந்திரமான அரசியல் வெளிப்பாட்டை கண்டாக வேண்டும். இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக ஈராக்கை ஆக்கிரமித்திருக்கும் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை கட்டாயம் எழுப்பப்பட வேண்டும், மற்றும் போர்க் குற்றங்களுக்காக பிளேயர் மற்றும் புஷ் ஆகியோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்பட வேண்டும்.

See Also :

பிரிட்டன்: டாக்டர் கெல்லியின் மரணம் தற்கொலை என்பதை ஒரு நம்பிக்கைக்குரியவர் நிராகரிக்கின்றபடியால் மரணம் குறித்து மேலும் கேள்விகள் உள்ளன

ஹட்டன் விசாரணை: கண்துடைப்பு எல்லையை மீறிச்செல்வதாக பிரித்தானிய செய்தி ஊடகங்கள் எச்சரிக்கை

பிரிட்டன்: ஹட்டன் விசாரணையின் படிப்பினைகள்

ஹட்டன் விசாரணை: ஈராக்கியப் பேரழிவு ஆயுதங்கள் பற்றிய பிளேயர் அரசாங்கத்தின் பொய்கள் வெளிப்படுகின்றன

ஹட்டன் விசாரணை : பிரிட்டிஷ் உளவுத்துறை தலைவரின் சாட்சியம் ஈராக்கியப் போரைப்பற்றிய பொய்களை அம்பலப்படுத்துகிறது

ஹட்டன் விசாரணை: டாக்டர் கெல்லியும் வெளிவிவகாரகுழுவும் எவ்வாறு அரசாங்கத்தால் பயன்படுத்தப்பட்டனர்

பிரிட்டன்: ஹட்டன் விசாரணையின் அடிப்படையிலமைந்த அரசியல் பிரச்சனைகள்

Top of page