World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

No evidence of Iraq-Al Qaeda ties: 9/11 commission undermines another Bush war lie

ஈராக் - அல்கொய்தா தொடர்புகளுக்கு எந்தவிதமான சான்றும் இல்லை: 9/11 கமிஷன் புஷ்ஷின் மற்றொரு பொய்க்கு வேட்டு வைக்கிறது

By Patrick Martin
18 June 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஜூன் 16 ல் வெளியிடப்பட்ட செப்டம்பர் 11 விசாரணைக் கமிஷன் அறிக்கையானது, புஷ் நிர்வாகம் ஈராக் மீது ஆக்கிரமித்துக் கொண்டதை நியாயப்படுத்தும் மற்றொரு பொய்யை அம்பலப்படுத்துவதாக அமைந்துள்ளது. நியூயோர்க்கிலும், வாஷிங்டனிலும் செப்டம்பர் 11 ல் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈராக்கிற்கு எந்த விதமான பங்களிப்பும் இல்லை மற்றும் அல்கொய்தாவிற்கும், ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹூசேனுக்கும் இடையில் எந்தவிதமான ''ஒத்துழைப்பு உறவும் '' இல்லை என்பதை இந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது.

இந்த 12 பக்க அறிக்கையானது, நூற்றுக்கணக்கான ஆவணங்கள் மற்றும் சாட்சிகள் கொடுத்துள்ள வாக்குமூல சான்றுகளின் சுருக்கமாக இருப்பதோடு, அதில், கமிஷன் அலுவலர்களின் பொதுக்கருத்து மட்டுமல்ல தற்போது பணியாற்றிவரும் CIA, FBI மற்றும் இதர புலனாய்வு அதிகாரிகளின் கருத்தும் உள்ளது. ஈராக்கிற்கும், அல்கொய்தாவிற்கும் இடையில் தற்செயலாக நிலவிய தொடர்புகளை குறிப்பாக 1991 முதல் 1996 வரை ஒசாமா பின்லேடன் சூடானில் தங்கியிருந்த காலத்தில் நிலவிய தொடர்புகள் பற்றி குறிப்பிட்ட அறிக்கை: ''ஈராக்கும், அல்கொய்தாவும் கூட்டுச்சேர்ந்து அமெரிக்காவிற்கு எதிராக தாக்குதல் நடத்தின என்பதற்கான எந்தவிதமான நம்பகத்தன்மையுள்ள சான்றும் எங்களிடம் இல்லை'' என்று முடிவு கூறியிருக்கிறது.

இந்த விசாரணைக் கமிஷன் முன் சாட்சியமளித்த FBI மற்றும் CIA வின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை நிபுணர்கள், செப்டம்பர் 11 தாக்குதல்களில் பின்லேடனுக்கும், சதாம் ஹூசேனுக்கும் இடையில் தொடர்புகள் நிலவியதற்கு எந்தவிதமான சான்றும் இல்லை அல்லது ஈராக்கிற்கு எந்தவிதமான தொடர்புகளுமில்லை என்று அறிக்கையின் முடிவுகளை ஏற்றுக்கொண்டனர்.

இந்தப் பொதுக் கருத்தானது, அறிக்கை வெளியிடப்பட்ட நேரத்தில் புஷ்ஷும், செனியும் வெளியிட்ட கருத்துக்களை அப்பட்டமாக மறுப்பதாக அமைந்திருக்கிறது. திங்களன்று வலதுசாரி சிந்தனையாளர் குழுவினர் மத்தியில் உரையாற்றிய செனி, சதாம் ஹூசேன் ''நீண்டகாலமாக அல்கொய்தாவுடன் உறவுகளை ஸ்தாபித்து வந்திருக்கிறார்'' என்று அறிவித்தார். அந்தக் கூற்றை நிலைநாட்டுகிற வகையில் செவ்வாயன்று புஷ், ஈராக்கில் பல்வேறு குண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கு ஏற்பாடு செய்தவர் என்று குற்றம்சாட்டப்பட்ட, அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் என்று நிர்வாகம் கூறும் அபு முசாப் சர்க்காவியின் (Abu Musab Zarqawi) பங்களிப்பை மேற்கோள் காட்டினார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் உண்மையாக இருந்தாலும் கூட, அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்துக் கொள்ளும் முன்னர் அல்கொய்தாவுடனான உறவுகள் பற்றி எதையும் நிரூபிக்கும் தன்மை கொண்டதாக இருக்கவில்லை. சர்க்காவி ஒரு பாலஸ்தீனியர் என்று கூறப்படுகிறது. அவர் ஆப்கானிஸ்தானில் CIA ஆதரவுபெற்ற இஸ்லாமிய அடிப்படைவாதிகளோடு சேர்ந்து போரிட்டு கடுமையாக காயமடைந்தார். பின்னர் பாக்தாத்தில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால், அமெரிக்கா ஆக்கிரமிப்பு நடத்திய பின்னர் பயங்கரவாத நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டதற்கு எந்தவிதமான அடையாளமும் இல்லை.

சர்க்காவி தொடர்பாக ஊடகங்களில் வந்துள்ள செய்திகள் பற்றி சந்தேகங்கள் நிலவுகின்றன. அப்படி ஒரு மனிதர் உண்மையாக இருக்கிறாரா என்பது தொடர்பாக சந்தேகம் நிலவுகிறது. அமெரிக்க அரசாங்கம் தந்திருக்கின்ற அவரது வாழ்க்கை குறிப்பைக் கொண்டு பார்க்கும்போது, அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக ஈராக்கில் நடைபெற்று வரும் எதிர்ப்பு கிளர்ச்சிகளுக்கு இந்த பயங்கரவாத மனிதன்தான் பொறுப்பு என்று புஷ் நிர்வாகம் பூச்சாண்டி காட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறாரோ என்று சந்தேகம் ஏற்படுகிறது.

9/11 கமிஷனர்களில் ஒருவரான குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பிரெட் பீல்டிங் என்பவர், ரீகன் நிர்வாகத்தில் வெள்ளை மாளிகையில் வழக்கறிஞராக பணியாற்றியவர் ஆவர். அவர், விசாரணைக் கமிஷன் அலுவலக அறிக்கை மற்றும் ஈராக்-அல்கொய்தா தொடர்பு குறித்து புஷ் நிர்வாகத்தின் கூற்றின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட முயன்றபோதிலும், அவரது தலையீட்டுக்கு எதிரான விளைவே அங்கு ஏற்பட்டது.

கென்யாவிலும், தன்சானியாவிலும் அமெரிக்கத் தூதரகங்கள் மீது 1998 ல் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது தொடர்பாக, அல்கொய்தா உறுப்பினர்கள் மீது நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது குற்றச்சாட்டில் பயன்படுத்தப்பட்ட வாசகங்களில் குறிப்பிடப்பட்ட ஈராக்குடனான அல்கொய்தா தொடர்பு பற்றி அமெரிக்க வழக்கறிஞர் பாட்ரிக் பிட்ஸ்ஜெராட் என்பவரிடம் பிரெட் பீல்டிங் ஒரு கேள்வியைக் கேட்டார். அதற்கு, அந்த வழக்கை மேற்பார்வையிட்ட பிட்ஸ்ஜெராட், ஈராக்குடனான அல்கொய்தாவின் உறவுகளை உறுதிப்படுத்துவதற்கு புலனாய்வு அதிகாரிகளிடம் சான்று இல்லாததால் அந்தக் குறிப்பு அடுத்து வந்த குற்றச்சாட்டில் கைவிடப்பட்டதாக தெரிவித்தார்.

இந்த அறிக்கை புதன்கிழமை காலை வெளியிடப்பட்டதிலிருந்து, அமெரிக்க அதிகாரிகள் புஷ் நிர்வாகத்தின் நம்பகத்தன்மை மீது விழுந்த அடியின் வேகத்தை மட்டுப்படுத்த இதர போலியான கூற்றுக்களை கூறிவருகின்றனர். அவர்கள், செப்டம்பர் 11 ஈராக் நேரடியாக சம்மந்தப்பட்டிருந்தது என்று புஷ் மற்றும் செனி எப்போதுமே கூறவில்லை என்றும், அல்லது அல்கொய்தாவோடு நெருக்கமான உறவு கொண்டிருந்தது என்று கூறவில்லை என்றும் அறிவித்தார்கள். அத்தகைய கூற்றுக்கள் பொய்யானவை என்பதை வரலாற்று சான்றுகள் தெளிவாக சுட்டிக்காட்டுகின்றன.

ஈராக் போருக்கான அரசியல் முன்னேற்பாடுகள் மூன்று பெரிய பொய்களை அடிப்படையாகக் கொண்டு திட்டமிடப்பட்டு அமெரிக்க மக்களது மனதில் விஷக்கருத்து தூவப்பட்டது: அது, அல்கொய்தா பயங்கரவாத அமைப்போடு ஈராக் நெருக்கமான உறவு கொண்டிருந்தது; ஈராக்கிடம் ஏராளமான மக்களைக் கொன்று குவிக்கும் பேரழிவுகரமான ஆயுதங்கள் (WMD) உள்ளன; ஈராக் தனது ஆயுதங்களை ஒசாமா பின்லேடனுக்கு வழங்கலாம், அது செப்டம்பர் 11 ல் நடைபெற்றது போன்ற இரசாயன, உயிரியல் அல்லது அணுகுண்டுத் தாக்குதலேகூட நடக்கக்கூடும் என்பதாக இருந்தது.

அவர்கள் இந்த குற்றச்சாட்டை மிகவும் கொச்சையான முறையில் மூன்று பெரும் பொய்களையும் ஒருங்கிணைத்து, அவை அனைத்தும் அடங்கிய கற்பனையான குற்றச்சாட்டுடன் 2001 செப்டம்பர் 11 ல் நேரடியாக சதாம் ஹூசேனை சம்மந்தப்படுத்தினர். சென்ற ஆண்டு, பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஈராக்தான் பொறுப்பு என்று மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்கர்கள் கருதுவதாக கருத்துக்கணிப்புக்கள் பதிவு செய்யப்பட்டிருப்பது பற்றி கேட்கப்பட்டதற்கு பதிலளித்த செனி ''அந்தத் தொடர்பை மக்கள் ஏற்படுத்திக் கொண்டதில் ஆச்சரியம் ஏதுமில்லை'' என்று பதிலளித்தார்.

செப்டம்பர்11 க்கு பல மாதங்களுக்கு முன்னர் பராக்கில் (Prague) ஈராக் புலனாய்வு அதிகாரி ஒருவர் விமானக் கடத்திகளின் தலைவர் என்று கூறப்படும் முகம்மது அட்டாவை சந்தித்தார் என்ற கூற்றின் முதன்மை மூலாதாரம் செனிதான். 9/11 கமிஷன் அலுவலக அறிக்கை அத்தகைய சந்திப்பு பற்றிய செய்திக்கு எந்தவிதமான அடிப்படையும் இல்லை என்ற முடிவிற்கு வந்திருக்கிறது. அட்டா, ஈராக் ஏஜென்டை மத்திய ஐரோப்பாவில் சந்தித்ததாக கூறப்பட்ட அதே நாளில், வேர்ஜினியாவிலுள்ள ஒரு வங்கியிலிருந்து அவர் பணம் எடுப்பதை காட்டுகின்ற வீடியோ படத்தை ஆதாரமாகக் கொண்டு கமிஷன் செனியின் கூற்றை தள்ளுபடி செய்திருக்கிறது.

2003 ல், போர் தொடங்குவதற்கு 2 மாதங்களுக்கு முன்னர் State of the Union ல் புஷ் உரையாற்றியபோது 'அந்த 19 விமானக் கடத்திகளும் இதர ஆயுதங்களோடு மற்றும் இதர திட்டங்களோடு வந்திருப்பதாக கற்பனை செய்து பாருங்கள். இந்த முறை சதாம் ஹூசேனிடருந்து ஆயுதங்களை பெற்று வந்திருப்பார்களானால்..... ஒரு சிறிய குடுவை, ஒரு சிறிய டப்பா, ஒரு பெட்டி இந்த நாட்டிற்குள் நடுக்கம் காட்டாமல் நுழைந்திருக்குமானால், நாம் இதற்குமுன்னர் எந்தக் காலத்திலும் அறிந்திராத பயங்கரவாத தாக்குதல்களை சந்தித்திருப்போம்'' என்று அறிவித்தார்.

செப்டம்பர் 11 தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈராக் மீது தாக்குதல் நடத்துவதற்காக இந்தப் படையெடுப்பு நடத்தப்படுகிறது என்று அமெரிக்கத் துருப்புக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஈராக்கிற்குள் நுழைவதற்காக குவைத் எல்லையில் கட்டளைக்காக அமெரிக்கத் துருப்புக்கள் காத்துக் கொண்டிருக்கும்போது வேர்ஜினியா, பென்சில்வேனியா, நியூயோர்க் மற்றும் நியூஜெர்ஸி முகாம்களில் படையினர்களுக்கு பயிற்சி நடந்து கொண்டிருந்தது. உலக வர்த்தக மையம், பென்டகன் மற்றும் பென்சில்வேனியா பகுதியில் விழுந்து நொறுங்கிய United Flight 93 விமானம் ஆகியவற்றில் மாண்டவர்களை நினைவுபடுத்துகின்ற பேரில் இந்த பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டன.

செப்டம்பர் 11 தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் கொடுத்த நிர்பந்தங்கள் காரணமாகவும், 9/11 நிகழ்ச்சிகள் எப்படி நடந்திருக்க முடியும் என்பதற்கு அமெரிக்க அரசாங்கம் நம்பத் தகுந்த விளக்கம் எதையும் தரத் தவறிவிட்டதாலும், அமெரிக்க மக்களிடையே பரவலாக நிலவிய விரக்தி உணர்வை சமாதானப்படுத்துவதற்காக புஷ் நிர்வாகமும், காங்கிரஸ் ஜனநாயகக் கட்சிக்காரர்களும் கூட்டாகச் சேர்ந்து இந்த விசாரணைக் கமிஷனை அமைத்தார்கள்.

அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டில் இடம்பெற்றுள்ள இரண்டு போட்டிக் கோஷ்டிகளும் தங்களது கருத்து வேறுபாடுகளை தீர்த்துக் கொள்ளுகிற போர்க்களமாக, குறிப்பாக ஈராக்கில் எற்பட்டுள்ள படுவீழ்ச்சி தொடர்பாக இந்தக் கமிஷனை பயன்படுத்திக் கொண்டன. இருந்தபோதிலும், புஷ் நிர்வாகத்தின் மிக அசாதாரணமான கூற்றை ஒருமனதாக அந்த விசாரணை கமிஷன் தள்ளுபடி செய்திருக்கிறது---- ஈராக் - அல்கொய்தா தொடர்பு பற்றிய பொய்களை கமிஷன் தள்ளுபடி செய்திருப்பதால் ஈராக்கில் அமெரிக்காவின் நிலைப்பாடு சிக்கலாகவிட்டது. நடவடிக்கை போக்கில் மாற்றம் அவசியமாகிவிட்டது.

ஆதலால், செப்டம்பர் 11 தொடர்பாக மிகத் தெளிவாகத் தெரியும் பொய்களை விசாரணைக் கமிஷன் கண்டிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், கமிஷனின் நம்பகத்தன்மை மக்களிடையே ஏற்கப்பட வேண்டும் என்பதற்காகவும், அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனத்தின் முக்கிய கருவிகளான பென்டகன், CIA மற்றும் FBI ஆகியவற்றினை பாதுகாத்து நிற்பதற்காகவும் இந்த கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில், ஈராக் - அல்கொய்தா தொடர்புகளில் கூறப்பட்ட பொய்களை அம்பலப்படுத்துகிற அறிக்கையானது, அல்கொய்தாவிற்கும் CIA விற்கும் உண்மையிலேயே நிலவிய தொடர்புகளை மூடிமறைக்கிறது. மேலும் இந்த அறிக்கையில், ''அல் கொய்தாவின் வேர்கள்'' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள பிரிவில் இந்தக் குழுவின் தோற்றம்பற்றி விளக்கப்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் சோவியத் ஆக்கிரமிப்பை எதிர்த்து போர்புரிவதற்காக 1980 களில் புறப்பட்டு சென்ற இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடையே அல்கொய்தா உருவாயிற்று என்று அறிக்கை கூறுகிறது. ஆனால், ''ஆப்கான் அரபுகளை'' திரட்டுவதிலும், நிதியுதவி செய்வதிலும் பின்லேடனின் பங்களிப்பை விவரிக்கிற அறிக்கை, ஆப்கானிஸ்தான் முஜாஹிதீன்களை உருவாக்கிய, ஆதரித்த அமெரிக்க அரசாங்கம் குறிப்பாக CIA பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

ஆகவே, 9/11 கமிஷன் ஒரு நடுநிலையான அல்லது செப்டம்பர் 11 தாக்குதல்களின் உண்மையை அறிகின்ற புறநிலையான விசாரணைக் குழுவல்ல. அதே நேரத்தில், இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் ஏன் அமெரிக்காவை வெறுக்கிறார்கள் என்பதை ஆராய வேண்டும். கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக மத்திய ஆசியாவிலும், மத்திய கிழக்கிலும் அமெரிக்க ஏகாதிபத்தியம் அந்த நாடுகளின் வளங்களை சுரண்டி, மக்களை அடிமைப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆதலால், பொதுமக்களது ஆத்திர வெளிப்பாட்டை அடக்கவும், தனக்கு மிகவும் ஆபத்தான எதிரிகள் என்று கருதும் புரட்சிகர தேசியவாதிகள் மற்றும் சோசலிச உணர்வாளர்களை பலவீனப்படுத்தவும், தொடர்ந்து வந்த அமெரிக்க அரசாங்கங்கள் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை பயன்படுத்தி, அதனை ஊட்டி வளர்த்ததை முழுமையாக விசாரிக்க வேண்டும்.

மேலும், செப்டம்பர் 11 சம்பவங்களின் மிக முக்கியமான அம்சம் குறித்து விசாரணைக் கமிஷன் விசாரிக்கவில்லை. குறிப்பாக, புஷ் நிர்வாகத்திற்கு இந்தத் தாக்குதல்கள் தொடர்பாக போதுமான முன்னெச்சரிக்கை செய்யப்பட்டிருந்தபோதும், அதற்கான தடுப்பு நடவடிக்கை எதனையும் அது மேற்கொள்ளவில்லை. ஏனென்றால், மத்திய ஆசியாவிலும், மத்திய கிழக்கிலும் தலையிடுவதற்கான ஒரு சந்தர்ப்பத்தை புஷ் நிர்வாகம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.

இதற்கான சான்றுகள் மிகப்பல இருந்தன. எனவே, விசாரணைக் கமிஷனர்கள் எவ்வளவுதான் முயன்றபோதிலும் சில விவரங்கள் பதிவு செய்யப்படுபவதை அவர்களால் தவிர்க்க முடியவில்லை. தற்கொலை விமானக் கடத்திகள் அமெரிக்காவிற்குள் நுழைந்திருக்கிறார்கள், விமானம் ஓட்டுகின்ற பயிற்சி பெற்றிருக்கிறார்கள், திரும்பத்திரும்ப தங்களது நடவடிக்கைகளுக்கு ஒத்திகைகளை நடத்தியிருக்கிறார்கள், எந்த அமெரிக்க புலனாய்வு ஏஜென்ஸிக்கு தாங்கள் என்ன செய்கிறோம் என்பது தெரியாத முறையில் செப்டம்பர் 11 அன்று ஒரே நேரத்தில் நான்கு அமெரிக்க பயணிகள் விமானங்களை கடத்தியிருக்கிறார்கள்.

முன்னாள் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், ஜூன் 16 விசாரணைக் கமிஷனருமான திமோதி ரோமர், CIA க்கு 2001 ஜூனில், முன்னணி அல்கொய்தா தலைவர் காலித் ஷேக் முகஹமது (அல்கொய்தா முன்னணி தலைவர், செப்டம்பர் 11 தாக்குதல்களை ஏற்பாடு செய்த முதன்மை அமைப்பாளர் என்று கருதப்படுபவர்) ''அமெரிக்கா செல்வதற்கு தமது சகாக்களை தயாரித்து வருகிறார்'' என்ற தகவல் கிடைத்தது என்பதை விசாரணையின் போது சுட்டிக் காட்டினார்.

அந்த நேரத்தில், CIA யின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவைச் சேர்ந்த முன்னணி அதிகாரி ஒருவர் "Dr.k" என்ற பெயரில் தன் உண்மையான பெயரை மறைத்துக்கொண்டு சாட்சியமளித்தபோது, அத்தகைய தகவல் எதுவும் தனக்கு வந்ததாக நினைவுபடுத்த முடியவில்லை என்று கூறினார். "Dr.k" சாட்சியம் உண்மையாக இருக்குமானால் 2001 கோடைகாலத்தில் அல்கொய்தா அச்சுறுத்தல் தொடர்பாக உயர் மட்டத்தில் மூடி மறைக்கும் முயற்சிகள் நடைபெற்றன என்பதை கோடிட்டுக் காட்டுவதாக அமையும். அவரது சாட்சியம் பொய்யாக இருக்குமானால் பொய்சாட்சி சொன்னதாகவும், இப்போது அதை மூடிமறைப்பதாகவும் ஆகும். அது எப்படியிருந்த போதிலும், மேலும் விசாரணைக்கு வழியிருந்தும் கமிஷனர் திமோதி ரோமர் அத்தோடு நிறுத்திக்கொண்டார். வேறு எந்தக் கமிஷனரும் இதுபற்றி கேள்வி கேட்கவில்லை.

அமெரிக்க செய்தி ஊடகங்களும் 9/11 கமிஷனைப் போன்றே செயல்பட்டிருக்கின்றன. புஷ் நிர்வாகத்தின் கூற்றுக்களுக்கும், சாட்சியங்களுக்குமிடையே முரண்பாடுகள் தோன்றிய நேரத்திலெல்லாம் அவைபற்றி தலைப்பு செய்திகளில் எதையும் குறிப்பிடவில்லை. அல்லது தொலைக்காட்சி செய்தி அறிக்கைகளில் புஷ்ஷின் பொய்கள் அம்பலத்தால் ஏற்படுகின்ற மிக கோரமான விளைவுகள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

அமெரிக்க ஊடகங்களின் சரணாகதி போக்கை வியாழனன்று பிரசுரிக்கப்பட்டுள்ள நியூயோர்க் டைம்ஸ் தலையங்கம் ரத்தினச் சுருக்கமாக எடுத்துரைக்கிறது. ''வெளிப்டையான உண்மை'' என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கட்டுரையில் புஷ், ஈராக் - அல்கொய்தா தொடர்புகள் பற்றி அமெரிக்கர்களுக்கு பொய்யை விற்றதாக குற்றம் சாட்டியுள்ளது. இதில் இரண்டு விரும்பத்தகாத மாற்றுக்கள் உள்ளன: ஒன்று புஷ் தான் சொல்வது உண்மையல்ல என்பதை தெரிந்தே சொல்லியிருக்க வேண்டும். அல்லது 9/11 க்கு பிந்திய உலகில் படுபயங்கரத்தை விளைவிக்கும், தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும் அரசியல் திறன் கொண்டவராக அவர் இருக்கவேண்டும்.

இவ்வாறு கூறியுள்ள டைம்ஸ், புஷ் ராஜிநாமா செய்ய வேண்டும், அல்லது அவர் மீது கிரிமினல் வழக்கு தொடர வேண்டும், அல்லது அவர் மீது பதவி நீக்க விசாரணை கொண்டுவரப்பட வேண்டுமென்று கோரவில்லை. புஷ்ஷின் பொய்களால் நேரடியாக பல்லாயிரக்கணக்கான ஈராக் மக்கள் மடிந்தார்கள். ஏறத்தாழ ஆயிரம் அமெரிக்கர்கள் பலியானார்கள். இதுபோன்ற பொய்களுக்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோராமல், அந்தப் பத்திரிகை தனது இயலாமையை முனுகல்களால் வெளிப்படுத்துகிறது. இப்போது ஜனாதிபதி புஷ் அமெரிக்க மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் சற்று வேறுபட்டதை நம்புமாறு செய்யப்பட்டனர் என்றுமட்டுமே அந்தப் பத்திரிகை கேட்டுக்கொள்கிறது. அமெரிக்க தாராளவாதம் எந்தளவிற்கு முற்றிலும் ஆண்மையற்றது என்பதை இந்த தலையங்கம் தெளிவாகக் காட்டுகிறது.

ஆகவே, தற்போது புஷ் நிர்வாகத்தின் இன்னொரு ''பெரிய பொய்'' அம்பலத்திற்கு வந்திருக்கிறது. ஈராக் மீது படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பு என்பது ஒரு கிரிமினல் நடவடிக்கையாகும். இதை மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அரசாங்கம் செய்திருக்கிறது. இப்படிச் செய்ததன் மூலம் அமெரிக்க மக்களிடையே அந்தக் குற்றத்திற்கு உடந்தையாகியுள்ளது. ஆகவே, உழைக்கும் மக்கள் ஈராக்கிலிருந்து அனைத்து அமெரிக்க மற்றும் வெளிநாட்டுத் துருப்புக்களும் வெளியேற வேண்டுமென்று கோர வேண்டும். ஈராக் மக்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்படுவதோடு, வெளிநாட்டு தலையீடில்லாமல், சுதந்திரமாக தங்களது எதிர்காலத்தை அவர்களே நிர்ணயித்துக்கொள்ள விட்டுவிட வேண்டும். அத்தோடு, பாதுகாப்பற்ற அந்த நாட்டின் மீது தாக்குதல் தொடுக்க முடிவு செய்ததில் சம்மந்தப்பட்ட அனைவர் மீதும் போர்க் குற்றச்சாட்டு விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.

Top of page