World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்திய உபகண்டம்

Behind the India-Pakistan ceasefire

இந்திய-பாகிஸ்தான் போர்நிறுத்தத்தின் பின்னணியில்

By Keith Jones
29 December 2003

Use this version to print | Send this link by email | Email the author

2002-ல் ஒரேயடியான போரின் விளிம்பிற்கே சென்றுவிட்ட அணு ஆயுத அரசுகளான இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமிடையில் பதட்டங்களை தணித்து சமரசம் செய்து வைப்பதற்கு அண்மை வாரங்களில் பரபரப்பான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நவம்பர் 26-ந்தேதி பொதுவான சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 14-ஆண்டுகளாக எல்லையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாட்டுப் படைகளும் தினசரி பீரங்கிகளால் சுட்டுக் கொண்டிருந்த நிலை முடிவுக்கு வந்தது. இந்த சண்டை நிறுத்தம் இந்தியா விற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே உள்ள சர்வதேச எல்லை மற்றும் சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிராந்தியத்தில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சியாச்சின் பனிப்பகுதி ஆகியவற்றிலும் அமலாகும். அதற்குப் பின்னர் இரு நாடுகளும் ரயில் மற்றும் விமானத் தொடர்புகளை மீண்டும் தொடக்க இணக்கம் தெரிவித்தன. டிசம்பர் 2001 ரயில், விமானத் தொடர்புகளை இந்தியா துண்டித்துக் கொண்டது. இரு நாடுகளுக்குமிடையில் சர்வதேச எல்லையில் கூட்டு இராணுவரோந்து நடவடிக்கை உள்பட "நம்பிக்கையை வளர்க்கும்" பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா, சீனா மற்றும் ஜப்பான் உட்பட எல்லாப் பெரிய அரசுகளும் இந்தப் போர் நிறுத்தத்தை வரவேற்றுள்ளன. புஷ் நிர்வாகம் தனது ''பயங்கரவாதத்துக்கு எதிரான போரில்'' பாகிஸ்தானின் இராணுவ ஆட்சியை முக்கிய கூட்டாளியாக ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்தியாவைத் தனது எதிர்கால மூலோபாய பங்குதாரராக இனங்காட்டியிருக்கிறது. இந்திய-பாகிஸ்தான் சமரச முயற்சிகளில் அதுவே முக்கிய சக்தியாக இயங்கிவருகிறது. அப்படி இருந்தும் இதுவரை இந்தச் சமரச முயற்சியில் வாஷிங்டன் தன்னுடைய பங்கை சூழலுக்கு இயைந்த செயல்திறமாக அது காண்கின்றது. மத்திய மற்றும் தென் ஆசியா பகுதிகளில் பெருகிவரும் தனது பொருளாதார மற்றும் இராணுவ வலிமையைப் பயன்படுத்தி இருதரப்பையும் சமரசப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஊக்குவித்து வருகிறது என்பது தெளிவாகத் தெரிகின்றபோதிலும், இருதரப்பையும் பேச்சுவார்த்தைக்கு மட்டுமே ஊக்குவித்து வருவதாக அமெரிக்கா அதிகாரிகள் கூறினர்.

ஏழு-நாடுகள் கொண்ட பிராந்திய மாநாட்டிற்கான தெற்காசிய அமைப்பு (South Asian Association for Regional Conference- SAARC) அமைப்பின் உச்சி மாநாடு இஸ்லாமாபாத்தில் ஜனவரி 4-ல் தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறவிருக்கிறது. அந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் இந்திய பாகிஸ்தான் தலைவர்கள் நேரடியாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என்பதில் இப்பொழுது அதிக நம்பிக்கை வைக்கப்படுகிறது.

இந்தியப் பிரதமர் வாஜ்பாயி இந்த மாத ஆரம்பத்திலேயே SAARC மாநாட்டில் கலந்து கொள்வதாக உறுதியளித்திருக்கிறார். பாகிஸ்தான் பிரதமர் ஜபருல்லா ஜமாலியுடனும், இராணுவ சர்வாதிகாரி பர்வேஸ் முஷாரஃப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானுடைய இராணுவ துருப்புகளின் தலைவரான, முஷாரஃப் 1999-ல் நடைபெற்ற ஆட்சிக்கவிழ்ப்பில் பங்கெடுத்துக் கொண்டு பின்னர் நாட்டின் ஜனாதிபதியாகவும் தன்னை ஆக்கிக்கொண்டார்.

பாகிஸ்தான் தலைவர்களை எதிர்பாராமல் சந்தித்துப்பேசுவதன் முக்கித்துவத்தை குறைத்தே வாஜ்பாயி மதிப்பிட்டார். 2001-டிசம்பர் முதல் பாகிஸ்தான் தொடர்பாக இந்தியா கொண்டுள்ள நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் வகையிலேயே வாஜ்பாய் கருத்து தெரிவித்தார். இந்திய பாராளுமன்றக் கட்டிடத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பொறுப்பு என்றும் "எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை" பாகிஸ்தான் கைவிட்டு, தன் வசமுள்ள காஷ்மீரிலிருந்து இந்தியாவிற்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் செயல்படும் தளங்களை களைந்தால்தான் பாகிஸ்தானுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று கண்டிப்பாக வாஜ்பாயி டிசம்பர் 25-ந்தேதி அறிவித்தார்.

வாஜ்பாயின் அறிவிப்பும் முஷாரஃப்பைச் சந்திப்பது தொடர்பாக அவரது தயக்கப்போக்கும் இந்திய பாகிஸ்தான் உறவுகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மையைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

வழக்கமான உறவுகளை நிலை நாட்டிக் கொள்வதற்கு இருதரப்பும் தெரிவித்துள்ள ஆலோசனைகளிலேயே ஆதிக்க மேலாண்மைப் போட்டிப் போக்கு தலைகாட்டுகிறது. ஆனால் அதே நேரத்தில் இரண்டு நாடுகளுமே வாஷிங்டனின் தயவைப் பெறுவதற்காக பதட்டங்களைத் தணிப்பதில் போட்டிப்போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. தெற்கு ஆசிய நாடுகளிடையே எல்லைக்கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் பொதுவான நாணயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென வாஜ்பாயி கருத்துத் தெரிவித்த சில நாட்களுக்குப் பின்னர் காஷ்மீரில் பொதுமக்கள் கருத்துக்கணிப்பிற்கு பின்னரே இணைவது பற்றி முடிவு செய்வது என்ற ஐ.நாவின் பத்தாண்டுகால பழைய தீர்மானம் தொடர்பாக நீக்குப்போகுடன் நடந்து கொள்ள பாகிஸ்தான் தயாராக இருக்கிறதென முஷாரஃப் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

மிக முக்கியமாக, எல்லை கட்டுப்பாட்டு கோட்டைத் (LOC) தொடர்ந்து இந்தியா எல்லையில் வேலி அமைத்து வருவதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஆனால் அந்த வேலி இந்திய மற்றும் பாகிஸ்தான் ஆதிக்கத்தில் உள்ள காஷ்மீர் பகுதிகளின் எல்லைக்கு பலமைல்களுக்கு அப்பால் அமைக்கப்பட்டு வந்தாலும் நீண்ட காலத்திற்கு முன்னரே இந்த வேலிகள் அமைப்பது தொடங்கி விட்டாலும் நடப்பு சண்டை நிறுத்தம் செயல்படத்துவங்கும் முன்னரே நீடித்துக்கொண்டிருந்த பீரங்கிச் சண்டைகளின் காரணமாக அந்தப் பணி நிறைவேறவே முடியவில்லை.

ஆளும் செல்வந்த தட்டின் ஆழமாக- வேரூன்றிய எதிர்ப்பு

இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் பதட்டங்களைத் தணிக்க வேண்டும் என்பதில் பொதுக்களிடையே வலுவான கருத்து நிலவுகிறது. இந்திய மக்களில் பாகிஸ்தானுடன் பகைமையை நீடித்திருத்தலை ஆதரிப்போரை விட ''அமைதி முகாமை'' ஆதரிப்போரே அதிகம் என்பதை பிரதமர் வாஜ்பாயி பகிரங்கமாக சில மாதங்களுக்கு முன்னர் ஒப்புக்கொண்டிருக்கிறார். அப்படி இருந்தும் இரு நாடுகளிலும் உள்ள சக்திவாய்ந்த பிரிவினரான ஆளும் செல்வந்த தட்டுகள் சமசரப்போக்கிற்கு முட்டுக்கட்டையாகவே செயல்பட்டு வருகின்றன. சிறப்பாக காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக சமரசப் பேச்சு என்றதும் இவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கி விடுகின்றனர்.

1947-ல் மதவாத அடிப்படையில் இந்திய துணைக்கண்டம் பிரிக்கப்பட்டது. இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் முதலாளித்துவ வர்க்கங்கள் இருதரப்பு போட்டி அரசுகளுக்கு இடையிலான மோதலை தங்களது ஆளும் சித்தாந்தமாகவே உருவாக்கிக் கொண்டுவிட்டன. பாக்கிஸ்தான் ஆளும் செல்வந்த தட்டு, எல்லாவற்றுக்கும் மேலாக அரசியல்ரீதியில் வலுவான இராணுவ-பாதுகாப்பு அமைப்பு, இந்தியாவில் முஸ்லீம் பெரும்பான்மையினர் உள்ள ஒரே மாநிலம் காஷ்மீரை ''விடுதலை'' செய்வது ஒரு புனித கடமையாக இல்லாவிட்டாலும், தேசிய கடமையாகக் கருதி செயல்பட்டு வருகின்றது. இதற்கிடையில், இந்தியாவில் உருவாகும் எந்த உள்நாட்டுப் பிரச்சனையாக இருந்தாலும், இந்திய ஆட்சியாளர்கள் அதற்கு "வெளிநாட்டு பின்னணி" என்று பாகிஸ்தான் மீது பழிபோடும் போக்கு நீடித்துக்கொண்டிருக்கிறது. 1947-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட நாட்டு எல்லைகளை எவ்வித கேள்விக்கும் உள்ளாக்குவதே பல்தேசிய இந்திய ஒற்றுமைக்கு சகிக்கமுடியாத அச்சுறுத்தல் என்ற அரசாங்கக் கொள்கைக்கு அதனை ஓர் உரைகல்லாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இன்றைய தினம் ஆளும் ஆட்சியாளர்களில் உள்ள குழுக்கள் தீவிர பேரினவாதத்துடனும், இராணுவவாதத்துடனும் பலமாய் இனம்காட்டிக் கொண்டவை, ஏதாவது சமரச ஏற்பாடு உருவானால் இருதரப்பிலுமே அவரவர் பாரம்பரியமாக சார்ந்துள்ள முக்கிய பகுதியினருடன் நேரடியாக மோதிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

இந்தியாவில் தற்போது ஆளும் தேசிய ஜனநாயக முன்னணியில் (NDA) உள்ள இந்து மேலாதிக்க கட்சியாக உள்ளது பாரதிய ஜனதா கட்சி (BJP) ஆகும். பிஜேபி- யும் அதன் முன்னோடியான ஜனசங்கமும் இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தில் ஜம்மு காஷ்மீர் மாகாணத்திற்கு வழங்கப்பட்டுள்ள மட்டுப்படுத்தப்பட்ட தன்னாட்சி உரிமைக்கேகூட தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்தன, பாகிஸ்தான் மீது ''மிதமான போக்கில்'' நடந்து கொள்வதாக தனது அரசியல் எதிரிகள் மீது குற்றம் சாட்டி வந்தன மற்றும் இந்தியாவில் மிகப்பெரும் அளவில் வாழ்ந்து வரும் முஸ்லீம் சிறுபான்மையினர் நாட்டிற்கு விசுவாசம் இல்லாதவர்கள் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என்று தொடர்ந்து குற்றம் சாட்டிவந்தனர். 1998-ல் ஆட்சிக்கு வந்தவுடன் BJP இந்தியாவை அணுசக்தி நாடாகப் பிரகடனப்படுத்தியது, சர்வதேசக் கண்டங்களையும் மீறி அணுகுண்டு வெடிப்புச் சோதனையை நடத்தியது, இந்தியாவின் ஆயுதப்படைகளைப் பெருக்கி வந்தது, தொடர்ந்தும் பெருக்கிக் கொண்டிருக்கிறது. BJP தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி-1999-ல் நடைபெற்ற மறுதேர்தலில், காஷ்மீரில் கார்கில் பகுதியில் ஆறு மாதங்களுக்கு மேல் ஊடுருவிய பாகிஸ்தான் துருப்புக்களை மதிநுட்பமான அரசியல் தலைமையின் பலனாக இந்தியா பெரிய இராணுவ பூகோள அரசியல் வெற்றி பெற்றதாக பிரச்சாரம் நடத்தி அந்தத்தேர்தலில் வெற்றி பெற்றது.

2001-செப்டம்பரில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக புஷ் நிர்வாகம் கடைப்பிடித்த அணுகுமுறையைப் பின்பற்றி 2001 டிசம்பரில் இந்திய நாடாளுமன்றத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைப் பயன்படுத்தி பாகிஸ்தான் எல்லையில் இந்தியா 10 மாதங்களாக படைகளைக் குவித்தது, பயங்கரவாதிகளை அனுப்புகிறோம் என்பதை பாகிஸ்தான் ஒப்புக்கொள்ள வேண்டும் அல்லது இந்தியாவின் படையெடுப்பைச் சந்திக்கவேண்டும் என்று இந்தியா கோரியது.

இதற்கிடையில் முஷாரஃப் தனது ஆட்சியை நிலை நிறுத்துதற்கே இராணுவ பாதுகாப்புப் படைப்பிரிவுகளையும் இந்தியாவுக்கு எதிரான குறுகிய நோக்கையும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை புரந்துவரும் பாகிஸ்தானிய ஆளும் செல்வந்த தட்டினையும் நம்பி இருக்கிறார். 1999-ல் கார்கில் பகுதியில் நடைபெற்ற ஊடுருவல்களுக்கு மூலகாரணமாக இருந்தவர். அமெரிக்க நிர்பந்தங்களுக்கு அடிபணிந்து நவாஸ் ஷெரீப் கார்கில் நடவடிக்கைகளை இடையில் கைவிட்டு விட்டார் என்ற அவரது நம்பிக்கையும் கார்கில் நடவடிக்கை நிறைவேறாமலே முடிவுற்றதும், முஷாரஃப் பாக்கிஸ்தான் பிரதமரை வெளியேற்றிவிட்டு ஆட்சி அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொள்ள முடிவு செய்ததற்குப் பிரதான காரணங்கள் ஆகும். அமெரிக்காவின் தீவிர நிர்பந்தங்கள் காரணமாகத்தான் முஷாரஃப் தலிபான் ஆட்சிக்குத் தனது ஆதரவை விலக்கிக்கொண்டார் மற்றும் பாகிஸ்தானில் ஆயுதங்தாங்கிய இஸ்லாமிய குழுக்கள் மீது திரும்பத்திரும்ப நடவடிக்கைகளை எடுத்தார். பாக்கிஸ்தான் நாடாளுமன்றத்தில் இடம் பெற்றுள்ள இஸ்லாமிய எதிர்கட்சிக் குழுக்களான முத்தாஹிதா மஜ்லிஸ் அமல் அல்லது ஐக்கிய நடவடிக்கை முன்னணியுடன் அண்மையில் அரசியல் உடன்படிக்கையொன்றைச் செய்து கொண்டார். 2001-02 போர் நெருக்கடி உருவான நேரத்தில் கூட இந்தியா தாக்குமானால் அதை முறியடிக்க அணு ஆயுதங்களை பாகிஸ்தான் பயன்படுத்தும் என்று அச்சுறுத்தினார்.

இவற்றிற்கெல்லாம் அப்பால் தற்போது 14-ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முதலாக சண்டை நிறுத்தம் செயல்படுத்தப்பட்டு வருகிறது, பெருமளவில் இந்தியாவுடன் பொருளாதார உறவுகள் கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தியாவுக்கும் ஈரானுக்கும் பாகிஸ்தான் வழியாக எரிவாயுக் குழாய் இணைப்புக்களை உருவாக்குவது குறித்து பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது தெளிவாகவே தனிப்பட்ட முறையில் முஷரஃப்பிற்கு ஆபத்தை ஏற்படக்கூடும். இப்போர் நிறுத்தம் காஷ்மீர் கிளர்ச்சிக்காரர்களோடு போர் புரிவதில் இந்தியாவின் கரத்தை வலுப்படுத்தும் தன்மை கொண்டது, அப்படி இருந்தும் முஷாரஃப் சமரச முயற்சியில் இதுவரை தொடர்ந்து ஈடுபட்டே வருகிறார்.

வாஷிங்டனுடைய பங்கு

போர் நிறுத்தம் மற்றும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆளும் செல்வந்த தட்டுகளுக்கிடையே அவர்களின் அரசுகளுக்கு உள்ளே உள்ள உறவுகள் பற்றியதில் கடுமையான பேரங்களில் இறங்கி இருப்பது பல்வேறு காரணிகளை உள்ளடக்கியதாகும். ஆனால் வாஷிங்டன் இதில் முக்கிய பங்களிப்புச் செய்திருக்கிறது.

குளிர் யுத்தத்தின்போது, வாஷிங்டன் பாகிஸ்தானோடு நெருக்கமான உறவு வைத்திருந்தது. கடந்த பத்துஆண்டுகளில் அமெரிக்கா இந்தியாவோடு 21-வது நூற்றாண்டில் பங்காளியாகச் சேர்ந்து கொள்வதில் அதிக நாட்டம் செலுத்தி வருகிறது. தென்கிழக்கு ஆசியா தொடர்பான பணிக்குழு அண்மையில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையைத் தயாரிப்பதில் வெளியுறவுகள் குழுவும் பங்கெடுத்துக் கொண்டது, வாஷிங்டனில் பெருமளவில் செல்வாக்குப் பெற்றுள்ள நிபுணர்கள் அடங்கிய இந்த வெளியுறவுகள் குழுவில் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் பணியாற்றிய பல முன்னாள் தூதர்கள் இடம்பெற்றுள்ளனர். ''முன்னர் அரைநூற்றாண்டாக இருதரப்பும் பகைமை பாராட்டி வந்ததைக் கருத்தில் கொண்டு நோக்கும்பொழுது இப்போது இந்திய அமெரிக்க உறவில் ஏற்பட்ட மாற்றம் மகத்தானது. வாஷிங்டனும் புதுதில்லியும் அதிகாரப்பூர்வ மற்றும் தனிப்பட்ட முறையில் தங்களது உறவுகளை விரிவாக்கி ஆழப்படுத்திக் கொண்டே சென்றால் 2010 அளவில் உலகின் மிகப்பெரும் இரண்டு ஜனநாயகங்களும் தங்களுக்குள் நியாயமான பங்காளித் தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்வதில் வெற்றி பெறமுடியும்'' என அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

கார்கில் சர்ச்சையின் போது 1999-ல் வாஷிங்டனின் போக்கில் இந்தியாவை ஆதரிக்கும் புதிய போக்கு முதலில் வெளிப்பட்டது. அன்றைய அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் நேரடியாகத் தலையிட்டு கார்கிலிலிருந்து பாகிஸ்தான் மற்றும் அது ஆதரிக்கும் படைகள் வெளியேற வேண்டும் என்று பிரதமர் நவாஸ் ஷெரீபைக் கேட்டுக் கொண்டார். பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் போர்வெறிக் கூச்சலுக்கு வாஷிங்டன் ஆதரவு காட்டும் விருப்பத்திற்கு ஓர் எல்லை உண்டு. 2001-2002 போர் மிரட்டலில் இந்தியா தோல்வியடைந்ததற்குக் காரணம் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஆப்கானிஸ்தானில் மேற்கொண்டுள்ள போர் முயற்சிகளுக்குக் குந்தகம் விளைவிக்கிற வகையில் இரு நாடுகளின் மோதல்கள் அணுகுண்டுகளை வீசிக்கொள்ளக்கூடிய அளவிற்கு முற்றிவிடக்கூடும், அது அமெரிக்க நலனுக்கு விரோதமாக இந்தியா செயல்பட்டதாகக் கருதப்பட வேண்டிவரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இஸ்லாமிய தீவிரவாதிகள் மீது பாக்கிஸ்தான் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அமெரிக்காவிற்கு அதிருப்தி நிலவினாலும், பாகிஸ்தானும் அல்கொய்தா இயக்கத்திற்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு, ஆப்கானிஸ்தானை அமெரிக்கா பிடித்துக் கொண்டதில் மற்றும் பொதுவாக எண்ணெய் வளம்மிக்க மத்திய ஆசிய மண்டலத்தில் அமெரிக்க செல்வாக்கு வளர்ந்து வருவதில் பாக்கிஸ்தான் ஒரு முக்கிய நாடாகவே இருந்து வருகிறது. மேலும், இந்திய பாகிஸ்தான் தகராறில், இந்தியா முடிவில்லாமல் தொடர்ந்து பாகிஸ்தானிற்கு இராணுவ நிர்பந்தங்களை கொடுத்து வருமானால் ஏற்கனவே பல்வேறு இன-மத குழுக்களால் பிளவுபட்டு நிற்கும் பாக்கிஸ்தான் கடன் சுமையால் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், பாகிஸ்தானில் வெடித்துச் சிதறும் குழப்பம் மத்திய, மேற்கு மற்றும் தெற்கு ஆசிய மண்டலங்கள் முழுவதிலும் ஸ்திரமின்மை பரவுதற்கு உதவக்கூடும் என்பதை உணருவதில், இந்தியாவில் இந்து பேரினவாத பிஜேபி-ல் பெரும்பான்மையினர் போலல்லாமல், அமெரிக்கா போதுமான அளவு தள்ளிநின்றே எச்சரிக்கையுடன் கவனித்து வருகிறது.

முன்னர் நாம் மேற்கோள் காட்டியுள்ள தெற்கு ஆசியா தொடர்பான பணிக்குழுவின் அறிக்கையின்படி, "அமைதியான நிலையான பாகிஸ்தான் அதன் பக்கத்து நாடுகளோடு அமைதியை நிலை நாட்டச் செய்வதில் அமெரிக்காவிற்கு பிரதான பொறுப்பும் கடமையும் இருக்கிறது", என்றாலும் பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் நிதி உதவிகளுக்கு, பாகிஸ்தான் IMF- கட்டளைப்படி தனியார்மயமாக்கலை நிறைவேற்றுவதில், பொது செலவினங்களைக் குறைப்பதில் மற்றும் ''பக்கத்து நாடுகளுக்கு எதிராக கிளர்ச்சிகளை கிளப்பிவிடும் குழுக்கள் தனது எல்லையைப் பயன்படுத்த பாகிஸ்தான் தடைவிதிக்க வேண்டும். அணு ஆயுத பரவல் தடை பொறுப்புக்களை நிறைவேற்றுவதில்" இஸ்லாமாபாத்தின் முன்னேற்றம் பற்றி அது உறுதிமொழி கொடுக்கப்பட வேண்டும் என்று அந்தப் பணிக்குழுவின் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

கடந்த காலத்தில், அமெரிக்கா இந்தியா-பாகிஸ்தான் தகராறை பெரும்பாலும் அலட்சியம் செய்துவந்தது. உண்மையிலேயே குளிர்யுத்த காலத்தில் பாகிஸ்தான் அமெரிக்காவிற்கு உதவும் வகையில் கட்டுப்பட்டு நடந்து வந்தது, அதனை நீடித்திருக்கச் செய்வதில் வாஷிங்டன் குளிர் யுத்த நலன்களைக் கொண்டிருந்தது. தற்போது வாஷிங்டன் தனது சுருதியை மாற்றிக் கொண்டிருக்கின்றது. அமெரிக்கா தனது முலோபாய நலன்களை காப்பதற்காக பாகிஸ்தான் ஆதரவோடு காஷ்மீரில் நடந்து வரும் கிளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பது முக்கியமானது என்று கருதுகின்றது. மேலும் காஷ்மீரில் அவற்றின் போட்டிக் கோருதல்கள் உள்பட, இந்தோ-பாக்கிஸ்தானிய மோதலுக்கு நீண்டகால அடிப்படையில் தீர்வுகாண வேண்டும் என்பதில் வாஷிங்டன் தற்போது ஆர்வம் செலுத்தி வருவதற்கு பல்வேறு அடிப்படைக்காரணங்கள் உண்டு. அமெரிக்காவிற்கு எதிரான இஸ்லாமிய தீவிரவாதிகளை ஆள்சேர்க்கின்ற ஒரு இடமாக காஷ்மீர் மாறிவிட்டது என்று வாஷிங்டன் நம்புகிறது. மேலும் இந்த மண்டலத்தில் அமெரிக்காவின் அபிலாசைகளை வெட்டி முறிக்கின்ற வகையில் இந்திய பாகிஸ்தான் தகராறு இழுத்துக் கொண்டே போகின்றது.

அமெரிக்காவின் பெரிய வர்த்தக நிறுவனங்கள் எதிர்காலத்தில் தங்களது வாணிபத்தை விரிவுபடுத்துவதற்கு முக்கியமான பகுதியாக இந்தியாவைக் கருதுகின்றன. தற்போது இந்தியா வெளிநாட்டு முதலீடுகளுக்கு எல்லாக் கட்டுப்பாடுகளையுமே தளர்த்திவிட்டது. அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவின் நுகர்வோர் சந்தையையும் இயற்கை வளங்களையும், அதற்கெல்லாம் மேலாக மிகப்பரவலாகவும் மலிவாகவும் கிடைக்கின்ற உழைப்பையும், பல்கலைக்கழக பயிற்சிபெற்ற மற்றும் பயிற்சி பெறாத ஊழியர் திறனையும் பயன்படுத்திக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் செலுத்திவருகின்றது. இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்குதாரராக அமெரிக்கா மாறிக்கொண்டே வருகின்றது. இதில் மிகப்பெரிய வர்த்தகமே தகவல் சேவைகள் என்று அழைக்கப்படுவதில்தான், இவற்றுள் தகவல்மையங்களில் (கால்-சென்டர்ஸ்) தொடங்கி கம்யூட்டர் மென் பொருள்கள் தயாரிப்பது வரை அடங்குகின்றது.

இதைவிட சற்றும் குறைவில்லாத முக்கியத்துவம் ஒன்று உண்டு. அமெரிக்க மூலோபாய நிபுணர்கள் இந்தியாவை சீனாவிற்கு எதிரான மிக முக்கியமான பொருளாதார மற்றும் இராணுவ எதிரெடை என்று அடையாளம் காட்டியுள்ளனர். சீனாவிற்கு இணையான எல்லைப் பரப்பை இந்தியா கொண்டிருப்பதுடன் சீனாவோடு பொதுவான எல்லைப்பகுதியாகவும் இருக்கின்றது. இதில் காஷ்மீர் மண்டலத்தில் அமைந்துள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த எல்லையும் அடங்கும். பல தசாப்தங்களாக சீனாவிற்கும் இந்தியாவிற்கும் எல்லைத் தகராறுகள் நிலவுகின்றன, 1962-ல் இது போராக வெடித்தது. ஏற்கனவே அமெரிக்கா இந்தியாவுடன் கணிசமான அளவிற்கு இராணுவ உறவுகளை வைத்திருக்கின்றது, இதில் இரு நாட்டு கப்பற்படைகளும் இராணுவமும் மேற்கொண்டுவரும் வழக்கமான பயிற்சிகளும் அடங்கும்.

பாகிஸ்தானின் குறுகிக் கொண்டுவரும் வாய்ப்புக்கள்.

இந்தியாவினால் போர் அச்சுறுத்தல், கடந்த இருபது ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஆப்கானிஸ்தான் கொள்கை சிதைந்துகிடப்பது மற்றும் இவற்றோடு சேர்த்து பாகிஸ்தான் தனது பட்ஜெட்டில் பாதித்தொகையை இராணுவச் செலவிற்காகவும், கடன் சேவைகளுக்காகவும் ஒதுக்கிக் கொண்டிருப்பதால் பாகிஸ்தான் அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு மிக எளிதில் அடிபணிந்து வருகின்றது. ஆனால் அமெரிக்க அழுத்தம் மட்டுமே இந்தியாவின்பாலான புதிய சமரசப்போக்கிற்கு காரணம் அல்ல. இஸ்லாமிய அடிப்படைவாத தலைமை இஸ்லாமாபாத்தில் இருந்து கொண்டு காஷ்மீர் கிளர்ச்சிக்காரர்களை உசுப்பிவிட்டுக் கொண்டிருப்பதால் பொதுமக்களது ஆதரவை பெருமளவிற்கு இழந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரச் செயல்களால் பாகிஸ்தானுக்குள் தேசிய இனங்களுக்கிடையே மோதல்களும், மத உணர்வுகளில் தீவிரத்தன்மையும் உருவாகி வருகிறது. எனவே பாகிஸ்தான் ஆளும் செல்வந்த தட்டு மிகப்பெரும்பாலோர் காஷ்மீர் புரட்சிக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் ஆதரவு தருவது அறிவுக்கு பொருந்துமா மற்றும் செல்தகைமை உடையதா என்று கேள்விக்குள்ளாக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

கடைசியாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானின் பொருளாதாரத்திற்கும் இடையே நிலவுகின்ற இடைவெளி அளவு தொடர்ந்து வளர்ந்து கொண்டிருந்தாலும் இந்தியாவிற்கு இணையாக இராணுவ வலிமையை அதிகமாக பெருக்கிக் கொண்டுவருவது மேலும் மேலும் சுமையாகி வருகிறது.

எனவேதான் முஷாரஃப் பாகிஸ்தானின் பலவீனத்தை கருத்தில் கொண்டு வாஷிங்டனின் விருப்பப்படி இந்தியாவுடன் பதட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்திருப்பதாக தோன்றுகிறது. அப்படிச் செய்வதன் மூலம் முஷாரஃப்பிற்கு புஷ் நிர்வாகத்தின் ஆதரவு தொடர்ந்து கொண்டே இருக்கும். அதே நேரத்தில் ''பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்'' பாகிஸ்தான் உதவி அவசியம் என்று அமெரிக்கா இன்னமும் கருதுகின்ற நிலைமையின் கீழ் மற்றும் இந்திய-பாக்கிஸ்தான் இரு நாடுகளுக்கும் இடையில் வல்லாண்மை இடைவெளி அதிகரிக்கும் முன்னரே புதுதில்லியுடன் ஒரு பேரத்தை உருவாக்கிக் கொள்ளலாம் என்று அவர் எதிர்பார்க்கிறார்.

பாரம்பரியமாக, ஜம்மு காஷ்மீரின் முன்னாள் சமஸ்தானம், பெரும்பான்மை முஸ்லிம் மக்களைக் கொண்ட எல்லைப் பகுதி ஆகையால், பாகிஸ்தானுடன் அந்த மாநிலம் சேர்வது தான் நியாயம் என்று வாதிட்டு வருகிறார்கள். தற்போது ஐ.நா-தீர்மானங்களில் கண்டுள்ள தீர்மானங்களில் விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகளுக்கும் குறைவாக ஒரு சமரசத்திற்கு வர இஸ்லாமாபாத் தயாராக இருக்கிறது என்று கூறுவதன்மூலம், காஷ்மீர் வகுப்புவாத அடிப்படையில் பிரிக்கப்பட்டு, முஸ்லிம்கள் பெருப்பான்மையாக வாழுகிற காஷ்மீர் பள்ளத்தாக்கை பாகிஸ்தானுக்கு கொடுத்துவிட்டு ஜம்மு மண்டலத்தின் பெரும் பகுதியை இந்தியாவிற்கு கொடுத்துவிடலாம் என்பது இஸ்லாமாபாத்தால் ஆதரிக்கப்படலாம் என்று கூறப்படுவது உள்பட, ஒரு மாற்றுத் தீர்வின் சாத்தியத்தை அவர் எழுப்புகிறார். ஆனால் இந்த ''சமரசத்திற்கு'' இந்திய ஆளும் செல்வந்த தட்டு சம்மதிக்குமா என்று நம்புவதற்கு எந்தவிதமான அடிப்படையும் இல்லை. தற்போது நடப்பு எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை சர்வதேச எல்லையாக மாற்றி தீர்வு காண்பதற்கு விரும்பியிருந்தது அது கடந்த காலத்தில் சமிக்கை கொடுத்திருந்தாலும், பாக்கிஸ்தான் வசமுள்ள மாகாணமான ஆசாத் காஷ்மீரும் சேர்ந்து இந்தியாவிற்கு கிடைக்கவேண்டும் என்று இந்திய ஆளும் வர்க்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

தெற்கு ஆசியாவின் மேலாதிக்க அரசாக அங்கீகாரம் பெறுவதற்காக இந்தியாவின் வேட்கை

இந்திய அரசாங்கம் 2001 டிசம்பரில் பராக்கிரம நடவடிக்கை---என்று பெயரிட்டு போர் ஆயத்தங்களை செய்தது. இவை தோல்வியடைந்து விட்டதாக தற்போது இந்தியாவின் அரசியல் மற்றும் அரசாங்க பாதுகாப்பு வட்டாரங்களில் பரவலாக கருத்து நிலவுகிறது. இராணுவத் தலைவர்களிடையிலும் மூலோபாய நிபுணர்களிடையிலும் துணிச்சலாக கருத்தை கூறுகின்ற சிலர் NDA அரசாங்கம் தனது உறுதியை இழந்துவிட்டது என்றும் போர் அச்சுறுத்தலை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றும் தாக்கியுள்ளனர். மிகப்பெரும்பாலோர் என்ன கருதுகின்றனர் என்றால் சுமார் 10 மாதங்கள் பத்து லட்சம் இராணுவ வீரர்களைத் திரட்டுவதற்கு செலவிட்ட பணமும் இதர ஆதாரங்களும் மிகப்பெரும் அளவிற்கு விரயமாகிவிட்டதாக கருதுகின்றனர். புஷ் நிர்வாகம் பயங்கரவாதத்தை தூண்டிவிடுவதாக பிரகடனம் செய்த அரசுகளுடன் நடந்துகொண்டதைப் போல இந்தியா இஸ்லாமாபாத்தை அச்சுறுத்தவும் அதனுடன் மோதவும் முடியவில்லை என்று இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையிலுள்ள சக்திகளின் உறவுகளுக்கு கோடிட்டுக்காட்டுவதற்கு மட்டுமே இறுதியில் அது சேவை செய்தது.

பராக்கிரம நடவடிக்கை மூலம், NDA- அரசாங்கம் புதிய ஆயுத அமைப்பு முறைகளை பெறுவதற்கு நடவடிக்கை எடுத்தது, இதன்மூலம் குறைந்த பட்சம் இராணுவ மூலோபாய நிலைப்பாடுகளில் பாகிஸ்தானைவிட உயர்திருக்கவும் ஆயுதப்போட்டி மூலம் பாகிஸ்தான் மேலும் பலவீனம் அடையும் என்றும் கருதியது.

NDA-அரசாங்கம் விரும்பிய இராணுவ மோதல் மூலோபாயம் தோல்வியடைந்து விட்டாலும் உடனடியாக குறுகிய கால அடிப்படையில் NDA அரசாங்கம் இதர வாய்ப்புக்களை ஆராய நிர்பந்திக்கப்பட்டது, அவற்றில் ஒன்றுதான் காஷ்மீர் பிரிவிணைவாதிகளுடன் உடன்பாட்டு பேச்சுவார்த்தை நடத்தும் சாத்தியக்கூறாகும். வரலாற்று அடிப்படையில் பார்த்தால் காஷ்மீர் மோதலில் எந்த வெளிநாட்டு குறுக்கீட்டுக்கும் இந்தியா கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ஆனால் டைம்ஸ் ஆஃப் இந்தியாவும் இதர அரசாங்கத்தின் குரல்களும் ஆலோசனை கூறியிருப்பதைப்போல் வாஷிங்டன் இந்தியாவுடன் மூலோபாய பங்காளி உறவு கொள்ள ஆர்வமாகயிருப்பதால் அமெரிக்கா பாகிஸ்தானை சமரச பேச்சு நடத்த மேசைக்கு கொண்டுவருவதற்கு, முடிந்தால் அமெரிக்காவே தலையிட்டு உதவுவதற்கு முன்வந்திருப்பதை ஏற்றுக்கொள்வது புத்திசாலித்தனமானது என்று ஆலோசனைகள் கூறப்பட்டு வருகின்றன.

அந்த பாதை மாற்றத்திற்கான வலியுறுத்தல்களில் இந்தியாவின் பெரு வர்த்தக நிறுவனங்களும் பெரும்பங்கு வகிக்கின்றது. ஆனால் இந்திய முதலாளித்துவ வர்க்கம் புதிதாக நம்பிக்கை தெரிவித்திருப்பது அளவுக்கு அதிகமானது என்பதில் சந்தேகமில்லை. பூகோள வர்த்தகத்தின் இந்தியாவின் பங்களிப்பு 1-சதவிகிதத்திற்கும் குறைவுதான் மற்றும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் சீனாவைவிட மிகக் குறைவாக பின்தங்கி உள்ளது. இந்தியா சர்வதேச வர்த்தக நாடாக பங்களிப்பு செய்ய முடியும் மற்றும் இலங்கையுடன் செய்துகொண்ட சுதந்திர வர்த்தக உடன்பாட்டு அனுபவத்தைக் கொண்டு பார்க்கும்போது இந்திய முதலாளித்துவ வர்க்கத்தினர் தெற்கு ஆசியாவில் வர்த்தக உறவுகளை பெருக்கிக் கொண்டு மேலாதிக்க நிலைக்கு வந்துவிட முடியும் என்று முடிவுக்கு வந்து விட்டனர். தனது இராணுவ வலிமையை வளர்ப்பதன் மூலம் தெற்கு ஆசிய மண்டலத்தில் தன்னை வல்லரசு நிலைப்பாட்டிற்கு உயர்த்திக் கொள்ள முடியும் என்ற புதுதில்லியின் வேட்கைக்கு இந்திய பொருளாதார மேலாதிக்கம் உறுதுணையாக அமையும்.

சென்ற செப்டம்பரில் நடப்பு போர் நிறுத்தம் வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்னர் இந்திய தொழில்கள் சம்மேளனம் (CII), "இந்திய பாகிஸ்தான் தலைமை நிர்வாகிகள் அரங்கை" உருவாக்கியது. இரு நாடுகளுக்கும் இடையில் சுதந்திர வர்த்தகத்தை நடத்த அந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. 2006-வாக்கில் தெற்கு ஆசிய வர்த்தக மண்டலத்தை உருவாக்கி விடவேண்டும். என்ற குறிக்கோளுக்கு உயிர்துடிப்பு தருவதற்காக CII பணியாற்றி வருகின்றது. அதே நேரத்தில் இந்தியா இஸ்லாமாபாத்திற்கு மேலும் நிர்பந்தம் கொடுக்க முயன்று வருகின்றது. துணைக்கண்ட வர்த்தக மண்டலத்தை உருவாக்க வேண்டுமென்று 'SAARC ஆலோசனைகளை உயிர்ப்பிப்பதற்கு பாகிஸ்தான் தடையாக இருக்குமானால் இதர SAARC உறுப்பு நாடுகளுடன் இந்தியா தனிப்பட்ட முறையில் இருதரப்பு வர்த்தக உடன்படிக்கைகளை உருவாக்கிக் கொள்ளும் என்று பாகிஸ்தானை இந்தியா அச்சுறுத்தி வருகிறது.

ஆக சமரசம் மற்றும் சமாதானம் என்ற பேச்சிற்கு பின்னணியில் இதில் சம்மந்தப்பட்ட மூன்று பிரதான நாடுகளான அமெரிக்கா பாகிஸ்தான் மற்றும் இந்தியா தங்களது சூறையாடும் தேசிய நலன்களை கடைபிடித்து வருகின்றன.

1947-ல் இந்திய துணைக்கண்டம் பிரிக்கப்பட்டது, இருபதாம் நூற்றாண்டில் நடந்த மிகப்பெரிய துயரச்சம்பவங்களில் ஒன்றாகும். அந்தத் துயர நிகழ்ச்சிகளில் 20 லட்சம் மக்கள் மாண்டார்கள், 140-லட்சம் மக்கள் வீடு வாசல்களை இழந்து பல தலைமுறைகளாக பகைமை பாராட்டியே வாழ்ந்து வருகின்றனர், அந்தப் பகைமையினால் மூன்று போர்கள் நடந்தன மற்றும் தற்போது தெற்கு ஆசியாவையே அணு ஆயுதப் போரில் சிக்கவைக்கும் அளவிற்கு அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தனது பிரித்தாளும் மூலோபாயத்தால் தெற்கு ஆசியாவில் இன-பகையை தூண்டிவிட்டதற்கு பெரும் பொறுப்பு வகிக்கின்றது. ஆனால் பிரிவினைக்கு முன்மொழிந்தவர்களும், அதனை செயல்படுத்தியவர்களும் தெற்கு ஆசிய முதலாளித்துவ அரசியல் பிரதிநிதிகளான இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களும் முஸ்லீம் லீக் தலைவர்களும்தான் இவர்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தை கருச்சிதைத்து விட்டார்கள். அறுபது ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த துணைக் கண்டத்தின் வளங்கள் பகிர்ந்து கொள்ளப்படுவதால் முன்வைக்கப்படும் பிரச்சினைகளுக்கு நியாயமான மற்றும் முற்போக்கான தீர்வு, ஏகாதிபத்தியம் மற்றும் போட்டி தேசிய முதலாளித்துவ வர்க்கம் இவற்றுக்கெதிரான ஒரு பொதுப் போராட்டத்தில், ஒரு தெற்காசிய ஐக்கிய சோசலிச ஐக்கிய அரசுகளை நிறுவும் நோக்கத்துடன் தொழிலாள வர்க்கம் தலைமை ஏற்று நடத்தும் ஒரு போராட்டத்தில், இந்த துணைக்கண்டத்தில் இடம் பெற்றுள்ள பல்வேறு தேசிய இன மற்றும் மதக்குழுக்கள் ஒன்றிணைக்கப்படுவதன் மூலமே ஆகும்.

Top of page