World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Washington renews war crimes immunity in "sovereign" Iraq

''இறையாண்மை'' கொண்ட ஈராக்கில் போர் குற்றங்களிலிருந்து விலக்களிப்பதை வாஷிங்டன் மீண்டும் புதுப்பித்துள்ளது
By Bill Van Auken
25 June 2004

Back to screen version

ஈராக்கில் ''அதிகாரமாற்றம்'' நடப்பதாக கூறப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் வாஷிங்டன் தனது துருப்புக்களுக்கும் தனியார் அமெரிக்க ஒப்பந்தக்காரர்களுக்கும் ஈராக் சட்டப்படி போர் குற்றங்களிலிருந்து முழுமையாக விதிவிலக்கு அளிப்பதற்கான கட்டளையை புதுப்பிக்க தீர்மானித்துள்ளது.

இந்த நடவடிக்கை அமெரிக்க இராணுவமும், கூலிப்படையினரும் குடிமக்களை கொல்வது, வீடுகளையும் சொத்துக்களையும் அழிப்பது, சட்டத்திற்கு புறம்பாக கைதுசெய்து கைதிகளை சித்தரவதை செய்வது போன்ற போர் குற்றங்களை எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் செய்யமுடியும்.

இந்த முயற்சியின் நகர்வு புஷ் நிர்வாகத்தின் கிரிமினல் குற்றத்தன்மையையும், அகங்காரப்போக்கையும் காட்டுகிறது. ஆக்கிரமிக்கப்பட்ட ஈராக்கிற்கு ''முழு இறையாண்மை'' வழங்குவதாக கூறுகின்ற அதே மூச்சில், இறையாண்மைக்கான முக்கிய முன்நிபந்தனைகளை அந்த ''இறையாண்மை'' கொண்ட அரசாங்கத்திடமிருந்து பறிப்பதற்கான நிபந்தனையை விதிக்கிறது.

இந்த முடிவுபற்றி செய்தி வெளியிட்ட வாஷிங்டன் போஸ்ட் இந்த நடவடிக்கை அவசியம் என கூறிய அமெரிக்க அதிகாரிகளின் கருத்துக்களை எடுத்துரைக்கிறது, ''புதிய ஈராக் அரசாங்கம் ஒட்டுமொத்த விட்டுக்கொடுப்பு நடவடிக்கையை தனது முதல் செயலாக அறிவிக்குமானால், அதிகாரத்தை ஏற்றுக்கொள்கிற நேரத்தில் அந்த அரசாங்கத்தின் நம்பகத்தன்மையை அது சீர்குலைத்துவிடும். எனவே அதிலிருந்து தடுக்கவேண்டும்.'' மேலும் போஸ்ட் தெரிவித்தது ஒருதலைப்பட்சமான நடவடிக்கைக்கு அதே அதிகாரிகள் பயப்படுவதுடன், ''அமெரிக்கா முழு இறையாண்மையையும் திரும்பிவழங்கவில்லை என்ற கருத்தையும் உருவாக்குமென்ற'' என்ற பயத்தையும் உருவாக்கும் என்று தெரிவித்துள்ளது.

வாஷிங்டன் இந்த இரண்டு மாற்றுக்களுக்குமிடையில் தன்னுடைய நிலைப்பாட்டை தேர்ந்தெடுக்கும்போது----அது எவ்வளவு விருப்பத்தகாததாக இருந்தாலும், ''ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி'' என கூறப்படுவது ஒரு மோசடி என்பதும், புதிய ''இறையாண்மையை'' கொண்ட அரசாங்கம் அதிகாரமற்ற பொம்மையாட்சியாகும் என்பதற்குமான தெளிவான ஆதாரங்கள் உள்ளன.

அமெரிக்கப் படைகளுக்கு விதிவிலக்கு வழங்குவது என்பது ஈராக்குற்கு உரித்தானதோ அல்லது சட்டபூர்வமானதோ அல்ல. அது வாஷிங்டனின் காலனித்துவ ஆளுநனருக்கே உள்ளது. ஓராண்டிற்கு முன்னர் கூட்டணி இடைகால ஆணைய (CPA) பிரகடனப்படுத்திய கூட்டணி இடைகால ஆணைய தலைவர் போல் பிரேமர் 17வது கட்டளையை புதுபிக்கவேண்டும். அந்தக்கட்டளை எல்லா அமெரிக்க இராணுவ மற்றும் சிவிலியன் ஊழியர்களும், ஈராக் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று எழுதப்பட்டது.''CPA அதிகாரம் இருக்கும் வரைதான் அந்தச்சட்டம் செல்லுபடியாகும்'', ஜூன் 30 இல் சம்பிரதாய முறையில் அச்சட்டம் முடிவடைகிறது.

ஆரம்பத்தில், அமெரிக்கா கட்டளைப்படி பல நடவடிக்கைகளை அறிவிக்கும் ஒரு இடைக்கால ஈராக் அரசாங்கத்தை உருவாக்குவதற்கு வாஷிங்டன் திட்டமிட்டிருந்தது. அந்த அறிவிப்புக்களில் அமெரிக்க ஆக்கிரமிப்புப்படைகளுக்கு எல்லையற்ற அதிகாரத்தை வழங்குகின்ற உடன்பாடும், ஈராக்கின் எண்ணெய் வளத்தின்மீது அமெரிக்காக்கட்டுப்பாட்டை உறுதிசெய்து தரும் ஒப்பந்தங்களும் இடம்பெறும். இந்தத்திட்டம் அரசியல்ரீதியாக ஏற்க முடியாததாகிவிட்டது. அமெரிக்காவிற்கு ஈராக்கில் எதிர்ப்பு தற்பொழுது வளர்ந்து கொண்டிருக்கிறது, ஈராக்கின் செல்வாக்கு மிக்க ஷியா மத போதகர் அயத்தொல்லா அலி சிஸ்தானி மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஈராக் ஆட்சி, எந்த ஒப்பந்தத்தையும் செய்து கொள்வதற்கு உரிமை எதுவும் இல்லை என்று அறிவித்துவிட்டார்.

அதேபோன்று இப்போது கலைக்கப்பட்டுவிட்ட ஈராக் ஆளும் குழுவிற்கு பிரேமர் பிறப்பித்த கட்டளைகளான இடைக்கால நிர்வாக சட்டம், (Transitional Administrative Law) சட்டப்படி செல்லுமா என்ற கேள்வியையும் சிஸ்தானி எழுப்பியுள்ளார். சட்ட தொகுப்பை இடைக்கால அரசாங்கம் திருத்துவதற்கு எந்த அதிகாரமும் இல்லையென்று வாஷிங்டன் வலியுறுத்திவருகிறது, இதில் தீவிரமான தனியார்மயமாக்குதல், ஈராக் பொருளாதாரத்தை வெளிநாட்டு பெரிய நிறுவனங்கள் தங்கள் கையில் எடுத்துக்கொள்வது போன்ற பல விதிமுறைகள் இடம் பெற்றிருக்கின்றன.

138,000 அமெரிக்கத் துருப்புக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்கள் ஆகியோருக்கு ஈராக்கில் ஈராக் சட்டத்திலிருந்து முழு விதிவிலக்கு மீண்டும் கொண்டுவரப்பட்டிருப்பது எதிர் கிளர்ச்சியாளர்கள் மீது மேலும் அதிகமான கொடுமைகள் ஏவி விடப்படும் என்று எடுத்துக்காட்டுகின்ற, எச்சரிக்கையாகும். ஏற்கனவே கிளர்ச்சியாளர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையால் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மடிந்திருக்கிறார்கள். அதே நேரத்தில் அபுகிரைப் சிறைச்சாலை முகாம்களிலும் நடைபெற்ற சித்ரவதைகள் மற்றும் கொலைகள் தொடர்பான தகவல்கள் அம்பலத்திற்கு வந்திருப்பதால் ஈராக் சட்டங்களின்படி தனது இராணுவ அதிகாரிகளும், ஊழியர்களும் கிரிமினல் குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகலாம் என்ற கவலை வாஷிங்டனில் எழுந்துள்ளது.

இந்ந ஒட்டுமொத்த விதிவிலக்கு ஆணையில் வருகின்ற தனியார் ஒப்பந்தக்காரர்கள் அமெரிக்க இராணுவ சட்டத்தின்படியும் குற்றச்சாட்டுக்கு இலக்காகமாட்டார்கள். அவர்கள் ஈராக்கில் குற்றங்களை புரிவதற்கு பச்சைகொடி காட்டும் வகையில் முழு விலக்கு தரப்பட்டுள்ளது. அண்மையில் அபுகிரைப் சிறைச்சாலையில் புலனாய்வு பொறுப்பில் அமர்த்தப்பட்டிருந்த ஒப்பந்தக்காரர்களில் ஒருவர் ஒரு ஈராக் சிறுவனை பாலியல் நடத்தைக்கு ஈடுபடுத்தினார் என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டதும் அவர் மீது சட்டபூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாது என்று கூறி அவர் பணியாற்றும் நிறுவனத்திற்கு அந்த விவகாரம் தெரிவிக்கப்பட்டது.

ஐக்கிய நாடு பாதுகாப்பு சபையில் ஐ.நா அமைதிகாப்பு பணிகளில் உலகம் முழுவதிலும் பங்கெடுத்துக்கொள்ளும் அமெரிக்க இராணுவத்திற்கு சர்வதேச கிரிமினல் நீதிமன்ற ICC நடவடிக்கைகளிலிருந்து விதிவிலக்கு அளிக்கும்வகையில் இதற்கு முன்னர் நிறைவேற்றியிருந்த தீர்மானத்தை புதுபித்துக்கொள்வதற்கு மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து புஷ் நிர்வாகம் ஈராக்கில் தனது படைகளுக்கு கிரிமினல் குற்றச்சாட்டுக்களிலிருந்து விதிவிலக்குத்தரும் கட்டளையை பிறப்பித்தது.

புதன்கிழமையன்று அமெரிக்கப் பிரதிநிதிகள் ஐ.நா வில் அத்தகைய தீர்மானத்தை கொண்டு வரும் முயற்சியை தங்களுக்குத்தேவையான வாக்குகள் கிடைக்காது என்பது தெளிவாகத் தெரிந்த பின்னர் கைவிட்டனர். ஈராக்கிலும், இதர இடங்களிலும் அமெரிக்கா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக போர்குற்றங்கள் என்ற அடிப்படையில் மேலும் விரிவான பொதுவிவாதங்கள் நடத்தப்படுவதை தவிர்ப்பதற்காக முழு விவாதம் சபையில் ஏற்பாடு செய்வதற்கு முன்னர் அவசரமாக இந்த விதிவிலக்குகளை நிறைவேற்றுவதில் வாஷிங்டன் மிகுந்த ஆர்வம் காட்டிவந்தது.

ஐ.நா-வின் இரண்டாண்டு விதிவிலக்கு ஜூன் 30 இல் முடிவிற்கு வருகிறது. அதே நாளில் ஈராக்கில் ஆட்சி ''மாற்றமும்'' ஏற்படுகிறது, எனவே அமெரிக்கா அதோடு தொடர்புபடுத்தி இந்த முயற்சியில் இறங்கியது. ஜூன் 8ல் பாதுகாப்பு சபை நிறைவேற்றிய ஒரு தீர்மானப்படி அமெரிக்க ஆக்கிரமிப்புப்படைகள் சம்பிரதாய முறையில் ஐ.நா காபந்து படைகளாக மாறுகின்றன. அப்படியிருந்தாலும் ஈராக் இராணுவ நடவடிக்கைகளில் வாஷிங்டன் கட்டுப்பாடற்ற மேலாதிக்கம் செலுத்துகிறது.

அமெரிக்கா ஆக்கிரமிப்புப்படைகள் சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தில் (ICC) குற்றம்சாட்டப்படுவதற்கான வாய்ப்பு இல்லை, ஏனென்றால் சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் நிறுவப்பட்ட ஒப்பந்தத்தில் எந்த சம்பவத்திலோ நெடுகாலமாக அமெரிக்கா அல்லது ஈராக் கையெழுத்திட்டதில்லை. ஈராக் எப்பொழுதும் கையெழுத்திடவில்லை. கிளின்டன் நிர்வாகத்தின்போது வாஷிங்டன் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால் புஷ் நிர்வாகம் அந்த ஒப்பந்தத்தை இரத்துச்செய்கின்ற அசாதாரண நடவடிக்கையை மேற்கொண்டது. ICC அமெரிக்கத்துருப்புக்கள் அல்லது அரசாங்க அதிகாரிகள் மீது போர் குற்றங்களுக்காக ''அரசியல் நோக்கில்'' விசாரணைகள் நடத்தப்படுவதற்கு சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் பயன்படுத்தப்படக்கூடும் என்று வாஷிங்டன் கூறியது.

அமெரிக்க இராஜதந்திரிகள் ஐ.நா விதிவிலக்கை ஆரம்பத்தில் ஓராண்டு நீடிக்க முயன்றனர், அதற்குப் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் காலவரையின்றி புதுபித்துக்கொண்டே போக முடியும் என்று கருதினர். எதிர்ப்பு ஏற்பட்டது என்பதை தெரிந்து கொண்டே அமெரிக்க இராஜதந்திரிகள் தங்கள் நிலையிலிருந்து பின்வாங்கி ஒரேமுறை ஓராண்டு புதுபிக்கப்படவேண்டுமென்று கோரினர், வாஷிங்டன் இருதரப்பு ஒப்பந்தங்களை செய்து சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தின் முன் அமெரிக்கர்கள் மீது குற்றம் சாட்டுவதில்லை என்று தனிப்பட்ட ஒவ்வொரு அரசாங்கமும் உறுதி தரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு அவகாசம் தேவையென்று வாஷிங்டன் வாதிட்டது.

புஷ் நிர்வாகம் 90 நாடுகளை இவ்வாறு பயமுறுத்தி அல்லது இலஞ்சம் கொடுத்து ''கையளிக்காதிருத்தல்'' என்றழைக்கப்படும் உடன்படிக்கையில் கையெழுத்திட செய்திருக்கிறது. இதில் ஆப்கானிஸ்தானும் அடங்கும், அது சர்வதேச கிரிமினல் நீதிமன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. அந்நாட்டில் 11,000 அமெரிக்க துருப்புக்கள் உள்ளன.

அமெரிக்கா தாக்கல் செய்துள்ள தீர்மானத்தை ஏற்றுக்கொள்வது ஐ.நா பாதுகாப்பு சபையை இழிவுபடுத்திவிடும், சர்வதேச அளவில் ''சட்டத்தின் ஆட்சியை'' சீர்குலைத்துவிடும் என்று கடுமையான எச்சரிக்கும் அறிக்கை ஒன்றை ஐ.நா பொதுச்செயலாளர் கோபி அன்னன் வெளியிட்ட பின்னர் அமெரிக்காவிற்கு விதிவிலக்கு தருவதற்கான எதிர்ப்பு கடுமையானது. ஐ.நா பாதுகாப்பு சபையில் எந்தளவிற்கு தரம் தாழ்ந்துவிட்டது என்பதையும், சர்வதேச சட்டத்தை கடுமையாகக் கடைபிடிக்க தவறிவிட்டது என்பதையும் ஜூன் 8ல் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எடுத்துக்காட்டுகிறது. அந்தத்தீர்மானம் அமெரிக்காவின் சட்டவிரோதமான ஆக்கிரமிப்பிற்கு அங்கீகாரம் தருகிறது, ஈராக் மக்களுக்கெதிராக வாஷிங்டன் காலனித்துவ முறையில் தொடுத்துள்ள போரை ஆதரிக்கிறது.

ஈராக்கிற்கு ''இறையாண்மையை'' உறுதிப்படுத்துவதாகவும், ஈராக் பொம்மை ஆட்சிக்கும் அமெரிக்கா இராணுவ தலைமைக்கும் இடையை ''முழு கூட்டுழைப்பும்'' மற்றும் கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதில் அமெரிக்க இராணுவத்திற்கு அதிகாரத்தையும் உறுதி செய்து தரும் அந்த தீர்மானத்தின் கபடத்தன்மை கடந்த வாரத்தில் தெளிவாக விளக்கப்பட்டது.

CIA உடன் நீண்டகாலமாக உறவு கொண்டிருக்கும் அயத் அல்லாவி ஜூன் 30இல் பிரதமராக பதவி ஏற்கவிருக்கிறார், அவர் திங்களன்று புதிய அரசாங்கம் பெருகிவரும் எதிர்ப்பு கிளர்ச்சியை அடக்குவதற்கு இராணுவச்சட்டத்தை கொண்டுவரும் என்று அச்சுறுத்தியிருக்கிறார். லண்டன் பைனான்சியல் டைம்ஸ் தந்திருக்கிற தகவலின்படி அல்லாவியின் இந்தக்கருத்தை அமெரிக்க ஆக்கிரமிப்பு அதிகாரிகள் உடனடியாக மறுத்துள்ளனர். அவர்கள் அவருக்கு தெரிவித்துள்ள தகவலின்படி ஜூன் 30இல் ''இறையாண்மை ஒப்படைக்கப்பட்ட பின்னர் அவசர நிலை அதிகாரங்களை செயற்படுத்துகிற அதிகாரம் அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படைகளுக்கே உண்டு'' என்று பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டதாக அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டது.

பாக்தாத்தின் புதிய வல்லமைமிக்க ஆட்சியாளர் என்று வேடம்கட்டி ஆடிய மறுநாள் அல்லாவி ஊடகங்களுக்கு ஒரு ''விளக்க''அறிக்கையைக் கொடுத்தார். ''நான் கூறியது இராணுவச்சட்டம் என்ற பொருளில், இராணுவச்சட்டத்தை கூறவில்லை'' என்று நிருபர்களிடம் செவ்வாயன்று அவர் தெரிவித்தார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved